தெய்வநல்லூர் கதைகள் – 16

This entry is part 16 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஆண்டுவிழாவை ஒட்டி நடந்த மைதெளிப்பு சம்பவத்தைத் தவிர்த்துப் பார்த்தால் பிற அனைத்தும் மிகச் சிறப்பான அனுபவங்களாகவே நிறைந்திருந்தன. விழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்த மாவட்ட கல்வியதிகாரி தொடங்கி உள்ளூர் தொழிலதிபர்கள் வரை அனைவராலும் ஆண்டுவிழா பாராட்டப்பட்டது. குறிப்பாக நாடகம் நகைச்சுவையாகவும், கருத்தாழம் மிக்க விழிப்புணர்வு கொண்டதாகவும் இருந்ததாக பேசிய அனைவரும் குறிப்பிட்டனர். சிவன், பார்வதி நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டாதவர்களே இல்லை. நடனம் முடித்து இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படம் (சிவன் நடராஜ அபிநயத்திலும், பார்வதி திரிபங்க நிலையில் ஒயிலாகவும் உறைந்து நிற்கும் காட்சி) 2017 ஆம் ஆண்டு வரை புளியங்குடி ஸ்டார் ஸ்டூடியோவில் தொங்கிக்கொண்டிருந்ததாக அமுக்குடப்பா கைப்பேசி குழு உரையாடல் ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த ஸ்டுடியோ மூடப்பட்டு விட்டதால் எங்களுக்கு அந்த அரிய புகைப்படம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது ( வெறுவாக்கெட்ட மூதில நீனு,.. தெங்காசி கோயில் யான மோளுததைல்லாம் மொபைல்ல படம் எடுத்துப் போடுதல்லா,  ஒவ்வொரு மட்டமும் புளியங்குடி போகையில பாத்தல்ல படத்த, அத ஃபோட்டோ எடுத்து வாட்ஸப்ல போட்ருக்க வேண்டியதுதானல, இனுமே எப்டில அந்த படத்த பாக்க முடியும்? – கைப்பேசி குழு உரையாடலில் சேமியா மணியின் நேர்மொழி குமுறல்;  மூதிய அழகா அருணுன்னு கூப்டலாம்னு நெனச்சா, அதே அமுக்குடப்பா வேலையத்தான செஞ்சி வைக்கான். சவத்து மூதி அமுக்குடப்பா, எங்கிட்ட சொல்லிருந்தாக் கூட நான் போயி ஒரு காப்பி போட்டு வாங்கிட்டு வந்திருப்பேனேடே- அதே கைப்பேசி குழு உரையாடலில் யக்கா பாட்ஷாவின்  வழிமொழி குமுறல்). எங்கள் குழுவில் உள்ளோர் பரிசு பெறும் புகைப்படம்  மட்டுமே அவரவருக்கு கிடைத்ததே தவிர பொதுவான படங்கள் ஆல்பமாக வைக்கப்பட்டு வகுப்பாசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்கள் பார்த்து விட்டு மீண்டும் தலைமை ஆசிரியர் அறைக்கே கொண்டு வைக்கப்படும் முறை தொடர்ந்தது. முழு ஆண்டுத் தேர்வு வரை நாங்கள் ஒவ்வொரு வாரமும் அந்த ஆல்பத்தை எடுத்து வந்து பார்த்து பேசி மகிழ்ந்திருந்தோம்( ஏல, பாத்து பாத்தே போட்டோல உள்ள கலரையெல்லாம் கரைச்சிரப் போறீங்கல- புன்னகை மின்னும் முகத்துடன் கஞ்சே என்ற கணேசன் சார்). இதை வாசிக்கும் நண்பர்கள் உணர்வு மேலிட்டு தெய்வநல்லூர் நேரு நடுநிலைப்பள்ளிக்கு சென்று அந்த ஆல்பத்தைப் பார்க்கலாம் என நினைத்தால் … 1998 ஆம் ஆண்டு மாநில அளவில் நடந்த பள்ளிகள் தரம் குறித்த ஆய்வில் எங்கள் நடுநிலைப்பள்ளி சிறப்பு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு பள்ளியின் நிர்வாகம் மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டது. அதன்பின் வந்த தலைமை ஆசிரியர்கள் பழைய நிர்வாகம் தொடர்பான எதையும் வைத்திருக்க வேண்டியதில்லை என நினத்ததால் எங்கள் ஆண்டுவிழா ஆல்பம் போல அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த விழாக்களின் ஆல்பங்களும் மொத்தமாக குப்பைத் தொட்டியில் கொட்டி  எரியூட்டப்பட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை சுத்தப்படுத்தப்பட்டது. 

