கஞ்சா

இரண்டு நாட்களுக்கு முன்பு சர்வதேச செய்திகளில் சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவரொருவர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தாக கைதுசெய்யபட்டது பேசுபொருளாக இருந்து. போதையூட்டும் தாவரங்கள் குறித்த ஆய்வில் இருப்பதால் நான் அதுகுறித்து மேலும் தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்தேன் சிங்கப்பூரில் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்கு மிகக் கடும் தண்டனைகள் வழங்கப்படும்.

இந்த மாணவனுக்கு குறைந்தபட்சமாக ஐந்து பிரம்படிகளும், 5 வருட சிறை தண்டனையும்,  அதிகபட்சமாக 20 பிரம்படிகளும் 20 வருட சிறை தண்டனையும் அளிக்கப்படலாம். 1

இதைக்குறித்து ஜெர்மனியில் இருக்கும் மகனிடம் பேசிக்கொண்டிருக்கையில்  ’’சிங்கப்பூரில் அப்படி கடுமையான சட்டம் இருக்கு ஆனா இங்கே ஐரோப்பாவில் வரும் ஆண்டிலிருந்து மருத்துவ உபயோகங்களுக்காக வயதுவந்த நபர் ஒருவர் 3 கஞ்சா செடிகளை வீட்டிலேயே வளர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்றான்.

ஐரோப்பாவின் பல நாடுகள் கஞ்சா தொடர்பான சட்டங்களை தளர்த்தியிருப்பதை அறிந்திருந்தேன் எனினும் வீட்டிலேயே வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது வியப்பளித்தது. சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் சில கல்லூரி மாணவர்கள் விடுதியில் கஞ்சாசெடி வளர்த்தி பிடிபட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

கஞ்சா பயன்பாடு உலகெங்கிலும்  பல நூறாண்டுகளாக  இருக்கிறது, மருத்துவ உபயோகங்களுக்கு கஞ்சா சாகுபடி இந்தியாவிலேயே துவங்கபட்டிருக்கிறது எனினும் கஞ்சா என்னும் தாவரம் குறித்தும் அதன் பல பாகங்களிலிருந்து கிடைக்கும் பலவகை போதைப் பொருட்கள் குறித்தும் பலருக்கும் முழுமையாக தெரிவதில்லை. கஞ்சா என்பது தூளாக்கப்பட்ட கஞ்சாசெடியின் இலைகள் என்னும் பொதுவான அறிதலே இங்கு பெரும்பாலோருக்கு இருக்கிறது

வரலாறு

கஞ்சா உபயோகம் மத்திய ஆசியா அல்லது மேற்கு சீனாவில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது சீனாவில் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் கிமு 2800ல்  சீன மருத்துவ முறையின் தந்தை என அழைக்கப்படுபவரான தெய்வீக விவசாயி என்னும் பொருள் கொண்ட பெயர்கொண்டிருந்த பேரரசர் ஷென் நுங் எழுதிய  சீன மருத்துவநூலில் விவரிக்கப்பட்டுள்ளது  

சீன தொல்லியலாளர்  ஹோங்கென் சமீபத்தில் நடத்திய அகழ்வாய்வில் 2800 வருடங்கள் பழமையான ஒரு கல்லறையில் இருந்த சடலமொன்றின் மார்பின் குறுக்காக 13 முழுமையான கஞ்சாசெடிகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தார்.இதுவரை நிகழ்ந்த ஆய்வுகளில் இதில் தான் கஞ்சாசெடிகள் முழுமையாக கிடைத்தது. 

சீனர்கள்  தான் முதலில் கஞ்சா சாகுபடியை துவங்கினார்கள் எனினும்  கிமு 600ல் தாவோயிசம் உருவானபோது போதைப்பொருட்களின் பயன்பாடு அடியோடு நின்றுபோனது. அந்த விலகல் இன்றுவரையிலுமே தொடர்கிறது.

 பாரிஸின் மருந்தாளுநரான லூயிஹெபெர்ட் 1606ல் கஞ்சாவை அகாடியாவில்  (இன்றைய Nova Scotia) முதன்முதலில் பயிரிட்டார் 

இந்திய தொன்மங்கள் சிவனை கஞ்சாவின் கடவுள் என்கின்றன.பண்டைய இந்தியாவில் கஞ்சா சிவமூலி என்று அழைக்கபட்டிருகிறது கஞ்சா இந்தியாவில் விழாக்களில் பயன்படுத்தபட்டிருக்கிறது, விருந்தோம்பலின் அடையாளமாக அளிக்கப்பட்டுமிருக்கிறது. சாகுபடியும் செய்யபட்டிருக்கிறது

கிமு 800-ல் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவ அறுவை சிகிச்சை முனிவரான சுஸ்ருதர்  கஞ்சாவை  அறுவைசிக்கிசைகளின் போது வலிநிவாரணியாக அளித்திருக்கிறார். சித்தரான கோரக்கர் மனநல சிகிச்சைகளின் கஞ்சாவை முதன் முறையாக மருந்தாக பயன்படுத்தினர். 18ம் நூற்றாண்டில் சீக்கிய குரு கோவிந்த் சிங் போர்வீரர்களுக்கு பாங் அளித்திருக்கிறார்  

 பண்டைய எகிப்தில் கஞ்சா பெருமளவில் பயன்பாட்டில் இருந்தது. பல எகிப்திய பிரமிடுகளில் கஞ்சாபொருட்கள்,   கஞ்சா மலர்களின் மகரந்தங்கள், கஞ்சாஇலைகள்  கிடைத்தன. எகிப்திய கல்லறையொன்றில் கிமு 750ல் புதைக்கப்பட்ட ஒருஆணின் சடலத்தினருகில் ஒரு பொதியில் கஞ்சா வைக்கப்பட்டிருந்தது

12ம் நூற்றாண்டின்  அய்யுபிட் (Ayyubid) வம்ச ஆட்சியில் கஞ்சாவிலிருந்து உருவாக்கப்பட் ஹஷீஷ் எகிப்தில் அறிமுகமானது.  அதன் பயன்பாடு அதிகரித்தபோது அரசு கஞ்சாபயன்பாட்டிற்கும் சாகுபடிக்கும் தடை விதித்தது ஆனால் ஹஷீஷை உபயோகப்படுத்த துவங்கி இருந்த சூஃபி துறவிகள்  1253 லிருந்து எகிப்திய அரசின் கட்டுப்பாடு அனைத்தையும் மீறி மிக வெளிப்படையாகவே கெய்ரோவில் கஞ்சாவை சாகுபடி செய்தனர்.  கஞ்சாவின் தேவையும் பயன்பாடும் எகிப்தில் தொடர்ந்து இருந்தது. 18 ம் நூற்றாண்டில் ஃப்ரென்ச் ராணுவ அதிகாரி ஒருவர் தனது நாளேட்டில் மிதமிஞ்சிய ஹஷீஷ் பயன்பாட்டினால் எகிப்திய ஆண்கள் மதிமயங்கி கிடக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்,

1877 ல் ஒட்டோமோன் அரசு ஹஷீஷ் பயன்பாட்டையும் கஞ்சா செடி இறக்குமதியையும் தடை செய்தது. அதே வருடம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எகிப்து வந்தபோது பிரிட்டிஷ் அதிகாரிகள் எகிப்திலேயே கஞ்சா சாகுபடி செய்து ஏற்றுமதியும் செய்யத்துவங்கினர். இது 20 ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது

1925ல் ஒரு அரசாங்க அறிக்கை சர்க்கரையுடன் சேர்த்து வெண்ணெயில் வேக வைக்கப்பட்ட ஹஷீஷ் manzul என்னும் இனிப்பாக விற்கப்பட்டதை குறிப்பிடுகிறது.   

ஐரோப்பாவிற்கு கொலம்பஸின் இரண்டாம் உலகப்பயணத்துக்கு பிறகுதான் புகையிலையுடன் சேர்த்து கஞ்சா புகைத்தல்  அறிமுகமானது

ரோமானிய ஆட்சி காலத்தில் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் இருந்ததை பிளைனி, டயாஸ்கொரிடஸ், கேலன் ஆகியோர் பதிவு செய்திருக்கின்றனர். 

16ம் நூற்றாண்டில் அடிமைகள் மூலம் பிரேசிலுக்கு   கஞ்சா அறிமுகமானது.  19ம் நூற்றாண்டு வரை உலகநாடுகள் பலவற்றில் கஞ்சா சாகுபடியும் கட்டுப்பாடுகளும் இணைந்தே இருந்தன. போர்த்துகீசிய அரசும்  கஞ்சா பயன்பாட்டை கட்டுக்குள் வைக்க கடுமையாக போராடியது. போர்த்துகீசிய பேரரசியும் கஞ்சா பயன்படுத்திக்கொண்டிருந்ததால் கட்டுப்பாடுகளை மிகக்கடுமையாக்க முடியாமலானது.  

