- வசந்தகாலம் வருமோ?….
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…
- உதிரும் வண்ண இலைகள் !
- மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…..
- மயிலையாரின் மாசிக்கடலாட்டு

கார்த்திகை, மார்கழி, அல்லது மார்கழி, தை எனும் தமிழ் மாதங்களைக் கொண்டது இந்தக் குளிர் பருவமான முன்பனிக் காலம். விடியலில் பனி பெய்வதனால் இதனை முன்பனிக்காலம் எனப் பெயரிட்டு அழைத்தனர். இதனை வடநாட்டார் ஹேமந்த ரிது என்பர். இந்தத் தமிழ் மாதங்களுக்கு ஈடான ஆங்கில மாதங்கள் டிசம்பர் – ஜனவரி ஆகும். மேலை நாட்டார் இதனை Winter என்பர். நமக்கு இது Pre-Winter ஆகும். நம் நாட்டில் இப்பருவத்தில் மிதமான குளிர்தான் இருக்கும். மிகவும் அனுபவிக்கத்தக்க பருவம். பகல்பொழுதுகள் குறைவாகவும் இரவுகள் நீண்டும், குளிராகவும், பனிமூட்டத் துடனுமிருக்கும். மழை அபூர்வமாகவே இருக்கும். மேற்கத்திய நாடுகளில் குளிர்காலத்து விளையாட்டுகளான பனிச்சறுக்கல் போன்றவை விளையாடப்படும். பாரததேசத்தில், கார்த்திகை விளக்கிடுதல், மார்கழி நீராடல், பொங்கல் ஆகிய பண்டிகைகள் விமரிசையாகக் கொண்டாடப்படும். மேலை நாடுகளில் அறுவடைப் பண்டிகை (Thanks Giving), கிறிஸ்துமஸ் (Christmas) ஆகியன கொண்டாடப்படும்.
காளிதாசனின் ரிது சம்ஹார காவ்யத்தையே நாம் முதலில் பார்த்துக் கொண்டு வருகிறோம். அவன் ஹேமந்த ரிது எனும் முன்பனி பற்றி என்ன சொல்லுகிறான் எனத் தெரிந்து கொள்ளலாமே!
மரம், செடி கொடிகள் புதிய தளிர்கள், காய் கனிகள் இவற்றால் அழகுற விளங்குகின்றன. நெற்பயிர்கள் முதிர்ந்து நிற்கின்றன. பனியால் அழிந்த தாமரை மலர்களைக் காணலாம். பனி அதிகமாக விழும் காலமிது.
புதிய இலையும் பைங்கூழும்
பொலிய வெள்ளி லோத்திரம்பூத்
துதைய முதிர்ந்து செஞ்சாலி
தோன்றக் கமலம் பொலிவழிய
ததிய தாமென் பனியெங்குந்
தயங்கி வெண்மை தரவீழும்
விதிய தாமுன் பனிக்கால
மேவிற் றாகு மெல்லியலே.
(இருது சங்கார காவியம்- 83)
(லோத்திரம் – இக்காலத்தில் பூக்கும் ஒரு மரம்; துதைய – நெருங்க. ததி – பருவம்.)
ஹேமந்தம் எனப் பெயர் ஏன் வந்தது? மக்களின் பலத்தை விருத்தியடையச் செய்வது எனும் பொருளுள்ள ஹிநோதி எனும் சமஸ்கிருத வினைச்சொல்லால் வந்தது ஹேமந்தம் எனும் சொல். ஹேமந்தம் – பலமளிப்பது. (திரு. வே. ஸ்ரீ. வெங்கட ராகவாச்சார்யார் எழுதியுள்ள உரையில் இவ்வாறு அவர் கூறுகிறார்.)
———————–
காளிதாசன் இயற்றியுள்ள இந்தப் பருவத்துக்கான ஸ்லோகங்கள் பெரும்பாலும் கலவியையே பாடுபொருளாகக் கொண்டமைந்துள்ளன. ஓரிரு ஸ்லோகங்களைக் காண்போம்.
