மயிலையாரின் மாசிக்கடலாட்டு

This entry is part 6 of 6 in the series பருவம்

பின்பனிக்காலமான சிசிர ரிது என்பது தமிழ் மாதங்களான (தை) மாசி, பங்குனியை உள்ளடக்கியது எனலாம். காலையில் பனி பெய்யும் காலம் பின்பனிக் காலம் எனப்பட்டது. இதனை ஜனவரி, பிப்ரவரி ஆங்கில மாதங்களில் வருவதாகக் கொள்ளலாம். இப்பருவகாலம்  வறண்ட குளிரையும், குளிர்காற்றையும், அவ்வப்போது பெய்யும் மழையையும், (மலைப்பிரதேசங்களில்) பனியையும் கொண்டது. வருடத்தின் மிகுந்த குளிர் நிறைந்த பருவம் இதுதான். பலவிதமான பழங்கள், பூக்கள், காய்கறிகள் இக்காலத்தில் கிடைக்கும். இந்தப் பருவத்தில் இந்தியாவில் சிவராத்திரி, பொங்கல், லோதி, இன்னும் சில பண்டிகைகள் கொண்டாடப்படும். மேலை நாடுகளில் பெரியவிதமான கொண்டாட்டங்கள் கிடையாது. இனி இப்பருவத்தைப் பற்றிய இலக்கியங்கள், இசை, பண்டிகைகள் ஆகியனவற்றைப் பார்க்கலாமா?


காளிதாசனின் ரிது சம்ஹார காவ்யத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யாழ்ப்பாணம், முகாந்திரம் தி. சதாசிவ ஐயர். இதிலிருந்துதான் பாடல்களைக் கண்டு வருகிறோம். கூடவே துணைக்கு திரு வே. ஸ்ரீ வேங்கடராகவாச்சார்யர் எழுதியுள்ள கருத்துரையையும் ஒப்பிடுகிறோம்.

பின்பனிக் காலத்திற்கும் முன்பனிக் காலத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் கிடையாது. சிசிரம் எனும் சொல்லுக்கு, பனி, குளிர்ச்சியானது, குளிரால் உடலில் நடுக்கம் உண்டாக்குவது எனும் பொருள் என்கிறார் வேங்கடராகவாச்சார்யர். ஆகவே இப்பெயர் வந்ததாம். வர்ணனை, நிகழ்வுகளிலும் அதிக வேறுபாடுகளைக் காண இயலாது. சில ஸ்லோகங்களைப் பார்ப்போமே!

முதல் ஸ்லோகத்திலேயே சிசிர ரிதுவில் நிகழ்வனவற்றைக் கூறுகிறான்: “அழகான பெண்ணே! நன்கு முற்றிய நெற்பயிர், கரும்பு இவற்றின் அடர்த்தியால் நிலங்கள் மறைந்துள்ளன. சில இடங்களில் அன்றில் பறவைகள் இனிய ஒலி எழுப்பிக் கொண்டுள்ளன. இளம் பெண்கள் காதலின் எண்ணங்களில் ஆழ்ந்துள்ளனர். இதுவே பின்பனிக் காலம்.”

அங்கங்கே யன்றி லார்ப்ப
வணிகெழு பழன மெங்குஞ்
சங்கஞ்சேர் முதிர்செஞ் சாலி
தண்கரும் போடி லங்கத்
துங்கஞ்சேர் காத லோங்கித்
தோகையர் களிப்பி னீடச்
சங்கங்கேய் கரத்தாய் கேட்டி
சார்ந்தபின் பனியாங் காலம்.
(இருது சங்கார காவியம் 101)

மூடப்பட்ட சாளரங்களை (சன்னல்களை) உடைய வீட்டின் உட்புறம், நெருப்பு (அடுப்பு எரிவதாலோ அல்லது கணப்பு முதலியனவற்றைப் பயன்படுத்துவதனாலோ) சூரிய கிரணங்கள், பருமனான ஆடைகள், இளமை பொங்கும் அழகிய பெண்கள், இவையனைத்தும் பெருமைபொருந்திய மனிதர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்றபடி அனுபவிக்கத்தக்க நிலைமையை இப்பருவ காலத்தில் அளிக்கும்.