 19ம்நூற்றாண்டில் ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவர்கள்  கஞ்சாவிதைகளை பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தினர்.  அல்டாய் மலைப்பகுதிகளில் 1947ல்நடந்த அகழ்வாய்வுகளில் 1மீட்டர் உயரமுள்ள மரக்கொள்கலன்களில் கஞ்சாவிதைகள்,கொத்தமல்லி விதைகள் கற்களுடன் கலந்து அடைக்கப்பட்டிருந்தது.

1890களில் பிரிடிஷ் இந்திய அதிகாரிகள் கஞ்சா பயன்பாடு இந்தியமக்களை பைத்தியக்காரர்களாக்கிவிடும் என்று அஞ்சினர். இந்தியாவின் கஞ்சா சாகுபடி, போதைப்பொருளாக அதன் உபயோகம், கஞ்சா வர்த்தகம் ஆகியவற்றை குறித்து ஆராயவென்று The Indian Hemp Drugs Commission உருவாக்கப்பட்டது. 

அதன் ஆய்வு முடிவுகள் 6 தொகுதிகளாக சமர்ப்பிக்கப்பட்டது. அந்தஅறிக்கை பல நூறாண்டுகளாக இந்தியாவில் இந்துமதத்துடன் இணைந்து புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உபயோகம் மக்களை மனம்பிறழச்செய்யுமொன்று எனினும் அளவான உபயோகம் ஆபத்தில்லை என்றும் பாங் திரவமாக அருந்தப்படுகையில் உடலுக்கு கேடு உண்டாக்கும் என்றும் தெரிவித்தது.  

கஞ்சாவை பெருமளவு பயன்படுத்திய பண்டைய  ஆப்பிரிக்க இனக்குழுக்கள் கஞ்சாவை வழிபடவும் செய்தனர். 1960களில் அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் உருவானபோது அவர்களின்  அடையாளமாக  கஞ்சா புகைத்தல் இருந்து.

ஆய்வுகள்

19ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் சுமார் நூற்றுக்கணக்கான  அறிவியல் ஆய்வுகள் கஞ்சாப்பயிரிலும் கஞ்சா பொருட்களிலும் செய்யப்பட்டன. உலகின் பல நாடுகளிலும்  நூற்றுக்கணக்கில்  அறிவியல் ஆய்வறிக்கைகள் கஞ்சாவை குறித்து வெளியாகின

20ம் நூற்றாண்டில் கஞ்சா பெருமளவில் மருத்துவ சிகிச்சைகளில் பயன்பட்டது. 1964,ல்  மெக்குலம் (Raphael Mechoulam)  கஞ்சாவின் முக்கிய வேதிப்பொருளான THC யை   (tetrahydrocannabinol) பிரித்தெடுத்து அதன் வடிவத்தையும் வெளியிட்டார்

அதன்பிறகு மனித உடலில் இருக்கும் என்டோகன்னாபினாய்டுகள் குறித்த புதிய ஆய்வுகள் நடந்து பல முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன

1965களில் கஞ்சா வேதிப்பொருட்கள் குறித்த பல முக்கிய ஆய்வுகள் நடந்தன.கஞ்சா செடியின் பயன்பாடு மற்றும் சாகுபடி குறித்த  தாவரவியல் ஆய்வுக்கட்டுரைகள் 1970களில் ஏராளமாக வெளியாகின.

1990களில்  மெக்குலம் அவரது ஆய்வுக்குழுவினருடன் இணைந்து கஞ்சாவின் வேதிப்பொருட்கள் மூளையில் உண்டாக்கும் விளைவுகளை குறித்தும் இயற்கையாகவே உடலில் இருக்கும் ஆனந்தமைடுகளை கண்டுபிடித்தும் ஆய்வுமுடிவுகளை வெளியிட்டபோது கஞ்சா குறித்த ஆய்வுகள் மேலும் அதிகரித்தன

பெயர்/மொழியியல் தொடர்புகள்

உலகின் பலமொழிகளில் கஞ்சாவிற்கான பெயர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகவும் ஒரே வேரிலிருந்து வந்தவையாகவும் உள்ளன.

பண்டைய மத்திய ஆசியாவின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இனக் குழுக்களான. சிதியர்கள் (Scythians)  கஞ்சாவை பண்டய கிரேக்கத்துக்கு அறிமுகப்படுத்தினார்கள். சிதியர்களின் கஞ்சாவுக்கான சொல்  ’Kanab’ இச்சொல் அஸிரிய மொழியின்  நார்ச்செடிகளை குறிக்கும் Qunub என்பதிலிருந்து வந்தது. இச்சொல்லை கிரேக்கர்கள்   Kannabis என்றனர். அதன் லத்தீன வடிவமான  Cannabis, இன்று வரை உலகில்  கஞ்சாவின் புழங்கு பெயராக இருக்கிறது. உலகமொழிகளின் கஞ்சாவின் பெயர்களனைத்துமே இந்த வேர்களை கொண்டிருப்பவைகள்தான்

பண்டைய நூல்களில் கஞ்சா

பிளைனி தனது இயற்கை வரலாறு என்னும் மிகப்பழைய கிரேக்க ரோம காலத்து அகராதியான நூல் தொகுப்பில் பல இடங்களில் கஞ்சாவை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இயற்கையாக காடுகளில் வளரும் கஞ்சாசெடிகளை சாகுபடி செய்யப்படும் கஞ்சாச்செடிகளிலிருந்து பிளைனி வேறுபடுத்தியும் காட்டியிருக்கிறார்.

பண்டைய எகிப்தின் ஏப்ரஸ் பாபிரஸில்  சணப்பைவிதை என்று கஞ்சா விதைகள் குறிப்பிடப்பட்டு அவற்றின் பயன்கள் விவரிக்கப் பட்டிருக்கின்றன

கிரேக்க மருத்துவர் டயாஸ்கொரிடஸ் (c. AD 40-90) அவரது புகழ் பெற்ற மருத்துவ நூலான “ De Materia Medica ,” வில் வேகவைத்த கஞ்சாசெடியின் வேர்ப்பசை வீக்கங்களை குணமாக்கும் என்கிறார்

யூதர்களின் புனித நூலான தால்முத் (Talmud) கஞ்சாவை குறிப்பிட்டிருக்கிறது.

5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாவோயிச துறவி ஒருவர் Ming-I Pieh Lu என்னும் நூலில் மந்திரவாதிகள் கஞ்சா செடியை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு சென்று அடுத்து வரப்போகும் நிகழ்வுகளை  அறிந்துகொண்டனர் என்கிறார்.

 பொ.யு730 ல் எழுதப்பட்ட உணவுக்கான நூலான Shiliao bencao, நூறு நாட்களுக்கு தினமும் கஞ்சாவை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு பிசாசுகள் கண்ணுக்கு தெரியும் என்கிறது 

பொ.யு  1100 ல் எழுதப்பட்ட Zhenglei bencao என்னும் சீன  மருத்துவ நூல் கஞ்சா அளவுக்கு அதிகமானால் இல்பொருள் மற்றும் மாயக்காட்சிகளை தோற்றுவிக்கும், ஆவிகளோடு தொடர்பு உண்டாக்கும் என குறிப்பிடுகிறது 

பொயு 1200ல் எழுதப்பட்ட அதர்வவேத சம்ஹிதை 5 புனிததாவரங்களில் ஒன்றாக கஞ்சாசெடியை குறிப்பிடுகிறது

பண்டைய இந்திய நூல்களில் விஜய, திரிலோக, காம்ய, ஹர்ஷினி ரஞ்சிகா, பாங்கா, தந்த்ரா, கிரிபாவதினி, மதினி மதிகா, மது என்னும் பல பெயர்களில் மருத்துவ உபயோகத்திற்கான கஞ்சா விவரிக்கப்பட்டிருக்கிறது

பல அரேபிய பெர்ஷிய மருத்துவ நூல்களில் கஞ்சா குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரேபிய மருந்துச்சரக்குகளை குறித்த நூலான  Makhsanul aldawaiya, வில் கடவுளின் பரிசான கஞ்சாவின் பயன்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சுஷ்ருத சம்ஹிதை, சாரங்கதார சம்ஹிதை ஆகிய நூல்கள் பல்வேறு சிகிச்சைகளுக்கு கஞ்சாவை பரிந்துரைத்திருக்கிறது. ஆயுர்வேதம் கஞ்சா மருந்துகளின் இயல்புகளை விரிவாக குறிப்பிட்டிருக்கிறது

தன்வந்திரி நிகண்டு, சர்கந்தர சம்ஹிதை மற்றும் காயதேவ நிகண்டுகளில் உச்ச வலிகளுக்கு நிவாரணமாக கஞ்சா அளிக்கபட்டது குறிப்பிடப்பட்டிருக்கிறது

கிமு 1800களுக்கு பிறகான புகழ்பெற்ற பல ஓவியங்களில் கஞ்சாப்பயிர் சித்தரிக்கப்பட்டிருந்தது .

