கோடை மறைந்தால் இன்பம் வரும்

This entry is part 2 of 5 in the series பருவம்

இளவேனிலான வசந்தத்தைத் தொடர்வது கோடை எனப்படும் முதுவேனிலாகும். இதனை வடமொழியில் க்ரீஷ்ம ரிது என்பார்கள். இது வைகாசி, ஆனி ஆகிய தமிழ் மாதங்களையும் மே, ஜூன் எனும் ஆங்கில மாதங்களையும் கொண்டது. இந்தப் பருவத்தில் பாரத தேசத்தில் வெப்பம் / வெயில் மிகுதியாக இருக்கும். நீர்த் தட்டுப்பாடு ஏற்படும். மனிதர்களும் மற்ற உயிரினங்களும் மிகுந்த துன்பத்தை அடைவார்கள். சோர்வு மிகும். பகல்பொழுதுகள் மிக நீண்டும் இரவுப்பொழுதுகள் மிகக் குறைந்தும் இருக்கும். வீட்டைவிட்டு வெளியே மனித நடமாட்டம் குறைந்து விடும்.

இருப்பினும் பயிர்களுக்கு இது நல்ல பருவம். நன்கு வளர்ந்து காய் பிடித்த  பயிர்கள் இப்போது முதிர்ந்து கனிகளைக் கொடுக்கும். குளிர்ச்சியான பழரசங்களையும், இளநீர், நுங்கு, நீர் நிறைந்த பழவகைகளையும் மனிதர்கள் விரும்பி உண்பார்கள். பலவகை மாங்கனிகள் விளைந்து மனிதர்கள் அவற்றை விரும்பி உண்பதும் வேனிற்காலத்தில்தான்!


காளிதாஸன் ரிது சம்ஹாரத்தில் இதனைப் பற்றிக் கூறுவதனை அதன் தமிழாக்கம் மூலம் காண்போமா? 

முதல் ஸ்லோகத்தில் கூறுகிறான்: “அன்பே! கோடையில் சூரியன் மிக உக்கிரமாக இருக்கிறான்; குளிர்ச்சி பொருந்திய சந்திரனை மக்கள் விரும்புகின்றனர். எப்போதும் அமிழ்ந்து நீராடிக் களிக்க நீர்நிலைகள் இதமாக உள்ளன. பகல்பொழுது முடிந்ததும் மக்கள் இன்பமடைகின்றனர்.

செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்
தெண்ணிலா மனமகிழ் விளைப்ப
பொங்கதி தாபம் போக்கிய பல்காற்
பூம்புன லாடலும் பொலியத்
தங்குதி வாவின் கடையினி தாகத்
தணிவுறக் காதலின் வேகஞ்
சங்கதிர் முங்கைத் தையனல் லாய்காண்
தழல்முது வேனில் சார்ந்ததுவே.
(இருது சங்கார காவியம்) (தெறுகரம் – சுடுகின்ற கிரணம்; திவா – பகல்.)

அடுத்த சில பாடல்கள் கோடையில் நிகழும் இன்பத்தைக் கூறுகின்றன. பின் மனிதர்கள் படும் துன்பத்தைக் கவி விளக்கிப் பாடியுள்ளார்.

தாங்க இயலாத வேகமான வெப்பக்காற்றினால் எங்கும் புழுதிப்படலமாக உள்ளது. பூமியை வெப்பம் நிறைந்த கதிரவன் இன்னும் சூடாக்குகிறான். காதலியைப் பிரிந்ததனால் கலங்கிய உள்ளம்கொண்டவர்கள் ஏக்கம் மிகுதியாகி அடியைச்சுடும் வெப்பத்தால் தரையைக் கண்ணால் நோக்கவும் முடியாதவராக உள்ளனர்.

தாங்கரு வேனிற் காற்றுத்
தருந்துகட் படலை தாங்கி
வீங்குருப் பஞ்சேர் வெய்யோன்
வெதுப்பவேந் தரணி தன்னைப்
பூங்குழ லார்ப்பி ரிந்து
வழிச்சென்றோர் புலம்பு வாட்ட
ஏங்குநெஞ் சகத்த ரீண்ட
நோக்கலு மியல்கி லாரால்.
(இருது சங்கார காவியம்)

(படலை – கூட்டம்; உருப்பம் – வெப்பம்; ஈண்ட நோக்கல் – உற்றுப் பார்த்தல்) 

வேனிற்காலத்தில் காடுகளில் உண்டாகும் காட்டுத்தீயின் கொடுமையை வருணிக்கிறான் காளிதாஸன்.

