
வாழ்வின் இனிய பொன்னான தருணங்களை வசந்த காலம் என்பார்கள். இதனுடன் பின்னிப்பிணைந்த விழாக்கள், இலக்கியம், இசை, இன்னபிறவற்றை இங்கு நினைவு கூர்வதே இக்கட்டுரையின் நோக்கம். பாரதத்து இலக்கியங்கள் பருவங்களை ஓர் ஆண்டிற்கு வசந்தம் (வஸந்த ரிது), வேனில் (க்ரீஷ்ம ரிது), கார் – வர்ஷ ரிது (மழை), இலையுதிர்காலம் (சரத் ரிது), முன்பனி (ஹேமந்த ரிது), பின்பனி (சிசிர ரிது) என ஆறாகப் பிரிக்கின்றன. மேலைநாடுகளில் இவற்றை வசந்தம், வேனில், இலையுதிர்காலம், பனிக்காலம் என நான்காகவே பிரிக்கின்றனர். கவி ஸார்மபௌமரான காளிதாசன் தனது ரிது ஸம்ஹார காவ்யத்தில் இதனை க்ரீஷ்ம ருது எனும் வேனிலில் தொடங்கி வசந்தத்தை ஆறாவதாக வைத்து நிறைவு செய்கிறான்.
வசந்த காலத்தைப் பற்றிப் பார்ப்போமே! இது பருவங்களின் அரசன் எனவும் விளிக்கப்படும். ஆங்கில மாதங்களான மார்ச் – ஏப்ரல், தமிழ் மாதங்களான பங்குனி – சித்திரை தான் வசந்தகாலம். அருமையான, இனிமையான, அழகான பருவம்; மிதமான வெப்பநிலை. பகல்பொழுதுகள் நீண்டும் இரவுப்பொழுது குறுகியும் இருக்கும் பருவம்.
மக்கள் தடிமனான கம்பளி முதலானவற்றை விடுத்து மெல்லிய ஆடைகளை உடுத்திக் கொள்வார்கள். மரங்களில் இலைகள் உதிர்ந்து புதிய துளிர்கள் அரும்பும். பறவைகளும் மிருகங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் காலம். தேனீக்களும் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் தேனுக்காக மலர்களைத் தேடும் நாட்கள்.
பண்டிகைகள் பல உண்டு. ஹோலி, வசந்த பஞ்சமி, சித்திரை மாத வருடப்பிறப்பு முதலியன. இந்த வசந்தகாலத்தைப் பற்றித்தான் எல்லா மொழி இலக்கியங்களிலும் என்னென்னவிதமான வர்ணனைகள்! மகிழ்ச்சிக் குறிப்புகள், எதிர்பார்ப்புகள்!
காளிதாஸனுடனேயே அவனுடைய சிந்தனைகளைக் காண்போம். ‘ரிது சம்ஹார‘த்தில் அத்தனை பருவ வர்ணனைகளும் ஒரு காதலன் தன் காதலியை விளித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. காதலர்கள் இயற்கையின் அழகை ஒவ்வொரு பருவத்திலும் கண்டு, வியந்து, அனுபவிப்பதாகவே இந்தக் காவியம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் காவியத்தில் அத்தனையையும் கடந்து, தாவரங்கள் பற்றிய விவரங்கள், புராணச் செய்திகள், இசை, கவிதை, இன்னபிற மிகவும் ஆழமான உணர்ச்சியுடன் கூறப்பட்டுள்ளதைக் கண்டு வியக்கலாம்.
காளிதாஸனின் ரிது சம்ஹாரத்தை யாழ்ப்பாணம் முகாந்திரம் தி. சதாசிவ ஐயர் என்பவர் (இருது சங்கார காவியம்) தமிழாக்கம் செய்துள்ளார். வசந்தகாலம் பற்றிய சில பாடல்களைப் பார்ப்போம். இவற்றை அனைவரும் ரசிப்பதற்கு இன்னும் சிறிது எளிதாக்க வேண்டியுள்ளது. பொருளை முதலில் அறிந்துகொண்டு பாடலைக் காண்போம்.
