பழநி முத்தையா பிள்ளை

புதுக்கோட்டை லய பரம்பரையை உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்கள் வரிசையில் முத்தையாப் பிள்ளைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. புதுக்கோட்டை வழியில் வந்தவர் என்ற போதும் இவர் பிறந்தது பழநியில். மிடற்றிசை பிரபலமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இசையை பராமரித்தும் வளர்த்தும் வந்தவர்கள், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களாக விளங்கிய இசை வேளாளர்கள்தான். அந்தப் பரம்பரையில் பெரியசெல்வன் என்பவரின் மூத்த மகனாக 1868-ல் முத்தையா பிள்ளை பிறந்தார்.

பரம்பரை கலையான தவில் வாசிப்பை கற்றதோடு இளம் வயதில் பழநி (கடம்) கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டும் கற்றார் என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார். இள வயதில் வாத்தியத்தில் நல்ல தேர்ச்சியை அடைந்த போதும், அந்தத் துறையில் நிபுணராக வேண்டி புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் மேற்கொண்டார். மான்பூண்டியா பிள்ளை கஞ்சிராவில் பெயர் பெற்றிருந்தார் என்ற போதும், அவருடைய குருநாதர் மாரியப்பத் தவில்காரரே, ஓரளவு தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்கொண்டு பயில மான்பூண்டியா பிள்ளையிடம் அனுப்பி வைப்பாராம்.

பழநி முத்தையா பிள்ளைவுடன் மான்மூண்டியா பிள்ளை
மான்மூண்டியா பிள்ளையுடன் பழநி முத்தையா பிள்ளை

மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. “எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்”, என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.

முத்தையா பிள்ளையின் குருகுலவாசத்தின் போது ஒரு நாள் புதுக்கோட்டையில் மதுரை பொன்னுசாமி நாயனக்காரரின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அவருக்கு வழக்கமாய் வாசிக்கும் தவில்காரர் திடீரென்று வர முடியாமல் போனது. உடன் வாசிக்க ஆளில்லாமல் தவித்த போது முத்தையா பிள்ளையை போட்டுக் கொள்ளும்படி மான்பூண்டியா பிள்ளை சிபாரிசு செய்தார். ஓர் இளைஞர் தனக்கு ஈடுகொடுத்து வாசிக்க முடியுமா என்று முதலில் பொன்னுசாமி பிள்ளை தயங்கினாலும் அந்த யோசனைக்கு இசைந்தார். அன்று கச்சேரியில் முத்தையா பிள்ளையின் வாசிப்பைக் கேட்டதும், பொன்னுசாமி பிள்ளை பெரிதும் மகிழ்ந்து வாயாறப் பாராட்டினார். அதன் பின் பல கச்சேரிகளில் சேர்த்துக் கொண்டார்.

சிதம்பரம் வைத்தியநாத பிள்ளைக்கு என்றொரு நாகஸ்வர வித்வான் இருந்தார். அவரைப் பற்றி எழுதும் போது, “பல்லவிச் சுரங்கம் என்று போற்றிக் குறிப்பிடப்பட்டவர் இவர். இவருடைய பல்லவிகள், அமைப்பில் சிறியவையானாலும லய நுட்பம் மிகுந்தவை. வைத்தியநாத பிள்ளையின் மேளம் என்றால் பல்லவி இல்லாமலிருக்காது. அதிலே அடுக்கடுக்காக இடம் பெறும் கணக்கு வழக்குகளைச் சமாளிப்பதில், தவிற்கலைஞர்கள் சிரமப்படுவதைக் கண்டுகளிக்கவும் கூட்டம் வருவது சகஜம். இவரது பல்லவிகளின் அமைப்பு புரியும்படிதான் இருக்கும். ஆனால், அதை வாசிக்க முற்படுகையில், அவர் அமைத்துக் கொள்ளும் காலப்ரமாணம் மற்றவர்களுக்கு நிர்ணயப்படாமல், அப்பல்லவி சரியாக அமையாமல் போய்விடும்.”, என்கிறார் பி.எம்.சுந்தரம். “அந்தக் காலத்தில் பல்லவிகள் பல சமயம் கைக்கலப்பில் முடிந்து விடுவதுண்டு. வைத்தியநாத பிள்ளையின் கச்சேரிகள் போலீஸ் பந்தோபஸ்துடன் கூட நடந்திருக்கின்றன. அப்படிப் பட்டவருக்கு வாசிக்கத் தோதான் ஆள் என்றே முத்தையா பிள்ளையை அழைத்து வந்தனர்.”, என்று தா.சங்கரன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். மாயூரத்தில் வைத்தியநாத பிள்ளை மூன்று காலங்களில் வாசித்த மல்லாரியைப் பற்றியும், அன்று அவருக்கு தவில் வாசித்தவர் முத்தையா பிள்ளை என்றும் பி.எம்.சுந்தரத்தின் ‘மங்கல இசை மன்னர்கள்’ நூலிலிருந்து தெரிய வருகிறது.

