அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை

This entry is part 22 of 22 in the series இசைவாணர்

கர்நாடக சங்கீதத்தை முதலும் கடைசியுமாக தில்ருபாவில் வாசித்த வித்வான் அங்கமாலி ஜோஸ்.

கிட்டத்தட்ட மூன்று நான்கு வருடங்கள் தேடிய பின், கிடைத்த விஷயங்களை வைத்து ஒரு கட்டுரை எழுதினேன். அது பரிவாதினி இசை மலரில் வெளியாகியுள்ளது. இது போல் பல அரிய ரசனைகளும், அறிமுகங்களும், ஆக்கங்களும் நிறைந்த புதையல் இந்த நூல்.

இசையை, சுவாரஸ்யமான எழுத்தை, பழைய நாட்களை விரும்புபவர்களுக்கு இந்தத் தொகுப்பு ஒரு பொக்கிஷம்.

இதன் முதல் தொகுதி வெளியாகிவிட்டது. இரண்டாம் தொகுதி இன்னும் சில வாரங்களில் வெளி வரும்.

தொகுதி 1 இப்போது விற்பனையில். விலை – ரூ 500.

இரண்டாம் தொகுதியை முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியாய் இரண்டு தொகுதியும் சேர்த்து 900ரூ-க்குக் கிடைக்கும்.

புத்தகம் வெண்டுபவர்கள் – 9980992830 என்ற எண்ணுக்கு வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தொகுப்பு: தினமணி சிவகுமார்.

சுமார் 25 வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சியில்தான் நான் தில்ருபாவைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

சிறப்பு நிகழ்ச்சிகளுள் ஒன்றாக தில்ருபா கலைஞர் சரோஜாவின் நேர்காணல் சென்னைத் தொலைக்காட்சி நிலையத் தயாரிப்பாக ஒளிபரப்பாகியது. அவர் பேசியது ஒன்றும் எனக்கு நினைவிலில்லை. ஆனால் நிகழ்ச்சியின் பகுதியாக இளையராஜாவின் ‘சின்னத் தாயவள்’ பாடலை அவர் வாசித்தது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது.

சாதாரணமாகவே சாருகேஸி உருக்கும். வெளிப்பூச்சில் மென்மையும் உள்பூச்சில் காத்திரமுமாய் ரீங்கரிக்கும் தில்ருபாவில் அந்தப் பாடலைக் கேட்டதும் கரைந்தே போய்விட்டேன். இந்த நிகழ்வுக்குப் பின் லேண்ட்மார்க்குக்குச் சென்ற போது இந்துஸ்தானி இசைப் பகுதியில் தில்ருபா பதிவுகள் இருக்கின்றனவா என்று தேடியதும் நினைவில் உள்ளது. ஒருவகையில் சுல்தான் கான், ராம்நாராயண் போன்ற உன்னத சாரங்கி கலைஞர்களின் பதிவுகளை வாங்கித் திளைக்க அந்த நேர்காணலே காரணமாய் அமைந்தது.

அடுத்த இருபது ஆண்டுகளில் ஒருமுறை கூட தில்ருபா கலைஞர் வாசித்த கச்சேரியைக் கேட்கும் வாய்ப்பு ஏற்படவேயில்லை. 2015-ல் ஒருநாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தேன். குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாவது காரோட்டினால்தான் வீட்டிற்கு வந்து சேர முடியுமென்பதால் என்னுடைய சேகரத்திலுள்ள இசைப் பதிவுகளைக் கேட்க பெரும் வாய்ப்பாக அந்த நாட்கள் அமைந்தன. அப்போதுதான் வண்டியை சர்வீஸுக்குவிட்டு எடுத்திருந்தேன் என்பதால் வழக்கமாய் வண்டியில் இருக்கும் பென் டிரைவ் அன்று இல்லாமல் இருந்தது. வேறு வழியில்லாததால் 100.1 அமிர்தவர்ஷிணி பண்பலையைக் கேட்கத் தொடங்கினேன். நான் வைப்பதற்கும், ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. அறிவிப்பில் அங்கமாலி கே.ஜே.ஜோஸ் தில்ருபா வாசிப்பார் என்றார்கள்.

