தத்வமஸி: புத்தக அறிமுகம்

This entry is part 13 of 72 in the series நூறு நூல்கள்

கிருஷ்ணன் சங்கரன்


மகாவாக்கியம் என்று மட்டும் கூறினால் அது “தத்வமஸி” தான். அது மகாவாக்கியங்களுக்கெல்லாம்  மகாவாக்கியம் என்கிறார் ஆசிரியர் சுகுமார் அழீக்கோடு. நூலின் பெயர் ‘தத்வமஸி‘ – சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு உபநிடத ஆய்வு நூல் (சாகித்ய அகாடமி வெளியீடு, மூலம் மலையாளம், தமிழில் ருத்ர துளசிதாஸ்). நூல் மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி உபநிடதம்.  வேத காலத்தில் உபநிடதத்தை அறிமுகம் செய்கிறார். இதில் உபநிடதம் கூறும் செய்தி என்ற அத்தியாயத்தில் உபநிடதத்தில் கூறியிருக்கும் கருத்துக்களைப் பற்றி  மிக விரிவாகப் பேசப்படுகிறது. இரண்டாம் அத்தியாயத்தில் முக்கியமான பத்து உபநிடதங்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். மூன்றாவது அத்தியாயத்தில் ‘முடிவாக’ என்று சில விஷயங்களைக் கூறுகிறார்.உபநிடதங்களை மறுகண்டுபிடிப்பு செய்ததில் ஒரு இஸ்லாமியரின் பங்கு குறித்து கட்டுரையின் இறுதியில் பேசப்படுகிறது.உபநிடதங்கள் குறித்த மேலோட்டமான இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒரு நூறு பேரையாவது இந்த நூலைப் படிக்கச் செய்வது மட்டுமே. நல்லூழ் வாய்க்கப்பெற்றால் மேலதிகமாக ஆழமான சில கட்டுரைகள் எழுமென்று நம்புவோம்.


இந்திய தத்துவ ஞானத்தின் மிக உயர்ந்த கொடுமுடியான உபநிடதத்தை காளிதாசன் உட்பட பல இந்திய அறிஞர்கள் வியந்து போற்றியிருக்கிறார்கள். ஒரு இந்திய அறிஞர் ‘இமாலயம் போன்றிருக்கும் கிரந்தங்கள்’ என்கிறார். ஜுவான் மஸ்காரோ என்ற ஸ்பானிய அறிஞரோ ‘ஆத்மாவின் இமாலயம்’ என்று மிக அழகாகச் சித்தரிக்கிறார். வேதம் செறிந்த இமாலயத்திலிருந்து பாய்ந்தோடிய ஜீவ நதிகளாகத்தான் உபநிடதங்களைக் காண்கிறார் ஜெர்மானிய அறிஞர் கௌண்ட்கைசார்லிங்(1880-1946). ஒவ்வொரு வேதமும் பல்வேறு சாகைகளைக் கொண்டிருந்தன. ‘சாகை’  என்றால் கிளை. அப்போது வேதம் ஒரு மரம் என்கிற அர்த்தம் வருகிறதல்லவா? மாக்ஸ் முல்லரின் ‘Vedic Tree’ என்கிற பிரயோகம் பிரசித்தமானது. ‘நிகமகல்பதரு’ (வேத கற்பகத் தரு) என்று பாடிய பாகவத ஆசிரியரின் பார்வையில் இந்த மரத்தின் கனிதான் பாகவதம். ஆனால் பூ எது என்று அவர் கூறவில்லை. டோய்சன் கூறுகிறார் ‘இந்தியரின் ஞான விருட்சத்தில் மலர்ந்த மனோகரமான பூ உபநிடதம்’ என்று.          