கடுங்கோடையில் காட்டுப்பிரதேசங்கள் மிகுந்த அச்சம் தருவனவாக உள்ளன. கொடிய காட்டுத்தீயினால் அங்குள்ள புல், காய்கனிகள் அனைத்தும் தீய்ந்து போயுள்ளன. வேகமாக வீசும் காற்று அங்குள்ள உலர்ந்த சருகுகளை எங்கும் வாரியிறைக்கின்றது. வெயிலின் கடுமையால் எங்கும் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வீறு கொண்டே ழுந்த தாவம்
வீட்ட வேமி ளம்புலும்
மாறு கொண்டு டற்று வாயு
வாற்ப ரம்பு சருகரும்
வாறு கொண்ட வெயில் வெதுப்ப
வற்று நீர்க் கிடங்குமாய்த்
தூறு கொண்ட கான கங்கள்
துண்ணென் காட்சி தருவவால்.
(இருது சங்கார காவியம்)

(தாவம் – காட்டுத்தீ;  மாறு கொண்டு உடற்று – எதிராக வீசி அடிக்கின்ற; வாறு – வலிமை; துண் என் – அஞ்சத் தகும்)

இந்தக் கடும்கோடையிலும் தாமரைகள் நிறைந்த குளங்களும், பாதிரிப்பூக்களின் இனிய நறுமணமும் மகிழ்ச்சியூட்டும். நீரில் ஆடுவது உடலுக்கு இதமளிக்கும். இளமையான பிறைநிலவும், பூமாலைகளும் இன்பமூட்டும். இனிமையான சங்கீதமும் அன்பு மிகுந்த பெண்களும் உடனிருந்தால் அணங்கே, இந்தக் கோடைகாலம் இனிமையாகக் கழியும்.

பதுமவனத்தடம் புனலும் பாதிரிமென்
போதுமகிழ் பரப்ப மேனிக்
கிதமளிக்கும் புனலாட்டு மிளமதியும்
பூந்தொடையு மின்ப மூட்ட
அதிமதுர கீதமுமன் பார்ந்தசகி
மார்களுமா யணங்கே மாட
விதுமலிமீ தலத்திரவு மிகுசுகநீ
மேவுகவிவ் வேனிற் காலை.
(இருது சங்கார காவியம்)

(பாதிரி மரம் வேனிற்காலத்தில் பூக்கும் ஒரு மரம் என்பதை இதனால் அறிந்து கொள்ளலாம்.)


இனி சங்க இலக்கியங்கள் கூறுவதனைப் பார்க்கலாமா?

வேனிற்காலமும் பாலை நிலமும் ஒருசேரக் காதலர்களை வாட்டுகின்றன.

அன்பால் இணைந்த தலைவனுடன் தலைவி உடன்போக்காகச் செல்கிறாள். கூந்தலை முடித்து, அக்கூந்தலில் சூடியுள்ள மலர்களை மொய்க்கும் வண்டுகளை விரட்டி, சீறடி சிவப்ப, வளை ஒலிக்கும் கைகளை வீசி விரைந்து தலைவனுடன் செல்லுதலை அவன் பாராட்டுகிறான். இவ்வாறு அவர்கள் செல்வது பாதிரி மரத்தின் தேன் பொருந்திய வளைவையுடைய பூக்களின் வாடல் நாறுகின்ற வேனிற்காலத்தின் பகற்பொழுதில் சுரம் எனப்படும் பாலை நிலத்தின் ஊடேயாகும். வெண்கடம்பின் வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தொடுத்துக் கூந்தலில் சூடியுள்ளாள் அவள்.

வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
நரைவாய் வாடல் நாறும் நாள்சுரம்
அரியார் சிலம்பின் சீறடி சிவப்ப
(அகநானூறு- பாலை- 257)
(உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது)

இங்கு ஒரு சிறு குறிப்பைப் பதிவிட விரும்புகிறேன். பாதிரிப்பூ என்பது என்ன, எப்படி இருக்கும் என அறிய விரும்பினேன். அதன் தொடர்பாகக் கிடைத்த சில செய்திகள்: 

பாதிரி காட்டுப் பெருவழிகளில் மிகுதியாக வளர்ந்திருக்கும். அத்தப்பாதிரி, கானப்பாதிரி (அகநானூறு, 191:1, 261:1) என்றெல்லாம் குறிப்பிடப்படும். மஞ்சள் நிறம் கொண்ட இதன் மலர்கள் வாசம் மிகுந்தவை. பாதிரிப்பூ என்பது சிறிய காம்பினை உடையது. வரிசையாகக் கொத்துக் கொத்தாகப் பூக்கும். சிரங்கு போன்றவற்றிற்கு மருந்தானது. பித்தசுரத்தை நீக்கும். கூனி மாமலர் என்பர். பாதிரியின் மலர் சிறிது வளைந்து இதழ்வட்டம் குழாய் போன்று வளைந்து உள்ளதால் சங்கநூல்களில் ‘கூன்மலர்’ என அழைக்கப்படுகின்றது. 

‘கோசிக ஆடை பூத்தன பாதிரி’ என்பது சீவக சிந்தாமணி, பாடல் 1650. அதாவது காசியில் நெய்யப்பட்ட பொன்னிறப் பட்டாடை போன்றதாகும் என்பது பொருள். இம்மலரின் அடிப்பக்கத்தில் இதழினுள்ளே குறுமயிர் உள்ளதாகத் தாவரவியல் கூறுகிறது. மலரின் இதழ் அடிப்பக்கத்தில் மகரந்தத் தாள்கள் தொடங்கும் இடத்தில் சுற்றிலும் வரிசையாகக் குறுமயிர்கள் உண்டு; இவை சங்கநூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமான செய்தி.

"முதிரர வேனில் எதிரிய அதிரல் 
 பரா அரைப் பாதிரி குறுமயிர் மாமலர்" (நற்றிணை, 337:3-4)

"வேனிற் பாதிரி கூன்மலரன்ன 
மயிர் ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை" (குறுந்தொகை, 147:1-2) 

பாதிரி மலரில் மயிர் உண்டு என்பதைச் சீவக சிந்தாமணியும் (பாடல்52) குறிப்பாக உணர்த்துகின்றது.  இம்மலர்கள் வேனிற் காலத்தில் மலரும். தாவர நூற்படி ஏப்ரல் – மே மாதங்களில் இது பூக்கின்றது. ‘வேனிற் பாதிரி’ என்றொரு வழக்கு உண்டு. “வேனிற்கட் பாதிரி” என்று நன்னூல், மயிலைநாதர் உரையும், ‘வேனிற் பாதிரி’  என்று குறுந்தொகையும் (167), அகநானூறும் (257) கூறுகின்றன.

கோடை எனும் முதுவேனில் பற்றி இன்னொரு கருத்தையும் பார்த்துவிட்டு மேலே செல்லலாம். கோடை என்பது வருத்தும் வெயில்காலம். மனிதன் எதற்கெல்லாம் ஏங்குகிறான் என்று தெரியுமா? குளிர்ச்சியான மரம், அதன் நிழல், அம்மரத்தில் கனிந்து தொங்கும் பழங்கள், நீராடி மகிழ ஒரு நீரோடை, அதிலுள்ள குளிர்ச்சியான நீர், அந்தத் தண்ணீரினிடையே மலர்ந்து சிரிக்கும் அழகான வாசமிகுந்த சில தாமரை மலர்கள், இளைப்பாற ஒரு மேடை, அங்கு வீசக்கூடிய மெல்லிய பூங்காற்று, அதனால் உடலுக்கு உண்டாகும் சுகம், அந்த சுகத்தில் திளைக்கும் உள்ளம், இவையனைத்தும்தான்.

இதையே தெய்வமாக, அந்த ஆடலரசனாகக் காண்கிறார் வள்ளலார் பெருமான். அவர் பாடிய அருள் விளக்க மாலையில் இரண்டாம் பாடலாக அமைந்தது,

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்ததண் ணீரிடைமலர்ந்த சுகந்த மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்தருளே. (4091)

என்ற பாடலாகும்.

இறையையே எல்லாமாக நோக்கும் தத்துவம் இது. கோடை போல வருத்தம்தரும் வேளைகளில் அவனடியே தஞ்சம் என்னும் சித்தாந்தம்.

