
Le Magicien, 2015
காலை நடையை முடிக்க இன்னும் இரண்டாயிரம் அடிகளே மீதமிருக்கும் சமயத்தில் தான் கோபால் அண்ணன் போன் பண்ணி விபரத்தைச் சொன்னார். ‘நான் அங்கதான் போய்ட்டு இருக்கேன். வர விருப்பம் இருந்தா வா’ என்று சொல்லி வைத்தார்.
போகவா? வேண்டாமா? என்று முடிவெடுக்கும் முன்னமே அனிச்சையாக மொட்டைமாடியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று வண்டிச் சாவியை எடுத்து பைக் அருகே சென்றுவிட்டிருந்தேன். அப்பா வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த தென்னை மரத்திற்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். கடந்த எட்டு வருடமாக எல்லாம் செய்தாயிற்று. ரசாயன உரம், சாணம், குப்பை என்று என்னவெல்லாமோ அப்பா போட்டு பார்த்துவிட்டார். வீட்டுக்கு வருகிறவர்கள், சமூக வலைதளம், சுற்று வட்டாரத்தில் விவசாயம் செய்பவர்கள் என்று எல்லோரின் அறிவுரையையும் முயற்சி செய்து பார்த்துவிட்டார். மரம் நன்றாக நெடுநெடுவென்று வளர்ந்து நின்றதே தவிர இதுவரை அதிலிருந்து ஒரு காயும் வந்த பாடில்லை. உடன் வைத்திருந்த நெல்லிக்காய், மாதுளை, வேப்பமரம் எல்லாம் நன்றாக வளர்ந்து காய் விடுகின்றன. அதற்கு ஆன செலவும் நேரமும் உழைப்பும் தான் விரயம். அதை வெட்டிவிடலாம் என்று அப்பாவிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அப்பா கேட்ட பாடில்லை. ‘எல்லாத்துக்கும் அதுக்கான நேரம் வரும்’ என்பார்.
பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு அப்பாவிடம் ‘மேட்டமலை வர போய்ட்டு வந்திடுறேன்’ என்றேன்.
‘சரி பாத்து போய்ட்டு வா. துர்காட்ட சொல்லிட்டியா?’
‘அவ தூங்கிகிட்டு இருக்கா. ரொம்ப நேரம் ஆகாது. ஒருமண்ணேரத்துல வந்திருவேன்’ என்று பைக்கை முடுக்கினேன்.
இன்னும் வாகனங்கள் விழித்திராத காலை. எங்கள் காலனியில் இருந்து மேட்டமலை ஐந்து கிலோமீட்டர் தொலைவுதான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவ்வளவு ஜன நடமாட்டம் இல்லை. வெங்கடாச்சலபுரம் தாண்டி சென்று கொண்டிருந்தேன். மனம் ஏனோ நிலை கொள்ளாமல் இருந்தது. இன்னமும் போகவா வேண்டாமா என்று முடிவு செய்ய முடியவில்லை. சிகரெட் பிடிக்கலாம் என்று தோன்றியது. சிகரெட் பிடிப்பதை நிறுத்த முடிவெடுத்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் அவ்வப்போது கொஞ்சம் மனஅழுத்தமாக இருந்தாலோ, மிக சந்தோஷமாக இருந்தாலோ ஒரு சிகரெட் வாங்கி இழுத்துக் கொள்வேன். எப்படியும் மாதம் ஒன்றாவது ஆகிவிடும்.
மெயின்ரோட்டில் கடைகள் ஏதும் இல்லை. மேட்டமலை எல்லை ஆரம்பத்தில் ஒரு பெட்டிக்கடை இருக்கும். திருமணத்திற்கு முன் மேட்டமலை செல்ல நேர்ந்தால் அந்தக் கடையில் தான் போய் சிகரெட் வாங்கி கடையின் பின்னால் சென்று புகைப்போம். சமீபத்தில் அந்தக் கடைக்குச் சென்றிருக்கவில்லை. கடை இப்போது இருக்குமா என்றும் தெரியவில்லை.
சாலையில் செல்லும்போது இரு வேகத்தடைகளுக்கு இடையே கடந்து செல்லும் கிராமங்களில் ஒன்று தான் மேட்டமலை. சாலையின் வலது புறம் சாலையைப் பார்த்தவாறு அந்தக் கடை இருந்தது. கடையில் பத்து வயது இருக்கும் ஒரு கருத்த சிறுமி உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தாள் போல. வேறு யாரும் இல்லை.
‘என்ன வேணுன்னே?’ என்று கேட்டாள்.
‘அப்பா இல்லியாமா?’
‘தண்ணி கேன் போடப் போயிருக்காங்க, இப்போ வந்துருவாங்க’
‘சரிமா அப்பா வரட்டும்’ என்றவுடன் அவள் வீட்டுப்பாடத்தைத் தொடர்ந்தாள்.
