உதிரும் வண்ண இலைகள் !

This entry is part 4 of 4 in the series பருவம்

கார்காலத்தின்பின் அடுத்து வருவது இலையுதிர்காலம் என மேலை நாடுகளில் அறியப்படும் சரத் ரிது ஆகும். இது புரட்டாசி, ஐப்பசி எனும் தமிழ் மாதங்களையும். செப்டெம்பர்-அக்டோபர்- நவம்பர்  எனும் ஆங்கில மாதங்களையும் கொண்டது. கடுங்கோடை மறைந்து மரங்களிலிருந்து இலைகள் பழுத்து உதிர ஆரம்பிக்கும். நெற்பயிர் முதலியன முதிரும். அதனால் இதனை இலையுதிர் காலம் என்பார்கள்; இலைகள் விழுவதனால் மேலை நாட்டினர் ஃபால் (Fall) என்பார்கள். ஆகாயம் வெளிவாங்கி நிலாக்காலங்கள் அதாவது நிலா வெளிச்சத்தைக் காணும் காலங்கள் அதிகரிக்கும்; நட்சத்திரங்களையும் வானில் தெளிவாகக் காண முடியும்.

இப்பருவத்தில் முக்கியமான பாரத தேசத்துப் பண்டிகையான (சாரத) நவராத்திரி கொண்டாடப்படும். மேலை நாடுகளில் ஹாலோவீன் (Halloween) பண்டிகை கொண்டாடப்படும்.


காளிதாசன் இந்த சரத்ரிது எனும் கூதிர்ப்பருவத்தை ஒரு மணப்பெண்ணாக உருவகிக்கிறான். சமஸ்கிருதத்தில் ‘சரத்’ எனும் சொல் பெண்பாற் சொல் என்பர். அதனால் இந்த ரிதுவை ஒரு பெண்ணாக உருவகம் செய்தான் போலும்! 

காசை என்பது நாணல்; இந்த வெண்ணிற நாணற்பூக்களை மணப்பெண்ணின் ஆடையாகக் கொண்டும், மலர்ந்த தாமரை மலரை முகமாக உடையவளாகி, மகிழ்ச்சியால் ஒலிசெய்கின்ற அன்னங்களின் குரலே சிலம்பொலியாக விளங்க, செந்நெல் எனப்படும் மேனி மின்ன, அழகிய வடிவினையுடைய மணப்பெண்ணைப்போல் கூதிர்காலம் வந்துள்ளது.

காசைப்பூக் கலிங்கஞ் சாத்திக்
கமலமென் வதனந் தாங்கி
ஆசைமிக் கரற்று மன்னத்
தரவமென் சிலம்ப ணீஇய
மீசையின் முதிர்செஞ் சாலி
யாங்கவின் மேனி மின்னத்
தேசுகொள் மணப்பெண் ணென்னச்
சேர்ந்தது கூதிர்க் காலம்.
(இருது சங்கார காவியம்- 57)

மழையினால் பெருக்கெடுத்து வேகமாக ஓடிய ஆறுகள் தமது வேகம் தணிய மெதுவாக ஓடும் காட்சியைச் சுவைபட இந்த ஸ்லோகத்தில் வர்ணிக்கிறான் காளிதாசன். துள்ளுகின்ற மீன்களாகிய மேகலையை அணிந்து, நீர்நிலைகளின் கரையோரங்களில் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைகள் முத்துமாலைகள் போலக் காட்சியளிக்க, பரந்த மணல் பிரதேசம் எனும் நிதம்பத்தையுடைய நதிகள், தம் இளமையாலும் அழகாலும் செருக்குற்ற இளமங்கையர் போல் தளர்நடையிட்டுக் கொஞ்சிக் குழைந்து, மெதுவாக ஆடி அசைந்து செல்கின்றன.

