பசுமை ஆற்றல் – பகிராத மறுபக்கம்

‘மாசில்லா எரிசக்தி’ இன்றைய மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் தேவைக்கு மீறிய ஆற்றலுக்கான தேடல். காற்று, கடல், கதிரவன், இல்லை குப்பை என்று எதிலிருந்து ஆற்றலை மேலும் அபரிமிதமாய் பெறலாம் என்று துடிக்கும் நவீன சமூகம்.

மனிதகுலம் பெரும்பாலும் புதைபடிவ எரிபொருட்களையே சார்ந்திருப்பதால், அதனால்  உருவாக்கப்பட்ட சிக்கல்களை  நாம் அறிந்திருந்தாலும், அரசாங்கங்களும் வணிகங்களும் இப்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், மின்சார வாகனங்கள் இன்றியமையாதவை என்ற கருத்தை ஆழமாக செயல் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.‌ இந்த புதிய உள்கட்டமைப்புக்கு அதிக அளவில் பல உலோகங்களை  வெட்டி எடுக்க வேண்டும் என்ற புரிதல் இருந்தாலும், அவற்றின் மறுபக்கம் பலரும் அறிந்திட வாய்ப்பில்லை.

சமீபத்தில் பைனான்ஷியல் டைம்ஸைச் சார்ந்த ஹென்றி சாண்டர்சன் என்ற பத்திரிக்கையாளர், “வோல்ட் ரஷ்: The winners and losers in the green race”, என்ற புத்தகத்தில் உலோக வேட்டையின் இன்னொரு முகத்தைப் படம்‌பிடித்துக் காட்டியுள்ளார். 

இப்புத்தகம் என்னை, ஒரு விமர்சிகனாக அல்லாமல், ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளனாக பார்க்க வைத்தது.‌ முதலில் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ‘வோல்ட் அவசரம்’ என்பதைவிட ‘வோல்ட் அதிகரிப்பு’ என்பது சரியாக இருக்கலாம்! தலைப்பின் இன்னொரு பகுதி, பசுமைப் பாதையை நோக்கிய பந்தயத்தில் வெற்றி, தோல்வி கண்டவர்கள். இப்புத்தகத்தின் அடித்தளம், கடந்த பத்து ஆண்டுகளாக இடைவிடாத பேசும் பொருளாகக் கருதப்படும் லித்தியம் அயான் பேட்டரியை (LIB)ப் பற்றியது.  இப்புத்தகம் முதல் இருபது பக்கங்களில் இதன் வளர்ச்சியை மேல்நோக்காகக் குறிப்பிட்டாலும், இருநூறு ஆண்டுகளுக்குக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட இக்கருவியை அல்லது மின்கலத்தை விவரிப்பது இப்புத்தகத்தின் நோக்கமில்லை. 

எனது நினைவுகள் ஐந்து வருடங்களுக்குப் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது.

நினைவோ ஒரு பறவை!

அக்டோபர் 9, 2019, மதியம் 3 மணி. ஐ.ஐ.டி. தில்லி வளாகம். நூலகக் கட்டிடத்தின் கீழுள்ள கடையில், கைபேசியிலுள்ள ‘ஆப்’பின் மூலம் பணம் செலுத்தி வாங்கிய சூடான காபியைப் பருகிக் கொண்டிருக்கிறேன். நூலகத்தை சுற்றி இன்னும் ஐந்து சிறிய கடைகள் டீ, காபி, ஜுஸ், சமோசா, சாண்ட் விச் போன்ற பானங்களையும், ஸ்நாக்குகளையும் விற்றுக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வந்த பணமதிப்பிழப்பின்போது, சிறு கடைகளிலும், நுகர்வோர்களுக்கு அனுகூலமாக, ஆப் மூலம் வியாபாரம் செய்ய ஆரம்பித்ததால், பண பரிவர்த்தனை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இக்கடைகளில் வேலை செய்யும் இளைஞர்கள், பொருளாதாரம் காரணமாக கல்லூரி செல்ல இயலாவிட்டாலும், கைபேசி உபயோகிக்கும் கலையில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்! மதிய இடைவேளை என்பதால், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இங்கும், அங்கும் சிதறிக் கொண்டிருக்கிறார்கள்.‌ வானிலை ஒப்பீட்டளவில் மிதமாக இருக்கிறது. இன்னும் சில நிமிடத்தில், வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.  இம்முறையாவது நூறு வயதினை நெருங்கும் John Goodenough, மற்றும் எண்பதை நெருங்கும் Stan Whittingham இப்பரிசினை பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பில் மனம் அசை போட்டுக் கொண்டிருக்கிறது?

