- இற்றைத் திங்கள் அந்நிலவில் -1
- சங்கப்பெண்கவிகள்
- மொழியென்னும் ஆடி
- காட்டாற்று வெள்ளம்
- காத்திருப்பின் கனல்
- இயற்கையை நோக்கியிருத்தல்
- தீரத்தின் ஔி
- வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும்
- சந்தனம் வாடும் பெருங்காடு
- மறம் பாடுதல்
- சிறுகோட்டுப் பெருங்குளம்
- பொன்கழங்குகள்
- மலை தெய்வம்
- வேந்தர்களைப் பாடுதல்
- காவிரி சூழ் நாடன்
- தளிர் பெருமரம்
- நீர்த்துறை படியும் பெருங்களிறு
- பெருமழை காலத்துக் குன்றம்
- உள்ளம் தாங்கா வெள்ளம்

பொருளீட்டுவதற்காக பிரிந்து செல்லும் தலைவனைப் பற்றி தலைவி கண்ணீருடனோ, மனஆற்றாமையுடனோ தோழியிடம் சொல்வாள். தோழி அதை மறுத்துரைத்து தலைவனின் அன்பை எடுத்துரைக்கும் பாடல்கள் அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் உண்டு. அதே தோழி தலைவனைப் பற்றி குறிப்பால் கடுஞ்சொல் உரைத்தால் கூட உடனே தலைவி தலைவன் பக்கம் பேசுவதாக பாடல்கள் மாறும். இந்தப் பாடலில் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியிடம் தோழி, இல்லறத்தின் அறத்தை காக்கும் பொருட்டு பொருள் ஈட்ட சென்ற தலைவனின் பிரிவை காத்து இருக்கத்தான் வேண்டும் என்கிறாள்.
காடு கவின் அழிய உரைஇ கோடை
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்க்
கண்விடத் தெரிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல பழணங்குழித்தாஅம்
இன்களி நறவின் இயல் தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலை இறந்தோரே.
முள்ளியூர் போதியார் என்ற கவிஞர் அகநானூற்றில் 173 ஆம் பாடலாக உள்ள இப்பாடலை பாடியுள்ளார். இவர் முள்ளியூரில் பிறந்தவர்.
காடு பசுமை குன்றி அழகு குறைகிறது. அந்தக்கோடையில் மலைக்காட்டுவழியை கடந்து தலைவன் சென்றுள்ளான். அவ்வழியில் மூங்கில்கள் வெடித்து பாறைக்குழிகளில் கழங்குகள் போல சிதறிக்கிடக்கும். இந்த வெயில்காலத்தின் பொன் போன்ற குன்றைக்கடந்து சென்றுள்ளான் என்று தோழி சொல்கிறாள். காடு கவின் அழியும் கோடை என்று முதலில் சொல்லிவிட்டு இறுதியில் பொன்படு மருங்கு என்று தோழி சொல்கிறாள். காடே சோர்ந்து நிற்கும் கொடையிலும் கொன்றை பொன் போல பூக்கத்தான் செய்கிறது என்று சொல்லி காத்திருப்பை தோழி மலரசெய்கிறாள். மழையின்றி வாடும் காட்டை பொன்னாய் மாற்றக்கூடிய ஒன்று நிலத்தில் எப்போதும் இருக்கிறது.
பூங்கணுத்திரையார் என்ற கவிஞர் குறுந்தொகை 48,171 புறநானூற்றில் 277 ஆம் பாடல்களை பாடியுள்ளார்.
தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பினினை பெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே
குறுந்தொகை 48பாலைத்திணை
குளிர்ந்த அதிகாலையில் பூக்களையும் ,அதன் தாதுக்களையும் ஈரமான மண்ணில் சேர்த்து உனக்காக நானொரு பாவை செய்தேன். அது வெயிலில் வாடும் வரை நீ வரவில்லை என்று தலைவி பாடுகிறாள். முந்தைய பாடலில் காத்திருப்பு கோடையில் பொன்னாய் மலரும் போது, இந்தப்பாடலில் ஈரம் காய்ந்து வாடுகிறது. இது களிப்பாவையின் விளையாட்டு பொம்மை. அது பேரிளம் பெண்ணின் பொன்அணிகலன்.
காண் இனி வாழி தோழி யாணர்க் இட்ட
கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீனனவலை மாப் பட்டாஅங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையேகுறுந்தொகை 171
மருதத்திணை
தோழி அங்கு காண்பாயாக…நம் மலைநிலமெங்கும் மழை பொழிகிறது. பொழிந்த நீர் சிற்றோடைகளாகி நீர் தரையிரங்கி ஆழமான இடத்தில் தேங்கி குளமாகிறது. மழைப்பெய்து புதுவெள்ளம் வந்து கொண்டே இருக்கும் அந்த ஆழமான குளத்தில் மீன்பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் நீரோடு வந்த ஏதோ ஒரு விலங்கு மாட்டிக்கொண்டது. அது அவர்களுக்கு பயன் தரப் போவதில்லை. எனக்கு பெற்றோரும் உறவினரும் ஏற்பாடு செய்யும் திருமண முயற்சி புதுநீரில் வீசும் மீன்வலை போன்ற வீண் செயல் என்று தலைவி சொல்கிறாள்.
