அதிரியன் நினைவுகள் -29

This entry is part 28 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் :  மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் :   நா.கிருஷ்ணா

சித்திரம் : சங்கரநாராயணன்

மீண்டும் படகில் ஏறினோம். இதுரை அறிந்ததில்லை, அப்படியொரு கடுங் குளிர் காற்று வீசியது. என் அருகில் அமர்ந்திருந்த லூசியஸ், பின்னல் வேலைபாடுகொண்ட  பருத்திப் போர்வையின் முனையைத் தன் மெல்லிய விரல்நுனியால் உயர்த்தினான்;   எதையாவது பேசவேண்டுமென்கிற நாகரீகம் கருதி, உரோம் நகர உள் விவகாரங்களையும் அவதூறுகளையும் ஓயாமல் பரிமாறிக் கொண்டோம். படகின் உட்பகுதியில் கால்நீட்டி படுத்திருந்த ஆண்ட்டினஸ் தலை என்னுடைய மடியில் இருந்தது. எங்கள் உரையாடலில் பங்கெடுக்காமல், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பி   உறங்குவதுபோல பாசாங்கு செய்தான். எனது கை அவனது கழுத்திற்கு பின்புறம் தலைமுடிக்குக் கீழ் நழுவியது. எவ்வித பயன்பாடுமற்ற அல்லது மந்தமான  தருணங்களில் அடர்ந்த காடுகள், சிறுத்தையின் தசைநிறைந்த பின்புறம், நீரூற்றுகளின் சீரான துடிப்பு போன்ற இயற்கைசார்ந்த பெரும்பொருட்களுடன் நெருக்கமாக இருப்பதையொத்த  உணர்வுக்கு நான் ஆளாவதுண்டு; ஆனால் எந்தவொரு பிரியமும் ஆன்மாவரை சென்றதுண்டா எனக்கேட்டால், இல்லையென்பதுதான் என்னுடைய பதில். செராபியம் திரும்பியபோது, சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. தர்பூசணி வியாபாரிகள் தெருக்களில் தங்கள் பொருட்களைக் கூவி விற்றுக்கொண்டிருந்தனர். அன்று உள்ளூராட்சி மன்றக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவேண்டியிருந்தது  அதுவரை உறங்கினேன். நான் இக்கூட்டத்துக்குச் செல்லவேண்டியிருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு ஆண்ட்டினஸ்,  கனோபஸுக்குத் தன்னுடன் வரும்படி ஷாப்ரியாஸை வற்புறுத்த்தியதாக  பின்னர் நான் அறிந்தேன். சூனியக்காரியைச் சந்திக்க திரும்ப அவன் சென்றான். 


நாள் : இருநூற்று இருபத்தி ஆறாம் ஒலிம்பியாட் முடிந்து இரண்டாம் ஆண்டு, அத்திர்(Athyr) மாதத்தின் முதல் நாள்… வேதனைகளின் தெய்வமான ஒசிரிஸ் நினைவு நாள்: நதிநெடுக, அனைத்து கிராமங்களிலும்  மூன்று நாட்கள் தொடர்ந்து ஓவென்று அழுகுரல்கள் கேட்டவண்ணமிருந்தன.கீழைநாடுகளின்   இம்மாதிரியான புதிரான மரபுகளுக்கு அதிகம் பழகியிராத என்னுடைய உரோமானிய அதிதிகள், இனத்தால் வேறுபட்ட இம்மனிதர்களின் விழாக்களில்  ஒருவகை ஆர்வத்துடனிருக்க, எனக்கோ அவை அளவுகடந்த எரிச்சலை அளித்தன. எனது படகை மற்றபடகுகளிலிருந்து சிறிது தொலைவில், குடியிருப்புகளின் அண்மையைத் தவிர்த்து வெகு தொலைவில் நிறுத்தச்செய்தேன்: இருந்தும் நதியருகில் பராமரிப்பற்ற பார்வோன் (Pharaohs)ஆலயமும், மதகுருக்களுக்குப் பயிற்சிதரும் பள்ளியுமிருக்க  அழுகுரல்களிலிருந்து முழுமையாகத் தப்பித்திருந்தேன் எனச்சொல்வதற்கில்லை.