உபநிடதம் என்றாலே பக்கத்தில் சற்று கீழே அமர்ந்திருப்பவருக்கு சொல்லப்படக் கூடிய செய்தி என்பதே அதன் நேரடி அர்த்தம். ஆனால் சங்கரர் கூறுகிற அர்த்தம் வேறு.’எந்த வித்தையில் ச்ரேயஸ் (ப்ரம்ம சாஷாத்காரம் என்ற பரம லஷ்யம்) உபநிஷண்ணமாய் இருக்குமோ (நிலை கொண்டிருக்குமோ) அதுதான் உபநிஷத்’ என்கிறார் சங்கரர். குருவின் அருகில் முனைப்புடன் அமர்ந்து உபதேசம் கேட்பதையே முதல் அர்த்தமாகக் கொள்ள வேண்டும் என்கிறார் ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர். டோய்சனுக்கும் இது சம்பந்தமாக வழக்கு உண்டு.  ஆண், பெண் வேறுபாடின்றி உபநிடததத்துவங்கள் விவாதிக்கப்பட்ட சித்திரங்கள் பிருகுதாரண்யம், ஐத்ரேயம்  மற்றும் சாந்தோக்ய உபநிடதங்களில் கிடைக்கின்றன. ஜனகருடைய சபை அத்தகைய ஒரு மகாசபையாக இருந்தது. ஐத்ரேயத்தில் இத்தகைய ஒரு சபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு அறிவிப்பு விடப்படுகிறது ‘கர்ப்பிணிகள் வெளியேறவேண்டும்’. பின் அந்தக் குறிப்பிட்ட விவாதம் முடிந்த பின் அவர்கள் மறுபடியும் உள்ளே அழைக்கப்படும் சித்திரமும் காணப்படுகிறது. இது சங்கரரின் தத்துவார்த்தமான விளக்கத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.பெரும்பாலும் இரண்டு பேரிடையே நிகழும் உரையாடல் வடிவத்திலும், கேள்வி பதில் வடிவத்திலுமே உபநிடதங்கள் விளங்குவதைக் காணலாம். கிம் (என்ன?), குத: (எங்கிருந்து?), கேன (எதனால்?), க்வ (எங்கே?)  போன்ற வினாக்கள் உபநிடதங்களெங்கும் விரவிக் கிடைப்பதைக் காணலாம். ப்ரச்னம் என்றால் கேள்வி என்று பொருள். ப்ரச்சனோபநிடதம் என்றே ஒரு உபநிடதம் உண்டு.கேட்கப்படாததைக் கேட்டதும், நினைக்கப்படாததை நினைத்ததும், அறியப்படாததை அறிந்ததும் எந்த ஞானத்தின் மூலமாக? என்ற ஆருணியின் கேள்வியால் திகைத்து நிற்கிறான் பன்னிரண்டு வருடம் குருகுலத்தில் பயின்று வந்த அவர் மகன் ஸ்வேதகேது சாந்தோக்ய உபநிடதத்தில். கடோபநிஷத்தில் யமனை நோக்கி நசிகேதன் எழுப்பிய வினாக்கள் மிகவும் பிரசித்தம். 

இந்திய அறிஞர்களை மட்டுமல்லாது ஐரோப்பாவின் பல பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்களையும் ஈர்த்த ஒரு விஷயமாகத்தான் இருந்திருக்கிறது வேதமும் உபநிடதமும். எமர்சன், ரோமைன் ரோலாந்து, சாமர்செட் மாம் – இவருடைய Razer’s Edge ஒரு உபநிடத பிரயோகம், வில் டூரன்ட், பெட்ரண்ட் ரஸ்ஸல் என்று உபநிடத்தைத் தீண்டாத அல்லது உபநிடதம் தீண்டாத மேற்கத்திய அறிஞர்களோ, எழுத்தாளர்களோ இல்லை எனலாம். வேதத்தின் முதல் நிலை சாகைகளை சம்ஹிதைகள் என்றழைக்கிறார்கள். ரிக், யஜுஸ், சாமம் மூன்றும் முதல் முக்கிய சம்ஹிதைகள். ராதாகிருஷ்ணன் போன்ற பல இந்திய அறிஞர்கள் வேதத்திற்கு சம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், உபநிடதம் என்று நான்கு கண்டங்கள் (உட்பகுதிகள்) உண்டென்று வாதிக்கிறார்கள். வேதத்தின் முதலாவதான வியாக்கியானங்கள்தான் பிராம்மணங்கள். வேத இலக்கியம் செழுமை பெற்றது சாகை வேறுபாடுகளால் அல்ல, அதனுடைய அர்த்தத்தை வியாக்கியானம் செய்து வந்த பழைய பண்டிதர்களின் நிரந்தர முயற்சிகளால்தான் என்கிறார் ஆசிரியர்.  பிராம்மணங்களின் முடிவில்லாத பாகங்களே ஆரண்யகங்கள் என்று பொதுப்படையாகக் கூறலாம். காடுகளில் இருந்தபடி எழுதப்பட்டதோ அல்லது படிக்கப்பட்டதோ ஆன வேத கிரந்தங்கள் இந்த ஆரண்யகங்கள் என்ற சொல்லாராய்ச்சியும் உண்டு. வேதங்களின் சாராம்சம் உபநிடதம்.  பிராம்மணமென்றும் உபநிடதமென்றும் உள்ள இரண்டு மலைச் சிகரங்களுக்கும் இடைப்பட்ட இரண்டின் நிழல்களும் படிந்த பகுதியே ஆரண்யகம் என்கிறார் ஆசிரியர். இன்ன பிராமணத்தில் இன்ன ஆரண்யகம் அடங்கும் என்றோர் ஒழுங்குமுறையும் உண்டு. ஆரண்யகங்கள் இல்லாத வேதங்களும் உண்டு. சாமம் மற்றும் அதர்வணம் ஆரண்யகம் இல்லாத வேதங்கள்.

