- அசைந்தாடு சீலை ஆலாபனம் – உஸ்தாத் அஞ்சலி
- நடமிடும் விரல்கள்
- துவாரம் மங்கத்தாயாரு
- மன்னார்குடி சாவித்ரி அம்மாள்
- எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்
- நானன்றி யார் வருவார்….
- இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்
- கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்
- உஸ்தாத் பிஸ்மில்லா கான்
- வாழ்நாள் சாதனையாளருடன் நேர்காணல்
- காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
- சீனா குட்டி
- மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு
- இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
- மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்
- பழநி முத்தையா பிள்ளை
- இரு மணிகள்
- மான்பூண்டியா பிள்ளை
- தட்சிணாமூர்த்தி பிள்ளை
- குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு
- விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
- அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை
கர்நாடக சங்கீத உலகை கவனித்து வருபவர்களுக்கு தவில் வித்வான் திருநாகேஸ்வரம் ஆர். சுப்ரமணியம் அவர்களைத் தெரியாமல் இருக்காது.
அவர் பெயரைச் சொன்னதும் மனத்தில் தோன்றும் விஷயங்கள்:
1. தவில் என்றால் சத்தமாகத்தான் வாசித்தாக வேண்டுமென்பதில்லை. காதுக்குக் குளுமையாய் *இன்றும்* வாசிக்க முடியும் என்ற வகை வாசிப்பு.
2. சௌக்கியமான வாசிப்பு என்றால் அதில் கற்பனைக்கு இடமில்லாமல் இருக்கவேண்டுமென்றில்லை. குன்றா கற்பனைக்கு குளுமை ஒரு தடையல்ல என்பதைச் சொல்லும் வாசிப்பு.
3. புதுமைகள் பிறக்க மரபின் வேர்களை அறுக்கத் தேவையில்லை. மரபின் படிகளில் ஏறியே புதிய பரிமாணங்களைப் படைக்கக் கூடும் என்று கட்டியம் கூறும் வாசிப்பு.
4. பெருங்கலைஞன் (ஜீனியஸ்) எனு பெயரெடுக்க வாசிக்கும் முறையில் ஒழுங்கமைதி இல்லாமல் இருத்தல் அவசியம் என்ற மாயத்தோற்றத்தை தகர்க்கும் வாசிப்பு. ஒரு கச்சேரியின் தொடக்கத்தில் வெளிப்படுத்தும் அபிப்ராயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் விஸ்தீரணம் செய்து விஸ்வரூபமாய்க் காட்டும் வாசிப்பு.
5. கேட்பவர் யார்? அவர் பேசும் மொழி என்ன? நம் உறவினரா, மற்றவரா? – இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இடமே கொடுக்காமல் அள்ளிக் கொடுத்து நூற்றுக் கணக்கில் முன்னணி சீடர்களை உலகெங்கும் உருவாக்கி இருக்கும் குருபீடம்.

Name: SUBRAMANIAN T R
Bank: INDIAN BANK
AC.NO: 537130950
IFSC CODE: IDIB000T033
Branch:THIRUNAGESWARAM
இவருக்கு வரும் மே 11-ம் தேதி பரிவாதினி அறக்கட்டளை வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி மகிழ்கிறது. சமீபத்தில் இவர் இளம் மாணவர்களுக்குப் பாடமெடுக்க பெங்களூர் வந்த போது சாவகாசமாய்ச் சந்திக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. வாழ்நாள் சாதனையாளர் விருது பெரும் வேளையில் இந்தச் சந்திப்பு கைகூடியது என் பேறு.
10 ஏப்ரல் 2024
பெங்களூர்

உங்கள் இளமைக் காலத்தி்ல் இருந்து நேர்காணலைத் தொடங்கலாம்.
நான் பிறந்தது ஜனவரி 3, 1950-ம் வருடம். எங்கள் தந்தையார் திருநாகேஸ்வரம் ரத்தினசாமி பிள்ளை. அவர் காலத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்த தவில் வித்வான். இஞ்சிக்குடி பிச்சக்கண்ணு நாயனக்காரர், தருமபுரம் அபிராமசுந்தரம் பிள்ளை முதலான பெரிய பெரிய மேளங்களுக்கு வாசித்துள்ளார். அவருக்கென்று ஒரு தனிப் பெயர் இருந்தது. அதிலும் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போது, அரை ஆவர்த்தனம், கால் ஆவர்த்தனம் அளவில் குறைத்து வாசிக்கும் போது அவர் வாசிப்பதை வாங்கி வாசிக்க முடியாது என்றொரு பெயர் அவருக்கிருந்தது. அவரைத் தொடர்ந்து என் தமையனார் திருநாகேஸ்வரம் கோவிந்தராஜனும் தவில் வாசித்து வந்தார். வண்டிக்காரத்தெரு மணி, மான்பூண்டியா பிள்ளை குழுவிலும், திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை குழுவிலும் அவர் வாசித்து வந்தார்.
