- வசந்தகாலம் வருமோ?….
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…
- உதிரும் வண்ண இலைகள் !
- மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…..
- மயிலையாரின் மாசிக்கடலாட்டு

கோடையைத் தொடர்வது மழைக்காலமான கார்காலமாகும். இதனை வடமொழியில் வர்ஷ ரிது என்பார்கள். இது ஆடி, ஆவணி தமிழ் மாதங்களையும் ஜூலை, ஆகஸ்ட் எனும் ஆங்கில மாதங்களையும் கொண்டது. கடும் கோடைக்குப் பின் பொழியும் மழையும் அதனைக் கொண்டுவரும் கார்மேகங்களும் வரவேற்கப்படுபவை; போற்றத் தகுந்தவை. ஆகவே இவற்றைப் பற்றிய பாடல்களும், வர்ணனைகளும், ஏராளமாக நம் நாட்டிலெழுந்த எல்லாவகை இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
காளிதாஸன் ரிது சம்ஹாரத்தில் இதனைப் பற்றிக் கூறுவதனை அதன் தமிழாக்கம் மூலம் காண்போமா? முதல் ஸ்லோகமே (பாட்டு) அற்புதமாகக் கார்காலத்தை ஒரு மன்னனாக வர்ணனை செய்கின்றது. அரசர்களுக்குரிய பட்டத்து யானை, முரசு, கொடி ஆகியவற்றுடன் கார்காலம் தோன்றுகின்றதாம்.
‘அன்பே! மேகங்கள் எனும் யானைகளைக் கொண்டதாகவும், ஒளிவீசும் மின்னலைக் கொடியாகக் கொண்டும், முழங்குகின்ற இடியோசை முரசாகவும், இவ்வாறு வரிசைகள் அனைத்தும் கொண்டு பெருமையாய் விளங்குமாறு அரசர்களுக்கேயுரிய விளங்கும் சிறப்புகளுடன் காதல் கொண்டவர்கள் எப்போதும் களிக்குமாறு கார்காலமானது வந்துவிட்டதனைக் காண்பாயாக.’
துளிதரு மேக மத்தவா ரணமுஞ்
சுடர்தரு மின்னலன் கொடியுந்
தெழிதரு மசனி முரசுமென் றின்ன
சேர்தரு வரிசையிற் பொலிய
ஒளிதரு சிறப்பி னுயர்ந்துமன் னவரை
யொத்துமெய்க் காதலர்க் கென்றுங்
களிதரு நண்ப தாகிய காரீண்
டடுத்தது காண்டிபெண் ணமுதே.
(இருது சங்கார காவியம்: பாடல் 29)
(அசனி – இடி;)
அடுத்த பாடலில் மேகங்கள் பலவிதமாக வர்ணிக்கப்படுகின்றன.
‘ஆகாயத்தில் நீலோத்பல மலர்களைப்போன்ற நிறமுடைய நீலநிற மேகங்கள் வியாபித்துள்ளன. சில மேகங்கள் நன்கு குழைத்த மைபோல கறுத்துக் காண்கின்றன. சில மேகங்கள் சூல்கொண்ட மகளிரின் முலைகள்போன்று நிறம் கொண்டுள்ளன. இத்தகைய மேகக்கூட்டங்கள் எங்கணும் காணப்படுகின்றன.’
நீலமார் குவளை நீண்மலர்க் காந்தி
நிகர்த்தொரு பால்மிக நெகிழ்ந்த
சாலமார் நீலாஞ் சனவொளி பொருபாற்
சார்ந்துசூல் தாங்கிள மடவார்
கோலமார் முலைச்சூ சுகநிற மொருபாற்
கொண்டுயர் பயோதரக் குழாங்கள்
ஏலவார் குழலாய் எங்கணும் விசும்பி
லிடையறா தீண்டுவ மாதோ.
(இருது சங்கார காவியம்: பாடல் 30)
காதல் மகளிர் தம் கணவரைப் பிரிந்து துயருடன் அலங்காரங்கள் ஏதுமின்றி இருப்பதனைப் பாடுகிறான் காளிதாசன்;
நீலோற்பல மலர் போலும் கண்களினின்று நீர் பெருகி, வழிந்து கோவைப்பழம் போன்ற உதடுகளின் மீது விழுந்து அவற்றை ஈரமாக்கின. வெளியிடங்களுக்குச் சென்ற காதல் கொழுநர்கள் கார்காலம் தொடங்கிய பின்னும் இன்னமும் திரும்பி வாராமையால் அவர்களையே எண்ணி ஏங்குகின்ற அம்மகளிர் தாம் அணிந்துள்ள ஆபரணங்களையும் மலர்களையும் வாசனைத் திரவியங்களையும் நீக்கிவிட்டு இருந்தனர். குலமகளிர், நாயகர் தம் பக்கலில் இல்லாத காலங்களில் தம்மை அலங்கரித்துக் கொள்ள மாட்டர்கள் என்பது அக்கால வழக்கம். இப்பாடலை மொழியாக்கம் செய்தவர் இதனைத் தமிழின் முல்லைத்திணைக் கேற்பப் பாடியுள்ளார் எனக் காணலாம்.
‘காவிநேர் நயன மல்கிக்
காலுநீர்க் கணம டுத்துக்
கோவைநேர் அதர மாட்டக்
கொழுநரை வழியிற் போக்கு
பாவைநேர் இளமின் னார்தம்
பணிமலர் விரைகள் நீத்தே
யாவிநேர் வாரை யுன்னி
யலந்திருந் தேங்கு வாரால்.
(இருது சங்கார காவியம்: பாடல் 40)
(காவி – நீலோற்பலம்; காலும் – வழிந்தோடும்; அதரம் ஆட்ட – இதழை நனைக்க)
இந்தப் பகுதியின் அனைத்துப் பாடல்களுமே மிக அழகானவை. இன்னும் ஓரிரு பாடல்களைக் காணலாம். மழைக்காலத்தில் காடுகளில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காணலாம்.
