அதிரியன் நினைவுகள் -41

This entry is part 40 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

லூசியஸ் இறந்து எட்டு நாட்கள் ஆகியிருந்தன ; செனெட்டிற்கு ஒரு பல்லக்கில் வைத்து என்னைத் தூக்கிச்செல்லுமாறு பணித்தேன். பல்லக்கை செனெட்டின் அவையிலும் அனுமதிக்கக் கேட்டுக்கொண்டேன். திண்டுகளில் சாய்ந்து படுத்தவண்ணம் எனது உரையை ஆற்றினேன். பேசுவது அசதியைத் தந்தது; குரலை அதிகம் உயர்த்திப் பேசுவதைத் தவிர்க்க, செனெட் உறுப்பினர்களை வட்டமாக எனதருகில் வந்து நிற்கச் செய்தேன். இறந்த லூசியஸுக்குப் புகழஞ்சலி செலுத்தினேன். அவன் உயிரோடு இருந்திருப்பின் அன்றைய தினம் செனெட்டில் அவன் உரையாற்றி இருப்பான் ; அத்திட்டத்தில் மாற்றம். ஆண்டனைனஸ் பாயஸ் என்ற பெயரை முன் மொழிந்து உன்னை அவைக்கு அறிமுகம் செய்தேன். எனது முடிவுக்கு செனெட்டின் ஒருமித்த ஆதரவு எதிர்பார்த்ததுபோலக் கிடைத்தது. எனது இறுதி ஆசையும் பிறவற்றைப்போலவே செனெட்டின் ஒப்புதலைப் பெற்றது. பெரியவர் ஆண்ட்டனைனஸிடம், உன்னைத் தத்தெடுத்ததுபோல லூசியஸ் மகனையும், தத்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். என்னுடைய இந்த விருப்பமும் நிறைவேறுமாயின் இருவரும் சகோதரர்களாக இருந்து உரோமாபுரியை அரசாட்சி செய்வீர்கள். நீ அவனுடைய மூத்த சகோதரனாக இருந்து அவனைக் கவனித்துக்கொள்வாய் என்று நினைக்கிறேன். நமது அரசு லூசியஸ் நினைவைப் போற்றும்வகையில் ஏதேனும் ஒன்றைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதென் விருப்பம்.

எனது மாளிகைக்குத் திரும்பியதும், பல நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக சிரிக்க முயற்சித்தேன். எனது  பாத்திரத்தை மிகச்சிறப்பாக ஆற்றிய உணர்வு. வாரிசு விவகாரத்தில் விரோதமாக நடந்துகொண்ட பழமைவாதிகளான செர்வியானஸ் ஆதரவாளர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. செனெட்டில் காலத்திற்கு ஒவ்வாத, பழமையிற் தோய்ந்த  அந்த மாபெரும் உடலுக்கு உரிய மரியாதைகளைச் செலுத்தியிருந்தேன், ஆனால் இவைகளெல்லாம்  அம்மனிதர்களைப் பொறுத்தவரை  இரண்டு  மூன்றுமுறை அவரை நான்  கத்தியால் குத்திய குற்றத்திற்கு ஈடாகாது.   எனது வாரிசு  நடவடிக்கைகளை ஒன்றுமில்லாமற் செய்வதற்கு, எனது மரணத் தருணத்தைச் சாதகமாக்கிக் கொள்ளக்கூடும்.  ஆனால் இதிலுள்ள கூடுதல் பிரச்சினை, மிகவும் மோசமான இந்த எதிரிகள்,  நேர்மையான மரியாதைக்குரிய சக செனெட் அங்கத்தினர்களில் ஒருவருடைய மகனைத்  தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அத்தகையவனை எதிர்க்க துணிவார்கள். நாட்டுக்கென நான் செய்யவேண்டிய கடமை முடிந்தது. எனது ஏகாதிபத்திய பாரம்பரியம், அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய ஆண்ட்டைனனஸ், மார்கஸ் அரேலியஸ் இருவரின் கைகளில் பாதுகாப்பாக இருக்கக்கூடும். இந்நிலையில் இனி தீபுர் மாளிகைக்குத் திரும்ப வேண்டியதொன்றே செய்யவேண்டியது. அதன்பின்  நோயுடன் ஓய்வெடுக்கத் துவங்கலாம்,  வேதனை அனுபவங்களைக் கண்டறிய முற்படலாம், எஞ்சியிருக்கிற ஒன்றிரண்டு மகிழ்ச்சியில் மூழ்கலாம்; முகமற்ற அரூபத்துடன் விட்டுப்போன உரையாடலை மீண்டும் தொடரலாம்.  இனி லூசியஸ் அவனுடைய மகன் உருவில் வாழ்வான். எனது திட்டங்களில் தவறுகளில்லை;  அனைத்துமே  குறைகளின்றிச் செய்து முடிக்கப்பட்டிருந்தன. 