2013ல் வெளியான ராபர்ட் கிளர்க் மற்றும் மார்க் மெர்லின் ஆகியோரின் ’’கஞ்சா, பரிணாம வளர்ச்சியும் தொல்குடித்தாவரவியலும்’’ நூல் உலக கஞ்சா பரவல், பயன்பாடு மற்றும் தடைச்சட்டங்கள் குறித்து விரிவாக பேசுகிறது

தோற்றம்/பரவல்

தற்போது பியருக்கு கசப்புச் சுவை அளிக்கும் மலர்களை கொடுக்கும்  ஹாப்ஸ் எனப்படும் தனது காட்டுமூதாதையிடமிருந்து பிரிந்து புதிய நிலப்பகுதிகளில் 28 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தனித்த தாவரமாக  கஞ்சா தோன்றி செழித்து வளர்ந்தது. 

துவக்க காலங்களில் கஞ்சாசெடி அவற்றின் நார்களுக்காகவே சாகுபடி செய்யப்பட்டது. கஞ்சா செடிகளின் போதைப் பயன்பாடு பின்னரே கண்டறியப்பட்டிருக்கிறது. 

கஞ்சாசெடியின் கனிகள் மிக நுண்ணியவை, உருண்டையானவை சதைப்பற்றோ, சுவையோ, இறகோ இல்லாதவை எனவே விலங்குகளும், பறவைகளும்,  காற்றும், நீரும் கஞ்சா செடியின் பரவலுக்கு காரணமாகவில்லை. கஞ்சாவிதைகள் மனிதர்களாலேயே பல இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு உலகெங்கும் பரவின.இப்படி மனிதர்களுடன் பயணித்து உலகெங்கும் பரவும்   “camp follower plants” என்றழைக்கப்படுபவற்றில் கஞ்சா  குறிப்பிடத்தக்க ஒன்று

மத்திய ஆசியாவின்  அல்தாய் மலைத்தொடர்களில் 12000 ஆண்டுகளுக்கு முன்பு  வளரந்த கஞ்சா   ஆசியாவின் நாடோடி இனங்களால் கிமு 700ல் கிழக்கு ஐரோப்பாவுக்கும் பின்னர் அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கும் அறிமுகமானது. ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்ற கஞ்சா செடி நார், மருந்து, காகிதம், ஆடைகள், எண்ணெய் என பலவகையான பயன்பாடுகளுடன் மிகப்பிரமலமாகி அதிக அளவில் சாகுபடியும் செய்யப்பட்டது. 

இரண்டாம் உலகப்பயணத்துக்கு பிறகு புகையிலையுடன் கொலம்பஸ் திரும்பியபோது நார் பயன்பாட்டை மற்றும் அறிந்திருந்த ஐரோப்பாவில்  போதைக்காக கஞ்சா புகைத்தல் அறிமுகமானது. பின்னர் கஞ்சா செடிகளின்  பலவகையான உபயோகங்களுக்காக அவை சாகுபடி செய்யப்பட்டு புதிய கலப்பின வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

விஞ்ஞானியும் மருத்துவருமான William O’Shaughnessy, கஞ்சாவை இங்கிலாந்துக்கு 1842ல் அறிமுகப்படுத்தினார்    

திபெத்திலிருந்து கஞ்சா செடி நாடோடிப் பழங்குடியினரால் இந்தியாவிற்குச் கிமு 2000த்தில்  அறிமுகமானது கஞ்சா பரவலில் இந்தியாவின் பங்கு பெரும்பான்மையானது. கன்னாபிஸ் இண்டிகா  சிற்றினம் நூற்றாண்டுகளாக வடஇந்திய மலைப்பகுதிகளில் இயற்கையாக செழித்து வளர்ந்திருந்தது. 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில்   இந்தியவணிகர்கள் கஞ்சா செடியை ஆப்பிரிக்காவுக்கும் தென்கிழக்காசியாவிற்கும் கொண்டு சென்றனர்  

 கஞ்சா மதம்

ஜூன் 2000த்தில்  ஹவாயில் ரோஜர்கிறிஸ்டியால் துவங்கப்பட்ட ’THC Ministry’ இறைவழிபாட்டு சடங்குகளில் கஞ்சாவை  பயன்படுத்தும் தனித்த மதமாக உருவானது. ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த மதத்தை பின்பற்றுவோர் இருக்கின்றனர். இம்மதத்தில் பல உட்பிரிவுகளும் உள்ளன. பொதுவாக இறைவழிபாட்டில் கஞ்சாவை பயன்படுத்தும் மதப்பிரிவுகள் Cantheism என்னும் பொதுப்பெயரில் அழைக்கப்படுகின்றன

கஞ்சா காட்ஃபாதர்-Raphael Mechoulam,

1960-70 களில் கஞ்சா பயன்பாடு உலகெங்கிலுமே அதிகரித்திருந்தது. எனினும் அறிவியலாளர்களுக்கு அச்சமயத்தில் கஞ்சா செடியைக் குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை

 அப்போது  இஸ்ரேலில் இளம் வேதியியலாளராக பணிபுரிந்த  ரஃபேல் மெக்குலம் ஹிப்பிக்களால் அப்போது அதிகம் உபயோகிக்கப்பட்ட ஒரு செடி குறித்த அறிதல்  மிக குறைவாக இருப்பதையும் அச்செடியின் வேதிப்பொருட்கள் கண்டறியப்படாமல் இருந்ததையும் கவனித்தார்

அச்சமயத்தில் சட்டவிரோதமாக்கப்பட்டிருந்த கஞ்சாவை ஆய்வகத்துக்கு கொண்டு வருவதில் அவருக்கு ஆரம்பத்தில் பல சிக்கல்கள் இருந்தன. ஒரு காவல் நிலையத்தில்  லெபனானிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களிலிருந்து 5 கிலோ ஹஷீஷ் அவருக்கு  பல முயற்சிகளுக்கு பிறகு கிடைத்தது. அதன் பிறகு அவர் அதில் பல முக்கிய ஆய்வுகளை செய்தார்

1964ல் மெக்குலம் THC  எனப்படும் Delta-9-tetrahydrocannabinol யை  கஞ்சாவிலிருந்து பிரித்தெடுத்து  அதன் முழுவேதி வடிவத்தை வெளியிட்டார்.   மற்றொரு முக்கிய வேதிப்பொருளான cannabidiol என்கிற CBD யையும் அடுத்து  கண்டறிந்தார்.

அந்த வேதியியல் வெற்றி  கஞ்சா குறித்த ஆய்வுகளுக்கான கதவுகளை அகலத்திறந்தது. தொடர்ந்த ஆண்டுகளில் அவரும் பல ஆய்வாளர்களுமாக கஞ்சாசெடியிலிருந்து 140 சக்தி வாய்ந்த கன்னாபினாய்டுகள் என்னும் பொதுப்பெயரில் அழைக்கப்பட்ட பல வேதிப்பொருட்களை கண்டுபிடித்தார்கள். கஞ்சா செடி குறித்த தகவல்களை அவரது குழுவினர் மிகப்பழைய நூல்களிலிருந்தும் தேடித்தேடி எடுத்தனர்,

கஞ்சா செடியின் வேதிப்பொருட்களை ஆய்வகத்தில் பிரித்தெடுக்கும் முயற்சியில் இருக்கையில் 1988,ல் கன்னபினாய்டுகளின் வடிவத்திற்கு இணையான வடிவம் கொண்டிருக்கும் வேதிப்பொருட்களான என்டோகன்னாபினோய்டுகள் மனிதர்களின் உடலில் இருப்பதும் அக்குழுவால் கண்டுபிடிக்கபட்டது.அவற்றில் ஒன்றிற்கு ’ஆனந்தமளிக்கும்’ என்னும் பொருளில்  ஆனந்தமாய்டு (anandamide ) என பெயர் வைக்கப்பட்டது. 

