
Woke – சமூக வலைதளங்களில், நடுபக்க கட்டுரைகளில் நடைபெறும் கலாச்சார போர்களில் அதிகம் அடிபடும் சொல். சமூகத்தில் உள்ள பாலின, இன, மொழி, என அனைத்து வித சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வைப் பெற்றவர்கள் எனவும், வெறும் போலிகள், தங்களைப் பற்றிய உயர் பிம்பத்தை உருவாக்க, தாங்கள் பின்பற்றாததை தூக்கிப் பிடிப்பவர்கள் என ஒரே நேரத்தில் பெருமிதமாகவும், இழிவாகவும் உபயோகப்படுத்தப் படும் வார்த்தை. லிபரல்களும் woke மனிதர்களும் ஒன்றல்ல என்றும் கூறப்படுவதுடன், White guilt/saviour complexன் வெளிப்பாடாகவும் பார்க்கப்பட்டு Woke என்பது பகடிக்கான ஒன்றாகவும் உள்ளது. மாற்றத்திற்கான முயற்சியில் களச் செயலாற்றுபவர்களில் கணிசமானவர்கள் தங்களை தங்களை woke என்று அழைத்துக் கொள்வதில்லை, அப்படிச் சுட்டப்படுவதை விரும்புவதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. மிக எளிதாக உதிர்கப்படுவதால், அந்த சொல் நீர்த்து போவதுடன், புதிய கருத்துக்களை சந்தேகத்துடன் பார்க்கும் மனநிலையும் மரபுவாதிகளால் உருவாக்கபடுகிறது. தனக்கு ஒவ்வாத கருத்தை சொல்பவர்களை woke என்று முத்திரை குத்தும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். உண்மையில் Woke மனநிலை என்பது என்ன என்பதை விட்டு விட்டு, அதன் மேல் சுமற்றப்படும் விமர்சனத்தை மட்டும் இப்போதைக்கு இந்தக் குறிப்புடன் பொருத்திப் பார்ப்போம். தீர்ப்பாக அல்ல, அதனைப் பற்றிய ஒரு கோணமாக மட்டுமே.
சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதையின் இளம் வயது தம்பதியரில் கணவன், முற்போக்குவாதி என்று அவனே தன்னைச் சொல்லிக் கொள்கிறான். மனைவி எல்லோரிடமும் சகஜமாக பேச வேண்டும், தன் ஆண் நண்பர்களிடமும் கூட என்று சொல்பவன், அந்தளவிற்கு தாரள மனம் கொண்டவன், முற்போக்குவாதியாகத் தான் இருக்க முடியுமல்லவா? மனைவிக்கு இதில் பெரிதாக நாட்டமில்லை, அதற்காக அவள் பிற்போக்கு என்றோ சிடுமூஞ்சி என்றோ சொல்ல முடியாது, அவளுக்கு எல்லோரிடமும், எடுத்தவுடன் சிரித்துப் பேசிப் பழகுவது பிடிக்கவில்லை, ஆனால் முற்போக்குவாதி அதை புரிந்து கொள்வாரா, அவருக்கு முற்போக்கு எண்ணங்களை பரப்ப வேண்டுமல்லவா, வீட்டிலிருந்து ஆரம்பிப்பது தானே சரி.
அன்று, கணவன், மனைவி, கணவனின் நண்பன்- அவனும் இளைஞன்- திரைப்படம் பார்க்கச் செல்கிறார்கள். இரண்டு டிக்கெட் தான் கிடைக்கிறது. கணவன் ‘தாராள மனதுடன்’, மனைவியையும், நண்பனையும் படம் பார்க்க சொல்லிவிட்டு, வீட்டிற்குத் திரும்பி விடுகிறான். சிறிது நேரம் கழித்து, கணவனின் முற்போக்கு ஆட்டம் காண ஆரம்பிக்கிறது, உள்ளுக்கும், வாசலுக்குமாக அலைகிறான். தெருவில் நண்பவனுடன், புன்னகைத்தபடி வந்து கொண்டிருக்கும் மனைவியைப் பார்ப்பவனுக்கு, கொதிப்பு அதிகமாகிறது. ஆனாலும் முற்போக்கு இல்லையா, மௌனமாக இருக்கிறான். ஓரிரு நாட்களில் அவன் நடத்தையில் உள்ள மாறுதல் மனைவிக்கு தென்படுகிறது. ஒரு மாதம் பொறுப்பவள், வெளிப்படையாக கேட்கிறாள். பேச்சு முற்றுகிறது, மனைவி அவனைப் பிரிந்து செல்கிறாள். அவளுடைய பிரசவத்திற்கு சென்று கணவன் சென்று வருகிறான், அதன் பின்னரும் பிரிந்தே இருக்கிறார்கள். இறுதியில், அவன் அவளை அழைக்க வர, இணைகிறார்கள்.