‘பிரியமானவளே! மலர்ந்த மாம்பூக்களை அம்புகளாகக் கொண்டுள்ளவனும், வண்டுகளின் வரிசையை தனது வில்லின் நாணாகவும் உடைய வசந்தன் எனும் வீரன் காதலில் ஈடுபாடுள்ள இளைஞர்கள் மனத்தை மேலும் துளைத்துத் துன்புறுத்த வந்துள்ளான்.’
நிரந்துவிரி சூதநனை நீள்பகழி யாகப்
பரந்துவிரி வண்டுவில் பரித்தகயி றாகச்
சுரந்துவிரி காதலிளை யோர்மனந் துளைக்கத்
துரந்துவிரி மீளியிள வேனில்வருந் தோகாய். (1)
(சூதம் – மாமரம்; நனை – பூங்கொத்து; மீளி – வீரன்;)
வசந்தகாலத்தை ஒரு போர்வீரனாக உருவகம் செய்துள்ளான் காளிதாஸன். அடுத்து வசந்தகாலத்தின் இனிய காட்சிகளை வரிசைப்படுத்துகிறான்.
மரங்களில் பூக்கள் மலர்ந்துள்ளன; நீர்நிலைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ளன. பெண்கள் காதல் உள்ளம் நிரம்பியுள்ளனர். காற்று நறுமணங்களைச் சுமந்து வருகிறது. மாலை நேரங்கள் இனிமையாய் உள்ளன. பகல்பொழுதுகளும் உள்ளத்தை அள்ளுகின்றன. அனைத்துமே இளவேனில் எனப்படும் வசந்தகாலத்தில் அழகாக இன்பமாக உள்ளன.
பாதப மலர்ந்தனநீர் பங்கயம் விரிக்கும்
ஆதர மலிந்தனர்மின் னார்வளி மணக்கும்
ஆதப நிறைந்தபகல் மாலையினி தாகும்
யாதுமித மாகுமிள வேனிலுறு மேல்வை. (2)
(பாதபம் – மரங்கள்; வளி – காற்று; ஆதபம் – வெய்யில்; ஏல்வை – காலம்)
காதலினால் மனம் மகிழ்ச்சியடைந்த மங்கையர் காமம் மீறுவதனால் மயங்கிய நிலையில் தங்கள் மார்பினில் குளிர்ச்சியான சந்தனம், ஞாழல், மஞ்சள், கஸ்தூரி, குங்குமம் ஆகியவை கலந்த கலவையைப் பூசிக்கொள்வார்கள்.
காதலின்வி லாசமுறு காரிகையார் காம
மீதலின்ம யர்ப்பினர்தம் வெம்மிள முலைக்குச்
சீதலகந் தம்மதஞ்சீர் ஞாழன்மர மஞ்சள்
ஓதல்வரு குங்குமமு மார்கலவை யுய்ப்பார். (12)
(மதம் – கஸ்தூரி; கந்தம் – சந்தனம்; ஞாழல் – வாசனைத் திரவியம்; காரிகையார் இவற்றை மார்பிலணிவார்கள்).
காதல்வயப்பட்ட பெண்கள் செய்துகொள்ளும் அலங்காரங்களை வர்ணிக்கிறான்.
இக்காலத்தில் மலர்ந்துள்ள சிவந்தநிற மலர்கள் எரிகின்ற சிவந்த நெருப்பைப்போன்று காணப்படுவதாலும், வீசுகின்ற காற்றில் மெதுவாக அசைகின்ற பலாச மரக்காடுகளாலும் இந்த பூமி சிவந்த ஆடையை உடுத்திருக்கும் புதுமணப்பெண்ணைப்போலக் காணப்படுகின்றது.