கடந்த மூன்று வகுப்புகளாக, லித்தியம் அயன் பேட்டரி (LIB)யைப் பற்றிய விளக்கங்களை, “செயல்பாட்டுப் பொருட்களின் வேதியியல்”  பிடெக் இன்ஜினியரிங் இயற்பியல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன்.  சாதரணமாக முதலாண்டு பொறியியல் மாணவர்களுக்கே, வேதியியலில் அக்கறை இருக்காது. பேட்டரி என்றவுடன், “புதுமை அல்லவே, அதை நீயும் சொல்வது”, என்று அவர்களும் கருதக்கூடும்!  

இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பே, பெஞ்சமின் ஃபிராங்க்ளின், இணைக்கப்பட்ட மின்தேக்கிகளின் தொகுப்பைப் பயன்படுத்தி மின்சாரம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு, அதை ‘பேட்டரி’ என்று குறிப்பிட்டது ஒரு வரலாறு. 1800 ஆம் ஆண்டில், இத்தாலிய இயற்பியலாளர் அலெக்ஸாண்ட்ரோ வோல்டா, உப்பு நீரில் நனைத்த துணியால் பிரிக்கப்பட்ட, அடுக்கப்பட்ட டிஸ்க்குகளைக் கொண்ட செம்பு மற்றும் துத்தநாக உலோகத் தாள்களின் உதவியுடன் முதல் பேட்டரியை உருவாக்கினார். பல நூற்றாண்டுகளாக, முதன்மை பேட்டரிகள் (ரீசார்ஜ் செய்ய முடியாதவை, உதாரணமாக AA, AAA போன்றவை) தொடர்ந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, சிறியதாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், திரவ துத்தநாக புரோமைடை அடிப்படையாகக் கொண்ட முதல் துத்தநாக ரீசார்ஜபிள் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டு, தாமஸ் எடிசன் Zn-Ni பேட்டரியின் முதல் காப்புரிமையைப் பெற்றார். 1859 இல் கண்டுபிடிக்கப்பட்ட ரீசார்ஜபிள் ஈய-அமில பேட்டரி (Gaston Plat´e)தான், இன்றும், பெரும்பாலான உள் எரிப்பு இயந்திர கார்களைத் தொடங்கவைக்கும் பயன்பாட்டில் உள்ளது. இதோ, எதிரிலுள்ள இரண்டு கடைகளில் இன்வெர்ட்டர் இந்த பேட்டரியில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.‌ ஐஐடி வளாகத்திலுள்ள பல வீடுகளிலும், மற்றுமுள்ள பல ஆபீஸ்களிலும், ஆராய்ச்சி சாலைகளும் இன்னும் இந்த பேட்டரியில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன!

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், ஈய-அமிலம் (கார் பேட்டரிகள், நிலையான சேமிப்பு), நிக்கல்- கேட்மியம் (சக்தி கருவிகள், பொம்மைகள்), நிக்கல்-மெட்டல் ஹைட்ரைடு (செல்போன்கள், பொம்மைகள், கலப்பின மின்சார வாகனங்கள்) போன்ற ரீசார்ஜ் பேட்டரிகள் பரந்த அளவிலான அளவுகளில் வரத்தொடங்கின. பல ஆண்டுகளாக, மொபைல் கம்ப்யூட்டிங் மற்றும் வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற  சாதனங்களுக்கு  நிக்கல்-காட்மியம் பேட்டரிதான் சாதகமாக இருந்தது.

