- அசைந்தாடு சீலை ஆலாபனம் – உஸ்தாத் அஞ்சலி
- நடமிடும் விரல்கள்
- துவாரம் மங்கத்தாயாரு
- மன்னார்குடி சாவித்ரி அம்மாள்
- எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்
- நானன்றி யார் வருவார்….
- இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்
- கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்
- உஸ்தாத் பிஸ்மில்லா கான்
- வாழ்நாள் சாதனையாளருடன் நேர்காணல்
- காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
- சீனா குட்டி
- மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு
- இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
- மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்
- பழநி முத்தையா பிள்ளை
- இரு மணிகள்
- மான்பூண்டியா பிள்ளை
- தட்சிணாமூர்த்தி பிள்ளை
- குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு
- விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
- அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை
இசையில் ஒரு வாத்தியத்தில் மட்டுமே தன்னை அர்ப்பணிக்கும் கலைஞர்கள் மீது எப்போதும் எனக்கு பெருமதிப்பு உண்டு , இசையின் ஆழத்தை, அதன் தனித்துவத்தையும் அவர்கள் மூலமே நாம் காணமுடிகிறது. அவர்களின் பங்களிப்பு ஓரிரு செயல்பாடுகளை மட்டுமே கொண்டதாக இல்லாமல், அது மனிதனின் உணர்வுகளையும், எண்ணங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் முழுமையாக பிரதிபலிக்கின்ற கலையாகவே அமையும்.
செல்லோ கலைஞர் “யோ யோ மா” சொன்னதை நினைவுகூறுகிறேன் “The sound of the cello tells us something about ourselves, and I try to give it a voice that resonates with the human spirit.”
தனி வாத்தியத்தில் மட்டுமே தங்களை அர்ப்பணிப்பவர்கள், அந்தக் கருவியில் புதுமையான ஆழத்தை அடைந்து, இசையை உச்சத்தில் கொண்டு செல்வதற்கான திறனைக் கொண்டவர்கள். மேலும் நுணுக்கமாக பார்த்தால், ஒவ்வொரு வாத்தியக் கருவியிலும் பல்வேறு சங்கீத பரிமாணங்கள் மறைந்திருக்கின்றன. எந்த வாத்திய கருவியிலும் இன்னும் முழுமையாக மீட்டபடாத இசை, அறியாத இசைப் பரிமாணங்கள் உள்ளது, அதைப் புதியதாக உருவாக்கும் திறன் இருக்கின்றது. பிறவிக் கலைஞர்கள் அந்தக் கருவியுடன் இணைந்து அதில் புதுவித இசையை உருவாக்குகிறார்கள், அது வேறு யாராலும் அடைய முடியாத வகையில் தனிப்பட்டதாக இருக்கும். அந்தக் கருவி அவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறது. பலப் பிறவிகள் அதை கேட்டு கேட்டு தவமிருந்து, இப்பிறவியில் அளிக்கப்பட்டிருக்கிறது. பிறவிக் கலைஞர்கள் அந்த கருவியுடன் சேர்ந்திருக்கும் போது, அது ஒருவகையான ஆன்மிகத்தை உருவாக்கி, அந்தக் கருவி அவரையேத் தேர்ந்தெடுத்தது போன்றதாகவே நமக்கு தெரியும். அந்தக் கருவிக்கு அக்கலைஞர் ஒரு கருவி, அவர் மூலமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. அவர்களது ஆன்மாவை இசையில் மட்டுமே இருப்பதை நாம் உணரலாம். இந்த அனுபவம் பலப் பிறவிகளின் பயணமாகக் தோன்றுகிறது. இந்தியா இதுபோன்ற கலைஞர்களை நாம் வாழும் போதே உருவாகியுள்ளது. பண்டிட் ஷிவ்குமார் சர்மா, மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ஷெனாய் உஸ்தாத் பிஸ்மில்லா கான், தபேலா அல்லாஹ் ரக்கா, புல்லாங்குழல் ராகேஷ் சௌராசியா என்று தலைமுறை தாண்டி நிற்பவர்கள்.