சார்தரு சாள ரங்கள்
தாழுறு மனையி னுள்ளுஞ்
சேர்தரு செந்தீ யோடு
செங்கதி ரொளியும் பார
மார்தரு படாமும் யௌவ
னந்திக ழணங்க னாரும்
ஏர்தரு மைந்தர்க் கிந்நா
ளேற்றவாந் தகைமை யேயும்.
(இருது சங்கார காவியம் 102)

மேலும் இக்காலத்தின் தன்மையை விவரிப்பான்: சந்திர கிரணங்களைப்போலக் குளிர்ச்சியான சந்தனமும் சந்திர கிரணங்களால் அழகு படுத்தப்பட்ட மாளிகையின் மேல்முற்றங்களும், மிகுந்த பனியால் வீசும் குளிர்ந்த காற்றும் இச்சமயத்தில் மனிதர்களை மகிழ்விப்பதில்லை.

சந்திர கிரண சீத
சந்தன மாடத் தும்பர்
இந்திர நிலாப் பரப்பு
மெழிற்றல மிமம்ப ரித்து
வந்திர மயமில் லாது
வழங்குங்கா லிவையிக் காலை
யிந்திர னிகரு மைந்தர்க்
கின்பநேர் விலவா மன்னோ.
(இருது சங்கார காவியம் 103)

மேலும் இப்பனிக்காலத்தில் இரவுகள் எவ்வாறுள்ளன தெரியுமா? அடர்ந்து பனி விழுவதனால் குளிர்ச்சியாய் உள்ளன; சந்திரனின் ஒளியால் இன்னும் குளிர்ச்சி மிகுதியாகின்றது; இரவுகள் மிகுதியாக ஒளிதராத நட்சத்திரக் கூட்டங்கள் என்பதை அணிகளாகக் கொண்டுள்ளன. ஆகவே இவை மனிதர்களால் அனுபவிக்கத் தகுந்தவாறு இல்லை.

அடர்தரு பனிவீழ்ந் துற்ற
சீதமோ டாலோன் காந்தி
படர்தலி னின்னுஞ் சேரப்
படர்செயும் பனிய தாகிச்
சுடர்தலின் றாகு தாரா
கணமென்மா சுறுக லன்கள்
தொடர்தலிற் கங்குல் மாந்தர்
துய்ப்பதற் கேற்பி லாவால்.
(இருது சங்கார காவியம் 104)

மகளிரை அடுத்து வர்ணிக்கிறான். நீரால் துலக்கமுற்றதால் (முகம் கழுவிக் கொண்டதனால்) பெண்டிரின் காந்திதரும் முகம் துலங்கிக் காண்கின்றது. அவர்களது காதளவு நீண்ட விழிகளின் ஓரம் கடை சிவந்து காண்கிறது. மேகம்போன்ற குழல்கற்றைகள் அவிழ்ந்து அழகான தோள்களில் புரளுகின்றன. இத்தகைய பெண்கள் தம் மனைகளில் திருமகள் போலக் காணப்பட்டனர்.

ஆஹா! காளிதாசனுக்கிணை அவனேதான்!

நீர்துலங்கிப் பொலன்கமல நிகர்காந்தி தருமுகத்தோ
டேர்துலங்கு காதளவு மேறுவிழிக் கடைசிவப்ப
கார்துலங்கு குழலவிழ்ந்து கவிதோளிற் படியுமின்னா
ரீர்துலங்கு புலரிமனை யிடைதுலங்கு திருவொத்தார்.
(இருது சங்கார காவியம் 113)

இவ்வாறெல்லாம் வர்ணனைகள் தங்குதடையின்றி ஊற்றெடுத்தோடுகின்றன.


ஆங்கிலத்தில் ஜாக் லண்டன் (Jack London) என்பவர் எழுதியுள்ள ஒரு திகைக்க வைக்கும் சிறுகதை (நெருப்பை மூட்டுவது- To build a Fire) அத்தேசங்களின் பனிப்பொழிவின் கொடூரத்தையும் அதனால் மனிதர்கள் அனுபவிக்கும் கொடுமையையும் விலாவாரியாக விளக்குகிறது. 

