- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34

மேல்நிலைப் பள்ளியின் அமைப்பில் இருந்த வேறுபாடுகள் எங்களுக்கு அப்போது புரியவில்லை. விவரமறிந்த பிறகு புரிந்ததிலிருந்து வருத்தமாக இருக்கிறது. நேரு பள்ளியில் இல்லாத ஒன்று மேல்நிலைப் பள்ளியில் இருந்த ஒன்று ஆசிரியச் சங்கம். ஒன்றல்ல. மூன்று ஆசிரியச் சங்கங்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டன. எம் ஏ என் எனப்படும் ஆவுடைநாயகம் சார் பொறுப்பில் இயங்கிய சங்கம் பள்ளிக்கு அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற முக்கியக் கோரிக்கையை கொண்டு இயங்கி வந்தது. எஸ் பி பி சார் என அழைக்கப்பட்ட பூசைப்பாண்டி சார் பொறுப்பில் இயங்கி வந்த சங்கம் பள்ளிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேல்நிலைப் பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற முக்கியக் கோரிக்கையை கொண்டு இயங்கி வந்தது. டி சி சார் என அழைக்கப்பட்ட தங்கச்சாமி சார் பொறுப்பில் இயங்கி வந்த சங்கம் பள்ளிக்கு தியாகி கக்கன் மேல்நிலைப்பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற முக்கியக் கோரிக்கையை கொண்டு இயங்கி வந்தது. இருப்பதிலேயே பலவீனமான சங்கமாக இருந்த கக்கன் பெயர் விருப்ப சங்கத்தில்தான் மீசை சார், ஜெயராஜ் சார், மாரியம்மாள் டீச்சர் போன்ற சிலர் உறுப்பினர்களாக இருந்தார்கள். மூன்று சங்க ஆட்களும் மாணவர்கள் முன்னிலையிலேயே கருத்து வேறுபாடுகளை பேசிக் கொள்வது (பேசித் தீர்த்துக் கொள்வது அல்ல) என்பது மேல்நிலைப் பள்ளியின் நடைமுறையாக இருந்து வந்தது. அதிலும் கக்கன் சங்கம் தலையாட்டல், வேறு திக்கைப் பார்த்துக் கொண்டு மெல்லிய குரலில் ஓரிரு வரிகளில் பதில் சொல்லுதல், வற்புறுத்தப்படும் தருணங்களில் மாவட்டத் தலைமையிடம் கேட்டுச் சொல்வதாக தவணை பெறல், ஆண்டுதோறும் ஜூன் மாத முதல்வாரத்தில் ஒரு சடங்கு போல நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் (ஆசிரியர் சம்பள உயர்வு, மாணவர் நலன் போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி) போது கடைசி வரிசையில் நின்று கோஷம் போடுதல் ஆகியவற்றை செய்து வந்தது. எம் ஏ என் சார் சங்கமும், எஸ் பி பி சார் சங்கமும் போராட்டப் பதாகைகளில் இருக்கும் பெயர்களைத் தவிர்த்த வேறெந்த வேறுபாடுகளும் இல்லாத வண்ணம் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்றி வந்தன.
ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகளுக்கான மாணவர் பிரிவு ஒதுக்கீடு, வகுப்பாசிரியர் நியமனம் என்பன அந்த நேரத்தில் பதவியில் இருக்கும் தலைமை ஆசிரியரின் குரல் வலு, இருதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், அழுத்தத்தைத் தாங்கும் மனவலு ஆகியவற்றுக்கான உச்சபட்ச சோதனையாக அமைந்து வந்தன. வகுப்பாசிரிய நியமனங்கள் முடிந்ததும் தலைமை ஆசிரியருக்கு மருத்துவ வசதியோடு கூடிய விடுமுறையும், பதினைந்து நாட்கள் மலை வாசஸ்தலத்தில் தங்கும் வசதியும் அரசால் செய்து தரப்பட வேண்டுமென்று 1970 களில் தலைமை ஆசிரியராக இருந்த சேர்மக்கனி அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஒவ்வொராண்டும் அவ்வப்போதைய தலைமை ஆசிரியர்களால் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது (ஆண்டு ஆய்வுக்கு வரும் கல்வித்துறை அதிகாரிகளே தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இந்தக் கோரிக்கை இல்லாத தெய்வநல்லூர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு அறிக்கையின் நம்பகத்தன்மையை ஐயப்பட்டு குறிப்பு எழுதியிருப்பதாக ஒருங்கிணைந்த திருனவேலி மாவட்ட ஆவணக் காப்பக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது). வகுப்புகளுக்குள் மூன்று