ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி… 

This entry is part 1 of 2 in the series ஆத்தோரம் மணலெடுத்து

Economic Limits 47 (2023) 1081-1086.

Sand and Future of Society
Nikhil Narendran
Rukmani Krishna Technical College
Chennai, India

1. முன்னுரை

அருகிவரும் இயற்கை வளங்கள் என்றால் பெட்ரோலியம், நிலக்கரி, தாமிரம் மற்றும் விளைநிலங்களின் மேல் மண் – இவை தான் நம் நினைவுக்கு வரும். மணலை நாம் நினைக்கக்கூட மாட்டோம். காரணம், பூமியின் மேற்பரப்பில் மிக அதிகமான தனிமம் ஆக்ஸிஜன், அதற்கு அடுத்தபடியாக சிலிகான். இரண்டும் சேர்ந்த சிலிகான் டைஆக்ஸைட் உருவாக்கிய மலைகள் மற்றும் கருங்கற்கள், காற்று மழை வெப்பநிலை மாற்றம் போன்ற இயற்கை சக்திகளால் பொடியாகி ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்டு நதி ஓரங்களில், ஆற்றுப்படுகைகளில், கடற்கரைகளில் மணலாகச் சேர்ந்திருக்கின்றன. நீருக்கு அடுத்தபடியாக நாம் மிக அதிகமாகப் பயன்படுத்தும் இயற்கைப் பொருள். 

வசிக்கவும் வர்த்தகத்துக்கும் தேவையான  கட்டுமானம் மணலின் பிரதான உபயோகம். அணைக்கட்டுகளும், சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களில் உருவாக்கிய செயற்கை நிலங்களும் அதில் அடங்கும். கண்ணாடி, சூரியத் தகடுகள், மின்தகவலுக்குத் தேவையான சில்கள் – இவற்றுக்கு அதிசுத்தமான மணல் தேவை. கண்ணுக்கு எட்டிய வரை பாலைவனங்களில் மணல் இருந்தாலும் அதன் உருண்டையான துகள்களால் அதற்கு உபயோகம் இல்லை.  

நவீன கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், பாதுகாப்புச்சுவர்களின் பெரும்பகுதி கான்க்ரீட். அதில் நாற்பது சதத்திற்கும் மேல் மணல். உப்பு, மண், தாவரப் பொருட்கள் போன்ற கசடுகள் இல்லாமல் அது ஒரே சீராக இருப்பது அவசியம். அப்படிப்பட்ட மணல் ஆற்றுப்படுகைகள், ஏரிக்கரைகள், மற்றும் கடலோரங்களில் கிடைக்கிறது. 

றிவியல் பாடங்களில் ஆர்வம் காட்டிய நிகிலின் மனதை மாற்றுவதற்கு அவன் தாத்தா,  

“எங்க காலத்தில பி.எஸ்ஸி. கிடைக்காட்டா பி.காம். எடுத்துப்போம். இப்போ பி.காம். தான் உசத்தி” என்று சொல்லிப் பார்த்தார். அப்படித்தான் கல்லூரியில் வணிகயியல் அவர் தலையில் விழுந்தது. அதன் வழியாக வங்கியில் நல்ல வேலை கிடைத்து, சில பதவி உயர்வுகளைத் தாண்டியதும் அது கடவுளின் அனுக்கிரகமாக மாறியது. 

முதலில், பத்தாம் வகுப்பு முடித்ததும் சொன்னார்.  

“எனக்கு சயன்ஸ் தான் பிடிச்சிருக்கு, தாத்தா!” 

அவர் விருப்பத்தை அவருடைய சொந்தப்பிள்ளை நிறைவேற்றினான். வர்த்த நிர்வாகத்தில் பட்டங்கள் சேர்த்து மருந்துக் கம்பெனிகளில் முதலீடு செய்த ‘ஓளஷத் ஃபன்டி’ன் பிரதான ஆலோசகர். மருமகள் ஷோபா அவனுக்கு ஒரு படி மேல். அவர்களுடைய நிதி மட்டத்துக்கு சமமாகப் பேரனையும் உயர்த்த ஆசைப்பட்டார். 

தாத்தா தான் அவனுக்கு அப்பா. அவன் டிஎன்ஏயில் பாதி பங்கைக் கொடுத்து, நிகில் என்ற பெயரையும் வைத்தவர் அவனுடைய முதல் பிறந்தநாளுக்கு முன்பே சாலை விபத்துகளில் இறந்தவர்கள் கணக்கில் சேர்ந்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் அம்மா மீளவில்லை. அவள் மன ஆறுதலுக்கு பரதநாட்டியப் பள்ளி. வீட்டின் தரைத்தளத்தில் இருந்து வரும் சலங்கையோசைக்கு நிகில் பழகிவிட்டான். தேர்வுகளுக்குத் தயார்செய்யும்போது கூட அது இடையூறாக இருந்தது இல்லை. 