நீர் நிறைந்த மேகங்கள் மலைப்பாறைகள்மீது இறங்கி, அவற்றைக் காதலன் தழுவிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டன. மலைகளெங்கும் அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. எங்கும் தோகை மயில்கள் நின்று நடனமாடின. இவ்வாறு, மலைகள், மேகங்கள், அருவிகள், மயில்கள் இவற்றைக் கண்டோருக்கு உள்ளத்தில் ஒரு விதமான விருப்பு உண்டாயிற்று.
வெள்ளிதழ்க் கமல மன்ன
வியன்முகில் கல்ல கத்து
வெள்ளிடை புல்லித் துஞ்ச
விரிமலைச் சார லெங்குஞ்
துள்ளிய லருவி தூங்கத்
தோகைமா மயினின் றாட
அள்ளியன் மலையின் காட்சி
யாசைநோய் விளைப்ப தம்மா.
(இருது சங்கார காவியம்: பாடல் 44)
இந்த மழைக்காலத்தில் பெண்கள் கதம்பமலர், மகிழமலர், தாழம்பூ ஆகிய மலர்களால் தொடுக்கப்பட்ட பூச்சரங்களையும், மருதமலர்க் கொத்துக்களையும் அணிகளாக்கி அணிகின்றனர்.
புதுமழை பெய்ததனால் வனப்பிரதேசம் தாபம் நீங்கி, மலர்கள் கதம்ப மரங்களில் நிறைந்ததனால் மகிழ்ச்சியடைந்ததுபோலக் காணப்பட்டது. மரங்கள் காற்றில் அசையும்போதில் அந்த வனமே கைகளைவீசி நடனமாடுவதுபோல இருந்தது. பூத்திருந்த தாழம்பூக்களின் வெண்மையான உட்பகுதி, அந்த வனமே மகிழ்ச்சியால் புன்னகை செய்வது போலிருந்தது.
தலைப்பெயறா பந்தணிப்பத்
தழைத்துமிளிர் வனப்பாங்கர்
தலைப்படுமா மகிழ்பொடித்த
தெனக்கடம்பு தார்விரிக்கும்
நிலைப்படுபு நடித்தென்ன
நீண்மரங்கா லுறவசையும்
புலப்படுபுன் னகையென்னப்
பொதியவிழ்க்கு மடற்றாழை.
(இருது சங்கார காவியம்: பாடல் 51)
படித்துக் கொண்டே போகலாம் போன்ற அருமைக் கவிதைகள். இப்போதைக்கு இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.
காளிதாசன் இயற்றியுள்ள மற்றொரு நூல் ‘மேகசந்தேசம்’ எனும் ஒரு அருமையான காதல்காவியம். மனைவியைப் பிரிந்து வாடும் யட்சன் ஒருவனின் கதையாக அமைந்து அருமையான பாடல்களைக் கொண்ட இணையற்ற காவியநூல். யட்சர்கள் மென்மை உள்ளம் கொண்ட தேவலோக மனிதர்கள். எங்கும் பிறர் கண்களுக்குப் படாமல் அலைந்து திரிபவர்கள். ஒரு யட்சன் ஏதோ ஒரு தவறுக்காக தன் அரசன் குபேரனால் ஓராண்டிற்கு நாடுகடத்தப்படுகிறான். தனது தெய்வத்தன்மையை இழந்து பூலோகத்திற்கு வந்து தன் இளம் மனைவியைப் பிரிந்து வாடுகிறான். இவ்வாறே ஏழெட்டு மாதங்கள் செல்கின்றன. மழைக்காலம் வருகிறது. மழைமேகங்கள் அடர்ந்து வானில் உலவுகின்றன. மேகங்கள் ஆகாயத்தில் பலவிதமான வடிவங்கள் கொண்டு தோன்றும். மழைக்காலக் கருமேகங்களை யட்சன் யானைபோன்று காண்கிறான். அவை யட்சனுடைய பிரிவுத்துயரையும் தாபத்தையும் மிகவும் அதிகரிக்கின்றன.
ராமகிரி எனும் மலையில் தங்கியுள்ள யட்சன் அந்த மேகத்தை தன் நண்பனாக்கிக் கொண்டு அதனைத் தன் காதல் மனையாளிடம் தூது விடுகின்றான்.
காளிதாசன் இதனை முகாந்தரமாகக் கொண்டு பாரத பூமியின் இயற்கை அழகை வருணிப்பது மிகவும் அழகானது. பாடல்கள் (ஸ்லோகங்கள்) உள்ளத்தை இனம்புரியாத ஒரு உணர்ச்சியில் ஆழ்த்தும். இளம் உள்ளங்களைக் காதல் நினைவுகளில் திளைத்து மயங்கச் செய்யும். முதியோர் உள்ளங்களை இளம் பருவத்து இனிய நினைவுகளில் ஆழ்த்திவிடும். சம்ஸ்க்ருதம் தெரியாவிட்டாலும் இதனைப் படித்து ரசித்து அனுபவிக்க திரு. சுப்ர. பாலன் அவர்கள் கல்கியில் தொடராக எழுதி, புத்தகமாக வெளிவந்துள்ள ‘தூது செல்லாயோ’ எனும் அற்புதமான நூலைப் படித்து அனுபவிக்க வேண்டும். படிக்கும்போது கேட்டு ரசிக்க உடன் ஒரு அழகான இசைத்தொகுப்பின் பதிவு. விஸ்வமோஹன் பட் இசையமைப்பில் ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திர ஸாதே ஆகியோரின் இனிய மயக்கும் குரல்களில் பாடல்களாகப் பதிவு செய்யப்பட்ட காளிதாசனின் ‘மேகதூதம்’ நூலின் ஸ்லோகங்கள். (யூ ட்யூபில் உள்ளது. கேட்டு மகிழலாம்). மேகங்களை முழுமையாக ரசிப்பதற்கு இதுவே எளிதான அருமையான வழி! முயன்று பாருங்களேன்.