அவளை முன்பு வரும்போது பார்த்திருக்கிறேன்.எண்ணெய் தேய்த்து பின்னாத தலையுடன் இடுப்பில் மட்டும் ஒரு ஜட்டியுடன் அவள் மட்டும் அங்கு விளையாடிக் கொண்டிருப்பாள். அப்போது அவள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்திருக்கவில்லை. அவளின் அப்பா எங்களிடம் அவளை எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம், எவ்வளவு கட்டணம் என்பதைப் பற்றி எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பார்.
‘எத்தனாம் கிளாஸ் படிக்கிற பாப்பா?’ என்று கேட்டேன் அவளிடம்.
‘அஞ்சாம் கிளாஸ்’
‘எந்த ஸ்கூல்?’
‘கவர்ன்மெண்ட் ஸ்கூல்’
‘எங்க டவுன்லயா?’
‘இல்ல மீனம்பட்டி ஸ்கூல்’
‘இப்போ யாரு உங்க ஹெட்மாஸ்டர், சகாயம் சாரா?’
ஆம் என்று தலையாட்டினாள். சுற்று வட்டாரப் பள்ளிகளில் உள்ள எல்லா முக்கிய ஆசிரியர்களும் எனக்கு அறிமுகம்.
கொஞ்ச நேரத்தில் அவள் அப்பா ஒரு பைக்கில் வந்து சேர்ந்தார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. தெரிய வாய்ப்பும் இல்லை. கல்யாணம் உடம்பில் மனதில் ஒரு பத்து வயதைக் கூட்டி விடுகிறது. நானும் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. அவரிடம் ஒரு சிகரெட்டை வாங்கிக் கொண்டு கடையின் பின்னால் சென்று பற்றவைத்துக் கொண்டேன்.
மீனம்பட்டி ஸ்கூலில் படித்த அந்த மாணவியின் பெயர் என்ன? தனலட்சுமி நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவள் அப்பா சிவகாசியில் ஒரு பட்டாசுக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் அந்தக் கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்த போது இறந்து விட்டிருந்தார். அவள் அம்மாவுக்கு வீட்டில் தீப்பெட்டி ஒட்டும் வேலை. அவளைப் பனிரெண்டாவது வரை படிக்கவைத்து விட்டாள். அந்தப் பள்ளியின் அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் முதல் ஐந்து மாணவர்களில் ஒருவராக வந்திருந்தாள். அவளுக்கு ஏதேனும் டிகிரி படிக்க ஆசை. அவள் அம்மாவுக்கும் ஆசைதான். ஆனால் பணமில்லை. சகாயம் சார் தான் அவளைப் பற்றி என்னிடம் சொல்லி உங்க டிரஸ்ட் மூலமா அவ படிப்புக்கு உதவி பண்ணா நல்லா இருக்கும் என்றார். அவள் அப்பா இறந்த பிறகு உயர்நிலை கல்விக்கு அவர்தான் உதவி செய்திருக்கிறார்.
இடம் கிடைப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. சிவகாசியில் எஸ்.எப்.ஆர் கல்லூரியிலேயே இளநிலை இயற்பியல் படிப்பில் சேர்ந்தாள். அவள் படிப்புக்கான கட்டணம், புத்தகம் என்று எல்லாவற்றையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
அப்போது நான் சில நண்பர்களுடன் சேர்ந்து டிரஸ்ட் ஆரம்பித்து ஊரில் சிறிய அளவில் சில தன்னார்வ தொண்டுகள் செய்து வந்தோம். பெரும்பாலும் பண உதவிதான். நண்பர்கள் பலர் வெளிநாடுகளில் வெளிஊர்களில் இருந்தனர். என்னுடன் படித்தவர்களும் புத்தக ஆர்வலர்களும் தான். அவர்கள் மூலம் தான் பண உதவி கிடைத்தது. ஒரு சிறிய உதவியாக ஆரம்பித்தது.