வேதங்களைப் போலவே எத்தனையோ நூற்றாண்டுகளாக ஓதியும் பயின்றும் நிலைத்துவிட்ட கிரந்தங்களாயிருந்தன உபநிஷத்துகள். சங்கரர் காலத்திலும் அவை எழுத்து வடிவம் கொள்ளவில்லை என்றே கருதப்படுகிறது. உபநிடதங்கள் எழுத்து வடிவம் கொண்டது கி பி 1300 ல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எல்லா உபநிடதங்களும் ஏதாவதொரு வேதத்துடனேயே தொடர்புறுத்தப் படுகின்றன.ஐத்ரேயம் – ரிக்; ஈசம், பிரகதாரண்யம், கடம், தைத்ரீயம்  – யஜுர் ;கேனம்,சாந்தோக்யம் – சாமம்;ப்ரச்னம், முண்டகம், மாண்டூக்யம் – அதர்வம் என்று.  ‘தசோபநிஷத்துகள்’ (Classic Upanishads) என்று கருதப்படுகிற பத்து உபநிடதங்கள் ஈசாவாஸ்யம்(ஈசம்) , கேனம், கடம் (காடகம்), ப்ரச்னம், முண்டகம், மாண்டூக்யம், தைத்ரியம், ஐத்ரேயம், சாந்தோக்யம், பிரஹதாரண்யம் முதலியன. இவையெல்லாம் வேதத்தோடும் அதோடு உறைந்து திரண்டு வந்த வேதப் பாரம்பரியத்தோடும் பிணைக்கப்பட்டவை. இவைகள் அனைத்திற்கும் சங்கரர் உரை எழுதியது இவற்றை மேலும் புகழடையச் செய்தது. இதற்குப் பிறகு வந்த நூற்றுக்கணக்கான உபநிடதங்களுக்கு இந்த ஆகம சுத்தி கைவரவில்லை. அவை ஒரு வகையில் புராணங்களுடனோ, மத நூல்களுடனோ அல்லது சித்தாந்தங்களுடனோ தொடர்பு கொண்டுள்ளன. அவ்வளவுதான். 

உபநிடதங்களை உருவாக்கியவர்கள் ரிஷிகள்தான், ஆனால் அவர்கள் அடிப்படையில் கவிஞர்கள் என்கிறார் மாக்ஸ்முல்லர். உபநிடதங்களின் மொழி நடை எப்படி இருந்தது? லௌகீக சம்ஸ்க்ருதத்தின் கறவுப்பாலில் வேத சம்ஸ்க்ருதத்தின்   கற்கண்டு கரைத்துப் பெற்றதுதான்  உபநிடதத்தின் மொழிநடை என்கிறார் ஆசிரியர். ஒரு உதாரணம் இதோ..’ அந்த மனிதனின் வடிவழகு மின்னி மிளிரும் பட்டுத் துணியைப் போல, வெண்மையான ஆட்டு ரோமம் போல, வெள்ளைச் செதில் போல, நெருப்புக் கொழுந்து போல, வெள்ளைத் தாமரை போல, திடீரென்று ஒளிரும் ஒற்றை மின்னல் போல ஆகிவிட்டது’. ஒரு நவீன உரைநடையைப் படிப்பது போல இல்லை? இருட்டு போர்த்திய இருட்டு, குருடனை வழிநடத்தும் குருடன் போன்ற நவீன சொல்லாட்சிகள் எளிதில் காணக்கிடைக்கிறது..உச்சரிக்கும் முறையில் உச்சரிக்கப்படும் உபநிஷத்துகளின் உரத்த கோஷத்தைக் கேட்டால் மொழி தெரியாதவர்களும் அதில் லயித்துக் கிறுகிறுத்துப் போவார்கள் என்கிறார் ஆசிரியர்.                  

உபநிடதப் படைப்பாளிகளில் நடுநாயகன் யாக்ஞவல்கியர். மன்னரும் மஹாத்மாவுமான ஜனகரின் சபையில் ஞான விஞ்ஞான நிதியாக இருந்த வித்தகர். இவரை கீத் மகாஞானி என்கிறபோது டோய்சன் உபநிடத உலகத்தின் உயர் மகான் என்கிறார். பிராமணங்களில் முதன்மையான சதபதபிராமணங்களைப் படைத்தவரும், பிரகதாரண்யஉபநிடதத்தின் கர்த்தாவும்  இவரே. மஹிதாச ஐத்ரேயர், சத்யகாம ஜாபாலன், உத்தாலக ஆருணி, ஆரூணேய ஸ்வேதகேது, ப்ரவாஹண ஜய்வலி, சாண்டில்யர், ரைக்வர், பரத்வாஜர், பாலாகி, ஜனகர், அஜாதசத்ரு, அஸ்வபதி, கார்கி,பிரதாதனர் போன்ற மனித ஆற்றலை மீறிய பிற ஆச்சரியர்களும் வேத, உபநிடத இலக்கியங்களை செழிக்கச் செய்தனர். பிராமணரான யாக்ஞவல்கியர் எவ்வளவு புகழ் பெற்றவரோ அவ்வளவோ அல்லது அதற்கு மேலோ புகழ் பெற்றவர் விதேஹி மன்னரான ஷத்ரிய ஜனகர். யாக்ஞவல்கியரைப் புகழ்ந்த அதே ஆர்வத்துடன் ஜனகரை டோய்சன் தன்னுடைய நாட்டின் அறிவாற்றலின் கேந்திரம் என்று புகழ்ந்துரைக்கிறார். பிரகதாரண்யமும் சாந்தோக்யமும் இந்த இருவரால் நிறைவு பெற்றிருக்கின்றன. இவர்களுடைய தாக்கம் பிற உபநிடதங்களிலும் காணப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் எந்த ஆடவனுக்கும் நிகராக சர்ச்சைகளில் பங்கெடுத்த பெண்மணி உண்டு – கார்கி வாசக்னவி. யாக்ஞவல்கியருக்குக் கூட அசுகமான  நிமிடங்களை உருவாக்கி, திறமையாக வாதிட முடிந்த ஒரு சிந்தனையாளர் அவர். மைத்ரேயிக்கு நிகராக அவர் ஜனகரின் சபைக்கு ஒளி கூட்டினார். பெயரும் உருவமும் மாயை என்ற நம்பிக்கையில் திடமாய் நின்ற ரிஷீந்திரர்கள் தங்களுடைய தரிசனத்தின் அமிர்தத்தன்மையைத்தான் விரும்பினார்கள். சொந்தப் பெயரின் அமரத்துவத்தையல்ல. படைப்புகளில் பெயர் பொறிக்கும் ஆசைகள் அவர்களுக்கு இல்லாதிருந்தன. 