பாரத தேசத்தின் பல்வேறு நகரங்களின் இயற்கை வர்ணனைகள், மேகங்கள் சென்று காணும் காட்சிகள் இன்னபிறவற்றை அழகுறச் சித்தரிக்கும் இந்த இலக்கியம் படிப்பதற்கு மிகவும் நயமானது. சிலவற்றைப் பார்ப்போமா?
ஸ்லோகம் 13: மேகத்தை நண்பனாக்கிக் கொண்ட யட்சன் அதனிடம் பேசுகிறான்; ஆம், தாபம் முற்றிய நிலையில் உள்ளவன் அவன். “மேகமே! நீ செல்லும் வழியில் அவ்வப்போது களைப்படைவாய் அல்லவா? அப்போது மலைகளின் சிகரங்களில் தங்கி இளைப்பாறுவாயாக. வழியில் மழையாகப் பொழிவதனால் உன் உடல் இளைக்கும். அப்போதெல்லாம் நதிகளின் மிகத்தெளிவான நீரைப் பருகுவாய். இந்த இரண்டிற்குமான வழியை நான் உனக்கு முதலில் கூறுகிறேன். அதன்பிறகு எனது அன்பு மனைவிக்கு நான் அனுப்பப்போகும் இனிய செய்திகளை உன்னிடம் கூறுவேன்,” என்கிறான் யட்சன்.
ஸ்லோகம்17-19: வழியில் ஆம்ரகூடம் எனும் குன்று ஒன்றுண்டு. நீ அந்த மலையின் இன்னல்களான காட்டுத்தீ, செடிகொடிகள் உலர்தல், நீர்நிலைகள் வறண்டு விடுதல் ஆகியவற்றை முன்பு ஒருநாளில் மழைபொழிந்து உதவினாய்; ஆகவே அதுவும் நன்றி மறக்காமல், பாராமுகமின்றி இளைப்பாற உனக்குதவும்,” என்கிறான் யட்சன். “அந்தக் குன்றில் நீ இளைப்பாறி, உனது நீரையும் அங்கு சொரிந்ததனால் உனது உடலின் பாரமும் குறைந்து நீ வேகமாகப் பயணிக்கலாம். அப்போது விந்தியமலையின் கரடுமுரடான பாறைகளினிடையில் யானையின் உடலில் வரிவரியாகத் தீட்டப்பட்ட விபூதிக் கோடுகளைப் போன்று பலகிளைகளாகப் பிரிந்தோடும் நர்மதா நதியைக் காண்பாய்.”
இவ்வாறு மேகத்தைத் தன் உற்ற தோழனாகக் கருதி, பலவிதமாக பாரதக் கண்டத்தின் இடங்களையும், மலை, நதிகளையும் வர்ணித்து யட்சன் பேசுவதாக அமைந்த அழகான காவியமே மேகசந்தேச காவ்யமாகும். வாய்ப்பிருந்தால் பின்னொரு நாளில் இதனை விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது காளிதாஸனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நம் தமிழிலக்கியங்கள் கார்காலம் பற்றிக் கூறுவதனைப் பார்க்கலாமே!
சங்க இலக்கியங்களில் பொருளீட்டிவரப் பிரிந்து சென்றிருக்கும் தலைவனின் வரவுக்காகக் காத்திருக்கும் தலைவி மழைமேகங்களைக் கண்டு பிரிவால் வருந்தும் பாடல்களைக் காணலாம். அவற்றின் கவிதைச்சுவையில் உள்ளம் பறிகொடுக்கலாம்.
பிரிந்து சென்ற தலைவன் சொன்ன நாளில் திரும்பி வரவில்லை என வருந்துகிறாள் தலைவி. தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்: “தோழி! இருண்ட கார்கால மேகங்கள் விண்ணதிர முழங்குகின்றன. துள்ளிவிழும் கடுமையான பெருமழையையும் பெய்தன. அந்த மழைக்காலம் கழிந்தபின்னர் புகைபோன்ற பனித்துளிகள் பூக்களின் உள்ளே நிறையும்வண்ணம் பனிபெய்யும் பனிக்காலமும் வந்துவிட்டது.
அவரைப்பூக்கள் பூத்துள்ளன. வயல்களில் நெற்கதிர்கள் முற்றித் தலைசாய்த்துக் கிடப்பது காண இனிமையாக உள்ளது. வண்டுகள் மரக்கிளைகளில் அசைந்து கொண்டுள்ளன. இந்த முன்பனிக்காலத்தின் நள்ளிரவிலே என் தலைவரானவர் சினம்கொண்ட தம் வேந்தனின் பாசறையில் நீண்டகாலம் தங்கியுள்ளார்; எனது பிரிவின் வருத்தத்தை அறியாதவராக இருக்கிறார். என் இந்த நிலையினைப் போக்க அவர் விரைவில் வருவாரோ?” என்கிறாள்.
முல்லைத்திணையில் அமைந்த இந்த அகநானூற்றுப் பாடலைப் பாடியவர் கழர்க்கிழான் எயிற்றியார் என்னும் புலவர்.
மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித் துள்ளுப்பெயல் கழிந்த பின்றை, புகையுற ....................................................... காய்சின வேந்தன் பாசறை நீடி நம்நோய் அறியா அறனிலாளர் இந்நிலை களைய வருகுவர் கொல்? என ஆனாது எறிதரும் வாடையொடு நோனேன் தோழி! என் தனிமை யானே!