எனக்குக் காம்பஸ்சிலேயே கல்லூரி முடித்தவுடன் வேலை கிடைத்துவிட்டது. பெங்களூரில் இருந்த ஒரு அமெரிக்க விமானசேவை நிறுவனத்தில் கணினி நிரல் எழுதும் வேலை. நல்ல வருமானம். இரண்டு வருடங்களில் வேலையும் புதுப்பணக்கார கொண்டாட்டமும் சலித்துவிட்டது. பேஸ்புக் அப்போது பிரபலம். எனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பதால் படித்தப் புத்தகத்தைப் பற்றி அதில் எழுதி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பேன். அதன் பின் சில கதைகள் எழுதி அவை பிரபல பத்திரிகைகளில் பிரசுரமாகி நட்பு வட்டங்கள் கூட ஆரம்பித்து இருந்தன. விருதுநகரில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் தான் டாக்டர் அன்புவை சந்தித்தேன். அவர் ‘அன்பு அறக்கட்டளை’ என்று ஒன்று நடத்தி வந்தார். வருடந்தோறும் அரசுப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பள்ளிப் புத்தகங்கள் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார். ‘இன்னும் பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. ஏதாவது உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார். நானும் என் நண்பர்கள் குழாமில் இதை பதிவிட்டு எனது வங்கிக் கணக்கு விவரத்தையும் கொடுத்திருந்தேன். மறுநாளே என் வங்கிக்கணக்கில் இருபதாயிரம் ரூபாய் வரை சேர்க்கப்பட்டிருந்தது. நண்பர்கள் சிலர் போட்டு விட்டிருந்தனர். பத்தாயிரம் ரூபாயை அன்பு அறக்கட்டளைக்குச் செலுத்தினேன். மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய நிகழ்ச்சிக்கும் சென்று அங்கிருந்து மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து அதை குழாமில் பதிவேற்றினேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. மீதமுள்ள பத்தாயிரத்தை திருப்பி அனுப்பிவிடுகிறேன் என்று கேட்டபோது நண்பர்கள் மறுத்து அதை வேறு ஏதேனும் உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி விட்டார்கள். இப்படி ஆரம்பமானது தான்.
அன்பு அறக்கட்டளை மூலமாக வேறு சில அறக்கட்டளைகள், பள்ளி ஆசிரியர்கள், வேறு சில சமூக ஆர்வலர்கள் என்று பழக்கம் ஏற்பட்டது. எங்களால் முடிந்த கல்வி சார்ந்து பண உதவியை எங்கள் ஊரின் சுற்று வட்டாரப் பகுதியில் செய்தோம். அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி எனக்கு நன்கொடைகளின் வரவு அதிகமாக வர ஆரம்பித்து பின் சில நண்பர்களின் ஆலோசனையின் பேரில் நாமே ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தோம். தனிநபர் வங்கிக் கணக்கில் இவ்வளவு பரிவர்த்தனை அதுவும் சில வெளிநாடுகளில் இருந்து வருவது எனக்கு நல்லதல்ல வரி ஏய்ப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம் என்றனர்.
‘உரம்’ என்ற பெயரில் அறக்கட்டளையும் வலைதளமும் தொடங்கினோம். எல்லாவற்றையும் நண்பர்களே அவர்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக செலவோ தேவைப்பட்ட உதவியோ செய்து கொடுத்தார்கள். எனக்குப் பெரிய வேலை இல்லை. அவர்கள் சொல்லும் இடத்திற்குச் சென்று சொல்லும் ஆளை பார்க்க வேண்டும் அவ்வளவுதான். நான் எனது கையில் இருந்து எந்தப் பணமும் செலவழிக்கவில்லை. அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையில் கூட எனது பணம் சொற்பமே. எனது பங்களிப்பு என்பது யாருக்கு உதவி தேவைப்படுகிறது, உண்மையில் தேவைப்படுகிறதா, எவ்வளவு வேண்டும் என்று ஆராய்ந்து கண்டறிந்து தொகையைக் கூற வேண்டும். நான் ஒரு பாலம் போலத்தான். உதவி தேவைப்படுபவர்கள் இருக்கிறார்கள். உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். இருவரையும் சேர்க்க ஒர் நம்பிக்கையான ஆள் இருந்தால் போதும். ஏனோ என் நண்பர்களுக்கும் என்னை அறிந்தவர்களுக்கும் நான் அந்த நம்பிக்கையை அளித்திருந்தேன்.
உதவி பெறுபவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன, உண்மையில் உதவி பெற தகுதியானவரா, எவ்வளவு வழங்கவேண்டும் என்று பார்க்க வேண்டும். அதற்கு நிறைய நிபந்தனைகள் வரையறுத்துள்ளோம். அரசு பள்ளி அல்லது அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தான் உதவி, எந்த விதமான சொத்தும் பெற்றோருக்கு இருத்தலாகாது, கூலி வேலை செய்யும் அல்லது வேலை இழந்த பெற்றோரின் நன்றாக படிக்கும் பிள்ளைகள், எங்கள் ஊரின் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள். இவையெல்லாம் நான் வகுத்துக்கொண்டவை. பல பேருக்கு உதவி தர மறுத்திருக்கிறோம். ஒரு முறை ஒரு தந்தை அவர் சொந்தமாக ஒரு பைக் வைத்திருக்கிறார் என்றும் மற்றோருமுறை தந்தை குடிக்கிறார் என்றெல்லாம் கூட மறுத்திருக்கிறோம்.