அப்படியெனில் சிறு வயது முதலே வீட்டில் யாரேனும் தவில் வாசிப்பதைக் கேட்டு வளரும் சூழல் உங்களுக்கு இருந்திருக்குமில்லையா?
ஆமாம், நினைவு தெரிந்த நாளிலிருந்தே தவிலை எடுத்துத் தட்டிக் கொண்டிருப்பேன். அந்தச் சிறு வயதில் பள்ளிக்குச் சென்ற வந்தபின் ஒரு விளையாட்டு போலவே அமைந்தது. தீவிரமாக அப்பா சொல்லிக் கொடுக்காவிடினும், அவ்வப்போது சில பாடங்கள் சொல்வார். சில சமயங்களில் கோயிலுக்கு வாத்தியத்தை எடுத்துச் சென்று வாசிப்பதும் உண்டு. நான் ஆறாவது படித்த போது ஒருமுறை அப்படித்தான் கோயிலுக்குத் தவிலை எடுத்துச் சென்று வாசித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். என் தந்தையாரைப் பார்க்க தவில் வித்வான் வாணாபுரம் பாலகிருஷ்ணன் பிள்ளை வந்திருந்தார். அவர் அப்போது பழனியில் தண்டாயுதபாணி கோயில் நடத்தி வந்த இசைப் பள்ளியில் தவில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். என்னைப் பார்த்ததும், “அடடே, இவன் தவிலடிக்கிறானா?”, என்று கேட்டார். என் அப்பா அதற்கு, “அவன் அப்படி/இப்படி ஏதோ தட்டுவான்”, என்று சொன்னார்.
அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை; என்னைப் பார்த்து “தம்பி என்னோடு பழனிக்கு வரியா? தவில் வாசிக்க முறையா கத்துக்கலாம்.”, என்றார். நானும் தயங்காமல், “அதற்கென்ன, வந்தாப் போச்சு”, என்றேன். சொன்ன உடனேயே பெட்டியைக் கட்டி அன்று மாலையே ரயிலேற்றி அனுப்பிவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை (சிரிக்கிறார்).
நான் சிறு வயதில் வாசித்ததைப் பார்த்து, இவனுக்கு முறையாகச் சொல்லிக் கொடுத்தால் வரும் என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்கும் என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

பழனியில் கற்ற அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
என் அறுபது வருட அனுபவத்தில் பல பள்ளிகளைப் பார்த்திருக்கிறேன். சொல்லிக் கொடுப்பவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். நானே பலருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் நான் பழனியில் இருந்த சமயத்தில் அந்தப் பள்ளி இயங்கிய வகையிலோ, என் குருநாதர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த வகையிலோ இன்னொரு பள்ளியோ இன்னொரு குருவோ இயங்கிச் சொல்லித் தர முடியாது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு மாணவர்களின் பேரில் அக்கறையாய் நடந்து கொள்வார்கள். அதிலும் என் குருநாதர் என்னைப் பள்ளியில் இருக்கவிடவில்லை. அவருடனேயே அவர் வீட்டில்தான் வைத்துக் கொண்டார். காலையில் அவர் பள்ளிக்குச் செல்லத் தயாரானதும் என்னை எழுப்பிவிட்டுச் செல்வார். அதன்பின் நான் தயாராகிப் பள்ளிக்குச் செல்வேன்.
எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?
மூன்று ஆண்டுகள் இருந்தேன். அதாவது அங்கு பள்ளியில் தவில் படிப்பு என்பது என்பது மூன்று ஆண்டுப் பயிற்சி. என் குருநாதருக்கு என்னை இன்னும் கூட அவருடன் வைத்து நிறையச் சொல்லித் தர வேண்டுமென்று ஆசை இருந்திருக்கும் போல. எனக்கு அந்த வயதில் அது புரியாமல் போனது. மற்ற பிள்ளைகள் மூன்றாண்டுப் படிப்பை முடித்துக் கிளம்பும்போது நானும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்ததும் அவருக்குக் கடும் கோபம். “போ! போ! இனி என் முகத்திலேயே விழிக்காதே.”, என்று திட்டினார். பின்னாளில் ராசியானோம் என்பது வேறு கதை.
என்ன மாதிரி பாடங்கள் சொல்லிக் கொடுத்தார்? நுட்பமான கணக்கு வழக்குகள் எல்லாம் பாடத்தில் இருந்தனவா?
கணக்கு வழக்கெல்லாம் அதிகம் இருக்காது. அடிப்படைத் தாளங்களில் ஆரம்பப் பாடங்கள். அதை ஒழுங்காக வாசிக்கிறோமா என்று சரி பார்ப்பது. நிறைய மாணவர்கள் என்பதால் சில நன்றாக வாசிக்கும் மாணவர்களைச் சட்டாம்பிள்ளையாக வைத்திருப்பார்கள். அவர்களிடம் போய் கற்க வேண்டும். கீர்த்தனைகளை வாசிப்பதற்கு உரிய கதிச் சொற்கள். ராகம் வாசிக்கும் போதும் மற்ற இடங்களிலும் வாசிக்கத் தக்க உருட்டுச் சொற்கள். இவற்றை ஓரளவு சொல்லவே மூன்று வருடங்கள் போதாதே. இந்த அடிப்படைகளை வைத்துக் கொண்டு கேள்வி ஞானத்தாலும், உழைப்பாலும்தான் மற்ற நுட்பங்களைக் கண்டறிய முடியும்.