அழகான கருத்துச் செறிந்த பாடல். இலக்கிய நயம், வாழ்வியல் எனப்பல நயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கும் பாடல். இலக்கிய நயமாவது: முல்லைத்திணையில் முன்பனி வந்தது கூறப்படுகிறது. இங்கு நிலமும் கருவும் மயங்கி வந்ததனால் இது திணை மயக்கம் எனும் கருத்தைக் கொண்டு அமைந்தது.
நெடுநல் வாடை – இன்னொரு சங்க இலக்கிய நூல்; ‘நீண்ட நன்மை பயக்கும் வாடைப்பருவம்’ எனப் பொருள் கொள்ளலாம். பத்துப்பாட்டினுள் ஒன்று. மழை, மழைசார்ந்த காலத்தில் நிகழும் செயல்களையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியது. இது கூதிர்ப்பருவத்தை வைத்துப் பாடப்பட்டது என்பர். ஆயினும் தொடக்கம் கார்காலத்தில்தான். கார்காலத்துக் குளிரும் மழையும் மக்களை எவ்வாறு வருத்தியது என்றே இந்த செய்யுட் தொகுதி துவங்குகிறது.
‘உலகம் குளிரும்படி, தான் கிடந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்து வளைந்து கார்கால மேகம் பருவம் பொய்க்காது மழை பொழிகின்றது. வெப்பம் மிகுந்த முதுவேனில் காலத்தின்பின் வானம் பொய்யாது மழை பெய்தது.
‘அவ்வாறு பெய்த மழையால் வெள்ளம் பெருகியது, வளைந்த கோலையுடைய இடையர்களுக்கு அந்த வெள்ளம் பலவிதங்களில் வருத்தம் தந்ததனால் அவர்கள் அவ்வெள்ளத்தை வெறுத்தனர். தமது எருமை, பசு, ஆடு ஆகியவற்றை வேற்று மேட்டு நிலங்களில் மேய விட்டனர். அவர்கள் தலையில் அணிந்திருந்த காந்தள் மலர்மாலை கசங்கியது. அவர்கள் கையில் நெருப்பைக் கொண்டவராய் தம் பற்கள் பறைகொட்டும் வண்ணம் குளிரில் நடுநடுங்கினர். விலங்குகள் மேய்ச்சல் தொழிலை மறந்தன. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் வீசிய காற்றின் வேகத்தில் கீழே விழுந்தன. பசுக்கள் தம் கன்றுகளை பால் உண்ண விடாது உதைத்தன,’ என இவ்வாறு மழையும் குளிரும் செய்யும் துன்பங்களை விளக்குகின்றன முதல் வரிகள்.
வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ............................... நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ மெய்க் கொள் பெரும் பனி நலிய பலருடன் கைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூட நடுங்க மா மேயல் மறப்ப மந்தி கூர பறவை படிவன வீழ கறவை ..................................... (நெடுநல்வாடை 1-10)
பருவங்கள் இன்பத்தையே மட்டும் தருவதில்லை. துன்பமும் உடன் இருக்கவே செய்கின்றது. இப்படிப்பட்ட மழைநாட்கள் அனைவரையும் வெவ்வேறு விதங்களில் வருத்தவும் செய்கின்றன.
கட்டுரையின் தலைப்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட ‘மாமழை போற்றுதும்’ எனும் சிலப்பதிகாரத்து மங்கலவாழ்த்துப் பாடலை எழுதியவர் இளங்கோவடிகள்:
‘மன்னனுடைய கொடைத்தன்மை போல மேல்நின்று பொழிந்து உலகைப் புரத்தலால், மாமழையைப் போற்றுக’ என்பது பாடலின் பொருள்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான். (சிலப்பதிகாரம்: 1: 1-9)
ஆகவே, மழையும் அதனைப் பொழியும் கார்காலமும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை எனக் கூறவும் வேண்டுமோ?
கம்பராமாயணத்தினுள்ளும் சிறிது புகுந்து பார்த்தால் போதும் – கம்பன் இராமனுடைய அழகு, ஆண்மை, இவை பற்றி பரவசம் பொங்க எழுதின பாடல்கள் பலவற்றைக் காணலாம். இராமன் கருநிறத்தனல்லவா? அவன் மேனியழகு கருமேகம், கருங்கடல், நீலமுகில் எனப் பலவற்றோடும் ஒப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு அழகான பாடலை மட்டும் காண்போமே!
மிதிலையில் சீதை கன்னிமாடத்திலிருந்து இராம இலக்குவர்கள் முனிவரோடு செல்வதைக் காண்கிறாள். ஒரேகணம் சந்தித்த கண்களின் பார்வையில் இதயங்கள் இடம் மாறிப் புகுந்து கொண்டுவிட்டன. இரவின் தனிமையில் அவனை நினைந்து உருகுகிறாள் சீதை. காதலில் கனன்று தவிக்கிறாள். ஆற்றாமையால் கூறுகிறாள்:
‘ஆகாயத்திலிருந்த மேகம் ஒன்று தனது மார்பில் அணிந்த மின்னல் எனும் முப்புரி நூலோடு இந்த மண்ணில் வந்து தரையிறங்கியதுபோல வந்தார்; சென்றுவிட்டார்; அந்தத் திருமகன் என் எண்ணத்திலேயே, சிந்தையிலேயே குடியிருக்கிறார். இருப்பினும் யாரென அறிய முடியவில்லையே! அவருடைய திருவுருவம் கண்களுக்குள்ளேயே உள்ளது; ஆயினும் அவரைக் காணவியலாது போனது என்ன விந்தை!’