யுகான் (கனடாவிலுள்ள ஒரு பிரதேசம்) எனும் இடத்தில் நடக்கும் சம்பவம். ஒரு மனிதன் தனது சகாக்களின் இருப்பிடத்தை அடைய அடர் பனி பொழியும் ஒரு நாளில் கால்நடையாகக் கிளம்புகிறான். வழி தப்பி விடுகிறது; குறித்த நேரத்தில் சென்றடைய முடியவில்லை. பனியில் அவனுடைய தடிமனான ஆடைகள், கையுறைகள், கால் பூட்ஸ்கள் இவற்றையும் மீறிக் குளிர் புகுந்து எலும்பையும் உறைய வைக்கிறது. நெருப்பு மூட்டிக் குளிர்காய எண்ணி, இருக்கும் சில நெருப்புக் குச்சிகளால் நெருப்பை மூட்ட முயலுகிறான். காற்று அதனை வீசி வீசி அணைத்துவிடுகிறது. இறுதியில் குளிர் தாங்காமல் அவன் அங்கேயே இறந்தும் விடுகிறான். 

முதல், கடைசி பாராக்களிலிருந்து வரிகளை மொழியாக்கம் செய்து தருகிறேன்:

‘யுகான் குறியீட்டுச் செய்தி: தனியாகப் பயணிப்பவன் அதிவேகமாகச் செல்கிறான் …………. ஆனால் பனி விழுந்து பூஜ்யத்திற்குக் கீழும் ஐம்பது டிகிரி குறைந்துவிட்ட பின் அல்ல.’
அந்த மனிதன் யுகான் பாதையிலிருந்து உயரமான மண்பாதையில் ஏற ஆரம்பித்தபோது, குளிராக, மூட்டமாக, நாள் விடிந்து விட்டது. ஒரு மெல்லிய, மங்கலான அதிகமாகப் பயணிக்கப்படாத பாதை கிழக்கை நோக்கிச் சென்றது. அது ஒரு செங்குத்தான பாதை. அவன் தனது கடிகாரத்தைப் பார்ப்பதற்காகத் தான் சிறிது நின்றதாக நியாயப் படுத்திக் கொண்டு, உயரத்தில் நின்று மூச்சு வாங்கிக் கொண்டான். அப்போது ஒன்பது மணி. ஆகாயத்தில் ஒரு மேகம்கூட இல்லாவிடினும் சூரியனோ, சூரியன் இருப்பதோ புலப்படவில்லை; இருப்பினும் புரிந்துகொள்ள முடியாத ஒரு (சவப்பெட்டித்)துணி அனைத்தையும் மூடியது போலிருந்தது; சூரியன் இல்லாததனால் ஒருவாறான மெல்லியதொரு சோக இழை அந்த நாளை சோகமாகக் காண்பித்தது. இது அந்த மனிதனைக் கவலைப் படுத்தவில்லை. அவனுக்கு சூரியன் இல்லாதது பழக்கமாகி இருந்தது. அவன் சூரியனைப் பார்த்தே நீண்ட நாட்களாகி விட்டிருந்தன; இன்னும் சில நாட்கள் கழிந்தபின்பே அந்த உற்சாகமான கோளம் தெற்கில் எழுந்து வான எல்லையில் எட்டிப்பார்த்துவிட்டு உடனே கண்களிலிருந்து மறைந்தும் விடும் என அவனுக்குத் தெரியும்.
……………………………………