அமிர்தவர்ஷிணியில் கர்நாடக இசையோடு ஹிந்துஸ்தானி இசையும் ஒலிபரப்பாகும் என்பதால், ஜோஸ் ஹிந்துஸ்தானி வாசிப்பார் என்று நினைத்துக்கொண்டேன். சரோஜா வாசித்த சாருகேஸியைக் கேட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒரு இந்துஸ்தானி கச்சேரி தில்ருபாவில் கேட்கக் கிடைத்ததே என்ற எண்ணக் கீற்று முழுமையாய் மனத்துள் ஒலிப்பதற்கு முன் வானொலி அறிவிப்பு, ‘ராமா ராமா குணசீமா’ என்கிற சிம்மேந்திரமத்யம ராகப் பாடலை வாசிப்பார் என்று கூறுயது.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. தில்ருபாவில் கர்நாடகயிசை! என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் முதன் முதலில் கேட்ட சாருகேஸியே கர்நாடக ராகம்தான் என்றாலும், அந்தப் பாடலின் அமைப்பு, வாசிக்கப்பட்ட முறை, வாத்யத்தின் த்வனி எல்லாம் சேர்ந்து அதை இந்துஸ்தானிக்கு அருகில்தான் பொருத்திவைத்தன. ஏ.ஆர்.ரஹ்மான் காதலன், பம்பாய், உயிரே, முதல்வன் போன்ற படங்களில் எதிர்பாரா தருணங்களில் வித்தியாசமான இசைப் பரிமாணங்களை தில்ருபாவில் காட்டியிருந்த போதும் கர்நாடகயிசையோடு அந்தக் கருவியை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

தொண்ணூறுகளில் ஒருமுறை திருவையாறு ஆராதனையில் சிதாரில் ஒரு கலைஞர் கர்நாடகயிசை வாசித்தது நினைவுக்கு வந்தது. என்னால் அந்த வாசிப்பை வியந்து பார்க்க முடிந்ததேயன்றி உள்வாங்கி ரசிக்க முடியவில்லை. அந்நிய வாத்யமெனினும் மேண்டலினின் நாதம் ஏற்படுத்திய அன்னியோன்யத்தை சிதாரால் ஏனோ ஏற்படுத்தமுடியவில்லை. வேறு உன்னதமான ஹிந்துஸ்தானி கலைஞர்களின் கர்நாடகயிசை முயற்சிகள் நினைத்துப்பார்த்தாலும் இதே மனநிலைதான் எழுகிறது. அப்துல் கரீம்கானின் கரஹரப்ரியா, அஜய் சக்ரபர்த்தியின் பாலமுரளி தில்லானா என்று நான் கேட்டவை எவையும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை.

இவற்றையெல்லாம் ஏன் இங்கு விஸ்தாரமாகச் சொல்கிறேனெனில், நான் அங்கமாலி ஜோஸ் கர்நாடக கச்சேரி வாசிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு ஆச்சர்யமடைந்தேனே தவிர அந்தக் கச்சேரியின் எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை என்று சொல்வதற்காகத்தான். ஒருவகையில், அந்தக் கச்சேரி சுமாராக இருக்கப் போகிறது என்கிற முன்முடிவில் இருந்தேன் என்றுகூடச் சொல்லலாம். இந்துஸ்தானி கச்சேரியாக இருந்திருந்தால் இன்னும் உற்சாகமாகக் கேட்டிருப்பேனென்று தோன்றுகிறது.  

கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே என் முன்முடிவுகள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. இத்தனைக்கும் சிம்மேந்திரமத்யமத்தை அத்தனை ‘கர்நாடக’ ராகமென்று வகைப்படுத்த முடியாது. ஆரோகண/அவரோகண ஸ்வரங்களைப் பிரதானமாகக் கொண்டு வாசிக்கக்கூடிய ராகம்தான். இருப்பினும் ஜோஸ் வாசித்த ஆலாபனையின் ஒவ்வொரு பிடியிலும் கர்நாடகத்தன்மை தன்னிச்சையாய் சொட்டியது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் அந்த ஆலாபனையின் காலபிரமாணம் ஒரு கர்நாடக ரேடியோ கச்சேரிக்கேவுரிய காலபிரமாணம். உஸ்தாத் ஜாகிர் உசைன் திருவையாற்றில் தியாகராஜ கிருதிக்கு பக்கவாத்ய்ம் வாசித்தபோது அத்தனை பாந்தமாய் பொருந்தியதைப் போலவே எனக்கு ஜோஸின் வாசிப்பு இருந்ததென்று தோன்றியது.

அரைமணி நேரமே ஒலிபரப்பான அந்தக் கச்சேரி என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ”இப்படியொரு கலைஞரா? அவர் இருக்கிறாரா? இருந்தால் எங்கு இருக்கிறார்? அவரைச் சந்தித்து பேசமுடியுமா?”, என்றெல்லாம் பரபரக்க ஆரம்பித்தேன். நான் விசாரித்தவரை எந்தத் தகவலும் உடனே கிடைக்கவில்லை.