நடுவுநிலைமையாக இருக்கவேண்டுமானால்  வேத காலம் என்பது கி மு 2000 – 2500 என்று கொள்ள வேண்டியிருக்கிறது. பாலகங்காதரத் திலகர் கி மு 4500 என்று கூறுகிறார். அதற்கு முன்பு என்று கூறும் ஆராய்ச்சியாளர்களும் பலர் உள்ளனர்.இந்தியாவில் உருவான அளவு சிந்தனையாளர்களான ஆச்சார்யர்களின் திருக்கூட்டப்பெருக்கம் வேறொரு நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்று கருதினால், அது கிரேக்கம் மட்டுமே. ஆனால் கிரேக்கத்தில் தேல்ஸ், ஹெராக்ளிட்டஸ் போன்றவர்கள் உண்டாவதற்கு எவ்வளவோ முன்னதாக இந்தியாவில் வாமதேவரும், யாக்ஞவல்கியரும் தோன்றி முடிந்திருந்தார்கள்.   ‘தனக்கு முன்னர் பிறந்த, முன்பே நடந்து வழி அமைத்துக் கொடுத்த ரிஷிகளை வேதஸூக்தங்களில் ஒரு ரிஷி வணங்குவதைக் காணும்பொழுது வேத காலத்தின் புராதனத்தைப் பற்றியதான மேற்கத்தியர்களின் பல யூகங்கள் காற்றில் பறந்து போகவேண்டியதுதான்’  என்கிறார் ஆசிரியர். 

குழந்தைப் பருவத்தைத் தாண்டி வாலிபப் பருவத்தினுள் மனித போதம் நுழையும் காலமாக இருந்த கி மு ஆறாம் நூற்றாண்டை வாழ்த்தியுரைக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். உலக வரலாற்றில் அந்த காலகட்டத்திற்குள்ள இடத்தை தன்னுடைய  வரலாற்று நூல்களில் அடிக்கடி எடுத்துக் கூறுகிறார் ஹெச் ஜி வெல்ஸ். மனித சிந்தனையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்ட இந்த கி மு எட்டாம் நூற்றாண்டு முதல்  கி மு இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தை ‘அச்சாணி யுகம்’ (Axial Period) என்று அழைக்கிறார் தத்துவ சிந்தனையாளர்களில் முக்கியமானவரான கார்ல் யாஸ்பேழ்ஸ். இந்த அச்சாணி யுகம் இந்தியாவிலும் சைனாவிலும் தொடங்கிய காலம் இதற்கெல்லாம் மிகப் புராதனமான ஒன்றாகும். அன்றைய யாகங்களில் இடப்பட்ட உயிர்பலியை உபநிடதங்கள் அன்றே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டன. (கஸ்மய் தேவாய ஹவிஷா விதேம) எந்தத் தெய்வத்தை நாங்கள் அவிசு கொண்டு வழிபடவேண்டும்? என்று. இன்றைக்கும் புகழ் பெற்றிருப்பதான கேள்வி இது என்று கூறுகிறார் ரவீந்திரநாத் தாகூர். உபநிடதங்களின் தொடர்ச்சியாக புத்தரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.  இவ்வளவு விலை மதிப்பற்ற உபநிடதம் உண்டான காலம் அது உண்டாவதற்குரிய காலம் என்பதாகவே தோன்றுகிறது. 