எரியுஞ் செந்தழ னிறம்புரை யினமல ரீன்று
சரியுங்காலினாற் சலிபலா சந்தரு வெங்கும்
விரியும் மேதினி விளங்கிள வேனிலா மிந்நாட்
புரியும் செவ்வுடை புனைபுது மணப்பெணிற் பொலியும். (19)
(நிறம்புரை – நிறத்தை ஒத்த; சரியும் கால் – வீசுகின்ற காற்று; சலி – அசைகின்ற;)
சிவந்த பூக்களைத் தாங்கிப் பலாசமரம் நெருங்கி வளர்ந்திருக்கும் வனப்பரப்பை சிவந்த பட்டணிந்த புதுமணப் பெண்ணாக வருணிக்கிறான் காளிதாஸன். அப்படியே இந்தக் காலத்தில் பூக்கும் மரங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம்.
பலவிதமான அழகிய மலர்களைக் கொண்ட மரங்கள் நிறைந்துள்ளன. களிப்புற்ற பறவையினங்களின் கூவுதலால் சிகரப் பிரதேசங்கள் நிறைந்துள்ளன. மலைச்சாரல்களில் மேக வண்ணம் கொண்ட குறிஞ்சிமலர்கள் பூத்துள்ளன. இந்த மலைகளைப் பார்த்து, மக்கள் மகிழ்ச்சியடைவர்.
பலவினமாம் விழைதகுமென் மலர் பரித்துப்
பாங்கரெலாம் பாதபங்கள் பரக்க வெங்கும்
நிலவினமாங் குயிலினங்கள் நீடு கானம்
நிகழ்த்திலியாற் சாரலெலா நிறைய நீண்டு
குலவினமா தருமேக வணக் குறிஞ்சி
கூடியகன் மலையகத்தைக் கோலஞ் செய்ய
கலவினமாண் புறுகாட்சி காட்டுங்குன்றங்
காண்பவர்க்கெல் லாமகிழ்ச்சி காட்டு மாலோ (25)
இது குறிஞ்சிநில வர்ணனை. மேகநிறமான பூக்களைக் கொண்டிருப்பதனால் இது மேகவணக் குறிஞ்சி எனப்பட்டது. இந்தப் பாடலின் மொழியாக்கம் சற்று வேறுபட்டுள்ளது. பலவிதமான பூக்கள் என்றே காளிதாஸன் கூறுகிறான். இங்கு அது மேகவண்ணக் குறிஞ்சி எனப்பட்டது. குறிஞ்சி நில வர்ணனை தமிழ்மொழிக்கு மட்டுமே உரியது. ஆகவே மொழியாக்கம் செய்த ஆசிரியர் இதனைக் கூட்டிக் கொண்டார் போலும்!
அருமையான பாடல்கள்; அவற்றின் சுவையான மொழியாக்கம்; இவை வசந்தத்தின் நினைவை ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுப்புகின்றன அல்லவா?
இனி காளிதாசனைக் கடந்து சென்று தமிழிலக்கியத்திற்குள் புகலாமா?
சங்க இலக்கியங்களில் பருவங்கள், காலங்கள், இவற்றின் நிகழ்வுகள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் ஓரிரண்டைக் கண்டு களிக்கலாம்.
கலித்தொகையில் பெருங்கடுங்கோ என்பவர் பாடிவைத்துள்ள பாலைக்கலியில் (பாலை பாடிய பெருங்கடுங்கோ) உள்ள சில பாடல்களில் தலைவன் வருகையை எதிர்நோக்கியிருக்கும் தலைவியிடம் அவன் வருவதனை உரைக்கும் தோழியின் கூற்றாக அமைந்தவை இளவேனிலைக் குறிக்கும் பாடல்கள்.
“அகன்ற ஆறுகள் இந்தப் பரந்த உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் வாழ்வதற்காக பல நீர்க்கால்களால் தம்மிடம் வந்து சேரும் நீரை எல்லாருக்கும் கொடுத்து, பாதுகாத்து, அந்த நீர் வற்றியபோதும் சில நீர்க்கால்களால் ஓடும் நீர் உள்ள அந்த ஆறுகளை அழகு செய்யும் இளவேனில் காலம் வந்துற்றது. தமக்கு முன்னர் ஒரு உதவியைச் செய்தவர், பின்பு அவர் நிலை தாழ்ந்தபோது அவருக்கும் ஒரு உதவியைச் செய்பவரைப்போல அந்த நீரை உண்ட மரங்களின் கொம்புகளிலிருந்து யாழ்போல வண்டுகள் ஒலிக்கும்; பல மலர்கள் ஆற்றுநீரில் உதிரும். அத்தகைய இளவேனில் வந்தது…” என்கிறாள் தோழி.