கூர்மையாகவும், நிஜமாகவும் வாசித்து வரும் நண்பர்களுக்கு ஒரு ஐயம் ஏற்படலாம். மாடசாமி குழுவினர் முகத்தில் மிளகாய்பொடி வீசப்பட்ட விவகாரத்தில் மாடசாமி மீது பள்ளியில் புகார் அளிக்காமலானதற்கு எங்கள் தரப்பு நியாயம் உங்களுக்கு முன்பே விளக்கப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஏன் பதில் தாக்குதல் நடத்தவில்லை என்ற ஐயத்திற்கான  விளக்கம் சில முன்விளக்கக் கதைகளைக் கொண்டது. பிரேம் எங்கள் குழுவில் இடம் பெற்ற காலத்தை ஒட்டித்தான் சுனா கானா ராஜபாளையத்திலிருந்து திரும்பி வந்தது. திரும்பி வந்த நாட்களில் அவர் எங்களுடன் அவ்வப்போதுதான் தொடர்பு கொண்டிருந்தார். தனது தந்தையாரான புலிச் சுப்பையாவின் மீது கொண்டிருந்த கருத்து வேறுபாட்டால் இல்லத்தில் நாள்தோறும் வாக்குவாதம் மூண்டதால் பகல் பொழுதுகளில் வெற்றிலைச் சாவடியில் பாரம் ஏற்றி இறக்கும் ( டே, நானும் இப்ப ஏற்றுமதி, இறக்குமதி செய்யுதேம்லா – செண்பக விநாயகர் தலைமையக அவசர சந்திப்பொன்றில் தன் தற்காலிகப் பணி குறித்து தான் கற்ற பழைய கல்வியின் துணையுடன் எங்களுக்கு நகைச்சுவையுடன் சுனா கானா சொன்னது). இரவு நேரங்களில் வீடு திரும்பாமல் சாவடி மண்டபத்திலேயே உறங்கவும் ஆரம்பித்தார். அவரது அன்னையார் பட்டவாரத்தி அம்மையிடம் கண்கள் கலுழ, உளம் விம்ம வந்து பெற்றவள் இருக்க, பேணும் வீடிருக்க ஏதிலி போல சாவடியில் சுனா கானா உறங்குவதேன் என வேதனை வினா எழுப்பி பட்டம்மைதான் இதை பைசல் பண்ண வேண்டுமென கோரிக்கை வைத்தார். களிவெறி ஏறிய களிறினுக்கு கள்ளும் புகட்டப்பட்டது போல நியாயத்தின் போதையால்   சீண்டப்பட்ட பட்டவாரத்தி ஒருவகையில் தனக்கு மகன் உறவாகும் புலியாரை பூனையென பம்மச் செய்தும், பேரன் முறையாகும் சுனா கானாவை செல்லச் சுளுக்கு நீவி விட்டும் ஒரு சமாதான உடன்பாட்டை ஏற்படுத்தினார் ( ஏல புலி, ஒன் அம்மையும், நானும் ஒரு தாத்தனுக்கு பேத்தியாளுகன்னு ஒனக்கு சொல்லணுமால? பெரியம்மன்னு வேண்டாம்ல, பொண்ணாப் பொறந்ததுலருந்து ஒங்கம்மையும் நானும் ஒண்ணாத்தனல கெடந்தோம். அதுக்காண்டியாவது எம் பேச்சக் கேளுல.  பாதகத்தி, என்ன இருன்னுட்டு அவ மட்டும் போனாளே… இருல, ஓங்கிட்ட ஒப்பாரி வச்சுத்தான் என்வீட்டு ஒலக்கஞ்சி பொங்கணுமாக்கும், அவளுக்கு ரெண்டு வார்த்த ஒப்புச் சொல்லி அழுதா ஒன் ஐவேசு எறங்கிராதுடேயப்பா, கெடந்து வெடைக்காம நாஞ்சொல்லுதத கேளு,  கணேசன் தோளுக்கு மிஞ்சின பயலாயிட்டான். நீ அவன  இன்னும் அயிரக் குஞ்சுன்னு நெனக்காத, அவன் வெராலாயிட்டாம்டே. நிமுந்த பய வீட்டுல ராத்தங்காம போனா பாட்டம் எடுக்காத வயலுக்கும் தண்ணி பாச்சப்போன கதையாயிரும்ல. அவம் வயசுல நீ எத்துவாளியாத் திரிஞ்ச மாதிரியால இப்ப அவம் இருக்கான்?( புலிச் சுப்பையா வல் எயிற்று வாய் திறந்து உறும நினைத்தது இவ்விடம்) இந்தமட்டுக்கும் சாவடிலயே கெடக்கான். மேலபுதூரு கும்பக்காரி வீட்டுக்கு ஆளனுப்பி தேடிப்போறா மாதிரியா இருக்காம்?( உறுமுமுன்பே தன்வரலாறின் வர்மப் புள்ளியில்  குத்தப்பட்ட புலியார் மியாவ் என்றது இவ்விதம்)  அவம் போக்குல விட்டுத்தான் புடிக்கணும். ஒனக்கென்ன? அவன் ஒரு சோலிக்கு போணும். அம்புட்டுதான? போவான். அந்தாக்ல நீ சொன்ன லக்குல போயிதான் வேலைக்கு நிக்கணும்னு என்னல சடவு ஒனக்கு? சில்லா கலக்டரு வேலைல்லா நீ அனுப்புத வேல… எச்சி எலய எடுக்கவும், எச்சி க்ளாஸ் கழுவவுமா அவன அனுப்பப்பாக்க? அவன் வித்தைக்காரம்லா.   போயி அவங்கிட்ட பதமா பேசு. அவனும் கொள்ளி வைக்கலன்னா ஒளுங்கா குண்டி கழுவத்தெரியாத முத்துலிங்கப் பூசாரி கையால சாமக்கொடைக்கு மட்டும் சுடுகாட்டுச் சோத்தத் தின்னுட்டு ஊருக்குள்ள வரமுடியாம புளிய மரத்துல தலகீழாதான் தொங்கணும்ல நீயி , பாத்துக்க..) 