நிகிலைத் தாத்தா கின்டர்கார்டனில் சேர்த்து, ஐந்தாம் வகுப்பு வரை சைக்கிளில் அழைத்துப்போனார். பிறகு, அவனாகவே சைக்கிளில் போய்வந்தபோது அதைப் பழுது இல்லாமல் பார்த்துக்கொண்டார். இராமாயணம் மகாபாரதம் கதைகளைச் சொன்னார். மனக்கணக்குக் கொடுத்து தொலைக்காட்சியில் மனம் போகாமல் பார்த்துக்கொண்டார். பாடப்புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட்டுக் கொடுத்தார். காகிதம் பேனா பென்சில்கள் வாங்கிவைத்து அவன் கேட்டபோதெல்லாம் கொடுத்தார். தேர்வு நாட்களை நினைவூட்டினார். நிகில் பங்கெடுத்த எல்லா பள்ளிக்கூட வைபவங்களிலும் முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டினார். அவனும் பள்ளிக்கூடத்தில் நடந்ததை ஒன்றுவிடாமல் தாத்தாவிடம் சொல்வான்.  

“இன்னிக்கி கம்ப்யூட்டர்ல எப்படி எழுதறதுன்னு கத்துண்டோம்.” 

ஒன்றாம் வகுப்பிலேயா? 

“சரி, நீ கத்துண்டப்புறம் எனக்கு சொல்லிக்கொடு!”  

நிஜ அப்பாவுக்கும் அவருக்கும் ஒரு வித்தியாசம். 

அறிவுரை தருவதுடன் சில சமயங்களில் அவர் அவனுக்கு சம வயது நண்பர். ஸ்க்ராபில், கேரம் போர்ட் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆடுவார்கள். க்ராஸ்-வேர்ட் புதிர்களை இருவரும் சேர்ந்து செய்வார்கள்.  

ள்ளிக்கூட வாழ்க்கையின் முடிவில், 

“ப்ளஸ்-டூல சயன்ஸ் எடுத்துண்டா என்னடா, நீ வாங்கின மார்க்குக்கு இப்ப கூட பி.காம்.ல சேரலாம். நான் ஏற்பாடு பண்ணறேன்.”   

அவர் வயது நண்பர்கள், ‘நிகில் காலேஜ்ல என்ன படிக்கப்போறான்?’ என்று தாத்தாவைக் கேட்கும்போது…   

“என் பேரனுக்கு பி.பி.ஏ. கிடைச்சுது. அவன் தான் அது வேண்டாம்னு பி.எஸ்ஸி. எடுத்துண்டான்னு சொல்லிடேன்” என்றான் நிகில்.    

“சரி, கம்ப்யுட்டர் சயன்ஸ், இல்ல ஃபிசிக்ஸ் மேஜர்னு சொல்லலாம்னு பார்த்தா, அதுவும் போச்சு.”  

“ருக்மணி க்ருஷ்ணா டெக்னிகல் காலேஜ்ல ப்ளான்ட் பயாலஜி – ப்ளான்ட் டெக்னாலஜி.”  

“காலேஜ் பெயரை மட்டும் சொல்லி சமாளிக்கிறேன்.” 

ரண்டு ஆண்டுகள். 

தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் என்ன நடக்கிறது என்று கவலைப்படாத சிலரில் அந்த இருவர். 

நிகில் கல்லூரி பஸ்ஸில் ருக்மணி க்ருஷ்ணா போய்வந்தான். எட்டு மணிக்கு முன்பே பிரதான தெருவில் காத்திருக்க வேண்டும். திரும்பிவர ஐந்து மணிக்குமேல். 

தாத்தா தன் கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார். 

“எனக்கு ட்ரெய்ன்ல பதினைந்து நிமிஷம்தான். ஒன்பதே காலுக்கு ஏறினா ஒன்பதரைக்கு காலேஜ் வாசல். இரண்டரைக்கு ரயிலைப் பிடிச்சா மூணு மணிக்கு வீடு. வந்ததும் அம்மாவின் சூடான காப்பி.” 

“அந்த நேரத்தில நீ அரட்டை அடிச்சிருப்பே. நான் ஒண்ணேகால் மணியும் பாடம் படிக்கிறேன்.”  