ஜாஹீர் ஹுசைன் பிறந்த நேரத்தில், அவரின் தந்தை அல்லா ரக்கா இதய நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரின் அம்மா தன்னுடைய துரதிஷ்டமான குழந்தையின் பிறப்பு தான் காரணம் என்று எண்ணினார். அவர் இசையமைத்த பேவாஃபா படத்தில் நடித்த அசோக் குமார், ராஜ் கபூர், நர்கீஸ் போன்ற பாலிவுட்டின் நட்சத்திரங்கள் வந்து அல்லா ரக்காவை இறுதியாக பார்க்கவந்தனர். ஜாஹீர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டபோது அவரின் அம்மா தாய்ப்பால் கொடுக்கவில்லை. அவர் துரதிர்ஷ்டசாலி என்று அம்மா உண்மையில் நம்பினாள், புனித ஹஸ்ரத் மக்தூம் அலி ஷாவின் சன்னதியின் அருகில் வசித்த குடும்பத்தின் நெருங்கிய தோழி ஒருவர் தான் ஜாஹிரை கவனித்துக்கொண்டார்.
ஜாஹிர் பிறந்த உடனேயே கியானி பாபா என்ற புனிதர் அவர்கள் வீட்டு வாசலில் தோன்றியதாகச் சொல்வதுண்டு. அவர் ஜாஹிரின் அம்மாவை பாவி பேகம் என்ற பெயரால் அழைத்தார். அவளுடைய பெயர் அவருக்கு எப்படித் தெரிந்தது என்று யாருக்கும் தெரியவில்லை, ஆனால் எப்படியோ அவருக்குத் தெரிந்தது. ஜாஹிரின் அம்மா அவரைச் சந்திக்க வெளியே சென்றார், கியானி பாபா அவளைப் பார்த்து, ‘உனக்கு ஒரு மகன் இருக்கிறான். அடுத்த நான்கு ஆண்டுகள் அவனுக்கு மிகவும் ஆபத்தானவை, எனவே அவனை நன்றாகப் பார்த்துக்கொள் அவன் உன் கணவனைக் காப்பாற்றுவான்’ என்றார்,
”குழந்தைக்கு ஜாகிர் உசேன் என்று பெயரிடுங்கள்.”
ஹுசைன் என்பது அவரின் குடும்பப் பெயர் அல்ல. ஆனால் கியானி பாபாவின் சொல்லிற்கிணங்க ஜாகிர் ஹுசைன் என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்; நபிகள் நாயகத்தின் பேரனான ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் ஃபக்கீராக மாற வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரு ஃபக்கீரின் கடமைகளில் ஒன்று முஹர்ரம் காலத்தில் ஏழு வீடுகளுக்குச் சென்று பிச்சை கேட்பது. இதன் நோக்கம் பணிவைக் கற்றுக்கொள்வது. பின்னர் ஃபக்கீர் தன்னை விட ஏழைகளுக்கு எதைப் பெற்றாலும் கொடுக்க வேண்டும். எனவே, ஒரு குழந்தையாக, முஹர்ரம் காலத்தில், அவரின் அம்மா ஜாஹிருக்கு ஒரு பச்சை குர்தாவை அணிவிப்பார், எடுத்துச் செல்ல ஒரு ஜோலாவைக் கொடுப்பார், வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்ப்பார் .
ஜாகீர் பிற்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த அனைத்து ஆண்டுகளிலும் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தார். அவர் அமெரிக்காவுக்குச் சென்றபோது, பல வருடங்கள், அம்மா ஜாஹீரின் இடத்தில் இந்த தவத்தைத் தொடர்ந்தார். கியானி பாபா ஒரு முஸ்லீமா அல்லது இந்துவா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதில் உள்ள விசித்திரமான விடயம் என்னவென்றால் கியானி பாபா யார் என்பதே அவருக்கு தெரியாது. பிந்தைய ஆண்டுகளில், அவரை பற்றிய குறிப்புக்கள் எல்லாம் அவர் ஒரு மறைஞானி, அவரே தனது சொந்த உணவை சமைத்து, அதைத் தன்னுடன் எடுத்துச் செல்வார், கியானி பாபா மற்றொருவர் கையால் செய்யப்பட்ட உணவை சாப்பிட விரும்புவதில்லை என்பதை ஜாஹிர் ஹுசைன் ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்லியிருந்தார். இசைக் குடும்பத்தில் பிறந்ததும் அவருக்கு சிறுவயதிலேயே தன்னுடைய கலாச்சாரம் சார்ந்தும் வலுவான பின்னணி அமைந்தது.