முந்தையநாள் இரவு, லூசியஸ்  இரவு உணவிற்கு தனது படகிற்கு என்னை அழைத்தான். சூரியன் மறையும்நேரம் அங்கு சென்றேன். ஆண்ட்டினஸ் என்னுடன் வர மறுத்தான். அவனை எனது மரக்கலத்தின் பின்புற அறை வாசலில் விட்டுவிட்டுவந்தேன்,  சிங்கத்தின் தோலை விரித்து அதில் படுத்தபடி  ஷப்ரியாஸுடன் விரல்கணு எலும்புகள் (Osselets) விளையாடுவதில் மும்முரமாக இருந்தான். அரைமணி நேரம் கழித்து, இருட்டத் தொடங்கிய நேரத்தில், அவன் மனம் மாறியது. அங்கிருந்த  படகொன்றை அழைத்து,  ஒற்றைமனிதன் துடுப்புபோட,  நாங்களிருந்தபடகும்  பிறபடகுகளிலிருந்து கணிசமான தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் வெகுதூரம் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில்  அப்படகில்  செல்லவேண்டியிருந்தது. ஆண்ட்டினஸ் இரவு உணவு நடைபெற்றுக் கொண்டிருந்த எங்கள் மரக்கல கூடாரத்திற்குள் நுழைந்தநேரத்தில், பெண்ணோருத்தியின் நடன உடலசைவுகளுக்குப் பார்வையாளரிடத்தில் கைத்தட்டல், அதைத்தடுத்து நிறுத்துகின்ற வகையில் ஆண்ட்டினஸ் வருகை இருந்தது. சிரியர்கள் அணிகிற நீண்ட, பழத்தோல் போன்ற மெல்லியதொரு  அங்கியை உடுத்தியிருந்தான், அங்கியை மலர்களும், தீ கக்கும் வேதாளவிலங்குகளும்(Chimeras) அலங்கரித்திருந்தன. துடுப்புப்போட சௌகரியமாக வலது கரத்தைச் சட்டைக் கையிலிருந்து விடுவித்திருந்தான்: மென்மையான அவனுடைய மார்பில் வியர்வையுடன் நடுக்கம். இதற்கிடையில் தலைக்குமேலே எறியபட்ட  பூமாலையொன்றை கையிற் பிடித்த லூசியஸ்  அவனை நோக்கி வீசினான். ஒரு கோப்பை கிரேக்க ஒயின் மட்டுமே எடுத்திருந்தும்,  இம்மியளவு கூட  குறையாத மகிழ்ச்சியில் இருந்தான். தன்ன்னுடைய படகிலிருந்தவண்ணம் லூசியஸ் கடுப்புடன் விடைகொடுக்க, ஆறுபேர் துடுப்புப்போடக்கூடிய என்னுடைய படகிற்குத் திரும்பினோம். வெறித்தனமான சந்தோஷம் தொடர்ந்து அவனிடத்தில் நீடித்தது. ஆனால் மறுநாள்காலை  கண்ணீர் நனைத்து உறைதிருந்த அவனுடைய  முகத்தை தொடவேண்டிய சந்தர்ப்பம் எதிர்பாராமல் கிடைத்தது.  இந்தக் கண்ணீருக்கான காரணத்தை நான் பொறுமையுடன் அவனிடம் கேட்டேன்;  சோர்வே காரமென, மிகவும் அடக்கமாகப் பதில் சொன்னான். சொல்வது பொய்யெனத் தெரிந்தும் ஏற்றுக்கொண்டேன்; திரும்ப உறங்கத்தில் ஆழ்ந்தேன். அவனுடைய உண்மையான வேதனைக்குப் பிறப்பிடம் எனதருகே… இக்கட்டிலில்..

உரோமிலிருந்து  கடிதம் வந்திருந்தது; அதைப் படித்து பதிலளித்ததில் முழுநாளும்  கழிந்தது. எப்போதும்போல, ஆண்ட்டினஸ் அமைதியாக, அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தான்: அழகிய அந்தஜீவன் எனது வாழ்க்கையிலிலிருந்து வெளியேறிய அத்தருணத்தை நான் உணரத் தவறினேன். தோராயமாக  மணி பன்னிரண்டு இருக்கக் கூடும், ஷப்ரியாஸ் பதற்றத்துடன் உள்ளே நுழைந்தார். எங்கள் மரக்கலத்திலிருந்து இளைஞன்  புறப்பட்டுச்சென்று குறைந்தது இரண்டுமணி நேரம் ஆகியிருக்கக்கூடும், இப்படிப்போகிறபோது  சில ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கவேண்டும் அதாவது தான் எதற்காகப் போகிறேன், திரும்புவதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும், ஆனால் அதை அவன் செய்யவில்லை.  முந்தைய நாள்  விசித்திரமான சிறு உரையாடல் எங்களுக்குள் இடம்பெற்றது, தொடர்ந்து அது சார்ந்து என்பொருட்டு சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டன, அவற்றை  ஷப்ரியாஸ் எனக்கு ஞாபடுத்திவிட்டு, ஏதோவொரு  விபரீதத்தைச் சந்திக்கவிருக்கிறோமென அஞ்சவும் செய்தார். வேகவேகமாக நதிக்கரைக்கு வந்தோம். அம்மூதறிஞருக்கு  மனதில் என்ன தோன்றியதோ  நதிக்கரையோரம் அமைந்திருந்ததொரு வழிபாட்டிடத்தை நோக்கிச்சென்றார், தேவாலயத்தின் வெளிப்புறக் கட்டுமானத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிறியகட்டிடம்,  அவரும் ஆண்ட்டினஸும் சேர்ந்து பார்வையிடச் சென்ற இடம். காணிக்கை மேசையொன்றில்,  பலியிட்ட ஜீவனின் சாம்பல் இன்னும் இளஞ்சூட்டுடன் இருந்தது. ஷப்ரியாஸ் தனது விரல்களை அச்சாம்பலில் அமிழ்த்தி, முழுமையாக இருந்த வெட்டப்பட்ட சுருள்முடிக் கற்றையொன்றை, அதிலிருந்து எடுத்தார். 