லித்தியம் உலோகத்தை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பேட்டரிகளான ஜப்பான் மீன்பிடி மிதவைகளில் பயன்படுத்தும் Li/(CF)n, சூரிய ரீசார்ஜ் செய்யக்கூடிய கால்குலேட்டர்களில் பயன்படுத்தப்பட்ட Sanyo உருவாக்கிய Li/MnO2 என்றவகைகள் புழக்கத்தில் இருந்தது. 

ஐஐடியில் விரிவுரையாளராக சேர்ந்து முப்பது ஆண்டுகள் கரைந்து விட்டன.‌ இதற்குள் எத்தனை மாற்றங்கள்! நான் 1990ல் இங்கு என் பணியைத் துவங்கியபோது, டெஸ்க் டாப் கணினி கூட ஒரு சிலரிடமே இருந்தது என்று சொன்னால், இன்று  ஆச்சரியமாக தோன்றும்.  ஒரு ஃபோன் செய்வது கூட மிகவும் கடினம். வீட்டில் டெலிஃபோன் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், கனெக்க்ஷனுக்காக ஓராண்டு கூட காத்திருக்க வேண்டும்! 1989ல் பிங்ஹாம்டனில் விட்டிங்காம் ஆராய்ச்சி குழுவில் பணியாற்றிய போது, ஒரு முறை அவருடன் எக்ஸான் நிறுவனம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது.  அங்குதான் அவர் வடிவமைத்த முதல் லித்தியம் அயான் பேட்டரி (LIB)யைக் கைபற்றினேன்! அவர் பேட்டரியுடன் கலந்த தனது இருபது வருட அனுபவங்களை பலமுறை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது சிறிய முயற்சி, தனது வாழ்நாளில் இவ்வளவு பெரிய விஸ்வரூபம் எடுக்குமென நினைத்து கூட பார்க்க முடியவில்லையென்று பிறகு சந்தித்தபோது கூறினார்.

1956ல் பெல் லேபாரட்டரியைச் சார்ந்த ஆய்வாளர்கள் ஜான் பர்தீன்,வால்டர் கவுசர் பிரிட்டைன், பிராட்போர்ட் ஷாக்லி ஆகியோருக்கு, 1947ல் டிரான்சிஸ்டர் கண்டுபிடித்ததாற்காக  நோபல் பரிசு வழங்கப்பட்டது. 60, 70களில் பழைய வால்வு தொழில்நுட்பத்தை காலாவதி ஆக்கிய புது தொழில்நுட்பம்தான் டிரான்சிஸ்டர். 

பல்லாயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்களை உள்ளடக்கிய Integrated Circuit அல்லது ஐ.சி. என்பது அடுத்த கட்ட வளர்ச்சியாக பிறந்தது. அதை விட மேம்பட்டவைகளாக இருக்கும் ப்ராசஸ்ஸர்கள், இன்று பல நவீன எலக்ட்ரானிக் கருவிகளை இயக்குகின்றன. நவீன செல்போன்களில் உள்ள ஒரு ப்ராசஸ்ஸருக்குள் சுமார் 300 கோடி டிரான்சிஸ்டர்கள் உள்ளன.   

கைபேசியிருந்து வந்த அலாரம், என்னை பழைய நினைவுகளிருந்து  மீட்டியது. ஸ்வீடனிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும் காணொளியை கைபேசியில் எவ்வளவு எளிதாக இருந்த இடத்திலிருந்து  காணமுடிகிறது.  2019 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு “லித்தியம் அயன் பேட்டரிகளின் வளர்ச்சிக்காக” ஜான் பி. குட்டெனஃப், எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது என்று கேட்டவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்னைப் பொருத்தவரையில் திட நிலை வேதியலுக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு. 