விண்ணுளே எழுந்தமேகம் மார்பின்நூலின் மின்னோடு(ம்)
மண்ணுளே இழிந்ததென்ன வந்துபோன மைந்தனார்
எண்ணுளே இருந்தபோதும் யாவரென்று தேர்கிலேன்
கண்ணுளே இருந்தபோதும் என்கொல் காண்கிலாதவே
இங்கு நாம் காண்பது இந்த நான்குவரிப் பாடலின் முதல் இரு வரிகள் – இராமனை மின்னலோடு தரையிறங்கிய ஒரு கருமேகத்திற்கு ஒப்பிட்டதுதான். இராமனின் வடிவில் கம்பனுக்கு அத்தனை பெருமிதம். இப்படிப்பட்ட செய்யுட்கள் கம்பராமாயணத்தில் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன.
இவ்வாறு மேகங்களும் கார்கால நிகழ்வுகளும் கவிஞர்களின் கற்பனைக்கு ஒப்பற்ற விருந்தாகுகின்றன.
பெரும்பான்மையோர் அறிந்திராத ‘மேகவிடுதூது’ எனும் பெயரில் ஒரு அழகான இலக்கியச்சுவை நிறைந்த நூல்.
திருநறையூரிலே கோயில்கொண்டெழுந்தருளியுள்ள பெருமாள் நம்பியிடத்து மையல்கொண்ட ஒரு தலைவி, அவரிடத்தே தன்னுடைய ஆற்றாமையைத் தெரிவித்து அவரணிந்த திருத்துழாய் மாலையை வாங்கிவரும்படி ஒரு மேகத்தைத் தூதுவிடும் செய்தியைப் பொருளாக்கி நயமுடையதாகப் பாடப்பட்டிருப்பதொரு கலிவெண் பாட்டு இந்நூல்.
வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே – வானத்து (10)
என்றெல்லாம் மேகத்தைப் போற்றுகிறாள் தலைவி. வானம் எனும் சொல் ஆகாயம், மேகம் எனும் பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூல் பலவிதங்களில் மேகசந்தேசத்தின் போக்கிலேயே எழுதப்பட்டுள்ளது. (இதனை இயற்றிய கவிஞரான பிள்ளைப்பெருமாளையங்கார் காளிதாசனைக் கட்டாயம் படித்திருப்பார். அந்த நயத்தைத் தமிழில் குழைத்து வடித்திருக்கிறார் போலும்!)
“மேகமே, பின்பு அதிகப்படியான எனது கவலையால் உன்னைத் தூதாக திருநறையூர்ப் பெருமானிடம் அனுப்புகிறேன். மன்மதன் குளிர்ந்த மலர் அம்புகளை என்மீது எய்யாமல் இருக்க, வெண்மையான சங்கை உடைய சீதரனிடம் எனக்காக ஒரு சொல் சொல்லமாட்டாயோ? அவனிடமிருந்து ஒரு துழாய் மாலையையாவது எனக்குக் கொண்டுவந்து தர மாட்டாயோ? கேதகை எனும் தாழைக்குக் கணவனான நீ எனக்கு அப்பெருமானைக் கணவனாக்க மாட்டயோ?” என்றெல்லாம் மேகத்தைக் கேள்விக்கணைகளால் துளைக்கிறாள்.
விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பான்
மைம்முகிலே சந்தாக மாட்டாயோ-பெய்ம்மதவேள் 41
தண்ணப்பஞ் செய்வதெலாந் தாமோ தானடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ-வெண்ணத்தின் 42
சீதரனை நீயிரந்து தெய்வத் துழாய்கொணர்ந்தெ
னாதரவு தீர்த்தருள லாகாதோ- கேதகைக்கு 43
மின்கேள்வ னாக்கியநீ விண்ணோர் பெருமானை
யென்கேள்வ னாக்கினா லேராதோ-
சொல் பொருள் இலக்கிய நயங்களில் சிறப்பான நூல் இது.
மேகங்களின் செயல்பாடுகள் எண்ணற்றவை! சொல்லி முடியாதவை!! மழை பொழிவதோடு மட்டும் அவை நின்றுவிடுவதில்லை!!!
மழையின் வருகையை, கார்காலத்து நிகழ்வுகளைக் கொண்டாடினர் தமிழர்கள். முக்கூடற் பள்ளிலிருந்து ஒரு சுவையான பாடல்; அனைவரும் இதனைப் பள்ளிக்கூடத்தில் படித்த பருவத்திலேயே கற்றிருப்போம்.
ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்று தேகுறி-மலை
யாளமின்னல் ஈழமின்னல் சூழமின்னுதே
நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்கு தே-கேணி
நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
சேற்றுநண்டு சேற்றில்வளை ஏற்றடைக்கு தே-மழை
தேடியொரு கோடிவானம் பாடியாடுதே
இப்படிச் செல்லும் இப்பாடலில் மழை வருவதற்கான அறிகுறிகளைக் கண்டு பள்ளர்கள் மகிழ்வதனைக் காண்கிறோம்.
‘நாளை ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. மலையாள மின்னல், ஈழத்து மின்னல் ஆகியன மின்னுகின்றன; நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுழற்றிச் சுழற்றிக் காற்றடிக்கின்றது; கிணற்றில் வாழ்கின்ற சொறித்தவளைகள் ஒலியெழுப்புகின்றன; சேற்றில் வாழும் நண்டுகள் தம் வளைகளுக்குள் நீர் புகுந்து விடாதபடி சேற்றைக்கொண்டே வளைகளின் வாயில்களை அடைக்கின்றன; வானிலிருந்து விழும் மழைநீர்த் துளிகளை உண்ண ஒரு கோடி வானம்பாடிப் பறவைகள் தேடி ஆடுகின்றன.’
அடடா! மழையை, கார்காலத்தை, நம் கவிஞர்கள் போற்றிக் கொண்டாடியது கொஞ்ச நஞ்சமல்ல!!!