‘மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று
பல் நீரால் பாய்புனல் பரந்து ஊட்டி, இறந்தபின்
சில் நீீரால் அறல்வார, அகல் யாறு கவின்பெற
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர்போல்
பல் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
………………….’ (கலித்தொகை 34: 1-7)
இப்பாடலிலும் இளவேனில் காலத்தின் சில இயல்புகள் குறிப்பிடப்படுகின்றன. மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள் இவற்றுள் ஒன்று.
அடுத்துவரும் பாடலில் தோழி தலைவியிடம் கூறுகிறாள்: “ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே! நாம் கண்ணீருடன் அவரைத் தழுவி விடைகொடுக்க, அவர் தான் திரும்பிவரும் காலம் அழகான வண்டுகள் ஆரவாரம் செய்து இன்பம் மிகுந்த வையை ஆற்றில் உயர்ந்த மணலில் குளிர்ந்த அருவிநீரினால் வளர்ந்த நறுமுல்லைக்கொடியின் பூந்தாதை உண்ணும் இளவேனில் காலம் அல்லவோ?”
வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர்,
தண் அருவி நறு முல்லைத்தாது உண்ணும் பொழுதன்றோ
கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால்,
ஒண்ணுதால்! நமக்கு அவர் ‘வருதும்’ என உரைத்ததை?
(கலித்தொகை-35:9-12)
காலத்தை வென்று உள்ளத்தை அள்ளும் அழகான தமிழ்ப்பாடல்கள்!
<<<<<>>>>>
சோழர்களின் முக்கியமான திருவிழா இந்திரவிழா. ‘பொதியமலைக் குறுமுனி’ அகத்தியரின் ஆணைப்படி, மக்களுடைய நலனுக்காகத் ‘தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ எனும் சோழமன்னனால் தொடங்கி வைக்கப்பட்ட விழாவே இந்திரவிழா. தமது குடிமக்களுக்கு எல்லா நலன்களையும் தருமாறு இந்திரனை வேண்டிக்கொண்டு கோவிலில் அரசனும் அமைச்சரும் அவனுக்கு ஆயிரம் பொற்குடங்களில் கொண்டுவந்த காவிரி நன்னீரால் நீராட்டிப் பூசனைகள் செய்வார்கள்.
சோழமன்னன் இதனை வில்விழா (காமன் கையில் விளங்கும் கரும்புவில்) என அறியப்படும் காதல்திருவிழாவாகவே நடத்தினான். மன்னனின் நல்லாட்சியில் அமைதி நிலவும்போது கலைகள் பெருகிவளரும். மக்கள் இன்பக்கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
காதல்கடவுளான மன்மதனுக்கு உரியபொழுது இளவேனில் காலம்; ஆகவே காதல்விழாவும் இளவேனில் காலத்திலேயே கொண்டாடப்பட்டது. பங்குனி மாதத்து முழுமதி நாளில் தொடங்கும் விழா இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்று அடுத்த (சித்திரை) முழுமதி நாளில் நிறைவுபெறும்.
மனிதகுலம், மரம், மிருகங்கள் ஆகிய மற்றனைத்தும் கூட தழைத்துவளரச் செயல்படுபவன் மன்மதன் எனும் காமன்; அவனைப்பிரியாத அன்புமனையாள் ரதிதேவி. ஆகவே காலப்போக்கில் காமன்வழிபாடு ஒருவரையொருவர் விரும்பிய ஆண்மகனையும் பெண்ணையும் சேர்த்துவைக்கும் விழாவாகப் பரிணமித்தது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்றும் பல கிராமங்களில் காமன்கோவில்களும் உள்ளன. விழாக்களும் நடைபெறுகின்றன.