குழுக்கள் இயங்கி வந்தது உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. கல்வி ஆண்டின் துவக்கத்தில் மாணவர் சேர்க்கை முடிவடைந்ததும் அங்கீகரிக்கப்பட்ட சேர்க்கைப் பட்டியல் தயாராகி தலைமை ஆசிரியர் மேசைக்கு செல்லும். புதிய மாணவர் சேர்க்கை மட்டுமன்றி ஒரு வகுப்பின் அனைத்து பிரிவு மாணவர் பட்டியலும் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் வேறு வேறு பிரிவுகளில் மாணவர்கள் பிரிக்கப்படுவார்கள். இதே புதிய சேர்க்கைப் பட்டியல் அங்கீகரிக்கப்படாத வேறொரு தரவரிசையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு எம் ஏ என் சார், எஸ் பி பி சார் பார்வைக்கு அனைவரும் அறிந்த ரகசியமாய் அனுப்பப்படும். சேர்க்கை விண்ணப்பத்தில் “கீழ்க்கண்டவற்றுள் மாணவர் எப்பிரிவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுக” என்ற கேள்விக்கு அளிக்கப்படும் விடையின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதே அங்கீகரிக்கப்படாத பட்டியல் என அறிக. பழைய மாணவர்களுக்கான புதிய பிரிவு மாற்றமும் இதே தரவரிசையின் கீழ் ஆலோசிக்கப்படும் என்பதை உய்த்துணர்ந்தோர் இத்தொடரின் ஆகச்சிறந்த வாசகர்களெனவும் அறிக).
மேஜைக்கு மேலுள்ள பட்டியல், மேஜைக்கு கீழுள்ள பட்டியல் ஆகிய இரண்டும் தயாரானதும் (இரண்டாவது பட்டியல் தயாரித்து அனுப்பப்படும் வரையில் முதல் பட்டியல் தலைமை ஆசிரியர் மேஜைக்கு நகராது என்பதை உணர்ந்தோர் தமிழக சமூக அறிவியலில் நேரடியாக இளங்கலைப் பட்டத்திற்கு தகுதி பெறுகிறார்கள் எனவும் அறிக). ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளுக்கான மாணவர் பட்டியல் தயாரிப்பு, வகுப்பாசிரியர் நியமனம் குறித்த அலுவல் ரீதியிலான தலைமை ஆசிரியர் கூட்டத்திற்கு முன்பே இரு சங்கங்களின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக்கூட்டம் பள்ளிக்கு எதிரில் கீற்றுக் கொட்டகை மறைப்பால் நான்கு அறைகளாகத் தடுக்கப்பெற்று முறையே பெட்டிக்கடை, டீக்கடை, உணவு விடுதி, ஓய்வறை (ஆங்கிலப் பதத்தில் கழிப்பறை எனக் கொள்வது ஈராயிரக் குழவிகளின் அருஞ்சொற்பொருள் அகராதியின்படியிலானது, அது இவ்விடம் 80 களுக்குப் பொருந்தாது. ஓய்வறை ஒரு கட்டில், இரு பெட்டி நாற்காலிகள், ஒரு முக்காலி இவற்றால் ஆன மெய்யான ஓய்வறையே; மதிய உணவை இங்கு உண்ணும் ஆசிரியர்கள் அவ்வப்போது கண்ணயர அனுமதிக்கப்படும் இடம்) எனக் கொண்டு இயங்கும் கட்டுஞ்செவல் கருத்தபாண்டியார் கடையின் ஓய்வறையில் நடைபெறும். அங்கு வகுப்புவாரி இடஒதுக்கீட்டுப் பட்டியலும், அதற்கேற்ற வகுப்பாசிரிய நியமன பரிந்துரையும் தயாரிக்கப்பட்டு சங்க உறுப்பின ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்ட பின்பே கிடைக்கும் சங்கத்தாரின் தடையற்ற ஒப்புகைத் தலையசைப்பின் பேரில் அலுவலகத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் தலைமை ஆசிரியர் மேஜைக்குப் போகும். அதன்பின் நடைபெறும் வழமையான கூட்டத்தில் புதிதாகப் பட்டியலைப் பார்ப்பது போல வழமையாக நடிக்கும் சங்க ஆசிரியப் பொறுப்புப் பெருந்தகைகள் ஓய்வறைத் தயாரிப்பான தத்தம் விருப்பப் பட்டியலுக்கு மாறானவற்றை வெவ்வேறு காரணங்கள் கூறி ஆட்சேபிப்பது வழமையாகத் தொடங்கும். மிக வியப்பாக சங்கங்களில் இருந்தாலும் பிரச்சினைகளின் அடிப்படையில் தனித்தியங்கும் ஆசிரியர்களின் நான்காம் குழு ஒன்றும் உண்டு. இதன் உறுப்பினர்களில் ஏற்ற இறக்கங்கள் உண்டெனினும் இதன் பன்முகத்தன்மை காரணமாக இக்குழுவினரின் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டன. கக்கன் பெயர் கோரிக்கை சங்கத்திற்கு இந்த நான்காம் சங்கம் அவ்வப்போது ஆதரவளித்து வரும்.