இனி நாங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அந்த ஆற்ரங்கரையை அலசி ஆராயவேண்டும், வரிசையாக நீர்த்தேக்கங்கள், அவை நீர் வரத்துக்காக ஆழமற்ற ஆற்றோடு இணைக்கப்பட்டிருந்தன, ஒரு காலத்தில் அவை புனிதச் சடங்குகளுக்குப் பயன்பட்டிருக்கவேண்டும். சூரியன் மேற்கில் மறையும் நேரம், கடைசி  நீர்த்தேக்கத்தின் விளிம்பில், ஷப்ரியாஸ் மடித்த  ஆடையொன்றையும், மிதியடிகளையும் பார்த்தார். வழுக்கும் படிகளில் நானும் இறங்கினேன். சேறு மூடிய உடல் நீரின் அடியில் படுத்திருப்பதுபோல நதியில் கிடந்தது. உடலை எடுத்தபோது பாறாங்கல்போல திடீரென்று கனத்த பேதிலும் ஷப்ரியாஸ் உதவியுடன் உடலைத் தூக்க என்னால் முடிந்தது.   அவர் படகோட்டிகளை கூவி அழைத்தார், அவர்களும் கிடைத்த துணியைக்கொண்டு ஒரு தூக்குப் படுக்கையை உருவாக்கியிருந்தார்கள். வெகு அவசரமாக அழைக்கபட்ட மருத்துவர் ஹெர்மோஜேனெஸ் இறப்பை உறுதி செய்தார். எப்போதும் பணிவும் அடக்கமுமென வாழ்ந்த உடல் திரும்ப வெப்பத்தை உடலில் ஏற்கவோ, மீண்டும் உயிர் பெறவோ விருப்பமிலாததுபோல இருந்தது. உடலைக் கரைக்குக் கொண்டுவந்தோம். உடல் சார்ந்த அனைத்தும் நிலைகுலைந்திருந்தன, முடிந்திருந்தன. படகின் தளத்தில் சாம்பல்நிற கேசம்கொண்ட ஒரேயொரு மனிதன் மட்டும் விம்மியபடி இருந்தான் ; மாறாக ஒலிம்ப்பியன் ஜீயுஸ் என்றும், அனைத்திற்கும் தலைவன் என்றும், உலக இரட்சகனென்றும் அழைக்கப்பட்ட அனைவரும் சீரழிந்துகிடந்தனர், 

இரண்டு நாட்கள் கழிந்திருந்தன, ஹெர்மோஜேனெஸ் இறுதிச்சடங்குக்கு ஆகவேண்டியவற்றை  செய்யவேண்டுமென ஞாபகமூட்டினார். ஆண்ட்டினஸ் தனது மரணத்தைச் சார்ந்து தெரிவுசெய்திருந்த பலிச் சடங்குகள் இதற்காகத்தானா என்றுகூட நினைத்தேன். தவிர இம்முடிவின் நாளும் நேரமும் ஒசைரிஸ் கல்லறைக்குள் இறங்கிய நாள் மற்றும் நேத்துடன் ஒத்துப்போனதற்கும் ஏதோவொரு காரணம் இருக்கவேண்டுமென மனதிற்பட்டது.   ஹெர்மோபோலிஸ் மறு  கரைக்குச்சென்று பிணம் கெடாமலிருக்க,  அது சம்பந்தப்பட்ட பணிசெய்யும் மனிதர்களைச் சென்று பார்த்தேன். அலெக்ஸாண்டிரியாவில் அவர்களது சகாக்கள் வேலை செய்யும் முறைகளை பார்த்த அனுபவமுண்டு. பிணச் சீரமைப்பு என்கிறபெயரில்  உடலுக்குத் தருகிற இம்சைகளை அறிந்தும் உள்ளேன்.  இறுதியில் விருப்பமானதொரு உடலை எரித்து கரியாக்கும்  தீயும்  அதுபோல அவற்றை அழுகச்செய்யும் பூமியும் கொடுமையானவைதான்.  

ஆற்றைக் கடப்பது சுருக்கமாக முடிந்தது ; மரக்கலத்தின் பின்பகுதி சிற்றறையில் யூஃபோரியன் அதிக சத்தமின்றி கதறினான், அவனுடைய ஆப்ரிக்க ஒப்பாரியை எந்தவகையில் வைப்பதென எனக்குத் தெரியாது. கேட்கச்சகிக்காத மெலிந்த அக்குரல் நானே அழுவதுபோன்ற எண்ணத்தை தந்தது. சிகிச்சை மையம் போன்றதொரு கூடத்தை நிறைய தண்ணீரைக்கொண்டு கழுவிய பின் உடல் அங்கு எடுத்துவரப்பட்டது. முகத்தில் மெழுகிடுவதற்கு முன்பாக எண்ணெய் தடவிய ஊழியருக்கு உதவினேன். என் கைகளுக்கிடையில் இறந்தவனின் இதயம், உணர்வு வெளிப்பாடுகள் அனைத்தும், அதனதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட தருணமது. அங்கிருந்து வெளியேறியபோது உயிரற்ற உடலுக்கு  செய்யவேண்டிய அலங்காரங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன, மிகவும் அரிதான இந்த விலைமதிப்பற்ற இராட்சதப் படைப்பு முதற்கட்டமாக,  காற்றும் சூரியனும் இனி ஒருபோதும் தொடாத வகையில் உப்பையும்,’மிர்’(myrrh) எனும் நறுமணப் பிசினையும் கொண்டு பதப்படுத்தப்பட்டது. 