இது நடந்த சில நாட்களுக்குள் எனக்கு கேரளத்தில் உள்ள காலடியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அங்கு உள்ள சங்கரா பல்கலைகழகத்தின் இசைத் துறையில் பேச வேண்டி என்னை அழைத்திருந்தனர். அங்கு எப்படிச் செல்வதென்று வழிகேட்ட போது, பெங்களூரிலிருந்து ரயிலில் சென்றால் அங்கமாலியில் இறங்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்கமாலி என்ற பெயரைக் கேட்டதும் உற்சாகமாகிவிட்டேன்.

“அங்கு ஜோஸ் என்றொரு தில்ருபா கலைஞர் இருந்தாரே, அவர்குடும்பம்/சீடர்கள் யாரையாவது நான் சந்திக்க முடியுமா?”, என்று கேள்விகளை அடுக்க ஆரம்பித்தேன்.

என்னை அழைத்தவர் ஜோஸ் என்ற கலைஞரைப் பற்றிக் கேள்வி கூடப் பட்டிருக்கவில்லை.  என்னுடைய குமுறலைக் கொட்ட கேரளத்தில் பிறந்து வளர்ந்த நண்பரான சிவராமகிருஷ்ணனை அழைத்தேன். அதிர்ஷ்டவசமாய் அவருக்கு ஜோஸின் இசை பரிச்சயமாயிருந்தது. “ஓ! ஜோஸ் திருச்சி ஆல் இந்தியா ரேடியோ கலைஞராச்சே! அவரைப் பத்தி தெரியணும்னா தமிழ்நாட்டுலதான் தேடணும்.”, என்றார். அவர் எடுத்துக் கொடுத்த முதல் அடியைத் தொடர்ந்து திருச்சி ரேடியோ நிலையத்தில் இருந்த கலைஞர்கள் சிலரிடம் பேசினேன். திருச்சியைச் சேர்ந்த வாய்ப்பாட்டு வித்வான் கஷ்யப் மகேஷ் எப்படியோ ஜோஸின் மகன் சுரேஷ் பாபுவின் தொலைபேசி எண்ணையும், மகள் வித்யாவின் தொலைபேசி எண்ணையும் வாங்கிக் கொடுத்தார். அவர்களிடம் ஒரேயொரு முறை பேசும் வாய்ப்பு கிடைத்தது. கரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் இருவரிடமும் பேசினேன். பின்னால் என்ன காரணத்தினாலோ அவர்களை அந்த எண்களில் தொடர்பு கொள்ள இயலவில்லை. அந்த உரையாடல்களின் போது ஜோஸின் மகள் வித்யா, பழைய ஸ்ருதி இதழில் தன் தந்தையாரைப் பற்றி வந்திருப்பதாகச் சொன்னார். அதிர்ஷ்டவசமாய் என்னிடமுள்ள ஸ்ருதி இதழ்களில் அங்கமாலி ஜோஸைப் பற்றி வந்திருந்த கட்டுரையை (இதழ் எண் 154) கண்டுபிடிக்க முடிந்தது.

எனக்குக் கிடைத்த தகவல்கள் ஜோஸ் என்ற அதிசயக் கலைஞரை முழுமையாய் ஆவணப்படுத்த போதுமானதாக இல்லைதான். அந்த ஆவணப்படுத்தலில் முதல்படியாகவாவது இருக்கட்டுமே என்று இந்தக் கட்டுரையில் தொகுத்துள்ளேன்.

11 ஜனவரி 1920-ல் கேரளத்தில் உள்ள அங்கமாலியில், ஜேகப்-அன்னம்மாள் தம்பதியனரின் மூத்த மகனாக ஜோஸ் பிறந்தார்.  ஜேகப்பின் குடும்பத்தில் யாருக்கும் கர்நாடக இசையில் ஈடுபாடு இல்லாத நிலையிலும் அவருக்கு இள வயது முதலே கர்நாடக இசையில் மிகுந்த ஈர்ப்பு இருந்தது.  குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, திருவனந்தபுரம் சென்று அங்கு பிரபல குருவாக இருந்த நாராயண பாகவதரிடம் (இவர் பரூர் சுந்தரம் ஐயர் போன்ற மேதைகளுக்கு குருவாக இருந்தவர்) இசை கற்கத் தொடங்கினார். வெகு சீக்கிரத்திலேயே வாய்ப்பாட்டிலும் வயலினும் நல்ல தேர்ச்சியைப் பெற்ற ஜேகப்பின் குடும்பச் சூழல் அவரை இசையில் ஈடுபடவிடாமல் தடுத்தது. குடும்பத்தில் நிலவிய வறுமையைப் போக்க தன் மனதிற்குப் பிடித்த இசைத்துறையை விடுத்து கணக்கராக வேலை செய்யத் தொடங்கினார்.