அவன் மற்ற தோழர்கள் அவனுடைய உடலை அடுத்த நாள் கண்டுபிடிப்பது அவன் கண்முன் படமாக விரிந்தது. திடீரென அவன் தானும் அவர்களுடன் அப்பாதையில் வந்து தன்னைக் கண்டுபிடிப்பதனைக் கண்டான். அவர்களுடன் ஒரு வளைவில் வந்து அவன் தான் பனியில் கிடப்பதனைக் கண்டான். அவன் தன்னுடன் இருக்கவில்லை, ஏனெனில் அவன் தன்னிடமிருந்து வெளியே இருந்தான், மற்றவர்களுடன் நின்றுகொண்டு தான் பனிமீது கிடப்பதனைக் கண்டான். இது கட்டாயமாகக் குளிராக இருக்கிறது என்பதே அவனுடைய எண்ணம். அவன் அமெரிக்காவிற்குத் திரும்பியதும் உண்மையான குளிர் என்னவென்பதை அங்குள்ளவர்களுக்குச் சொல்லவேண்டும் என எண்ணிக் கொண்டான். அவன் இதிலிருந்து மற்றொரு காட்சியை, ஒரு பழையவன் கந்தக ஆற்றின் பக்கம் இருப்பதனைக் கண்டான். அவன் வெதுவெதுப்பாகவும், சௌகரியமாகவும் ஒரு பைப்பைப் புகைத்துக் கொண்டும் இருப்பதனை இவனால் நன்கு பார்க்க முடிந்தது.
“பழம் குதிரைகளே (நண்பர்களை விளிக்கும் நட்புச்சொல்) நீங்கள் சரியாகச் சொன்னீர்கள்,” அவன் கந்தக ஆற்றின் கரையில் கண்ட பழையவனிடம் சொன்னான்.
பின் அவன் எப்போதுமே கண்டறியாததொரு மிகவும் சௌகரியமான, திருப்திகரமான உறக்கத்திலாழ்ந்தான். அந்த நாய் அவன் எதிரே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தது (நெருப்பின் கதகதப்புக்காகவும், உணவுக்காகவும்). நீண்ட, மெதுவான இரவு நேர வெளிச்சத்தில் அந்தக் குறுகிய நாள் ஒரு முடிவுக்கு வந்தது. நெருப்பினை எரிக்கும் சைகைகள் ஒன்றையும் காணோம்; நாயின் அனுபவத்தில் மனிதன் இவ்வாறு உட்கார்ந்து நெருப்பைப் பற்ற வைக்காமல் இருந்ததேயில்லை. இரவு கவியத்தொடங்கியதும், அதன் நெருப்பின் கணகணப்புக்கான ஆர்வம் அதனை வென்றது; அது கால்களை முன்னும் பின்னுமாக வைத்துக் கொண்டிருந்தது; பின் மெல்லிய குரலில் ஊளையிட்டது; மனிதன் அதனைக் கடிந்து கொள்வதனைக் கேட்கத் தன் செவிகளை மடித்துக் கொண்டது. ஆனால் அவன் அமைதியாக இருந்தான். பிறகு, நாய் உரக்க ஊளையிட்டது. மனிதனிடம் மெல்ல நகர்ந்து சாவின் வாசனையை முகர்ந்து தெரிந்து கொண்டது. இதனால் அது பின்வாங்கியது. குளிர்ந்த வானத்தில் குதித்தாடிய நட்சத்திரங்களுக்கடியே ஊளையிட்டபடி அது சிறிது நேரம் தாமதித்தது. பின் அதற்கு உணவையும் நெருப்பின் கதகதப்பையும் அளிக்கும் மற்றவர்களைத் தேடித் திரும்பி அந்தப் பாதையில் மனிதர்களின் குடியிருப்பை நோக்கி ஓடிச் சென்றது.