சங்க இலக்கியங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும், தம் காதல் கைகூட மகளிர் காமனை வேண்டுவதென்பது பாவைநோன்பினைப்போன்ற ஒரு மரபாகவே இருந்து வந்துள்ளது. நாம்கண்ட இந்திரவிழா – காதல்திருவிழா கி. பி. 2-ம் நூற்றாண்டு முதலாகவோ அதற்கும் முன்பாகவோ கொண்டாடப்பட்டுள்ளது என்பதற்கு தாலமி, பிளினி எனும் யாத்திரீகர்களின் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. இந்த மிகப்பழமையான விழா ஒரு பண்பாட்டின் சான்றுமாகும்.
<<<<<<>>>>>>
மற்றொரு வகைச் சிற்றிலக்கியத்தின் உட்புகுந்து பார்ப்போமா?
கோவை எனப்படும் நூல்கள் களவியல், கற்பியல் இரண்டையும் விளக்கிப் பாடி வைக்கப்பட்டவை. இவற்றுள் தலைவன் பிரிவினைத் தாளாதவளாய் தலைவி வருந்துவது கூறப்படும். எப்பருவத்தில் தலைவன் பிரிந்து செல்கிறான் என்பது கூறவியலாதது. பல்வேறு செயல்களின் நிமித்தம் அவன் அவளைப் பிரிந்து செல்லும் வாய்ப்புண்டு. இளவேனில் எனப்படும் வசந்தகாலத்தில் அவன் பிரிவைத் தாளாத தலைவி வருந்துவதாக அமைந்த பாடல்களைக் காணலாம்.
துறைமங்கலம் சாமிநாத தேசிகரால் இயற்றப்பட்ட பழமலைக் கோவை எனும் நூலினின்றும் அத்தகைய ஒரு பாடல்:
தாது நிறைந்த கொன்றைமலர்களைப் புனைந்த ஈசன் வாழும் பனிமலையில் மாமரத்தின் மீதேறிப் பூங்குயில் இளவேனில் வந்துவிட்டதெனப் பாடியது; தலைவரோ எனில் தன் உள்ளத்தில் பொன்னின் மீதுண்டான விருப்பத்தினால் என்மீது அன்பின்றிப் பிரிந்து சென்றாரே.
பைந்துணர்க் கொன்றை புனைமுது குன்றர் பனிவரையார்
செந்தளிர்ச் சூத மரமேறிப் பூங்குயில் சேர்குரலால்
வந்தது நல்லிள வேனிலென் றேசொல் வகுத்திடவும்
புந்தியிற் செம்பொன் விருப்படைந் தன்பின்றிப் போயினரே
அருணாசல சுவாமிகள் இயற்றியுள்ள குற்றாலக்கோவையினின்று இக்கருத்து:
தலைவி தோழியைக் கேட்கிறாள்: அறங்களனைத்தையும் வழுவாது இயற்ற பொருளை ஈட்டிவரச் சென்ற எம் தலைவன், பண்டொருநாள் காயும்படி போரிலே மறைந்த சூரபன்மனானவன் கடலுக்குள் ஒளிந்துநின்று எடுத்த மாமரத்தின் வடிவிலிருந்து இளவேனிலைக் கொண்டுவந்து எனது செவியில் ஊதுகின்ற கொடிய வாயினையுடைய குயிலுக்கு என்ன புகலெனக் கூறிவிட்டுப் போனார்?
கோவாய்ச் சுடரொரு மூன்றையுங் கொண்ட குற்றாலர்வெற்பிற்
காவாய் உதவப் பொருட்கே கினாரவர் காய்ந்திடுஞ்சூர்
மாவாய் இருந்திள வேனிலை யென்செவி வாய்ப்புகட்டுந்
தீவாய்க் குயிற்குப் புகலென்சொன் னார்சொல்லு தேமொழியே.