அக்காலகட்டத்தில் பல இசைக்கலைஞர்கள் ஷியா இஸ்லாத்தைப் பின்பற்றினர். முஹர்ரம் நாளில், தன் தந்தையுடன் படே குலாம் அலி கான்சாஹிப்பின் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஹஸ்ரத் இமாம் ஹுசைனை நினைவுகூறும் ஒரு கூட்டம், அங்கு பல இசைக்கலைஞர்கள் இருந்தனர் ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி , பின்னர் அவர்கள் ஒரு கவிதையை வாசிப்பார்கள், பின்பு ஒரு பான்-டான் (அலங்கார வெள்ளி பான் பெட்டி) சுற்றி அனுப்பப்படும். பான்-டான் ஒரு வாத்தியக் கலைஞருக்கோ அல்லது ஒரு பாடகரின் முன் வைக்கப்பட்டவுடன், அவர் ஒரு ‘நாட்’ பாடுவார். இந்த பக்திப் பாடல்களில் சில வசனங்கள் மட்டுமே இருந்தன, மேலும் பாடகர்கள் தங்கள் விருப்பப்படி நாதங்களை மெல்லிசையாக அலங்கரிப்பதால், ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுமார் இருபது நிமிடங்கள் நீடிக்கும், பின்னர் பான்-டான் அடுத்த நபருக்கும் அடுத்தவருக்கும் நகரும்.
இந்த வலுவான இசை அடித்தளம் உஸ்தாத் ஜாகிர் உசேனின் தபேலா நுட்பத்திற்குப் பேராதாரமாக அமைந்தது. உலகின் மிக திறமையான மற்றும் பல்துறை திறன்களை கொண்ட தபேலா கலைஞர்களில் ஒருவராக அவர் பரவலாக அறியப்பட்டார். பாரம்பரிய ஞானத்தை தனித்துவமான புதுமைகளுடன் இணைத்து புதிய உச்சங்களுக்கு எடுத்துச் சென்றவர். தபேலாவின் பல பரிமாணங்களில் அவரது திறமை வெளிப்படுகிறது, அதாவது தாள நுட்பங்கள், கை ஒருங்கிணைப்பு, மற்றும் வாத்தியத்தின் தொனி கட்டுப்பாடு போன்றவை.
தபேலா இரண்டு முக்கிய வாத்தியங்களைக் கொண்டுள்ளது: தயான் (உயர் சுருதி கொண்ட சிறிய வாத்தியம்) மற்றும் பயான் (நுண்ணிய சுருதி கொண்ட பெரிய வாத்தியம்). தபேலாவின் வெவ்வேறு பகுதிகளை இயக்குவதன் மூலம் ஒவ்வொரு கையும் பல்வேறு ஒலிகளை உருவாக்குகின்றன. ஜாகிரின் வலது கை நுட்பம், தயானை அடிக்கும் துல்லியத்துடன் மிளிர்கிறது. அவரது கை தளர்வாகவும் ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டுடனும் இருக்கிறது, விரல்கள் சற்று வளைந்து செயல்படுகின்றன. ஆள்காட்டி மற்றும் நடுவிரல்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறார் , சில அடிகளுக்கு மோதிர விரல் மற்றும் சுட்டுவிரல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இடது கை பெரும்பாலும் ஆழமான, ஒத்ததிர்வு ஒலிகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
ஜாகிரின் வலுவான இடது கை நுட்பம் அவருடைய வாசிப்பின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது, சிறிய அழுத்தம் மூலம் ஸ்ருதியை மாற்றுவதால் நுணுக்கமான தொனி மாறுபாடுகளை அவரால் உருவாக்க முடிகிறது. ஜாகிரின் வலது கை அசைகளில் தா, தின், நா, மற்றும் தின் போன்ற பல்வேறு சிக்கலான சேர்க்கைகள் இடம்பெற்றுள்ளன. தா (லேசான அசைகள்), நா (கூர்மையான அசைகள்), மற்றும் தின் (கனமான அசைகள்) ஆகியவற்றில் அவரது தேர்ச்சியே அவரின் பாண்டித்துவம் என்று சொல்லலாம்.
