நடமிடும் விரல்கள்

This entry is part 2 of 22 in the series இசைவாணர்

அந்தக் குழந்தை பிறந்த இரண்டாம் நாள். அவர்களின் வழக்கப்படி, குழந்தையின் தந்தை அதன் வலது காதில் நற்சொல் ஒன்றைச் சொல்ல வேண்டும். குறைந்தது ‘குரோஷி’ என்ற குடும்பப் பெயரையாவது காதில் ஓத வேண்டும். தந்தை சொன்ன சொல் ‘தாளம்; என்பது. லயத்தால் உலகை ஆளப்போகும் ஒரு பிள்ளை கேட்ட முதல் சொல், அவரது ரசிகர் ஒருவர் சொன்னது போல். இறைவன், நல்லிசையைக் கற்பித்தே ஒரு சிலரை பூமிக்கு அனுப்புகிறான் என்பதை மெய்ப்பிக்கிறது. மூன்று வயதில் தபேலாவை அவரது தந்தையும், மகத்தான மேதையும், பஞ்சாப் கரானாவில் உன்னதத்தைத் தொட்டவரும், குருவுமான அல்லா ராக்கா சிறுவனுக்கு அறிமுகம் செய்கிறார். முன்னுச்சியில் முடி விழுந்து விழுந்து மறைக்கிறது, எட்டி எட்டி பிஞ்சு விரல்கள் கருவியின் மேற்புறத்தைத் தட்டுகிறது. ஆரம்பமாயிற்று குருகுலக் கல்வி. தாளம் எந்த அளவிற்கு அவரை ஆட்கொண்டதென்றால், அம்மாவின் சமையல் பானைகளையும் அது விட்டுவைக்கவில்லை; சமயங்களில், அந்தப் பானைகளில் இருக்கும் உணவுப் பண்டங்களைக் கீழே கவிழ்த்து, வாய் கவிழ்ந்த கலத்தில் தாளமிடும் விரல்கள் என லயம் அவரைப் பிரியாதிருந்திருக்கிறது.

அப்படியும், சிறுவர்களுக்கே உரித்தான தெரு விளையாட்டிலும், குறிப்பாக கிரிக்கெட்டிலும், அவருக்கு ஆர்வம் அதிகரிக்கிறது. ஒரு நாள் தந்தை சொல்கிறார் “உன் விரல்கள் மட்டை பிடிக்கப் போகிறதா, தபேலா நாதத்தை வனையப் போகிறதா என்பதைத் தீர்மானம் செய். கைகளை ஒரு செயலிற்கு பழக்கி விட்டால், மற்றதில், அதன் பங்களிப்பு சுமாராக இருக்கும்.” அன்றிலிருந்து 24 மணி நேரமும் வாத்யம், வாசிப்பு, பயிற்சி. பதின்ம வயதில் தந்தையுடன் மேடையேற்றம், சிதார் ரவிஷங்கர், குழல் சௌராசியா, சந்தூர், சரோத் இசையில் சிறந்தோர், போன்ற விற்பன்னர்களுக்குத் தந்தை வாசிக்க, தானும் கேட்டு இணைந்து கொண்ட அபூர்வத் தருணங்கள் என வரப்பிரசாதமான ஒரு வாழ்க்கை. அமரிக்க மேடையில், இளம் வயதிலேயே சிதார் மேதை ரவிஷங்கருக்கு இவர் பக்க வாத்தியக்காரர். சங்கர் மகாதேவன் சொன்னார்:” உஸ்தாதிடம், ஒருப் பெரிய பொக்கிஷப் பெட்டி இருந்தது. கேட்கும் ஒலியிலெல்லாம், நாதத்தை, தொனியை, கார்வையை, பிரபஞ்ச ஒலியை அவர் அந்தப் பெட்டியில் சேகரித்து வைத்திருந்தார். பொருந்தும் இடத்தில், நினைவிருந்து அனாயாசமாக மீட்டு நம்மை அசத்தி விடுவார்.”

