பூட்டிய வீடு

Minimetal, Martin Ain (1967-2017)
Kill Them All in Paradise, 2008

வாசற்கதவின் வெளிப்பக்கத்திலிருந்து க்ளிக் க்ளிக் என்று சப்தம் வந்ததை உணர்ந்தாள் காயத்ரி. சின்ன ஓசைதான். தூங்காமல் விழித்துக்கொண்டு கிடந்ததில் அது பூதாகரமாகக் கேட்டது அவளுக்கு. ப்ரேம் திரும்பி வந்துவிட்டான். கதவுப் பூட்டை வெளிப்புறத்திலிருந்து திறக்கிறான். அந்த நள்ளிரவின் தனிமையில் படுக்கையில் புரண்டுகொண்டு இந்தச் சப்தத்திற்காகத்தான் அவள் காத்துக்கொண்டிருந்தாள். இன்னும் சரியாகப் பழகாத இந்தப் புறநகர்ப் பகுதியில், இந்தத் தனிமையான குடியிருப்புப் பகுதியில், இந்தத் தனி வீட்டில், இந்த இரவு நேரத்தில் முதன் முதலாக அவளைத் தனியாய் விட்டுச் சென்ற கிராதகன். காயத்ரிக்கு இப்போது கொஞ்சம் ஆசுவாசமாயிருந்தது. 

தெருவில் நாய் ஒன்று ஊளையிடுகிற சத்தம் கேட்டது. 

கதவு திறக்கப்பட்டு இருளில் அவன் உள்ளே வருவது சில்லவுட்டாகத் தெரிந்தது. காயத்ரி கதவருகே சென்று லைட்டைப் போட்டாள். மறுகணம் அதிர்ந்தாள். உள்ளே வந்தது ப்ரேம் அல்ல. வேறொரு ஆள். அவனுடன் இன்னொரு சின்னப் பையனும் தெரிந்தான்.

”ஏய்..! யார் நீங்கல்லாம்?” என்று பதட்டமாய் ஓரடி பின் நகர்ந்தாள்.

காயத்ரி அடைந்த அதிர்ச்சிக்கு சற்றும் குறைவில்லாமல் அவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். பூட்டிய வீட்டுக்குள் ஆள் இருப்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. 

அந்த ஆள் நொடியில் சுதாரித்து அவளருகே பாய்ந்து கையில் வைத்திருந்த இரும்பு ராடை அவள் தலைக்கு மேல் ஓங்கினான். “சத்தம் போட்டேன்னு வெய்யி.. அப்பால ஒரே எறக்கு.. புர்தா?” என்றான் தணிந்த மிரட்டல் குரலில். சாராய வாசம். லுங்கி கட்டியிருந்தான்.

சடுதியில் அந்தப் பையன் கதவை உள்பக்கமாக தாளிட்டான். “இன்னும் யார்லாம் கீறாங்க?” முதலில் உள்ளே நுழைந்த ஆளின் கண்கள் உள்ளறைகளுக்குள் அலைபாய்ந்தன. “டேய்.. பார்ரா..”

அந்தப் பையன் தயக்கமாய் படுக்கையறை, சமையலறைக்குள் எல்லாம் மெல்ல எட்டிப் பார்த்துவிட்டு வந்தான். வேறு யாருமில்லை என்பது போல கைவிரல்களை மட்டும் அசைத்துக் காட்டினான்.

நிலைமையின் தீவிரத்தில் உறைந்து போய் நின்றாள் காயத்ரி. இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டாள். மிகப்பெரிய பயம் ஒன்று மலைப்பாம்புபோல் அவளைச் சுற்றிப் பின்னிப் படர ஆரம்பிக்க செய்வதறியாது சிலைமாதிரி நின்றாள். யார் இவர்கள்? வாசல் கதவின் சாவி இவர்களுக்கெப்படிக் கிடைத்தது? எப்படித் திறந்தார்கள்? இவர்கள் நோக்கம் என்ன? என்ன நடக்கப்போகிறது இப்போது? தடதடத்து அதிரும் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.