நீங்கள் வாசித்த முதல் கச்சேரி நினைவில் இருக்கிறதா?
பழனியில் படிக்கும் போது கோயிலில் அதிலும் குறிப்பாக தங்க ரதம் சமயங்களில் எல்லா மாணவர்களுமே போட்டி போட்டுக் கொண்டு வாசிப்போம். அதையெல்லாம் கச்சேரி வாசிப்பில் சேர்த்துக் கொள்ள முடியாது. படிப்பு முடித்து ஊருக்கு வந்ததும் நாகப்பட்டினத்தில் ஒரு பல்லாக்கு வைபவத்தில் கீவளூர் கணேசன் நாகஸ்வரம் வாசித்தார். அவரும் பழனியில் நான் இருந்த போதுதான் நாகஸ்வரம் பயின்றார். அவருக்கு வாசித்ததுதான் முதல் கச்சேரி.
அதன்பின் திருவிடைமருதூர் கணேச பிள்ளையின் குழுவில் வாசிக்க ஆரம்பித்தேன். அவர் திருவாவடுதுறை ஆதீன வித்வானாக இருந்தார். அப்போது மடத்தில் வாசிப்பதற்காக ஏ.கே.சி நடராஜன், குழிக்கரை பிச்சப்பா பிள்ளை போன்ற வித்வான்கள் அவ்வப்போது வருவார்கள். நான் வாசிப்பதைப் பார்த்துவிட்டு ஏ.கே.சி அவர்கள் என்னை கும்பகோணம் தங்கவேலு பிள்ளை மூலம் அழைத்து அவர் குழுவில் சேர்த்துக் கொண்டார். அவருடன் இரண்டு வருடங்கள் வாசித்தேன்.
அதன்பின் சிதம்பரத்தில் கோயில் ஆஸ்தான வித்வானாக இருந்த இராதாகிருஷ்ணன் பிள்ளையிடம் சேர்ந்தேன். எங்கள் ஊரில் திருநாகேஸ்வரம் ராஜகோபால பிள்ளை என்றொரு நாகஸ்வர வித்வான் இருந்தார். அவர் பழனியில் நாகஸ்வர வித்வானாக இருந்தார். அவ்வப்போது இராதாகிருஷ்ணன் பிள்ளைக்கு ஜோடி நாகஸ்வரம் வாசிப்பார். அவர் என்னை வீட்டில் பார்த்துவிட்டு என்னை சிதம்பரத்துக்கு அழைத்துச் சென்றார். ஒரு கச்சேரி நானும் என் தந்தையாரும் அவருக்குச் சேர்ந்து வாசித்தோம். எங்கள் இருவரையுமே அவர் குழுவில் இருக்கச் சொன்னார் இராதாகிருஷ்ணன் பிள்ளை. என் தந்தையார் மறுத்துவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே குழுவில் இருந்தால் அது என் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று அவர் நினைத்தார்.
அப்போது சிதம்பரத்தில் கண்ணப்பா பிள்ளை என்பவரும் ஆச்சாள்புரத்தில் சங்கரன் என்பவரும்தான் தவில் வாசிக்க வருவார்கள். இவர்கள் இருவருடனும் வாசித்த போதுதான் தவில் வாசிப்பு என்றால் என்னவென்று கொஞ்சமாவது தெரிந்து கொண்டேன். எந்த இடத்திற்கு எதை வாசிக்கலாம், எதை வாசிக்கக் கூடாது என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் இவர்கள்தான்.
சிறு வயதில் நீங்கள் பயின்றது, வாசித்தது போக நிறைய கேட்கவும் செய்திருப்பீர்கள் இல்லையா? அப்படி நீங்கள் கேட்டதில் உங்களைக் கவர்ந்த தவில் என்று யார் வாசித்ததைச் சொல்வீர்கள்?
பெரிய வாசிப்பு என்று சொல்லும் வகையில் நிறைய பேர் வாசித்திருக்கிறார்கள். அவற்றுள் என்னைக் கவர்ந்தது என்று ஒருவரின் வாசிப்பைச் சொல்ல வேண்டுமென்றால் அது திருவழுந்தூர் ராமதாஸ் பிள்ளையின் வாசிப்பைச் சொல்வேன். இப்போது கூட அவர் வாசிப்பு என் காதுக்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவர் வாசிப்பில் அப்படி என்னச் சிறப்பு?