மார்ச் 9,1951ல் பிறந்த தபேலா மேதை ஜாகிர் உசேனுடன் தன் பிறந்த தினம் மற்றும் மாதத்தை பகிர்ந்து கொள்ளும், சலிம் மெர்ச்செண்ட் சொல்கிறார்: இசை வெள்ளத்தில் உலகை மிதக்க வைத்த அவர், அமெரிக்காவில் வசித்த போதும், தன் இந்தியக் கடவுச்சீட்டை இறைவன் என மதித்தார். உலகம் முழுதும் பயணம் செய்து கொண்டேயிருந்தாலும், இந்தியக் கடவுச் சீட்டு என்பதால், வெளிநாடுகளுக்குச் செல்ல ஒவ்வொரு    முறையும் விசா கிடைக்க விண்ணப்பிக்க வேண்டும். ‘இந்திய வம்சாவளியினர் அட்டை’, இந்தத் தொல்லையைப் போக்கும் என்று மெர்ச்செண்ட் அவரிடம் சொன்ன போது, ‘என் இந்தியக் கடவுச் சிட்டு என் கடவுள்’ என்று சொன்னாராம் ஜாகிர். சரஸ்வதியையும், கணபதியையும் இசை வழிபாட்டுத் தெய்வங்களென அவர் சொன்னது இந்த மண்ணின் வாசம் வீசும் சொற்கள்.

அவரது தபேலா வாசிப்பில் அப்படியென்ன சிறப்பு? அது ஒரு தாள வாத்தியம் தானே? பக்க வாத்தியமாகத்தானே இருக்கிறது? அரங்கிற்கு வரும் வரை சிரிப்பும், பேச்சும், கேலியும் கிண்டலுமாகத்தான் இருப்பாராம். மேடை ஏறியவுடன் இரசிகர்களை, இசைக் கலைஞர்களை அவரது கண்கள் பார்த்தாலும், இசை ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் அவருக்குப் புலப்படாது. ‘கோபாலி மேடைக்கு வருவது தெரியும், உட்கார்ந்திருப்பது தெரியும், உட்காருவது தெரியாது, மைனா கிளையில் அமர்வதைப் போல’ என்று மரப்பசுவில் தி ஜா எழுதியிருப்பார். ராக ஆலாபனையின் போது அவரது கவனம் முழுக்க ஸ்ருதியில் இருக்கும்; சின்னச் செல்லத் தட்டலுடன் ஒற்றை ஓசை வரும். பிறகென்ன, கலைஞருக்கும் இவருக்குமான கொடுக்கல் வாங்கலில் மொத்தப் பரிசும் ரசிகருக்கே. இரு கைகளின் விரல்கள், விரிந்தும், குவிந்தும் வரும் பாங்கில் மொழியின் ஒலி கேட்கும். விரல் நுனிகள் இடது கையில் குவிந்து இசைக்க, வலது கை விரல்கள் பரந்து வாசிக்கும் போது தாளக் கட்டுகள் கேட்கும். முன் கைகள் தபேலாவை எட்டி விலகும் மாயத்தில், கார்வைகள் அரங்கை நிறைக்கும். அதிக கீர்த்தனைகள் இல்லாத இந்துஸ்தானி சங்கீதத்திலும், இவரது லயம் கீதமென இசைக்கும். ஒரு முறை, தபேலாவின் அருகில் குடிப்பதற்காக வைத்திருந்த மூடிய கண்ணாடிக் குவளையில் இவர் மழைக்கான தாளத்தைக் காட்டுவதற்காக கை விரல்களால், குவளையில் தட்டி எழுப்பிய ஒலி, அம்ருதவர்ஷினியின் முதல் முத்துத் துளி. வலது கை, ஊஞ்சலைப் போல சற்று மேலெழுந்து கீழே வந்து தபேலாவில் அமரும் வினாடியில் எழும் நாத இன்பத்தைச் சொல்ல என்னிடம் மொழியில்லை.

இந்த இந்தியரை உலக மகன் எனத்தான் சொல்ல வேண்டும். உணர்ச்சிகளை உண்டாக்கும் மாயம் அந்தக் கைகளில் இருந்தது. தபேலா பேசியது, அது மரபு இசையை ரசிப்பவரை ஆச்சர்யப்பட வைத்தது. உலக இசையை விரும்புவர்களைத் துள்ளிக் குதிக்க வைத்தது, திரையிசை ரசிகர்களைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றது. சிக்கலான ஒலிக் கோர்வையா, பல பரிமாணங்களைக் காட்ட வேண்டுமா, இயங்கு வேகம் துல்லியமாக இருக்க வேண்டுமா, அடர்ந்த காட்டில் தாவிச் செல்லும் மானை அரங்கில் கொண்டுவர வேண்டுமா, அனைத்தையும் அந்த மாய விரல்கள் செய்யும்.. தபேலா வெறும் தாள வாத்தியம் மட்டுமல்ல, அது இனிமை கலந்த நாதம், அதுவும் இசை மொழியை உணர்த்தும் அற்புதக் கருவி, அது இந்திய இசைக்கு மட்டுமானதல்ல, உலகின் எந்த இசைக்கூறுக்கும் பொருந்தும் சுநாதம் என்று நிரூபித்தவர் அவர்.