பாரத தேசம் மட்டுமல்ல; இப்பூவுலகில் உள்ள அனைவருமே ஆண்டின் பல பருவங்களையும் அதற்கேற்றபடி கொண்டாடினர்.
மேலைநாட்டுக் கவிதைகளைக் கண்டாலும் வசந்தத்தின் வருகையை எதிர்நோக்குவதும், கொண்டாடுவதும் எனப் பலப்பல கவிதைகளைக் காண இயலுகிறது. தாம்ஸன் (Thomson) எனும் கவிஞர் 1730-ல் பருவங்களைப் பற்றிப் பாடியுள்ளார். முதலில் இவர் பாடியுள்ளது வசந்தகாலம் பற்றிய கவிதையே; சில வரிகளின் தமிழாக்கத்தைக் காணலாமே!
ஓ இரவுப்பறவையே! எனக்கு உனது பாடலைக் கொடு! அல்லது
பலவிதமாக ஓடும் ராகத்தின் உயிரை
எனது கவிதை வரிகளுக்கு அளி! நான் முயன்று
குயிலின் முதல் சுரத்திலிருந்து
வசந்தகாலத்தின் இசைக்கோர்வையை எடுத்து
சோலைகளின் பெரும் ஆசை எனும்
புகழ்பெறாத ஒரு கருத்தைச் சொல்வதற்காக.
வசந்தகாலத்தில் இசையும், அதைப்பாடும் பறவைகளும், அவை தங்கும் சோலைகளும் என விரியும் காட்சிகள்……
ஷேக்ஸ்பியரின் வசந்தகாலக் கவிதை ஒன்று: சானட் (Sonnet) எனும் அமைப்பிலானது; சானட் என்பது பதினான்கு வரிகள் கொண்ட கவிதை.
பெருமிதம் பொங்கும் ஏப்ரல், அதன் அழகான உடைகளை அணிந்து
இளமையின் ஆர்வத்தை எல்லாவற்றிலும் இணைத்துள்ளது,
கனமான சனிகிரகம் சிரித்தபடி அதனுடன் சேர்ந்து துள்ளுகிறது.
………………………………
சனி (Saturn) கிரகத்தின் தொடர்பு ஏப்ரிலுக்கு என்னவென துருவித்தேடியும் அறிய இயலவில்லை!!
Ode to The Westwind-ல் ஷெல்லி (Shelley) சொல்கிறான்:
‘பனிக்காலம் வந்துவிட்டால், பின் வசந்தகாலம்
வெகு தூரத்தில் இருக்குமோ?’
(For If winter comes Can spring be far behind?)
(இருக்காதல்லவா?) ஆகவே வசந்தத்தைப் பற்றிய எண்ணங்களும், அது தரும் இனிமையும், அது தொடர்பான நிகழ்வுகளும் உலகில் உயிர்வாழினங்களுக்கு இன்றியமையாதது எனத் தோன்றுகிறது. இன்ப நினைவுகளை எழுப்பும் காலமாக வசந்தம் உள்ளது.
இவ்வளவையும் கூறிப் பின் வசந்தம் தொடர்பாக எழுந்த இசையைப் பற்றிக் கூறாமல் இருக்கலாமா?
பருவங்களின் சுழற்சி என்பது ஆண்டாண்டு தோறும் தவறாமல் நிகழ்வது. ஆகவே பருவ நிலைக்கும் அது எழுப்பும் மனோநிலைக்கும் உரியதாக இசையும் பலவிதப்படும்.
தென்னிந்திய இசையில்:
வசந்தா என்றே ஒரு அழகான ராகம் – உள்ளங்களில் நம்பிக்கையையும் நல்ல எண்ணங்களையும் வளர்ப்பது. வசந்த காலத்துக்கு உரியதா எனில், இல்லை; அவ்வாறு எந்தப் பகுப்புகளும் இல்லை. நளினகாந்தி, கர்ணரஞ்சனி போன்ற ராகங்களையும் வசந்தத்தின் ஓர் அழகான மனோநிலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என எங்கேயோ படித்த நினைவு!!