              பொறுமை(Patientia)

அர்ரியன் எனக்கெழுதிய கடிதமிது:

« இடப்பட்ட உத்தரவுக்கிணங்க புவாண்ட்டஸ் பிரதேசத்தில் (Pont-Euxin)மேற்கொண்ட பயணச் சுற்றை  சினோப்பே(Sinope) நகரில் முடித்துக்கொண்டுள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன்பு உன்னுடைய  மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட துறைமுகத்தின் மிகப் பெரிய பழுதுபார்ப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக உள்ளூர் மக்கள் உனக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பது தெரியவந்தது …இதன்பொருட்டு, அவர்கள் உனக்கு ஒரு சிலை வைத்திருக்கின்றனர் ;  ஆனாலது உன் சாயலில் இல்லையென்பதோடு, அழகாகவும் இல்லை என்பதால், வெள்ளைப் பளிங்கினால் செய்த  மற்றொரு சிலையை அவர்களுக்கு நீ அனுப்பிவைக்கவேண்டும்……. இன்னும் சற்று கிழக்கே செல்ல நேரிட்டது ; அங்கு முதன்முதலில் செனபோனும் (Xenophon) பின்னர் நீயும் எந்த மலைகளின் முகட்டிலிருந்து கடந்தகாலத்தில் புவாண்ட்டஸ் பிரதேசத்தைக் கண்டு ரசித்தீர்களோ அதே இடத்திலிருந்து என் கண்களால் நானும் உணர்ச்சிப் பெருக்குடன் அப்பகுதியைப் பார்த்தேன்……

கடலோரக் காவல்படைகளை ஆய்வு செய்தேன். கடமையில் நேர்மை, துருப்புகளுக்கு அளித்த பயிற்சியில் புதிய முறை,பொறியியல் வேலைகளின் தரம் ஆகியவற்றிற்காக அவர்களின் தளபதிகள் மிகச்சிறந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள்…… நன்கு அறியப்படாமலும், பராமரிப்பின்றியும் கிடந்த   கடலோரப் பகுதிகளெங்கும், கள ஆய்வைமேற்கொண்டு தேவையெனில் எனக்கு முன்பாகப் பயணம்செய்த கடலோடிகளின் குறியீடுகளைத் திருத்தவும் செய்தேன்…..

கோக்கிஸை(Cochis)யொட்டி நெடுந்தூரம் சென்றோம். பண்டைய கவிஞர்களின் புனைவுகளில் உனக்குள்ள ஆர்வத்தை நன்கறிவேன் ;  எனவே மீடியாவின்(Medea) மயக்கும் ஆற்றல், ஜேசனின் வீரச்செயல் ஆகியவற்றை பற்றிக்கூடுதலாகத் தெரிந்துகொள்ள இப்பகுதியினரிடம்  விசாரித்தேன் ; ஆனால்  இதுபற்றிய ஞானமற்று அவர்கள் இருந்தார்கள்…….