கலவி என்பதனை ஒரு விழாவாகக் கொண்டாடுவதற்காகவே பெண்கள் தங்கள் மேனிகளில் குங்குமக் குழம்பைப் பூசிக் கொள்கிறார்கள். தாமரை போலும் வதனங்களில் கஸ்தூரி எனும் மான்மதக் குழம்பைப் பூசுவர். கூந்தலையும் அகிற்புகையினால் மணமூட்டிக் கொள்கின்றனர்.
அங்க மலியக் கருஞ்சாந்தை
யணங்க னார்மிக் கணிவரெழில்
தங்கு கமல முகந்தனின்மான்
மதத்தி நிலைக்கோ லஞ்சமைப்பார்
பொங்கு கருமென் கூந்தனறை
பொலிய வகிலம் புகையார்ந்து
துங்க முறநன் கூட்டுவராற்
சுரத போக சுகம்பெறவே.
(இருது சங்கார காவியம்- 87)
(இலைக்கோலம் – தொய்யில்; இலை, பூ முதலிய உருவங்களைத் தோள்களிலும் உடலிலும் கோலமாக எழுதுதல். சுரதம் – கலவி; புணர்ச்சி)
நெற்கதிர்களால் நிறைந்து விளங்கி, பெண்மான் கூட்டங்களால் அழகு பெற்றனவையும் அன்றில் பறவைகள் எழுப்பும் ஒலி நிறைந்ததும், பண்ணைப்புற இடங்கள் பல கொண்டதும் ஆன இவற்றைப் பார்ப்பவர்களுக்கு மனதில் ஆவலும் ஆசையும் பெருகும்.
முதிருஞ் சாலி நிரையெங்கு
மொய்த்து மிளிர வோவாது
விதிரும் நோக்க விழிநவ்வி
மேவிப் பொலிந்து கவின்விளைப்ப
மதுரம் மனத்து மலியவண்
வாழு மன்றி லெழுப்பொலியால்
அதிரும் பண்ணைப் புறம்யார்க்கு
மளவி லாசை யகத்தூட்டும்.
(இருது சங்கார காவியம்- 89)
இதே போல அடுத்த பாடலிலும், குளங்களிலுள்ள நீலோத்பலம் எனும் மலர்களும் களிக்கும் அன்னங்களும் நிரம்பியதனால், அந்தத் தடாகங்களும் மனிதர்களின் மனதை மயக்குகின்றன என்கிறான் காளிதாசன்.
கடைசியாக, விழுகின்ற பனியுடன் கூடிய இக்காலம் பற்பல சிறப்புகளைக் கொண்டது; மங்கையர் மனதிற்கு இனிமை தருவது; வயல்களிலெல்லாம் நெற்பயிர்கள் நிறைந்து விளங்கும் கிராமங்களின் வெளிப்புறங்களையுடையது; இவ்வாறு பனி விழுவதும் அன்றிற்பறவைகளின் இனிய ஒலியைக் கொண்டதுமான இந்த முன்பனிக்காலம் உனக்கு எல்லா நலங்களையும் வழங்கட்டும் என நிறைவு செய்கின்றான்.
நயப்புறுபல் நலமருவி நங்கையர்த
மனக்கினிமை நல்கி மேவும்
வயற்புறமெல் லாம்விளைந்து வளைசாலி
மலிதரவே வாய்ந்து நாளும்
வியப்புறநல் லெழில்பரப்பி மிகுமார்வத்
தன்றிலினம் விளங்க வெங்கும்
பயப்புறுமுன் பனிக்காலம் பைந்தொடிநிற்
கெந்நலமும் பயக்க மாதோ.
(இருது சங்கார காவியம்- 100)
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை (விடாத அடைமழை) பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.
கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை விளக்கீடு எனும் கார்த்திகை தீப விழா கார்த்திகை மாதத்தில் தமிழர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். இதன் ஐதீகம் என்னவெனில் படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மாவும் காத்தல் தொழிலைச் செய்யும் திருமாலும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அவரது அடியையும் முடியையும் தேடும்படி இருவரிடமும் அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று தேவர்கள் விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று சோதியைக் காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
கார்த்திகை நட்சத்திரத்தன்று பௌர்ணமி இணைந்த இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது – நற்றிணை 58
வீரை என்னும் ஊாிலிருந்து ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திாி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி எதிர்பார்க்கிறாள்.) இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகைவிழா ஒளிவிளக்கைப் பற்றி விளக்கும் பாடல்.