என்டோகன்னாபினாய்டுகளின் இயல்பை குறித்து ஆய்வுகள் இன்னும் நடந்தவண்னம் இருக்கின்றன. மெக்குலம் இன்னும் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்கள் என்டோகன்னாபினாய்டுகளில் இருக்கிறது என்றார்

1980ல் மெக்குலம் ஜெருசேலத்தில் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வலிப்பு நோய்க்கான நோய்க்கான சிகிச்சையில் கஞ்சாச்செடியின் வெற்றிகரமான பங்களிப்பு குறித்த தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

 தனது சுயசரிதையில் மெக்குலம் தனது இந்த முக்கியமான மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆய்வு முடிவுகளுக்கு பிறகும் 30 வருடங்களுக்கு  அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். 2018ல்தான் அமெரிக்க மருந்துக்கழகம் வலிப்பு மற்றும் சில குறிப்பிட்ட நாள்பட்ட நோய்களின் சிகிச்சைக்கு மருந்தாக  Epidiolex  என்னும் கஞ்சா மருந்தை அனுமதித்தது .முன்பே இதை செய்திருந்தால் பல்லாயிரம் மக்கள் பயன்பெற்றிருப்பார்கள் என்றார் மெக்குலம்

 சர்வதேச கஞ்சா மருந்துகளுக்கான அமைப்பான  International Association for Cannabinoid Medicines (IACM) மற்றும் சர்வதேச கஞ்சா ஆராய்ச்சி அமைப்பான International Cannabinoid Research Society ஆகியவற்றின் நிறுவனரும் இயக்குனருமாக இருந்த  கஞ்சாவின் காட் ஃபாதர் என்றழைக்கப்படும் மெக்குலம் சில மாதங்களுக்கு முன் மறைந்தார். (Raphael Mechoulam (november 1930 – 9 March 2023)  

420

கஞ்சாவுடன் 420 என்னும் எண் தொடர்புடையது. 1971 அமெரிக்க பள்ளி சிறுவர்கள் ஐந்துபேர் மாலை 4.20க்கு கஞ்சா செடிகளைத் தேடி ரகசியப் பயணம் மேற்கொண்டனர். அது பலருக்கும் பிற்பாடு தெரிந்து 4.20 என்பது கஞ்சாவுக்கான எண்ணாக மாறியது. பின்னர் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கஞ்சா புகைக்கும் கொண்டாட்டங்கள் 4/20 என்பதை குறிக்கும் ஏப்ரல் 20 ம் தேதியில் நிகழ்ந்தன. அமெரிக்க காவல்துறையும்  கஞ்சாக்குற்றங்களை 420 என்றே குறிப்பிடுகின்றது. கஞ்சாவுக்கான அமெரிக்க மசோதாக்களும் 420 என்றே பெயர்கொண்டிருக்கின்றன

இந்தியாவில் கஞ்சா பிசின் சேர்க்கப்பட்ட ஜர்தா பீடா, 420 பீடா  என குறிப்பிடபப்டுகிறது.

கஞ்சா தாவரவியல்/ சாகுபடி

கன்னாபினேசி (canabenaceae) குடும்பத்தை சேர்ந்த புதர் செடியாக வளரும் இயல்புடைய கஞ்சா செடியின் மூன்றுசிற்றினங்களான கன்னாபிஸ் சட்டைவா, கன்னாபிஸ் இண்டிகா மற்றும் கன்னாபிஸ் ருட்ரியாலிஸ் ஆகியவையே கூட்டாக கஞ்சாச்செடி என்றழைக்கப்படுகின்றன.

ஒருவருடப்பயிரான  கஞ்சா செடிகள் ஆண் பெண்  செடிகள் தனித்தனியாகவும், அரிதாக சில வகைகளில் இருபால் மலர்கள் ஒரே செடியிலும் இருக்கும். இருபால் மலர்கள் கொண்டிருக்கும் கஞ்சாச்செடிகளின் கலப்பினங்கள்  தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கஞ்சாவின் நார்ப்பயிர்ச்செடி  சணப்பை எனப்படுகிறது. சணப்பை நாருக்கென கலப்பினங்களும், வேதிப்பொருட்களுக்கென தனித்த கஞ்சாப்பயிர்களும் தனித்தனியே சாகுபடி செய்யப்படுகிறது. 

சணப்பைச்செடி மென்மையான தண்டுகளும் கஞ்சாச்செடி கடினமான தண்டுகளையும் கொண்டிருக்கும். நார்ப்பயிர் உயரம் அதிகமாகவும் கஞ்சா செடி  அதைக்காட்டிலும் உயரம் குறைவாகவும்  இருக்கும்.  சாதாரணமாக 1.5 மீ உயரம் வரை வளரும் கஞ்சாசெடிகளின் கலப்பினங்களில் 5 லிருந்து 12 மீ உயரம் வரை வளரும் வகைகளும் உண்டு

கஞ்சா செடிகள் கிளைத்த தண்டுகளும் விசிறி போன்ற அகன்ற பல சிற்றிலைகள் கொண்ட உள்ளங்கை வடிவ கூட்டிலைகளையும் கொண்டிருக்கும் கூட்டிலைகளின் சிற்றிலை எண்ணிக்கை 3 லிருந்து 13 வரை இருக்கும்

இலைவிளிம்புகள் பற்களை கொண்டிருக்கும். இலைக்காம்பு 2-7 செ மீ நீளமிருக்கும் இலைகள் தண்டின் அடிப்பக்கத்தில் எதிரெதிராகவும் மேலே செல்லச்செல்ல மாற்றடுக்கிலும் அமைந்திருக்கும். கஞ்சா செடியின் தண்டின் கணுவிடைவெளிகள்  உள்ளே காலியாக இருக்கும். சில வகைகளில் ஆந்தோசயனின் நிறமிகள் மிகுந்து தண்டுகள் ஊதா நிறம் கொண்டிருக்கும்

பருவம் அடையும் வரை கஞ்சா செடிகளை ஆண் பெண் என இனம் காண முடியாது. மலர் மஞ்சரிகள் தோன்றியபின்னரே பால்வேறுபாட்டை காணமுடியும் 

ஏராளமான மிகச்சிறிய பசு மஞ்சள் நிற மணிவடிவமலர்கள் நெருக்கமான மலர்மஞ்சரிகளில் உருவாகும்.பைட்டோ கன்னாபினாய்டுகள் எனப்படும் வேதிபொருட்கள் மிக அதிக அளவில் மலர் மஞ்சரியில் காணப்படும்

மலர்கள் காற்றினால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு  நுண்ணிய விதைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் கனிகள் உருவாகும். பழுப்புநிற வெடியாக்கனிகளான இவை அகீன்கள் எனப்படும். இவ்விதைகளிலிருந்துதான் கஞ்சா எண்ணெய் கிடைக்கிறது 

எந்த வெப்பநிலையிலும் எந்த வகை மண் கொண்ட நிலத்திலும் கஞ்சா  செழித்து வளரும் இயல்புடையது.கடல் மட்டதுக்கு 10000 அடிக்கு மேலான உயரத்தில் இவை  வளரும்

கஞ்சா செடிகளில் பல வகைகள் உண்டு ஐரோப்பிய கஞ்சாச்செடி வகையொன்று நல்ல நார் அளிக்கிறது.இவ்வகை நார்ச் செடிகளில் போதையூட்டும் பொருட்கள் அறவே இல்லை

இந்திய மலைப்பகுதி கஞ்சா செடிகளில் நார்ச்செடிகள் அதிகம் இருக்கும். ஆனால் காஷ்மீர் லடாக் பகுதிகளில் வளர்பவை நாரில்லாமல் போதைப்பண்புகள் அதிகம் கொண்டிருக்கும்’

சமவெளிகளில் பயிராகும் இளம் செடிகளில் பிசின் இருக்காது ஆனால்  பருவம் வந்த செடிகளின் இளம் பெண் மலர்களிலும் தண்டுகளிலும் அதிக போதை பொருட்கள் இருக்கும். கனிகள் முற்றும் போதுதான்  செடிகளின் பாகங்களில்  போதையூட்டும் வேதிப்பொருட்கள் மிக அதிகமாகும் 

இயற்கையாக காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் கஞ்சாச்செடி வளரும்  இந்திய மாநிலங்கள்:

அஸ்ஸாம், பீஹார், உத்ரபிரதேசம் தமிழ்நாட்டில் சென்னை ஜம்மு காஷ்மீர் பாட்டியாலா கிழக்கு பஞ்சாப் ராஜஸ்தான் திருவாங்கூர் கொச்சி இமச்சலபிரதேசம் மணிப்பூர் மற்றும் திரிபுரா

இயற்கையாக காடுகளில் கஞ்சா வளரும் இந்திய பிரதேசங்கள்

 ஒரிசா மத்தியபிரதேசம் கட்ச் மும்பை ஹைதராபாத், மைசூரு செளராஷ்டிரம் அஜ்மீர், கூர்க் தில்லி போபால் அந்தமான் நிகோபர் தீவுகள்

இயற்கையாகவும், சாகுபடி செய்யப்பட்டும் கஞ்சா வளர்வதால் இந்தியாவில் மொத்தமாக கஞ்சா வளரும் நிலப்பரப்பை துல்லியமாக கணிக்க முடிவதில்லை.  