விருந்தோம்பலை மறந்த இக்கடலின் வட கரையில், பழங்கதையொன்றில் படித்த   முக்கியத்துவம் வாய்ந்த அக்கீலியஸ் என்ற சிறுதீவை எங்கள் மரக்கலம் கரை தொட்டிருந்தது. மூடுபனியில் மூழ்கிக்கிடக்கும் இத்தீவில்தான் தீட்டஸ் தன் மகனை வளர்த்ததாகச் சொல்லப்படுகிறது, இக்கதையை நீயும் கேட்டிருப்பாய். கரையிலிருக்கும் பிள்ளையுடன் உறவாட,  ஒவ்வொரு நாளும் அந்திப்பொழுதில்  ஆழ்கடலிலிருந்து நீரின் மேற்பரப்பிற்கு அவள் வருவதுண்டாம்.. இன்று மக்கள் வசிக்காத தீவு ; வெள்ளாடுகள் மேய்ச்சலுக்கு மட்டுமே உதவுகிறது. ஆக்கிலியஸுக்கு ஓர் ஆலயம் இங்குள்ளது. ஆலா, கடற்புறா, கடற்குருவியெனப் பலவகை கடற் பறவைகள் அடிக்கடி வந்துபோகின்றன, கடல்நீரில் தோய்ந்த இப்பறவைகள் தமது இறக்கைகளை விரித்து மூடும் ஒவ்வொருமுறையும், ஆக்கிலியஸ் ஆலயத்தின் முகப்பிற்குத் தொடர்ந்து அவைக் குளிர்ச்சியைத் தருகின்றன. ஆனால் இத்தீவுக்கு அக்கீலியஸ் என்ற பெயருடன் எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் பட்ரோகிளாஸ்(Patrocle) என்ற பெயருடனும் உள்ளது. அக்கீலியஸுக்கும், சிற்சிலவேளைகளில் அவனுடைய நண்பன் பட்ரோகிளாஸுக்கும் பக்தர்கள் செலுத்திய எண்ணற்ற நேர்த்திக்கடன் பொருட்கள் ஆலயத்தின் சுவர்களை  அலங்கரிக்கின்றன. அக்கீலயஸை நேசிக்கிற, வணங்குகிற மக்கள் பட்ரோகிளாஸ் நினைவையும் அதற்கீடாகக் கொண்டாடுகிறார்கள்.  இப்பகுதிகளைத் தேடிவரும் கடலோடிகளின் கனவுகளில் அக்கீலியஸ் தோன்றி கடலில் வரக்கூடிய ஆபத்தை  எச்சரித்து அவர்களைப் பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது. கனவில் அவர் வருகிறபோது, தனது சினேகிதன் பட்ரோகிளாஸ் நிழலாகத் தம்மை பின்தொடர  வருவதுண்டாம், அதாவது புராணிக இரட்டையர்களான டியோஸ்கூர்ஸ் (Dioscures) போல. 

இவை அனைத்துமே அவசியம்  நீ தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்பதால் உன்னிடத்தில் கூறினேன்;  தவிர இவற்றை என்னிடத்தில் பகிர்ந்துகொள்ள நினைத்தவர்களுக்கும்  இவ்விஷயத்தில் சொந்த அனுபவமோ அல்லது  நம்பகமான மனிதர்களிடமிருந்து தெரியவந்த  உண்மையோ காரணமாக இருந்தது…. சிலநேரங்களில்  அக்கீலியஸ் தைரியத்திலும்,  துணிவிலும்,  உடலின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் அறிவுத் திறனிலும், தனது இளம் தோழனிடத்தில் காட்டும் தீவிர அன்பிலும் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, அனைத்து மனிதர்களினும் பார்க்க மேம்பட்டவனாகத் தோன்றுகிறான். தமது விருப்பத்திற்குரிய ஜீவனை இழந்தபோது,  வாழ்க்கையை வெறுத்துச்,  சாகும் முடிவுக்குச் சென்றான் ;  அதற்குக் காரணமாகவிருந்த விரக்தி, அவனுடைய பிற குணத்துடன் ஒப்பிட இயலாத வகையில் மிகத் தீவிரமானதாக எனக்குத் தோன்றியது. »