அந்தப் பாடங்கள்: தாவரங்களின் பலதரப்பட்ட இனங்கள், செல் பயாலஜி, கொஞ்சம் ஆங்கிலம், தமிழ், வேதியியல். அவற்றின் தேர்வுகளிலும் ஆய்வுக்கூட பரிசோதனைகளிலும் நிகில் நன்றாகச் செய்வான் என்பதில் தாத்தாவுக்கு சந்தேகம் இல்லை. அதனால் அவை சம்பந்தப்பட்ட பேச்சை எடுக்க மாட்டார். 

அறிவியல் பாடம் பற்றி தாத்தாவுக்கு ஒன்றும் தெரியாது. கல்லூரியில் படித்த தமிழும் கிட்டத்தட்ட மறந்துவிட்டது. ஆங்கிலம் மட்டுமே இருவருக்கும் பொது. 

“எங்க காலத்தில இரண்டு ஷேக்ஸ்பியர். எனக்கு ட்வெல்ஃப்த் நைட், ஹாம்லெட். சிரமப்பட்டாலும் ரசிக்கலாம். பாரடைஸ் லாஸ்ட்ல ஒரு முழு புக். ஆயிரம் வரி போயிண்டே இருக்கும். எதுக்காக என்னன்னு ஒண்ணும் புரியாது.” 

“அதனால தான் உனக்கு பொறுமை வந்திருக்கு.” 

“எனக்கு இருந்த பொறுமையில பாதி அதில போயிடுத்து. இவ்வளவும் படிச்சு ஒரு வாக்கியம் இலக்கண சுத்தமா எழுதத் தெரியாது. இப்பல்லாம் அந்த தப்பைப் பண்ணறதில்ல. உபயோகப்படற மாதிரி மாடர்ன் இங்க்லிஷ். உன் பாடங்களைப் பார்த்தேன். தாகூரோட ‘போஸ்ட் மாஸ்டர்’ நல்ல செலக்ஷன்.” 

“எனக்கும் அந்தக் கதை பிடிச்சிருக்கு”. 

“அத்துடன் இன்னும் இரண்டு தாகூரின் கதைகளைச் சேர்த்து சத்யஜித் ரே ‘தீன் கன்யா’ படம் தயாரிச்சார். நன்னா இருக்குமாம்”. 

“இந்த சனிக்கிழமை நாம அதைப் பார்க்கலாம்” . 

சென்னை வாழ்க்கை பற்றி அவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் அவர் ரசித்தபிறகே கல்லூரி மாணவர் வலைத்தளத்தில் நுழையும். 

தாத்தாவுக்கும் பேரனுக்கும் அவர்கள் கல்லூரி வாழ்க்கை விவரங்களில் இன்னொரு வித்தியாசம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து படித்த கல்லூரிகள் இரண்டிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மின்சார ரயிலில் கல்லூரிக்குப் பயணித்த சமயங்களில் மட்டுமே கையில் புத்தகங்களைச் சுமந்த இளம் பெண்களின் தரிசனம். அடிக்கடி கண்ணில்பட்ட எந்தப் பெண்ணையும் பார்த்து அவர் சிரிப்பு காட்டவில்லை. அவருடைய கம்பீரமான உடற்கட்டிலும், பட்டை மீசையிலும் மயங்கி ஒருத்தி புன்னகை வீசவில்லை. வங்கியில் வேலை செய்யத் தொடங்கியபோது அவர் அதிருஷ்டம் பெண் சக-ஊழியர்கள் அனைவரும் திருமணம் ஆனவர்கள். வாடிக்கையாக வரும் இளம் பெண்களிடம் சிரித்துப் பேச சாமர்த்தியம் போதாது. அவர் துணிந்து செய்த ஒரே காரியம், கல்யாணம் நிச்சயம் ஆனதும் எதிர்கால மனைவிக்கு எழுதிய காதல் கடிதம். ‘அது காதலும் இல்ல, கடிதமும் இல்ல’ என்று பாட்டி கேலிசெய்வது வழக்கம். 

