துக்காராம் கவிதைகள்

தமிழாக்கம் : க.மோகனரங்கன்

1
வார்த்தைகள் மட்டுமே
நான் அணிந்திடும் ஆபரணங்கள்
வார்த்தைகள் மட்டுமே
நான் உடுத்திடும் உடைகள்
வார்த்தைகள் மட்டுமே
நான் உண்ணும் உணவு
என் வாழ்க்கையை
அதுவே தாங்குகிறது
நான் மக்களிடையே
செலவழிக்கிற செல்வம்
வார்த்தைகள் மட்டுமே
துக்கா கூறுகிறார்
வார்த்தையை கவனி
அதுதான் கடவுள்.
அக் கடவுளை வார்த்தைகளால்
வணங்குகிறேன் நான்.

2
எல்லா மனிதர்களும்
எனக்கு கடவுளைப் போன்ற
கடவுளர்கள்!
இனியும் என் கண்களுக்கு
தெரியாது குற்றமும் தவறும்.
இத் துயரமான உலகில் வாழ்க்கை இப்போது முடிவில்லா மகிழ்ச்சி; இதயம்
நிறைவில்,
முழுமையாக,
நிரம்பி வழிகிறது.
கண்ணாடியில்,
முகமும் அதன் பிரதிபலிப்பும் —
ஒன்றையொன்று
உற்று நோக்குகின்றன;
இரண்டும் வேறுபட்டது,
இருப்பினும் ஒன்று.
தவிரவும், நீரோடையானது
கடலில் கலந்தபிறகு…
இனியும் அது ஓடை அல்ல!

3
உங்களுடன் ஒருவர் எங்கிருந்து தொடங்குவது?
ஆண்டவரே, உங்களிடம் தொடக்க வரி இல்லை
உங்களிடமிருந்து ஆரம்பிப்பது மிகவும் கடினம்.
என்னுடைய எல்லா திறமைகளையும் நீங்கள் பயன்படுத்திய போதிலும்,
நான் முயற்சித்த அனைத்தும் தவறாகிவிட்டது.
நான் சொன்னது வானில் மறைந்தது
நான் மீண்டும் தரையில் விழுந்தேன். துக்கா கூறுகிறார்:
என் மனம் உறைந்து விட்டது
உச்சரிப்பதற்கு ஒரு வார்த்தையும் கிடைக்கவில்லை.

4
தண்ணீர் தன்னைத்
தானே பருக முடியுமா?
ஒரு மரம்
தன் கனியை
தானே சுவைக்க முடியுமா?
கடவுளை வணங்குபவர் அவரிடமிருந்து விலகியிருப்பது அவசியம்.
அவ்விதமாகவே ஒருவர்
கடவுளின் அளப்பறிய அன்பை அறிந்து கொள்ளவியலும்.
மாறாகத் தானும் கடவுளும்
ஒன்றே என்று
ஒருவர் சொன்னால்
அந்த மகிழ்ச்சியும் அன்பும் அக்கணமே மறைந்துவிடும்.

5
நான் பேசுகிறேன்,
இருப்பினும்
நான் அமைதியாக இருக்கிறேன்:
நான் இறந்துவிட்டேன்,
இன்னும் நான் வாழ்கிறேன்:
நான் இதே உலகில்தான் இருக்கிறேன்,
இருப்பினும் இவ் உலகத்திற்கு அப்பால் வசிக்கிறேன்:
என்னிடமிருந்த
எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டேன்,
இருப்பினும் செல்வந்தனாகவும்
மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.
நான் தனியே இருக்கிறேன்
இருப்பினும் தனிமையில் இல்லை:
எப்படி தோன்றுகிறேனோ
அப்படி நான் இல்லை:
நான் என்னவாக இருக்கிறேன்
என்று நீங்கள் அறியவிரும்பினால்,
என் இறைவன்
இதோ இருக்கிறார்
அவரிடம் கேளுங்கள்.

6
குறிப்பிட்ட
சில வரிசைப்படி
வார்த்தைகளை
கூட்டிவைப்பது என்பதும்
கவிதையின் உள்ளொழுங்கும்
ஒன்றே போல்வன அன்று
கவிதையின் உண்மையானது
உண்மையாக இருப்பது
உண்மையின் அனுபவமாகத் திகழ்வது
உலையின் கொதிநிலைக்கு
ஓர் ஆபரணமும் தாக்குபிடிக்காது
நெருப்பில் வெளிப்படுவது
உருகியத் தங்கம்தான்.
துக்கா சொல்கிறார்:
நாம் இங்கு வந்ததன் நோக்கம்
நம்மை வெளிப்படுத்திக்கொள்ளவே
வார்த்தைகளை
விரயம் செய்வதற்கல்ல.

7
வழிபடுபவர் இல்லாமல்,
இறைவன் எப்படி
ஒரு வடிவம் எடுத்து
பணிவிடையை ஏற்க முடியும்?
தங்கத்தின் வேலைப்பாடு
ஆபரணத்தை தோற்றுவிப்பது போல அந்தவொன்று மற்றொன்றை அழகாக்குகிறது.
கடவுளைத் தவிர வேறு எவரால் பக்தர்களை அவர்களது பற்றுதல்களிலிருந்து
முற்றிலுமாக விடுவிக்க முடியும்?
துக்கா கூறுகிறார்,
அவர்கள் தாயும் சேயும் போல ஒருவருவருக்கொருவர் ஈர்க்கப்படுகிறார்கள்.

துக்காராம்

மகாராஷ்டிராவில் புனே அருகில் உள்ள தேகு என்னும் சிற்றூரில் கி.பி. 1608 ல் பிறந்தார். அவருடைய குடும்பத்தினர் பண்டாரிபுரம் விட்டலரை பாரம்பரியமாக வழிபடும் வழக்கமுடையவர்கள். பெற்றோர்களின் எதிர்பாராத இறப்பும் முதல் மனைவியின் மரணமும் தொழிலில் சந்தித்த நட்டமும்  சேர்ந்து துக்காவை இளம் வயதிலேயே மிகுதியான ஆன்மீக தேட்டமுடையவராக ஆக்குகின்றன.

இறை நாட்டத்தில் எந்நேரமும் மூழ்கியவராக ஏராளமான பக்தி பாடல்களை பாடுகிறார். அவர் இயற்றிய ‘அபங்’ எனப்படும் விட்டலரை விதந்தோதும் 5000 க்கும் அதிகமான மராத்தி செய்யுள்கள் வெகுமக்களிடையே அவர் புகழை பரவச்செய்தது. அவருடைய பாடல்களில் இறை நம்பிக்கையோடு சமூக ஏற்றத்தாழ்வுகள், சடங்காசாரங்கள் குறித்த விமர்சனங்களும் சமமாக இடம்பெற்றிருந்தன. அவர் இந்திய பக்தி மார்க்கத்தின் முக்கிய கவிஞராக மட்டுமல்லாமல் சமய சீர்திருத்தவாதியாகவும்  அறியப்படுகிறார். 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.