ப்ரேம் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அவன் நண்பனைப் பார்க்க அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போயிருந்தான். “அவனப் பாத்து ஆறு வருஷம் ஆச்சு. திரும்பி வர்ரதுக்கு மிட் நைட் ஒரு மணி, ரெண்டு மணிகூட ஆகலாம். சில சமயம் ரொம்ப லேட்டானா அவன் ரூம்லயே தங்கிட்டு காலைல வந்துர்ரேன். நான் வெளில பூட்டிட்டு சாவியை எடுத்துட்டுப் போறேன். வந்தா நானே திறந்துக்கறேன். நீ தூங்கு..” என்று சொல்லிச் சென்றிருந்தான்.

கல்யாணமாகி இந்த மூன்று மாதத்தில் இதுவரை அவன் இப்படி அவளைத் தனியே விட்டுப் போனதில்லை. வழக்கமாக அலுவலகம் விட்டு ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவான். அதிகம் நண்பர்களும் கிடையாது அவனுக்கு. ஆகவே வீடே கதியென்றுதான் கிடப்பான். அந்த அமெரிக்க நண்பன் மட்டும் கொஞ்சம் நெருங்கிய நட்பு. அவன் வரும்பொழுது சந்திக்கவேண்டுமென்று ரொம்ப நாளாகச் சொல்லிக்கொண்டும் இருந்தான். ப்ரேம் நள்ளிரவில் திரும்பி வருவானா, இல்லை காலையில்தான் வருவானா என்று தெரியவில்லை. இப்போது ஃபோன் பண்ணிக் கேட்கவும் முடியாது. மொபைல் டீப்பாயின்மேல் இருக்கிறது, ஆனால் எடுக்க முடியாது.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சப்தமாய்க் கேட்டாள். “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

அடுத்த கணம் அந்த ஆள் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். எதிர்பாராத அந்தத் தாக்குதலால் தடுமாறி ஸோஃபாவில் விழுந்தாள் காயத்ரி. அந்த அறை ஒரு சின்ன பயமுறுத்தலுக்காக என்பதாக உணர்ந்தாள்.

“டேய் மணி.. இந்தா, இந்த ராடைப் புடி, சத்தம் போட்டுச்சுன்னு வெய்யி, இல்ல குண்டர மண்டர எதுனா பண்ணுச்சுன்னு வெய்யி.. போட்ரு.. யோசிக்காத..” என்றான். இவளிடம் திரும்பி, “அங்கியே உக்காரு என்ன!..” என்று ஆள்காட்டி விரலை ஆட்டி எச்சரித்தான். நாக்கைத் துருத்திப் பற்களால் கடித்து மிரட்டுவதுபோல விழிகளை உருட்டினான். பிறகு மணி என்கிற அந்தப் பையன் அந்த ஆளிடமிருந்து இயந்திரகதியில் ராடைப் பெற்றுக்கொண்டு அவள் தலைக்கு மேல் ஓங்கிப் பிடித்தவாறு நின்றான். அவளை ஒரு கணம் ஊடுறுவிப் பார்த்தான். அவன் தொண்டைக்குழி லேசாய் ஏறி இறங்கியது.

காயத்ரி ஸோஃபாவில் ஒடுங்கி உட்கார்ந்தாள். அவள் உடம்பு உதறலெடுக்க ஆரம்பித்த்திருந்தது. கண்களில் நிறைந்து தளும்பின நீருடன் அந்தப் பையனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனுக்கு ஒரு பதினாறு பதினேழு வயது சொல்லலாம்போல இருந்தான். அரும்பு மீசை. மோவாயில் ஆட்டுத் தாடி. ஒல்லியாக, அளவான உயரமாக இருந்தான். அழுக்கான, கசங்கிய ஒரு வட்டக் கழுத்து பனியனும், முக்கால் ட்ரவுசரும் அணிந்திருந்தான். பனியனுக்குமேல் ஒரு சங்கிலி. ராடைப் பிடித்திருந்த கை மணிக்கட்டில் சிவப்பும் கறுப்புமாக கயிறுகளைக் கட்டியிருந்தான். அவளை உக்கிரமாக முறைத்துக்கொண்டிருந்த அவன் கண்கள் பொலிவில்லாமல் இருந்தன.