கனவு மெய்ப்பட வேண்டும்

பேட்டரி (மின்கலம்) என்பது இரசாயன ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு மின்மாற்றி ஆகும். பேட்டரிகள் வெவ்வேறு வேதியியலை அடிப்படையாகக் கொண்டவை, அவைகளின் அடிப்படை செல் மின்னழுத்தங்கள் பொதுவாக 1.0–4.0 V வரம்பில் உருவாகும். செல்களை தொடரில்  அடுக்கி வைப்பதால் மின்னழுத்தத்தையும்,  மின்னோட்டத்தின் விநியோகத்தையும் அதிகரிக்க முடியும். தேவையான மின்னழுத்தங்கள் மற்றும் மின்னோட்டங்களை, மெகாவாட் மின்சாரம் வரை சேர்க்க இந்த கொள்கை பயன்படுத்தப்படுகிறது. 

தற்போதைய LIB செயல்பாட்டின் அடிப்படைக் கருத்துக்களில் ஒன்று மின்வேதியியல் இடைக்கணிப்பு (electrochemical intercalation) ஆகும். 

விட்டிங்காம் ஆக்ஸ்போர்டில், பீட்டர் டிக்கன்ஸ் குழுவில் (கனிம வேதியியல் ஆய்வகம்) வேதியியலாளராகப் பயிற்சி பெற்றார். ஸ்டான்போர்டில் கடற்படை சம்பந்தபட்ட  சோடியம் சல்பர் (NaS) பேட்டரி ஆராய்ச்சியில் தனது முந்தைய வேலையில் இருந்து பெற்ற நுண்ணறிவுகளைப் பயன்படுத்தினார். 1972ல் எண்ணெய் நெருக்கடியால் தூண்டப்பட்ட எக்ஸான் நிறுவனம், பெல் ஆய்வகத்தால் ஈர்க்கப்பட்டு, superconductor ஆராய்ச்சிக்காக ஒரு மையத்தை நிறுவியது. இதற்காக , எக்ஸான் நிறுவனம், விட்டிங்ஹாம் மற்றும்  இன்னும் சிலரை ஸ்டான்போர்டில் இருந்து தேர்வு செய்து பணியில் அமர்த்தினர். எக்ஸானில் சூப்பர் கண்டக்டிங் பொருட்களைப் பரிசோதிக்கும்போது, மின்வேதியியல் இடைக்கணிப்பை அனுமதிக்கும் பொருட்களின் கலவையை விட்டிங்ஹாம் கண்டுபிடித்தார்.  மேலும் அந்த நேரத்தில் தொழில்துறை மற்றும் கல்வியாளர்கள் பேட்டரி ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டினர். எண்ணெய் நெருக்கடி மற்றும் மின்சார வாகனத் துறையில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, எக்ஸான் நிர்வாகம் இப்பகுதியில் முதலீடு செய்ய முடிவு செய்தது. இண்டர்கலேஷனுடனான இந்த அனுபவம் இறுதியில் TiS2 இன் இன்டர்கலேட்டிங் கேத்தோடு பொருளாக உருவாக வழிவகுத்தது. விட்டிங்ஹாம் லித்தியம் உலோகம் மற்றும் டைட்டானியம் டைசல்பைடை மின்முனைகளாகப் பயன்படுத்தி, தானாகவே ரீசார்ஜ் செய்யக்கூடிய  வோல்ட் அதிகரிப்பதுடன் (2.5 V) கூடிய புதிய பேட்டரியை உருவாக்கினார். இது எதிர்காலத்தில் புதைபடிவ எரிபொருள் இல்லாத ஆற்றலுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார்.  இருப்பினும், இந்த பேட்டரிகள் ஷார்ட் சர்க்யூட் மூலம் தீப்பிடித்து, சோதனையில் பெரிதுமானபாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியது. 