இளவயதிலேயே ஜோஸ் இசையில் ஈடுபாட்டுடன் விளங்கினார். வீட்டிலிருந்த ஆர்மோனியத்தில் விளையாட்டாகப் பழகி, ஐந்து வயது குழந்தையாக இருக்கும்போது தன் தந்தையார் விசிலில் இசைக்கும் மெட்டுகளையெல்லாம் ஆர்மோனியத்தில் ஜோஸால் வாசிக்க முடிந்திருக்கிறது. குழந்தையின் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த ஜேகப் அவருக்கு முறையாக சங்கீதம் பயிற்றுவிக்க நினைத்தார்.

அந்த நேரத்தில் கோழிக்கோட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் பணியும் ஜேகப்பிற்குக் கிடைத்தது. அங்கு இருந்த வேலூர் ரங்கநாதன் என்பவரிடம் ஆரம்ப பாடங்களை ஜோஸ் கற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கொச்சி கிருஷ்ணமூர்த்தி பாகவதரிடம் சங்கீதப் பயிற்சியைத் தொடர்ந்தார். பாகவதர் மாணவர்களுக்குச் சொல்லித் தரும் நேரம் போக, மற்ற நேரங்களிலும் வாய்விட்டுப் பாடிக் கொண்டே இருப்பாராம்.  அதனால் கீர்த்தனைகளோடு விஸ்தாரமாய் ராக ஆலாபனை, கல்பனை ஸ்வரங்கள் என்று மனோதர்ம சங்கீதத்தை அடிக்கடி கேட்டு நுணுக்கங்களை கிரகித்துக் கொள்ளும் வாய்ப்பு ஜோஸிற்கு அமைந்தது.

சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாமல் இசையைக் கற்பதிலும், கற்றதை அலுக்காமல் வயலினிலும் வாய்ப்பாட்டிலும் சாதகம் செய்வதிலுமே ஜோஸ் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

ஜோஸின் 13-வது வயதில் நடந்த ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது. அவர் வீட்டில் பழைய தட்டுமுட்டி சாமான்களுக்கு இடையில் ஒரு வாத்தியமிருப்பதைக் கண்டார் ஜோஸ். அதை எடுத்துக் கொண்டு தந்தையிடம் காட்டிய போது, அந்தக் கருவி தில்ருபா என்றும், தன்னுடைய வடக்கிந்திய நண்பர் பல காலம் முன்னால் அதைப் பரிசாக அளித்ததாகவும் கூறினார் ஜேகப். ஜோஸிற்கு தில்ருபாவை உடனே வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் உபயோகப்படுத்தாமல் புழுதியில் கிடந்து பழுதாகியிருந்த தந்திகளை சரிப்படுத்துவதில் ஜேகப் அதிக ஆர்வம் காட்டவில்லை. அப்படியே கருவியைச் சரிபடுத்திக் கொடுத்தாலும், அதைக் கற்பிக்க கேரளத்தில் யார் இருக்கிறார்கள் என்று தட்டிக்கழித்துவிட்டார்.

சில வாரங்களில் எர்ணாகுலத்தில் ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரிக்கு ஜோஸை அழைத்துச் சென்றார் ஜேகப். அங்கு நடந்த வாய்ப்பாட்டு கச்சேரியில்  பக்கவாத்தியக் கருவியாக தில்ருபாவை ஒரு கலைஞர் வாசிப்பதைக் கண்டு துள்ளிக் குதித்தார் ஜோஸ். அவர் அருகில் சென்று அமர்ந்து எப்படியெல்லாம் வாசிக்கிறார் என்பதை நுணுக்கமாய் கவனித்துக் கொண்டார்.  கச்சேரி முடிந்ததும் அந்தக் கலைஞரிடம் சென்று தன் ஆர்வத்தைத் தெரியப்படுத்தினார். அங்கு வந்திருந்த கலைஞருக்கோ மலையாளம் தெரியாது. ஜோஸுக்கோ இந்தி தெரியாது. இருந்தாலும் எப்படியோ தான் அந்தக் கருவியைக் கற்க விரும்புவதாகத் தெரியப்படுத்தினார் ஜோஸ். சிறுவனின் ஆர்வத்தைக் கண்டு சில நிமிடங்கள் தன் கருவியில் அடிப்படை ஸ்வரஸ்தானங்களை எப்படி வாசிப்பது என்று வாசித்துக் காண்பித்தார் அந்தக் கலைஞர். ஜோஸின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