எங்கு வாசிக்கிறோம், யாருக்கு வாசிக்கிறோம் என்றெல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் அனாயாசமாக வாசிப்பார்கள். பார்த்தால் சாதாரணமாக வாசிப்பது போல இருக்கும் ஆனால் வாசிப்பு இடி இடித்தாற்போல பாதிப்பை உண்டாக்கும். அவருக்கு அமைந்தது போன்ற கையமைப்பு வேறொருவருக்கு அமைந்து நான் கண்டதில்லை. அவர் வாசித்து விட்டாரென்றால் உடன் வாசிப்பவருக்கு கையைத் தவிலில் வைக்கவே தோன்றாது. அவர் வாசித்து எழுப்பிய சூழலைக் கலைக்க மனம் வராது. பெரிய கணக்கு வழக்குகள் வாசித்து எதிராளியை திக்குமுக்காட வைத்தார் என்றில்லை. சாதாரணமாக வாசித்தாலே அவர் கைகளில் என்னமோ புயல் புறப்பட்டது போலக் சொற்கள் வந்து கொட்டும். அது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வாசிப்பைக் கேட்க வேண்டுமென்று பல ஊர்களிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கும். அவர் தமிழ்நாட்டில் இருந்ததே அபூர்வம்தான். அது போல ஒரு வாசிப்பை நான் இதுவரைக் கேட்கவில்லை.

சிதம்பரத்தில் இராதாகிருஷ்ணன் பிள்ளையின் குழுவில் எத்தனை ஆண்டுகள் இருந்தீர்கள்? அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
இன்று என் வாசிப்பைக் கேட்டு பலர் அது முழுமையான வாசிப்பு என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இன்று ஏதோ ஒரு நிலையில் வந்தடைந்திருக்கிறேனே அதற்கான காரணம் சிதம்பரத்தில் இருந்ததுதான். பொதுவாக இராதாகிருஷ்ணன் பிள்ளைக்கு வாசிக்க எல்லோரும் பயப்படுவார்கள். அவரே நன்றாகத் தவில் வாசிப்பவர்தான். அவர் என்ன வாசிப்பார் என்று அவர் வாசித்தால்தான் தெரியும். இன்றைய காலம் போல, “எனக்கு ஆதி தாளத்தில் தனி விடுங்கள்”, என்று அவரிடம் சென்று கேட்க முடியுமா? (சிரிக்கிறார்).
மற்றவர்கள் என் வாசிப்பைப் பற்றி அப்போதும் சரி, இப்போதும் சரி என்ன வேண்டுமானாலும் பாராட்டிச் சொல்லலாம். அனால் என் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அதன்படி உண்மையை மறைக்காமல் சொல்கிறேன், இராதாகிருஷ்ணன் பிள்ளை வாசிப்புக்கு நான் இருபது வருட காலங்களில் ஒருமுறை கூட கச்சேரி முழுவதும் பொருத்தமாக வாசித்தேன் என்று சொல்ல முடியாது.
அதிலும் பிட்சாடனர் ஊர்வலமாக வரும் தினத்தில் உடற்கூறு வாசிப்பார்கள். நடைவானப்பந்தலுக்கு உற்சவமூர்த்தி மாலை நாலு மணி வாக்கில் வந்ததும் தொடங்கினால் இரவு 10-11 மணி வரை உடக்கூறுதான். தீட்சிதர்கள் எல்லாம் சூழ்ந்து கொண்டு ஓரடி நகரவிடாமல் நாங்கள் வாசிப்பதைக் கேட்பார்கள்.
உடற்கூறு அமைப்பைப் பார்த்தீர்கள் என்றால் ஆரம்பமே மிஸ்ர கதியில்தான். அதில் எடுப்பு ஐந்து தள்ளி. அதில் இரண்டரை மணி நேரம் விஸ்தாரம் செய்துவிட்டு திஸ்ர கதிக்கு மாற்றுவார்கள். கண்ட கதிக்கு மாறும் பொது அவர் மட்டும்தான் வாசிக்க முடியும். யாரும் கூட வாசிக்கவோ தாளம் போடவோ முடியாது. இதற்குத் தாளம்போடவென்றே சிறப்புத் தாளமெல்லாம் வந்து முயன்று பார்த்தார்கள். யாருக்கும் சேரவில்லை. திருவழுந்தூர் ராமதாஸ் பிள்ளைதான் உடற்கூறுக்குப் பொருத்தமாக வாசித்தார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அங்கு வாசித்துக் கேட்கக் கொடுத்துவைக்கவில்லை. ராமதாஸ் பிள்ளை மறைந்த வருடம் சிதம்பரத்துக்கு வந்து வாசிப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாய் திருவிழாவுக்கு முன்னாலேயே அவர் காலமாகிவிட்டார்.
இராதாகிருஷ்ணன் பிள்ளை சிதம்பரத்திலேயே இருக்க விரும்பினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சிதம்பரம் கோயிலிலேயே நிறைய அவருக்கு வாசிக்க வேண்டி இருந்ததால் அப்படியொரு நிலை ஏற்பட்டதோ?