பட்டம்மை தான் மட்டும் வாழும் வரலாறாக இல்லாமல் உடன் வாழும் அனைவரது வரலாறும் அறிந்தவர் என்பதால் புலிச் சுப்பையா பதுங்கினாலும் அம்மையின் சொற்களில் உள்ள நியாயத்தை லேசாக உணர்ந்தார். பட்டவாரத்தி சுனா கானாவையும் குட்டியுடன் விளையாடும் தாய்ப்பூனையின் பொய்க்கடி போல கடித்துப் புரட்டித்தான் அனுப்பினார். ( கணேசா, ஒங்க ஆச்சியும் நானும் யாருக்கு மொத பேரன் பொறந்தாலும் கணேசண்ணு பேரு வைக்கணும்னு புள்ளையார் கோயில்ல கும்புட்டோம். இந்தான்னு நீ வந்து மொத பொறந்த… அப்ப எனக்கு மொதப்பேரன் நீதானடே. பேரக்கொள்ளிக்கு மொத நெய்ப்பந்தம் நீதானால புடிச்சு எனக்கு போற வழிக்கு வெளிச்சங்காட்டணும். ஒன்னக் கண்டுதான்  என் பேரனுக்கும் கணேசன்னே பேர்விட்டோம்.  அருமாந்த புள்ளயப் பெத்து தெருவுல தூக்கிப் போட்டாளாம்ன மாரில்லடே உங்கம்மைக்கு பேர் வாங்கிக் கொடுத்துருக்க. ஒங்கொப்பன் கொணயன்னா உங்கம்ம என்னல பாவஞ்செஞ்சா? ஓங்கப்பனுக்கு வாக்கப்பட்டதா? அவன் பாதி நாளு போலீசு, கச்சி, கேஸுன்னு போயிருவான், நீ பரதேசியப் போல சாவடில கெடப்ப. தாலி கெட்டுனவனும், தோளுக்கு வளந்த புள்ளையும் இருந்தும் அவளுக்கு வாச்ச வாழ்க்க புள்ள இல்லாத அறுதலிக்குக் கூட வாய்க்காதுல. ஏல! நீ சம்பாதிக்கத் தெரிஞ்சவன்தானல ? வேல தெரிஞ்சவன்தானல ? புலி சொல்லுத வேல புடிக்கலைன்னா அவங்கிட்டயே வேற வேல பாருப்பா, அதுல நிக்கேம், இது வேண்டாம்னு சொன்னா ஒம் பவுசுக்கு கொறையோடே? ஒரு எடத்துலன்னு வேலைக்கு நின்னாதானல மரியாத. யய்யா, எந்தங்கம், அழகு பெத்த புள்ளல்லா, ஆச்சி சொல்லுதத கேளு, ஓங்கப்பன் கிருத்துமம் ஒண்ணும் ஒனக்கு கெடையாது, சரிக்கு நிமுந்து, தப்புக்கு குனிஞ்சி நிக்கப்பட்டவன் நீ. ராத்திரி சாவடில படுக்காதடே. படுக்காளிப்பயக, பெண்டாட்டி தாலிய அறுத்து சாராயங்குடிக்கவன், சாமத்துல அடுத்தவ வீட்டு சொவரேறி சாடுதவன்லாம் வந்து படுத்துக் கெடப்பான். ஒனக்கு எதுக்குல சாவடில்லாம்? ஒங்கொப்பன் ஒன்னக் கொண்டு ராசபாளயம் ஒட்டல்ல நிக்க வுடவும்,ஒங்கம்ம ஒரு பொழுதா கெடந்தா. ஆமாம்ல, ஒரு நாளைக்கி ஒரு மட்டம்தாம் சாப்புடுவா. நீ வந்துரணும்னு மாரியாத்தாளுக்கு வேண்டுதல. இப்பம் ஊருல இருந்தும் வீட்டுல நிக்காம திரியிதையே, நீ வீட்டுக்கு வரணும்னு இப்பவும் ஒரு பொழுது சோறுன்னு அரைப்பட்டினியா கெடாக்கா.    ஆக்கி வைக்க அம்மை இருக்கா, போயி வீட்ல இருடே, அம்மைக்கு ஒன்னக் கண்டுதானல நிம்மதி. அவள இப்டி ஈரக்கொல காயும்படியா வைக்கலாமா தங்கம்… ஒங்க ஆச்சி இருந்தா இப்டி விடுவாளா, ஒன்ன பரதேசியா அலைய விட்டு பாத்துருப்பாளா, பாதகத்தி, என்ன இருன்னுட்டு அவ மட்டும் போனாளே, இந்தா இங்க வா, ஒத்த ரூபா.. சடைக்காதல, யாரு, ஆச்சிதான தாரேன். இரி, புள்ளையார் கோவில் திருநாறு பூசுதேம், நல்லா மகராசனா இருடே. வீட்டுக்குப் போகையில அம்மைக்கு நாலு பூவம்பழம் வாங்கிட்டுப் போ, ராத்திரி ஆச்சி சாவடிக்கு வந்து பாப்பேன். உன்னய அங்கன  கண்டேன்… பொறவு ஒன் தாத்தனே பயந்து எருவுன அந்த பட்டவாரத்தி ஆயிருவேன் பாத்துக்க… போயிட்டு வா , நல்லா இரிடே எந்தங்கம்). கண்களைத் துடைத்துக் கொண்டே சிவாஜி வீட்டிலிருந்து இறங்கிய சுனாகானா திரும்பி தன் இல்லம் ஏகினார். சரியாக அதிலிருந்து பத்தாம் நாளில் ஆடகலிங்கம் அவர்களின்  எலுமிச்சை தோட்ட வேலைக்கு சுனாகானா  சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து அப்பணியிலிருந்தும் பணிச்சூழல் ஒவ்வாமை ஏற்பட்டு சுனாகானா பணியைத் துறந்த கதை நாம் முன்பே பார்த்தது. அடுத்து அவர் நாயுடம்மா வீட்டில் பணிக்குச் சேர்ந்ததும் நமக்குத் தெரியும். ஆனால் தெரியாத இரண்டு விஷயங்கள் –  தோட்டப்பணியிலிருந்து திரும்பியதும்  சுனாகானா பட்டம்மையைக் கண்டு ஆறு நிமிடங்கள் பேசியதும், நாயுடம்மா ரைஸ்மில்லுக்குச் சென்ற பட்டவாரத்தி அம்மை சுனாகானாவுக்கும் கூட தெரியாமல் நாயுடம்மாவிடம் பேசியதும். 