வீட்டிற்கு திரும்பும் வழியில் தன் தந்தையிடம் மன்றாடி வீட்டிலிருந்த தில்ருபாவிற்கு புதிய தந்திகள் மாற்ற சம்மதிக்க வைத்துவிட்டார். பழுது பார்க்கப்பட்ட தில்ருபாவில் தேர்ச்சி பெற ஜோஸிற்கு அதிக காலம்பிடிக்கவில்லை. (இந்த வரியைப் படிக்கும் போது சினிமாவில் ஒரே பாடலில் கோடீஸவரராகும் தொனி இருக்கலாம். அந்தத் தேர்ச்சிக்கு எத்தனை உழைத்திருக்க வேண்டும் என்பதை சற்று நிதானித்தால் புரிந்து கொள்ளலாம்.) கர்நாடக சங்கீதத்தை தில்ருபாவில் நேர்த்தியாய் ஜோஸ் வாசிப்பதைக் கேட்ட ஜேகப்புக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் கலக்கமாகவும் இருந்தது. ஒருநாள் தன் மகனை அழைத்து, ”கர்நாடக சங்கீதத்தில் நன்கு தேறி கச்சேரியில் வாசிக்க வேண்டும் என்பது என் இளமைக் காலக் கனவு. உனக்கும் அது லட்சியமாக இருப்பதைக் காண  மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஆனால் நீ எடுத்துக் கொண்டுள்ள கருவியில் கச்சேரிகள் செய்து தொழில் செய்ய முடியுமா? உன்னையும் வருங்காலத்தில் நம் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள இந்தக் கருவி உதவுமா என்று சந்தேகமாக உள்ளது”, என்றார்.

புதிய பாதைகளில் பயணிப்பவர்கள் என்றும் உத்தரவாதத்துக்காகக் காத்திருப்பதில்லை. கலை ஆட்கொண்ட பின்னே கேள்விகளுக்கு இடமேது? தன்னால் நிச்சயம் இந்தக் கருவியில் கச்சேரிகள் செய்தே கர்நாடக இசைத் துறையில் தொழில் செய்யமுடியும் என்று உறுதியாக நம்பினார் ஜோஸ்.  ‘ஒருவேளை எனக்குக் கர்நாடக இசைக் கச்சேரி வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் திரைத் துறையில் எனக்கு நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும்.”, என்று தந்தையின் கவலையை ஆற்றுப்படுத்தினார்.

தந்தையின் ஒப்புதல் கிடைத்ததும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தில்ருபாவில் சாதகத்தைத் தொடர்ந்து கச்சேரி மேடைக்குத் தன்னை தயார் செய்துகொண்டார் ஜோஸ். சிறு சிறு கச்சேரி வாய்ப்புகள் அவரைத் தேடி வரத் தொடங்கின. இந்த வாய்ப்புகள் மூலம் தன் தந்தைக்கு தில்ருபாவில் எந்தக் குறையும் இல்லாமல் கச்சேரி செய்ய முடியுமென்பதை ஜோஸால் காட்ட முடிந்தது. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினாலும், அவர்களுடைய ஆர்வம் என்னமோ புதிய கருவியைப் பார்க்க வேண்டுமென்பதில்தான் இருந்தது. ஒருமுறை கேட்டபின் அவரைத் தொடர்ந்து அழைத்து கச்சேரி செய்ய வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கவில்லை.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குச் சென்றால் வாய்ப்புகள் கூடுமென்றெண்ணினார் ஜோஸ். ஜேகபின் நண்பர் இன்மதி ஜோசப் கோயமுத்தூரில் மருத்துவராக இருந்தார். தந்தையிடமிருந்து ஒரு அறிமுகக் கடிதத்தை வாங்கிக் கொண்டு கோயமுத்தூருக்குச் சென்றார் ஜோஸ். இன்மதி ஜோசப் அங்கு பிரபல மருத்துவராக இருந்ததால் நிறைய முக்கயஸ்தர்கள் அவருடைய மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுள் ஒருவர் நகைச்சுவை நடிகர் டி.எஸ்.துரைராஜ். இன்மதி ஜோசப் மூலம் ஜோஸைப் பற்றித் தெரிந்து கொண்ட துரைராஜ், அவரை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார்.