19 வயதில், அவர் வாஷிங்டன் பல்கலையில் கற்பிக்கும் ஆசிரியர். பிறகு உஸ்தாத் அலி அக்பர் கான் நடத்திய சான் பிரான்சிஸ்கோ இசைக் கல்லூரியில் ஆசிரியப் பணி. அங்கே காதலித்த அன்டோனியா மின்னெகோலாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண்கள். அவரால், வளரும் தொழில் நுட்பத்தையும், ஒலியின் ஆன்மாவையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு குருவாய், வழி நடத்தும் தலைவராய், நண்பராய் எளிதாகத் தன்னை தகவமைத்துக் கொண்டார். பல தலை சிறந்த கலைஞர்களுடன் அவர் ஏறாத உலக மேடையில்லை என்றாலும், தனது கடைசி 20 வருடங்களில் அவர் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கும் தபேலா வாசித்தார். தனது பெருந்தன்மையால் அவர்களை அரவணைத்தார். ராகுல் ஷர்மாவின் சந்தூருக்கு அவர் வாசித்த அக்டோபர் கச்சேரி, ஜாகிரின் கடசி மேடையாக இருக்கும் என யார் நினைத்தார்கள்?

இந்தியாவின் கலாசாரத் தூதுவர் என்றே பாரட்டப்படுகிறார். அறுபது ஆண்டுகளாக அயராது ஒலித்த லயம் அவரது சொத்து. புதுமையை நோக்கிய அவரது பயணம், அவரை மேலை இசையுடன் சேர்த்து புதிய ஒலி நயங்களை படைக்க வைத்தது. ஜார்ஜ் ஹேரிசன், வேன் மோரிசன், சார்லஸ் லாய்ட், மிக்கி ஹார்ட், ஜான் மெக்லாலின், எட்கர் மெயர், பேலா ஃபெல்க், ரிக்கி கெஜ், ஜோ ஹென்டர்சன், ஏர்டோ மொரேரா, பேரோ சேன்டர்ஸ், பில்லி காபம், மார்க் மோரிஸ், ரென்னி ஹேரிஸ், ஜியோவாணி ஹிடால்கோ, சிகுரு அடபோஜு, அலாஞ்சோ கிங், இசதோரா, போன்ற மேதைகளுடன் அவர் படைத்தவைகள் ரசிக விருந்துகள்.

1973ல் ஜாஸ் கிடார் இசைக் கலைஞரான ஜான் மெக்லாலினுடன், வயலின் இசைக் கலைஞரான எல்,சங்கருடன் இணைந்து அவர் இந்திய ஜாஸ் வடிவ ‘சக்தி’யை அறிமுகப்படுத்தினார். மேற்கத்திய ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒலியியல் புதுமை அது. உலக இசை ஆல்ப விருதை ‘சக்தி’ பெற்றது. ஜான், ஜாகிரைப் பற்றிச் சொல்லும் போது “அவர் ஒரு அரசர். அவர் கைகளில் மாய வசீகரம் உள்ளது” என்றார்.

எட்கர் மெயர், பேலா ஃபெல்க், ராகேஷ் சௌராசியாவுடன் இணைந்து அவர் வழங்கிய இசை நிகழ்ச்சி உலகின் சிறந்த இசை நிகழ்வு எனவும், சிறந்த வாத்தியங்களின் ஒத்திசைக் கோர்வை எனவும் கொண்டாடப்பட்டது. 

1992ல் ட்ரம் இசைக் கலைஞரான மிக்கி ஹார்ட்டுடன் அவர் வெளியிட்ட ‘பிளேனெட் ட்ரம்’ சிறந்த அறிமுக இசைப் பிரிவில், உலக இசைக்கான ஆல்பம், என்று பாராட்டப்பட்டு கிராம்மி விருதைப் பெற்றது.