கயலினம் பிறழ்வ மின்னு
காஞ்சிய தாகத் தீரத்
தயலின மடைய வைகும்
அனநிரை யார மாக
வியலிரு தடமு மேன்மை
விரிகடி யாம தர்ப்பின்
மயலிள மடந்தை மான
மந்தமுற் றியங்கும் யாறே.
(இருது சங்கார காவியம்- 59)

(காஞ்சி – மேகலை; வியல் – அகன்ற; மதர்ப்பு – மனக்களிப்பு; இளமையழகு பற்றி வரும் செருக்கு)

அடுத்தடுத்த சில ஸ்லோகங்களில் சரத்ரிதுவிற்கே உரிய நிகழ்வுகள், மலர்கள் இவற்றைப் பற்றிப் பாடுகிறான் காளிதாசன்.

அநங்கன் எனப்படும் மன்மதன், தற்போது ஆடலை விட்டுவிட்ட மயில்களை நீங்கி, இனிமையாகக் கூவும் அன்னப்பறவைகளிடம் வந்துள்ளான். கார்க்காலத்தில் மலரும் தரைக் கடம்பு, மருது, மலைமல்லிகை, வேங்கை, நீர்க்கடம்பு எனும் இந்த மலர்களை விட்டுவிட்டு பூக்களின் அழகு தற்போது ஏழிலைப் பாலை மரங்களை அடைந்துள்ளது.

ஆடல்விட் டொழிந்த மஞ்ஞ்சை
அணியைவிட் டநங்க ளின்பு
நீடல்செய் மதுர கான
நிகழ்த்தன நிரையைச் சாரும்
வாடல்செய் கடம்பு நீபம்
மருதுமல் லிகைசால் நீங்கி
யேடவிழ் மலர்ப்பூஞ் செவ்வி
யேழிலைம் பாலை மேவும்.
(இருது சங்கார காவியம்-69)

மேலும் அடுத்த 2-3 பாடல்களில், நீர்நொச்சி மலர்கள், தடாகங்களிலுள்ள செங்கழுநீர், தாமரை, அல்லி முதலான பூக்களை அசைத்தபடி வரும் இனிய காற்று, நெற்பயிர்களால் மூடப்பட்ட வயல்பரப்புகள் என கூதிர்காலத்துக்கே உரியவற்றையெல்லாம் அருமையாக எடுத்துக் கூறியுள்ளான் காளிதாசன்.

இந்த இலையுதிர் காலத்தில் மேகங்கள் இல்லாமல் இருக்கின்ற வானில் ஒளிர்கின்ற சந்திரனோடு வரிசையான மின்னும் நட்சத்திரங்களும் அணிவகுக்கும். இது எதனைப்போலுள்ளது எனில், நன்கு மலர்ந்த வெண்ணிற ஆம்பல் மலர்கள் நிறைந்ததும், இவை நடுவே அரச அன்னமும் திகழ, மரகதப் பச்சைநீரால் பொலிந்து விளங்கும் ஒரு தெளிந்த நீரோடையை ஒத்து விளங்குகிறது. 

தெளிந்த வானத்தை, ஒரு தெளிந்த நீரோடையுடன் ஒப்பிடுகிறான்.

மஞ்சி லாதுமிளிர் மாமதி யோடு
வரிசை சேருடு மலிந்த வானம்
விஞ்சி யெங்குமலர் வெண்குமு தத்தண்
விரிம லர்க்குவியல் மேவுற காப்பண்
மஞ்சி லங்குமர சக்குல வன்னம்
மன்ன மாமரக தத்தொளி வாய்ந்த
எஞ்ச லில்சலில மெய்தியி லங்கும்
ஏரி யென்னவெழி லேய்ந்து விளங்கும்.
(இருது சங்கார காவியம்-77)
இவ்வாறு சரத்ருதுவின் குணாதிசயங்களை விவரித்துள்ளான்.

பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையில் தொடரும் கூதிர்ப்பருவ வர்ணனையைப் பார்ப்போம். கார்கால வருணனையைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். இதிலும் இப்பருவத்திற்கொப்பான நீர், நில வளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. என்ன ஒற்றுமை!