தாம்ஸன் எழுதியுள்ள  வேனில் எனும் கவிதை மிக நீண்டது, 1800 வரிகளைக் கொண்டது.

சில வரிகளை மொழியாக்கம் செய்துள்ளேன்:

பரந்த ஆகாயவெளியானது நியாயமாக வெளிப்படுத்தும் 
வெளிச்சமிகுந்த வயல்களில்
இளமையின் பெருமிதத்தில், இயற்கையின் ஆழத்தில் உணரப்படும்
சூரியனின் குழந்தையான கண்களைக் கூசவைக்கும் வேனில் வருகிறது.
அவன் வந்து, வெப்பமான நேரங்களின் துணையுடன்
எப்போதும் காற்றலைகளைத் தன் வழியில் வீசியபடி;
அவனுடைய ஆவலான பார்வையிலிருந்து வசந்தம் என்பவள்
தனது நாணமடைந்த முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்;
பூமியும் ஆகாயமும் சிரித்தபடியே அவனுடைய சூடான 
இடத்தைவிட்டு நகர்கின்றனர்.
ஆகவே நானும் நடுக்காட்டின் நிழலுக்கு விரைகிறேன்.

இவ்வாறு செல்லும் இந்தக் கவிதையின் சாராம்சம் மிக நேர்த்தியானது.

சூரிய சந்திரர்களின் நகர்வை விவரிக்கும் முன்னுரை. பருவங்களின் வரிசையான அணிவகுப்பு.  கோடை நாள் பற்றிய விளக்கம். காலைப் போது. நிகழ்வுகள். மதியம், மாலை, இரவு, எனச் செல்கிறது. படிக்க இனிமையாக உள்ளது. வேனிற்காலத்தைக் கண்முன் பார்க்கிறோம்.

ஜயந்த மஹபத்ர எனும் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரு அருமையான கவிதையின் தமிழாக்கம்:

கோடை (வேனில்)

இன்னும் இல்லை.
மாமரத்தின் அடியில்
அணைந்த நெருப்பின் குளிர்ந்த சாம்பல்.
எதிர்காலம் யாருக்கு வேண்டும்?

ஒரு பத்து வயதுப்பெண்
தன் தாயின் தலைமயிரை வாருகிறாள்,
அங்கு தம்முள் போட்டியிடும் காகங்கள்
அமைதியாக கூட்டில் அமர்ந்துள்ளன.

அந்த வீடு எப்போதும்
அவளுடையதாக இருக்காது.

அவளுடைய மனத்தின் ஒரு மூலையில்
ஒரு உயிருள்ள பச்சை மாங்காய்
மென்மையாகத் தரையில் விழுகின்றது.

ஷேக்ஸ்பியரும் சானட் (sonnet) அமைப்பில் கோடை பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார். தாகூரின் கவிதைகள் வேனிலைத் தொட்டுச் செல்லும் அழகு படைத்தவை. வேனிலின் நடப்புகள் கவிதைக்கு அழகு சேர்த்தும், இயல்பாகப் பொருந்தியும், கவிதையாகவே மாறியும் இருப்பதே தாகூரின் எழுத்தின் பெருமை, வலிமை எனலாம்.

கீதாஞ்சலி – கவிதை எண் 5

IIIII உங்களருகில் அமர ஒரு சிறுபொழுதுக்கான சலுகை மட்டுமே நான் கேட்பது. என் கையிலுள்ள வேலைகளை நான் பின்பு செய்து முடித்துக் கொள்கிறேன்.

உங்கள் முகத்தைப் பார்ப்பதனைவிட்டால் என் இதயத்திற்கு அமைதியோ ஒழிச்சலோ கிடைப்பதில்லை, எனது பணிகளும் கரையற்ற கடல்போலும் கடினமாகவும்  முடிவுறாத கடினமானவையாகவும் ஆகிவிடுகின்றன.

இன்று என் சாளரத்திற்கு அதன் பெருமூச்சுகளுடனும் முணுமுணுப்புகளுடனும் வேனில் வந்துள்ளது; தேனீக்கள் இடைவிடாமல் தங்கள் பாடும் செயலைப் பூக்கள் நிறைந்த வனத்தில் நடத்திக் கொண்டுள்ளன.