எங்களுக்கு வரும் அனைத்து விண்ணப்பங்களையும் அலசி ஆராய்ந்து அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்காக மட்டும் பணம் வசூலித்து அதை முடித்த பின் தான் அடுத்த விண்ணப்பங்களை பரிசீலிப்போம். அதுவும் பணத்தை எக்காரணத்தைக் கொண்டும் உதவி பெறுபவர்கள் கையில் கொடுக்கலாகாது. புத்தகமாகவோ, தேவையான பொருளாகவோ அல்லது நேரடியாக கட்டணமாகவோ நாமே சென்று கட்டி விட வேண்டும். எல்லாவற்றையும் நானே செய்வேன்.
வேலை கொஞ்சம் மெதுவாகத்தான் போகும். ஏனெனில் அப்போது நான் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். வார விடுமுறையில் மட்டும்தான் ஊருக்கு வர முடியும். எல்லாவற்றையும் விசாரிக்க வேண்டும். வந்ததிலிருந்து திரும்பிச் செல்லும் வரை இதே வேலையாகத்தான் இருக்கும். மேலும் கணக்கு வழக்கில் நான் கராறானவன். தனிப்பட்ட வாழ்விலும் கூட. சரியான கஞ்சன் என்று கூடச் சொல்லலாம். நான் புகைபிடிப்பதைப் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் துர்கா கேட்பாள். ‘சரியான கஞ்சன் நீ. அப்புறம் எப்படி இந்த சிகரெட்டை பழகுண?’ என்று. இவை எல்லாம் தான் நண்பர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் செய்வது பிடித்தம் இல்லை. ஏதேனும் பண விவகாரத்தில் மாட்டிக் கொள்வேனோ என்று பயம். நான் கேட்பதில்லை. ஒருமுறை தனலட்சுமியும் அவள் அம்மாவும் அவள் கிராமத்தில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு கல்லூரிப் படிப்பை முதல் வகுப்பில் முடித்திருந்தாள். அவள் பரம்பரையின் முதல் பட்டதாரி. வாங்கி வந்திருந்த பழங்களோடு ஒரு காகிதத்தை நீட்டினாள். வங்கி துணை மேலாளராக வேலை கிடைத்திருந்தது. இரண்டு வருடங்களாக அனைத்து வகையான வங்கி, குரூப் தேர்வுகள் எல்லாம் எழுதிக் கொண்டிருந்தாள் என்பது தெரியும். என் அப்பா அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அதன் பிறகு அவர்கள் எதுவும் என்னிடம் சொல்வதில்லை. அப்பா மட்டும் அவ்வப்போது ‘பண விஷயம் பாத்து செய்’ என்பதோடு நிறுத்திக்கொள்வார்.
மேட்டமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேராக ஐநூறு மீட்டர் சென்று வலப்புறத் தெருவில் திரும்பினால் ஐந்தாவது வீடு மாரிச்சாமியின் வீடு. தெருவில் நுழைந்த போதே அவன் வீட்டுக்கு வெளியே ஆட்கள் இருப்பதை காண முடிந்தது. பதினைந்து பேர் இருப்பார்கள். பந்தல் கட்டிக் கொண்டிருந்தார்கள். வீட்டெதிரெ பைக்கை நிறுத்தும்போது கூட்டத்தினுள் இருந்து கோபால் அண்ணன் நேராக என்னிடம் வந்தார். ‘வரமாட்டனு நினைச்சேன்’ என்றார். இருவரும் நடந்து அங்கு நின்றிருந்தவர்களுடன் சேர்ந்து நின்றுகொண்டோம்.
எல்லோரும் கலைந்த தலை, தூங்கி எழுந்த முகத்துடன் இருந்தார்கள். வீடு உள்ளே அமைதியாக இருந்தது. அழுது ஓய்ந்திருப்பார்கள் போலும். வீட்டைப் பார்த்தேன். மொத்த இடம் எழுநூறு சதுர அடி இருக்கும். சுற்றி ஒரு காம்பௌண்ட் சுவர் நடுவே வீடு. வாசலில் க்ரில் கேட். கேட்டின் வலப்புறம் சுவரில் கொசுவலை போட்ட ஜன்னல். மேலே மொட்டைமாடி. ஜன்னலுக்கும் மொட்டைமாடிக்கும் நடுவே தலையில் கொம்புடன் கண்கள் சிவந்து பெரிய மீசை நாக்கில் தேளும் கொண்ட த்ருஷ்டி பொம்மை மாட்டப்பட்டிருந்தது. வீட்டிற்கும் காம்பௌண்ட் சுவருக்கும் இடையே வெற்றிடம். சென்ற முறை நான் வந்தபோது இந்தச் சுவர் இல்லை. அது ஆறு வருடங்கள் இருக்கும்.