தாகூரின் பல கவிதைகள் மழையைப் போற்றுவன. மழையால், மேகங்களால், காற்றால் ஒரு காட்சியை ஆழமாக உருவகப்படுத்தும் வலிமை வாய்ந்தவை அவருடைய அழுத்தமான மழைப் பதிவுகள்.
கீதாஞ்சலியின் 18வது பாடல் ஒரு சொற்சித்திரம். படிக்கும்போதே நாம் அந்தப் பாத்திரமாகி விடுகிறோம். இனம்புரியாத ஒரு கனம் நெஞ்சில் இறங்கி அமர்ந்து கொள்கிறது.
‘மேகங்கள் ஒன்றின் மீதொன்று குவிகின்றன; இருட்டிக்கொண்டு வருகின்றது. ஆ, அன்பே, என்னை ஏன் கதவின் வெளியே தனியாகக் காக்க வைக்கிறீர்?
‘மதியப்பொழுதின் மும்முரமான வேலைகளில் மனிதர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர், ஆனால் இந்த இருண்ட தனிமையான நாளில் நான் உம்மையே தேடுகிறேன்.
‘நீங்கள் உமது முகத்தை எனக்குக் காட்டாவிட்டாலும், என்னை முழுமையாகப் புறக்கணித்தாலும், நான் எவ்வாறு இந்த நீண்ட தனிமையான பொழுதுகளைக் கழிப்பேன் எனத் தெரியவில்லை.
‘நான் தொலைதூரத்திலுள்ள இருளை நோக்கியபடியே இருக்கிறேன், எனது இதயம் இந்த அமைதியற்ற ஊளையிடும் காற்றைப்போலத் தானும் அலைந்து திரிகிறது.’
யாரோ நம் ஆழ்மனதைப் பிடித்திழுத்து உலுக்கவில்லை? கடவுள் எனும் ஒப்பற்ற காதலனிடம் காதலி எனும் உயிர் கூறும் ஈடிணையற்ற சொற்கள் இவை.
கீதாஞ்சலியின் 103 வது பாடலின் சில வரிகள் ஆழ்மனதில் ஒரு ஆலயம் எழுப்புகின்றன:
‘இன்னும் பெய்யாத மழைநீரால் கனத்துக் கீழே
தொங்குகின்ற ஜூலைமாதத்து மழைமேகம்போல
எனது மனது உங்கள் வாயிலில் வணங்கி
உங்களுக்கு அஞ்சலி செய்து நிற்கட்டும்.’
‘Like a rain-cloud of July hung low
with its burden of unshed showers let
all my mind bend down at thy door in
one salutation to thee.’
மீராவின் ஒரு அழகான பாடல். இடியிடிப்பது மேகங்கள் மோதிக்கொள்வதனால் உண்டாகும் செயல். இது அவளுக்கு தனது இதயத்தில் குடிகொண்ட கார்மேக வண்ணனான கிருஷ்ணனைப் பற்றிய இனிய எண்ணங்களை எழுப்புகின்றன. அவற்றைப் பாடல்களாகவும் பதிவு செய்துள்ளாள் அந்த பக்தை.
‘பரஸே பதரியா சாவன் கி’ எனும் பாடல்.
'மழைமேகங்கள் நீரைப் பொழியட்டும். மழைமேகங்கள் மனிதனின் சிந்தையைக் களிப்பிக்கின்றன. என் மனம் மழைக்காலத்தில் மகிழ்ச்சியடைகிறது. கிருஷ்ணனின் வரவின் ஒலிகளை நான் கேட்கிறேன். நான்கு திசைகளிலிருந்தும் இடியோசை கேட்கிறது. மின்னல் வீசி மழையின் வருகையை அறிவிக்கின்றது. மேகங்கள் சிறு நீர்த்துளிகளைப் பொழிகின்றன. குளிர்ந்த இனிமையான காற்று வீசுகின்றது. மீராவின் கடவுளான கிரிதரன் வந்து பாடி மகிழ்விக்கும் மங்கல இசைக்கான நேரம் இது.
பண்டிட் அஜய் சக்ரவர்த்தி என்பவர் (இன்னும் வேறு பலரும்) அருமையான ஆற்றொழுகு போன்ற குரலில் பாடியுள்ளதை யூடியூபில் கேட்டு உருகலாம்.
பெரியோர் முதல் சிறியோர்வரை, அரசன் முதல் ஆண்டிவரை, கடவுள் முதல் மனிதன்வரை கொண்டாடும் பருவம் கார்காலம்.
இடிக்கும், மழைக்கும் கடவுள் இந்திரன். இது பற்றியே தமிழ் இலக்கியம் ‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ என அவனை மருதநிலக் கடவுளாகக் கூறுகிறது. ரிக் வேதப்படி அவனே மிகப்பெரிய கடவுள். மிகுந்த பலசாலி. மும்மூர்த்திகளுக்கும் முற்பட்ட கடவுளாம்!
வாழ்விற்கு ஆதாரமான கடவுளாதலால் மழையோடும், அமிர்தத்தோடும் தொடர்பு படுத்தப்படுகிறான். வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமிர்தத்தைத் தன் ஆட்களுக்காக (தேவர்களுக்காக) சாமர்த்தியமாகக் கவர்ந்து செல்கிறான்.
மற்றபடி இந்திரனைப்பற்றிய பல கதைகளை நாமறிவோம். இவன் நீங்காத மழை பொழிவித்து ஆயர்களைத் துன்புறுத்தியதனையும், கிருஷ்ணன் கோவர்த்தன கிரி மலையைத் தூக்கி அதனடியே மக்களையும் ஆடுமாடுகளையும் வைத்துக் காப்பாற்றிய கதையையும் பின் தவறை உணர்ந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டதையும் நாமறிவோம்.
மழைபற்றி எத்தனையெத்தனை அருமையான இனிமையான ஹிந்தி, தமிழ் திரையிசைப் பாடல்கள்; பட்டியலிட்டு முடியாது. கேட்டே ரசிக்க வேண்டும்.