தங்களை நேரில் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்து, இந்த வாழ்க்கைக்கான அர்ப்பணிப்பைப் பற்றிப் பாட இந்த நிசப்தம் பொங்கிவழியும் ஓய்வுநேரம்தான் பொருத்தமான சமயம். IIIIII

ஆஹா! வேனிலும் தேனீக்களும் தங்கள் இசையால் இந்த வங்கக் கவிஞன் செய்யவேண்டிய பணியை எத்தனை எளிதாக்கித் தந்துவிட்டன. பருவங்கள் ஒவ்வொன்றுக்கும் தாம் செய்யவேண்டிய பணிகளும் உண்டே! வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தன அல்லவா இந்தப் பருவங்கள்.

தாகூரின் இன்னொரு சிறு கவிதை

வாழ்க்கை வேனிற்கால மலர்களைப்போல் அழகாக இருக்கட்டும் !!


கொண்டாட்டங்கள்

மேற்கத்திய நாடுகளில் பனியும் குளிரும் வாட்டி எடுப்பதனால், வேனில் காலத்தைப் பலப்பல விதமாகக் கொண்டாடி மகிழ்வார்கள். 

மே டே (May Day)- மே தினம் என ஒரு கொண்டாட்டம்: பொது ஆண்டு 900களிலும் அதன் பின்பும் மே மாதம் முதல் தேதியன்று கோடையின் கொண்டாட்டமாக நிகழும். காட்டு மலர்களையும் பசும் கிளைகளையும் சேகரித்துக்கொண்டு மாலைகள் தொடுப்பார்கள்.  மே ராணி – ராஜாவைத் தேர்ந்தெடுத்து, நடனமாடி மகிழ்வார்கள். பின்பு இக்கொண்டாட்டங்கள் 18ம் பொது நூற்றாண்டிலிருந்து சர்ச் எனும் தேவாலயங்களின்  மத சம்பந்தமான கொண்டாட்டமாக மாறியது. பின்பு 1955 முதல் இது சர்வதேச தொழிலாளிகள் நாளாக போப் பால் 12 (Pope Paul XII) அவர்களால் மாற்றப்பட்டது.

இவ்வாறு மாற்றங்கள் கண்ட / காணும் மே தினம் பற்பல வடிவங்களில் பற்பல மேற்கத்திய நாடுகளிலும் கொண்டாடப்பட்டதென அறிகிறோம். 


வேனிலுக்கான இசை வடிவங்களைக் காண்போமா?

‘கோடை மறைந்தால் இன்பம் வரும்- கூடிப் 

பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்’ எனும் திரையிசைப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர் உண்டோ?

தென்னிந்திய இசையில் பருவங்களுக்கான தனிப்பட்ட ராகங்கள் கிடையாது.

ஹிந்துஸ்தானி இசையில் மார்வா (Marwa) எனும் ராகம் மதியத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை இசைக்கத் தகுந்தது. சாரங்க் (Sarang) எனும் ராகம் கோடையுடன் தொடர்புள்ளது.  நாளின் வெப்பம் உச்சத்தில் இருக்கும்போது பாடப்படும் என்பார்கள். இது வேனிலுக்கேயான ராகம். பல சங்கீத நூல்கள், (சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரம் உட்பட) ஒவ்வொரு ராகத்தை ஒவ்வொரு பருவத்திற்குக் குறிப்பிட்டுள்ளன. தீபக் (Deepak) எனப்படும் ராகம் கிரீஷ்ம ருதுவுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

இந்த தீபக் ராகத்தைப்பாடி, சங்கீத சாம்ராட் தான்ஸேன் விளக்குகளை- தீபங்களை எரிய வைத்ததாகவும், அதனால் அவர் அதிக உஷ்ணத்தினால் நோய்வாய்ப்பட்டதாகவும், பின் அவருடைய சிஷ்யைகள் ‘மேக்’ (Megh) எனப்படும் மழை வருவிக்கும் ராகத்தைப் பாடி அவரைக் குளிர்வித்ததாகவும் வரலாறு கூறுவதை அனைவரும் அறிந்திருப்போம். தற்காலத்தில் இதனை யாரும் பாடுகிறார்களா எனத் தெரியவில்லை. 