கோபால் அண்ணனும் மேட்டமலை தான். நானும் அவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். என்னை விட மூன்று வயது பெரியவர். வங்கி ஊழியர். அவரும் எங்கள் அறக்கட்டளைக்கு முடிந்ததை செய்துக்கொண்டிருந்தார். அப்போது எங்கள் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவியுடன் சேர்ந்து குளம் தூர்வாருதல், மருத்துவ உதவி போன்ற வேறு உதவிகளும் செய்ய ஆரம்பித்திருந்தோம். கோபால் அண்ணன் தான் மாரிச்சாமியைப் பற்றி சொல்லி வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அப்போது அவர்கள் இந்த வீட்டில் இல்லை. இன்னும் நான்கு தெரு தள்ளி இருந்தார்கள். செவ்வக வடிவில் நான்கு சுவர். அதனுள் நான்கு சுவரை திரைபோல் எழுப்பி ஓடு போட்டு நான்கு தனி வீடுகள். அதில் ஒன்றில் தான் வசித்து வந்தார்கள். நான்கு வீடுகளுக்கும் சேர்த்து ஒரு கழிவறை, குளியலறை வெளியே தனியே இருந்தது.
பாலமுருகனுக்கு பனிரெண்டு வயது அப்போது. மாரிச்சாமியின் ஒரே மகன். அவன் சிறுநீரகத்தில் கோளாறு. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஆறு லட்சம் வரை செலவாகுமாம். மருத்துவ உதவி பெற எங்களின் நிபந்தனை ஏழைக்குடும்பமாக இருக்கவேண்டும், ஒரே குழந்தையாக இருக்கவேண்டும். அறக்கட்டளை நடத்துவது என்பது ஈவு இரக்கமற்ற வேலைதான். எல்லா நேரங்களிலும் மூளை சொல்வதை மட்டுமே தான் கேட்கவேண்டும். மனம் சொல்வதை கேட்கவே கூடாது. உணர்ச்சி வசப்படுபவர்கள் அறக்கட்டளைக்கு பணம் வேண்டுமானால் தரலாம். ஆனால் நடத்துவதற்கு இது போன்ற கண்டிப்பான நிபந்தனைகள் அவசியம். நாங்கள் விசாரித்தவரை உதவி செய்யலாம் என்றே தோன்றியது. அப்பா பிரிண்டிங் பிரஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா வேலை செய்யவில்லை. ஒரே பையன். டவுன் அரசாங்கப் பள்ளியில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பணம் புரட்ட ஏதும் வழி இல்லை. மதுரை மருத்துவமனையில் விசாரித்து விட்டோம். எல்லாம் சரியாய் இருந்தது.
ஆறுலட்சம் பெரிய பணம் தான் எங்களுக்கு. ஆனாலும் புரட்ட முடியும். ஒரு வாரத்தில் மொத்தப் பணத்தையும் புரட்டிவிட்டோம். பதினைந்தாவது நாளில் ஆபரேஷன் முடிந்து இரண்டு வாரத்தில் அவனை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். அதன் பிறகு ஒரு மாதம் கழித்துச் சென்று அவனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வந்தேன்.
பொதுவாக நம் வேலை முடிந்தவுடன் மீண்டும் மீண்டும் அவர்களைச் சென்று சந்திப்பது அவர்களைத் தொடர்பு கொள்ள முயல்வதைத் தவிர்த்து விடுவேன். அது உதவி வாங்கியவர்களை அசௌகரியப்படுத்தும் என்பதால். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கதான் செய்யும். உதவி பெற்றவர்கள் பெரும்பாலும் அதன் பிறகு நன்றி தெரிவிக்கும் விதமாகவோ அல்லது இப்போது எப்படி இருக்கிறேன் என்பதாகவோ அல்லது ஒரு அறிவுரைக்காகவோ கூட திரும்பிக் கூப்பிடுபவர்கள் மிக சொற்பமானவர்கள். பெரும்பாலும் நம்மை தவிர்க்கத்தான் பார்ப்பார்கள்.