இவ்வாறு கதை முடிகிறது. என்ன கொடூரம் இந்தக் குளிர்? இல்லையா? 

நமது நாட்டைக் காக்கும் எல்லைப்பணியில் ஈடுபட்டுள்ள ஜவான்கள் கூட லே- லடாக் (Leh- Ladakh) பகுதிகளில் இத்தகைய குளிரில் தங்கள் கடமையை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


சில மகிழ்ச்சியான செய்திகளைப் பார்ப்போம்.

இந்தியா முழுமையே ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் அறுவடைப் பண்டிகை பொங்கல், சங்கராந்தி, லோதி, பிஹு இன்னும் பல பெயர்களில் இம்மாதங்களில் கொண்டாடப்படும்.  இதன் தொடர்பாகவே முற்றிய செந்நெற்கதிர்கள் பற்றிய செய்தியைக் காளிதாசனின் ரிது சம்ஹாரத்தில் கண்டோம். பயிர்கள் வளர ஏதுவான வெயில், மழை, மிதமான குளிர் இவற்றைத்தரும் சூரிய சந்திரர்கள், தொழிலுக்குத் துணை செய்யும் கால்நடைகளான ஆடுமாடுகள், பலவிதமான பறவைகள், பூச்சி புழுக்கள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்து தமிழகத்தில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் ஆகும்.

~~~~~~~~~~~~~

அடுத்து மாசி மகம் பற்றிய செய்திகளைக் காண்போம்.

இது  மாசிமாத பௌர்ணமியுடன் சேர்ந்துவரும் மகம் நட்சத்திர நாளில் இந்துக்கள் கொண்டாடும் ஒரு திருநாள். இதனைக் கடலாடும் விழா என்றும் கூறுவார்கள். நம் தமிழ்நாட்டில் 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாமகம் கும்பகோணத்தில் சிறப்பான ஒரு விழா.

புராணங்களில் இதைப் பற்றிய கதைகள் நிறைய உள்ளன. வட இந்தியாவிலும் இதனைக் கும்பமேளா எனக் கொண்டாடுகிறார்கள். சங்ககாலத்திலும் இவ்விழா கொண்டாடப்பட்டது என்பதற்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன.

மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் எனும் புலவர் ஏழாம் நாள் முடிவில் நிகழும் நீராடல் விழாபற்றிக் குறிப்பிடுகிறார். 

கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி,

ஆடு துவன்று விழவின், நாடு ஆர்த்தன்றே

(மதுரைக்காஞ்சி-427-8)

சங்க காலப் பாண்டிய மன்னன் முந்நீா் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுவதாக ஒன்பதாவது புறநானூற்றுப் பாடலில் காணப்படுகிறது. 

திருஞானசம்பந்தர் தன்னுடைய மயிலாப்பூர் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.

‘பூம்பாவையே! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமக நாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய எருதின்மீது ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவனது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?’

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். (6)

காரடையான் நோன்பு எனப்படும் சாவித்திரி நோன்பும் தமிழகத்தில் மாசிமாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் பொழுதில் கொண்டாடப்படும். மகாபாரதக் கதையில் காணும் சாவித்திரி – சத்யவான் கதையின்படி, தன் கணவனின் உயிரைக் கவர்ந்து சென்ற எமதர்மராஜனிடம் சாமர்த்தியமாக வாதிட்டு சாவித்திரி அவன் உயிரைத் திரும்பப் பெறும் கதையை நாம் அறிந்திருப்போம். இதனைப் பெண்கள் தம் கணவன்மார்களின் நீண்ட ஆயுளை வேண்டி, பார்வதிதேவிக்குப் பூஜை செய்வார்கள். அப்போது சாவித்திரி கானகத்தில் கார் அரிசி எனும் அரிசியால் (எளிய வாழ்க்கை வாழ்ந்த அவர்களுக்கு அதுவே கிடைத்தது) செய்த அடையைத் தாமும் செய்து பார்வதிதேவிக்கு நைவேத்தியம் செய்வார்கள்.


இப்பருவத்திற்கான இசை பற்றிய குறிப்புகள்:

இந்துஸ்தானி மரபின்படி பைரவ், குணகரி (குணகலி அல்ல) ஆகிய ராகங்கள் இப்பருவத்தில் அதிகாலை நேரத்தில் பாடப்படும். ஒரு பெண் தன் கணவன் / காதலனின் வரவுக்காக ஏக்கத்துடன் காத்திருப்பதனைச் சித்தரிப்பது குணகரி ராகம். பைரவ் எனும் ராகம் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட முதல் ராகம் என்பார்கள். அதிகாலையில் பாடினால் மனதை ஒருமைப்படுத்தி இறைவனிடம் குவியச் செய்யும் தன்மை வாய்ந்தது இந்த ராகமாகும். வீணா சஹஸ்ரபுத்தே எனும் பாடகி பஹார், சோஹினி ஆகிய ராகங்களை இப்பருவத்திற்கு உரியனவாகப் பாடியுள்ளார்.

மேலை நாட்டு இசையில் காணும் இசை அமைப்புகளைப் பற்றி, சென்ற அத்தியாயத்திலேயே கூறி விட்டேன். 

இத்துடன் பாரத தேசத்து ஆறு பருவங்களுக்கான செய்திகள் கொண்ட இத்தொடர் நிறைவுறுகிறது.

அவ்வப்பருவத்தைக் கொண்டாடி மகிழுங்கள்.