ஜாகிரின் தனித்துவமான பங்களிப்புகளில் ஒன்று, லயகாரி அல்லது தாள மாறுபாடுகளை ஒரு தாளத்தின் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கும் அவரது திறன் ஆகும். லயகாரி என்பது தாளத்தை நீட்டிக்கவும் சுருக்கவும் செய்து, கேட்பவர்களின் நேர உணர்வுக்கு சவால் விளைவிக்கும் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் பாணியாகும்.
ஜாகிர் பெரும்பாலும் ஒற்றைப்படை மற்றும் ஒத்திசைக்கப்பட்ட வடிவங்களில் தாள சொற்றொடர்களை வாசிக்கின்றார். இது ராகத்தின் கட்டமைப்பைச் சீராக பின்பற்றிக் கொண்டே வழக்கமான எதிர்பார்ப்புகளை சவாலாக மாறச் செய்கிறது. இந்த திறமை அவருக்கு மிக அதிநவீன தாள புதுமைகளைச் செய்ய அனுமதிக்கிறது. ஜாகிரின் தாளங்களின் பரந்த அறிவு, அவற்றை புதுமையான முறைகளில் ஆராய அவரை அனுமதிக்கிறது. தீந்தால் மற்றும் ஏக்தால் போன்ற பாரம்பரிய 16-பீட் தாளங்களிலிருந்து ஜாப்தால் (10 பீட்கள்) மற்றும் ரூபக் (7 பீட்கள்) போன்ற குறுகிய அல்லது நீண்ட தாளங்கள் வரை, அவர் வெவ்வேறு கால சுழற்சிகளுக்கு இடையே எளிதாக மாற முடியும்.
ஜாகிர் ஹுசைன், குறிப்பாக ஜுகல்பந்தி என்ற இசை வடிவத்தில் தனது திறமைகளுக்காக அறியப்படுகிறார், இதில் இரு இசைக்கலைஞர்கள் தன்னிச்சையான இசையில் ஈடுபடுகின்றனர். அவரது நுட்பம் அவரது சகக் கலைஞர்களின் இசைக்கு அழகான ஒத்திசையை உருவாக்க உதவுகிறது. பெரும்பாலும், இந்தக் கூட்டத்தில் சித்தார் வாசிப்பாளர் பண்டிட் ரவி ஷங்கர் அல்லது புல்லாங்குழல் கலைஞர் ஹரிப்ரசாத் சௌராசியா இடம்பெறுவர், அவர்களின் இசைக்குரல் ஜாகிரின் தபேலாவுடன் இயல்பாக கலந்து ஒலிக்கிறது. அவர் சிக்கலான திஹாயி (மூன்று முறை மீண்டும் மீண்டும் வரும் தாள சொற்றொடர்கள்) ஆகியவற்றை சரியான காலமும் ஒத்திசைவுமாக சிறப்பாக வாசிக்க திறம்பட்டவர். ஒரு கலையின் உச்ச நிலை விடுதலையுணர்வு என நான் நம்புகிறேன். ஜாகிரின் இந்த நுட்பங்கள், கேட்பவர்களுக்கும் அந்த ஆழமான விடுதலையுணர்வை பெறமுடிகிறது .