இந்திய சணப்பை கமிஷன் (Indian Hemp-Drug Commission 1893-94)  இந்தியாவில் போதைக்கான கஞ்சா சாகுபடி 6000 ஏக்கருக்கு அதிகமாகவில்லை என்கிறது. ஆனால் 1935-36ல் இந்த நில அளவு வெறும் 1600 ஏக்கராக குறைந்தது இப்போது சுமார் 800 ஏக்கரில் மட்டும் கஞ்சா சாகுபடியாகிறது

நிழலான, நல்ல வடிகால் உள்ள வண்டல் மண் கஞ்சா சாகுபடிக்கு ஏற்றது. பொதுவாக கஞ்சா விதைகள் ஆகஸ்ட்டில் விதைக்கப்பட்டு  6-12 இன்ச் உயரம் வளர்ந்த நாற்றுக்கள் பிடுங்கி செப்டம்பரில் வேறு இடங்களில்  நடப்படும் நன்கு வளர்ந்திருக்கும் செடிகள் நவம்பரில் தரிக்கப்படும்

கஞ்சா செடிகள் மேல்நோக்கி வளர எதுவாக கீழ்ப்பக்கம் இருக்கும் கிளைகள் வெட்டப்படும். களைகள் அகற்றப்பட்டு மலர்கள் உருவாகையில்  பாதர்கள் (Paddar) என்றழைக்கப்படும் தேர்ந்த கஞ்சா செடி வல்லுநர்கள் வயல்களுக்குள் நுழைந்து  ஆண் செடிகளை வெட்டியகற்றி  மடி  (madi) எனப்படும் எனப்படும் பெண் செடிகளை மட்டும் விட்டு வைப்பார்கள்

இந்த செயல் மிக முக்கியமானது தவறுதலாக விடப்படும் ஒன்றிரண்டு ஆண் செடிகள் கூட மொத்த வயலையும்  பாழாக்கிவிடும். கவனிக்காமல் விடப்பட்ட ஆண் மலர்களால்  பெண் மலரகள் கருவுற்று விதைகள் உருவாகிவிட்டால் கஞ்சாச்செடிகளில் வேதிப்பொருட்கள் மிக குறைவாகி விற்பனையில் லாபம் கிடைக்காமல் போகும். தேர்ந்தடுக்கபட்ட எண்ணெய்க்கான செடிகள் மட்டுமே கருவுற அனுமதிக்கப்படும்.

ஜனவரியில் பெண் செடிகள் சரியாக முதிர்ந்திருக்குமெனினும் மேலும் ஒரு மாதம் கழித்தே கஞ்சா என்றழைக்கப்படும் அளவிற்கான போதைப்பொருட்கள் அதில் உருவாகி இருக்கும்.

இலைகள் மஞ்சளாக மாறுகையில்  வேதிப்பொருட்கள் முற்றிலும் இல்லாமலாகும். எனவே இலைகளில் வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கையில் அவை அறுவடை செய்யப்படுகின்றன

பெரும்பாலும் கஞ்சா இலை அறுவடை மே -ஜூன் மாதங்களில் சமவெளிகளிலும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மலைப்பகுதிகளிலும் நடக்கிறது,  

ஜனவரிக்கு முன்னதாகவே அறுவடை செய்யப்படுபவை தட்டையான கஞ்சா என்றும் நன்கு முதிர்ந்த பின்னர் அறுவடை செய்யப்படுபவை உருண்டை கஞ்சா என்றும் விவசாயிகளால் குறிப்பிடப்படுகிறது.

ஆண் மற்றும் பெண் செடிகளின் உலர்ந்த இலைகளும் மலர்த்தண்டுகளும் ஒரு கட்டையால் அடிக்கப்பட்டு இலைகளும் தண்டும் தண்டுகளும் தனியே பிரிக்கப்படும்

வகைப்பாடு 

இந்தியாவில் காணப்படும் கஞ்சா செடிகளில் பல வேறுபாடுகள் இருக்கும்.

தொல்குடிதாவவியல் தோற்றுவித்தவான ரிச்சர்ட் இவான் (Richard Evans Schultes) 1970களில் கஞ்சாச்செடியின் வகைப்பாட்டியலை உருவாக்கினார். 

அப்போது அவர் ஆப்கானிய இனமான C. afghanica வை தவறுதலாக இந்திய கஞ்சா செடியான  C. indica என்று குறிப்பிட்டார். அந்தப்பிழை சுமார் 40 வருடங்கள் அப்படியே திருத்தமின்றி தொடர்ந்தது

பின்னர்   Mc Partland என்பவர் ’கஞ்சாசெடிகளின் தாயகங்களை குறித்த விரிவான ஆய்வின் போதுதான் அந்த தவறை சரி செய்தார். 

மூன்று முக்கிய கஞ்சாப்பயிர்களின் சரியான தாவரவியல் தகவல்கள் 

1.    Cannabis indica (பழைய பெயர் Sativa)

·  தாயகம் -இந்தியா

·1.5 மீ க்கும் உயரமானது, குறைந்த கிளைகளையும் அடர்த்தி குறைவான மஞ்சரிகளையும் கொண்டது

·   9லிருந்து 14 வாரங்களுக்கு நீண்ட மலரும் காலம்

· CBD மற்றும் பிற கன்னாபினாய்டுகளைக்காட்டிலும் மிக அதிக  THC கொண்டது. போதையளிக்கும் .

2. Cannabis afghanica  

·      தாயகம்-ஆஃப்கானிஸ்தான், டர்கிஸ்தான், பாகிஸ்தான்

· 1.5 மீ க்கும் குறைவான உயரம் கொண்டது அடர்த்தியான கிளைகளையும் அகலமான இலைகளும் மிக அடர்ந்த மஞ்சரிகளும் கொண்டது

·   7 லிருந்து 9 வாரங்களுக்கு நீண்ட மலரும் காலம். அதிக பிசின் அளிப்பது எளிதில் பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாகும்

· THC க்கு இணையான அளவில் CBD கொண்டது. போதையளிக்கும் 

3. Cannabis ruderalis

·       தாயகம் ஐரோப்பா, மத்திய ஆசியா

·       உயரமும்  மலரும் கால அளவும் வளரும் நிலப்பரப்பிற்கேற்ப  வெகுவாக  மாறுபடும்

·       மிக குறைவான பிசின் அளிக்கும்

·       THC யைக் காட்டிலும் அதிக CBD  கொண்டது

·     நறுமணம் அளிக்கும் caryophyllene, myrcene, ஆகியவற்றைக் கொண்டிருக்கும். போதைப்பண்புகள் இல்லை.

சணப்பை பயிரை கஞ்சாவிலிருந்து பிரித்துக் காண்பது எப்படி என்பதற்கு போதிய அளவீடுகள் இல்லாமல் இருந்தபோது ஒரே செடியில் நாரும் போதைப்பொருட்களும் கிடைப்பதாக பரவலாக தவறான புரிதல் இருந்தது. 

1979ல் எர்ன்ஸ்ட் ஸ்மால் என்பவர் தனது ’’கஞ்சாப்பயிரின் சிற்றினக்குழப்பங்களும் சொற்பொருள் விளக்கமும்’’ என்னும் நூலில்   (The Species Problem in Cannabis:      Science &      Semantics.) 0.3 %க்கும் குறைவான  THC  கொண்டிருப்பவை சணப்பை என்றும் அதற்கு அதிகமான அளவில் THC  இருப்பவை கஞ்சா என்றும் வகைப்படுத்தினார்.  அதுவே இப்போதும் பின்பற்றப்படுகிறது

இந்த அளவீடு 2018ன் அமெரிக்க விவசாய சட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கஞ்சா சாகுபடி/ வர்த்தகம்/ கள்ளச்சந்தை வணிகம் 

அண்டார்டிகாவைத் தவிர உலகநாடுகள் அனைத்திலும் கஞ்சா வளர்ப்பு புழக்கத்தில் இருக்கிறது

கஞ்சாவின் சந்தையும் நவீனமயமாகி விட்டிருக்கிறது குறிப்பாக Darknet போன்ற வர்த்தக வசதிகள் கஞ்சாவின் பயன்பாட்டையும் வர்த்தகத்தையும் மிக எளிதாக்கி விட்டிருக்கிறது

அமெரிக்க சட்ட விரோத கஞ்சா சாகுபடியாளர்கள் புறநகர் பகுதிகளை கஞ்சா சாகுபடிக்கு உபயோகிக்கின்றனர். 1997லிருந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான கஞ்சா செடிகள் அமெரிக்க புறநகர் மற்றும் வனப்பகுதிகளில்  கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன 

அமெரிக்க கருப்புச்சந்தைக்கான கஞ்சாப்பொருட்கள் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து கடத்திவரப்படுகிறது. அமெரிக்காவிற்கு பெருமளவில் கஞ்சா பொருட்களை கொண்டு வரும் பிறநாடுகள் கொலம்பியா, ஜமைக்கா, கஜகஸ்தான், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா.