அவருடைய பெண்ணின் காதல் திருமணத்தை மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டார். மகனுக்கு ஜாதகப் பொருத்தமும், இருவருக்கும் யு.எஸ். சார்ந்த நிறுவனங்களில் வேலை, டாலர் கணக்கில் சம்பளம் என்கிற ஒற்றுமையும் பார்த்துக் கல்யாணம். அவருக்கு அதில் ஏமாற்றம். பேரனாவது கதைகளில் வருவது போல் காதலில் ஏங்கி, அவளுக்கும் என்மேல் ஆசை இருக்கிறதா என்ற நிச்சயமின்மையில் தவித்து, கடைசியில் மனம் ஒன்றி… நிச்சயம் அப்படி நடக்கும். அப்பாவைப்போல மெல்லிய உடல், அவசரம் காட்டாத முகம். சாதாரண பேச்சின் நடுவில் கூட சிந்திக்க வைக்கும் வாக்கியங்கள். யாரையும் அலட்சியம் செய்யாத பெருந்தன்மை. எந்தப் பெண்ணையும் மயக்கும்.   

பள்ளிக்கூடத்தில் சீருடை. கல்லூரிக்கு அது கிடையாது. மற்றபடி, கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் எங்கோ ஓடிப்போகும் மனம், காரணம் இல்லாமல் பரவசம் காட்டும் முகம், வீடு தண்ணீரில் மூழ்கியதால் (மழை கொட்டி வீட்டின் தரைத்தளத்தில் நுழைந்திருக்கிறது) வந்த சோகம், படிப்பில் கவனம் சிதறல் – போன்ற காதல் அடையாளங்கள் அவன் நடத்தையில் அவருக்குத் தென்படவில்லை. எதற்கும் ஒரு காலம் ஒரு நேரம். 

Louis Chacallis (*1943)
Bouilloné III, ca 1981

ன் காலத்தில கல்யாணத்துக்கு அப்புறம் தான் தேன் நிலவு போவோம்” என்றாள் அம்மா. 

“என் காலத்தில அது கூடக் கிடையாது” என்றாள் பாட்டி. “ஆனா கல்யாணம் நாலு நாள் நடக்கும்.”  

“என் காலத்தில அது இரண்டாக் குறைஞ்சிது.” அதைத் தொடர்ந்து, “இப்ப அதுவே அவசியமான்னு தோணறது” என அம்மா முனகினாள்.  

“ம்ம்… காலம் மாறிண்டிருக்கு.” எதற்கும் ஒத்துப்போவது பாட்டியின் குணம். 

மணிமொழி தேசிய உயிரியல் மையத்தில் (நேஷனல் சென்ட்டர் ஃபார் பயலாஜிகல் சயன்சஸ், பெங்களூரு) பிஎச்.டி. முடித்து அடுத்த கட்டத்தில் கால்வைப்பதைக் கொண்டாட சுனில் செய்த ஏற்பாடு. பாண்டிச்சேரியில் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு கடற்கரை இல்லத்தில் ஒரு வாரம், இருவர் மட்டும். அதைச் சொன்னதும் ஆரம்பித்தது அந்த உரையாடல். 

அவள் குடும்பத்தினருக்கு சுனில் மாப்பிள்ளையாக வருவதில் ஆட்சேபம் இராது. அவன் பெங்களூரு ஐஐஎம்மில் உயர்மட்டப் பட்டம் வாங்கி ‘சிங்கப்பூர் நேஷனல் பல்கலை’யில் பதவி ஏற்கப் போகிறான். அவள் ‘பாம் ஆயில் சப்போர்ட் கௌன்ஸிலி’ன் ஆலோசக ஆராய்ச்சிப் பிரிவில் சீனியர் சயன்டிஸ்ட். ஒருசில மாதங்களில் அங்கே போவதற்குமுன் ஒரு சம்பிரதாயத் திருமணம் இருபது மணி நீளத்தில்.   

“ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிண்டு பாண்டிச்சேரி போங்கோளேன்! சுனிலின் அம்மாவும் நானும் கையெழுத்து போடறோம்” என அம்மா சமரசமாகச் சொன்னாள்.  

“சுனில் சிங்கப்பூர் போயிருக்கான். அடுத்த வாரம் அவன் திரும்பிவந்ததும் அதைக் கேட்கறேன்.” 

அந்த பதிலில் கொஞ்சம் சமாதானம் அடைந்து மனம் இலேசானதும், 

“எனக்குக் கல்யாணம் நடந்து முப்பது வருஷம். அதுக்கு முப்பது வருஷம் முன்னாடி பாட்டி கல்யாணம். அந்தந்தக் காலத்தில நடந்ததை ஒப்பிட்டுப் பார்த்தால்…” என ஆரம்பித்தாள்.  