ஜாகிர் உசேன் தபேலாவைப் பயன்படுத்தி கதைசொல்லலின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு வருகிறார். இயற்கையின் சுழற்சிகளை மீண்டும் உருவாக்கும் காட்சிகளில், தாளங்களின் மூலம் பாயும் ஓடைகள், குதிரைகள் மற்றும் பறவைகளின் சத்தங்களை பிரதிபலிக்கிறார். இந்த ஒலிகள் அனைத்தும் ஒரு வெகு நேர்த்தியான மற்றும் தனித்துவமான விரிவினை உருவாக்கி, இயற்கையின் முழுமையான அனுபவத்தை அறிவுறுத்துகின்றன. அதேசமயம், தளங்களின் மாறுபாடுகளின் மூலம் இயற்கையின் ஆற்றலும் அமைதியுமான பரிமாணங்களையும் பிரதிபலிக்கிறார். தாளங்களின் வேகத்தை அதிகரித்து அல்லது குறைத்து, இயற்கையின் இரு எதிர்மறை ஆற்றல்களான அமைதி மற்றும் பதற்றம் ஆகியவற்றை உணர்த்துகிறார். காதல் கதைகளில், மென்மையான தொடுதல்கள் மற்றும் ஏற்ற இறக்கமானச் சூழல்களைப் பயன்படுத்தி அன்பின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார், மேலும் நுணுக்கமான ஒத்திசைவுகள் மூலம் காதல் கதைகளையும் கூறுகிறார். இவ்வாறு, அவர் தபேலாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி காதல், ஏக்கம், பாசம், விருப்பம் போன்ற உணர்ச்சிகளை ஒலி வாயிலாக பகிர்ந்துகொள்கிறார்.
அந்த வகையில், ஜாகிர் உசேன் தபேலாவைப் பயன்படுத்தி உரையாடல் பரிமாற்றங்களை நகைச்சுவையாகச் சேர்க்கும் திறனாலும் அறியப்படுகிறார். சில சமயங்களில், அவர் இடைநிறுத்தங்களையும் எதிர்பாராதத் தாளங்களையும் இணைத்து, ரசிகர்களிடமிருந்து பங்களிப்பு மற்றும் நகைச்சுவையை உருவாக்குகிறார். இந்த நகைச்சுவை, அவரது இசைக்கு வேறுவிதமான பரிமாணத்தைத் தருகிறது. பண்டிதர் மற்றும் ரசிகர்கள் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அவரின் இசை பாணியில் புதுவிதமான அனுபவங்களையும் கற்றல்களையும் பெறுகின்றனர்.
இந்திய புராணங்களில் இருந்து, குறிப்பாக மகாபாரதத்தின் போர்களை விவரிக்கும் படைப்புகளை அவர் நிகழ்த்தியுள்ளார். இவை அதிகப்படியான உணர்ச்சி மற்றும் கலைபூர்வமான தளங்களால் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் கதைகள் என்று உணரச் செய்கின்றன. மழை சத்தம், குதிரை சத்தம், உடுக்கைச் சத்தம் போன்ற உணர்ச்சிப்பூர்வமான ஒலிகள், அவரது இசையில் அந்தந்த சம்பவங்களின் உணர்வுகளை மிக அதிகமாக வெளிப்படுத்துகின்றன. அவர் பஞ்சாப் கரானாவை சேர்ந்தவர், அவர்கள் இசையில் காரண சம்பரத்யங்களை (இசையின் நுணுக்கங்களை) கறாராகக் கடைபிடிக்கும் மரபுவாதிகள் . அவருடைய இசை, பாரம்பரிய பஞ்சாப் கரானாவின் சிறப்பை நிலைநாட்டியதுடன், அதனை நவீனப்படுத்தி, புதிய பரிமாணங்களை சேர்க்கவும் செய்தது.
பண்டிட் ரவிசங்கருக்கும் ஜாகிர் ஹுசைனுக்குமான உறவு தந்தை-மகன் போன்றதாக அமைந்தது, மேலும் இது இந்திய பாரம்பரிய இசையின் செழுமையை உலகளாவிய அரங்குகளுக்குக் கொண்டு சென்றது. இருவரின் ஒத்துழைப்பு, இந்திய இசையின் ஆழத்தையும் புதிய பரிமாணங்களையும் உருவாக்கியது. 1980களில் அவர்கள் முதன்முதலில் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி, உலகெங்கும் பார்வையாளர்களுக்கு இந்திய இசையின் பாரம்பரியங்களை அறிமுகப்படுத்தினர். ஜாகிர் ஹுசைனின் தபேலா வாசிப்பு, பண்டிட் ரவிசங்கரின் சிதாரின் இசைக்கு தீவிரத்தை கொடுத்தது, மேலும் இருவரின் இசை, இசையின் பல்வேறு பரிமாணங்களை விரிவாக்கியது. இதன் மூலம், மேற்கத்திய பார்வையாளர்களுக்கும் பாரம்பரிய இந்திய இசைக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டது. பண்டிட் ரவிசங்கரின் சிதாரின் தனித்துவமான ஒத்திசைவுகளுக்கான இரண்டாவது பரிமாணத்தை, ஜாகிர் ஹுசைனின் தபேலா வழிமுறை வெளிப்படுத்தியது.