மா என்று இந்தப்பாடலில் சொல்லப்படுவதை விலாங்கு மீன் என்று கொள்ளலாம். விலாங்கு மீன் பாம்பு போலவும், மீன் போலவும் இரு தோற்றம் காட்டக்கூடியது. உறவுகளும் பெற்றோரும் தலைவி தலைவனை விரும்புவது தெரிந்தும் தெரியாததைப் போல பாவனை செய்து மணஏற்பாடுகளை தொடங்குவதை தலைவி சுட்டுகிறாள். இந்த மணமுயற்சி மூலம் அவர்கள் தலைவியிடம் தங்களின் எண்ணத்தை காட்டிவிட்டார்கள். அவர்கள் இட்ட வலையில் அவர்களே மாட்டிக்கொண்டதைப் போல. இனி தலைவி உடன்போக்கிற்கு தலைப்படக்கூடும்.
பிரிவின் கண்ணீர் சங்கப்பாடல்களில் பலவாறு சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்பாடலில் போரில் வீரப்புண் பெற்று மாண்ட மகனின் பிரிவை தாய் பாடுகிறாள். மழையாகப் பொழிந்து சிறுகயமாகி, ஆறு போல பெருகி அருவியாகி, ஓடும் நதியாகும் பிரிவின் கண்ணீர் அகநானூற்றில் எப்படியெப்படியோ சொல்லப்படுகிறது. இது புறநானூற்றுப்பாடல். போரில் வீரமரணம் அடைவதை ஒரு விழுமியமாக முன் வைக்கும் காலம் அது. மார்பில் புண்பட்டு இறப்பதை பெருமையாக ஈன்ற பொழுதிலும் பெருமகிழ்வாக முன்வைக்கும் காலம்.
என்றாலும் புண்பட்டு கிடப்பது மகன். இந்தப்பாடலில் தாய் வீரமரணத்தின் பெருமிதத்திற்கு அப்பால் உள்ள திரைக்குள் உள்ள மனதிற்குள் செல்கிறாள். அந்த வகையில் முக்கியமான பாடல். மிகையாக அழுதால் கோழை என்று ஊரார் ஏசிவிடக்கூடும். எனவே பெருமழையில் மூங்கில் இலைகளில் தங்கி நின்று மெல்ல சொட்டிக்கொண்டே யாருமறியாத ரகசியமாய் ஒரு அடைமழை நிற்காமல் நசநசவென்று பெய்யத் தொடங்குகிறது. சங்கப்பாடல்களில் துறையின் பெயரே பாடலின் உணர்வு நிலையை கூறிவிடும். இந்தப்பாடல் உவகைக் கலுழ்ச்சி துறையில் பாடப்பட்டுள்ளது. உவகையை மீறிய கலக்கமும் கண்ணீரும் உள்ளப்பாடல் இது.
மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஅறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவேபுறநானூறு 277
தும்பைத்திணை
வெதிரம் என்பது பெரும் மூங்கில். வெதிரத்தின் இழைகளில் இருந்து சொட்டும் மழை போன்ற ஒரு தாயின் துயரம் . மூங்கில் புதராக வளரக்கூடியது. பெருமூங்கிலின் புதர் ஒரு குட்டிக்காடு. அதன் ஒவ்வொரு இழையிலும் சொட்டும் நீராலான தனித்தமழை அது. மழை என்று காடு அறியாது மூங்கிலுக்குள் பெய்யும் மழை. அங்கு இடி மின்னல்கள் இல்லை. மழையின் சத்தம் கூட இல்லை. தேங்கி நின்று, தயங்கி, மென் காற்றுக்கு அதிர்ந்து சொட்டும் மழை. தன்னை தானே உலுக்கிப் பெய்யும் மழை.
பொதும்பில் புல்லாளங்கண்ணியார் என்ற கவிஞர் அகநானூற்றில் 154 வது பாடலை பாடியுள்ளார். பொதும்பில் என்பது இவரின் ஊர்ப்பெயர்.
‘…..
காடு கவின் பெற்ற தண்பதப் பெருவழி
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயக்குபு இயம்ப
ஊர் மதி வலவ….’அகநானுறு 154
பொதும்பில் புல்லாளங்கண்ணியார்
‘காடு கவின் பெற்ற தண்பத பெருவழி’ என்று கவிஞர் சொல்கிறார். இந்தக்கட்டுரையின் முதல் பாடலில் கோடையால் கவின் அழியும் காடு இந்த பாடலில் மழையால் அழகு பெறுகிறது. பிரிவாக விரிந்து நிற்கிறது கோடை. முதல் பாடலில் கோடையில் மூங்கில் வெடித்து சிதறும் காடு இந்தப்பாடலில் மழை காலத்தில் மலர்களும் மகரந்தங்களும் உதிர்ந்து மணல்பாதையில் பொன்வரிகளாகின்றன. மஞ்சள்கோடல் மலர் வழியெங்கும் தன் இதழ்களை நீட்டிக்கொண்டு பாம்பென மாயம் காட்டி விளையாடுகிறது.
கோடையில் பொன்குன்றை கடந்து சென்றவன் திரும்பி வரும் வழியெங்கும் பசுமை கொண்டு நிற்பது எதுவோ அதுவே காய்ந்தாலும் பொன்னாகும். அது மானுடரை தன் விளையாட்டிற்கான கழங்குகளாக்குகிறது.
அது நம்மை ஒரு குழியில் இட்டு எடுத்து வெறுமையாக்கி, மற்றதில் மாற்றிப்போட்டு நிறைவடைய வைத்து மீண்டு அள்ளி தனியாக்கி பின் சேர்த்து ஆடுகிறது. அதன் கைகளில் விளையாடப்படுகையில் நாமெல்லாம் பொன்கழங்குகள்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