வஸந்தகாலம் வருமோ எனும் திரையிசைப்பாடல் வலஜி ராகத்தில் அமைந்தது. இது அப்பருவத்திற்குரிய ராகமா எனத் தெரியாது. இருப்பினும் அப்பாடலில் பொங்கி வழியும் ஏக்கம், சங்ககாலத்துத் தலைவியை நினைவுபடுத்துகிறதே!
இந்துஸ்தானி இசையில்:
வசந்த ரிதுவுடன் தொடர்புடைய ராகங்கள்; அலியா பிலாவல், பஸந்த், பஹார், ஹிந்தோல் எனக் கூறுவர். ஆனால் இன்னும் பல ராகங்கள் இதனுடன் தொடர்புள்ளன.
வீணா சஹஸ்ரபுத்தே எனும் பாடகி ‘ரிது சக்ரா’ எனும் பெயரில் ஆறு பருவங்களுக்கான ராகங்களையும் பாடி, வசந்தகாலத்தைக் குறிக்க பஸந்த், தேஷ் ஆகிய ராகங்களைப் பாடி இசைக் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார். கிரிஜா தேவி, ஷோபா முத்கல் ஆகியோரும் இன்னும் பல இசைஞர்களும் பசந்த், பஹார் எனும் ராகங்களைப் பாடியுள்ளனர்.
மேற்கத்திய இசையில்: விவால்டி (Vivaldi, Antonio) எனும் இசையமைப்பாளர் நான்கு பருவங்களைப் பற்றிய இசையை எழுதி அளித்துள்ளார். ‘நான்கு பருவங்கள்’ (Four Seasons) என வசந்தம், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் ஆகிய பருவங்களை விவரித்து இசையமைப்புகளை எழுதியுள்ளார். 18ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் இவை எழுதப்பட்டனவாம். இது இசையுலகின் புதுமையான புரட்சியாகக் கருதப்படுகிறது. சலசலக்கும் நீரோடைகள், பாடும் பறவைகள், ஒரு ஆடுமேய்ப்பவனும் அவனுடைய குரைக்கும் நாயும், ரீங்காரமிடும் வண்டுகள், குடித்து மயங்கி நடனமாடுவோர் எனப் பல நிகழ்வுகளுக்கு இசையால் உயிர் கொடுத்துள்ளார். கேட்டு அனுபவிக்க வேண்டிய இசையமைப்பு இதுவாகும்.
இவற்றுடன் விவால்டியே சானட் (sonnet) எனும் கவிதைகளையும் இவ்விசையமைப்பிற்காகவே இயற்றியுள்ளார் என அறிகிறோம்.
அதன் பொருள்:
வசந்தம் வந்துவிட்டது. வசந்தம் திரும்ப வந்துவிட்டதைப் பறவைகள் களிப்பான இசையுடன் கொண்டாடுகின்றன. முணுமுணுக்கும் ஓடைகள் மென்மையாகத் தென்றலால் தழுவப்படுகின்றன. வசந்தத்தின் வரவை அறிவிக்கும் இடியுடன் கூடிய மழை, உறுமியபடி தனது கரிய திரையை சுவர்க்கத்தின் மீது போர்த்துகிறது. பின் அது அமைதியாக இறக்கிறது, பறவைகள் தங்கள் இனிய இசையைத் தொடருகின்றன.
பூக்கள் பரவிய புல்வெளியில் இலைகள் நிறைந்த கிளைகள் தலைமீது உயரே சலசலக்க, தன் நன்றியுள்ள நாய் அருகிருக்க, ஆடு மேய்ப்பவன் உறங்குகிறான்.
விழாக்காலத்து குழல்களின் இனிய நாட்டுப்புற சங்கீத ஓசையால், வனதேவதைகளும், ஆடு மேய்ப்பவர்களும் வசந்தத்தின் அழகான விதானத்தின் கீழ் மென்மையாக நடனமாடுகின்றனர்.
இதற்கு மேலும் அழகாக உணர்வுபூர்வமாக எப்படி வசந்தத்தின் வரவை உணர்த்த முடியும்?