சிகாகோ பல்கலைக்கழகத்தில் திட நிலை இயற்பியலாளராகப் பயிற்சி பெற்ற ஜான் குட்எனஃப், அமெரிக்க விமானப்படையால் நிதியளிக்கப்பட்ட லிங்கன் ஆய்வகத்தில் (MIT) டிஜிட்டல் கணினிகளுக்கான சீரற்ற அணுகல் நினைவகத்தில் (RAM) பயன்படுத்த ஆக்சைடுகளின் அடிப்படை ஆராய்ச்சியில் பணியாற்றினார். அந்த நேரத்தில், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் எண்ணெய் மற்றும் ஆற்றல் நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் NaS பேட்டரிகளை உருவாக்கும் பணியைத் தொடங்கியது. அமெரிக்க அரசாங்கம், ஃபோர்டின் செயல்பாடுகளை மேற்பார்வையிட  Goodenoughஐ நியமித்தனர். அங்குதான் அவர் ஆற்றல்/பேட்டரி துறையில் தனது ஆராய்ச்சியை அர்ப்பணிக்க தூண்டப்பட்டார். லிங்கன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி டிஜிட்டல் கணினிகளில் கவனம் செலுத்துவதாக இருந்ததால், அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அழைப்பையேற்று இங்கிலாந்து சென்றார். ஆக்ஸ்போர்டில் கனிம வேதியியலில் தனது குழுவை உருவாக்கி,  திட-நிலை வேதியியலாளர்கள் மற்றும் மட்பாண்ட வல்லுநர்களுடன் இணைந்து ஆற்றல்/பேட்டரி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். குட்எனஃப் ஆரம்பத்தில் NaS பேட்டரிகளில் பணிபுரிந்த போது, லேயர்டு ஆக்சைடுகளில் ஒரு பட்டதாரி மாணவரின் பணி RAM தொடர்பான பயன்பாடுகளுக்கான லித்தியம் கோபால்ட் ஆக்ஸைடு (LCO) இன் காந்த பண்புகளை ஆராயும் அவரது ஆராய்ச்சியை அவருக்கு நினைவூட்டியது. 

ஆக்ஸ்போர்டில் இருந்த பீட்டர் டிக்கன்ஸ், இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த பிரையன் ஸ்டீல் ஆகியோரை மையமாகக் கொண்ட அண்டை ஆராய்ச்சி குழுக்கள், மற்றும் எக்ஸானில் இருந்த விட்டிங்காம் ஆகியோரின் மின்வேதியியல் அறிவு மற்றும் மாநாட்டு நடவடிக்கைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகள், ஜான் குட்எனஃப் ஒரு புதிய   கேத்தோடு பொருளை கண்டுபிடிப்பதற்குக் காரணமாக அமைந்தது. குட்எனஃப் மற்றும் கொய்ச்சி மிசுஷிமா ஆகியோர் 1980ம் ஆண்டில் LCO,  கேத்தோடு பொருளாகப் பொருந்தக்கூடிய தன்மையைக் கண்டுபிடித்தனர். ஏறக்குறைய அதே நேரத்தில் அதிக வெப்பநிலையில் இயங்கும் LCOன் இன்டர்கேலேஷன் கேத்தோடு பொருளானது, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நெட் காட்ஷால் மற்றும் அவரது சகாக்களால் சுயாதீனமாக கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவ வேண்டும்.

“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”.