கிராம்மி விருதிற்காக ஏழு முறை பரிந்துரைக்கப்பட்டு 4 முறை விருது பெற்ற பெருமையாளர் இவர். அதுவும் ஒரே வருடத்தில் மூன்று கிராம்மிகள் பெற்ற சாதனையாளர்.

பீட்டில்ஸ் புகழ் ஜார்ஜ் ஹேரிசன், செல்லிஸ்ட் வேன் மோரிசன், யோ-யோ-மா ஆகியோருடன் நிகழ்ச்சிகளிலும், இசைக் கோப்புகளிலும் பங்கு பெற்றவர்.

தபேலா ஒலி அறிவியல், சங்கம் ஆகிய கோப்புகளை, சார்லஸ் லாய்ட் மற்றும் ஹார்லேன்ட்டுடன் அவர் படைத்தளித்தார். ஒலி நுணுக்கங்கள் சிறப்பாக வெளிப்பட்ட ஆல்பங்கள் அவை.

மிக்கி ஹார்ட், ஹிடால்கோ, சிகிரு ஆகியோருடன் இணைந்து அவர் வெளியிட்ட ‘உலக லய திட்டம்’ என்ற கோப்பு கிராம்மியை வென்றது.  1987ல் தனியாக அவர் வெளியிட்ட ‘மேகிங் ம்யுசிக்’ சிறந்த கிழக்கு- மேற்கு இசை இணைப்பாகக் கொண்டாடப்பட்டது. 1986ல், இணை இசையமைப்பாளராக, அட்லாண்ட் கோடை ஒலிம்பிக்ஸ் கீதம் அவருக்குச் சிறப்பைப் பெற்றுத் தந்தது. 1998ல் கிங் படைப்பில் பாலே இசையமைப்பு இவருடையது. அதற்காக இசதோரா டங்கன் விருதும் பெற்றார்.  கிங்குடன் அமெரிகன் ஆல்வின் எய்லி தியேட்டருக்காக நடன இசைக்கான புது வடிவை உருவாக்கித் தந்தார்.  1998ல், சான் ஃப்ரான்சிஸ்கோ ஜாஸ் விழாவிற்காக இவர் தனிப்பட்ட சிறந்த இசையை உருவாக்கினார். இதனால் இவரை சிறந்த உலகிசை கலைஞன் என்றும், சிறந்த லய இசைப்பாளர் என்றும் கொண்டாடுகிறார்கள்., அப்படி ஒரு விருதும் கிடைத்தது. ஃப்ரான்ஸ் நாட்டின் ‘ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ்’ அங்கீகாரம் உயரிய ஒன்று. மார்க் மோரிஸ், நடன இயக்குனர், ‘கோலம்’ என்றொரு திட்டச் செயல் துவக்க நிகழ்வில் வெளியீட்டு இசையை வழங்க யோ-யோ- மாவையும், இவரையும் இணைத்தார் அது யோ- யோ- மாவின் ‘சில்க் ரோட்’ திட்டம். 

திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர்.  மெர்ச்சென்ட்-ஐவரியின் ‘ஹீட் & டஸ்ட்’ ‘இன் கஸ்டடி’, பெர்டொலூசியின் ‘லிட்டில் புத்தா’ , மிஸ்டர் & மிசஸ் ஐயர் போன்றவை சில. சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் கை பதித்து வெற்றி அடையதாத துறை என ஏதுமில்லை. இந்தியாவின் புகழ் பெற்ற விளம்பரம் ‘வாஹ், தாஜ்’ அதில் தபேலா வாசித்து தேநீரில் அவர் லயிக்கும் அழகை வியக்காத மனிதரில்லை. அதில் சிறு பையனாக அவருடன் தபேலா வாசித்த ஆதித்ய கல்யாண்பூர் இன்று பேர் சொல்லும் தபேலா கலைஞர்.

பல விருதுகள், பல பாராட்டுதல்கள், என அனைத்தும் பெற்றவர் எனினும், புகழில் மூழ்கிப் போகாதவராக இருந்தார். ‘என்னால் கலைக்குப் பெருமை புதிதாகச் சேரவில்லை; கலையால் நான் பெரும் பேறுற்றேன். நான் இசையில் செய்ய வேண்டியதும், பயணிக்க வேண்டியதும் அதிகம். இந்த விரல்கள் அதுவரை ஏன் ஓய வேண்டும்?’ என்று சொன்னார் அவர்.