<<<<>>>>
ஸ்டிராவின்ஸ்கி (Strovinsky, Igor) என்பவர் வசந்தகாலச் சடங்கு (Rite of Spring) எனும் ஒரு அருமையான இசையமைப்பை உருவாக்கியுள்ளார். இதைப் பற்றிச் சிறிதேனும் கூறியாக வேண்டும். இது பாலே (ballet) எனும் ஒரு நடன வகையில் உருவமைக்கப்பட்டது. பொது ஆண்டு 20ம் நூற்றாண்டில் (1913) வடிவமைக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான இசையமைப்பாகவும் கொள்ளப்படுகிறது.
உருவ வழிப்பாட்டினைக் கொண்ட (Pagan) ரஷ்யாவைக் களமாகக்கொண்டு அமைக்கப்பட்ட இசைக்கோர்வைகளும் நாடக வடிவங்களும் கொண்டது. முதல் கட்டத்தில் இசை, வசந்தகாலத்துக் குழலிசை மட்டுமே கேட்கும். வசந்தகாலத்துக் கொண்டாட்டங்கள் மலைகளில் தொடங்கும்; ஒரு முதியவள் எதிர்காலத்தைக் கணித்துக் கூறத் தொடங்குவாள். வரிசையாக இளம் பெண்கள் நதியினின்று வரத் தொடங்குவார்கள். ‘கடத்திச் செல்லும் நடனம்’ (Dance of the Abduction) எனும் ஒரு நடனத்தை அவர்கள் ஆடுவார்கள். பின்பு வசந்தகால நடனம் (Spring Rounds) என்பதனை அவர்கள் ஆடுவார்கள்; மக்கள் இப்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் எதிர்கொண்டு ‘போட்டிக் குழுக்களின் சடங்கு” (Ritual of the Rival Tribes) என்பதனைத் தொடங்குவார்கள். முதியவர்கள் ஒரு புனிதமான ஊர்வலமாக வருவார்கள்; இதில் ஒரு முதிய முனிவர் இந்த விளையாட்டுகளை முடித்துவைத்து, பூமியை ஆசிர்வதிப்பார். மக்கள் ஆரவாரமாக நடனமாடித் தங்களை இப்பூமியுடன் ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள்.
இரண்டாம் காட்சியில், இளம்பெண்கள் வட்டமாக இருந்து, வினோதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். விதிவசத்தால் அவர்களுள் ஒரு பெண் மட்டும் – அவள் இருமுறை ஒரு நிரந்தரமான வட்டத்தினுள் அகப்பட்டுக் கொண்டதனால் – தேர்ந்தெடுக்கப்படுவாள்; ‘தேர்ந்தெடுக்கப்பட்டவள்’ (Chosen one) எனும் பெயருடன் ஒரு யுத்தத்திற்குரிய நடனத்துடன் அவள் பெருமைப்படுத்தப்படுவாள்.
ஒரு சிறு நடனத்துடன் இளம்பெண்கள் இறந்துபோன முதியோரை அழைப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மங்கை வயது முதிர்ந்த அறிவாளி ஆண்களின் காப்பில் வைக்கப்படுவாள். அவள் அவர்களின் பாதுகாப்பில் இடைவிடாமல் தான் இறக்கும்வரை ‘தியாகமெனும் நடன’த்தை (Sacrificial Dance) ஆடுவாள். வசந்தகாலத்துக் கடவுளுக்கு இவ்வாறு அவள் பலி கொடுக்கப்படுவாள்.
இந்த இசையமைப்பு பலவிதமான கண்டனங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் உள்ளானது; இருப்பினும் இது மேலைநாட்டு சங்கீதத்தில் ஒரு முக்கியமான இசை அமைப்பாகக் கருதப்படுகிறது.
இன்னும் நாம் கூறாமல் விட்டதும் அறியாமலிருப்பதும் எத்தனையோ? ஆயினும் உலகை ஆட்டிப் படைக்கும் மன்மதனின் பருவமான வசந்தத்தை எண்ணி அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை!
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