இப்போதுள்ளது போல ஆண்டிறுதியில்தான் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் என்பதெல்லாம் அன்றைக்கு நடைமுறையில் இல்லாததால் ஆண்டின் நடுப்பகுதியில் கூட மாறுதல்கள் நிகழும். ஆகவே ஒன்பதாம் வகுப்பின் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கணித ஆசிரியர் மாற்றலாகிச் சென்று புதிய ஆசிரியர் வந்து சேர்வார் என்று அறிவிக்கப்பட்டது.
தெய்வநல்லூர் வரலாற்றில் குறிப்பாக பள்ளிகளின் வரலாற்றில் கேட்டோர் வாயடைத்து வியக்கும் வண்ணம் ஒரு செயல் இந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்றது. ஆசிரிய, ஆசிரியைகளின் ஓய்வறைப் பேச்சாக மட்டுமன்றி டீச்சர் ட்ரெயினிங் படிக்கும் அக்காக்கள், மேல் நிலை வகுப்புகளில் பயிலும் அண்ணன்/அக்காக்கள் ஆகியோரிடையேயும் பற்றி எரியும் பேச்சாக நடந்த சம்பவத்தின் நாயக, நாயகி எங்கள் அணியின் பிரேமும், சங்கீதாவும். காலாண்டுத் தேர்வுக்கு ஒரு வார விடுமுறை அறிவிக்கப்பட்டது. இரு வார இறுதிகளும் சேர்ந்து பத்து நாட்கள் விடுமுறை என ஆனதால் சங்கீதா அவர் ஊருக்கு கிளம்பிச் சென்றார். அவர் ஊரிலிருந்து பிரேமுக்கு அவர் கடிதம் எழுதினார். பிரேமும் அதை வாசித்து விட்டு சங்கீதாவுக்கு பதில் கடிதம் எழுதினார். ( விஷயம் இவ்வளவுதான் – விடுமுறைக்கு அரை தினம் இருக்கும்போதே சங்கீதா கிளம்பிச் சென்று விட்டதால் விடுமுறையில் வீட்டுப்பாடமாக எழுதி வர வேண்டிய பாடங்களை அவர் குறித்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே தன்னுடைய வகுப்புப் பிரிவில் பயிலும் யக்கா பாட்ஷாவிடமோ, மெஜூராவிடமோ கேட்டு தனக்கு உடனே பதில் எழுதுமாறு பிரேமிடம் கேட்டுக் கொண்டிருந்தார். மற்றபடி ஊரில் அனைவரும் நலம் எனவும் எங்கள் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு அவர் கிளம்பிப் போன இரு நாட்களில் நாங்களும் நலமா என்றும் கேட்டிருந்தார் – அன்பும், பண்பும் மிக்க நண்பன் பிரேமுக்கு என ஆரம்பிக்கப்பட்டு இப்படிக்கு, அன்புள்ள தோழி என முடிந்த அந்தக் கடிதம் எங்களாலும் வாசிக்கப்பட்டது என்பதால் அதன் உண்மைத் தன்மைக்கு நாங்களே சாட்சி).