திரும்பியதும், உயிர்ப்பலி இடப்பட்ட ஆலயத்திற்கருகே   சென்றேன்; அங்கிருந்த குருக்களிடம் பேசினேன். புதுப்பிக்கப்பட்ட  அவர்களுடைய வழிபாட்டிடம், எகிப்து முழுவதற்கும் யாத்திரைத் தலமாக திரும்பவும் மாறக்கூடும்; அவர்களின் வளமான, உயர்ந்த வழிபாட்டிடம் இனிமேல் என்னுடைய இறைவனின் சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளும் என்கிற சூழலைக் கண்டேன். உண்மையில் மிகவும் மந்தமான  தருணங்களில் கூட, இறந்தவனின் இந்த இளமை தெய்வீகமானது என்பதில்  எனக்கு ஒருபோதும் சந்தேகம் எழுந்ததில்லை. கிரேக்கமும்  ஆசிய நாடுகளும் வெண்ணிற, நிர்வாண சிலையின் காலடியில்   இனி நம்மைப் போலவே நம்முடைய வழிமுறையில் விளையாட்டுகள், நடனங்கள், மற்றும் நிவேதனச் சடங்குகளைத் தவறாது செய்து அவனை   வணங்குவார்களென்றும்,  துயரத்திற்குரிய இச்சம்பவத்திற்குக் களமாக அமைந்த எகிப்தும் கூட இத்தெய்வ வழிபாட்டில் பங்கேற்கும் சாத்தியம் உள்ளதெனவும் நம்பினேன்.  அந்தரங்கம், இருண்மை, கடினமென அனைத்திற்கும் அடையாளமாகிப்போன இந்நாடு இனி  பிணத்தைச் அலங்கரிக்கும் ஊழியர் பாத்திரத்தை   காலமெல்லாம் நிறைவேற்ற வேண்டிய நிலை. இனி பல நூற்றாண்டுகள் மொட்டையடித்துக்கொண்ட குருக்கள் தங்கள் இறைமுறையீட்டுப் பாசுரங்களில் இளைஞனின் பெயரை  தவறாது உச்சரிக்கக் கூடும்,   ஆனால் அதன் அருமை அவர்களுக்குத் தெரியாது,  மாறாக நானோ அப்பெயருக்குரிய அனைத்து மதிப்பீடுகளையும் அறிந்தவன்.  ஒவ்வொரு ஆண்டும், புனித படகு ஆற்றில் இளைஞனின் பிரதிமையைச் சுமந்து செல்லும்;  நான் நடந்து வந்த  இந்த ஆற்றங்கரையில் அத்திர் மாதத்தில் முதல் நாள், அவனுக்காக துக்கம்  அனுசரிப்பபவர்கள், நடந்து  செல்லக்கூடும்.

இனி என் உயிரை மாய்த்துக்கொள்வதொன்றைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மனநிலை, எனவே தற்கொலை எண்ணத்திலிருந்து என்னைக் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும்  அதன் உடனடி கடமை உண்டு,  அத்தருணத்தில்  பிறமைகளிடத்தில் தமது ஆதிக்கத்தை அது  செலுத்தும், அவ்வகையில்தான் இதனைச் சொல்லவேண்டும். அடுத்து செய்ய வேண்டியவற்றிர்க்காக ஃபிளேகன் என் குழுமத்தைச்சேர்ந்த கட்டிடக் கலைஞர்களையும் பொறியாளர்களையும் ஒன்று திரட்டினார். ஒருவகை தெளிவான சிந்தனை மயக்கம் என்னை வழிநடத்த, அம்மனிதர்களை கற்கள நிறைந்த குன்றுகள் திசைநோக்கி அழைத்துச் சென்றேன்;  சுற்று சுவருடன் கூடிய நாற்பத்தைந்து திடல்களை அமைப்பதென்கிற என்னுடைய  திட்டத்தை விளக்கமாகத் தெரிவித்தேன்;  நான் மணலில் வெற்றி வளைவின் இடத்தையும், கல்லறையையும் குறித்தேன். ஆண்டினஸ் மறுபடியும் பிறக்கப் போகிறான்.  பொல்லாங்கிற்குரிய இந்நிலத்தில்  ஒரு முழு கிரேக்க நகரத்தையும் திணிப்பதென்வது கிட்டத்தட்ட மரணத்தை வெல்லுமொரு ஏற்பாடெனில் மிகையில்லை,  இது எரித்திரியாவின் நாடோடிகளை  மதித்து திட்டமிட்டதொரு கோட்டையெனவும் கருத இடமுண்டு, ஏன் இந்தியாவுடனான புதியச் சந்தைக்கு வழிகோலும் பாதையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.  அலெக்சாண்டர் ஹெபெஸ்டினின் இறுதிச் சடங்கை பேரழிவுகள், படுகொலைகளென்று  கொண்டாடினார். நானோ வெறுவகையில் அதைக் கொண்டாட விரும்பினேன்,  இறந்த உயிருக்கு ஓர் நகரத்தைக் காணிக்கையாக்குவதென்றும், காணிக்கையாக அளித்த அவ்வழிப்பாட்டிடம், எந்நேரமும் மனிதர்கள் கூடும் பொதுச் சதுக்கத்துடன் தொடர்புடயதாக அமையவேண்டுமெனவும் விரும்பினேன். அங்கு மாலை நேர அரட்டைகளில் இளைஞனின் பெயர் தவறாமல் இடம்பெற வேண்டுமென்றும், அங்கு  விருந்துண்டு மகிழும் நேரங்களில் மலர்க்கீரீடத்தை இளைஞர்கள் ஒருவரையொருவர் பரிமாறிக்கொள்ளவேண்டுமென்றும் மனதில் கனவுகளிருந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் என் எண்ணங்கள் குழப்பத்தில் அலைமோதின. இந்த உடலை அந்நிய மண்ணில் விட்டுச்செல்வது  சாத்தியமில்லையென தோன்றியது. என்ன செய்வதென்கிற குழப்பத்தில் இருக்கும் மனிதனொருவன் ஒரே நேரத்தில்  பல விடுதிகளில் தங்குவதற்கான ஏற்பாட்டில் இறங்கியதுபோல,   டைபர்  நதிக்கரையில்  உரோமில் என் கல்லறைக்கு அருகிலேயே அவனுக்கொரு நினைவுச் சின்னத்திற்கு ஏற்பாடு செய்தேன்; எகிப்திலுள்ள என்னுடைய பிரத்தியேக குடியிருப்பில்,  பைத்தியக்காரத் தனமான மனப்போக்கின் காரணமாக சில வழிப்பாட்டிடங்களை கட்டியிருந்தேன், அவைகூட திடீரென நிகழ்ந்த இத்துயரச் சம்பவத்தை நினைவுகூற பயன்படுமென  தோன்றிய்து. இறந்தஉடலைப் பராமரித்த மனிதர்கள் இறுதிச் சடங்கிற்கு இரண்டுமாதம் காத்திருக்கவேண்டுமென  தெரிவித்திருந்தார்கள், அதன்படி நாளும் குறிக்கப்பட்டது. இறுதிச்சடங்கிற்கான பாடல்களை ஒருங்கிணைக்குமாறு மீசோமெடிஸிடம் கேட்டுக்கொண்டேன். இரவு வெகுநேரம் கழித்து மரக்கலத்திற்குத் திரும்பினேன் ; ஹெர்மோஜேனெஸ் நான் ஆழ்ந்துறங்க வேண்டுமெனறு திரவ மருந்தொன்றை தயாரித்திருந்தார். 