அகன்ற வயலில் நெற்கதிர்கள் முற்றி வளைந்து கிடக்கின்றன.  கமுகமரங்களில் காய்கள் இனிமை உண்டாகும்படி முற்றியுள்ளன. மலையில் பலவித மலர்கள் பூத்துள்ளன.

அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க
முழு முதற் கமுகின் மணி உறழ் எருத்தின்
……………………………………………..
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்……..
(நெடுநல்வாடை- 21-29)

கூதிர்ப்பருவத்தில் சூரியன் தோன்றுவதனை வைத்துக் காலம் அறிய இயலாது. ஆகவே மகளிர் காலமறிய வேறோர் முறையைக் கையாண்டனர் என்னும் அறிவியல் சிந்தனை வியக்க வைக்கிறது. இதனை மலர்க்கடிகாரம் (Floral Dial) என்றனர் பின்னாளில் வந்த மேலைநாட்டு அறிவியலாளர்கள்!

மகளிர் பிச்சி அரும்புகளைப் பறித்து மூங்கில் தட்டுகளில் இட்டு வைத்தனர். அவற்றின் இதழ்கள் விரிந்து மணம் பரப்பும் பொழுதினை மாலைப்பொழுதென உணர்ந்து, இரும்பால் செய்த விளக்கினில் நெய் தோய்த்த திரியை இட்டுக் கொளுத்தி, நெல்லையும் மலரையும் தூவி, தமது இல்லத்துத் தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி மாலையைக் கொண்டாடினராம்.

‘மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங் காற் பித்திகத்து
அவ் இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந் திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர
(நெடுநல்வாடை- 39-44)

இத்தகைய இலக்கியங்கள், பாடல்களின் சிறப்பே அவை நாட்டு நடப்பை, இயற்கையைப் போற்றுவதும், விவரிப்பதும், மக்களின் வாழ்வியலை விளக்குவதும், தமிழ்ப் பண்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், அவற்றினூடே நாம் தற்காலத்தில் அறிவியல் என்று கூறும் கருத்துக்களின் அடிப்படையில் அக்காலத்தோரின் வாழ்வியல் பிணைந்து நின்றதனையும் நமக்குத் தெரிவிப்பது தான்.

கூதிர்ப்பள்ளி:

கூதிர் அல்லது இலையுதிர் காலம் பற்றிய ஒரு சுவையான செய்தி: கூதிர்ப்பள்ளி என சங்ககாலத் தமிழர் ஒரு கட்டிட அமைப்பைச் செய்தனர். எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் மாடங்களை ஒவ்வொரு பருவத்திலும் வசிக்க ஏதுவாக அமைத்தனர். கூதிர்காலத்தில் கடுமையாகக் குளிரும். அச்சமயம் நன்கு காற்று வீசும் வேனிற்பள்ளியை விடுத்து கூதிர்ப்பள்ளியில் வசிப்பார்கள். இதில் ‘நேர்வாய்க் கட்டளை’ எனப்படும் சாளர அமைப்பு இருக்காது. காற்று அதிகம் புகாதபடி குறுகிய கண்களையுடைய சாளரங்கள் அமைக்கப் பட்டிருக்கும். இந்தக் காற்றுக்கும் ஆற்றாது மக்கள் முடங்கிக் கிடந்ததனை ஒரு சிலப்பதிகாரக் குறிப்பில் காணலாம்.

இக்குறிப்பில் இளங்கோவடிகள் காதலரைப் பிரிந்த மாதரின் நிலை பற்றிக் கூறுகிறார். அவர்கள் இளவேனிற் காலத்திற்கென்று அமைந்த நிலாமுற்றத்தில் இருக்காமல், தென்றலும் நிலவொளியும் புக இயலாத குறுகிய கண்களையுடைய கூதிர்ப்பள்ளியின் அக்கண்களையும் அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தனர். சந்தனம், முத்துமாலை ஆகியவற்றைத் தம் மார்பில் அணியாது இருந்தனர். தாமரை, செங்கழுநீர் ஆகிய குளிர்ச்சிதரும் மலர்களைப் படுக்கையில் இடாமலும் இருந்தனர். கோவலனைப் பிரிந்த கண்ணகியின் நிலையும் இதுவாகும்.