இருவர் வீட்டிலும் பரஸ்பரம் கடிதங்கள் பெரியவர்களால் வாசிக்கப்பட்டே தபாலுக்கு அனுப்பப்பட்ட விவரம் எங்களுக்கும் தெரியும். வியப்பாக எங்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே படவில்லை. மாறாக நாமும் யாருக்காவது கடிதம் எழுதும்போது நலம் விசாரித்து எழுத வேண்டுமென பேசிக் கொண்டோம். ஆனால் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த சங்கீதா முதல் ஆளாக வீட்டுப்பாடங்கள் எழுதிய நோட்டை ஆசிரியர் மேஜையில் வைக்க ஆங்கில ஆசிரியரும், வகுப்பாசிரியருமான ராஜசேகர் சார் சற்றே ஐயத்துடன் “தட் லாஸ்ட் டே டு ஹாலிடே , நீ க்ளாஸ்ல இல்லையே. ஊருக்குப் போறேன்னு லீவுல போயிட்டயே. ஹவ் டிட் யு ரைட் ஆல் தி வீட்டுப்பாடம்” எனக் கேட்க, சங்கீதா “அப்பா ஆஃபீஸ் போயாச்சே” என்று சொல்லும் இயல்பான பாவனையில் பிரேம் தனக்கு எழுதிய லெட்டரில் வீட்டுப்பாட விவரம் எழுதியதாகச் சொல்லி விட்டு சென்று அமர்ந்தார். ராஜசேகர் சார் பொதுவாக அமைதியானவர். ஆனால் ஆசிரியர் ஓய்வு அறையில் அவருக்கு அடுத்த இருக்கை எம் ஏ என் சாருடையது என்பதால் அவ்வப்போது அந்த பாதிப்புக்கு உள்ளாவார். பிரேம் தனக்கு கடிதம் எழுதியதாகச் சொன்னதை விட சங்கீதா அத்தனை இயல்பாக அதைச் சொன்ன விதம்தான் ராஜசேகர் எனப்படும் வி ஆர் எஸ் சாரை பதட்டத்திற்குள்ளாக்கியது. மறுபடி சங்கீதாவை தன் மேஜைக்கருகே அழைத்து விஷயத்தை விவரமாகச் சொல்லும்படி கேட்டுக்கொள்ள சங்கீதா தனக்கே உரிய புன்னகையுடன் நடந்ததைச் சொன்னார். பிரேம் முகவரி உனக்கு எப்படித் தெரியும் என்ற கேள்விக்கு சங்கீதா சொன்ன பதில் வி ஆர் எஸ் சாரை நெஞ்சடைத்துப் போக வைத்தது (வாராவாரம் அவங்க வீட்டுக்குப் போயிதான் பேசிட்டு வெளையாடிட்டு வர்றேனில்லையா சார், எனிக்கு அட்ரஸ் தெரியும்) . தெய்வநல்லூர் மாதிரியான ஊரில் வார இறுதியில் ஒரு பையன் வீட்டுக்கு ஒரு பெண் சென்று பார்த்து பேசிவிட்டு வருவது என்பது அவருக்கு குட்டிப் பாம்பு வாயில் கோழி முட்டையை வைத்தது போல இருந்தது.
அன்று அவருக்கு வகுப்பு எடுக்கவே ஓடவில்லை. எதையோ பேசி ஒப்பேற்றிவிட்டு (கெடந்து தவங்குதாருல, மொதப் பாடத்த சொல்லிட்டு சங்கீதாவையே பாப்பாரு, அந்தாக்குல போயம் சொல்ல ஆரம்பிச்சிருவாரு, பழயபடி சங்கீதாவப் பாப்பாரு, கிராமர் சொல்ல ஆரம்பிச்சிருவாரு, பழயபடி சங்கீதாவப் பாப்பாரு, ரெண்டாம் பாடத்த சொல்ல ஆரம்பிச்சிருவாரு – யக்கா பாட்ஷா வின் கண்ணால் கண்ட சாட்சி அறிக்கை). வகுப்பு நேரம் முடிவடைந்ததற்கான மணிச்சத்தம் கேட்டதும் ஆர் வி எஸ் சார் ஆசிரியர்கள் அறையை நோக்கி ஓடினார் என்றுதான் மெஜூரா சொன்னார். ஆசிரியர்கள் அறையில் செயற்குழு விவாதம் முடிந்த அடுத்த அரைமணி நேரத்துக்குள் ஆசிரியைகள் அறைக்குள் பொதுக்குழு விவாதம் நடந்தது. மதிய உணவு இடைவேளையில் டீச்சர் ட்ரெயினிங் படிக்கும் செல்வி அக்காக்கள் (கலைச்செல்வி, தமிழ்செல்வி ஆகிய தோழிகள்- இணை பிரியா நட்பினால் செல்விக்கள் என அழைக்கப்பட்டனர்). எங்கள் வகுப்புக்கு வந்து பிரேம் யாரெனக் கேட்டு விசாரித்துச் சென்றனர். பிரேம் மதிய உணவு உண்டு