இன்றைய LIB செல்களில் கிராஃபைட் முதன்மையான ஏனோட் பொருளாக இருந்தாலும், இது பெட்ரோலியம் coke ஆகும். இது அகிரா யோஷினோவைச் சுற்றியுள்ள குழுவிற்கு முன்னோடியாக இருந்தது.  இதுதான் சோனியின் முதல் LIB தயாரிப்புகளில் கார்பன் ஏனோட் ஆகும். 1980களின் முற்பகுதியில், பெல் லேப்ஸைச் சார்ந்த சமர் பாசு, உயர்- மற்றும் அறை-வெப்பநிலை செல்களில் நேர்மின்வாய்ப் பொருளாக லித்தியேட்டட் கிராஃபைட்டுக்கான காப்புரிமைகளை தாக்கல் செய்தார். இந்த தொழில்நுட்பத்தின் உரிமையை பின்னர் சோனி பெற்றது. அதே நேரத்தில், 1983 ஆம் ஆண்டில், ராச்சிட் யாசாமி மற்றும் அவரது பிஎச்டி ஆலோசகர் பிலிப் டூசைன் ஆகியோர், Institut polytechnique de Grenobleல் பணிபுரியும் போது, திட-நிலை லித்தியம் பாலிமர் கலத்தில் லித்தியத்தை கிராஃபைட்டாக மாற்றக்கூடிய மின்வேதியியல் இடைக்கணிப்பை வெளியிட்டனர். 

1980 களில், ஜான் குட்னஃப் லித்தியம் கோபால்ட் ஆக்சைடை கேத்தோடாகப் பயன்படுத்தி, ஆற்றல் திறனை இரட்டிப்பாக்கினார் (4V). இது அகிரா யோஷினோ ஒரு கார்பனேசியப் பொருளான பெட்ரோலியம் கோக்கைப் பயன்படுத்தி பரிசோதனை செய்ய வழிவகுத்தது, இது லித்தியம் உலோகம் இல்லாமல் பேட்டரி கணிசமாக பாதுகாப்பானது என்பதைக் கண்டறிய வழிவகுத்தது. இததுவே LIB வளர்ச்சியின் தொடக்கமாகும். 

லித்தியம் வேட்டை

2002ல் விட்டிங்காம் ஐஐடி தில்லியில் ஒருவாரம்  தங்கியிருந்த போது, இந்தியா ஏன் சீனாவைப் போல் பேட்டரி உற்பத்தியில்‌ துரிதமாக ஈடுபடவில்லை. CECRI போன்ற ஒரு பெரிய CSIR நிறுவனம் இருந்தும், ஏன் உங்களது அரசாங்கம் மாற்று சக்தியில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்ற பல வினாக்களை எழுப்பினார். அப்போது அதற்கான விடையுமில்லை, ஆராய்ச்சிக்குப் தேவையான பொருளாதார ஆதரவோ அல்லது உள்கட்டமைப்போ எதுவுமில்லை.

2000ம் ஆண்டு தொடக்கத்தில் சீனா எவ்வாறு தனது பேட்டரி உற்பத்தியைத் தொடங்கியது என்பதையும், எப்படி அது தனது லித்தியம் வேட்டையை மேற்கொண்டது என்பதை,  சாண்டர்ஸன் புத்தகம் விளக்குகிறது. மின்சார பேட்டரிகளுக்கான தேவை அதிகரித்ததிலிருந்து லித்தியம் உலோகமானது விலைமதிப்பற்ற “வெள்ளை தங்கத்தின்” ஒரு வடிவமாக மாறியுள்ளது.

லித்தியம் அயன் பேட்டரி, 21 ஆம்  நூற்றாண்டின் புதுமை இயக்கி.  இந்த தொழில்நுட்பம் இல்லாமல் டிஜிட்டல் மயமாக்கல், மின் இயக்கம் மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவை இன்று சாத்தியமில்லை.  ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினி இல்லாமல் ஒரு மாணவனையோ அல்லது ஆசிரியர்களையோ பார்க்க இயலாது.