வீணா ஸஹஸ்ரபுத்தேயின் ரிது சக்ரா குறுந்தகடுகளில் அவர் ‘சாரங்க்’ ராகத்தைப் பாடியுள்ளார். இன்னும் எத்தனையோ கலைஞர்கள் பாடியுள்ளனர். இது இசைக்கான மதிப்புரையாகி விடும்முன் நிறுத்திக் கொள்கிறேன்.

<<<>>>

மேற்கத்திய சங்கீதத்தில், விவால்டியின் (Vivaldi) “நான்கு பருவங்கள்’ (Four Seasons) எனும் இசைத்தொகுப்பில் அவர் கோடை பற்றி அமைத்துள்ளதனைப் பார்ப்போம். முதலில் அவர் இயற்றிய கவிதையைப் பார்க்கலாம்.

கோடை

கடினமான ஒரு பருவத்தில், சூரியனால் எரிக்கப்பட்டு
மனிதன் அல்லலுறுகிறான், மந்தைகள் துயருறுகின்றன
பைன் மரங்கள் எரிகின்றன.
குயிலின் குரல் கேட்கிறது;
மற்ற பறவைகளின் இனிய பாடல்கள் கேட்கின்றன.
மென்காற்று தவழுகின்றது, ஆனால் பயமுறுத்தும்
வடகாற்று (வாடை) அதனை ஓங்கி வீசிப் புறந்தள்ளும்.
மேய்ப்பவன் நடுங்குகிறான்,
புயற்காற்றை எதிர்நோக்கியும் தனது விதியை எண்ணியும்.

கொடூர இடியும் மின்னலும் தரும் அச்சம்
அவன் கைகால்கள் இளப்பாறுவதனைத் திருடிக்கொள்ளும்.
பூச்சிகளும் வண்டுகளும் ஆத்திரமாக சுற்றிப் பறக்கும்.

ஐயோ, அவனது அச்சம் உறுதிப்பட்டது.
சுவர்க்கம் உறுமும் இடிமுழக்கத்தாலும் கல்மழையாலும்
கோதுமைப்பயிரின் தலைகளை வெட்டிப் பயிரை அழிக்கும்.

இதனை விவால்டி மூன்று பகுதிகளாக இசையமைத்துள்ளார்- விரைவு- மெதுவாக- விரைவு என்று. முதல் பகுதியில்  கோடையின் அதீதமான வெப்பத்தால் சோர்வில் அலைக்கழிக்கப்படுதலைச் சிறப்பாக இசையமைத்துள்ளார். வெப்பத்தின் கொடுமையை உணரலாம். கேட்டும் மகிழலாம். ரசிக்கலாம்.

<<<>>>

முக்கியமான செய்தி ஒன்று: நல்ல வேளை நான் மறக்கவில்லை. மறக்கவும் கூடாது!!

வேனில் காலத்தில் பல தொற்றுநோய்கள் மக்களைப் பாடாய்ப் படுத்தும். இவற்றுள் ‘அம்மை’ எனும் பலதரப்பட்ட தொற்றுக்கள். வைரஸ்களால் வருபவை – என் சிறுமிப்பருவத்தில் எனது விளையாட்டுத் தோழர்களுக்கு இவை வந்து பார்த்திருக்கிறேன்.

பெரிய அம்மை (Small-pox) இது தற்சமயம் அறவே கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்கிறர்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் இதற்குத் தடுப்பூசி நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்பட்டது. சின்னம்மை – (Chickenpox); தட்டம்மை – (Measles) அனைத்திற்கும் இப்போது தடுப்பூசி உள்ளது.

கெட்டுப்போன உணவிலிருந்து வரும் தொற்றுக்கள் (Food-poisoning) அதிகம். ஏனெனில் வெப்பமான சூழ்நிலை பாக்டீரியாக்கள் வளரத் துணை புரிகின்றது. அதேபோல ஐஸ்கிரீம் உண்ணும்போதும் சுகாதாரமான இடங்களிலிருந்தே வாங்கி உண்பது அவசியம். சால்மொனெல்லா (Salmonella) மற்றும் ஈ. கோலை (E. coli) ஆகியவை இதில் சர்வசாதாரணமாக வளரும். 

இன்னும் எத்தனை செய்திகளோ தெரியாமலும், விடுபட்டும் போயிருக்கலாம். தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

Series Navigation<< வசந்தகாலம் வருமோ?….மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்… >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.