அமெரிக்க மாநிலங்களுக்கிடையே கஞ்சாவை செங்கல் போன்ற  கட்டிகளாக்கி கடத்துவதே பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகிறது  

மத்திய கிழக்கு பிரதேசம், வட ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஹஷீஷ் மிக அதிக அளவில் தயாராகிறது

உலகின் மிக அதிகம் சாகுபடி செய்யப்படும் மிக அதிகம் கள்ளசந்தை வணிகத்தில் புழங்கும் மிகஅதிகம் பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக கஞ்சா இருக்கிறது

உலகின் மொத்த மக்கள் தொகையில்  4 சதவீதமக்கள் கடந்தவருடம் கஞ்சாவை உபயோகித்திருக்கின்றனர்

கஞ்சாவின் சமூக கலாச்சார பொருளாதார அரசியல் மற்றும் சட்ட ரீதியான தொடர்புகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமையான வரலாற்றினை கொண்டிருக்கிறது 

கஞ்சாதொடர்பான சட்டங்களும் அரசியலும் உலகநாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாக இல்லை

சர்வதேச போதைப்பொருட்களின் பயன்பாட்டைகுறித்த சமீபத்திய அறிக்கை அமெரிக்காவில் மது மற்றும் புகையிலை பயன்பாட்டிற்கு அடுத்தபடியாக கஞ்சா பயன்படுத்தப்படுகிறது என்கிறது

அமெரிக்காவில் 27 %   மக்கள் பொழுதுபோக்கிற்கெனவும், மகிழ்சி மற்றும் போதைக்கெனவும் கஞ்சா பயன்படுத்துகிறார்கள். ,ஆசியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கஞ்சா பயன்படுத்துகின்றனர்’

ஆஸ்திரேலியாவிலும் 11.6% மக்கள் கஞ்சாவை பயன் படுத்துகின்றனர் 

ஆப்பிரிக்காவில் மிக அதிகம் உபயயோகத்திலிருக்கும் சட்டவிரோத போதைப்பொருள் கஞ்சா. உலகின் கஞ்சா பயனாளிகளில் 33.3% ஆப்பிரிக்கர்கள். 

கஞ்சா வகைகள்

கஞ்சா செடியிலிருந்து பாங், கஞ்சா, சரஸ், ஹஷீஷ் போன்ற நான்கு வகையான  போதைப்பொருட்கள் கிடைக்கின்றன.

கஞ்சா-Ganja

பெண் கஞ்சா செடிகளின்  பிசின்  நிறைந்த உலர்ந்த மலர்த்தலை என்னும் மஞ்சரிகள் கஞ்சா எனப்படுகின்றன. கஞ்சாவிற்கென வளரும் பெண் செடிகளில் மலர்கள் உருவாகையில் பெரிய இலைகள், அதிக கிளைகள் நீககப்படும். மீதமிருக்கும் சிறு இலைகளும் மலர்மஞ்சரியும் பிசினில் மூடப்பட்டிருக்கும். துருவேறிய பச்சைநிறம் கொண்டிருக்கும் இந்த இலைகளில் நல்ல நறுமணம் எழுகையில் அறுவடைசெய்யப்படுகிறது.

பாங்-Bhang

உலர்த்தப்பட்ட இலைகள், இலைப்பொடி, இலைசாறு இலைப்பசை உருண்டைகள் பாங் எனப்படுகின்றது. இது கரும்பச்சை நிறத்தில் காணப்படும்.   

சரஸ்-Charas

பச்சையாக பிரத்யேக நறுமணத்துடன் இருக்கும் சரஸ் இலை மற்றும் மலர்களின் பிசினை கொண்டு செய்யப்படுகிறது

சரஸ் தயாரிக்கையில் பெண்மலர்த்தலைகள் அறுவடைசெய்யப்பட்டு உலர்ந்த பின்னர் கைகளுக்குள் வைத்து நசுக்கப்படும். பின்னர் அந்த பொடி சல்லடைகளில் சலிக்கப்பட்டு மணல் போலாக்கப்படும்.இந்த பச்சைநிற பொடி 4 அல்லது 5 மாதங்களுக்கு தோல்பைகளில் சேமித்து வைக்கப்படும். பின்னர் வெயிலில் பிசின் உருகும்வரை காயவைக்கப்பட்டு மரக்கட்டைகளால் பலமுறை அழுத்தப்பட்டு சரஸ் தயாரிக்கப்படும் . 

ஹஷீஷ்

மெல்லிய வளரிகள் கொண்டிருக்கும்  பிசின் நிறைந்த பெண்மலரரும்புகள் நன்கு அழுத்தப்பட்டு பிசைந்து உருவாக்குவது ஹஷீஷ். இது பழுப்பு கருப்பு மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

கஞ்சாப்பொருட்களின் பெயர்கள் பிரதேசங்களுக்கேற்ப மாறுபடுகின்றன. கஞ்சாவின் உலர்இலைகள் கனிகள் மற்றும் மலரரரும்புகள்  மாரிவானா என்றும் , கஞ்சாச்செடியின் பிசின் சரஸ்/ ஹஷீஷ் என்றும் முதிர்ந்த இலைகளின் பசை  பாங் எனவும் உலகின் பல நாடுகளில் அழைக்கப்படுகின்றது

கஞ்சா வேதிப்பொருட்கள்

டெட்ராகன்னாபினால், (THC) டெட்ராகன்னாபினாலி அமிலம் A (THCA-A), கன்னாபிடியோல் (CBD), கன்னாபினோல் (CBN), கன்னபிடியோலிக் அமிலம்  (CBDA) ஆகியவற்றுடன் சுமார் 200க்கும் அதிகமான கன்னாபினாய்டுகள் கஞ்சா இலைகளில் காணப்படுகின்றன

கன்னபிஜெரோல் (CBG), கன்னாபிகுரோமின் (CBC), கன்னாபிடோல் l (CBD),’9- டெட்ராஹைட்ரோகன்னாபினோல் 9-(THC), ‘8-THC, கன்னாபிசைக்லோல்  (CBL), கன்னாபியெல்சோயின் (CBE),கன்னாபினோல்l (CBN) கன்னாபினோடியோல் (CBND) , கன்னாபிட்ரியோல் (CBT),இவற்றுடன் ஆல்கஹால், ஆல்டிஹைட், கீட்டோன், அமிலங்கள்,எஸ்டெர்கள்,ஸ்டீரால்கள் மற்றும் வைட்டமின்கள்,  கனிமங்கள் ஆகியவையும்  இருக்கின்றன

30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட கஞ்சா இப்போது மிக வீரியமுள்ளதாகி விட்டிருக்கிறது. 1970 களில் 1 சதவீத்திற்கும் குறைவாக இருந்த  THC யின்அளவு 2002ல் 6% மாகவும் 2008ல் 8,5 % மாகவும் அதிகரித்திருக்கிறது

புதிய கஞ்சா செடி வகைகள் கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம் அதன் THC.அளவுகளும் மேம்பட்டுக்கொண்டே இருக்கின்றன

மிகஅதிக THC.அளவினால் பிரபலமான கஞ்சாசெடிவகை Sin Semillas. இது விதைகளற்ற கஞ்சா செடி வகை .இதைப்போலவே வீரியமுள்ள  பிறவகைகள் , Purple Haze, Early Girl, Big Bud, மற்றும் Hindu Kush.