சாயனரின் முன்னோர்களில் யாஸ்கன், சுலபன் முக்கியமானவர்கள். யாஸ்கன் அருளிய மகா கிரந்தமான ‘நிருக்தம்’ – சப்தாகமத்தைப் புரியச்செய்யும் விரிபொருள் – முக்கியமான ஒன்றாகும். ஆக்ராயனார், அவ்தும்பராயணர், ஒளபமன்யவர், கார்க்கியர், சாகபூர்ணி, ஸ்தோவ்லாஷ்டிவி, சாகடாயனார், பாரஸ்கரர், சாகல்யர் முதலான பெயர்கள் அதில் நினைவுறுத்தப் படுகின்றன. வேதத்தில் உபயோகித்த சொற்களின் தொகுப்புதான் நிகண்டு. அதனுடைய வியாக்யானம் நிருக்தம். வேதத்தின் உயிர்ப்பு என்பது ஓதுவதோ சொல் உச்சாரணமோ அல்லவென்றும், பொருட்ச்சிந்தனையும், அனுபவ எதிர்கொள்ளலுமே என்பதை முதன் முதலாக வெளிப்படுத்தியவர் யாஸ்கன். மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை என்று வாதித்த பழைய ஆசார்யன் குருடனே என்கிறார் யாஸ்கன். அர்த்தமில்லாத சொற்கள் ‘அதேனு’ (மலட்டுப் பசு) என்கிறார். ‘குருடன் காணாதது தூணின் குற்றமல்ல’ என்பது அவருடைய பிரபல மறுப்புரை. புராணாதிகள் எவ்வளவோ காலமாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது விஷ்ணு என்பவர் கெட்டவர்களை அழிப்பதும், நல்லவர்களைக் காப்பதுமான முக்கடவுளர்களில் ஒருவர் என்றுதான் அல்லவா. ஆனால் ஒளிக்கதிர்களை எங்கிலும் பரவச் செய்கிற பிரகாசமான ஆத்மாதான் விஷ்ணு என்கிறது நிருக்தம். நிருக்தம் சார்ந்து சவிதா என்னும் சூரிய தேவன் உலகத்தைப் படைத்தவன். இந்த அர்த்தத்தில் நோக்கினால் மட்டுமே காயத்ரி மந்திரம் வேத தரிசனத்தின் பெருமை முழுவதையும் உள்ளடக்கியிருப்பது தெரியவரும். தேவன், மாண்டூகம், பாரதி, இந்திரன், ஊர்வசி, அச்விகள், சமுத்திரம், வருணன், ஜாதவேதஸ் முதலான குறியீடுகளுக்கு யாஸ்கன் தருகிற அர்த்தத்தில் ஒளிச்சுடரை நீட்டினால் வேதத்தின் பல இருண்ட மூலைகளும் தெளிவு பெற்றதாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.   

விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த சாயனரின் உரை பலராலும் பரவலாகப் பின்பற்றப்பட்டது. வேத விஞ்ஞானத்தை அழியாமல் நிலைநிறுத்த சாயனபாஷ்யம் பெரிதும் உதவியிருக்கிறது என்ற போதிலும், அது பெரும்பாலும் யக்ஞத்தின்  பாற்பட்டும், பலவித முரண்பாடுகளையும் கொண்டு விளங்கியதால் மேற்கத்திய அறிஞர்கள் வேத ஆராய்ச்சிக்காக தீவிரமாகப் புறப்பட்டபோது எளிதாகக் கிடைத்த தவறான வழிகாட்டியுமாகவும்  விளங்கியது. சுத்தமான வேத தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் வேதத்தின் முரண்பாடான கருத்துக்கள் இதனால் உலகமெங்கும் பரவின. சில ஐரோப்பிய வேத வித்தகர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. பெரிதும் குறிப்பிடத்தக்க ரோத்(1821-1895) இவ்வாறு கூறினார். ‘சாயனரை விட்டுவிடுங்கள்’.  ஆனால் சாயனரை ஆசிரியர் முழுதும் விட்டுவிடுவதில்லை. வெகு சில வியாக்யானங்களில் “இந்த இடத்தில் நாம் சாயனர் வழி செல்வதே சரி” என்றும் கூறுகிறார். வேதத்தின் அமைப்பு முறையிலும், கூறு முறையிலும் பல்வேறு அறிஞர்களும் முரண்பட்டே இருந்திருக்கிறார்கள். இருந்தபோதிலும் உபநிடதங்களைப் புரிந்து கொள்வதில் .கொண்டுகூட்டி’ப் பொருள்கோள் முக்கியமான இடத்தை வகிக்கிறது.  

உபநிடத தத்துவங்களில் சங்கரருடன் பிற அறிஞர்கள் வேறுபடும் இடங்களும் உண்டு. ”சங்கரரை அரவிந்தருடைய திருத்தலுடன் – அப்படிக் கூறலாமா தெரியவில்லை? – பயில்வது மனதை மலரச் செய்வதாக இருக்கும்” என்கிறார் ஆசிரியர்.மேலும் ஆசிரியர் கூறுகிறார் ” நமக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உண்டான கிரந்தத் தொகுப்பைப் பற்றி நமக்கு ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குரு வியாக்யானம் செய்வதற்கு உதவியதான எழுத்துருவும் எழுத்துருவற்றதுமான பற்பல பாரம்பரியங்களைக் குறித்து தேவையான விவர அறிவு இல்லாமலேயே ஆர்ப்பாட்டமான உரத்த குரலில் உரையாடுவது விவேகமல்ல.”