”ஒண்டியாக் கீறியா? இல்ல வேற யார்னா வருவாங்களா?” என்றான் அந்த ஆள்.

“ஹஸ்பண்ட்.. வெளில போயிருக்காரு.. இப்ப வந்துருவார்”. சொல்லும்போது அவள் குரல் நடுங்கியது. அப்படிச் சொன்னது அந்த ஆளுக்கு லேசாய் பயத்தை உண்டு பண்ணியிருக்குமா என்று பார்த்தாள். அவன் அதை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் லேசாய் எச்சில் விழுங்கினான்.

“வர்ட்டும்.. என்ன இப்போ?” என்று உருமினான் அவன். பிறகு அவன் கையில் வைத்திருந்த டார்ச்சை உயிர்ப்பித்து பூனை போல் நடந்து பக்கத்து அறைகளுக்குச் சென்று அவளைத் தவிர வேறு யாரும் இல்லை என்று அவனும் ஒரு தடவை உறுதிப்படுத்திக்கொண்டான். பாத்ரூமைத் திறந்து பார்த்தான். டீப்பாயின் மேல் மொபைல் ஃபோனைக் கவனித்து அதை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். 

அந்த ஆளுக்கு ஒரு ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து வயதிருக்கலாம். கொஞ்சம் குண்டாக இருந்தான். சுருட்டை சுருட்டையாகத் தலை மயிர். பான் பராக் காவியேறிய பற்கள். கண்கள் ஓரிடத்தில் நிற்காமல் அலைபாய்ந்தன. இருபது செகண்டுகளுக்கொருமுறை மடித்துக் கட்டியிருந்த லுங்கியை மறுபடி மடித்துக் கட்டிக்கொண்டிருந்தான். அந்தப் பையனுக்கு இவன் என்ன ஆகவேண்டும் என்று யோசனை ஓடியது அவளுக்கு.

“இன்னா.. புச்சா கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்றான். அவன் பார்வை அவள் கழுத்தின் மஞ்சள் கயிறின் மேல் படிந்தது.

அவள் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

“ஏய்.. கேக்கறன்ல..“ அதட்டலாகக் குரல் உயர்ந்தது. 

லேசாய்த் தலையசைத்தாள்.

“அதான பாத்தேன். ஊட்ல பொருள் ஒன்னியும் காணும்னு.. புச்சா கட்டிக்கிட்ட பொண்டாட்டிய ஊட்ல தனியா உட்டுனு புருஷன் எங்கியோ போய்க்கிறான்!” அடித்தொண்டையில் அதிகம் சப்தம் வராதவாறு பேசினான். அவனிடம் ஒரு மிதமிஞ்சிய பதற்றமும், நடவடிக்கைகளில் லேசான தடுமாற்றத்தையும் உணர்ந்தாள்.

காயத்ரி இரு கரம் கூப்பி. “ஐயா ப்ளீஸ், தயவு செஞ்சு போய்ருங்க.. இந்த வீட்ல ஒண்ணுமில்ல. ப்ளீஸ்.. விட்ருங்க..” சொல்லும்போது அவள் கண்களின் விளிம்பில் கோர்த்திருந்த நீர் நேர்கோடாக கன்னத்தில் வழிந்தது. ”ப்ரேம். நீ சீக்கிரம் வந்து தொலையேன்.”’ என்று மனதில் வேண்டினாள். 

“பீரோ சாவி எங்கக் கீது?” என்றான்.

”சாவியெல்லாம் தர முடியாது” என்றாள் உறுதியான குரலில். சொல்லி முடிப்பதற்குள் மறுபடி அறைவதுபோலக் கையை ஓங்கினான். காயத்ரி அநிச்சையாய்ச் உடல் சுருக்கி கைகளைத் தடுப்பதுபோல வைத்துக்கொண்டாள். முதல் அறை வாங்கிய கன்னத்தில் எழுந்த வலியின் சுவடே இன்னும் மறையவில்லை. பிறகு அந்த ஆள் வேகமாக அவளை சுவரில் தள்ளி கழுத்தில் கை வைத்து நெரித்தான். அவன் கை நடுங்குவதை உணர்ந்தாள் காயத்ரி.