சுனா கானா பணி நிமித்தம் ஊருக்குள் இல்லாமலாவதாலும், சற்று பெரிய மனுசன் போல ஆகிவிட்டதாலும் எங்களுடன் விளையாட்டுத் தோழராக இல்லாமல் அழைத்தால் வரும் விளியாட்டுத் தோழராக மாறியிருந்தார். ஊருக்குள் வரும் நாட்களில் எங்களுடன் ஒரு சிறு அவசர சந்திப்பாவது நிகழ்த்தாமல் போவதில்லை என்பதும், பள்ளியில் என்ன நிகழ்ந்தது எனக் கேட்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்ததும்  அவர் எங்களை இன்னும் நெருக்கமான நட்பாகவே கருதியிருந்ததை உணரச் செய்தது.  ஒரு வகையில் அவர் இழந்திருந்த பள்ளி வாழ்க்கையை எங்கள் வழியே அவ்வப்போது அனுபவித்தார் என சொல்லலாம்.  அப்படியான ஒரு சந்திப்பின்போதுதான் நாங்கள் பிரேமுக்கும், சுனா கானாவுக்கும் அறிமுகம் செய்துவைத்தோம். அதுவரை ஒருவருக்கொருவர் பாராமலேயே அறிமுகமாகியிருந்த இருவரும் நேரில் சந்திப்பதை நாங்கள் மிக விரும்பியிருந்தோம். இருவருமே எங்கள் அணியின் மிக முக்கிய ஆளுமைகளாக விளங்கினார்கள். பிரேம் குறித்து கேட்பதில் சுனா கானாவும், சுனா கானா குறித்து கேட்பதில் பிரேமும் பரஸ்பரம் ஆர்வத்துடன் இருந்தார்கள். முதல் சந்திப்பிலேயே சுனா கானா வின் உள்ளத்தை  கொள்ளை கொண்டுவிட்டார் பிரேம். நேரில் சந்தித்த (செண்பக விநாயகர் கோவில் தலைமை அலுவலகம்) ஐந்தாம் நொடியில் கணேசண்ணா என பிரேம் விளிக்க சுனா கானா கண்ணீர் உகப்ப, நடுநா நடுங்க, மயிர்க்கூச்செறிந்து நின்றார். ( டேய், நீங்கள்ளாம் ஒண்ணா படிச்சவா, வா போன்னு சொல்லலாம். அவர் நமக்கு 6 வயசு பெரியவரில்லையா? நான் அண்ணாண்ணுதான் சொல்லுவேன். நீங்க எப்டி வேணும்னாலும் அவர கூப்டுக்கலாம்– பிரேம்). அண்ணே என அழைக்காமல் அண்ணா என அழைக்கப்பட்டதால் தன்னிலை மறந்த தண்மை கொண்டிருந்த சுனா கானா பிரேமை எப்போதும் தம்பி என்றே அழைக்க ஆரம்பித்தார். இக்காட்சியால் உந்தப்பெற்ற டொம்ப்ளீயும் சுனா கானாவை அண்ணே என சொல்லி நடுமண்டையில் செல்லக் குட்டு வாங்கினார் ( கிறுக்கு மூதி, யான மோண்டு பூன குளிக்கலாம், பூன மோண்டு யான குளிக்கமுடியுமால? அண்ணே, நொண்நென்ன காதத் திருவிருவேன் பாத்துக்க  – சுனா கானாவின் இப்பழமொழிக்கு பொருள் எங்களுக்குத் தெரியாது. ஆனால் நேர்முறை பேரன் அல்ல எனினும் பட்டவாரத்தி அம்மையின் மானசீக பேரனாக அவர்தம் ஆசியை நிரம்பப் பெற்றவர் சுனா கானா என நண்பர்கள் முன்பே அறிந்ததை இவ்விடம் நினைவில் கொள்க).  