கடற்படைப் பிரிவொன்றின் தளபதியும், சிறிய ஆர்மீனியாவின் ஆளுநருமான அர்ரியனிடமிருந்து வந்திருந்த கனத்த அறிக்கை நழுவி என் மடியில்  விழுந்தது. அர்ரியன் பணியை ஒருபோதும் குறைசொல்ல முடியாது,  அதைக் கூடுதலாக உறுதிசெய்கிறவகையில்தான் அவர் அறிக்கையும் இந்தமுறை இருந்தது, நிம்மதியாக இனி நான் கண்களை மூடலாம் ;  அதற்கேற்ப ஆவன செய்திருந்தார். நான் ஆசைப்படக்கூடிய வாழ்க்கைச் சித்திரத்தை  எனக்கு அளித்திருக்கிறார்.  அர்ரியனுக்கு எதைப் பொருட்படுத்தவேண்டுமென்று நன்கு தெரியும்; அவரைப் பொறுத்தவரை உத்தியோக பூர்வ சரிதைகளில்  இடம்பெறாதவையும், கல்லறைகளில்  பொறிக்கப்படாதவையும் கவனத்திற்கொள்ள வேண்டியவை. அடுத்ததாக அர்ரியனுக்கு,  மனிதர் வாழ்க்கையில் குறுக்கிடும் காலமும்,நேரமும் மனதின் பாரத்தைக்  குறைப்பதில்லை, கூட்டுபவை. அவருடைய பார்வையில், தனது இருத்தலை மெய்ப்பிக்க எனது ஜீவன் எடுக்கும் முயற்சியானது,  ஒரு கவிதை தன்னை வடிவமைத்துக்கொள்வதுபோல அர்த்தமிக்கது ;  ஓர் உயிரியின் தனித்துவமான இந்த அபிமானம் குற்றஉணர்வு, பொறுமையின்மை, புகைபோலவும்,  தூசிபோலவும் மண்டிக்கிடக்கும் அர்த்தமற்ற வெறித்தனம் ஆகியவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கூடியது.. மாவீரரகள்,  நண்பர்களடங்கிய பரந்ததொரு சாம்ராச்சியத்தைக் கட்டமைத்து, அர்ரியன் எனக்கும் அதில் இடமளித்திருக்கிறார் ; அதற்கான தகுதி எனக்கும் உண்டென்பது  அவர் முடிவு. வில்லாவில் உள்ள ஒரு குளத்தின் மையத்தில்  பிறமனிதர்களின் இடையூறுகளைத் தவிர்த்து எனக்கென அமைத்திருந்த குடில், போதுமானவகையில் உள்ளடங்கியதில்லை. எனது தள்ளாத உடல்  இங்குதான்  நோய்க்குரிய வதைகளுடன் இழுபடுகிறது. அது இதென்று பின்னோக்கிச்சென்று நிகழ்கால வேதனைகளிலிருந்து முழுமையாக இல்லாவிடினும் ஓரளவிற்குத் தப்பிக்க எனது இறந்தகாலம் உதவுகிறது. உதாரணத்திற்கு தான்யூபு நதிக்கரையோரப் பனிமூடிய