கோயிலில் குறிப்பாக ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம் இரண்டிற்கும் அவர் வாசிப்பு இருந்தாக வேண்டும். மற்றபடி எங்கு வேண்டுமானாலும் சென்று வாசிக்கலாம். ஆனால் அவருக்கு சிதம்பரத்துக்குள்ளேயே வாசிக்கத்தான் விருப்பம். சிதம்பரத்திலும் அவரை மாறி மாறி அழைத்தபடித்தான் இருப்பார்கள்.
அவர் குழுவில் இருந்த போது வேறு நாயனக்காரர்களுடன் நீங்கள் வாசித்ததுண்டா?
” சும்மா இருக்காதே. கூப்பிடுபவர்கள் கச்சேரிக்கெல்லாம் போய் வாசி.”, என்று அவரே சொல்வார். ஆண்டான்கோயில் செல்வரத்னம் பிள்ளை, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, திருவதிகை வேணு பிள்ளை, திருச்சேறை சிவசுப்ரமண்ய பிள்ளை ஆகியோர் கச்சேரிகளுக்கு அவ்வப்போது வாசித்திருக்கிறேன். ஆனாலும், இராதாகிருஷ்ணன் பிள்ளை வாசிப்பைக் கேட்டால் வேறொருவருக்கு வாசிக்கத் தோன்றாது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பாடிய பாட்டில் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ முடியுமா? எவ்வளவு கச்சிதமாக இருக்கிறது? அப்படித்தான் இராதாகிருஷ்ணன் பிள்ளையின் வாசிப்பும் இருக்கும். என் வாழ்க்கையின் பொற்காலம் என்றால் அதுதான். அதற்குப் பிறகு வாசித்த என் வாசிப்பை சாறெடுத்த வெறும் சக்கை என்றுதான் சொல்வேன்.

உங்களுக்கு முன்னால் இருந்த தலைமுறையிலும் பெரிய தவில் மேதைகளிருந்தார்கள். அவர்களுக்காக ஒரு கூட்டம் வந்தது உண்மை. ஆனால் நீங்கள் மேலே வருகிற நேரத்தில் நாகஸ்வர தவில் உலகில் சூழல்கள் கொஞ்சம் மாறத் தொடங்கின. தவில் உலகில் பல நட்சத்திர கலைஞர்கள் தோன்றியதோடு மட்டுமின்றி மேடையிலும், பொதுவாக இசைச் சூழலிலும் தவில் கலைஞர்களின் முக்கியத்துவம் பெரிதும் அதிகரித்தது. நிறைய இடங்களில் முதலில் தவில் கலைஞர்களை கச்சேரிக்கு ஏற்பாடு செய்து அதற்கேற்றவாறு நாகஸ்வரக்காரரை வாசிக்க அழைத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. நீங்கள் இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீங்கள் சொல்வது ஓரளவு சரிதான். ஒரு சில தவில் கலைஞர்களுக்கு நீங்கள் சொல்வது போல நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது உண்மைதான். அதை நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால் என் சுபாவத்துக்கு அந்த அணுகுமுறை ஒத்து வராது.
எனக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று முதலிலேயே ஆண்டவன் சித்தம் முடிவு செய்துவிட்டது என்பதை நான் நிச்சயம் நம்புகிறேன். இன்னொரு கலைஞருக்கு இப்படி நடக்கிறதே எனக்கு ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்கே இடமில்லை. என் சுபாவத்துக்கும், என் வாசிப்புக்கும் இந்த இசை உலகில் ஒரு இடமில்லாமிலில்லை. அது போதும் என்று நினைக்கிறேன்.
இன்று குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் தவில் உலகில் ‘டி.ஆர்.எஸ்’ பாணி என்று பலர் குறிப்பிட்டுச் சொல்லக் கேட்கிறோம். அந்தப் பாணியின் அம்சங்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
அப்படியொன்றும் தனியாக நான் ஒரு பாணியை உருவாக்கியதாகக் கருதவில்லை. சிறு வயதிலும் சரி, இப்போதும் சரி, யாராவது வாசித்ததைக் கேட்டு எனக்குப் பிடித்திருந்தால் அதைப் பாராட்டவோ அதிலிருந்து என் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளவோ எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. அவர் பெயர் தெரிந்த வித்வானாக, எனக்கு மூத்தவராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. என்னைவிட வயதில் மிகச் சிறியவர் ஒருவர், அவர் பெயரே எனக்குத் தெரியவில்லை என்றாலும் அப்படித்தான்.
நான் எதையாவது புதிதாகச் செய்தால் அதை யாரிடமாவது உடனே சொல்லிக் கொடுத்துவிடுவேன். என்னிடம் கற்றவர்கள் இன்று பலர் நல்ல நிலையில் வாசித்து வருகிறார்கள். அவர்கள் வாசிக்கும் போது இதை இன்னாரிடமிருந்து எடுத்துக் கொண்டோம் என்று சொல்லும் போது என் பெயர் அதிகம் வெளியில் தெரிகிறதாக இருக்கும். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் பெரியதாக இல்லை.