சாயனரின் யதாஸ்திகத் தத்துவத்திற்கு மேற்கத்தியரின் குறுகிய நோக்கிலிருந்து விடுதலை தேடி,  வேதத்தின் அந்தரங்க ரகசியங்களைக் கண்டு பிடிக்க முயன்றவர்களில்  முக்கியமானவர்கள்,  ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதியும், யோகி ஸ்ரீஅரவிந்தரும் ஆவார்கள்.வேதத்தில் மறைமுகமாக ஏதோ ரகசியம் இருக்கிறதென்பது அரவிந்தரின் கூற்று. இது சாயனரின் வழி முறைக்கு நேர்மாறானது. ‘நிண்யம்’ என்ற சொல்லுக்கு ரகசியம் என்று பொருள். ‘இந்த முகத்திரையை நீக்குக’ என்று அரவிந்த கோஷ் சுட்டிக் காட்டிய நிண்ய வசனங்கள் என்றென்றுமாக அறை கூவிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வழி காட்டும் இன்னொரு சொல் ‘ஹ்ருத்’. அது போலவே வேதத்தின் ஆழத்தை நோக்கி நம்மை இட்டுச்செல்லும் இன்னொரு சொல் ‘அபகூள்ஹம்’ – அதிரகசியம் என்று அர்த்தம். ‘மிஸ்டிக் சிம்பலிசம்’ என்று மேற்கத்தியர்கள் எள்ளலாகச் சொல்வதைத்தான் ‘சமாதிபாஷை’ – அனுபவத்தின் சமாதியில், சாஷாத்கார வேளையில், வெளிப்படுவதான கருத்தோவியம் –  என்றார்கள் முன்னோர்கள். இதுதான் உபநிடதங்களிலும், புராணங்களிலும் ‘பரோக்ஷவாதம்’ (மறைவாக அமைந்திருந்து அறியப்படாமலிருப்பது) என்றழைக்கப்பட்டது.   

வேதத்தின் கடைசி என்று பொருள் படும் வேதாந்தங்களான உபநிடதங்களின் நோக்கம் பிரம்மானுபூதியும், ஆத்மானுபூதியுமேயாகும். பிரம்மம் என்பதற்கான அரவிந்தரின் விளக்கம் ‘ஆத்மாவினுடையதோ, சத் என்பதினுடையதோ, ஆழத்திலிருந்து எழுந்த உள்முக தரிசனத்தின் துடிப்பாகிவிட்ட வேத மந்திரத்தின் மிக ஆழமான பகுதியே பிரம்மம். இந்த மாபெரும் உண்மை, எல்லாமும் எல்லாவற்றையும் உருவாக்குவதுமான இந்த சித் என்பதுதான் பிரம்மம்.மனிதனின் ஆழ்மனத்திலிருந்து புலனுக்கெட்டாத போதத்தை நோக்கி எழுகின்ற ஆத்மா அது’. மேலும் புரிந்து கொள்வதற்கு ஜனகரின் அரசவைக்கு நாம் செல்ல வேண்டியுள்ளது. பிரம்மம்தான் பிரபஞ்ச சத்தியமென்று புரிந்துகொண்ட சிலருடைய கருத்துக்களை யாக்ஞயவல்கியர் அங்கே ஜனகரின் எதிரில் சமர்ப்பித்தார். ஜித்வன் என்ற சைலினி (சிலினரின் மகன்) கூறிய கருத்து வாக்குதான் பிரம்மம் என்பது. சௌல்பாயனர் வாயு என்றும், பர்க்கு வார்ஷனர் கண் என்றும், பாரத்துவாஜர்  காது என்றும், திக்தன் இருதயம் என்றும் பலவாறாகக் கூறினார்கள். தேடல்  வெளியிலிருந்து உள் நோக்கிச் செல்வதாகவே காட்சி இங்கே தெளிவாகி வருகிறது. அடுத்த காண்டத்தில் மனிதனுக்கு எது வெளிச்சம்? என்ற ஜனகரின் கேள்விக்கு சூரியன், சந்திரன், அக்னி முதலான புறப் பொருட்களைக் கடந்து பின்புதான் வாக்கு என்று யாக்ஞயவல்கியர் பதிலளிக்கிறார். இவையெல்லாம் அஸ்தமிக்கும்போது எது வெளிச்சம்? என்பது கடைசியில் கேள்வி. ‘ஆன்மா’ என்பது  யாக்ஞயவல்கியரின் பதில். இவ்வாறு பிரம்மத்தின் தேடல் ஆன்மாவைச் சென்றடைகிறது. 