உண்மையில் அறக்கட்டளை சேவையில் மிகுந்த மனச்சோர்வை கொடுப்பது உதவி பெற்றவர்களின் பெற்றதற்குப் பிறகான அணுகுமுறை தான். உதவிக்குப் பணம் புரட்டுவது எங்களுக்கு எளிது. உண்மையில் அதுதான் மிக எளிதானது. மருத்துவ உதவி, கல்விக்கட்டணம் போன்றவற்றிற்கு கூட உதவி பெற்றதற்குப் பிறகு எந்தத் தகவலும் சொல்லமாட்டார்கள். ஒரு முறை ஒரு மாணவன் இரண்டாம் வருட கல்லூரிக் கட்டணத்திற்கு எனக்கு வாட்ஸப்பில் ஞாபகப்படுத்தி செய்தி அனுப்பி இருந்தான். அவனை முதல் வருடம் கல்லூரியில் சேர்த்தபோது பார்த்தது. எப்படிப் படிக்கிறான், எத்தனை மதிப்பெண் எடுக்கிறான் என்ற எந்தத் தகவலும் இல்லை. மாணவர்களின் மனநிலையைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் பெற்றோர்கள் கூட எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான் என்னவென்று சொல்வது. அதன் காரணமாகத்தான் யார் கையிலும் பணமாகக் கொடுப்பதில்லை. பொருளாகவோ அல்லது அந்த நேரடியாக பள்ளி, மருத்துவமனையுடனோ தான் எங்கள் செயல்பாடு இருக்கும். அவர்களின் கைகளில் கொடுத்தால் அதை வேறு எதற்காகவாவது செலவு செய்துவிட்டு மீண்டும் நம்மிடம் எந்தக் கூச்சமும் இல்லாமல் வந்து நிற்பார்கள். இவை போன்றவைகள் தான் மக்களில் சிலர் எத்தனை சில்லறைகள் என்று நினைக்கத் தோன்றும்.
‘சரி வா உள்ளே போய் உடம்ப பாத்து மரியாத பண்ணிட்டு வந்துடுவோம்?’ என்றார் கோபால் அண்ணன்.
‘இல்லனெ நீங்க போங்க. நான் இங்கயே நிக்கேன்’ என்றேன்.
கோபால் அண்ணன் வெளியே செருப்பை விட்டுவிட்டு வீட்டினுள் சென்றார்.
வரும்போதே பார்த்தேன். காம்பௌண்ட் சுவரின் உள்ளே அதில் சாய்ந்தபடி காலை நீட்டி சுவரில் சாய்ந்தவாறு தலை குனிந்த வண்ணம் உடல் சோர்ந்து மாரிச்சாமி உட்கார்ந்திருந்தான். ஒரு லுங்கியும் மேலிருந்த மூன்று பட்டங்களும் திறந்திருக்க சட்டையும் அணிந்திருந்தான். அழுது முடிந்த கண்கள். பார்வை குறிப்பாக எதிலும் பதியாத வண்ணம் இருந்தன. சுற்றி மூன்று பேர் அவனை ஆறுதல் படுத்த அமர்ந்திருந்தனர். நான் மெதுவாக நகர்ந்து அவன் எதிரே இருந்த வீட்டின் சுவர் அருகே சென்று அவன் கண்ணிற்குப் படுமாறு சற்று தொலைவில் நின்றுகொண்டேன். சிறிது நேரத்தில் எதேச்சையாக தலை நிமிர்ந்து எனைப் பார்த்த கணம் கண்களை மூடிக் கொண்டான். என்னால் அவன் முகத்தைப் பார்க்க முடிந்தது. இப்போது அவன் முகத்தில் அன்று இருந்த கிண்டலான சிரிப்பு இல்லை.
ஆபரேஷன் முடிந்து நான்கு மாதங்களுக்கு பின்பு கோபால் அண்ணன் ஒரு நாள் போன் பண்ணி விவரத்தைச் சொன்னார். மாரிச்சாமி மேட்டமலையிலேயே புதுவீடு வாங்கி பதினைந்து நாட்களுக்கு முன்னர் கிரஹப்பிரவேசம் நடத்தி குடி போயிருக்கிறானாம். கோபால் அண்ணனிடமே எந்த விவரமும் சொல்லவில்லை. அவரே வேறு யாரிடமோ கேட்டுதான் தெரிந்து கொண்டிருக்கிறார். வீடு வாங்கப் பணம் எப்படி வந்தது என்று தெரியாது. ஊரிலேயே யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் கட்சிப் பணமாக இருக்கலாம் என்று சொன்னார்கள். அவன் அங்கு பிரபலமாயிருந்த ஒரு கட்சியில் இருந்தான். வெறும் அடிப்படை தொண்டன் தான். ஏதேனும் கட்சிக் கூட்டம் என்றால் அவனைப் பார்க்கலாம். மற்றபடி எந்தப் பதவியும் இல்லை. எல்லாம் தெரிந்தது தான். அங்கு சுற்றுவட்டார எல்லா கிராமங்களிலுமே ஒவ்வொரு வீடும் ஏதொவொரு கட்சியை சார்ந்து தான் இருப்பார்கள்.