வெளி, நிகோமீடியா தோட்டங்கள், குங்குமப்பூ அறுவடைக்குபின் மஞ்சள் தாளடியாகக் கிடக்கும் குளோடியொபோலீஸ் பூமி, ஏதென்ஸ் நகரத்தின் ஏதோவொரு வீதி, சேற்றுநீர்பரப்பில் அலைபாயும் அல்லிகளுடனொரு சோலை, ஓஸ்ரோஸ் முகாமில் இருந்து திரும்பும் வழியில் நட்சத்திரங்களில் ஒளிரும்  சிரியாவின் பாலைவனப் பிரதேசம் எனச் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன.  ஆனால் என் மனைதைக் கொள்ளைகொண்ட இந்த  இடங்கள் பெரும்பாலும் ஏதேனுமொரு பிழை, ஏமாற்றம், எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்றிரண்டு  தோல்விகள்  ஆகியவற்றுடனும் தொடர்பு உடையவை: நான் கெடுதலைச் சந்தித்த  காலங்களில், மகிழ்ச்சி தேடிய மனிதனாக அலைந்தபோது  அப்பாதைகள் அனைத்தும் எகிப்துக்கோ, பயெ நகரில் எனது ஆரோக்கியத்தை மீட்ட குடிலுக்கோ  அல்லது பாலஸ்தீனத்திற்கோ  என்னை அழைத்துச் செல்வதாக இருந்துள்ளன. இவை மட்டுமல்ல, சோர்வுற்ற எனதுடல் நினைவுகளோடு உரையாடுவது,  மூச்சுதிணறலில் வதைபடும் இம்மனிதனுக்கு அக்ரோபோலீஸ் தோட்டப்படிகள் சகிக்கவொண்ணாததொரு காட்சியாக இருப்பது,  லாம்பசிஸ் இராணுவத்தளப் பாதையின் ஜூலை மாதத்துச் சூரியனை நினைத்துப் பார்க்கிறபோதெல்லாம் வெற்றுத்தலையுடன் அதில் காய்வதுபோன்ற உணர்வுக்கு ஆளாவதென, நான் தெரிவிக்கவேண்டியது ஏராளம் ; ஆனால் அர்ரியன் சித்தரிக்கும் காட்சிகள் மேலானவை. அதன் விளைவாக அவருடைய அறிக்கையை வாசிக்கிறபோது அக்கீலியஸ் தீவுக் கடற்கரைகளில், முன்பு நான் கேட்ட  அலைகளின் நீண்ட முனகலை, இங்கு தீபுர் நகரில்  சுட்டெரிக்கும் ஜூலைமாதத்து வெயிலின்போது கேட்கிறேன். இங்கிருந்தபடியே எளிதாக கடலீரத்தில் தோய்ந்திருக்கும் ஆலய வாயிலில் என்னால் உலாத்த முடிகிறது, பட்ரோகிளாஸும் கண்முன்னே நிற்கிறான்… திரும்ப என்னால் காணமுடியாத அந்த இடம் இனிமேல் என்னுடைய இரகசியக் குடில், ஒப்பிடவியலாத புகலிடம். இறந்தபின் அங்குதான் செல்வேன், இது உறுதி. 