அப்போது பக்ஷிராஜா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இருந்த படங்களில் கலைவாணர் நடித்துக் கொண்டிருந்தார். “இந்தப் பையன் புதியதொரு கருவியில் கர்நாடக இசை வாசிக்கிறான். இவனுக்கு தக்கதொரு வாய்ப்பை நீங்கள்தான் எற்படுத்திக் கொடுக்க வேண்டும்”, என்று கேட்டுக் கொண்டார் துரைராஜ். உடனே ஸ்டுடியோவுக்குள்ளேயே ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து ஜோஸை வாசிக்கச் சொன்னார் கலைவாணர்.

“இந்தப் பையனின் வாசிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்தக் கருவியில் இவன் வாசித்து சங்கீதத்துறையில் முன்னுக்கு வர நிறைய வருடங்கள் பிடிக்கும். அதுவரை இவனுக்கு நாம் திரைத்துறையில்தான் ஆதரவு தரவேண்டும்.”, என்று துரைராஜிடம் கூறிய என்.எஸ்.கிருஷ்ணன் பக்ஷிராஜா ஃபிலிம்ஸை நடத்தி வந்த ஸ்ரீராமுலு நாயுடுவிடம் சொல்லி ஜோஸிற்கு ஸ்டுடியோவின் இசைக்குழுவில் வேலை வாங்கிக் கொடுத்தார்.

பக்ஷிராஜா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான 4-5 படங்களில் (1941-ல் வெளியான அலிபாபாவும் 40 திருடர்கள் உட்பட) ஜொஸின் தில்ருபாவுக்கும் இடம்கொடுத்தார் இசையமைப்பாளர் என்.எஸ்.பாலகிருஷ்ணன். திரையிசைதான் வாழ்க்கை என்றால் தில்ருபாவோடு சித்தார், பேஞ்சோ போன்ற கருவிகளையும் கற்றுக் கொள்ளலாமா என்று ஜோஸ் தடுமாறிய போது அவருக்கு மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து அழைப்புகள் வரத்தொடங்கின. ’கண்ணகி’, ‘காரைக்கால் அம்மையார்’ முதலிய படங்களில் ஜோஸின் தில்ருபா இசை இடம்பெற்றது.

ஜோஸைப் பற்றிக் கேள்விப்பட்ட வயலின் மேதை மைசூர் சௌடைய்யா, அவர் தயாரித்த ‘வாணி’ படத்தில் வாசிக்க வாய்ப்பு வழங்கினார். ஜோஸின் கர்நாடக சுத்தமான வாசிப்பைப் பார்த்து, “நாமிருவருமாகச் சேர்ந்து கச்சேரிகள் செய்தால் என்ன? புதுமையாகவும் இருக்கும். உன் வாத்தியத்தைப் பற்றியும் உலகத்துக்குத் தெரிய வரும்.”, என்று தூண்டினார் சௌடைய்யா.

ஜோஸ் இயற்கையிலேயே கூச்ச சுபாவி. சௌடைய்யாவோ அதற்கு நேர்மாறானவர். மேடையேறிவிடால் அவருக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடும். இருவரும் இணைந்தால் கச்சேரி எப்படி அமையும்? அதிலும் தில்ருபாவின் மென்குழைவுகள் சௌடைய்யாவின் ஏழு தந்தி வயலின் எழுப்பும் பிரம்மாண்ட ஒலிக்கிடையில் எடுபடுமா?

இந்தச் சந்தேகங்களினால் சௌடைய்யாவின் அழைப்பை மென்மையாக மறுத்துவிட்டார் ஜோஸ். பின்னாளின் மேதை பாலமுரளிகிருஷ்ணாவும் ஜோஸின் வாத்தியத்தை துணையாகக் கொண்டு வாய்ப்பாட்டு கச்சேரிகளும், வயலோவுடன் சேர்ந்து இணைக் கச்சேரிகளும் செய்ய விரும்பினார் என்றும், அந்த வாய்ப்பையும் ஜோஸ் மறுத்துவிட்டார் என்றும் தெரிய வருகிறது.

விரைவில் மேதை ஜி.இராமநாதன் குழுவில் பணியாற்ற ஜோஸிற்கு அழைப்பு வந்தது. (1941-ல் பக்ஷிராஜா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ஆர்யமாலாவிலேயே ஜி.இராமநாதன் இசையில் ஜோஸின் தில்ருபா இடம்பெற்றுருக்கிறது).  இராமநாதன் குழுவில் ஸ்திரமான இடம் கிடைக்கும் என்று நம்பிய ஜோஸிற்கு சோதனையாய் இரண்டாம் உலகப் போர் உச்சத்தை அடைந்து திரைத்துறையே பெரும் சிக்கலுக்குள்ளானது.