இடையில் ஒருமுறை நாங்கள் சுனா கானா பணி செய்து வரும் எலுமிச்சைத் தோட்டத்திற்கு சென்று வந்தோம். எங்கள் வீடுகளில் எளிதாக அனுமதி கிடைத்துவிட பிரேம் வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் சுனா கானா முந்தைய தினம் பிரேம் வீட்டிற்குச் சென்று பிரேமின் பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்கினார். நாங்கள் பிரேம் விஷயத்தில் அடைந்து வரும் வியப்புகளில் ஒரு எண்ணிக்கை கூடியது. எலுமிச்சை தோட்டத்திற்குப் போக இரு வழிகள் உண்டு. ஒன்று பள்ளிவாசல் அருகே மேற்காகக் செல்லும் பாதையில் சென்று மலையை அடைந்து மலைமேல் செல்லும் சுருள் பாதையில் செல்லுதல். இந்தப் பாதைதான் மாடு மேய்ப்போர் மந்தைகளை ஓட்டிச் செல்லும் பாதை. இன்னொரு வழி மாரியம்மன் கோவில் எதிரே மணலால் செய்யப்பட சாலை போல நீண்டு வரும் ஓடை. ஆண்டின் எட்டு மாதங்களுக்கு நீர் இன்றியும் (அதாவது தாவாமலே ஆடு கடக்கும் அகலத்தில் நீர் கசிந்து ஓடும்) நான்கு மாதங்களுக்கு வெள்ளம் எனும் பெயரால் கணுக்கால் அளவிலும் நீர் ஓடும் ஓடை. அதையே பாதையாகக் கொண்டு ஓடை வழியாகவே நடந்தால் மலை ஏறி இறங்காமலேயே எலுமிச்சை தோட்டத்தை அடைந்து விடலாம். ஆனால் காலை வெயிலுக்கு முன்னும், மாலை வெயில் தாழவும்தான் ஓடைப்பாதையை பயன்படுத்த முடியும். பிரேம், சிவாஜி தவிர எங்களில் பலருக்கும் எப்போதும் செருப்பு அணியும் வழக்கம் இல்லை. மேலும் செருப்பு அணிந்தால் சரியாக நடக்க முடியவில்லை எனும் சிக்கலும் எங்களுக்கு அன்று இருந்தது. 

காலை சென்றால்  மாலைதான் திரும்ப முடியும் என்பதால் பிரேம் வீட்டில் மதிய உணவாக புளியோதரை, வடகம், அப்பளம் ஆகியன தரப்பட்டன. எங்கள் வீடுகளில் அவ்வாறான வழக்கம் இல்லை என்பதாலும், மதிய உணவுக்கு தான் ஏற்பாடு செய்வதாக சுனா கானா சொல்லியிருந்ததாலும் நாங்கள் வெறும் கை வீசி    இனிது வந்தோம். காலை ஏழு மணியளவில் எங்கள் தலைமையகத்தில் நான், பிரேம், சேமியா, டொம்ப்ளீ, டும்ரீக்கோல், அமுக்கு டப்பா, யக்கா பாட்ஷா ஆகியோர் காத்திருக்க சிவாஜியும்  சுனா கானாவும் வந்து சேர்ந்தார்கள். சுனா கானா தலையில் ஒரு சாக்கு மூட்டையும், சிவாஜி தலையில் ஒரு பெரிய ஓலைப்பெட்டியும் இருந்தன. அனைவரும் விநாயகரை வணங்கிவிட்டு கிளம்பினோம். போகும் வழியில் முத்தையா பிள்ளை கடையில் இட்லி, வடைகள் வாங்கிக் கொண்டு சாம்பாரை தூக்குச்சட்டியில் வாங்கிக் கொண்டார் சுனா கானா. மாரியம்மன் கோவில் வாசலில் நிற்கும் கருப்பனை வணங்கி அனுமதி பெற்று ஓடையில் இறங்கினோம். நடக்க நடக்க இருபுறமும் வயல்கள் குறைந்து அடர்ந்த மரங்கள் நிறைந்து வந்தன. குறிப்பிட்ட இடம் வந்ததும் சுனா கானா எங்களை ஓடை மணலிலேயே மரத்தடி நிழலில் இருந்த பாறை மீது அமரச் சொல்லி விட்டு சற்று தள்ளி மரத்தின் பின்னால் கரை ஏறி குரல் கொடுத்தார். பதில் குரல் வரவும் எங்களை காத்திருக்கச் சொல்லி விட்டு சென்றவர் அடுத்த பத்து நிமிடங்களில் இரு கலயங்களில் பதநீரும் , தேக்கு இலைக்கட்டு ஒன்றும்,சிறிய பனைஓலை கடவத்தில் நுங்குகளுமாக திரும்பி வந்தார். ஓடை அந்த இடத்தில் லேசாக வளைந்து இருபுறமும் பந்தலிட்ட மரங்களுக்கு நடுவே ஓசையின்றி மினுக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஓடை நீர் வளையக் காரணமான பெரிய பாறை இருபது பேர் படுத்துறங்கும்படியாக மஞ்சமிட்டு அமர்ந்திருந்தது. ஓடைநீர் பாறையில் மோதி அரித்த இடம் பள்ளமாக இடுப்பளவு ஆழத்துடன் தெளிந்த சிறு சுனை போல ஒளிர்ந்து கிடந்தது. அதிலிருக்கும் நீர் வழிந்து பாறையைச் சுற்றிக்கொண்டு சென்றது.   மரத்தின்  நிழலில் அந்தப் பாறையும், பாறையின் காலடியில் வழிந்தோடும் ஓடைநீரும் அக்காலைப் பொழுதை என்றும் மறவாததாக்கின. 