நதிப்யணத்தை நிறுத்தாமல் தொடரவேண்டியிருந்தது, ஆனால் இம்முறை பயணம் செய்த நதி  ஸ்டிக்ஸ்(Styx). தான்யூப்  நதிக்கரை சிறை முகாம்களில் ஒருமுறை, பரிதாபத்திற்குரிய மனிதர்கள் சிலர் ஒரு பெயரை ஓயாமல் திரும்பத் திரும்ப அர்த்தமற்று முணுமுத்தபடி, காட்டுத்தனமாக சுவரில் தலையை மோதிக்கொண்டிருந்த அவலத்தைக் காண நேரிட்டது. அதுபோல உரோம் நகர கொலோசியம்(Colisée) கீழிருந்த பாதாள அறைகளில்   சிங்கங்கள் மெலிந்து உயிர்பிரியும் நிலையில் இருப்பதை  எனக்குக் காட்டினார்கள்,  அவற்றுடன் வாழப்பழகிய நாய்களை, அவ்விலங்குகளிடமிருந்து பிரித்தது, அதற்குக் காரணமெனச் சொல்லப்பட்டது.  ஆண்டினஸ் இறப்பு, ஏதேதோ எண்ணங்களை மனதில் உழலவிட்டது. சிறுவயதில், காக்கைகள் கொத்திக் கிழித்திருந்த மருலினஸ்(Marullinus) சடலத்தின்மீது விழுந்து கதறி அழுதிருக்கிறேன், ஆனால் அந்த அழுகை விலங்கொன்றின் அர்த்தமற்ற இரவுநேர ஊளை. தந்தை இறந்தபோது, நிராதரவாக விடப்பட்ட அச்சிறுவனுக்குப் பன்னிரண்டு வயது. அச்சூழலில் அவன் அறிந்தவை வீட்டின் ஒழுங்கின்மை, தாயின் கண்ணீர், மற்றும் அவனுக்குள் உருவான  அச்சம் என்பவையன்றி இறந்த மனிதர்பட்ட வேதனைகளையல்ல.  பன்னோனியாவில் நான் பணிபுரிந்த காலத்தில் வெகுகாலம் கழித்து, என்னுடைய தாய்  இறந்திருந்தார்; ஆனால் அவர் இறந்த தேதி சரியாக ஞாபகத்திலில்லை. திராயானைப் பொறுத்தவரை அவரொரு நோயாளியாகவே இறந்தார், உயில் எழுதி வைக்கவேண்டிய நெருக்கடி அவருக்கு இருந்தது. புளோட்டினா இறப்பைக் காணும் சந்தர்ப்பம் எனக்கில்லை; தள்ளாதவயதில் அட்டியானஸ் மாண்டார். டேசியர்களுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​நான் மிகவும் நேசிப்பதாக நினைத்த பல தோழர்களை இழந்திருக்கிறேன்; இளம்வயதினராக  நாம் இருக்கிறபோது உயிர்வாழ்க்கையைப் போலவே மரணமும் எளிதானதாகவும், போதையூட்டுகின்றவகையிலும் இருந்தது. என்னுடைய ஆண்ட்டினஸ் கதைமுடிந்தது. ” எந்த வயதிலும் நாம் இறக்கக்கூடும்” எனவும், “இளம் வயதில் மரணிக்கும் உயிர்களை இறைவன் நேசிக்கிறான்” எனவும்  அடிக்கடி பலரும் பொதுவில் சொல்லக் கேட்ட்டிருக்கிறேன், அவவற்றை எண்ணிப்பார்த்தேன்.  “உறங்கும்போதே உயிர் பிரியவேண்டும்”, “வேதனையில் மடியவேண்டும்” என,   என் தரப்பிலும்  சில புலம்பல்களுக்கு பங்களிப்பு செய்ய விரும்பி, வார்ர்த்தைகளை விரயம் செய்தேன். ‘வேதனை’, ‘துக்கம்’, ‘இழப்பு’, போன்ற வார்த்தைகளும் உபயோகத்திற்கு இருந்தன. என்னுடைய ஆண்ட்டினஸ் இறந்துவிட்டான்.