சோனி 1991 இல் முதல் லித்தியம்-அயன் ரிச்சார்ஜபிள் பேட்டரியை அறிமுகப்படுத்தியபோது, அவை எவ்வளவு விரைவாக நம் வாழ்வின் அடித்தளமாக மாறும் என்று ஒரு சிலர் கணித்திருக்க முடியும். இப்போது, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, கையில் மொபைல்கள் இல்லாத மாணவ, மாணவிகளை, இல்லை ஒரு சாதாரண மனிதனைப் பார்ப்பது கூட மிகவும் அபூர்வமாகிவிட்டது. ஒரு நூலகத்தில் நுழைந்தாலோ, அல்லது பஸ், ரயில், விமானத்தில் பிரயாணம் செய்யும்போதோ,  பெரும்பாலானவர் படிக்கவோ அல்லது பார்க்கவோ, மொபைல் அல்லது மடிக்கணினிகளையே பயன்படுத்துகின்றனர் என்பது இன்றைய நிதர்சனம்.‌ அச்சிடப்பட்ட பிரதிகளை கையாளுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டது. டெக்ஸ்ட் புக் முதற்கொண்டு, காணொளி வரை அனைத்தும் கைபேசியிலேயே படிக்கிறார்கள், பார்க்கிறார்கள், உடனுக்குடன் பகிரவும் செய்கிறார்கள். இடப்பற்றாக் குறையென்று, நூலகமும் E-journals, E-books என்று துரிதமாக‌ E-sourcesக்குச் சென்றுவிட்டார்கள். 

பல LIB கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் உட்பட, கல்வித்துறை மற்றும் தொழில்துறையில் பல ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் இருந்து பலனடைந்தன. 1970 களில் இருந்து, புதிய தலைமுறை பல ரீசார்ஜபிள் பேட்டரிகள் பற்றிய ஆராய்ச்சி அதிகரித்து வரும் ஆர்வத்தைப் பெற்றுள்ளது, இது மற்ற காரணங்களுக்கிடையில், எண்ணெய் நெருக்கடியால் தூண்டப்பட்டது, இது புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்று ஆற்றல் மூலங்களை சர்வதேச அளவில் தேடுவதற்கு வழிவகுத்தது. சோடியம் சல்பர் (NaS) பேட்டரிகள் போன்ற பிற வகை பேட்டரிகளும் ஆய்வு செய்யப்பட்டன – உதாரணமாக, ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தால். LIB கள் அதிக செல் மின்னழுத்தம், ஆற்றல் அடர்த்தி மற்றும் சுழற்சி திறன் போன்ற அவற்றின் சாத்தியமான சாதகமான பண்புகளுக்கு ஆர்வத்தை ஈர்த்தது. இருப்பினும், LIBகள் வணிக ரீதியாக மட்டுமே வெற்றிகரமாக மாற்றப்பட்டன. 

சாண்டர்சனின் ‘வோல்ட் ரஷ்’ இன்றைய பசுமைத் தொழில்நுட்பங்களுக்குப் பின்னால் உள்ள விநியோகச் சங்கிலியைப் பற்றிய ஒரு நுண்ணறிவு மேலோட்டத்தை வழங்குவதுடன், நமது எலக்ட்ரிக் கார்களை இயக்கும் பேட்டரிகள் முதல் ஆற்றல் மாற்றத்தை இயக்கும் சோலார் பேனல்கள் வரை மற்றும் தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்கள் உட்பட‌ பலவற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்து விளக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழில்நுட்பங்கள் பூமியில் பன்முகத்தன்மையுடன் சிதறிக்கிடக்கும் ஒரு சில கனிமங்களை (உதாரணமாக கோபால்ட், லித்தியம், நிக்கல், தாமிரம்) சார்ந்துள்ளது. இதில் உலகின் சில ஏழ்மையான மற்றும் ஊழல் நிறைந்த நாடுகளும் அடங்கும். இதைத் தவிர காங்கோவில் 70% உலகளாவிய கோபால்ட் உற்பத்திக்கு காரணமான நிழலான ஒப்பந்தங்கள் மற்றும் ஜோலாவின் ஜெர்மினலை நினைவூட்டும் உள்ளூர் மக்கள் பணிபுரியும் மோசமான நிலைமைகள் குறித்தும் விளக்குகிறது.