 இயற்கை கன்னாபினாய்டுகளுக்கு  நிகரான ஆபத்துக்களை கொண்டிருக்கும் செயற்கை கன்னாபினாய்டுகளும் போதைமருந்தாக பரவலான புழக்கக்தில் இருக்கின்றன

கஞ்சா பயன்படுத்தும் முறைகள்

பாங்கைவிடவும் வீரியமுள்ளது கஞ்சா. சரஸ் குறிப்பிடத்தக்க வீரியம் கொண்டது ஹஷுஷுக்கு இணையானது. இந்தியாவில் கஞ்சா பாதாம் பிஸ்தா கசகசா மிளகு இஞ்சி மற்றும் சர்க்கரை சேர்த்து  பாலில் வேக வைக்கபட்டும் தயிருடன் கலந்தும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

எட்டிக்காய் ஊமத்தை சித்தரத்தை எருக்கிலை மூங்கில் குருத்து  ஓபியம் ஆகியவற்றுடன் கலந்தும் கஞ்சா பயன்படுத்தப்படுகிது 

கஞ்சாஇலைகள், பிசின் மற்றும் தண்டு ஆகியவை புகைக்கப் படுகிறது.சரஸ் மற்றும் கஞ்சா புகைக்கப்பட்டும் பாங் மென்று தின்னும் உருண்டையாகவோ அல்லது அருந்தும் பானமாகவோ எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மாரிவானா ஜாயிண்ட் எனப்படும் சிகரெட்டுகளாகவும், பைப்பில் அடைக்கப்பட்டு புகைக்கப்பட்டும் அல்லது உணவில் கலந்தும், தேநீராகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது

கஞ்சா புகைக்க உபயோக்கிக்கப்படும் மென்மையான கல் அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட குழலுக்கு சில்லம் (chillum ) என்று பெயர்  

பாலில் கஞ்சா இலைச்சாறு அல்லது பாங் கலந்த பானம் தாண்டை, தாண்டு என்று அழைக்கப்படுகிறது.  

பாங் பகோடாக்களில் ஊறுகாய்களில் லஸ்ஸியில் சமோஸாக்களில் கச்சோரிகளில் கலந்தும் உண்ணப்படுகிறது.’பல மத்திய இந்திய இனிப்புக்கடைகளில் பாங் கலந்த லட்டுக்களும் விற்கப்படுகிறது

ஹஷீஷ் உண்ணப்படுகிறது, ஹஷீஷ் கட்டிகள் பைப்பில் இட்டும் புகைக்கப்படுகின்றன. ஹஷீஷில் தான் கஞ்சாவின் மிக சக்தி வாய்ந்த அதிக போதைதரும் வேதிப்பொருளான THC மிகஅதிக அளவில் இருக்கின்றது.  ஹஷீஷ் ஹஷ் என்றும் அழைக்கபடுகிறது

ஹஷீஷ் எண்ணெய் என்பது சுத்திகரிக்கப்பட்ட கஞ்சா எண்ணெய்.இதன் நிறம் கரும்பச்சையிலிருந்து அரக்குநிறம் வரை மாறுபடும் இதன் THC அளவு சுமார் 15 % . இந்தஎண்ணெய் புகையிலையிடன் அல்லது கஞ்சா இலையுடன் கலந்து புகைபிடிக்கப்படும்

பஞ்சாப் மற்றும்  உத்திரபிரதேசத்தில் தண்டை, சித்தி, சவி மற்றும் சுஹே  என்றும் மும்பையிலும் மத்திய இந்தியாவில் பாங் அல்லது கோட்டா ,வங்கத்தில் சித்தி,ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் தூதி, தென்னிந்தியாவில் ராமரசம் என்றும் பல பெயர்களில் பாங் பானம் அழைக்கப்படுகிறது

கஞ்சா இலைகள் மென்று தின்னப்பட்டும் போதைப்பொருளாகவும் உபயோகிக்கபடுகிறது

Majun. என்பது நெய்யில் வதக்கி நீரில் கொதிக்க வைக்கப்பட்ட  கஞ்சா பானம்   

Majiyam என்பது நெருப்பில் வாட்டி கருக்கிய கஞ்சாவை வெல்லம் மசாலாபொருட்கள் கலந்து தயாரிப்பது  

Purnadhi – கஞ்சாவுடன் சுக்கு சர்க்கரை சித்தரத்தை மிளகு ரோஜா அரும்புகள் ஆகியவற்றை சேர்த்து ஜெல்லி போல தயாரிப்பது.

ஜெய்சால்மர் மற்றும் புஷ்கர் ஆகிய பிரதேசங்களில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாங் கடைகள் உண்டு. காசியில் வருடம் முழவதுமே பாங் விற்கப்படுகிறது. 

கஞ்சா சட்டங்கள்/ஆய்வுகள்/ அனுமதிகள்

கஞ்சாவுகெதிராகவும் கஞ்சா பயன்பாட்டை ஆதரித்தும் உலகநாடுகள் பலவற்றில் சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் உருவாகியிருக்கின்றன. சமீப காலங்களில்  கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மருத்துவத்தின் பொருட்டு கஞ்சா சாகுபடியும் சட்டபூர்வமாக தொடங்கப்பட்டிருக்கிறது  

ஜெர்மனியின் சமீபத்திய ஆய்வொன்று  உலகிலேயே மிக அதிக கஞ்சா பயன்படுத்தும் நகரங்களாக புதுதில்லியையும் மும்பையையும்  குறிப்பிடுகிறது. புதுதில்லியில் 38.2டன்னும் மும்பையில் 32.4 டன் கஞ்சாவும் ஒரு ஆண்டில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது

 கஞ்சா புகைக்கும் உலகின் 120 நகரங்களில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் நியூயார்க் மற்றும் கராச்சிக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் புதுதில்லியும், 6 வது இடத்தில் மும்பையும் இருக்கின்றது

அதுபோலவே நேபாளத்திலும் 1976 வரை கடைகளில் கிடைத்து வந்த சரஸ் பின்னர் சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டது   

1971ல் அமெரிக்காவின்  CSA என்கிற  Controlled Substance Act அமலுக்கு வந்து பட்டியல் 1ல் கஞ்சா இடம் பெற்றபின்னர்தான் போதைபொருட்களுக்கெதிரான சட்டபூர்வமான போர்துவங்கியது

அந்தசட்டம் கஞ்சாவை மருத்துவ உபயோகங்களுக்கும் அனுமதி மறுத்தது. அச்சமயத்தில் அமெரிக்க அரசு கஞ்சா உபயோகம், கஞ்சா தொடர்பான குற்றங்களை மட்டுமல்லாது கஞ்சா குறித்த ஆய்வுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது 

இதை தொடர்ந்து நேபாள் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் கஞ்சா உபயோகத்துக்கெதிரான சட்டங்கள்  உருவாக்கப்பட்டன. அதே சமயத்தில் மேற்கு ஜெர்மனி பெல்ஜியம் இத்தாலி இங்கிலாந்து பிரெஞ்ச் அரசுகள் கஞ்சாவை குறித்த சட்டங்களை மருத்துவகாரணங்களின் பொருட்டு திருத்தியும் தளர்த்தியும் அமைத்தன

1996ன்  California Proposition 215 சட்டம் மீண்டும் கஞ்சாவை மருத்துவத்துக்கு உபயோகப்படுத்த அனுமதி அளித்தது.தொடர்ந்து அமெரிக்க மாகாணங்கள் பலவும் இதை பின்பற்றின

ஆப்பிரிக்காவில் சட்டங்கள் இருந்தன என்றாலும் 1970களின் இறுதியில் அங்கு கஞ்சா மிகப்புகழ் பெற்ற கள்ளச்சந்தை பொருளாக இருந்தது. 

20ம் நூற்றாண்டு முழுவதிலும் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடு பலசிக்கல்களை, தடைகளை எதிர்கொண்டது குறிப்பாக 1937ல் மாரிவானா வரிச்சட்டம், தொடர்ந்து சில வருடங்களில் அமெரிக்க  அரசு பூர்வ மருந்தியல் நூலிலிருந்து  கஞ்சாவை நீக்கியது, 1961ல் அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பட்டியல் 4 எனப்படும் மிக அதிக கட்டுப்பாடுகள் தேவைப்படும் சிறப்பு பிரிவில் ஹெராயினையும், கஞ்சாவையும் நிகராக பட்டியலிட்டது  ஆகியவை கஞ்சாவின் மருத்துவபயன்பாடுகளை வெகுவாக பாதித்தது

1970ல் அமெரிக்கா பட்டியல் 1 பிரிவில் கஞ்சாவை வைத்தபோது கஞ்சாவின் பொற்காலம் ஒரேயடியாக முடிவுக்கு வந்தது. மூளைப்பிளவாளுமை சிக்கலான ஷிஷோப்ரீனியா கஞ்சா உபயோகிப்பதால் உண்டாகிறது என்பது போன்ற ஆதாரங்களற்ற மருத்துவ அறிக்கைகள் வெளியாகி கஞ்சாவை தள்ளிவிட்ட குழியில் மண்ணள்ளிப்போட்டு மூடின.