உங்களுடன் வாசித்தவர்கள், உங்கள் மாணவர்கள், உங்கள் ரசிகர்கள் எல்லோரும் குறிப்பிட்டுச் சொல்லும் அம்சம் உங்கள் கற்பனை வளம். ஏதோ ஒரு லய அபிப்ராயத்தை எடுத்துக் கொண்டு அதை பல்வேறு வகையில் வந்தது வராமல் வின்யாசம் செய்து விஸ்தரித்து வாசிப்பதில் உங்களுக்கு ஒரு தனி இடமுண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை. இதற்கான உந்துதல் எங்கிருந்து வருகிறது? இதற்கென்று ஏதும் சிறப்புப் பயிற்சி உண்டா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இறைவன் கொடுத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதற்கான காரணம் என்றால் நான் மீண்டும் சிதம்பரத்தில் வாசித்ததைத்தான் சொல்ல வேண்டும். என்னுடைய சந்தோஷமான நாட்கள் என்றால் நான் சிதம்பரத்தில் இருந்தவைதான். தினமும் 7-8 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்றால் வாசித்ததையே வாசித்து இட்டு நிரப்ப முடியாதல்லவா? நான் முன்னர் சொன்னது போல இராதாகிருஷ்ணன் பிள்ளை இன்னதுதான் வாசிப்பார் என்று சொல்ல முடியாது. அவர் பல்லவியை எடுத்து வாசித்தால் ஒருமணி ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் அவர் ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார். நான்கு வீதி சுற்றும் போதும் நாங்கள்தான் வாசித்தாக வேண்டும். அதற்கான எப்படி எப்படியெல்லாம் வாசிக்கலாம் என்று கலந்து பேசிக் கொள்வோம். சமயத்தில் வெளியூர்களில் இருந்து வரும் மேளங்களும் வந்து சேர்ந்து கொள்ளும். அந்தக் காலங்களில் பெரியதாக சன்மானம் எல்லாம் கிடையாது. இருந்தாலும் விடியும் போது மேளத்தை இறக்கினால்தான் அவர்களுக்குத் திருப்தி.
அங்கு யார் இருக்கிறார்கள், யார் கேட்கிறார்கள் என்றெல்லாம் எங்களுக்குப் பொருட்டே இல்லை. எங்களுக்குத் திருப்தியாகும் வரை வாசித்துக் கொண்டே இருப்போம். அதற்கான நேரமும் சூழலும் அப்போது இருந்தது. அன்று வாசித்ததின் பாதிப்புதான் இன்றைய வாசிப்பில் எனக்கு உதவுகிறது என்று சொல்லலாம். என்னை வழிநடத்தியது என் நண்பர்கள்தான்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். பூம்புகாரில் ஒரு கச்சேரி. கண்ட ஜாதி துருவ தாளத்தில் ஒரு திருப்புகழை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார் இராதாகிருஷ்ணன் பிள்ளை. இன்ன தாளம் என்று சொல்லவுமில்லை, போட்டுக் காட்டவுமில்லை. தாளம் போட வந்தவருக்கு சரியாகப் புரியாததால் அவர் தயங்கி நின்று கொண்டிருந்தார். இரண்டு ஆவர்த்தங்கள் போனதும், “ஹும். அவனிடம் கொடு”, என்று தாளத்தை என்னிடம் கொடுக்கச் சொன்னார். நான் வாங்கி தாளத்தைப் போடாமல் அவரைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்தால் தானே போடுவதற்கு? நான் அதற்கு முன்னால் அந்தத் திருப்புகழைக் கேட்டதே இல்லை. கோபத்தில் நன்றாகத் திட்டி, ஆச்சாள்புரம் சங்கரனிடம் கொடுக்கச் சொன்னார். சங்கரன் அந்தக் குழுவிலேயே தாளம் போட்டு பின்னர் தவில் வாசிக்க வந்தவர். அவருக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். அவர் சுளுவாகப் போட்டுக் காட்டிவிட்டார். எனக்கு ஒரே கோபம். இன்றோடு இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று முடுவெடுத்துவிட்டேன். பிறகு கண்ணப்பா பிள்ளையும், சங்கரனும் எனக்கு நல்ல வார்த்தை கூறி என்னை இருக்க வைத்தனர். அவர்களுடைய சரியான யோசனை எனக்குக் கிடைக்காமல் போயிருந்தால் இழப்பு எனக்குத்தானே?

நீங்கள் வாசித்ததலிருந்து மடைமாற்றி நீங்கள் சொல்லிக் கொடுத்ததைப் பற்றிச் சொல்லுங்கள். இன்றளவில் உலகெங்கும் உள்ள தவில் கலைஞர்களில் மிக நன்றாக வாசிப்பவர்களை எடுத்துக் கொண்டாலே பலநூற்றுக் கணக்கானவர்கள் உங்கள் மாணவர்கள்தான். இந்தப்பயணம் எப்படித் தொடங்கியது?