“தோ.. பாரு பரதேவதே.. ரத்தம் பாக்காம வேல செய்ணும்னு பாக்கறேன். டேய் மணி.. செஞ்சுர்ரா”

மணி ஓங்கிய இரும்பு ராடை இன்னும் கோணத்தை அதிகப்படுத்தி அவள் மண்டையில் இறக்கப் போவதுபோல் பாவனை செய்ய, காயத்ரி முகம் வெளிறி, “குடுத்துர்ரேன்” என்றாள். சாமி ஷெல்ப்பை நோக்கிக் கைகாட்டினாள். அவள் இதயம் உச்சஸ்தாயியில் அடித்துக்கொண்டிருந்தது. ‘முருகா.. எந்த அசம்பாவிதமும் நடக்காமல் நீதான் காப்பாத்தணும்.. ப்ரேம்.. எப்படா வருவ நீ?..’

”பையனுக்கு துளிகூட ஈவு எறக்கமே கெடியாது. போட்ரான்னா போட்டுருவான்.” என்று பையனுக்குச் சான்றிதழ் கொடுத்தான் அந்த ஆள்.

பிறகு அவன் அவசரமாக சாமி செல்ஃபில் சாவியை மும்முரமாகத் தேடுகிற நேரத்தில் வாசற்கதவைப் பார்த்தாள். யோசித்தாள். எழுந்து ஒரு எட்டு வைத்தால் நெருங்கிவிடலாம். மேல் தாழ்ப்பாள் மட்டும்தான் போட்டிருக்கிறது.

முடிவு செய்தாள். கொஞ்சம் ரிஸ்க்தான். இருந்தாலும்… அந்தப் பையன் கவனம் சிதறிய ஒரு கணத்தைத் தேர்ந்தெடுத்து எழுந்து சரேலென்று கதவை நோக்கி ஓடினாள். அவள் கை தாழ்ப்பாளைத் தொட்டு இழுப்பதற்குள் அந்தப் பையன் சுதாரித்து விட்டிருந்தான்.  அவளைத் தடுத்து அவள் முடியைப் பிடித்திழுத்து தரையில் தள்ளிவிட்டான். அவள் முகம் சுவரில் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள். ‘அம்மா..’ என்று ஈனமாகக் கத்தினாள். பையன் இப்போது ராடை அவளைப் பார்த்து நீட்டி நின்றான். 

அந்த ஆள் சாவியை எடுத்துக்கொண்டு வேகமாய் வந்து அவளருகே வந்து தரையில் குத்த வைத்து உட்கார்ந்தான். மறுபடி அடிப்பதுபோல் கை ஓங்கினான். காயத்ரி கண்களை இறுக்க மூடிக் குனிந்துகொண்டாள். ஐயோவெனக் கத்தவேண்டுமென்று தோன்றியதை அதிக பிரயத்தனத்துடன் அடக்கிக்கொண்டாள்.

“உசுர் மேல ஆசயில்லயா?” என்றான். அவன் குரல் தீர்க்கமாக இருந்தது. காயத்ரி சர்வ நாடியும் ஒடுங்கிப் போய்க் கிடந்தாள். அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

”சத்தம் போடாம வா!” என்று படுக்கையறைக்கு நடந்தான். அவளை பலவந்தமாய் எழுப்பி அவள் முழங்கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனான் அந்தப் பையன். சின்னப் பையன்போலத் தெரிந்தாலும் அவன் கை உறுதியாய் இருந்தது. அவன் பிடித்த இடத்தில் வலித்தது. 

அந்த ஆள் பீரோவை நெருங்கி சாவியைப் போட்டுத் திறந்தான். “டேய்… பாத்துக்க.. வேலய முடிக்கறவரைக்கும் சத்தம் ஆகாது..”

அவன் பீரோ லாக்கரில் கைவிட்டுத் தேடி ஒரு பர்ஸ் கிடைக்க அதற்குள்ளிருந்த நான்கைந்து ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வெளியே எடுத்தான். அதைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். வேறு எதுவும் அகப்படாமல் மற்ற ரேக்குகளிலிருந்த சொற்பத் துணிமணிகளை எல்லாம் வெளியே இழுத்துப் போட்டான்.