அன்பு,  உலகியல் அறிவினை கூடுதலாகப் பெற்ற தொரு கடவுள் … ஆனால் இந்த அலட்சியத்திற்கும் ,  கடுமைக்கும், நதி நீர் சுமந்து செல்லும் பொன் துகளில் கலந்த மணல் போல உணர்ச்சியுடன் கலந்துள்ள உதாசீனத்திற்கும், பண்பாடின்றி கண்மூடித்தனமாக களிப்பின் உச்சத்தில் திளைத்த மனிதனுக்கும், அவனுடைய மூப்பிற்கும், ஒருபோதும் அந்த அன்போ காதலோ பொறுப்பல்ல.  வேறொன்றில் இந்த அளவிற்கு முழுமையாக திருப்தியை நான் அடைந்திருக்க முடிந்திருக்குமா?  ம்.. ஆண்ட்டினஸ் இன்றில்லை. ரோம் நகரில், செர்வியானஸ் கடந்தகாலங்களில் தனதன்பை  மிதமிஞ்சியதெனத் தெரிவிப்பதுண்டு, ஆனால் அதற்கெல்லாம அப்பாற்பட்டது ஆண்ட்டினஸுடனான எனது அன்பு,  எனதுப் பிரியத்திற்குகந்த பையனை, அவன் உயிர்வாழ்வதன் அவசியத்தை உணரும் அளவிற்கு நேசிக்கத் தவறிவிட்டேன் என்பதுதான் உண்மை. ஓர்ஃபிசம் (Orphism) என்கிற சிறுசமய வழிபாட்டு முறையில் தீட்சைபெற்ற சாப்ரியாஸைப்(Chabrias) பொறுத்தவரை  தற்கொலை ஒரு குற்றம், எனவே அவர்  இம்முடிவை ஓர் அர்ப்பணிப்பென்று  வலியுறுத்த முனைந்தார்; நானும் கூட ஆண்ட்டினஸுடைய இந்த அகால மரணத்தை  ஓர் உயிர்தானமாகப் பாவித்து ஒருவித கொடூரமான மகிழ்ச்சியில் திளைத்தேன். அதேவேளையில், இந்த இனிமைக்குள் நொதிக்கும் கசப்பின் அளவையும், மறுப்பில் ஒளிந்துள்ள விரக்தியின் பங்கையும், அன்பில் கலந்திருக்கும் வெறுப்பின் அளவீட்டையும்  நான் மட்டுமே கணக்கிடத் தெரிந்திருந்தேன். இதுபோன்றதொரு அர்ப்பணிப்புப் பணியில் நான் ஈடுபடுவதற்கு,  பெரிதும் பாதிக்கப்பட்ட  ஓரு ஜீவனே காரணம்; அனைத்தையும் இழக்க நேருமோ என்றஞ்சிய சிறுவன் தன்னோடு என்னை நிரந்தரமாக பிணைத்துக்கொள்ள  கண்டுபிடித்ததொரு வழிமுறையாக இதனைப் பார்க்கிறேன். தன்னுயிரைத் தியாகம் செய்து, என்னைக் காப்பாற்ற முடியுமென அவன் நம்பியிருக்கிறான் எனில், தான் அதிகம் நேசிக்கப்படுவதில்லையென்றும், அதனால் அவன் இழப்பு பெரிய வலிகளுக்குக் காரணமாகாதெனவும் நினைத்திருக்கவேண்டும்.  