~~~~~~~~~~~~~~~~

பொதுவான சில குறிப்புகளைப் பதிவிட்டு இத்தொடரை நிறைவு செய்கிறேன்.

பருவங்களுக்கான இசை பற்றிய குறிப்புகளில் முந்தைய அத்தியாயங்களில் நமது தென்னிந்திய இசையில் பருவங்களுக்கான ராகங்கள் காணப்படவில்லை, இசைக்கப்படவில்லை எனக் கூறியிருந்தேன். ஆனால் தமிழிசை இலக்கண மரபுப்படி பருவங்களுக்கான ராகங்கள் பாடப்பட்டன என முனைவர் சேலம் ஜெயலட்சுமி அவர்கள் கூறுகிறார். 

ஐந்திணைப் பகுப்பான நிலங்களின் பெரும்பொழுதுகள் இப்பருவங்கள் தாம்.

குறிஞ்சி:

இதன் பெரும்பொழுதுகள் கூதிர்காலமும் முன்பனிக்காலமுமாகும். குறிஞ்சிப்பண் இந்நிலத்திற்குரிய பண்ணாகும். 

முல்லை:

முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுது கார்காலமாகும். சிறுபொழுது மாலைநேரம். யாழ் முல்லையாழ் அல்லது செவ்வழியாழ் (தற்காலத்திய தோடி) எனப்படும். செவ்வழிப்பண் என்பது இரங்கற்பண் ஆகின்றது. இதற்கு மதுரைக்காஞ்சி, புறநானூறு இவை சான்றுகள்.

“மாலைக்காலம் வந்ததும் எம் சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழி எனும் பண்ணில் வாசித்து, மழையையும் (கார்கால) ஏற்றுக்கொண்ட காட்டைப் பாடினோம்,” என்கிறாள் தலைவி.

“அருளாயாதலோ கொடிதே யிருள்வரச்
சீறியாம் செவ்வழி பண்ணி யாழ்நின்
காரெதிர் கானம் பாடினே மாக” (புறநானூறு)

மருதம்: மருதப்பண் காலைநேரத்திற்கும்  வேனிற்காலத்திற்கும் உரியது. மதுரைக்காஞ்சி, புறநானூறு இவற்றிலும் சிலப்பதிகாரத்தின் வேனிற்காதையிலும் இது பற்றிய குறிப்புகளைக் காணலாம். கோவலன் சினம்கொண்டு மாதவியைப் பிரிந்து சென்றபின்பு அவள் தனியே தனது மாளிகைக்குத் திரும்பி, ஒரு காலைப்பொழுதில் “வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற்பள்ளி ஏறி” “அதிரா மரபின் யாழ்கை வாங்கி” பலவிதமான மருதப் பண்களை அதில் இசைத்தாள் என்கிறார்.

“அகநிலை மருதமும் புறநிலை மருதமும்

அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்

…………………………………………………….

புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி” என்பன சிலப்பதிகார வரிகளாம்.

நெய்தல்:

இதற்கும் செவ்வழிப்பண் தான் உரிய பண்ணாகும். நெய்தல் பண் விளரிப்பண் எனவும் கூறப்படும். இதனை எற்பாடு எனும் காலைநேரச் சிறுபொழுதில் பாடுவார்கள். மாதவி சிலப்பதிகாரத்தின் கானல்வரியினில் விளரிப்பண் எனும் இரங்கற்பண்களைப் பாடியிருப்பதனைக் காணலாம்.

“இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே

………………………………………………………..

வளைநெகிழ எரிசிந்தி காரிருள் பரந்ததுவே

……………………………………………………….

மதியுமிழ்ந்து கதிர்விழுண்கி வந்த இம் மருள்மாலை” எனப்பாடுகிறாள் அவள்.

பாலை: 

இதன் சிறப்பான பண் (பாலைப்)பஞ்சுரம் எனப்படும். நண்பகலுக்குரிய இப்பண் வேனிற்காலம் எனும் பெரும்பொழுதுக்கும் உரித்தாகின்றது. சிலப்பதிகாரத்தினின்றும் இதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. 