அன்றைய நாட்களில் பல்லவிகள் என்றால் அவை போட்டிகள்தான் என்பதை உணர்த்த பல குறிப்புகள் கிடைக்கின்றன. ஒருவர் வாசித்ததை மற்றவர் வாசிக்க முடியாவிட்டால், இனி அந்த வாத்யத்தை தொடுவதில்லை என்று சபதம் மேற்கொள்வது சாதாரணமாய் இருந்திருக்கிறது. ஒரு திருமண ஊர்வலத்தில் உறையூர் கோபால்ஸ்வாமி பிள்ளை நாகஸ்வரத்துக்கு முத்தையா பிள்ளை தவில் வாசித்தார். பாதி ஊர்வலம் நடக்கும் போது இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டு, “இனி தவிலை வாசிப்பதில்லை”, என்றொரு சபதத்தை முத்தையா பிள்ளை எடுத்தார்.

தட்சிணாமூர்த்தி பிள்ளை கடத்தைத் துறந்து மிருதங்கமும் கஞ்சிராவும் வாசித்தது போலவே முத்தையா பிள்ளையும் இவ்விரு வாத்தியங்களிலும் நிறைய கச்சேரிகள் செய்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிராவுடன் சேர்ந்து கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், காரைக்குடி வீணை சகோதரர்கள், பலல்டம் சஞ்சீவ ராவ் போன்ற முன்னணி வித்வான்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார் முத்தையா பிள்ளை.

நாயினாப் பிள்ளை, தன் மனதிற்குகந்த மிருதங்கக் கலைஞரான முத்தையா பிள்ளையையே பிற்காலத்தில் சம்பந்தி ஆக்கிக் கொண்டார். அவரது மகள் நீலாயதாக்ஷியை முத்தையா பிள்ளையின் மூத்த மகனான நாகேஸ்வரனுக்கு அளித்தார். முத்தையா பிள்ளையின் இரண்டாவது மகனே முழவிசையின் உயரங்களைத் தொட்ட பழநி சுப்ரமணிய பிள்ளை. பிற்காலத்தில் பழநியுடன் சேர்ந்து பல கச்சேரிகளில் முத்தையா பிள்ளை கஞ்சிரா வாசித்துள்ளார்.

முத்தையா பிள்ளைக்கு இரு மனைவியர். முதல் மனைவி சென்னிமலையைச் சேர்ந்த உண்ணாமுலையம்மாள். இவருக்குப் பிறந்தவர்கள்தான் நாகேஸ்வரனும், சுப்ரமணியமும். மற்றொரு மனைவி அஞ்சுகத்தமாள். இவர்தான் முதன் முதலில் ‘ராகம் தானம் பல்லவி’ பாடிய பெண்மணி என்கிறார் இசையாய்வாளர் பி.எம்.சுந்தரம். இவருக்குப் பிறந்த சௌந்திரபாண்டியனையே தன் வாரிசாகக் கருதினார் முத்தையா பிள்ளை.

முத்தையா பிள்ளையின் லய குறிப்புகள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதிவாகியிகியிருந்ததாகத் தெரிய வருகிறது. “அந்தப் புத்தகம் அவரது பிரிய மகன் சௌந்திரபாண்டியனுடன் இருந்தது. இதைப் பெற பழநி சுப்ரமணிய பிள்ளை எத்தனையோ முறை முயன்றும் பயனற்றுப் போனது.”, என்கிறார் பழநியின் சீடர் கே.எஸ்.காளிதாஸ். 1973-ல் சௌந்திரபாண்டியன் மியூசிக் அகாடெமியில் இந்த நோட்டுப் புத்தகத்தைப் பற்றி பேசியுள்ளார் என்று அகாடமியின் ஜர்னல் தெரிவிக்கிறது. திண்ணியம் வெங்கடராம ஐயர், “இந்த நோட்டுப் புத்தகத்தை பதிப்பிக்க வேண்டும்”, என்று சொல்லி இருப்பதைத் தவிர வேறொரு குறிப்பும் அந்த நிகழ்வைப் பற்றி கிடைக்கவில்லை.

பல வருடங்கள் தன் குருநாதருக்குத் துணையாக இருந்து வந்த முத்தையா பிள்ளையின் கடைசி ஆசை அநேகமாய் மான்பூண்டியா பிள்ளைக்கு சமாதி கோயில் எழுப்புவதாகத்தான் இருந்திருக்க வேண்டும். பழநி சுப்ரமணிய பிள்ளையின் பெரும் முயற்சியால் இந்தக் கோயில் 1945-ல் எழுப்பப்பட்டது. குடமுழுக்கை முன் நின்று நடத்திய முத்தையா பிள்ளை அதே ஆண்டே மறைந்தார்.