இந்திய அரசு தன் கலைமகனை 1988ல் பத்ம ஸ்ரீ கொடுத்தும், 2002ல் பத்மபூஷண் அளித்தும், 2023ல் பத்மவிபூஷண் கொடுத்தும் சிறப்பித்துள்ளது. இந்தியாவின் 60 வது சுதந்திர தினத்திற்கான இசை அமைக்கும் கௌரவம் பெற்றார் இவர். மரபிசைக் கலைஞர்களும், பாப் இசைக் கலைஞர்களும் பங்கேற்ற அது ‘ஜெய் ஹிந்த்’ எனும் தேசியப் பாடலாக அமைந்து அனைவரையும் ஈர்த்தது 1991ல் இந்திய சங்கீத நாடக விருதை இளம் வயதில் பெற்ற இசைக் கலைஞர் இவரே.

இந்திய- அமெரிக்க பண்பாட்டு இசைத் தூதர் என்ற பெருமையும் 1990லேயே இவருக்குக் கிடைத்து விட்டது.  அமெரிக்காவின் ‘நேஷனல் ஹெரிடேஜ் ஃபெல்லோஷிப்’ இவருக்கு கிடைத்த மற்றொரு கௌரவம். ஒலியியல் புதுமைகளைச் செய்ய உதவிய ஒன்று அது.

1992ல் ‘மொமென்ட் ரெகார்ட்ஸ்’ என்ற ஒன்றைத் தனியாகத் தொடங்கினார். உலக இசையின் கோப்புகள், நுணுக்கங்கள், இந்திய மரபு இசை, தென் இந்திய இசை, ‘சக்தி’ ஆல்பங்களின் சிறப்பான இசை, ’‘மாஸ்டர்ஸ் ஆஃப்  பர்குஷன் தொடர்’ தனது வாசிப்புகள், என்ற சிறப்பான ஒரு  அருமை அது. ஆஷிஷ் கானின் ‘தங்க சரோத் இசைக்கு இவர் தபேலா வாசித்த அந்த அருமையான பதிவு 2007 கிராம்மி பட்டியலில் இடம் பெற்றது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சந்தூர் இசைக் கலைஞரான ஷிவ் குமார் ஷர்மாவுடன் தபேலா வாசித்த பதிவை தற்செயலாக யூட்யூபில் பார்த்தேன். இந்துஸ்தானி சிவரஞ்சனி. அவர் கீழ் ஸ்தாயீயில் மெலிதாக மீட்டினால், தபேலா அதை வாங்கிப் பாடுகிறது. அது மத்தியில் நுழைந்தால் மேலேற்றிக் கொடுக்கிறது, அது வேகமெடுத்தால், இது நர்த்தனமாடுகிறது. ப, ச, ச. தா. ரீ,சா சா கேட்டுப் பாருங்கள்.

15/12/2024 அன்று நுரையீரல் தொற்று குணமாகாமல் அவர் இறந்தார். காலமெல்லாம் நிலைத்திருக்கும் ஒலி எழுப்பியவருக்கு மரணம் என்பதே இல்லையல்லவா? உலகின் மிகச் சிறந்தவைகள் இதயங்களால் அறியப்படுகின்றன. அவர் நிரந்தரமானவர், என்றும் அழிவதில்லை.

உசாவித் துணைகள்:

காணொலிகள் மற்றும்

https://www.theguardian.com/music/2024/dec/16/zakir-hussain-legendary-indian-tabla-musician-dies-aged- #:~:text=Zakir%20Hussain%2C%20one%20of%20India’s,family%20said%20in%20a%20statement

Remembering the man who became Indian music’s global ambassador

இசைவாணர்

அசைந்தாடு சீலை ஆலாபனம் – உஸ்தாத் அஞ்சலி துவாரம் மங்கத்தாயாரு

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “நடமிடும் விரல்கள்”

  1. விரல்களின் அசைவுகளை ஒரு நடனமாக ஒப்பிட்டு, அவற்றில் உள்ள ரிதம், நுணுக்கம் மற்றும் படைப்பாற்றலை எவ்வாறு ஜாகீர் ஹுசைன் திறமையாக வெளிப்படுத்தினார் என்பதை பானுமதி அவர்கள் கவிதைநயமான மொழியினில், தனக்கே உரிய எளிய நடையில் இழைத்துள்ளார். பாராட்டுக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.