வேனிற் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலையத்து ஆரமு மணிமுத் தாரமும்
அலர்முலை யாகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழிய…..
(சிலப்பதிகாரம் 4: 60-65)

இத்தகைய  அருமையான கட்டிட அமைப்புகளை, காற்றுக் கட்டுப்பாடு (Air- conditioning) செய்முறைகள் அறியவேபடாத எத்துணையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே நம் தமிழ் முன்னோர்கள் வடிவமைத்திருப்பதனைக் கேள்விப்படும்போது வியப்பும் பெருமிதமும் ஒருங்கே எழுகின்றன அல்லவா?

மேலும் சத்திமுற்றப் புலவரின் ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ எனும் பாடலில் வரும் ‘ஆடையின்றி வாடையின் மெலிந்து’ எனும் வரிகள் கூதிர்க்காலத்து வாடைக் காற்றைத்தான் விவரிக்கின்றன.

—————————————–

இனி மற்ற மொழி இலக்கியங்கள் கூறுவதென்ன எனப் பார்க்கலாமா?

ஷெல்லி உலகப்புகழ் பெற்ற ‘Ode to The West Wind’ எனும் தனது கவிதையில் மிக அருமையாக இந்த இலையுதிர் காலத்தை விவரிப்பார். நீண்ட கவிதை. சில வரிகளை மட்டுமே மொழியாக்கம் செய்து தந்துள்ளேன்.

            1
ஓ மூர்க்கமான மேற்குக் காற்றே! நீ 
இலையுதிர்காலத்தின் மூச்சுக்கற்று,
உனது பார்க்கவியலாத இருப்பில், 
இறந்து போன இலைகள்
உந்தப்பட்டு, ஒரு மந்திரவாதியின் 
பிசாசுகளைப்போல் ஓட்டம் பிடிக்கின்றன.
            ***
மஞ்சளும் கறுப்பும், வெளிறினவையும், சிவப்பும்
கொள்ளைநோய் பீடித்த திரள்களாக: 

                4
நான் ஒரு இறந்துபோன இலையாயிருந்தால் நீ 
என்னைத் தூக்கிச் செல்வாய்
நான் ஒரு விரையும் மேகமாக இருந்தால்
உன்னுடன் பறக்க முடியும்;
ஒரு அலையாய் உனது சக்தியின்முன்பு
மூச்சுவாங்கியபடி, உனது
சக்தியின் அழுத்தத்தைப் பகிர்ந்து கொண்டு.
    ...........................................................
            ***
தீர்க்கதரிசனத்தின் எக்காளமே! ஓ காற்றே,
பனிக்காலம் வந்துவிட்டால் பின் வசந்தம் 
தொலைவில் இருக்குமா என்ன?

என நடைபயிலும் இக்கவிதை ஒரு இலக்கிய அற்புதம்.

இலையுதிர் காலத்தைத் தொடர்ந்து பனிவிழுவதனையும், பின் வசந்தம் வருவதனையும் இடைப்பட்ட வரிகள், விதைகளின் உயிர்த்தெழுதலிலும், பூக்களின் மலர்ச்சியிலும் நமக்கு உணர்த்துகின்றன. 

தாம்ஸன் எனும் கவிஞர் (1700-1748) 1500 வரிகள் கொண்டதொரு கவிதையை இயற்றியுள்ளார். முதல் மூன்றே வரிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Crown’d with the sickle and the wheaten sheaf,
While Autumn, nodding o’er the yellow plain,
Comes jovial on, the Doric reed once more,
கோதுமை இலைகளையும் வீச்சரிவாளையும்
கிரீடமாகக் கொண்டு
இலையுதிர் காலமானது பழுப்புநிற வயல்களின்
மீது தலையசைக்கிறது.
நீர்மட்டத்தின் கீழுள்ள பாறை விளையாட்டாகத்
தெரிகிறது.