“பள்ளிக்கூடம் முடிச்சு ஃபைனல் மார்க் வர்றதுக்கு முன்னாடியே என் கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து” என்றாள் பாட்டி 

“நான் பி.எஸ்ஸி. மாத்  பட்டம் வாங்கி காலேஜ்ல ட்யுட்டரா இருந்தேன். இருபத்தியாறாவது பிறந்தநாள் வர்றதுக்கு முன்னாடியே மணிமொழிக்குக் கல்யாணம் ஆகப்போறது. அதுவே இந்தக் காலத்துக்கு சீக்கிரம்.” 

“மாமியார் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை இட்லிக்கு அரைக்கறது. ஒரு படி அரிசி, அரைப்படி உளுத்தம் பருப்பு. வாரத்துக்கு இரண்டு தடவையாயவது. துகையலுக்கும் சட்னிக்கும் அம்மி.” 

“எனக்கு ஆட்டுக்கல்லும் அம்மியும் ஞாபகம் இருக்கு.” 

“நீ வந்தப்பவே இங்கே வெட் க்ரைன்டர், மிக்ஸி, காஸ் அடுப்பு.” 

“நான் டைப்பிங்ல லோயர் ஹையர் இரண்டும் பாஸ் பண்ணினேன்.” 

“எனக்கு இங்க் போட்ட பேனாவும், எண்பது பக்க நோட்டும்.”  

“நான் காலேஜ்ல படிச்சப்பதான் கால்குலேட்டர் வந்தது, அதுவே பெரிய அதிசயம்.” 

“மாட்டை ஓட்டிண்டு வந்து வீட்டு வாசலிலே பால் கறப்பான். இப்ப பாக்கெட்.” 

“சில விஷயங்கள் போனதில சந்தோஷம்” என்று திருப்திப்பட்டாள் அம்மா.  

“இரண்டு ரொம்ப முக்கியம். கையால இழுக்கற ரிக்ஷா. விதவைகளின் தலை மொட்டை.” 

“ரேஷன்ல கல்லு மண்ணு கலந்த அரிசி. வெளி மார்க்கெட்ல அதிக விலைக்கு நெல்லூர் அரிசி. பசுமைப்புரட்சினால தடங்கல் இல்லாம அரிசி கிடைக்க ஆரம்பிச்சுது.” 

“கறுப்பு-வெள்ளைத் திரைப்படங்கள், ஸ்டூடியோக்குப் போய்த்தான் ஃபோட்டோ எடுத்துக்கணும். அதிலும் வர்ணம் கிடையாது.” 

அது பாட்டியின் காலம்.

“இப்போ செல்லிலேயே படம் பிடிக்கலாம்” என்றாள் மணிமொழி. 

சில மணி நேர வானொலிக்குப் பதில் எந்நேரமும் எந்த ரசனைக்கும் தொலைக்காட்சி போல எல்லாமே முன்னேற்றத்தின் அடையாளங்கள்.  

“அப்போ இருந்து இப்ப காணாமல் போன நல்ல விஷயங்கள்…”  

“கல்யாணத்துக்கு அப்புறம் தேன்நிலவு.” அம்மா இன்னும் அதை விடவில்லை.  

“நான் தான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறதா சொல்லிட்டேனே.” 

“பாட்டி காலத்தில நடந்தே சென்னையில பாதி தூரம் போயிடலாம். வேலைக்கு நான் தினம் பஸ்ல போயிட்டு வருவேன். இப்போ தெருவில கால் வைக்க முடியல. அவ்வளவு கார்கள். கிண்டிக்குத் தெற்கே பல இடங்களில் பசுமை தெரியும். இப்போ செங்கல்பட்டு வரைக்கும் திறந்த வெளியே இல்ல.” 

ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு பாட்டி,  

“செங்கல்பட்டுக்கும் காஞ்சிபுரத்துக்கும் நடுவில மலையான்குளம் சின்ன கிராமம். நான் பிறந்தபோது அது இருந்ததுக்கும் முப்பது என்ன முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்ததுக்கும் அதிக வித்தியாசம் இருந்திருக்காது. நவாப் ஆண்டாலும் பாளையக்கார் ஆண்டாலும் கிராமத்தில அதே கூரை வேய்ந்த காரை வீடுகள், சுண்ணாம்பு அடித்த சுவர்கள், சுற்றி வயலில் விளைந்த அரிசி, பருப்புகள். கத்திரிக்காய் வெண்டைக்காய் கொல்லையிலே பரிச்சுக்கலாம். அப்பளத்துக்கு பிரண்டை வேலியில் இருக்கும். மற்ற காய் பழங்கள் தூரத்திலேர்ந்து வரும். இருட்டினப்புறம் எண்ணெய் திரியில விளக்கு. அந்த வெளிச்சத்தில சந்தியாவந்தனம் பண்ணலாம், சாப்பிடலாம், அவ்வளவுதான். பகலிலேயே எல்லா காரியமும் முடிச்சுடணும்.”