முடித்து கைகழுவச் சென்றிருந்ததால் மாலை இடைவேளையின் போது டி டி ( டீச்சர் ட்ரெயினிங்) வகுப்பருகே பிரேமை வரச்சொல்லுமாறு சொல்லிச் சென்றார்கள். அவர்கள் சென்ற ஏழாவது விநாடியிலிருந்து பதினோராம், பனிரெண்டாம் வகுப்பின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அண்ணன்கள், அக்காக்கள் பிரேமைத் தேடி வர ஆரம்பித்தனர். முதலில் சுதாரித்தவர் சிவாஜிதான். வந்த அண்னன் அக்காக்களிடம் பிரேமைத் தேடும் காரணம் கேட்டபோது எவருமே சரியான பதிலை சொல்லாததால் சிவாஜி எச்சரிக்கை அடைந்தார். என்னை பிரேமிடம் அனுப்பி வகுப்பு தொடங்கும் மணி அடிக்கும்வரை பள்ளிக்கு அருகிலிருக்கும் பெருமாள் கோவிலிலேயே இருக்கச் செய்தார். வந்தவர்களில் இரு கோஷ்டியார் பிரேமுக்கு சங்கீதாவை எப்படித் தெரியும் எனக்கேட்டு கூடுதல் தகவல் அறிய முற்பட்டபோதுதான் சிவாஜி அ பிரிவில் என்னவோ நடந்திருக்கிறது என கச்சிதமாக யூகித்தார். அதன்பின் அ பிரிவில் இருக்கும் பழைய மகாத்மா அணியின் யக்கா பாட்ஷாவை இலவம்பஞ்சு மரத்தடிக்கு வரச்சொல்லி விசாரித்தபோதுதான் சிவாஜிக்கு நடந்த விஷயம் தெரிய வந்தது. அதற்குள் வகுப்பு தொடங்கும் மணி அடித்து விட பிரேமும், நானும் உள்ளே வந்து விட்டோம். பிற மாணவர்கள் வந்து விசாரிக்குமுன் முந்திக் கொண்ட சிவாஜி மிகச் சுருக்கமாக விவரத்தை பிரேமிடம் சொன்னார். சற்றே யோசித்த பிரேமும், சிவாஜியும் அடிக்குரலில் பேசிக் கொண்ட விவரங்கள் என் காதுக்கு வரவில்லையென்றாலும் பிரேம் 3 நொடிகளில் சொன்ன ஒற்றை வரியைக் கேட்ட சிவாஜி முகத்தில் பதட்டம் மறைந்து இயல்பு நிலை தெரிந்தது. அதைக் கண்ணுற்ற எங்களுக்கு இந்த சூழ்நிலையை சமாளிக்கும் நுட்பத்தை பிரேம் கண்டுபிடித்து விட்டார் என புரிந்தது.
மதிய வகுப்புகளில் முதல் வகுப்பு மீசை சாருடையது என்பதால் அதிகம் பதட்டப்பட வேண்டியதில்லை என ஆறுதல் கொண்டோம். மீசை சார் வரும்போதே ஓரக்கண்ணால் பிரேமை கவனித்தவாறே வருவது தெரிந்தது. இயல்பாக இருப்பது போல பாடத்தை ஆரம்பித்தவருக்கு ஐந்து நிமிடங்கள் கூட தாங்க முடியவில்லை. பிரேமை தன் இருக்கை அருகே அழைத்தார். உரையாடல் இருபது விநாடிகளில் முடிவடைந்தது. மீசைக்குள் ஒரு இளநகை அரும்புவதை எங்களால் உணர முடிந்தது. அதன்பின் வகுப்பு வழக்கத்தை விட இனிமையாக போனது.
சரியாக பள்ளி விடும் நேரம் பிரேம் ஆசிரியர் அறைக்கு அழைக்கப்பட்டார். சிவாஜி இதை எதிர்பார்த்திருந்ததால் என்னை தன்னுடன் இருக்க வைத்திருந்தார். நாங்கள் இருவரும் இலவம்பஞ்சு மரத்தடிக்கு வந்தபோது யக்காவும், நயினாரும் காத்திருந்தார்கள். நால்வருமாக பியூன் அண்ணனுக்கு தெரியாமல் பெரிய வகுப்பு கட்டிடங்களுக்கும், சோதனைச் சாலைக் கட்டிடத்துக்கும் இடையே இருக்கும் சந்து வழியே வந்து பின்புறத்தை அடைந்து அப்படியே மேற்காக சுற்றி வந்து ஆசிரியர் ஓய்வறையின் பின்பக்க சன்னலை அடைந்தோம். பிற்பகல் சூரியன் அறைக்குள்ளே கதிர்வீசாமல் இருக்க தென்னந்தட்டியால் மறைக்கப்பட்ட சன்னல் என்பதால் எங்களை ஆசிரியர்களிடமிருந்து மறைத்தும், அவர்களை எங்களுக்கு காட்டியும் கொடுத்தது.