 அனைவரையும் வெறும் வயிற்றில் பதநீர் குடிக்கச் சொன்ன சுனா கானா நுங்கை மட்டும் சாப்பிட்டதும் சாப்பிடலாமென சொல்லி விட்டார். தேக்கிலையில் இட்லி, வடை, கெட்டிச் சட்னி, சாம்பார் பரிமாறப்பட பெருவிருந்தின் மகிழ்வோடு உண்டோம். உண்டதும் ஓடையில் நீரள்ளி அருந்தும் முறையை சுனா கானா கற்றுத்தந்தார் ( ஏல டொம்ப்ளீ, தண்ணி வாரதுக்கு எதுத்தாக்ல நின்னு ரெண்டு கையாலயும் மூணு மட்டம் வெலக்கிட்டு மெல்ல அள்ளி குடில, தண்ணி போக்குல நின்னா ஒன் கால்ல பட்டு வார தண்ணிய நீயே அள்ளிக் குடிப்பேல்லா). அங்கிருந்து கிளம்பி மேலும் அரை மணி நேரம் ஓடை வழியே நடந்து கரையேறும் இடத்தின் அடையாளமாக சுனா கானா சுட்டிக்காட்டிய நீர்மருது மரத்தினை ஒட்டி கரையேறி மேலும் இருபது நிமிடங்கள் நடந்து எலுமிச்சைத் தோட்டத்தை அடைந்தோம். சுற்றிலும் கல்தூண்கள் நடப்பட்டு நெருக்கமாக இரும்பு முள்வேலி சுற்றப்பட்டு கிராதிக் கதவுகள் அமைக்கப்பட்டு தனித்து இருந்தது தோட்டம்.( அதுவா, மாட்டுப் பாதையில டிராக்டர் வரும்லா, அதுல எல்லாத்தையும் கொண்டு வந்து கட்டினாக, உள்ள வந்து பாருங்கடே- சுனா கானா). மலை என்றும்,  குன்று என்றும் சொல்ல முடியாத பெரிய மேடொன்றின் முன்சரிவில் அமைந்திருந்தது தோட்டம். நாங்கள் நினைத்தது போல எலுமிச்சை மரங்கள் உயரமாக இல்லாதது மட்டுமன்றி  தொரட்டி இல்லாமலேயேதான் பழங்களைப் பறிப்பார்கள் என்பதையும் சேர்த்து சற்று ஏமாற்றமாக இருந்தது. உள்ளே மோட்டார் அறையும், அதை ஒட்டிய அறையும் போக குடிசை வீடு போல கட்டப்பட்ட இரு வீடுகள் இருந்தன. உள்ளே கட்டில், மெத்தை, மின்விசிறி ஆகியவற்றுடன் வசதியாக இருந்த அவற்றில் ஆடகலிங்கமும், அவரது நண்பர்களும் அவ்வப்போது வந்து தங்குவதாக    சுனா கானா தெரிவித்தார். மோட்டார் அறையை ஒட்டிய அறையே சுனா கானாவின் மாளிகை. அதன் வாயிலை ஒட்டி அவரே கட்டிய மண் அடுப்பு.      

சுனா கானா அவர் கொண்டு வந்த மூட்டையையும், சிவாஜி கொண்டுவந்த கடவத்திலிருந்தும் சமையலுக்கான சாமான்களை எடுத்து வைத்தார். முதன்முறையாக நாங்களும் சமையலில் ஈடுபட்டோம். தோட்டத்துக்கு நடுவில் சிறிய அளவில் வளர்க்கப்பட்ட காய்கறி பாத்திகளிலிருந்து கொடிக்கால் கத்திரிக்காய் எனப்படும் வெள்ளைக் கத்திரிக்காய், சிவப்பு வெண்டைக்காய், பச்சை மிளகாய், ஈத்தக்குச்சியின் கையை விட பருமனாக இருக்கும் மலை முருங்கை, தோட்டத்துக்கு வெளியே மலைச்சரிவில் நிற்கும் புளியமரத்திலிருந்த பாதி பழுத்த புளிக்காய்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டன.  சுனா கானா எங்களுக்கெலாம் பணிப் பகிர்வு செய்து கொடுத்தார். டொம்ப்ளீயும் யக்காவும் தேங்காய் துருவல் பிரிவு மற்றும் ஈராங்ஞம் என்ற ஈருள்ளி என்ற சின்ன வெங்காயம் உரிக்கும் கூடுதல் பொறுப்பு. காய்கறி நறுக்கும் பொறுப்பு பிரேமுக்கு. அமுக்கு டப்பா அவர் வீட்டில் அம்மாவிற்கு சமையலில் உதவுவதால் அரிசி, பருப்பு களைந்து தரும் பணி. டும்ரீக்கோல் சமையலுக்கான தண்ணீரை கிணற்றிலிருந்து கொண்டு வந்து தரும் பணியை ஏற்றுக் கொள்ள சேமியாவும், சுனா கானாவும் விறகு பொறுக்கச் சென்றார்கள். சுனா கானா வந்து அடுப்பை ஏற்றுமுன் கிணற்றுக்கு சென்று குளித்து விட்டு வந்தார். மண்பானையை