பாட்டியின் கல்வி பள்ளிக்கூடத்திலே நின்றாலும் புத்தகங்கள் படித்து வளர்த்துக்கொண்ட அறிவுக்குப் பரந்த எல்லைகள். 

“வண்டி கட்டிண்டு காஞ்சிபுரம் போறதே அப்போ பெரிய பிரயாணம். இப்போ சிங்கப்பூர் அடுத்த ஊர் மாதிரி.” 

“அதிக மாறுதலே இல்லாத வாழ்க்கை போரடிச்சிருக்கும்” என்றாள் அம்மா. 

மணிமொழிக்கு உயிரினத்தொகுதிகளின் அமைப்புக்கு ஓரளவு நிலையான சூழல் அவசியம் என்பது ஞாபகத்துக்கு வந்தது. 

“ஆனா, அப்படி இருந்ததினால ஒரு காலத்துக்கும் அடுத்த காலத்துக்கும் தொடர்ச்சி இருந்தது” என்றாள் அவள். 

“அந்தத் தொடர்ச்சிக்கு பெரிய மாறுதல்கள் இல்லாத பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், பேசும் வார்த்தைகள் முக்கிய காரணம். அப்போ, பாட்டிகள் பேத்திகளுக்கு நிறைய சொல்லிக்கொடுக்கலாம். மங்கிலிப் பெண்டுகளுக்கு எத்தனை பேரை அழைக்கிறது, எ த்தனை விதமா கோலம் போடறது, எப்படி புடவையை உயரக்கொடியில உலர்த்தறது, வெயில் வீணாப்போகாம ஊறுகாய் வத்தல் போடறது…”  

“சாம்பலிலும் தேங்காய் நாரிலும் பாத்திரம் தேய்க்கறது, சாணி கலந்து தரையை மெழுகறது. நல்ல வேளை! நான் அப்போ பிறக்கல” என்று அம்மா திருப்திப்பட்டாள்.  

பாட்டிக்குத் தெரிந்த வித்தைகளில் எது இப்போது மணிமொழிக்கு உதவும்? இட்டிலிக்கும் தோசைக்கும் அரிசி-உளுத்தம்பருப்பு விகிதம், சங்கீதம், சுலோகம்? 

“பாட்டி! நான் தாத்தா கிட்டேர்ந்து நிறைய கத்துண்டேனே” என்றாள்.  

மணிமொழியின் தாத்தா மாநிலக்கல்லூரியில் தாவரயியல் பேராசிரியர். பல ஆண்டுகள் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தியதுடன் பல பதிப்புகளைப் பார்த்த ‘எ டெக்ஸ்ட்-புக் ஆஃப் பாடனி’ எழுதியவர். ‘சிவகாமியின் சபதம்’ போன்ற தடியான அப்புத்தகத்தை முதன்முறை கையில் எடுத்தபோது அவளுக்கு பிரமிப்பு. அவள் தந்தை அதைப் பிரித்துப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகம். பி.ஏ. ஆங்கிலம் அவர் கல்வியின் எல்லை. ஓரளவு ஆங்கில அறிவு வந்ததுமே மணிமொழி அதன் படங்களை அழகு பார்த்து அவற்றின் விளக்கங்களைப் படிக்கத் தொடங்கினாள். 

“அவர் இருந்தா நீ பாடனில டாக்டர் பட்டம் வாங்கினதுக்கு சந்தோஷப்பட்டிருப்பார்” என்ற பாட்டியின் குறையுடன் உரையாடல் முடிந்தது.  

அம்மாவும் பாட்டியும் வீட்டுவேலைகளைக் கவனிக்கப் போன பிறகும் அவர்கள் பேச்சின் சாரம் மணிமொழியை விட்டு அகலவில்லை. ஆண்டுகள் பின்னுக்குப் போவதற்கு பதில் முன்னால் பாய்ந்தன.  

இன்னொரு முப்பது வருஷம். அவளுக்கு ஐம்பத்தியாறு வயது. அம்மாவிட சில ஆண்டுகள் அதிகம். உலகம் எப்படி இருக்கும்? 

உலக மக்கள் தொகை ஒன்றரை மடங்கு. கோடியைத் தாண்டிய நகரங்கள் இன்னும் பல. சுனிலைக் கேட்டால் இந்திய பொருளாதாரம் இரண்டு தடவை இரட்டித்திருக்கும் என்பான்.  