கடந்த காலத்தில் ஒருமுறை தத்துவஞானி யூப்ரடீஸை தற்கொலைக்கு அனுமதித்தேன். இனியும் தான் உயிரோடிருந்து ஆகப்போவதென்ன என்கிற கட்டத்தில், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஒரு மனிதனுக்கு உரிமை உண்டு, ஆனால் அது அத்தனை எளிதில்லை. மரணமும்  கண்மூடித்தனமான  வெறிக்கு  அல்லது காதலைப்போன்று ஒருவித பசிக்கு ஆளாகக் கூடியது என்கிற உண்மையை நான் அறியேன். சிற்சில இரவுகளில், தற்கொலைக்குரிய உத்தேசமேதும் இல்லாவிடினும்,  என்னுடைய உடைவாளைத் தோல்வார்கொண்டு இறுகச் சுற்றிவைப்பேன், காரணம் அப்படிச் சுற்றிவைத்தால்தான், அதை உபயோகிப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பதற்கு எனக்குப் போதிய அவகாசம் கிடைக்கும் என்பதற்காக. ஒரு மனிதனைத்  தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுபவை  வெறுமையும், வறட்சியும், சோர்வும்,  இருத்தல் மீதான கசப்பும் ஆகும் ; இவற்றுடனான  அம்மனிதனின் இரகசிய மோதலுக்குள் ஊடுறுவிய ஒரே  நபர் அர்ரியன். நோயிலிருந்து தற்போதைக்கு நான் குணமடைய ஒருபோதும் வாய்ப்பில்லை. பழைய காய்ச்சல் மீண்டும் மீண்டும் தாக்குகிறது. நோய்வாய்பட்ட நபர், அடுத்து வரவிருக்கும் தாக்குதலுக்கு அஞ்சி நடுங்குவதுபோல அவ்வப்போது எனக்கும் தாக்குதலுக்கு முன்பே சரீரத்தில் நடுக்கம். இரவுப்பொழுது நோயுடனான போராட்டமாகக் கழிவதால், முடிந்த அளவிற்கு  அதைத் தள்ளிவைப்பதற்குப்  பணிகளிலும், விடியவிடிய நீடிக்கிற  அரத்தமற்ற பேச்சுகளிலும், புத்தகங்களை வாசிப்பதிலும், வேண்டியவர்களிடம் அன்பு பாராட்டுதலிலும்  ஈடுபடுகிறேன். ஒரு நாடாளும் மன்னன்  தற்கொலைக்குத் துணிகிறானெனில் அதற்கு ஓர் அரசியல் பிரச்சினை காரணமாக இருக்குமென்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. மார்க் ஆண்டனியின் தற்கொலைமுடிவுக்கு யுத்தத்தில் அடைந்த தோல்வி காரணமாகச் சொல்லப்பட்டது. எதிலும் கறாரான பேர்வழியென அறியப்பட்ட அர்ரியன், எகிப்திலிருந்து நான் தோல்வியுடன் திரும்பியிருப்பின், என்னுடைய இந்த விரக்தியை பெரிது படுத்தியிருக்கமாட்டார் ; அலட்சியம் செய்திருப்பார். சுயவிருப்பத்தின் பேரில் உயிர்வாழ்க்கையிலிருந்து விடுபட நினைத்த ஞானிகளை அனுமதித்த எனது சட்டம், மாறாக என்னுடைய படைவீரர்களை அவ்வாறு செய்யவிடாமற் தடுத்தது. அதன் அடிப்படையில் பார்க்கிறபொழுது,  ஒருவகையில்  ஏனைய படைவீரர்களைப்போலவே எனக்கும் உயிரைத் துறக்கச் சுதந்திரமில்லை ; அதேவேளையில் எனது உணர்வும் மழுங்கிடவில்லை, எனது கை தொடுவது கயிறொன்றின் நார்முனையா, கத்தியின் விளிம்பா என்பதை வேறுபடுத்திப் பார்க்க என்னால் முடிகிறது. மரணத்தின் மீதான ஆசையே கடைசியில் அதற்கு  எதிரானதொரு கவசமாகிப்போனது, அதற்கும் நானே காரணம். உறக்கமின்றி அவதிப்படும் ஒரு மனிதன், தன்னை அமைதிப்படுத்த கைவசம் ஒரு திரவமருந்தை வைத்திருப்பதுபோல, எனது இருப்பை ஓரளவு சகித்துக்கொள்ள தற்கொலைக்கான நிரந்தர சாத்தியகூறுகள் உதவின. எனது எண்ணத்தில் மரணத்தின் மீதான வேட்கை  முடிவுக்கு வந்ததற்கு, உள்ளுக்குள் ஏற்பட்ட முரண்களே பொறுப்பு ;  குறிப்பாக நோய்க்கான முதல்அறிகுறிகள் தலையிட்டு, எனது கவனத்தை தற்கொலையிலிருந்து திசை திருப்பிய தருணங்களில். என்னை விட்டுவிலக்கிச் சென்ற இந்த வாழ்க்கைமீது மீண்டும் எனக்கு ஆர்வம் பிறந்தது. சிடோன்   தோட்டங்களில், கூடுதலாகச்  சில வருடங்களை என் உடலுடன் மகிழ்வோடு கழிக்க  விரும்பினேன்.   