ப வடிவமாக போடப்பட்ட டெஸ்க் பெஞ்சுகள். நடுவே கொலை அரங்கில் நிறுத்தப்பட்ட அடிமை வீரன் போல பிரேம். மீசை சார், தமிழ் சார் இருவரும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்கள். எம் ஏ என் சார் எனப்படும் ஆவுடைநாயகம் சார்வாள் தான் முதலில் ஆரம்பித்தார் – “ ஏலே, ஒனக்கு என்ன பெரிய எம்ஜியார்னு நெனப்போல? வயசுக்கு மீறுன வேலையப் பாத்துருக்க“- அவர் முகத்தில் இருந்தது புன்னகையா, கடும் எரிச்சலால் வந்த சுருக்கங்களின் வளைவா எனத் தெரியவில்லை. “சார், நான் என்ன பண்ணினதுக்கு இப்படி கேக்கறீங்க சார்?” பிரேம் முகம் மாறவேயில்லை. எம் ஏ என் சாருக்கு நம்பவே முடியவில்லை. (டவுசர் போட்ட பய சார், என்ன கேள்வி கேக்காம் பாத்தியளா, பெறக்கையிலேயே கூடப் பொறந்த கொழுப்புல்லா, நெய்யூத்தி வளக்காங்கல்லா, செவுள்ளயே ரெண்டு விட்டு திருப்பிருக்கணும் அந்தமானிக்கு, இந்த மீச கெடந்து குறுக்க பாஞ்சிட்டாம் – மாலை 6 மணியளவில் கருத்தபாண்டியார் டீக்கடை சந்திப்பில் எம் ஏ என் சார் குமுறல் – 1 ).
எம் ஏ என் சட்டென உணர்ச்சி வசப்பட்டார் –“ ஏலே, செய்யுத தப்பையும் செஞ்சுட்டு எகத்தாளம் பேசுதயோ? குரு சொல்லுக்கு மதிப்பு கொடுக்கணும்னு வக்கணையா கோவில் மண்டபத்துல பேசுனா ஆச்சா? மரியாதையா சொல்லு, ஏன் அப்டி செஞ்சே?”. பிரேம் இம்முறையும் அசராமல் கேட்டார் – “சார், நீங்க கேக்கறது புரியலை சார். நான் என்ன செஞ்சேன் சார்?”
இம்முறை எஸ் பி பி சார் எனப்படும் எஸ் பூசைப்பாண்டி சார் குறுக்கிட்டார் –“ டே, ரொம்ப நடிக்காத. எதுக்குடே லெட்டர் எழுதுன? இந்த வயசுல செய்யலாமாடே ? படிக்கற பயன்னா என்னன்னாலும் செய்யறதா? “. பிரேம் முகம் இன்னும் பணிவாக மாறியது. “சார், யாருக்கு லெட்டர் எழுதினேன் சார்?”
“நைன்த் ஏ ல படிக்கற சங்கீதாவுக்கு நீ லெட்டர் எழுதுனல்லயா? அவளே கிளாஸ்ல சொல்லிட்டாடே. ஒரு பையன் வயசு வந்த பொம்பளப் புள்ளைக்கு லெட்டர் எழுதலாமாடே?” – ராஜசேகர் எனப்படும் வி ஆர் எஸ் சார் தன்னையும் விசாரணைக் குழுவில் இணைத்துக் கொண்டார்.
பிரேம் இப்போது நேரடியாக பேச ஆரம்பித்தார் –“ சார், நான் சங்கீதாவுக்கு லட்டர் எழுதலையே சார்”
எம் ஏ என் சார் ரத்த அழுத்தம் எகிற பாய்ந்தார் – “ஏலே, வெளயாடுதியா? அவளே நீ எழுதின லட்டரப் பார்த்துத்தான் வீட்டுப் பாடம் எழுதுனேன்னு சொல்லிருக்கா. நீ என்ன எங்களல்லாம் மண்டையில ஒண்ணுமில்லாதவங்க, ஒனக்குத்தான் பரம்பரயா அறிவிருக்குன்னு பேசிக்கிட்டிருக்க? “ – வேகமாக எழுந்தவரை மீசை சாரின் கனமான குரல் உட்கார வைத்தது.