இந்தத் தாம்ஸனே, “இலையுதிர் காலத்து மாலைப்பொழுது” ‘Evening in Autumn’ எனவும் ஒரு சிறிய கவிதையை இயற்றியுள்ளார். இதனை ஆய்ந்து அதன் கருத்துக்களைப் பின்வருமாறு ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ளனர். 

‘பகலிலிருந்து இரவுக்குச் செல்லும் மாற்றத்தை விவரிக்கும் இக்கவிதை ஈரமும் குளிர்ச்சியும் பொருந்திய மாலைப் பொழுதுகளைக் காண்பிக்கிறது. ‘தேங்கியுள்ள நீர்’, ‘தனித்து நிற்கும் சதுப்புநிலம்’ ஆகியன குளிரையும் ஈரப்பசையையும் உணர்த்துகின்றன.

அஸ்தமிக்கும் சூரியனையும் உதித்தெழும் சந்திரனையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. சூரியனை குறுகியதாகவும், உள்ளடங்கி நிற்பதாகவும் காட்டி, சந்திரனை முழு வெளிச்சம் உடையதாகவும், சிதறிக்கிடக்கும் மேகங்களைப் பிளந்து கொண்டு வருவதாகவும் காட்டுகிறார் கவிஞர். இத்தகைய வேறுபாடுகள் பொழுது செல்லச்செல்ல பருவங்கள் மாறுவது தவிர்க்க இயலாததொன்றாகும் எனத் தெரிவிக்கிறது.

மிகவும் நவீனமான உயர்வான ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இக்கவிதையானது, உலகின் இயற்கை அழகைக் கவிஞர் அதிசயித்து நோக்குவதைக் காட்டுகிறது எனலாம்.