மூளையில் எங்கோ ஒரு பொறி. ஏதோ வேலை. அதற்குக் கணிசமான சம்பளம். சுனிலுடன் சிங்கப்பூரில் அதிநவீன கோபுரக் குடியிருப்பில் தனி வாழ்க்கை. அதற்கு மேல் எதிர்காலத்தை அவள் அதுவரை யோசிக்கவில்லை. பிஎச்.டி. முடிக்கும் வேலைகளின் பரபரப்பில் யோசிக்க நேரமும் கிடைக்கவில்லை. 

வலையில் பாம் ஆயில் கௌன்ஸில் பற்றி ஒரு தேடல். 

முதலில் கௌன்ஸிலின் ஆராய்ச்சிப் பிரிவு வெளியிட்ட கட்டுரை: இயற்கையைப் பாதுகாத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரித்த சாதனை. 

கூர்ந்து வாசித்தபோது அது விஞ்ஞான அறிக்கையாகத் தோன்றவில்லை. பாமர மக்களைக் கவர்ந்து அரசியல்வாதிகளைத் திருப்தி செய்யும் விளம்பரம்.  

தேடலில் அடுத்ததாக பேராசிரியர் கோரி ப்ராட்ஷா. முந்தைய ஆண்டு அவர் என்.ஸி.பி.எஸ்.ஸில், ‘என் மகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் வழங்கிய உரை நினைவுக்கு வந்தது. அறிவியல் ஆராய்ச்சி அடுத்த தலைமுறையின் நோக்கில் திட்டமிட வேண்டும் என்பது உரையின் சாரம். கேட்டபோது அது புதுமையாகப் பட்டு பிறகு மறந்துவிட்டது. பாட்டி, மணிமொழி, பேத்தி என்ற சங்கிலியின் இணைப்பில் அதன் முக்கியத்துவம் முன்னுக்கு வந்தது.

இன்னும் சில உயிரியலாளர்களுடன் அவர் எழுதிய திறந்த கடிதத்தைத் திறந்தாள். அதன் தலைப்புப் படத்தில் காடுகளை எரித்ததால் எழுந்த புகை மூடிய சிங்கப்பூர் கடற்கரை. பின்னணியில் இலேசாகத் தெரிந்த மூன்று கோபுர விடுதிகள்.

பாம் ஆயில் சப்போர்ட் கௌன்ஸில் நிர்வாகம்: 

நேர்நெறியில் பாம் எண்ணெய் தயாரிப்பதற்கு ஆதரவு தரும் உங்கள் குறிக்கோள் பாராட்டுக்கு உரியது. சமுதாய மற்றும் சூழலியல் நலன்களுக்கு முக்கியத்தும் தருவதும் வரவேற்கத் தக்கது. 

வெப்பமண்டலக் காடுகள் எண்ணற்ற உயிரினங்களின் வாழ்விடம். அத்துடன், மழைநீரை சேமித்து கார்பன் தரையில் தங்கிநிற்க அவை உதவுகின்றன. தட்பவெப்ப நிலையில் அசாதாரண மாற்றங்கள் நிகழும் இக்காலத்தில் அழிவு போக மிச்சம் இருக்கும் காடுகளைக் காப்பது அவசியம் ஆகிறது. கடற்கரை ஓரங்களில் விரவி இருக்கும் கரி கலந்த மண் மேல் வளர்ந்த காடுகளை எரிக்கும்போது பூமியைச் சூடாக்கும் வாயுக்கள் இன்னும் அதிகமாக வெளிப்படுகின்றன. 

உடல்நலத்திற்காக பாம் எண்ணெயைக் குறைவாக உண்பது நல்லது என நினைக்கிறோம். 

காற்றில் கார்பன் டைஆக்ஸைட் அதிகரிக்காமல் உயிரினங்களின் மறைவுக்கு வழிவகுக்காமல் எண்ணெய் உற்பத்தியை சாதிக்க கௌன்ஸில் குறிக்கோள்களில் இன்னும் இரண்டையும் சேர்த்துக்கொள்வது நல்லது.  

1. பாம் மரங்களை வளர்க்க கரி மண் காடுகளை அழிப்பது உடனே நிறுத்தப்பட வேண்டும். 

2. ஆஃப்ரிகா, தென் அமெரிக்கா மழைக் காடுகளை பாம் தோட்டங்களாக மாற்றும் திட்டங்களையும் கைவிட வேண்டும்.  

இதற்கு உதவும் வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். 