“இருங்க சார். அவன் சின்னப் பையன். என்ன நடந்துச்சுன்னு கேட்டா சொல்லப்போறான். அதவுட்டுட்டு அவனப் போட்டு மெரட்டுனா? பிரேம், நீ ஒழுங்கா சொல்லுடே. நீ லட்டர் எழுதுனயா? யாருக்கு எழுதின? என்ன எழுதுன? எதுக்கு எழுதுன?”- மீசை சார் பிரேமை கேட்ட கேள்விகள் மூலம் பிற எல்லோரையும் வாயை மூட வைத்தார்.
பிரேம் நொடி நேரம் மட்டுமே மீசை சாரை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு பார்வை ஏ எம் என் சார், ஆர் வி எஸ் சார், எஸ் பி பி சாரை மாறி மாறி தொட்டுச் செல்ல கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு அழுத்தமான குரலில் சொன்னார் –“ சார், நான் லெட்டர் எழுதினது சங்கீதா அப்பாவுக்கு “ எம் ஏ என், ஆர் வி எஸ் இருவரும் குழப்பமானார்கள். “சங்கீதா பரிட்சை முடிஞ்ச அன்னைக்கு மத்தியானமே அரைநாள் லீவு போட்டுட்டு ஊருக்கு போனதுனால அவளுக்கு லீவு வீட்டுப்பாடம் என்னன்னு தெரியலை. அதனால எங்கம்மாவுக்கு லெட்டர் எழுதி வீட்டுப்பாடம் என்னென்னன்னு என்னைக் கேட்டு எழுதச் சொல்லியிருந்தா சார். நான் அவங்க கிளாஸ்ல கேட்டு அவங்கப்பாக்கு லெட்டர்ல எழுதி அனுப்பினேன் சார்” – பிரேம் முகம் “நெக்ஸ்ட் கொஸ்டின்” என்பது போல இருந்தது. எம் ஏ என், ஆர் வி எஸ் இருவரும் தண்ணீரில் முக்கியெடுத்த கோழி போல கண்கள் உருள குரல் எழும்பாமல் இருந்தார்கள். எஸ் பி பி சற்று சுதாரித்தார் – “ அவள ஒனக்கு முன்னாடியே தெரியுமா? எப்டித் தெரியும்?”
“சார், நானும் சங்கீதாவும் நேரு ஸ்கூல்ல ஒண்ணா படிச்சோம் எய்ட்த் வரைக்கும். நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் சார்”
எஸ் பி பி யால் மட்டுமல்ல பிற ஆசிரியர்களாலும் அந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. ( ஆம்பளயும், பொம்பளயும் எப்டி சார்வாள் ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும்? ஒரு வரமொற இல்லையா? ஒரு கட்டுப்பாடு வேண்டாமா சார்? இவனுவ ஆட்களே இப்டித்தான் சார், இவனுக எதையாச்சும் செஞ்சு வச்சிட்டு அவனுக மட்டும் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு வந்துருவானுக. நம்ம புள்ளைக இதப் பார்த்து கெட்டுப் போயிருங்க. இதே வேலதான இவனுவளுக்கு- கருத்தபாண்டியார் டீக்கடை சந்திப்பில் எம் ஏ என் சார் குமுறல் 2). பிரேம் அதன்பின் எங்கள் நட்பு வட்டத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் சொன்னார். நாங்கள் எவ்வாறு சேர்ந்து படிக்கிறோம், படிப்பில் ஒருவருக்கொருவர் எப்படி உதவிக் கொள்கிறோம், நூலக வாசிப்புக்கு எப்படி குழுவாகச் செல்கிறோம், கோவிலுக்கு எப்படி குழுவாகச் சென்று வழிபடுகிறோம் போன்றவற்றை சுருக்கமாகச் சொல்லி விளக்கினார். முகத்தில் ஈயாடவில்லை என்ற சொல்லுக்கு இப்போதும் எங்களுக்குத் தோன்றும் காட்சி பிரேம் பேசியதும் எம் ஏ என், ஆர் வி எஸ், எஸ் பி பி சார்வாள்களின் முகம் போன போக்குதான்.