இரு டிக்கெட் மட்டுமே இருக்கும் நிலையில், மனைவியை, அவள் விருப்பத்திற்கு மாறாக, நண்பனுடன் படம் பார்க்க எந்த கணவன் அனுப்புவான் என்ற கேள்வி இங்கு தேவையில்லாதது, அது எழுந்தால், இந்தக் கதையே இல்லாமல் ஆகிவிடுமே. ‘அன்பை யாசிக்க வந்திருக்கிறேன்’ என்று கணவன் இறுதியில் சொல்வதை, ‘சமத்துவம் என்று பேசிக் கொண்டு, அடிப்படையான அன்பை வற்ற அடித்து விடுகிறோமோ’ என்று மனைவி கூறுவதை, இன்று வாசகனால் ஏற்க முடியாமல் போகலாம், 1960ஆம் ஆண்டு கலைமகளில், வெகு ஜன இதழொன்றில், இந்தளவிற்கு மேல் செல்ல முடியாது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
சில மாதங்களுக்கு முன் வெளியான American Fiction திரைப்படத்தில், இலக்கிய வகுப்பில், Flannery O Connor எழுதிய சிறுகதையின் தலைப்பு கறுப்பினத்தவரை இழிவு படுத்துவதாக உள்ளது என்று வெள்ளையின மாணவி ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ‘N word’ என்று தான் அவரால் அதைக் குறிப்பிட முடிகிறது. வகுப்பாசிரியர் கறுப்பின ஆண். கதை எழுதப்பட்ட காலம், அந்த வார்த்தை கதையில் பொருந்தும் விதம் (context) பற்றி கருத்தில் கொள்ள வேண்டும், ‘எனக்கே அதில் பிரச்சனையில்லை’ என்று அவர் கூறுவதை மாணவி ஏற்றுக் கொள்வதில்லை. வகுப்பறையை விட்டு வெளிநடப்பு செய்கிறார் (அல்லது வெளியேற்றப்படுகிறார்). அந்தப் பெண் Flannery O Connorஐ cancel செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஹாஷ்டேகை உருவாக்குவார் என்று நம்பலாம்.
ஆசிரியருக்கு இந்த ‘குற்றவுணர்வு மனநிலை’ போலியாகத் தெரிகிறது. அவர் எழுத்தாளரும் கூட, ஆனால் அவருடைய சமீபத்திய நூலை பிரசுரிக்க தயங்குகிறார்கள். ‘கறுப்பின நூலை’ அவரிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் என்று அவருடைய ஏஜெண்ட் கூறுகிறார். அதாவது ‘காவல் துறையால் சுட்டுக் கொல்லப்படும் கறுப்பின பதின் பருவத்தினர், பதின் பருவத்திலேயே குழந்தைகள் பெற்று, கணவனில்லாமல் தனியாக அவர்களை வளர்க்கும் கறுப்பினப் பெண்’ போன்ற துன்பவியல் விஷயங்கள் பற்றி பேசும் எழுத்துக்களையே வெள்ளையினத்தவர் விரும்பதாகவும், அதை நிறைவேற்றவே பதிப்பகங்கள் முயல்வதாகவும் ஆசிரியர்/எழுத்தாளர் கோபப்படுகிறார். Povery Pornன் மற்றொரு வடிவாக இந்த மனநிலையை பார்க்கலாம். இதை, அமெரிக்காவில் இனவெறி இல்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, அந்த அன்றாட நிதர்சனத்தை யாரும் (எழுத்தாளர்/ஆசிரியரும் கூட) மறுக்கவில்லை, அவற்றை தங்களின் குற்றவுணர்விற்கு வடிகாலாக – ஆனால் நிஜத்தில் எதையும் செய்யாமல் – பார்க்கும் மனநிலை தான் இங்கு விமர்சிக்கப்படுகிறது.
வெள்ளையின மக்கள் உண்மையை எதிர்கொள்ள விரும்பவில்லை, நிற ,இனவெறி வரலாற்று குற்றங்களுக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று விடுவிக்கப் படுவதை (absolution) மட்டுமே அவர்கள் விரும்புவதாக படத்தில் வசனமுண்டு. வடு கதையின் கணவனும் அப்படியொருவனாக இருக்கக் கூடும்.