உயிரை மாய்த்துக்கொள்ள விருப்பமிருந்தும், மூச்சை விட  உத்தேசமில்லை. மரணத்துடன் கைகோர்த்துகொண்டு நோய் நம்மை வெறுப்பேற்றுகிறது. நோயிலிருந்து குணமடைய வேண்டும், என்பது நமது ஆசை, ஒருவகையில் அது, உயிர்வாழ்வதற்கு நம்மிடமுள்ள விருப்பமானதொரு வழிமுறையுங்கூட.. ஆனால் பலவீனமும், இன்னலும், உடலுக்கு நேரும் ஆயிரமாயிரம் பிரச்சினைகளும் நோயாளி தன்  நோயிலிருந்து விரைவில் குணம்பெற எடுக்கும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதில்லை. நோயில் நம்மைத் திரும்பவும் விழவைக்கும் பொறிகளுக்கு ஈடான தற்காலிக நிவாரணங்கள் ;   இன்றிருக்கும் தெம்பு நாளையில்லை என்கிற நிலமை ; நீடிக்கும் என நினைக்க, சட்டென்று முடிந்துவிடும் உற்சாகம் ;  நோயின் அடுத்த தாக்குதலை எதிர்பார்த்து ஓயாத காத்திருப்பு ; எதுவுமே  வேண்டாம், அலுத்துவிட்டன. கடுமையானதென்று சொல்லவியலாத  இந்த மார்வலி, தற்காலிகமாக  ஏற்படும் அசௌகரியமா, உண்ட மறுகணம் செரிக்கும் உணவின் விளைவிற்குரியதா  அல்லது எதிரியிடமிருந்து இந்தமுறை முறியடிக்கச் சாத்தியமற்ற தாக்குதலை எதிர்பார்க்க வேண்டிய நெருக்கடியா? என்றெல்லாம் ஓர் ஒற்றனைப்போல எனதுடலைக் குறித்து உளவு பார்ப்பதுண்டு. சீசருக்குக் கத்தியுடன் காத்திருந்த ஐம்பது சதிகாரர்கள் செய்தது போல எனக்கும் நான் நுழைந்த மறுகணம் கதவை இழுத்து மூடியிருப்பார்களென  மனதிற்குள் கூறிக்கொள்ளாமல் செனெட்டிற்குள் நுழைந்ததில்லை. தீபுரில் இரவு உணவின் போது, ​​அழைத்த  விருந்தினரை என் உடம்பிற்கு ஏதேனும் நேர்ந்து அதன் காரணமாக நாகரீகமின்றி அவர்களைத் திடீரென வெளியேற்ற  நேருமோ எனப் பயந்தேன்; குளிக்கும்போதோ, இளங்கரங்களின்பிடியிலோ இறக்கக் கூடுமென்கிற அச்சம். ஒருகாலத்தில் எந்தவொரு காரியத்தில் இறங்கினாலும் அது எளிதாகத் தோன்றியது, அதிலெனக்கு மகிழ்ச்சியும் கிடைத்தது. அவைகளை என்றைக்குக் கடினமானவைகளாக உணர ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து அவை என்னை சிறுமைப் படுத்துகின்றவைகளாக மாறிவிட்டன. ஒவ்வொரு நாள் காலையிலும் என்னைப் பரிசோதிக்கும் மருத்துவருக்கு வெள்ளிக்குடுவையை அன்பளிப்பாக வழங்கி அலுத்துப் போகிறேன். தவிர இதில் பிரச்சினை என்னவெனில், இதில் முக்கிய நோயாக இருப்பது, வருகிறபோது தனியே வருவதில்லை, உபநோய்கள் சிலவற்றைத் துணைசேர்த்துக்கொண்டு, வரிசையாக நமதுடலில் பிரவேசிக்கக் காரணமாகிறது. உதாரணத்திற்கு எனது செவியுணர்வு முன்புபோலக் கூர்மையாக இல்லை ; நேற்றுகூட வரலாற்றாசிரியர் பிளேகனிடம் அவர் சொல்லி முடித்த வாக்கியத்தைத் மீண்டும் ஒருமுறை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன், விளைவாக ஏதோ குற்றமிழைத்ததுபோல எனக்குள் அப்படியொரு தலைக்குனிவு

தொடரும்….

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 40 அதிரியன் நினைவுகள் – 42

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.