பொறுக்கமுடியாமல் அவரே அவனை வீட்டிற்குச் சென்று சந்தித்திருக்கிறார். ‘சார், கட்சிக்காக உழைச்சு சேர்த்து வச்சது தான் சார்’ என்றிருக்கிறான். ‘எப்படி வந்ததுனெல்லாம் பிரச்சனை இல்லன்னே. எப்டி வேணா வரட்டும். ஆபரேஷன் நடந்தப்ப உங்ககிட்ட இருந்திருக்கு?’ என்று கேட்டதற்கு ‘அப்போ கைல இல்ல சார். மொதலீடா போட்டிருந்தது’ என்று இழித்திருக்கிறான். ‘அப்போ அறக்கட்டளைல இருந்து கேட்டதற்கு இதைப் பத்தி ஒன்னும் சொல்லலே’ என்றதற்கு ‘கைல இல்ல சார், ஞாபகம் இல்ல. நான் என் காசுல வீடு கட்டுனா உங்களுக்கு என்ன சார்’ என்று கேட்டிருக்கிறான்.
அவன் பேச்சு அன்னைக்கும் இன்னைக்கும் சுத்தமா சம்மந்தமே இல்ல. நம்மட்ட நடிச்சிருக்கான் என்று ஆதங்கத்தோடும் குற்றவுணர்வோடும் கூறினார். ‘சரி விடுங்கனே நம்ம கொடுத்தது ஒரு உயிரகாப்பாத்த. காப்பாத்திருச்சு. அவ்வளவுதான்’ என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன்.
எனக்கும் அதே கோவமும் ஆற்றாமையும் இருந்தது. ஆனால் இனி என்ன செய்ய முடியும். சிலர் அப்படித்தான். அவர்களுக்கு வேறு யார் பற்றியும் அக்கறை இல்லை. தம்மால் எவ்வளவு சுருட்டி பதுக்க முடியுமா அதை திறமையாகச் செய்வார்கள். அது நடிப்பெல்லாம் இல்லை. அவர்கள் அப்படிதான். அன்று அவர்களுக்கு சொத்து, முதலீடு, வருவாய் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்ட போது இல்லை என்று சொன்னான். தன் மகனின் உயிருக்கு ஆபத்து எனும் போது கூட தன் பணத்தையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அவனது சாமர்த்தியம் என்னைத் திடுக்கிட வைத்தது. அப்போது அவன் மனதில் என்ன ஓடி இருக்கும். ‘இருக்கிறது என்று சொன்னால் பணம் கொடுக்க மாட்டார்கள். நமது பிள்ளையானாலும் நாம் ஏன் நம் பணத்தை செலவு செய்யவேண்டும். அதான் அவன் தருகிறேன் என்கிறானே. நமது பணம் பத்திரம்’ என்பதுதானே. அவன் மனைவியும் அப்போது அங்கு தான் இருந்தாள். தன் கணவனின் சாதுர்யத்தைப் பார்த்து பூரித்துப் போயிருப்பாள். அந்தப் பணத்தால் உண்மையில் பணம் புறட்ட முடியாத வேறு தேவையுள்ளவர்களுக்கு உதவியிருக்கலாம் அல்லவா?
ஐந்து மாதங்களுக்குப் பின் எங்கள் அறக்கட்டளை வருமான வரிச்சலுகை சம்மந்தமாகவும் எங்கள் ஆவணச் சேகரிப்புக்காகவும் சில விவரங்கள் தேவைப்பட்டன. இவை எங்களிடம் ஏற்கனவே இருந்தாலும் அதை காரணமாக வைத்து அவனையும் அவன் வீட்டையும் பார்க்கவேண்டும் என்று நானும் கோபால் அண்ணனும் சென்றோம். அப்போது தான் முதன்முறை அந்த வீட்டை பார்த்தேன். குறைந்த பட்சம் பதினைந்து லட்சம் வரை ஆகியிருக்கும். காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்தவன் முகம் எங்களைப் பார்த்ததும் இருண்டு விட்டது. எங்களை உள்ளே கூடக் கூப்பிடவில்லை.
‘என்ன சார்?’ என்றான்.
விவரத்தைச் சொன்ன போது ‘போன் பண்ணிட்டு வரப்படாதா? நீங்கள் இப்போ போயிட்டு வாங்க நான் கேட்டுட்டு சொல்றேன்.’
‘கேட்டா? யாரிடம் கேட்டு?’ என்றார் கோபால் அண்ணன் எரிச்சலுடன்.
‘உங்களுக்கு என்ன சார். நாந்தான் கேட்டுட்டு சொல்றேன்னு சொல்றேன்ல. நீங்க போயிட்டு வாங்க. சும்மா சும்மா வீட்ல வந்து நிக்காதீங்க சார்’ என்றான்.