அதை மறுதலித்து கௌன்ஸின் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, இந்தியா போன்ற நாடுகளில் வசதி குறைவான மக்களின் தேவைக்கு சமையல் எண்ணெய் வழங்கும் தொழிலை எதிர்க்கும் வெளிநாட்டு விஞ்ஞானிகளின் அறிவுரை தேவையற்ற குறுக்கீடு. நட்டெல்லா, வறுவல் வகைகள், இனிப்புகள், ஐஸ்க்ரீம் போன்ற எண்ணற்ற உணவுகளில் மட்டுமின்றி உதட்டுச்சாயம், ஷாம்பு போன்ற தினம் உபயோகிக்கும் எத்தனையோ நவீனப் பொருட்களிலும் பாம் எண்ணெய் கலந்திருக்கிறது. அதன் தயாரிப்பை படிப்படியாகக் குறைப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. பாம் எண்ணெய் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதும் நிரூபிக்கப்படவில்லை.

ப்ராட்ஷா குழுவின் அறிவுரைகளைப் பின்பற்றினால், பல வளர்ந்துவரும் நாடுகளில் மரங்கள் வளர்க்கும் சுதந்திர விவசாயிகள் பண்ணைகளைப் பறிகொடுப்பார்கள், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இழந்து தவிப்பார்கள், அது தான் அவர்கள் விருப்பமா? 

மகளின் எதிர்காலத்துக்காக வாதாடிய ப்ராட்ஷா, ஒரு பக்கம். முப்பது ஆண்டுகளில் அருகி வரும் உயிரினங்களுக்கும் ஆதிக்குடிகளுக்கும் இருப்பிடமான காடுகளை முற்றிலும் அழிப்பதை ஆதரிக்கும் கௌன்ஸில் இன்னொரு பக்கம். அதற்கு ஆதரவாக மதிப்பு மிக்க மையத்தில் அவள் சம்பாதித்த பிஎச்.டி. பட்டம். மனப்போராட்டத்தில்…  

ரு வாரம் போனதும், 

“சுனிலுக்கு சம்மதமா?” 

“பாண்டிச்சேரிக்கு போறது கான்சல் ஆயிடுத்து” என்று மணிமொழி துளி வருத்தத்துடன் சொன்னாள்.  

“ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்காட்ட கூட பரவாயில்லடி. சந்தோஷமாப் போயிட்டு வா!”  

அம்மாவுக்குக் குற்ற உணர்வு. மணிமொழி கேட்டு அவன் மறுத்ததால் வந்த மனத்தாங்கலில் திருமணம் தட்டிப்போகக் கூடாதே என்கிற பயம். சுனில் போல இன்னொருவனை அவள் தேடிப்பிடிக்க இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ? 

“அதனால இல்லம்மா.”  

“வேற என்ன காரணம்?”  

“எங்க கடிகாரம் வேற வேற நேரம் காட்டறது.”  

“அவன் சிங்கப்பூர் நேரத்துக்கு உன் கடிகாரத்தைத் திருப்பி வச்சுட்டா போறது.”  

“நேரம் வருஷக் கணக்கில.”  

“புரியும்படி சொல்லேன்!”  

“பாட்டி காலம் மாதிரி. அரிசி, உளுத்தம் பருப்பை ஆட்டுக்கல்லில் அரைத்து செய்த இட்லியை வெங்காய சாம்பாரில் தோய்த்து சாப்பிட எனக்கு ஆசை. எங்க பேத்தி காலத்தில பாக்டீரியா தயாரிச்ச ப்ரோட்டீன்ல சோள மாவைக் கலந்து, பாம் ஆயில் ஊற்றி, நிறைய சர்க்கரை சேர்த்து, வைட்டமின்கள் தூவி, பிளாஸ்டிக்கில சுத்தி சாப்பாடு வருமாம். அதை எப்படி மார்க்கெட் பண்ணறதுன்னு இப்பவே சுனில் யோசிச்சிண்டு இருக்கான்.”  

“காலத்தை நிறுத்தக் கூட நம்மால முடியாது. பாட்டி காலத்துக்குத் திரும்பிப் போறது நடக்கற காரியமா?” 

“நடத்தி வைக்க முடியுமான்னு தெரிஞ்சுக்க டெல்லியில இருக்கும் ‘சஸ்டெய்னப்ல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யுட்டு’க்கு போகலாம்னு இருக்கேன்.”  

அவர்கள் உரையாடலில் கலந்துகொள்ளாமல் பாட்டி புன்னகையுடன் அதை ரசித்தாள்.  

(வளரும்)

Series Navigationஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.