கதையில் வரும் கணவனும் absolution பெறத் தான் முயற்சிக்கின்றானோ? பெண்களுக்கான வெளி மறுக்கப்படுவதற்கு தான் காரணம் அல்ல, அதற்கு தான் குற்றவாளி அல்ல என்பதை நிறுவ தான் அவன் முயல்கிறானா? எனில் அவன் போலியா? இன்று அவனைப்பற்றிய விமர்சனம் எப்படியிருக்கக் கூடும்? மனைவிக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்வதிலுள்ள agency, பெண்ணிற்கு கிடையாதா, அவளுடைய ஒப்புதல்/consent பற்றி சிந்திக்காதவன் என்று இன்றைய கலாச்சார சூழலில்/ zeitgeistல் புழக்கத்தில் உள்ள சொற்களை அவன் மீது சுமத்தலாம். தன் மனதில் ஒரு கோட்டை வரைந்து, அதைப் பற்றி வெளியே சொல்லாமல், மனைவி/பெண் அதற்கு மிகவும் தள்ளி இருந்தாலும் சரி, கோட்டிற்கு மிக அருகில் வந்தாலும், தப்பித் தவறி அதைத் தாண்டினாலும், தன் அகங்காரம் சீண்டப்படும் -தள்ளி இருந்தால் கர்வி, திமிர் பிடித்தவள், அருகில் வந்தால், தாண்டினால், பரத்தை என்று எண்ணும் – சராசரி ஆண் என்று மட்டும் அவனைக் குறித்து சொல்ல முடியும். கோட்டிற்கு எந்த தூரத்தில் மனைவி நிற்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும், கோடொன்று இருப்பதே தெரியாத மனைவி அந்த இடத்திலேயே எப்போதுமிருக்க வேண்டும். உண்மையில், அடிப்படை நல்லெண்ணத்தில் செய்வதாகத் தான் அவன் இந்தக் கோட்டை குறித்து நினைப்பான்.
ஒரு விஷயத்தின் அகல, ஆழங்களை முழுதும் அறியாமல், அதில் இறங்கவும் செய்யாமல், அது குறித்த முன்முடிவுகளை, தீர்ப்புக்களை-நல்லெண்ணத்தினாலோ, அல்லது தன் பிம்ப மோகத்தாலோ – உருவாக்கியப் பின், அந்த விஷயத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் போது ஒருவனுக்கு ஏற்படும் சலனங்களையே இந்தக் கணவன் அடைகிறான் என்பதாகவும் பார்க்கலாம்.
(முற்போக்கு பற்றி முப்பொழுதும் பேசும் இலக்கியவாதிகள், இலக்கிய விழாக்கள், கூட்டங்களுக்கு தங்களுடைய மனைவியை அழைத்து வருவதில்லை என்பது தமிழ் சூழலைக் குறித்து வைக்கப்படும் விமர்சனம் நினைவுக்கு வருகிறது. இதற்கு, மனைவி/இணையருக்கு இலக்கியம் மீது நாட்டமில்லை, எனவே அழைத்து வருவதில்லை என்றும் கூட காரணம் சொல்லப்படக் கூடும். மனைவி என்று சொல்வது ஆணாதிக்கம், இணையர் என்று தான் குறிப்பிட வேண்டும் என்று இலக்கிய (woke?) விமர்சனம் இதற்கு வரக் கூடுமோ?)
1960களில் woke என்ற சொல் இன்றைய அர்த்தத்தில் புழக்கத்தில் இல்லை, பெயர் சூட்டப்படவில்லை என்பதாலேயே ஒரு மனநிலை இருப்பில் இல்லை என்று அதை நிராகரிக்க முடியமா என்ன? அன்று முற்போக்கு, இன்று woke, அவ்வளவே, நாளை வேறு சொல் உபயோகிக்கப்படலாம். ஆனால், அன்றும், இன்றும், என்றும், உண்மையாக ஒன்றைப் பின்பற்றுபவர்களும், அரைகுறை புரிதலுடன் சிக்கிக் கொள்பவர்களும், போலிகளும் இருக்கத் தான் செய்வார்கள், அதைச் 1960ல் சுட்டிக் காட்டிய சரோஜா ராமமூர்த்தியின் ‘வடுவும்’, சமீபத்தில் வெளியான American Fiction போன்ற படங்களும் இருக்கத் தான் செய்யும்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