தென்னாட்டு இசையில் அம்ருதவர்ஷிணி என ஒரு ராகம் உண்டு. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இதனை முதலில் பாடினார் என்பார்கள். ஒருமுறை அவர் எட்டயபுரம் பக்கத்திலுள்ள சிற்றூர் ஒன்றிற்குச் சென்றார். அங்கு மழையில்லாமல் பூமி வறண்டுபோய், பயிர்களெல்லாம் கருகிப் போனதனால் ஊர் மக்கள் மிகவும் துன்பத்தில் இருந்தனர். தீட்சிதர் அன்னை தெய்வத்தை வேண்டிக்கொண்டு ‘ஆனந்தாம்ருதகர்ஷிணி அம்ருதவர்ஷிணி’ எனும் பாடலை அங்கே அப்போதே இயற்றிப் பாடினார்; உடனே மேகங்கள் திரண்டு மழை கொட்டோகொட்டென்று கொட்டி ஊரெல்லாம் வெள்ளக்காடானது என்பார்கள். அத்தகைய பெருமை பொருந்திய ராகம் இதுவாகும்.
மழை எனும் உயிர்கொடுக்கும் அமுதத்தைப் பொழியும் ராகம் இது எனப் பொருள்படும்.
மேக் ராகம் என்பது ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரு அழகான ராகம் – மேகம் என்றே பொருள்படும். மேகத்தோடிணைந்து மழை பொழியும் ராகம் மேக் மல்ஹார்!
தான்ஸேனின் சங்கீதத்தின் பெருமையை உணர்த்தும் ஒரு சிறுகதை.
அக்பர் சக்ரவர்த்திக்கு தீபக் ராகத்தை முறைப்படி பாடினால் விளக்குகள் தானாகவே எரியும் என்பதனை நேரில் காண ஆசை. அதனால் அந்த ராகத்தைப்பாட தன் ஆஸ்தான இசைக் கலைஞனான தான்சேனைப் பணிக்கிறார். பாடுபவனையே அந்த ராகம் வெப்பத்தில் எரித்துவிடும் என்பதனை உணர்ந்திருந்த தான்ஸேன் முன்னேற்பாடாகத் தன் மகளுக்கு / சிஷ்யைகளுக்கு மேக்மல்ஹார் ராகத்தைப் பாடப் பயிற்சியளிக்கிறார். தீபக் ராகத்தினால் விளக்குகள் எரியத் தொடங்கியதுமே அவர்கள் மேக்மல்ஹாரைப் பாட வேண்டும்; அவ்வாறே பாட, பெருமழை பெய்து தீபக் ராகத்தினால் தான்சேனிடம் எழுந்த உடல் வெப்பத்தைத் தணித்ததென்பது ஒரு சுவையான கதை.
வீணா சஹஸ்ரபுத்தேயின் ரிது சக்ராவில் அவர் மேக் மல்ஹார், மியா மல்ஹார் எனும் இரு ராகங்களை இசைத்துள்ளார். மியா மல்ஹார் என்பது மழைக்காக வேண்டி (சங்கீத சம்ராட்) மியா தான்ஸேனால் 16ம் பொது நூற்றாண்டில் அக்பரின் காலத்தில் இயற்றப்பட்டது. இதைப் பாடினால் மழை பெய்து பூமி குளிரும் என்பார்கள். மேலும் பலப்பல ஹிந்துஸ்தானி பாடகர்களின் விருப்பமான ராகம் இது.
தமிழிசையிலும் மேகராகக் குறிஞ்சி எனும் ராகம் உண்டு. இதனை நீலாம்பரி என்பார்கள்.
மேற்கத்திய இசையில் கார்காலத்திற்கான தனிப்பட்ட இசையமைப்பை விவால்டியின் நான்கு பருவங்களிலோ, தாம்சனின் கவிதைகளிலோ காணவியலாது. ஏனெனில் இதனை ஒரு தனிப்பட்ட பருவமாக மேலைநாட்டார் வரையறுக்கவில்லை.
மற்றபடி, மழை பற்றிய கவிதைகள் பல உண்டு.
ஒரு உதாரணம்: வெர்ட்ஸ்வொர்த் (Wordsworth) தனது கவிதைகளை இயற்கையுடன் பொருத்தியே எழுதினார். கவிதைகளை நேசிக்கும் எவராலும் அவருடைய கவிதை ‘டாஃப்ஃபடில்ஸ்’ (Daffodils) ஐ மறக்க முடியுமா?
மழை எத்தனை அழகானது ! வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
மழை எத்தனை அழகானது!
புழுதிக்கும் வெப்பத்திற்கும் பிறகு
அகலமான சுடுகிற தெருக்களில்
குறுகிய சந்துகளில்
மழை எத்தனை அழகானது!எப்படி அது கூரைகளில் ஒலியெழுப்பிச் செல்கிறது,
குளம்புகளின் ஓசையைப் போன்று
எவ்வாறு அது பெருகிப் பொங்கி ஓடுகிறது
பொங்கி வழியும் பாத்திரத்தின் மூக்கிலிருந்து!
என நடை பயிலும் மழை பற்றிய கவிதை பற்பல வண்ணங்களைத் தீற்றியவாறு விரிகிறது!
‘அந்த வியாதிக்காரனுடைய ஜுரம் பிடித்த மூளை திரும்பவும் குளிர்ந்து அமைதியடைகிறது, அவன் மழையை ஆசிர்வதிக்கிறான்’,
‘பக்கத்துப்பள்ளிச் சிறுவர்கள் ஆரவாரத்துடன் வந்து தங்கள் கப்பல் படைகளை மழைநீரில் செலுத்துகிறார்கள்’,
‘மரத்தடியே ஒதுங்கி நிற்கும் விவசாயி தனது பயிரின் மீது வீசியடிக்கும் மழைத்துளிகளைப் பார்த்தபடி லாப நஷ்டக் கணக்கு போடுகிறான்,’
இவ்வாறான பொருள் பொதிந்த, வாழ்க்கையை அலசும் கவிதை வரிகள். நன்றாகத்தான் உள்ளன. ஆனால், இது வேறொரு பரிமாணம். அவ்வளவுதான்!