அடுப்பில் ஏற்றி கொடி அடுப்பில் உலைமூடியை வறுவல் சட்டியாகப் பயன்படுத்தி உலை கொதிக்குமுன் கத்திரிக்காய் வதக்கல் செய்து முடித்தார். உலையில் அரிசி இடும்போது கத்திரி வதங்கியிருக்க சாம்பார் மசாலா வறுத்து தேங்காயுடன் கூட்டி அம்மியில் விழுதாக அரைத்து வைத்துக் கொண்டார். , சாம்பாருக்கான காய்கள் பாதி வேகவும், அமுக்குடப்பா வேண்டுகோளுக்கு இணங்கி மூன்று கொதி வந்ததும் முன்பே தோல் நீக்கி அரைக்கப்பட்டிருந்த புளிக்காய் விழுதையும் சேர்த்து மறுபடி மூன்று கொதி வரவும் அரைத்து உருட்டி வைத்திருந்த சாம்பார் மசாலாவை சேர்க்கவும் தோட்டத்தில் எலுமிச்சை மணம் சட்டென மறைந்து கும்மென்ற சாம்பார் மணம் எழுந்தது. கஞ்சி வடித்து சோற்றை இறக்கிய அடுப்பில் அரைசட்டி நீர் வைத்து அம்மியில் மிளகு, சீரகத்தை நுணுக்கி அதில் சேர்த்து வெரத்தண்டி (விரல் பருமனில்) இஞ்சியை நான்கு பல் பூண்டுடன் சதைத்துச் சேர்த்து மஞ்சள் பொடி இட்டு இரண்டாம் கொதியில் கொழுந்து கருவேப்பிலை கிள்ளிப் போட்டு மூன்றாம் கொதியில் இறக்கி வைத்து முழு எலுமிச்சை பிழிந்து 7 நிமிடங்களில் சுனா கானா செய்து தந்த எலுமிச்சை ரசத்தின் சுவையை அப்போதுதான் நாங்கள் அனுபவித்தோம். அதை அவ்வளவு விரைவில் சுனா கானா செய்ய காரணம் பிரேம் கேட்ட ஒரே கேள்வி – கணேசண்ணா, ரசம் உண்டில்லையா? அதுக்கு புளி எடுத்து வைக்கலியே?. சுனா கானாவிற்குப் பிறகு பிரேமும், சிவாஜியும், நானும் இன்றுவரை எலுமிச்சை ரசம் சாப்பிடுவதில்லை என்றாகி விட்டது. 

அன்று எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. திடீரென நாங்கள் எல்லோரும் பெரிய மனிதர்களாகி விட்டது போல உணர்ந்தோம். எங்களால் சமையல் செய்ய முடிந்திருக்கிறது என்பதே எங்களை பெருமிதம் கொள்ளச் செய்தது. ஓலைப்பாயில் வட்டவடிவமாக அமர்ந்து தேக்கிலையில் உண்டோம். முதன்முறையாக பிரேம் எங்களுடன் சேர்ந்து நாங்கள் சமைத்த உணவை உண்ண ஆரம்பித்தது அப்போதுதான். சுனா கானா தாள முடியாத மகிழ்வுடன் அள்ளி அள்ளி வைத்து உண்ணீர், உண்ணீர் என அனைவரையும் உபசரித்து நிறைந்தார்.  பிரேம் கொண்டுவந்த புளியோதரையை ஆளுக்கு அரைக்கை கொடுத்து காலி செய்தார் சிவாஜி. தோட்டத்தில் இரு மாடுகள் உண்டு என்பதால் பால் கிடைக்கும். தோட்டப்பணிக்கு வரும் பெண்கள் மாடுகளைக் கவனித்துக் கொள்வதால் தயிர் தாராளமாகக் கிடைக்கும். வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சி ஆடகலிங்கம் வீட்டிற்கு மாதமிருமுறை எடுத்து  வரும் பணியும் சுனா கானா வை சேர்ந்தது. தயிர்சோற்றுக்கு சுனா கானா என்ற கணேசண்ணா உலைமூடியில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் (கடுகு, உளுந்து தாளித்து) அதில் பச்சைமிளகாய், பூண்டு, புளியம்பழம், கல்லுப்பு சேர்த்து சதைத்த கலவையை இட்டு  ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியிட்டு முப்பது நொடிகளில் இறக்கிய உடனடி புளிமிளகாய் துவையல் அபாரமாக இருந்தது (மூதி, வழிச் ழிச்சிநக் காதுலபேதியா யிரும்பாரு (மூதி, வழிச்சி வழிச்சி நக்காதல, பேதியாயிரும் பெறவு) – துவையல் தின்னி எனும் பட்டமேற்பு விழாவுக்கு தயாராக இருந்த யக்கா பாட்ஷாவை நோக்கி டொம்ப்ளீயின் அக்கறைக் கோபம். 