“நகை எல்லாம் எங்க வெச்சுக்கிற? த பார்.. ஒய்ங்கா  சொல்ட்டீன்னா ஒத்தருக்கும் ப்ரச்சனையில்ல. ஆமா..”

ஆள் கொஞ்சம் வயசானவனாக இருக்கிறான். ஆகவே தொழிலில் தேர்ந்தவனாகத்தான் இருப்பான். அந்தப் பையனின் முகம் கல் மாதிரி நிர்ச்சலனமாக இருந்தது. கிட்டத்தட்ட அந்த ஆள் எது சொன்னாலும் செய்பவனைப் போல இருந்தான். அவளை கதவோடு சாய்த்து நிறுத்தி ஆயுதத்துடன் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் எதன் பொருட்டும் அவன் நிச்சயம் மண்டையில் அடித்துக் கொல்லமாட்டான் என்று மட்டும் அவளுக்கு ஏனோ தோன்றியது. அது ஒரு பயமுறுத்தலாக மட்டுமே தெரிந்தது. உரக்கக் கத்தலாமா என்று யோசித்தாள். ஆனாலும் எதுவும் சொல்வதற்கில்லை. இந்த நொடிக்கு எதுவும் உத்தரவாதம் இல்லை. ஏடாகூடமான கோணத்தில் சாய்ந்திருந்ததால் கழுத்து வலிப்பதை உணர்ந்தாள். கண்ணீரை விரல்களால் துடைத்துக்கொண்டாள். அவளின் அந்த அசைவுக்கு பையன் மேலும் எச்சரிக்கையானான்.

அந்த ஆள் கட்டிலுக்கடியில் குனிந்து பார்த்து அங்கிருந்த ஒரு பெரிய சூட்கேஸை வெளியே இழுத்துத் திறந்தான். உள்ளேயிருந்த பொருட்களை வெளியே எடுத்துப் போட்டான். மூன்று பட்டுப்புடவைகள். இரண்டு செட் சூட்கள். ஒரு ப்ளேசர். இரண்டு டவல்கள். துணிகளுக்கிடையே மறைத்து வைத்திருந்த சின்னப் பெட்டிக்குள் ஒரு கர்ச்சீப்பில் சுற்றப்பட்டு கொஞ்சம் நகைகள். ஒரு லெதர் பேகில் மூன்று நோட்டுக்கட்டுகள்.

“தோ.. கீது பார்..” என்றான். “வேற எதுனாக்கிதா?” என்றான் உறுமலாக அவளிடம்.

“மொத்தமே அவ்ளோதான்” அவளால் பேசமுடியவில்லை. தொடர்ந்து “ஐயா.. எங்கப்பா அவரு வாழ்நாள் முழுக்க உழைச்சு வரதட்சணையாக் குடுத்த நகை.. தயவு செஞ்சு..” குரல் அதற்குமேல் வராமல் தடுக்கி நின்றது. பையன் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்கள் சுருங்கி விரிந்தன. 

அந்த ஆள் நோட்டுக்கட்டுகளை எடுத்து சர்ரென்று விரல்களால் தாள்களை ஓட்டிவிட்டான். நகைகளை கைகளில் எடுத்து எடை போடுவதுபோல தூக்கிப் பார்த்தான். பட்டுப் புடவைகள், ப்ளேசர், கவர் பிரிக்கப்படாத இரண்டு மூன்று சட்டைகள், நகைகள், நோட்டுக்கட்டுகள் இவைகளை மட்டும் எடுத்து தனியே நகர்த்தி வைத்தான். 

ப்ரேம் எப்போது வருவான் என்று யோசித்தாள் காயத்ரி. ஒருவேளை அவன் இப்போது வந்துவிட்டால் வெளியே பூட்டு திறந்திருப்பது கண்டு சந்தேகப்படலாம். பிறகு என்ன செய்வான்? உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அவன் உடனே வந்தால் பரவாயில்லை என்றிருந்தது. இதயத் துடிப்பின் வேகம் மட்டும் மட்டுப்படாமல் உயர்ந்தவண்ணமே இருந்தது. அதீத பயத்தில் லேசாய் மயக்கம் வருவதுபோலக்கூட இருந்தது.