பிரபஞ்சத்தின் புறச்சார்பான சஞ்சாரம் சிந்தனையாளரை பிரம்மம் என்ற தத்துவத்தில் அடையச் செய்தபோது, தனக்கான உண்மையைத் தேடிக்கொள்ளும் அந்தரங்கப் பயணம் இறுதிப் பயனை அடைந்தது ஆன்மாவைக் கண்டபோது மட்டுமே. வெளித்தேடல்  நம்மை விராட், ஹிரண்யகர்பம் முதலான நிலைகளினூடே இட்டுச் செல்வது போல, உள்ளுக்குள் பார்க்கும் நபர் இந்திரிய போதம், மனம், புத்தி முதலிய பல தோணிகளில் ஏறி, இறங்கிப் போக வேண்டியிருக்கிறது. விழித்துக்கொண்டிருப்பதும் உறங்குவதுமான மனதிற்கும் அப்பால் ஒரு நிலை உண்டு. அதுதான் பெருஞ்சிறப்பும், வல்லாண்மையும் கொண்ட ஆன்மா. அதை அறிந்தவனுக்கு துக்கமுமில்லை, பயமுமில்லை.  ஆன்மாவால் அலைக்கழிக்கப்பட்ட ஒருவர் தான் ஐரிஷ் கவிஞர் டபிள்யு. பி. யேட்ஸ் (1865-1939), தாகூரின் கீதாஞ்சலி ஐரோப்பாவை அடிமைப்படுத்தியது யேட்ஸின் மூலமாகத்தான்.அதனுடைய கையெழுத்துப் பிரதியைப் படித்து ஆன்ம மகிழ்ச்சியின் சிகரத்தை எட்டிய யேட்ஸ், பின்னர் அதன் முன்னுரையில் ‘ஆன்மாவைக் கண்டடைக’ என்பதுதான் இந்திய நாகரிகத்தின் சிறப்பு என்று கூறுகிறார். தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள் காட்டும் யேட்ஸ், மெய்மையின் ஏகத்துவம் (Unity of being) என்ற கருத்து உபநிடதத்திலும், கிருத்துவத்திலும் ஒரே வகையில் வெளிப்படுவதாக, ஒரு கவிஞரின் உணர்வு கொண்டு தான் நம்புவதாக உரத்த குரலில் குறிப்பிடுகிறார்.  இஸ்லாமிய அறிஞர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் உபநிடதத்து பிரம்மதரிசனமும் ஸுபி தரிசனத்து ‘அஹதீ யத்’ சங்கற்பமும் நிகரானவை என்று கூறியிருக்கிறார்.            

மகாவாக்கியம் என்று மட்டும் கூறினால் அது “தத்வமஸி” தான். அது மகாவாக்கியங்களுக்கெல்லாம்  மகாவாக்கியம். உபநிடதச்சூழலில் வாக்கியம் என்று மட்டுமே கூறினால் அது ‘தத்வமஸி’ மட்டுமே. நம்முடைய முகத்தைநோக்கி, விரலை நீட்டி கூறப்படும் வசனம் அது. ‘அருகமர்த்தி உபதேசம் செய்க’ என்ற உபநிடதத்தில் முதன்மையான அர்த்தத்தில் கூறப்பட்ட ஒரே வாக்கியம். அஞ்ஞானம், மூடநம்பிக்கை ஆகியவற்றின் நடுவில் புராணக்கதைகளால் மாசுபடுத்தப்படாமல் இந்தியர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றும் முழங்கிக் கொண்டிருக்கும் வாக்கியம் ‘தத்வமஸி’. இந்தச் சொல்லைக் கேட்டறியாத ஒரு பாமரனும் இல்லை எனலாம். பன்னிரண்டு வயதாயிருந்தபோது வேதம் படித்து எதார்த்த பிராமணனாக ஆவதற்காக வெளியே சென்று, பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எல்லாம் படித்து முடித்தாயிற்று என்ற நம்பிக்கையுடன் வீட்டை அடைந்த மகனிடம், தந்தை ஒரு சிறிய கேள்வியைக் கேட்டபோதுதான், தன்னுடைய ஆழ்ந்த அறிவின்மை மகனுக்குப் புலப்பட்டது. தொடர்ந்து பரமதத்துவமான ஆத்மோபதேசம் நடக்கிறது.எப்படி தேனிலிருந்து இது இந்த மரத்துப் பூவிலிருந்து வந்தது என்றும், கடலில் ஆறு கலந்த பின்பு குறிப்பிட்ட ஆற்று நீரையும் இனங்காணமுடியாதோ, எப்படி பிளக்கவே முடியாத சின்னஞ்சிறு விதையிலிருந்து முளைத்தெழும் ஆலமரம் ஊரையே மூடி நிற்கிறதோ,  எப்படி தண்ணீரிலே கரைந்த உப்பு காணக்கிடைக்காமல் இருந்தாலும் நீர் முழுக்க வியாபித்திருக்கிறதோ , அதுபோல எங்கும் நிறைந்திருக்கும் சத்தியமே ஆத்மா.பிரபஞ்சத்தின் அகண்டமான அம்சம்தான்அது. ‘நீயே அது, ஸ்வேதகேதுவே’ என்கிறார் தந்தை.  பரமமான  ஐக்கியம், அபேதம், அத்வைதம் – இதுவே தத்வமஸியின் சாரம். ‘தத்’ வெளியே உள்ளது. ‘த்வம்’ உள்ளே உள்ளது. இரண்டுக்கும் இடையே இடைவெளி உண்டு. அந்த இடைவெளி இன்மை கொண்டது. இடைவெளி இன்மை என்ற அறிவு மனிதனுக்கு இல்லை. அந்த அறிவு ஏற்படவேண்டும். அதுவே அனுபவம். உலகம் முழுதும் உள்ள அறிஞர்கள் விதந்தோதிய மகாவாக்கியம் இது. மாக்ஸ்முல்லரின் வார்த்தைகளில் ‘தத்துவச் சாத்திரத்தின் வரலாறு முழுவதையும் ஆராய்ந்து பார்த்தால் காணப்படுவதான மிகவும் உறுதியானதும் சத்யச்சார்புமான தத்துவச் செறிவு இது ‘.    