சுனா கானா பாடுவார் என்ற விவரமும் அன்றுதான் தெரிந்தது. வழக்கம் போல அதைக் கண்டுபிடித்தது பிரேம் தான். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் நம்பவே முடியாத இரு சம்பவங்கள் நிகழ்ந்தன- 1.சுனா கானா தேர்ந்த பாடகர் போல கண்களை மூடி ம்‌ம்‌ம், ஆஆ என்றெல்லாம் ஸ்வரம் பிடித்து முழுப்பாடலையும் பாடியது 2. மிக நன்றாகப் பாடியது. ( தம்பி , அதெல்லாம் ஒண்ணுமில்லடே, இங்கன காட்டுக்குள்ள ஒத்தையில கெடக்கையில பேச யாருமில்லன்னு இருக்கும்லா. அப்ப யாருமில்லைங்க தைரியத்துல வாய் விட்டுப் பாட்டுப்படிப்பேம். எனக்கா ஒறக்கம் நெம தட்டுத வரைக்கும் எதையாச்சும் பாடிக்கிட்டு இருப்பேம். சில சமயம் ஊருக்குள்ள போடுத மைக்செட்டு பாட்டு ராத்திரி சன்னமா இங்கன வரைக்கும் கேக்கும். அதக் கேட்டு கூடவே பாட்டுப் படிப்பேம். வேற யாரு வந்து இந்த காட்டுக்குள்ள பாட்டு சொல்லித் தரப்போறா ? – வெட்கச் சிரிப்புடன் சுனா கானா பிரேமிடம்). “விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல” என்ற இடத்தில் குரல் இடறி கண்கள் நீர்கட்டிய சுனா கானாவை அதுவரையிலுமோ, அதற்குப் பின்புமோ நாங்கள் கண்டதில்லை. ஆனால்  இன்றைக்கு நாங்கள் யாரும் “ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி” பாடலைக் கேட்பதை தவிர்த்து விடுகிறோம்தான். ( இளையராசா இல்லடே, சீனிவாசன்னு ஒருத்தர்தான் மீசிக்கு – டும்ரீக்கோலின் தவறான புரிதலை சுனா கானா திருத்தியது இன்றும் நினைவிலிருக்கிறது). காலை உணவு உண்ட பாறை வரை எங்களுடன் திரும்பி வந்த சுனா கானா பிரிய மனமின்றி எங்களுக்கு விடை கொடுத்து அமுக்குடப்பாவின் தலைமையில் எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் எங்கள் நண்பர்களில் முதன்முதலாக டாட்டா காட்டியது சுனா கானாவுக்குதான்.  எங்கள் டவுசர் பைகளிலும், பிரேமின் சாப்பாட்டுச் சட்டியிலும் எலுமிச்சை கனிகள் நிறைந்து மணம் வீசியபடி இருந்தன. 

சுனா கானாவின் முன் வரலாறும், புலியாரின் கட்சிப் பணி கீர்த்தியும், சுனா கானாவின் தற்காலத்திய பணியிடமும் ஊருக்குள் அவர் பெயரில் ஒரு அச்சங்கலந்த மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. அவர் மகாத்மா அணியினரான எங்களுடன் நட்பு பாராட்டுவதும் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நீண்ட முன்கதையின் அவசியம் ஏனென்றால் இக்காரணங்களைக் கொண்டே மாடசாமி கோஷ்டியார் எங்களுடன் வன்முறை வளர்க்காமல் இருந்தது உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே. மாடசாமி கோஷ்டியார் தம் யுத்த தந்திரத்தை மாற்றிக் கொண்டு வந்த பின்னாட்களில் நாங்கள் மூவரும் தோற்கவில்லை என்றாலும் தோற்றிருக்கலாம் எனும் அளவுக்கு நிறையவே இழந்தோம். 

ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இம்முறை மகாத்மா அணியினர் ஏழாம் வகுப்பில் எவரும் தோற்கக் கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் அவரவருக்கு பொறுப்பாக விடப்பட்ட படிப்பதில் சோர்வான மாணவர்களை தயார்படுத்த ஆரம்பித்தார்கள். மீனா மாமி மூலம் ஓதுவாரிடம் சொல்லி பெரியகோவிலில் சபாபதி மண்டபத்தில் மாலை ஆறு மணி முதல் சாயரட்சை பூஜைக்கான எட்டரை மணி வரை வழக்கமான குண்டு மஞ்சள் பல்புக்கு பதில் ட்யூப் லைட் போடப்பட்டது. மகாத்மா குழுவினரின் 100% தேர்ச்சி இலக்கிற்கான பயிற்சி அங்குதான் நடைபெற்றது. இதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த நாடார் பள்ளி ஆசிரியரான செல்வகணேசன் (ஆசிரிய வட்டாரத்தில் செக்கா) சார் தன் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயிலும் சோர்வான மாணவர்களையும் இங்கு அழைத்து வந்து அமரச் செய்தார். அவ்வப்போது வட்ட பிஸ்கட்டுகளும் அவர் மூலம் எங்களுக்குக் கிடைத்தன. தேர்வு துவங்கும் நாளன்று காலையில் எங்களை வரச்சொன்ன சபேச குருக்கள் படிக்கும் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி திருநீறு பூசி ஆசீர்வதித்து அனுப்பினார். தேர்வுகள் விரைவாகக் கடந்து போயின. விடுமுறை ஆரம்பித்தது. கோடை விடுமுறையில் வெளியூர் செல்லும் பெருவாய்ப்பு அன்று எங்களில் சிலருக்கே இருந்தது. ஆகவே உள்ளூரிலேயே விடுமுறையைக் கழித்த நாங்கள் செல்லாங்குச்சி, பேந்தான், கள்ளம் போலீசு, கம்பு தள்ளி, கிணற்று நீச்சல் ( விடுமுறை முடிய பத்து நாட்கள் இருக்கையில் திரும்பிய பிரேம் எங்களுடன் வந்துதான் கிணற்றில் நீச்சல் கற்றுக்கொண்டது), மரமேறிக் கொரங்கு என பொழுதுகளை கொண்டாடிக் களித்தோம். எந்தச் செலவுமின்றி எந்த இடமும் மைதானமாக  நாங்கள் விளையாடிய ஒரு விளையாட்டும் இப்போது விளையாடப்படுகிறதா எனத் தெரியவில்லை. விடுமுறையின் இனிய களைப்புடன் எங்கள் எட்டாம் வகுப்பு துவங்கியது.

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள் தெய்வநல்லூர் கதைகள்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.