“பாய்கலைப் பாவை பாடற்பாணி ஆசான் திறன் அமைவரக் கேட்டு,” என்பன புறஞ்சேரியிறுத்த காதையின் வரிகளாம்.


பருவங்கள் பற்றி அருமையான குறிப்புகள் நமக்குப் பல நூல்களில் காணக்கிடைக்கின்றன. குறிப்பாக, வேதங்களிலும் உபநிஷதங்களிலும் படைப்பின் பல ரகசியங்கள் விளக்கப்பட்டுள்ளன. வேதத்தில் உள்ள புருஷ சூக்தத்தில் பருவங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. (ஸ்லோகம்: 6)

‘ஆதிகாலத்தில் புருஷன் எனப்படும் ஒருவனுக்கு ஆராதனை செய்ய மற்ற கடவுள்களுக்குப் பூஜைப் பொருட்கள் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள், தாங்கள் காலந்தாழ்த்தாது ஆராதனையைத் தொடங்குவதற்காக இந்தப் பிரபஞ்சத்தையே அந்த உயர்வான ஒருவனுக்கு அர்ப்பணம் செய்தனர். காலம் என ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. எண்ணங்கள் உற்பவிக்கும் போது அவற்றிற்கு இடைப்பட்ட பொழுதே காலம் எனப்படும். அது பிரபஞ்சத்தில் நிலவும்போது பருவங்களாக உருக் கொள்கிறது. ஆகவே அவர்கள் மனத்தினால் காணிக்கை செலுத்தலாயினர். எவ்வாறெனில், பருவங்களைப் பூசைப் பொருட்களாக்கினர். ‘வசந்தம்’ என்பதனை ஹோமத்திற்கான நெய்யாகவும், வேனில் (க்ரீஷ்ம ரிது) காலத்தை, சமித்துக்களாகவும், மழைக்காலத்தை ‘ஹவிஸ்’ எனப்படும் தானியங்களாலான நைவேத்தியமாகவும் அர்ப்பணித்தனர்.’ தங்களைச் சூழ்ந்திருந்த அனைத்தையுமே அந்தப் புருஷனுக்கு அவர்கள் அர்ப்பணித்தனர் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்

இவ்வாறு பருவங்களை ஆதிகாலம் தொட்டே  கடவுள்களும், தேவர்களும், மானிடர்களும் போற்றி வந்துள்ளனர். இன்றைய நேற்றைய கதையல்ல இது.

பருவங்களுக்கேற்றவாறு வாழ்க்கையை மனிதனும் ஆதிகாலம் தொட்டே மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறான் எனப் பலவிதங்களில் நம்முடைய பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகள், ஆடை அணிகலன்கள், பண்டிகைகள், விழாக்கள், இசை, இன்ன பிறவற்றால் அறிய முடிகிறது. 

இன்னும் பல செய்திகளை நான் அறியாமல் இருந்திருக்கலாம். அல்லது கூற விடுபட்டுப் போயிருக்கலாம். அவற்றை மறுமொழியில் சுட்டிக் காட்டினால் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

பார்வை நூல்கள்:
1. இருது சங்கார காவியம்- யாழ்ப்பாணம் முகாந்திரம் தி. சதாசிவ ஐயர். 1950
2. ருது சம்ஹார காவ்யம்- காளிதாசன்- உரை- வே. ஸ்ரீ. வெங்கடராகவாச்சார்யார்- லிப்கோ பிரசுரம். 1987
3. சங்க இலக்கிய நூல்கள்.
4. தாகூரின் கவிதைகள்.- Macmillan & co
5. புருஷ சூக்தம்- ஸ்வாமி சின்மயானந்தா உரை.
6. தமிழிசை இலக்கண மரபு – முனைவர் சேலம் எஸ் ஜெயலட்சுமி.
7. தொல்காப்பிய சூத்திரங்கள்.
8. To build a fire- by Jack London
9. சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்
10. The Rtu Samhara of Kalidasa- by M R Kale
11. மேக சந்தேச காவ்யம்- காளிதாசன்- உரை- வே. ஸ்ரீ.
வெங்கடராகவாச்சார்யார்- லிப்கோ பிரசுரம். 1987

பருவம்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…..

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.