தமிழ் ஆசிரியர் ஜெயராஜ் சார் லேசாக அசைய மீசை சார் பேசினார் –“ சார், சின்னப் புள்ளைக பொறுப்பா படிக்கணும்னு லெட்டர் எழுதி வீட்டுப்பாடம்லாம் எழுதிட்டு வந்தா இது ஒரு விஷயம்னா சார் விசாரணை? ஹெச் எம் காதுக்கு போச்சுன்னா யாரக் கேட்டு விசாரிச்சீங்கம்பார். ரெண்டு பேருக்கும் அவங்கவங்க வீடுகளுக்கள்ள பழக்கம் இருக்கு. இதுல லெட்டர் எழுதிக்கிட்டா அவங்க வீட்ல இருக்கறவங்க பார்த்துக்கப் போறாங்க. இங்கே நம்ம ஸ்கூலுக்குள்ள இதுவரைல அவங்க ஏதாச்சும் தவறு செய்துருக்காங்களா? இல்லையே, இதெல்லாம் நாம விசாரிக்க வேண்டிய விஷயமா சார்?. வாங்க சார், கெளம்பலாம் “. மீசை சார் எவரையும் எதிர்பாராமல் பையை எடுத்துக் கொண்டு ஜெயராஜ் சாரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். “ பேசிக்கிட்ருக்கும்போதே கெளம்புனா எப்புடி? ஒரு மரியாத இல்லையா? அவனையும், அந்தப் புள்ளையையும் அம்மா, அப்பாவ வரச் சொல்லி கண்டிச்சு அனுப்ப வேண்டாமா? இப்டியே விட்டா காலுக்கு கீழ கெடக்க வேண்டியதெல்லாம் தலையெடுத்து ஆடுன கதையால்ல ஆயிரும். ஆயிரும் என்ன, ஆயிருச்சே இப்பல்லாம்” – வேறெங்கோ பார்த்துக்கொண்டு எம் ஏ என் கேட்டார். மீசை சார் திரும்பவேயில்லை. “ இதென்ன சர்க்குலர் போட்ட மீட்டிங்கா? பேரண்ட்ஸை வரச்சொல்லணும்னா ஹெட்மாஸ்டர் கிட்ட வெவரம் சொல்லிருக்கணும். அவர்தான் வரச் சொல்லணும். அப்டியே சொல்லணும்னா வகுப்பாசிரியர் நான் தான? நான் சொல்லிக்கிருவேன். எடே பிரேம், நீ கெளம்புடே. இனிமே நீ வகுப்பாசிரியர் அனுமதி இல்லாம யார் கூப்டாலும் போகப்படாது. தெரிஞ்சுதா?” – பிரேம் பொதுவாக நன்றி சார் என சொல்லிவிட்டு மீசை சாருக்கும் தமிழ் சாருக்கும் நடுவில் நடந்து வெளியே வந்தார்.
நாங்களும் அவரை உடனே சந்தித்து பாராட்டுவதற்காக சன்னலிலிருந்து திரும்பும்போதுதான் எங்களுக்குப் பின்னால் நாலைந்து மேல்நிலை வகுப்பு அண்ணன்களும் எங்களைப் போலவே உள்ளே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். நாங்கள் பேசுமுன்பே வாயில் விரல் வைத்து சப்தம் போடாமலிருக்கும்படி சைகை செய்தவர்கள் எங்களைப் போகச் சொல்லிவிட்டு தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் விரைந்து வந்து பள்ளிக்கு வெளியே பிரேமை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
(எவ எவனுக்கு என்னென்ன வேலைன்னு பெரியவங்க தெரியாமலா சொல்லி வச்சிருக்காங்க? அத வுட்டுப்போட்டு காலுக்கு ஒதவுதேன்னு செருப்பக் கொண்டு அலமாரில வச்சா மாதிரி … என்னத்த சொல்ல? பழைய கட்டுப்பாடெல்லாம் இல்லாமப் போனதுனால துளுத்துப் போச்சு இவனுவளுக்கு. பஞ்சாயத்துல உக்காராம நின்னுக்கிட்டே துண்டால வாயப் பொத்தாம பேசக்கூடாத பயகல்லாம், நாம பேசும்போதே எந்திரிச்சுப் போற பவுசையெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையெழுத்து. நாடு நாசமாத்தான் போகப்போகுது – கருத்தபாண்டியார் டீக்கடை சந்திப்பில் எம் ஏ என் சார் குமுறல்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு எங்கள் மேல்நிலைப் பள்ளி வாழ்க்கை மாறியது. அதுவரை சிறுவர்களாக இருந்த நாங்கள் சற்று விவரம் தெரிந்தவர்களாக ஆக்கப்பட்ட நிகழ்வுகளின் துவக்கமாக இந்த நிகழ்வு அமைந்து விட்டது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