கடந்த செப்டம்பர்  2020ல்தான் அமெரிக்கா கஞ்சா பயன்பாட்டிற்கான சட்டங்களையும் கெடுபிடிகளையும் தளர்த்தியது 

தற்போது உலகெங்கிலும் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வும் சட்டதிருத்தங்களும் மேற்கொள்ளபட்டுவருகின்றது

ஜெர்மனியின் நல அமைச்சகம் கஞ்சா பயன்பாட்டை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெருமளவில் நடத்துகிறது, கஞ்சாவின் மருத்துவப்பயன்பாட்டிற்கான அனுமதி அளிக்கபட்டு இருந்தாலும் கஞ்சாவை பிற இடங்களுக்கு  அனுப்ப ஜெர்மனியில் தடை நீடிக்கிறது.

ஜெர்மனியில் தனிநபர்  20-30  கிராம் கஞ்சா வைத்திருப்பதும்  வீடுகளில் ஒரு நபருக்கு 3 செடிகள் என்னும் அளவில் கஞ்சா வளர்ப்பிற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அளவிலான கஞ்சாவை விற்கவும் மருந்துக்கடைகளுக்கும் 2024லிருந்துஅனுமதி அளிக்கப்படவிருக்கிறது.

இத்தாலியில்  ஒருநபர் 4 கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 

நெதர்லாந்து காபிக்கடைகளில் குறைந்த அளவு கஞ்சா விற்பனை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மார்டாதீவு நாட்டிலும், 15 கிராம் வரை தனிநபர்கள் கஞ்சா வைத்திருக்கவும், பிரான்ஸில்  மகிழ்ச்சியளிப்பதன் பொருட்டான கஞ்சா உபயோகமும்  சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது

ஐரோப்பாவின் பிறபகுதிகளில் குறிப்பாக சுவிட்ஸர்லாந்தில்  (1% க்கும்) குறைவான THC இருக்கும் கஞ்சா பொருட்களுக்கு அனுமதி உண்டு

2001லிருந்து போர்ரசுக்கலும் மருத்துவ கஞ்சாவிற்கு அனுமதி அளித்திருக்கிறது.  

கிரீஸ் 1936ல் தடை செய்யப்பட்டிருந்த   கஞ்சா வளர்ப்பை  2017 முதல் மருத்துவ உபயோங்களுக்காக சட்டஅனுமதியுடன் அனுமத்தது. 

கனடா தனது 90 ஆண்டுகால தடையை விலக்கி கஞ்சாவை சிகிச்சையளிக்கும் பொருட்டு மருத்துவர்கள் பரிந்துரைக்கலாமென்னும் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் குறிப்பிட்ட அளவுகளில்  கஞ்சா வைத்திருக்கவும் வளர்க்கவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது 

ஸ்பெயின்அரசு கஞ்சாவை  பொதுமக்கள் தனியிடங்களில் அவரவர் தேவைக்கு ஏற்ப வளர்த்துக் கொள்ள அனுமதி அளித்திருகிறது 

மருத்துவபயன்பாட்டில் கஞ்சா

விக்டோரியா மகாராணி மாதவிலக்கு கால வலி நிவாரணியாக கஞ்சாவை எடுத்துக்கொண்டார். ஆஸ்திரிய பேரரசி எலிஸபெத் இருமல் நிவாரணியாகவும் பசிஉணர்வை தூண்டவும் கஞ்சாவை எடுத்து கொண்டார்.

கஞ்சாவின் பயன்பாடு ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகள், பிற  தூக்க மருந்துகள் கண்டறியப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல குறைந்தன. தற்போது மீண்டும் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடு பல நாடுகளில் சட்டபூர்வமாக்க  அனுமதிக்கப்பட்டிருக்கிறது

ஆச்சர்யமூட்டும் விதமாக மேற்கில் சமீபத்தில் துவங்கி இருக்கும் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் குறித்த அறிதல் பண்டைய இந்தியாவில் பலநூறாண்டுகள் முன்பே புழக்கத்தில் இருந்திருக்கிறது 

சுவாசக்கோளறுகளுக்கு கஞ்சா புகைத்தலும், பல்வலிக்குமிடத்தில் சரஸை வைப்பதும், தூக்கமின்மை  மனப்பிறழ்வு போன்றவற்றிற்கு  வீட்டு மருத்துவத்திலும் பாலுணர்வு ஊக்கியாகவும்  கஞ்சா சாதாரணமாக  பண்டைய இந்தியாவில் உபயோகிக்கப்பட்டது  

கஞ்சா  கால்நடைகளுக்கான சிகிச்சைகளிலும் பயன்படுகிறது.

CBD  தனித்து வலிநிவாரணியாகவும் CBD மற்றும் THC  இணைந்து உறக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கவும் தற்போது பயன்படுகிறது  

Georgian Orthodox தேவாலயம் மருத்துவகஞ்சாவை மருத்துவ காரணங்களுக்காக உபயோகிப்பதை அனுமதித்திருக்கிறது,. 

2023ல் இந்தியாவில்  CSIR-IIIM விஞ்ஞானிகளால் ஜம்முவில் மருத்துவபயன்பாட்டிற்கான  கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.  வலிப்பு சிகிச்சையில், புற்றுநோய் சிகிச்சைகளின் உச்ச வலி மற்றும் பொதுவான வலி நிவாரணியாக கஞ்சாவை பயன்படுத்துவது.  

ஆரோக்கியகேடுகள்

கஞ்சாபுகைத்தல் அதிகமாகும்போது நினைவாற்றல் மட்டுப்படுவது மனம்அலைபாய்வது  ஆகியவை உண்டாகும்

புகையிலையுடன் சேர்த்து உபயோகிக்கப்படும் கஞ்சாவில் 50-70 % சுவாசப்புற்றுநோய் உண்டாகும் காரணிகள்  உள்ளன

மிகஅதிக மற்றும் தொடர்ந்த கஞ்சா பயன்பாடு ஆரோக்கிய கேடுகளை உறுதியாக உண்டாக்கும். கஞ்சா புகைத்தல் அடிமைப்படுத்தும் இயல்புடையது

உலகளாவிய கஞ்சா பயன்பாடு

கடந்த பத்தாண்டுகளில் தனிநபர் சர்வதேச கஞ்சா பயன்பாடு இருமடங்கு அதிகரித்திருக்கிறது 

 கோவிட் பெருந்தொற்று காலத்தில் முந்தைய வருடங்களை காட்டிலும் 63% அதிகமான கஞ்சா பயன்பாடு இருந்தது. தனிமைப்படுத்துதலின் அச்சம், மனஅழுத்தம்  நோய்குறித்தான அச்சம் போன்றவைகளால் இந்த அதிகரிப்பு நிகழ்ந்திருக்கும் எனவும் கருதப்பட்டது

இந்தியாவில் 31 மில்லியன் மக்கள் (2.8%) கஞ்சா உபயோகிக்கின்றனர் அவர்களில்  0.25% (2.5 million) கஞ்சாவிற்கு அடிமையாகி இருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு

8.7 மில்லியன் இந்தியமக்கள் கஞ்சா உபயோகிப்பதாக கூறிய 2004 ஆய்வுடன் ஒப்பிடுகையில் இந்த முடிவுகள் மிக அதிகமாக இருக்கின்றட்ன 

 கஞ்சாவின் பன்முக உலகம் தொடர்ந்து உருவாகிக்கொண்டே வருகிறது,வரும்காலத்தில் ​​கஞ்சா பயன்பாடு மற்றும் நுகர்விற்கான தீவிரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றது

கஞ்சாவின் போதைப்பண்புகள் சிகிச்சை திறன் ஆகிய இரண்டு இயல்புகளையும் மாறிவரும் காலத்துக்கேற்ப சீரான கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும் இனிவரும் காலங்களில் கஞ்சாவைப் பற்றிய பொறுப்பான  முற்போக்கான அணுகுமுறையை கற்றுக்கொள்வதுதான் மிக முக்கியம்.  

மேலதிக தகவல்களுக்கு:

One Reply to “கஞ்சா”

  1. நான் வலிப்பு நோய்க்கு 3 ஆண்டு Epidiolex மருந்தை உட்கொண்டேன்… அந்த மருந்து கஞ்சா வில் இருந்து எடுக்கப்படுகிறது என்று இப்போது தான் அறிந்தேன்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.