மரபான இந்திய இசை நிகழ்ச்சிகளில், பொதுவாக இசைஞர்கள் மேடையில் வாசிக்க, பார்வையாளர்கள் அமைதியாக கேட்கும் போக்கு நிலவுகிறது. பாரம்பரிய இசையின் மிருதுவான கட்டமைப்பால், நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பங்கு மிகக் குறைவாகவே இருப்பது வழக்கம். அவர்களின் பங்கு பெரும்பாலும் இசையை ரசிப்பதிலேயே வரையறுக்கப்படுகிறது. ஆனால் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் இந்த மரபு நடைமுறையை முற்றிலும் மாற்றிப் போடுகிறார்.
ஜாகிர் ஹுசைன் இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டுமே வைத்திருக்க மறுக்கிறார். அவர் அவர்களையும் நிகழ்ச்சியின் அங்கமாகவே கருதுகிறார். “என்னோடு சேர்ந்து இசையுங்கள், எனது இசையில் உங்கள் பங்களிப்பையும் சேருங்கள்” என்ற அடிப்படையில், அவர் ரசிகர்களை கூடுதல் ஈடுபாட்டுடன் இணையச் செய்கிறார். இது அவரது நிகழ்ச்சிகளை இன்னும் ஆழமான, மனதைக் கவரும் அனுபவமாக மாற்றுகிறது. அவரது இசையில் ரசிகர்களின் பங்களிப்பு (rhythm claps) அல்லது சில நேரங்களில் மெல்லிசையே மெல்லிசையாக தாளமிடுவதில் வெளிப்படும். நேரடியாகவும், புதுமையிலும் இசையை ஒரு சமூக அனுபவமாக மாற்ற முயற்சிக்கிறார். இப்படி ஒரு அணுகுமுறை, ஜாகிர் ஹுசைனின் , சாதாரண நிகழ்ச்சியைத் தாண்டி ரசிகர்களுடனான ஒருவித நட்பு உறவாக மாற்றுகிறது. இதனால் இசை நிகழ்ச்சிகள் மேலும் உயிர்மிக்கதோடு மட்டுமல்லாமல், பாரம்பரியத்தை நவீன சமூகத்துக்கு ஒன்றிணைக்கும் பாலமாகவும் அமைகிறது.
இந்த அஞ்சலியை அவரின் குரலில் ஒலிக்க விட்டு முடிப்போம்:
“குறைந்தபட்சம் நான் இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்தபோது, இந்திய இசை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டிருந்தது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை, பெரும்பாலான இசைக்கலைஞர்கள் மகாராஜாக்களின் கீழ் இருந்தனர், எனவே அவர்கள் சாதாரண பார்வையாளர்களுக்காக அரிதாகவே இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். அந்த சமஸ்தானங்கள் இடிக்கப்பட்டு, இந்தியா ஜனநாயக நாடாக மாறியவுடன், அரசவை இசைக்கலைஞர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அப்போது இளம் இசைக்கலைஞர்கள், அவர்களில் ரவிசங்கர் மற்றும் எனது தந்தை ஆகியோர் தங்கள் கலையை மேடையில் எப்படி வடிவமைப்பது என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர். அதே நேரத்தில், பிரிட்டிஷ் செல்வாக்கின் காரணமாக, மேற்கத்திய இசை இந்தியாவில் எல்லா இடங்களிலும் இருந்தது. எனது தலைமுறை சிம்பொனிகள் மற்றும் சரம் குவார்டெட்டுகளுடன் வளர்ந்தது, ஆனால் பீட்டில்ஸும் ரோலிங் ஸ்டோன்ஸும், இப்போது பாலிவுட் என்று பிரபலமாக இருக்கும் ஒரு புதிய இந்திய திரைப்படத் துறைக்கு இசையை உருவாக்க நாங்கள் உதவினாலும் கூட. மேற்கத்திய பாரம்பரிய கருவிகளைப் படித்த இந்திய இசைக்கலைஞர்கள் அனைவரும் திரைப்படத் துறையில் உள்வாங்கப்பட்டனர், மேலும் நாம் அனைவரும் ஒரு பிறழ்ந்த, கலப்பின இசைக்குழுவில் ஒருங்கிணைக்கப்பட்டு, தாக்கங்களின் கசாகூள கூட்டு இசையை நிகழ்த்தினோம்.