கண்ணீர் நின்றது: அங்கிருந்த முக்கிய மனிதர்கள் என்னை நெருங்கி வந்தனர், ஏதோ கண்ணீர் வடிப்பது கூடாதது  என்பதுபோல, என் முகத்தில் பதித்த தங்கள் பார்வையை அகற்றவில்லை. முன்மாதிரியாகவிருந்த விவசாயப் பண்ணைகளையும், நீர்ப்பாசன கால்வாய்களையையும் திரும்பவும் பார்வையிடத் தொடங்கினோம்; ஆனால் அதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டோம் என்பது இங்கு முக்கியமல்ல. எனக்கு நேர்ந்த இப்பெரும் துன்பம் குறித்து எண்ணற்ற தகாத வதந்திகள் மளமளவென்று உலகமெங்கும் பரவின; என்னுடன் பயணித்த தோணிகளில்கூட  வெட்கக்கேடான கொடிய கட்டுகதைகள் வலம் வந்தன; ஏதாவது சொல்லிக்கொண்டு போகட்டுமென நானும் பெரிதுபடுத்தவில்லை, உரத்து சொல்லப்படுவதெல்லாம் உண்மையல்லவென்று எனக்கும் தெரியும்.  விஷமத்தனமான பொய்கள் எப்போதும்போல அவற்றுக்கே உரியவகையில் துல்லியமாக இருந்தன; நானே அவனை பலிகொடுத்ததாகவும், அதையும் நானே செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டேன். ஹெர்மோஜேனெஸ் வெளியில் எதிரொலித்த வதந்திகளை என்னுடைய விசுவாசி என்கிற வகையிற் என் கவனத்திற்குக் கொண்டுவந்தார், மகாராணியிடமிருந்து சில அரசாங்க  தகவல்களைக் கொண்டுவரும் பொறுப்பையும் அவர் ஏற்றிருந்தார்; துக்க சம்பவத்தின்போது எங்கனம் மனிதர்கள் பொதுவாக இருப்பார்களோ, அவ்வகையில் மகாராணியும் நாகரீகமாக  நடந்துகொண்டாளென சொல்லமுடியும்.  ஆனால் அவளுடைய இரக்கம் தவறானப் புரிதலின் அடிப்படையில் உருவானது, துன்பத்திலிருந்து நான் மீளவேண்டுமென என் விஷயத்தில் பரிவு காட்டப்பட்டது என்பதை விளங்கிக்கொண்டேன். நான் கிட்டத்தட்ட அமைதியாகிவிட்டேன் என்று நினைத்தேன்; என் நிலமைக் குறித்து நான் நாணவும் செய்தேன். வேதனை என்பது விசித்திரமான, மீளமுடியாத வழித்தடமென்பதை அறியாத நிலையில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன்.

மனக்கவலையைக் குறைப்பதற்குத் தங்களால் ஆனைதைப் பலரும் முயன்றனர். தீப்ஸ் நகருக்கு வந்து சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு,  பேரரசியும் அவரது பரிவாரங்களும் இரண்டு முறை மிகப்பெரிய மெம்னோன் (Memnon) சிலையுள்ள இடத்திற்குச் சென்றார்களென கேள்விப்பட்டேன். அங்கு அதிகாலை நேரத்தில் கல்லொன்று எழுப்பும் விசித்திரமான ஓசை, புகழ்பெற்ற ஒன்று, அதனைக் கேட்க விரும்பி அனைத்து பயணிகளும் சென்றுவந்தனர்; அரசிக்கும், அவரைச் சேர்ந்தவர்களுக்கும் அதைக் கேட்கமுடியுமென்கிற நம்பிக்கை இருந்திருக்கவேண்டும். அந்த அதிசயம் நடந்ததா என்றால், இல்லை; ஆனால் அச்சம்பவம் என் முன்னிலையில் நடக்ககூடுமென்கிற  மூடநம்பிக்கையுடன் கூடிய   கற்பனை அவர்களுக்கு இருந்தது. மறுநாள், பெண்களுடன் செல்வதற்கு நானும் சம்மதித்தேன்; இலையுதிர்காலத்தில் முடிவற்ற  இரவின் நீளத்தைக் குறைக்க கையாளும் வழிமுறைகள் அனைத்துமே நல்லவை. அன்றைய தினம் காலை, பதினோரு மணிக்கு  யூஃபோரியன்(Euphorion) என்னுடைய ஜாகைக்கு வந்து விளக்கைத் தூண்டி மாற்று ஆடையை  அணிய உதவினார். வெளியில் வந்து பாலத்தின் மீது நடந்தேன்; வானம் இன்னமும் கருத்திருக்கக் கண்டோம்.  மனிதர்களுக்கு நேரும் இன்பமோ துன்பமோ இரண்டிற்குமிடையில் பேதமில்லை என்பதற்கிணங்க, ஹோமர்(Homer) கவிதைகளில் வரும் வார்ப்பிரும்பையொத்து. வானம் இருந்தது. இவையாவும் நடந்து முடிந்து இருபதுநாட்களுக்கு மேல் ஆகியிருந்தன. தோணியில் எனதிடத்தில் அமர்ந்தேன். குறுகியப் பயணம் என்கிறபோதும், பெண்களின் அலரல்களும், அச்சாங்களும் இல்லாமலில்லை.