இப்பருவத்தில் கார்த்திகை மலர் எனும் செங்காந்தள் பூ (Gloriosa superba) அதிகமாக மலரும். பல பாடல்களில் இம்மலரின் இதழ்களை மங்கையரின் விரல்களுக்கு ஒப்பிட்டுள்ளதனைக் காணலாம்.
அடுத்து விரைவிலேயே தொடரும் மார்கழி மாதத்தில் இளமங்கையர் கொண்டாடும் மார்கழி மாதத்துப் பாவை நோன்பு பற்றிய சுவையான குறிப்புகளைப் பல இலக்கியங்களில் காணலாம்.
சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப் படுகின்றது. கண்ணன் கீதையில் ‘மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன்’ என்று கூறியுள்ளான். ஆண்டாளும் தனது திருப்பாவையில் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என வர்ணிக்கின்றாள்.
இது சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று சைவர்களால் போற்றப்படும்.
ஐதீகக் கதை: தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு அபிசார வேள்வி நடத்தினர். சிவன் பிட்சாடனர் வேடமெடுத்து பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து ஆடை குலைய பிட்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் கோபமடைந்த முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவபெருமான் யானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.
ஆருத்ரா தரிசனம்: மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் இறுதி மாதம். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூரில் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானை மற்றும் தியாகராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதத்தில் பாவை நோன்பும் அனுசரிக்கப்படும். பாவை நோன்பானது, இளம் சிறுமியரும் பெண்களும், மார்கழி மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரைக்குச் சென்று, குளிர்ந்த ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி விளையாட்டாக வழிபடுதலே ஆகும்.
பிள்ளைத்தமிழ் இலக்கணம் இளம் பெண்கள் ஐந்து முதல் ஒன்பதாம் ஆண்டுப் பருவம் வரை மார்கழி மாதத்தில் ஐங்கணைக் கிழவன் எனப்படும் மன்மதனை வேண்டி நோன்பிருத்தலும், குளிர்ந்த நீரில் நீராடுதலும், பாவை விளையாட்டை ஒரு வழிபாடாகச் செய்தலும் எனக் கூறுகிறது.
பேணும் சிறப்பின் பெண் மகவாயின் ….
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும்
ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும்
பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்.
(பிங்கலந்தை நிகண்டு, சூத்திரம் 1369)
மார்கழி மாதத்தில் இளம்சிறுமியர் உலக நன்மைக்காக அதிகாலையில் குளிர்ந்த நீரில் அம்பா எனும் தம் தாய்மாரோடு அம்பாவாடல் எனும் நீராடலைச் செய்வர். பின் அந்தணர் செய்யும் வேள்விச்சாலைக்குச் செல்வர். அங்கு அவ்வேள்வித்தீ அவர்களுடைய ஈர ஆடைகளை உலரச் செய்யும்.
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர,
உறை சிறை வேதியர் நெறி நிமிர்
நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
(பரிபாடல்- 11- நல்லந்துவனார்)
ஆண்டாள் எனும் திருமால் பக்தை பாடிய 30 திருப்பாவைப் பாடல்களும் மாணிக்க வாசகர் எனும் சைவசமயப் பெரியார் பாடிவைத்துள்ள 20 திருவெம்பாவை, 10 திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் அன்றும், இன்றும், என்றும் இந்நோன்பிற்குத் துணை நிற்கின்றன.