எனக்குத் திருமணம் ஆவதற்கு முன்னராகவே சிட்சைக்கு மாணவர்கள் வந்துவிட்டார்கள். என் முதல் மாணவன் ஓசூர் வெங்கடேசன். அவனுக்கும் எனக்கும் ஒரே வயதுதான். திருநாகேஸ்வரம் வந்து என்னுடனேயே இருந்தான். அப்போதெல்லாம் கச்சேரிக்குப் போனால் கூட ஆள் வைத்துக் கொள்ளவெல்லாம் முடியாது. வெளியூருக்குச் சென்றால் என்றைக்கு வருவேன், எத்தனை மணிக்கு இரயில் ஊருக்கு வரும் என்றெல்லாம் எனக்கே தெரியாது. ஆனால் நான் எப்போது வந்தாலும் என்னை வரவேற்க அன்று இரயிலடியில் வெங்கடேசன் இருப்பான். அவனுக்கு நான் வருவது எப்படித் தெரிந்தது என்பது இன்றுவரை எனக்குப் புரியாத புதிர்.
கர்நாடக மாநிலைத்தில் தவில் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால் அவனிடம் சிட்சை கற்றுக் கொண்டவர்கள் அளவிற்குக் வேறொருவரிடம் யாரும் கற்றுக் கொண்டதில்லை. அவனிடம் கற்பவர்களுள் ஓரளவு தேர்ச்சி பெற்றவர்களை என்னிடம் அனுப்பி வைப்பான். இப்படித்தான் ஒரு ஆசிரியனாக என் பெயர் பரவத் தொடங்கியது.
உங்களிடம் கற்றவர்களிடம் பேசும் போது, உங்கள் வீட்டிலேயே எப்போதும் ஒரு மாணவர் கூட்டம் தங்கி, உங்கள் வீட்டிலேயே உண்டு தவில் கற்பார்கள் என்பது தெரிய வருகிறது? இது எப்படிச் சாத்தியமானது?
இது எப்படி சாத்தியமானது என்று என் மனைவியைத்தான் (கஸ்தூரி அம்மாள்) கேட்க வெண்டும். (சிரிக்கிறார்). இத்தனை பேருக்கு எப்படி அலுக்காமல் சமைத்துப் போட்டார் என்று அவர்தான் சொல்ல முடியும். அவர் கொஞ்சம் முகம் சுளித்திருந்தாலும் இது சாத்தியப்பட்டிருக்காது.
வாசிப்பது ஒரு புறம், சொல்லித் தருவது இன்னொரு புறம் – இரண்டையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
வாசிக்கும் போது வருவது, மனத்தில் தோன்றுவதை வாசித்துவிடலாம். சொல்லித் தருவது அப்படியல்ல. நான் இப்படிப் பட்ட மாணவர்களுக்குத்தான் சொல்லித் தருவேன் என்று வைத்துக் கொள்வதில்லை. யார் கேட்டாலும் சொல்லித் தரத் தயார்தான். அதனால் வருகிறவர்கள் தேவை புரிந்து, அவர்களுக்கு என்ன வரும்/வராது என்று உணர்ந்து சொல்லித் தர வேண்டும். அதில் என் மூளைக்கு நிறைய வேலை உண்டு. கச்சேரியில் வாசிப்பதை விட சொல்லித் தருவதில் என் அறிவு அதிகம் வளர்கிறது என்று நினைக்கிறேன்.
இன்று தவில் கற்கும் மாணவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் அவர்களிடம் கேட்பது ஒன்றைத்தான். நான் எப்படி அவர்களிடம் எந்தத் தடையுமின்றி சொல்லிக் கொடுக்க எப்போதும் தயாராக இருக்கிறேனோ, அதே போல, அவர்களும் தம் சிஷ்யர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.
ஓரளவு தேர்ந்த மாணவர்களுக்கு நீங்கள் சொல்வது சரி. இளைஞர்களுக்கு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?
ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவை என்பது கட்டிக் கொடுத்த சோறு மாதிரி என்று சொல்வார்கள். அது கொஞ்ச நாட்களுக்குத்தான் உதவும். என்ன வாசிக்கிறோம் என்பதை நன்றாகப் புரிந்து வாசிப்பவர்கள் தானே தன் தேவைக்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ளலாம்.
உதாரணமாக. நம் பெரியவர்கள் நன்கு யோசித்து அடிப்படை பாடங்களில் 32 கண்டம், 32 மிஸ்ரம், 32 சங்கீர்ணம் என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். 32 என்ற எண்ணைக் குறிப்பாகத் தேர்ந்துடுத்து அதில் சில அடிப்படைகளை அமைத்திருக்கிறார்கள். இது ஏன் வந்தது? இந்த அடிப்படையை எப்படி எந்தத் தாளத்துக்கும் வாசிக்கும்படி உபயோகிக்கலாம் என்று தெரிந்தால் வாசிப்பில் தடையில்லாமல் வாசிக்கலாம்.