இத்தனையும் சொல்லி, நம் தேசத்துப் பருவமழைகளைக் குறிப்பிடவாவது வேண்டுமல்லவா?
தென்மேற்குப் பருவமழை ஒன்று; வடகிழக்குப் பருவமழை மற்றொன்று. எப்போது, எப்படி என்பதை நீங்களே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்!!
<<<<<>>>>>
மழையைப் பற்றி எண்ணியபோது எனது சிந்தனை அறிவியல் இலக்கில் பயணித்தது.
புதுமழை பெய்யத் தொடங்கும்போது மண்ணிலிருந்து ஒரு தனி வாசம் எழுமே! என்னவென்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? சிறுவயதிலிருந்தே மழை பெய்யும் போது மழை – மண் வாசனையை உணர்ந்திருக்கிறோம் அல்லவா? எல்லாச் சிறுவர்களுக்குமே அது மிக விருப்பமான வாசனை. காரணம்தான் அப்போது தெரியாதது. மண்வாசம், மழைவாசம் என்று தள்ளிவிட்டுப் போய் விடுவோம். ஆனால் அதில் எத்தனை அறிவியல் செய்திகள் பொதிந்துள்ளன தெரியுமா?
The smell of the wet earth in the rain
rises like a great chant of praise from the
voiceless multitude of the insignificant.
(Tagore in Stray Birds – 311).
மழைக்காலத்து ஈரமண்ணின் வாசனை
அற்பமான, குரலற்ற ஒரு பெரும் கூட்டம் பாடும்
சிறந்த புகழுரை போல எழுகிறது.
தாகூர் ஒரு தீர்க்கதரிசி தானோ என்னவோ; குரலற்ற பெருங்கூட்டம் பாடும் புகழுரைதான் மண்வாசம்! அந்தப் பெருங்கூட்டம் என்பதே இந்த வாசனையை உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் கூட்டம்! தாகூரின் காலத்தில் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் சுத்தமாக இல்லை!! எது அவரை இவ்வாறு எழுதத் தூண்டிற்று என வியக்கிறேன்.
ஆம், நம் கண்களால் காணவியலாத சின்னஞ்சிறு நுண்ணுயிரிகள்தாம் (Microbes) இந்த வாசனைக்குக் காரணம் என்றால் நம்புவீர்களா? ஸ்ட்ரெப்டோமைசீட் (Streptomycetes) எனும் ஒருவிதமான நுண்ணுயிரிதான் ‘பெட்ரிகார்’ (Petrichor) எனும் இவ்வாசனைக்குக் காரணம். ஜியோஸ்மின் (Geosmin) எனும் ஒரு வேதிப்பொருளை அவை மண்ணில் உண்டுபண்ணுகின்றன. மழைநீர் பட்டதும் உடனே எழும் இந்த வாசனைதான் நாம் அறிவது!! இந்த மண்வாசனை காலகாலங்களாக 440,000,000 வருஷங்களுக்கு முன்பிருந்தே மற்ற உயிரினங்களால் அறியப்பட்டுள்ளது! மண்ணில் இருந்து வருவது. ஜியோஸ்மினைத் தயாரிக்கும் இந்த நுண்ணுயிரிகள் அறிவியல் மருத்துவ மேடையில் பெரியதோர் இடத்தை வகிக்கின்றன. என்ன தெரியுமா? இந்த நுண்ணுயிரிகள்தான் பலவிதமான ஆன்டிபயாடிக்குகளை உற்பத்தி செய்கின்றன. ஸ்ட்ரெப்டோமைசின் (Streptomycin) நாமனைவரும் அறிந்தது. ஸ்பைராமைசின் (Spiramycin) இன்னொன்று. இன்னும் பல உண்டு!!
ஸ்ட்ரெப்டோமைஸிஸைத் தவிர இன்னும் சிலவகை நுண்ணுயிரிகளின் – மிக்ஸோபாக்டீரியா (Myxobacteria), பெனிசில்லியம் (Penicillium), ஏன் நாமுண்ணும் பீட்ரூட்டின் லேசான சுவையான மண்வாசனைகூட இந்த ஜியோஸ்மினால்தான்!
மிக்ஸோபாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகள் வெவ்வேறு வேதிப்பொருட்களை (Chemicals) உற்பத்தி செய்கின்றன. எபிதிலோன் (Epithelon) என்ற ஒருவகை வேதிப்பொருள் புற்றுநோய் வைத்தியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் இக்சாபேபிலோன் (Ixobabilon) எனும் மருந்திற்கு மார்பகப் புற்றுநோய் வைத்தியத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் பல.
‘இயற்கையான வேதிப்பொருள்கள் மருந்து கண்டுபிடிப்பு’த் துறையில் மிக்ஸோபாக்டீரியாக்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. தொற்றுநோய்கள் (Infectious diseases), தொற்றல்லாத புற்றுநோய் போன்றவைகளுக்கும் இவை பயன்படுகின்றன. வாழ்க மழையும் மழைதொடர்பான நுண்ணுயிரிகளும்.
மேகங்களையும் மழைசார்ந்த கார்காலத்தையும் நமது பாரதக் கவிஞர்கள் கொண்டாடிப் போற்றுவதுபோல் வேறு யாரும் கொண்டாடவில்லை போலுள்ளது. ஆனால் எனக்குத் தெரியாதவையும் இருக்கலாம். தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