திரைப்பட வாய்ப்புகள் குறையவும் மீண்டும் கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்ய முயன்றார் ஜோஸ். அதிக வாய்ப்புகள் இல்லையென்ற போதும் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாய் சில கச்சேரிகள் நடந்தன. அப்படி நடந்த கச்சேரி ஒன்றை வயலின் வித்வான் டி.கே.ஜெயராம ஐயர் கேட்க நேரிட்டது.

ஜோஸின் வாசிப்பின் சிறப்பைக் கண்டுகொண்ட ஜெயராம ஐயர் அப்போதைய திருச்சி வானொலி நிலையத்தின் ஸ்டேஷன் டைரக்டராக இருந்த ஜி.டி.சஸ்திரியிடம் ஜோஸின் தனித்தன்மையைப் பற்றி எடுத்துச் சொன்னார். உடனே ஜி.டி.சாஸ்திரி அப்போது திருச்சி வானொலி நிலையத்தில் தொடங்கவிருந்த சேர்ந்திசைக் குழுவில் (ஆர்கெஸ்டரா) வந்து சேர்ந்து கொள்ளுமாறு ஜோஸிற்கு ஒரு கடிதம் எழுதினார். ”பல வாத்தியங்களுள் ஒரு வாத்தியமாய் சேர்ந்திசைக் குழுவில்தான் தில்ருபாவை வாசிக்க வேண்டுமா? தனியாக கச்சேரி வாய்ப்புகள் கிடைக்காதா? ”, என்ற கேள்வி அலைகழித்ததில் ஜி.டி.சாஸ்திரியின் கடிதத்திற்கு பதில்போடாமல் இருந்தார் ஜோஸ்.

இதனிடையில் எப்படியும் ஜோஸ் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வானொலி நிலையத்தில் புதிய தில்ருபாகளை வரவழைத்துவிட்டார் ஜி.டி.சாஸ்திரி. இரண்டாவது முறை ஜி.டி.சாஸ்திரியிடமிருந்து நேரிடையாய் கடிதம் வரவும் ஜோஸ் மறுக்க முடியாமல் திருச்சி வானொலி நிலையத்தில் 1943-ம் ஆண்டு சேர்ந்து கொண்டார். வருடா வருடம் புதுப்பிக்க வேண்டிய ஒப்பந்த வேலை. மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். நிலையத்துக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்துக் கொள்ளப்படும் என்று ஏக கெடுபிடிகள் நிறைந்த வேலை. அதனால் திரைத்துறையில் இருந்து வாய்ப்புகள் வந்தும் போய் வாசிக்க முடியாத சூழல்.

கச்சேரி வாசிக்க திருச்சி வானொலி நிலையம் வந்த சௌடய்யா அங்கு ஜோஸ் இருப்பதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தார். ஜி.டி.சாஸ்திரியிடம் ஜோஸின் வாசிப்பை சிலாகித்துச் சொல்லி அவருடைய சம்பளத்தை உயர்த்த சிபாரிசு செய்தார். நாளடைவில் ஒப்பந்தந்த்தில் சில மாற்றங்கள் வந்து 3 ஆண்டுக்கு ஒருமுறை ஒப்ப்ந்தத்தை புதுப்பித்தால் போதுமென்றும், வருடாந்தர விடுமுறை சலுகையுமுண்டு என்றும் நிலை மாறியது. இதனால் ஜி.இராமநாதன் இசையில் ‘வளையாபதி’, ‘தேவகி’ ஆகிய படங்களில் ஜோஸின் வாசிப்பும் இடம்பெற்றது.

சில வருடங்களில் வானொலி நிலையத்தில் குழுவில் வாசித்ததோடன்றி தனியாக கச்சேரிகள் செய்யவும், இசை நிகழ்ச்சிகள் தயாரிக்கவும், பக்திப் பாடல்களுக்கு மெட்டமைத்து வானொலி நிகழ்ச்சிகளில் வெளியிடவும் வாய்ப்புகள் அமையவும் திரைப்படங்களுக்கு வாசிப்பதை நிறுத்திக் கொண்டார். விலகினாலும் நண்பர்களுடன் பேசும்போதெல்லாம் ஜி.இராமநாதனின் மேதமையை வியந்து பாராட்டிக் கொண்டே இருப்பார் ஜோஸ் என்கிறது ஸ்ருதி பத்திரிக்கையில் வந்துள்ள குறிப்பு.