சித்தார்த் காரா எழுதிய ‘கோபால்ட் ரெட்’ என்ற புத்தகம் இன்னும் விரிவாக சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற வாழ்க்கையை விரிவாக விளக்குகிறது. 

சரியான பொருளாதாரக் கொள்கைகள், மலிவான மூலதனத்திற்கான வரம்பற்ற அணுகல் மற்றும் மூலோபாய கையகப்படுத்துதல் ஆகியவற்றால் சீனா எவ்வாறு தூய்மையான எரிசக்தித் துறையில் முக்கிய பங்காக விளங்கியது என்பதையும் அறிய முடியும்.  வோல்ட் ரஷ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சீனா எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது மற்றும் இப்போது உலகின் அரிய புவிப் பொருட்களின் சிறந்த செயலி மற்றும் உலகின் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தியாளரான CATL இன் தாயகமாக உள்ளது என்பதையும் காட்டுகிறது. சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் இன்றைய நிதர்சனம். 

பெட்ரோல் ஆட்டோமொபைல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் உலகம் பசுமையான இடமாக இருந்திருக்குமா அல்லது EV உற்பத்திக்காக மனிதர்கள் பூமியின் கனிமங்களை சூறையாடியிருப்பார்களா? வோல்ட் ரஷ்: ஹென்றி சாண்டர்சன் எழுதிய வோல்ட் ரேஸில் வெற்றி பெற்றவர்களும் தோல்வியுற்றவர்களும் முக்கிய உலோகங்கள் மற்றும் அரிதான பூமிகளைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய எலிப் பந்தயத்தைப் பற்றியது. இன்று, EVகள் புதைபடிவ எரிபொருட்களை அதிகமாக நம்பியிருப்பதற்கான இன்றைய தீர்வாகக் கூறப்படுகின்றன. ஆனால் பாரம்பரிய சுரங்க நடைமுறையின் நீடிக்காத தன்மையை எடுத்துரைக்க ஒருவர் புறக்கணித்தால், அது எளிதில் மறைக்கப்படுகிறது.

புத்தகத்தின் கணிசமான பகுதி கார்ப்பரேட் வரலாறுகள், சுரங்கத் தொழிலில் முக்கிய நபர்களின் வரவிருக்கும் வயதுக் கதைகள் மற்றும் பல காரணிகள் பங்குச் சந்தையை எவ்வாறு பாதித்தன என்பதைப் பற்றி கவனம் செலுத்துகிறது. வணிகத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு, இதில் அதிகமா ஈர்ப்பு ஏற்படக்கூடும். தனிப்பட்ட முறையில், சுரங்கம் மற்றும் பொறியியல் செயல்முறைகள் மற்றும் பேட்டரிகள் அல்லது EVகளின் பிற பாகங்கள் தயாரிக்கும் போது உலோகங்கள் ─ கோபால்ட், லித்தியம், நிக்கல், தாமிரம் ─ எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய கூடுதல் தகவல்களை நான் எதிர்பார்த்தேன்.

இந்த நவீன உலகத்தில், மாற்றம் மிகவும் அவசியம். மின்சாரப் புரட்சியில் இன்றியமையாதவை சுற்றுச்சூழல் மற்றும் சமூகச் செலவு மற்றும் அதன் மையத்தில் இருக்கும் பேட்டரிகளுக்கு அதிக கனிமங்களின் தேவை பற்றிய சிறந்த கண்ணோட்டம். எந்த தொழில் சார்ந்த வளர்ச்சியிலும், சில வெற்றிகளும் மற்றும் தோல்விகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால், முடிந்தவரை அதை சமமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்த புத்தகம் தாதுக்களின் உலகளாவிய நாட்டம் பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஆய்வை வழங்குகிறது, மின்சாரப் புரட்சியின் சிக்கல்கள் மற்றும் விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சிறந்த புத்தகம் என்றாலும், வோல்ட் ரஷுக்கு இன்னும் தெளிவான கதைக் கோடு இல்லை என்று நான் கருதுகிறேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.