மேலை நாடுகளில் கிறிஸ்தவ மதம் சார்ந்த நாடுகளில் பெரிதாகக் கொண்டாடப் படுவது ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை. டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படும். இப்பண்டிகை தொடர்பாக முந்தைய பல நூற்றாண்டுகளில் இசை அமைப்புகளும், Carols, The Christmas Oratario by J S Bach, பல பாடல்களும், The Nutcracker Ballet பாலே, நாடகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இவை இம்மாதம் முழுமையும் காட்சிகளாக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ் மரம் (Evergreen tree) என ஒன்றினை (இது குளிர்காலத்திலும் இலைகள் பசுமையாக இருக்கும் மரம் – Traditional Norway Spruce – Picea Abies) வீட்டினுள் வெட்டிக் கொண்டு வந்து வைத்து அதனைப் பலவிதங்களில் சிறு சிறு பொம்மைகளையும் தோரணங்களையும் கொண்டு அலங்கரிப்பர். மரங்களில் உள்ள மெழுகுவர்த்திகளை ஏற்றுவதென்பது (Lighting the Candles on the tree) ஒரு அழகான நிகழ்வாக முந்தையநாள் மாலை நடைபெறும். பின் நள்ளிரவில் சர்ச்சுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொள்வர். சான்டா கிளாஸ் (Santa Claus) என்னும் தொந்தியும் தொப்பையுமான ஒருவர் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களைக் கொண்டு வருவதாக நம்புகின்றனர் குழந்தைகள். ஆக மொத்தம், இது ஒரு அழகான விடுமுறைக் காலம். கொண்டாட்டங்கள் நிறைந்தது.
இது தொடர்பான அழகான இலக்கியங்களும் சிறுகதைகளும் கூட பிரபல எழுத்தாளர்களால் படைக்கப்பட்டன. சார்லஸ் டிக்கன்ஸின் Christmas Carol, ஓ. ஹென்ரியின் (O Henry) Gift of the Magi ஆகியன ஒரு சில.
———————————————-
தமிழ்த் திரைப்பாடல்கள் பல உண்டு – மார்கழி மாதம் இது முன்பனிக் காலம், மார்கழித் திங்களல்லவா போன்ற அழகிய பாடல்களைக் கேளாதவர்களும் உண்டோ?
நமது பண்பாட்டில் திருப்பாவை, திருவெம்பாவை, பஜனைப் பாட்டுகள் மிகுதியாக உண்டு. திருப்பாவை திருவெம்பாவை ஆகியன அன்றுதொட்டே இருப்பினும் தமிழ்நாட்டளவில் எங்கும் சிறுமியர் இவற்றைப் பாடும் வழக்கினை மஹாபெரியவர் என வணக்கத்தோடு போற்றப்படும் ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளே கொண்டு வந்தார். இத்துடன் இணைந்து அதிகாலையிலெழுந்து குழுக்களாக பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு தெருக்களில் ஊர்வலமாகச் செல்லும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மிக ரம்மியமான காலைப்பொழுதில் இறைவன் திருநாமங்களைப் பாடியபடி ஊரை வலம்வருவது அழகானவொரு நிகழ்ச்சி.
ஹிந்துஸ்தானி இசையில் ஹேமந்த ரிதுவிற்கான ராகங்கள் யமன் கல்யாணி, ஸ்ரீ, பெஹாக் ஆகும்.
விவால்டியின் நான்கு பருவங்கள்- Four Seasons எனும் இசை அமைப்பில் குளிர்காலம் பற்றிய அமைப்பு 9 நிமிடங்கள் உள்ளது. இதிலும் மூன்று பகுதிகள் உண்டு. கூடவே 14 வரிகள் கொண்ட சானட் (Sonnet) அமைப்பிலான ஒரு கவிதையும் உண்டு. இதன் தமிழாக்கத்தைப் பார்போமா?
உறைபனியில் குளிரால் நடுங்க
கொடுமையான காற்றின் மூர்க்கமான மூச்சினால்
கால்களை ஒவ்வொரு முறையும் அழுந்த உதைத்துக் கொண்டு ஓட,
பற்கள் அதீதமான குளிரில் கிடுகிடுக்கஅமைதியாக நெருப்பின் முன்பு அமர,
வெளியே மழை பொழியும்போது நிம்மதியான நாட்களைக் கழிக்க.உறைந்த பனிப்பாதைகளில் மெல்ல, கவனமாக நடக்க
தடுக்கி விழுந்து விடுவோமோ எனும் அச்சத்தினால்
பின் திடீரெனத் திரும்பி, வழுக்கி, தரையில் விழுந்து, எழுந்து
பனிமீது அது உடையும் முன் விரைந்து கடந்து.