”மணி! அலர்ட்டா இரு..” என்று சொல்லிவிட்டு மேலும் அலமாரிகள், மேஜை ட்ராயர்கள் எல்லாவற்றையும் குடைந்தான். வேறெதுவும் கிடைக்காத அதிருப்தியில் திரும்பி “ப்ச்” என்றான். அவளை முறைப்பது போல் பார்த்தான். காயத்ரி வேறு பக்கமாகப் பார்வையைத் திருப்பினாள்.

இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி மொத்த வீட்டையும் பார்வையால் ஒரு முறை அளந்தான். வாசலைப் பார்த்தான். லுங்கியை இழுத்து மறுபடி ஒருமுறை சரியாய்க் கட்டிக்கொண்டான்.

சூட்கேஸிலிருந்து வெளியே இறைத்துப்போட்ட பொருட்களை மறுபடியும் பார்த்தான். கலைந்து கிடந்த பொருட்களுக்கு நடுவே கவிழ்ந்து கிடந்த ஒரு செவ்வக வடிவப் பொருளை எடுத்துத் திருப்பினான். அது ஒரு ஃப்ரேம் போட்ட புகைப்படம். வழக்கமாக ஸ்டுடியோவில் எடுக்கப்படுகிற மாதிரியான ஒரு நடுத்தர வயதுத் தம்பதியினரின் புகைப்படம். அதை எடுத்துச் சில நொடிகள் சுரத்தில்லாமல் பார்த்துவிட்டு அவளையும் ஒரு முறை பார்த்துவிட்டுக் கீழே வைத்தான். இதையெல்லாம் தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு காட்சிக்குச் சாட்சியாக நிற்பதுபோன்ற பாவனையில் அந்தப் பையன் அசையாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.  

தெருவில் ஒரு பைக்கின் சப்தம் கேட்டது. அந்த ஆள் உடனே ஜன்னல் அருகே போய் லேசாய்த் திறந்து வெளியே நோட்டம் பார்த்தான். அங்கேயே ஜாக்கிரதை உணர்வுடன் கொஞ்ச நேரம் நின்றிருந்தான்.

பிறகு பையனிடம் “டேய்.. போதும்.. அல்லாத்தையும் எட்த்துக்கினு வா.. கெய்ம்பலாம்..” என்றான்.

பையன் கையிலிருந்த இரும்பு ராடை மெதுவாய்த் தரையில் வைத்தான். வேகமாக நகைகளையும் பணத்தையும் அந்தப் புது டவல்களில் ஒன்றை எடுத்து மூட்டை கட்ட ஆரம்பித்தான். காயத்ரி கண்கள் வெறிக்க இந்த நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டிருந்தவன் அந்த நகைகளிலிருந்த ஒரே ஒரு நெக்லஸ் மற்றும் ஒரு பணக்கட்டை மட்டும் அந்த ஆள் பார்க்காத ஒரு கணத்தில் சூட்கேஸூக்குள் திரும்ப வைத்து பட்டென்று மூடினான். மற்றதை மூட்டை கட்டிக்கொண்டு விருட்டென்று நகர்ந்தான். காயத்ரி புதிராய்ப் பார்த்தாள்.

பிறகு பையன் அந்த ஆளின் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு அவளின் மொபைல் ஃபோனை எடுத்து திரும்பி வந்து அவளிடம் கொடுத்தான். உறைந்து போய் நின்றிருக்கிற காயத்ரியை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தான். அவன் கண்களில் இனம்புரியாத ஒரு பரிவுணர்வு மிதந்தது.

“வாண்ணா.. போலாம்..” என்று அந்த ஆளை அழைத்துக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு வாசலுக்குப் பாய்ந்தான். காயத்ரி நம்ப முடியாமல் சூட்கேஸை ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள்.

வெளியே கதவு பூட்டப்படும் ஓசை மெதுவாகக் கேட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.