கோபம் எனக்கு தலைக்கேறியது. அடக்கிக்கொண்டு ‘இதப்பாருங்க இது அறக்கட்டளை. நீங்க உதவி வாங்கி இருக்கீங்க. அதுக்கு நெறய பேர்ட்ட நாங்க டொனஷன் வாங்கி இருக்கோம். அதுக்கு அவங்ககிட்ட இதுக்கெல்லாம் செலவு பண்ணிருக்கோம்னு கணக்கு காண்பிக்கணும். அதுக்கு தான் இந்த விவரம் எல்லாம்?’ என்றேன்.
‘வாங்கி எல்லாத்தையுமா எங்கிட்ட கொடுத்தீங்க. எப்படியும் நீங்க கொஞ்சம் கமிஷன் அடிச்சிருப்பீங்கள்ள?’ என்று கூறி கிண்டலாக சிரித்தான்.
கோபம் உச்சிமண்டைக்கேறி வாயிலிருந்து வார்த்தைகள் வரத் துடித்தது. அவனை ஏதாவது கெட்ட வார்த்தை கொண்டு வைய வேண்டும். ஏதாவது இழிவாக, அவனை புண்படுத்தும் படி. அவன் தாயைப் பற்றி. அவனது மனைவியைப் பற்றி. குறைந்த பட்சம் ஒரு சாபமாவது விட வேண்டும். அவன் மீதுள்ள கோபம், அவனை ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற என் இயலாமையின் மீது கோபம் என அத்தனையும் அடக்கிக் கொண்டு ‘ரைட்டுங்க. போய்ட்டு வாரோம். உங்க மகன் நல்லா இருக்கான்ல? இருக்கட்டும். நல்லா இருப்பான்.’ என்று கூறிவிட்டு கிளம்பி வந்து விட்டோம்.
அடுத்த ஒரு வருடத்தில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தை. அறக்கட்டளை பணிகள் எல்லாம் குறைந்து அப்போதெல்லாம் முழுவதுமாக நிறுத்தி இருந்தேன். திருமணம், குழந்தை, வேலை பிஸி என்பதை எல்லாம் வெளியில் சாக்காக சொல்லிக்கொண்டாலும் உண்மையில் செய்ய தன்ஊக்கம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஊரடங்கிலிருந்தே எனக்கும் மனைவிக்கும் வீட்டிலிருந்த படி வேலை தான் என்பதாலும் குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும் கடந்த மூன்று வருடங்களாக இங்கு ஊரில் என் அப்பா அம்மாவோடு தான் வசிக்கிறோம்.
அவ்வப்போது கோபால் அண்ணனிடம் இருந்து தகவல் வரும். பாலமுருகன் ஒன்பதாம் வகுப்பு இரண்டு வருடம் படிக்க நேர்ந்தது. பின் எப்படியோ பத்தாம்வகுப்பு பாஸாகி ஐடிஐயில் சேர்த்திருக்கிறார்கள். முதலாமாண்டிலேயே வேறு கல்லூரி மாணவர்களுடன் சண்டை ஏற்பட்டு அது போலீஸ் கேஸ் ஆகி பின் பணம் கொடுத்து கூட்டி வந்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அஜித்பாலா என்ற பெயரில் சினிமா சண்டையும், சாதிப்பெருமையும் பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தான். நானே அவனை சில முறை எருமை போன்ற பைக்கில் விர்ரென்று செல்வதை பார்த்திருக்கிறேன்.
கோபால் அண்ணன் வீட்டிலிருந்து வெளியெ வந்து என்னிடம் ‘சரி போலாமா’ என்றார்.
சரி என்று தலையை ஆட்டிவிட்டு இருவரும் தெருவிற்கு வந்தோம். அவரிடம் ‘எப்டினே ஆச்சு?’ என்றேன். ‘பைக்ல வேகமா போய் நின்னுக்கிட்டிருந்த லாரில முட்டிகிட்டான். ஹெல்மெட் போடல. தலைல சரியான அடி. ஸ்பாட் அவுட்’
‘கேஸ் எதுவும் போட்ருக்காங்களா?’
‘யார் மேல போட? அவனுக்கு இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகல. லைசென்ஸ் இல்ல. அதுவும் இல்லாம கஞ்சா அடிச்சிருந்திருக்கான்’ என்றார்.
நான் எதுவும் பேசவில்லை. அவர் என் தோளைத்தட்டி விடைபெற்றுக் கொண்டார். நான் எனது பைக்கில் ஏறி உட்கார்ந்து வெகுநாட்களாக என் மனதில் இருந்த சொற்களை மெதுவாக உச்சரித்தேன். ‘அந்த ஆறு லட்சமும் வீண்’.
பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு அதன் பக்கவாட்டு கண்ணாடியைப் பார்த்த போது தலையில் கொம்பும் நாக்கில் தேளும் கொண்ட அந்த கோர பொம்மையின் பிம்பம் அதில் தெரிந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