 ஜோஸின் நண்பர்கள், ’24 நான்கு மணி நேரத்தில் 24 வார்த்தைகள்தான் பேச வேண்டும் என்று கணக்கு வைத்திருப்பார் ஜோஸ்’, என்று அவரைக் கிண்டல் செய்வதுண்டு. அந்த சுபாவத்தினாலோ என்னமோ அவருக்கு வந்திருக்க வேண்டிய அளவு வாய்ப்புகள் அவரை வந்தடையவில்லை. பெரும்பாலும் வானொலி நிலையத்துக்குள்ளேயே அவருடைய இசை வாழ்க்கை சுழன்று முடிந்துவிட்டது.

ஜோஸிடம் நெருங்கிப் பழகியவர்கள் அவர் அமைதியானவர் என்றாலும் அவர் கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகாதவர் என்பதைத் தெரிவிக்கின்றனர். சில முறை பெரிய பக்கவாத்தியங்களுடன் கச்சேரி செய்யும் வாய்ப்பு அமைந்த போதும், “அவர்கள் வாசிக்கும் அளவுக்கு என் சங்கீதம் வளரவில்லை”, என்று தட்டிக் கழித்திருக்கிறார். நண்பர்களுடன் பேசும் போது, “தில்ருபா மிகவும் மென்மையான வாத்தியம். அதன் சுநாதம் கெடாமல் வாசிக்க எனக்குத் தகுந்த பக்க வாத்தியங்கள்தான் பொருத்தம். பெரிய பக்கவாத்தியம் என்று போட்டுக் கொண்டுவிட்டு எனக்குத் திருப்தியில்லாமல் வாசிக்க விருப்பமில்லை.”, என்று கூறியுள்ளார்.

37 வருடங்கள் வாசித்த பின் திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து 1980-ல் ஓய்வுபெற்றார் ஜோஸ். இது போன்ற அபூர்வ கருவி பணிநீட்டிப்புக்கு வாய்ப்புகள் இருந்தும் அவருக்கு ஏனோ நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. பணி ஓய்வுக்குப் பின் தொலைகாட்சியிலும், வானொலியிலும் இருந்து வரும் அழைப்புகளை ஏற்று கச்சேரிகள் செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாய் அவற்றுள் சில பதிவுகள் இன்றும் பார்க்கக்/கேட்கக் கிடைக்கின்றன.

அவருக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ள வயலின் வித்வான் காரைக்குடி எம்.எஸ்.மணி, “நாங்கள் அவரைவிட இளையவர்கள் என்பதால் உரிமை எடுத்துக் கொண்டு, பக்கவாத்தியத்தை அடக்கி வாசியுங்கள். தில்ருபாவில் வெளிப்படும் நுணுக்கங்கள் குலைந்துவிடக் கூடது என்பதில் கவனமாக இருங்கள் என்று கூறுவார். ’என்னுடன் இந்தக் கருவி போய்விடக் கூடாது, உங்களைப் போன்ற வாத்தியக் கலைஞர்களுக்கு இதை வாசிப்பது சுலபம்தான். நானே முதலில் வயலின் கற்றுக் கொண்டு பின்புதான் இந்த வாத்தியத்தைத் தேர்ந்தெடுத்தேன். உங்களுக்கு நேரமிருக்கும்போது வந்து கற்றுக் கொள்ளுங்கள்’, என்று இங்கு வரும்போதெல்லாம் கூறுவார். எங்களுக்குத்தான் போய்க் கற்றுக் கொள்ள கொடுத்துவைக்கவில்லை.”, என்கிறார்.

ஜோஸிற்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என்கிறது ஸ்ருதி பத்திரிக்கை குறிப்பு. நான் பேசிய தொலைபேசி உரையாடலில் அவருடைய மகள் வித்யாவும் மகன் சுரேஷ் பாபுவும் இசையில் ஈடுபாடு கொண்டவர்களாகவே தோன்றினர். தங்கள் தந்தையார் இசையைத் தொழிலாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறியதாக இருவரும் தெரிவித்தனர்.

10 ஜூலை 1999-ல் ஜோஸ் மறைந்தார். ’தொடர்பவரில்லா முன்னோடி’ (Pioneer without followers) என்று அப்போது வெளியான அஞ்சலிக் குறிப்பு அவரைக் குறிப்பிடுகிறது. 

தொடர்புள்ள பதிவு:

இசைவாணர்

விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை”

  1. தில்ரூபாவில் கர்நாடக இசை, அதன் மென்மை, திண்ணமாக அதன் அழகியலை போற்றிக் காப்பதற்காகவே வாய்ப்புக்களைத் தவறவிட்ட ஜோஸ், காட்டில் காய்ந்த நிலவின் அருகே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார் திரு. லலிதாராம். அருமை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.