எனவே, எனது பதின்ம வயதின் பிற்பகுதியில் நான் முதன்முதலில் அமெரிக்காவிற்கு வந்து இங்குள்ள இசைக்கலைஞர்களைக் கேட்டபோது, அது ஒரு இயற்கையான முன்னேற்றம் போல் உணர்ந்தேன். என் தந்தை தனது பயணங்களிலிருந்து பதிவுகளை என்னிடம் கொண்டு வருவதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, எனவே அதற்குள் டியூக் எலிங்டன், மைல்ஸ் டேவிஸ், யூசெஃப் லத்தீஃப், சார்லஸ் லாயிட், ஜெபர்சன் விமானம் மற்றும் கிரேட்ஃபுல் டெட் போன்றவர்களை நான் கேள்விப்பட்டேன். இவை அனைத்தும் நான் இந்தியாவில் இருந்த இடத்தின் விரிவாக்கமாகும், மேலும் இங்குள்ள மக்களுடன் விளையாடத் தொடங்கும் போது இது ஒரு தடையற்ற மாற்றத்திற்கு வழிவகுத்தது. அதிர்ஷ்டவசமாக, அதற்குள் அமெரிக்க இசைக்கலைஞர்களிடையே-குறிப்பாக ஜான் கோல்ட்ரேன், மிக்கி ஹார்ட் மற்றும் ஜான் மெக்லாலின்-இந்திய இசையைக் கற்றுக்கொள்வதில் பெரும் ஆர்வம் இருந்தது. நான் என்ன செய்தேன் என்பதை ஏற்கனவே புரிந்துகொண்ட இந்த மக்கள் அனைவரையும் நான் சந்தித்தேன், மேலும் நான் நன்கு அறிந்த ஒரு அமைப்புக்குள் என்னை பிளவுபடுத்துவதும் வெடிப்புப் பாதையை ஒட்டவைக்க அவர்களுக்கும் எனக்கும் எளிதாக இருந்தது. பங்களிக்க முடிந்ததில் எனக்கு இருந்த எந்த தயக்கமும் மறைந்துவிட்டது, ஏனென்றால் நான் யார், நான் எங்கிருந்து வருகிறேன் என்பது இந்த மக்களுக்குத் தெரியும்.”
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

தபேலா மாஸ்ட்ரோ ஜாகீர் ஹுசைன் குறித்து விவேக் சுப்ரமணியன் எழுதிய மறைவஞ்சலி, ஒரு மனமெழுச்சியும் ஆழமான பாராட்டும் நிறைந்த அற்புதமான அஞ்சலியாகும். இந்திய பாரம்பரிய சங்கீதத்திற்கும் உலகளாவிய இசை வடிவங்களுக்கும் இடையே பாலமாக இருந்த ஜாகீர் ஹுசைனின் அபார திறமை, கலாச்சார தூதராக அவர் வகித்த முக்கிய பங்கு, மற்றும் அவரது இசையின் ஆன்மீக தன்மையை விவேக் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த மறைவஞ்சலியில் ஜாகீர் ஹுசைனின் வாழ்க்கையை அவர் ஒரு இசைக்கலைஞராக மட்டுமல்லாமல், ஒரு வழிகாட்டியாகவும் புதுமையாளராகவும் கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் ஏராளமான கலைஞர்களுக்கு அவர் அளித்த ஈர்ப்பு மற்றும் ஊக்கத்தை விவேக் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். இது ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை மட்டுமல்ல, கலாச்சார ஒற்றுமைக்கு அவர் அளித்த பங்களிப்பையும் புகழ்ந்து பேசுகிறது.