உறையவைக்கும் வாடைக்காற்று வீட்டினூடே
பூட்டிய தாளிட்ட கதவுகளையும் தாண்டி
ஊடுருவிச் செல்வதை உணரும்
இதுதான் குளிர்காலம், இருப்பினும் அது
தனக்கே யுண்டான இன்பங்களைக் கொண்டு வருகிறது.
மேற்கத்திய இசையில், பாலே – Ballet என ஒரு நடன அமைப்பு. இதனை இசை வடிவாயும் கேட்கலாம். கிறிஸ்மஸிற்கே உரிய நட்க்ராக்கர் The Nut-cracker எனும் அருமையான, குழந்தைகளுக்கான நடன அமைப்பு ஒன்று அழகான கதையுடன் உண்டு. இதனை ரஷ்யாவைச் சேர்ந்த Tchaikovsky எனும் இசையமைப்பாளர் எழுதினார். மக்கள் அனைவரும் இதனை விரும்பிப் பார்ப்பார்கள். பாதாம்கொட்டை, வால்நட் (Walnut) போன்றவற்றை உடைக்க ஒரு கருவி உண்டு. அதனை ஒரு போர்வீரனின் வடிவில் செய்து குழந்தைகளை மகிழ்விக்கும் ஒரு குடும்ப நண்பர், அதனைப் பெற்றுக்கொள்ளும் இளம்சிறுமி எனக் கதை சுவாரஸ்யமாகச் செல்லும். அதற்கேற்ற அழகான இசையமைப்புடன் பாலே நடனக்காரர்கள் பறந்து பறந்து பட்டாம்பூச்சிகளைப்போல் ஆடுவது காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பனிச்சறுக்கு (Skiing) முதலான விளையாட்டுகளை மேலைநாட்டவர் பனிப்பொழிவு அதிகமாக உள்ள இடங்களில் சென்று விளையாடுவார்கள்.
கோல விழா: இதுவும் சுவாரஸ்யமானது; தமிழ் நாட்டுக்கே உரியது. கோலம் வரைவதென்பதே பல அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கியது. கணக்குப் பண்ணி புள்ளிகளை வைத்து அவற்றை இணைத்து ஒரு அழகான வடிவை உருவாக்குவது மூளைக்கு வேலை கொடுக்கிறது. மனதொருமித்து ஒரு பணியில் முனைப்பாக இயங்க வைக்கிறது. மூளையோடு உடலுக்கும் ஒரு பயிற்சி என்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை மயிலாப்பூரில் இதற்காக ஒரு போட்டியையே மார்கழி மாதத்தில் நடத்துகிறார்களாம். சுவையான செய்தி. தெருக்களை அடைத்துப் போடப்படும் கோலங்கள் சிந்தைக்கும் கண்ணுக்கும் விருந்தாகின்றன. இத்தகைய நமது பண்டைய பண்பாட்டுச் சின்னங்கள் அழியாமல் காக்கப்படுகின்றன எனும் செய்தி மனதிற்கு இதமாக உள்ளது.
———————————————–
குளிர்காலத்தில் பல வைரஸ் தொற்றுநோய்கள் – ஃப்ளூ முதலியன நாட்டையும் உலகையும் வலம் வரும். இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகளை நாம் போட்டுக் கொள்வதும் அவசியமாகிறது.
——————————————–
ஒவ்வொரு இயற்கைப் பருவத்தைப் பற்றியும் எத்தனை எத்தனையோ சுவையான செய்திகள். இவை மனிதனும் இயற்கையும் சுற்றுச் சூழலுக்கேற்ப வாழ்ந்து உயிர் தரிக்க எவ்வாறெல்லாம் தங்களைத் தயார் செய்துகொள்கின்றனர் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
(மீண்டும் சந்திப்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