புரிதல் இருக்கும் போது யார் என்ன வாசித்தாலும் அதை உடனே திரும்பி வாசிக்கக் கூடிய ஆற்றல் கைகூடும். பாடங்களை வாசிப்பதோடு அதன் சூட்சுமங்களை மனதளவில் புரிந்து கொள்ளுதல் முக்கியம். அதைக் கைவரும் வரை நன்றாகச் சாதகம் செய்ய வேண்டும். எனக்குப் புரிந்துவிட்டது கச்சேரியில் பார்த்துக் கொள்கிறேன் என்றால் அது சரிவராது. வீட்டில் வாசிப்பதில் பத்தில் ஒரு பங்கு கூட கச்சேரியில் எடுபடாது.
அறுபது வருடங்களுக்கு மேலாக வாசித்து வருகிறீர்கள், உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?
என் வாழ்க்கையில் நான் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்துவிட்டேன். எத்தனையோ விதமான சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் கடந்து கொண்டிருக்கிறேன். இவை எல்லாவற்றுக்குமிடையில் வாசிப்பதையோ, லய விஷயமாய் புதிய கற்பனைகளை தயாரிப்பதையோ எந்தக் காலத்திலும் நிறுத்தவில்லை என்கிற ஒரு விஷயம்தான் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது என் கண்ணில் படுகிறது. எந்த இடரும் என்னை இசையிடமிருந்து பிரிக்கவில்லை என்பது எனக்குக் கிடைத்த கொடை.

நண்பர்களே,
பரிவாதினி வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை (விழாத் தேதி மே மாதம் 11-ம் நாள்).
இசைக் கலைஞர்களின் வாழ்க்கை கைத்தட்டல்களாலும், பொன்னாடைகளாலும் சூழ்ந்திருந்தாலும் பொருளாதாரப் பின்புலத்தில் நோக்கும் போது எண்ணற்ற ஊசலாட்டங்களை அடக்கியது. மிகத் தேர்ந்த கலைஞருக்குக் கூட தொழிலின் உச்சம் என்பது 20-25 ஆண்டுகளுக்குத்தான். காலச் சுழற்சியில் உச்சாணியில் இருந்தவர்கள் இடம்பெயர்ந்து அதிகம் வெளிச்சம் விழாத இடத்தில் நிழல்தட்டிப் போவது நிதர்சனம். முதுமையும், முதுமையிலும் கற்ற கலையைக் கொண்டு பொருள் ஈட்ட வேண்டிய நிர்பந்தமும் உள்ள கலைஞர்கள் ஏராளம். கலைஞனின் வாழ்க்கையில் இந்தப் பக்கங்களை விஸ்தரித்து எழுதுவது நாராசம்.
இதை மனத்தில் கொண்டு உங்களுக்கொரு விண்ணப்பத்தை வைக்கிறேன். வாழ்நாள் சாதனையாளரைக் கொண்டாடுவதை புகழுரைகள், பட்டுப் பொன்னாடைகள், பலத்த கரகோஷங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், கலைஞனின் எஞ்சிய வாழ்நாளை சுமைகளுள் சிக்கி அமிழ்ந்து போகாமல் இருக்க நம்மால் ஆனதைச் செய்ய உங்களை அழைக்கிறேன்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd4uV7Kd1UFr5lo2yl_uE2ZtM0hi2BByEHiH3eWXv2tblGVxA/viewform
மேலுள்ள படிவத்தில், வரும் 11-ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியின் விவரங்கள் உள்ளன. அன்று நடக்க உள்ள விருதளிப்பு விழாவையோ, அதன் பின் நடக்கவுள்ள முன்னணி கலைஞர்கள் வாசிக்கும் கச்சேரியையோ நேரில் அனுபவிக்க நுழைவுச் சீட்டு விற்றுக் கட்டணம் வசூலிக்க எந்த எண்ணமும் இல்லை. இந்த விழாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மகாவித்வான் டி.ஆர்.சுப்ரமணியத்தை கௌரவிக்க நீங்களும் பங்கெடுக்க விரும்பினால் அந்தப் படிவத்திலேயே அவர் வங்கிக் கணக்குக்கான QR Code உள்ளது. உங்களால் இயன்ற, உங்களுக்குச் சரியான கௌரவம் என்று தோன்றும் ஒரு தொகையைச் செலுத்தி அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். அதற்கான நன்றியாய் விழாவுக்கான நுழைவுச் சீட்டு உங்களுக்கு பரிவாதினியின் சார்பிலிருந்து வந்து சேரும்.
இதைச் சொல்வதால் 11-ம் தேதி அரங்கு வாசலில் நாங்கள் நுழைவுச் சீட்டைப் பரிசோதித்து உங்களை அரங்குக்குள் அனுமதிக்கப் போகிறோம் என்றில்லை. இதுவொரு நன்றி நவிலல் மட்டுமே.
தேர் கிளம்ப நேரம் குறித்தாகிவிட்டது. இனி ஊர்கூட வேண்டும்.
அன்புடன்
லலிதாராம்
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