ஆகக்கூடி கவிஞர்கள் கொண்டாடும் காலமாகவே இப்பருவமும் தெரிகின்றது!

~~~~~~~~~~~~~~~~~~~~

இனி நமது கவிஞர் பெருமைக்குரிய ரவீந்திரநாத் தாகூர் சொல்வதனைப் பார்ப்போம்.

இவர் சாரதோத்சவம் (இலையுதிர் கால விழா) – Sharadotsav எனும் பெயரில் ஒரு நாடகம் (1908ல்) எழுதித் தானே 1912-13ல் மொழிபெயர்த்தும் உள்ளார். இதனை இணையம் முழுதும் காண இயலவில்லை. என்னிடம் நீண்ட நாட்களின் முன்பு வாங்கிய ஒரு பிரதி உள்ளது. பாடல்களும் உரையாடல்களும் கொண்ட நாடகம். 

இதிலிருந்து ஒரு அருமையான கவிதை; இந்த சரத் ரிதுவில் ஏற்படும் சோம்பேறித்தனத்தையும், மனிதர்கள் எவ்வாறு இதனைக் கொண்டாட விரும்புகின்றனர் எனவும் காண்பிக்கிறது:

‘பச்சையும் மஞ்சளும் கலந்த நெல்வயல்களின் மீது இலையுதிர் காலத்து மேகங்கள்
தங்கள் நிழல்களால் தழுவிச் செல்ல, சூரியன் அவற்றின்பின் விரைகிறான்.
தேனீக்கள் தேனருந்த மறந்தன; இந்த வெளிச்சத்தின் மயக்கில் அவை முட்டாள்தனமாக சுற்றியபடி ரீங்காரமிடுகின்றன;
தீவுகளின் ஆறுகளில் இருக்கும் வாத்துகள் ஒன்றுமில்லாமல் மகிழ்ச்சிக் குரலில் ஆர்ப்பரிக்கின்றன.
யாரும் வீடு திரும்ப வேண்டாம், நண்பர்களே, இக்காலைப் பொழுதில், யாரும் வேலைக்குப் போக வேண்டாம்.
நாம் ஓடுவதனால் இந்த நீலவானை அதிரச்செய்து, இந்த வெளியைச் சூறையாடுவோம்.
பொங்கிவரும் நீரின் மீதுள்ள அலைகளைப்போல சிரிப்பு எங்கும் மிதக்கிறது.
சகோதரர்களே, நமது காலைப்பொழுதை வீணான பாடல்களால் விரயம் செய்வோம்.’

எத்தனை நுணுக்கமான கண்ணோட்டத்தில் இலையுதிர்கால வெற்றுக் களிப்பினை விவரித்துள்ளார்; சிலிர்ப்பாக உள்ளது.

இன்னும் பற்பல கவிதைகளில் இந்த வர்ணனைகளைக் கண்டு களிக்கலாம். வாழ்க்கையை ஆழ்ந்து நுணுக்கமான கண்ணோட்டத்தில் ரசிப்பவர்கள் கவிஞர்கள்.

—————————————–

இலையுதிர் (சரத் ரிது) பருவத்துக்கான இசைவடிவங்கள்;

வழக்கம் போலவே தென்னிந்திய சாஸ்திரீய இசையில் இதற்கென தனிப்பட்ட ராகங்கள் கிடையாது.

இந்துஸ்தானி இசை எனப்படும் வட இந்திய இசை முறையில் பல ராகங்கள் இப்பருவத்திற்காகவே உள்ளன. கௌரி, பைரவ் (Bairav) எனப்படும் ராகங்கள் இவற்றுள் முதன்மையானவை; சிவபெருமானால் உண்டுபண்ணப்பட்ட பைரவ் ராகம் அமைதியானது; உள்ளத்தைப் பரம்பொருளிடம் ஒருமிக்க வைக்கும் சக்தி வாய்ந்தது. இந்த ராகம் பாடுவதைக் கேட்டால் மெய்சிலிர்க்கும். பைரவ் ராகம் அதிகாலையில் பாடப்படும். கௌரி ராகத்தை சரத் ரிதுவில் ஒரு நாளின் முடிவில் பாடப்பட வேண்டும் என்கிறார்கள். பல உஸ்தாதுகளும் பாடகிகளும் பாடியுள்ளனர். நமக்குப் பிடித்தமானவர் பாடியிருப்பதனைக் கேட்டு மகிழலாம்.

வீணா சஹஸ்ரபுத்தேயின் இசைப்பதிவுகளில் சரத் ரிதுவிற்கான ராகமாக மதுகவுன்ஸ் (Madhukauns) எனும் ராகத்தைப் பாடியுள்ளார்.

இலையுதிர் காலத்தின் இசையாக விவால்டியின் ‘நான்கு பருவங்களில்’ (Four Seasons) உள்ள இசையமைப்பு 11 நிமிடங்கள் இசைக்கப்படுகிறது. உடன் அவரே எழுதிய ஒரு ஸான்னெட்டும் (Sonnet) உள்ளது.

அதில் கூறப்படுவது:

பாடல்களோடும் நடனங்களோடும் விவசாயி
கொண்டாடுகிறான்
நிறைந்த அறுவடையின் மகிழ்ச்சியை.
பாக்கஸ் (Bachchus) எனும் கடவுளின் மதுவை உண்டு
களிப்படைந்து
பலரும் தமது கொண்டாட்டங்களை உறக்கத்தில் முடிக்கின்றனர்.

இவ்வாறு மூன்று வித அமைப்புகளைக் கொண்டது. இடையே குடித்து மயங்கியவர்கள் உறங்கி விழுவதனையும் விவால்டி இசையிலேயே காட்டியிருப்பாராம். கேட்டுத்தான் மகிழ்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பருவத்தையும், அதன் மாற்றங்களையும் உலகமுழுதிலும் மக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர், கொண்டாடினர், களித்தனர், என்றெல்லாம், இலக்கியங்கள், இசை மூலம் கண்டு ரசிக்க முடிகிறது அல்லவா? இது – இசையும் இலக்கியமும் மனிதகுலத்திற்குக் கிடைத்த மாபெரும் பதையல், சொத்து!!

Series Navigation<< மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…

One Reply to “உதிரும் வண்ண இலைகள் !”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.