நாங்கள் இறங்கிய இடத்திற்கும் அந்த பிரம்மாண்டமான சிலைக்கும் தூரம் அதிகமில்லை. கிழக்கில் இளஞ்சிவப்பில் சோர்ந்த நிலையில் நிலத்துண்டொன்று நீண்டொடுங்கிக் கிடந்தது. எங்கள் வாழ்க்கையில் மற்றொரு நாளின் துவக்கம். மர்மமான ஒலியை  மூன்றுமுறை  கேட்க முடிந்தது; அச் சத்தம் வில்லொன்றின் முறுக்கேற்றப்பட்ட நாண் அறுபடுவதை ஒத்திருந்தது. சோர்வென்பதை அறியாத ஜூலியா பால்பில்லா மறுகணம் வரிசையாக கவிதைகளைப் படைத்தார். பெண்கள் ஆலயங்களைக் காணவேண்டுமென்று சென்றனர்; ஒருகணம் நானும் அவர்களுடன் அங்கிருந்த சுவர்களில்  தீட்டப்பட்டிருந்த சலிப்பூட்டும் எகிப்திய குறியீடுகளைக் காணச்சென்றேன். மன்னர்களின் ஒரேமாதிரியான பிரம்மாண்டமான உருவங்கள் அருகருகே வைக்கப்பட்டிருக்க, அவர்கள் தங்கள் தட்டையான பாதங்களுடன் கூடிய நீண்ட கால்களை ஊன்றி, சவம்போலகிடந்த கற்களில் நின்றிருந்தனர்;  அவயங்களை விடுவிக்கும் உயிர்வாழ்க்கையின் அறிகுறிகளான வலியோ, மகிழ்ச்சியோ, அசைவோ; அல்லது சிந்தனையில் ஆழ்ந்து இவ்வுலகை சீரமைக்கும் முனைப்போ இல்லாதிருந்த அச்சிலைகளைக் கண்டு அலுப்புற்றது நிஜம். என்னை வழிநடத்திய சமயகுருக்கள், மறைந்துபோன  ஜீவன்கள் குறித்து தெரிவித்த செய்திகள் அனைத்தும், என் காதில் விழுந்தவற்றைப் போலவே தவறானவைகளாக இருந்தன; விளைவாக ஒரு பெயர் குறித்து விவாதம் எழுந்தது. ஒவ்வொரு மன்னரும் ஒரு இராச்சியத்தை மரபுரிமையாகப் பெற்றதாகவும், இராச்சியத்திலிருந்த மக்களை ஆட்சி செய்ததாகவும், அதன்பின்னர் தங்கள் தங்கள் வாரிசுகளிடம் அதனை ஒப்படைத்ததாகவும் கூறிய தகவல்கள் தெளிவின்றி இருந்தன, அதில்  உருப்படியான விடயங்கள் எதுவும் இல்லை. தெளிவற்ற இந்த அரசகுல மரபுகளின் காலம் நம்முடைய உரோம், ஏதன்ஸ் நகர மரபுகளோடு ஒப்பிட இயலாத அளவிற்குக் காலத்தால் முந்தியவை, அக்கீலியஸ்(Achilles) திராய் நகர சுவர்களுக்கடியில் உயிரிழந்தாரில்லையா அதற்கும் முன்பு,  ஜூலியஸ் சீசருக்கென்று மேனன்(Menon) கணக்கிட்ட ஐயாயிரம் ஆண்டு வானியல் சுழற்சிக் காலத்திற்கும் முந்தியது.

சோர்வை உணர்ந்ததால், சமய குருக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தேன்; இனி மரக்கலத்திற்குத்  திரும்பவேண்டும், அதற்கு முன்பாக பிரம்மாண்டமாக நிறுத்தப்பட்டிருந்த கற்சிலை நிழலில் சிறிது ஓய்வெடுத்தேன். சிலையில் கால்களில் முழங்கால்வரை பெயர்கள், தேதிகள், ஒரு வேண்டுதல், ஒரு பிரார்த்னையென்று கிரேக்கமொழியில் பார்வையாளர்கள் கிறுக்கியிருக்கக் கண்டேன். அவர்களில் ஒருவர் சர்வியஸ் சுவாவிஸ், மற்றவர் யூமேனியஸ்  இருவரும் நான் நிற்கும் இதே இடத்தில் ஆறு நூற்றாண்டுகளுக்கு  முன்பாக நின்றிருக்க வேண்டும், பேனியன் என்ற நபர் ஆறுமாதத்திற்கு முன்பு தீபை (Thebes) நகrருக்கு வந்துள்ளார்….. ஆம் ஆறு மாதத்திற்கு முன்பு… அதைத் தொடர்ந்து மனம் இள்ம்பிராயத்து நினைவில் ஆழ்ந்தது. ஸ்பெய்ன் தேச பண்ணைத் தோட்டமொன்றில் என்னுடைய பெயரை செஸ்ட்நட் மரவுரியில் எழுதியிருக்கிறேன். தற்போது சக்கரவர்த்தி, நான் கட்டிய நினைவுச் சின்னங்களில் எனது சிறப்பு பெயர்களையும், பட்டங்களையும் பொறிக்க மறுத்திருக்கிறேன், ஆனாலன்று குத்துவாளை எடுத்து, அங்கிருந்த  கடினமான கல்லில் சில கிரேக்க எழுத்துக்களை கீறினேன், இது எனது பெயரின் சுருக்கமான மற்றும் நன்கறியப்பட்ட வடிவம்: AΔPIANO. திரும்பவும் காலத்தை எதிர்கொள்ள வேண்டி பொறித்ததொரு பெயர், ஒருவகையில் எந்தவொரு மனிதராலும் கணக்கிட முடியாத எண்ணற்ற கூறுகளை கொண்ட வாழ்க்கையின்   கூட்டுத்தொகை, அப்பெயர். அடுத்துவரும் நூற்றாண்டுகளில் தன்னை முற்றாகத் தொலைக்கவிருந்த மனிதனொருவன் விட்டுச் செல்லும் குறி. அத்திர் (Athyr) மாதத்தின் இருபத்தேழாம் நாளில் இருக்கிறோம் என்பது திடிரென்று எனக்கு ஞாபகம் வந்தது,  அதாவது நமது டிசம்பர் மாதம் தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு. ஆண்ட்டினஸ் பிறந்தநாள் அது, அதாவது அவன் உயிருடன் இருந்திருப்பின், இருபது வயது.

தொடரும்…

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் -28 அதிரியன் நினைவுகள் -30

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.