‘தத்வமஸி’ என்ற மகாவாக்கியம் எழுதியது போன்று உபநிடதச் சான்றோர்கள் கண்டடைந்த ஒரு மகத்தான படிமம் (ப்ரதீகம்) தான் ஓம்காரம் – ஓம் என்ற எழுத்து அல்லது எழுத்தாகிய ஓம். ‘தத்வமஸி’ மலர்ந்த அதே சாந்தோக்யத்தின் பூந்தோட்டத்தில்தான் இந்த வாடாமலரும் மலர்ந்திருக்கிறது. வேதாந்த இலக்கியத்தின் உலகப் புகழ் பெற்ற படிமங்களில் முதன்மையானது ஓம். மனித மனத்தை அதிசூக்குமமாக ஆராய்ந்து நோக்கும் மாண்டூக்யத்தில், மனதின் மூன்று பகுதிக்கூறுகளான விழிப்புநிலை (ஜாக்ரதா), கனவு நிலை(ஸ்வப்ன), ஆழ்நிலை(சுஷூப்தி) ஆகியவற்றை இணைத்துப்பொருத்தி ஓம்காரத்தின் பகுதிக்கூறுகளான அ, உ, ம் என்ற எழுத்துக்களை ரிஷி விவரித்திருக்கிறார்.இந்த மூன்று நிலைகளுக்கு அப்பால் மனதுக்கு நான்காவதாக துரீயம் என்றொரு நிலை உண்டு. அதைக் குறிக்கிறது ஓம்காரம். அ, உ என்ற எழுத்துக்கள் தொண்டை முதல் உதடு வரையிலான எல்லா ஒலிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகையில் உதடுகளை இணைக்கும் மகாரம், குறிப்பாக அதில் நிறைந்து நிற்கும் ஒலி நீட்டிப்பும், அனுஸ்வரத்தின் (ம் என்ற மூக்கொலி) முடிவிலாப் பின்தொடர்ச்சியும் போன்று தியானத்திற்கு உதவுகிற வழிமுறை வேறெதுவுமில்லை. ஓம்காரம் வழிதானே தவிர இலக்கு அல்ல. சாந்தோக்கிய உபநிடதம் செய்யப்பட்டதே, ஓம்காரத்தின் மகத்துவத்தை அறியச் செய்வதற்காகத்தானோ என்னும் அளவுக்கு வியாக்கியானங்களும், உபாக்கியானங்களும் கொண்டு இந்தப் படிமத்தின் முக்கியத்துவம் திரும்பதிரும்பக் கூறப்படுவதைக் காணலாம். 

செய்யுள் வடிவ உபநிடதங்களில் அளவில் மிகச் சிறியது ஈசமே(உரைநடையில் மாண்டூக்யம்). பாடபேதத்தினால் அயர்வை அளிப்பதாகவும், புரிந்துகொள்ளக் கடினமானதாகவும் இருக்கும் இந்த உபநிடதம் சங்கரர் முதல் அரவிந்தர் வரை எல்லாப் பேரறிஞர்களையும் தலைவெடிக்கச் சிந்திக்க வைத்திருக்கிறது. இலக்கியவாதியான பௌக்வே போன்ற அறிஞர்கள் இதனுடைய புரிபடாமையையும் ஆழத்தையும் குறித்துப் பணிவுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் ராஜாராம்மோகன்ராய், டி எம் பி மகாதேவன், ரங்கநாதானந்தர் முதலியோர் இதன் மேன்மையையும்,உன்னதத்தையும்,அழகையும் வியந்து போற்றியுள்ளனர். இந்த உபநிடத்தைப் பற்றிய காந்தியின் கருத்து மிகப் பிரபலமானதும், முக்கியமானதுமாகும். ”எல்லா உபநிடதங்களும் பிற வேதங்களும் திடீரென்று தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விட்டாலும் ஈஸோபநிடதத்தின் முதல் மந்திரம் மட்டுமே ஹிந்துக்களின் மனதில் நிலைத்திருக்குமானால் ஹிந்துமதம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.” என்பதே அது. 

ஈஸோவாஸ்யமிதம் சர்வம் 

யத்கிஞ்ச்ச ஜகத்யாம் ஜகத் 

தேன த்யக்த்தேன புஞ்ஜீதா:  

மா க்ருத: கஸ்யஸ்வித்தனம் 

இதன் பொருள் ”இயங்கும் தன்மையான இந்த உலகத்தில் உள்ளதெல்லாம் ஈஸ்வரனால் பரவியிருக்கிறது. அதனால் பற்றற்று அனுபவி. எவர் பொருளுக்கும் ஆசைப்படாதே.” ஈஸோவாஸ்யத்தின் சாந்தி மந்திரம் மிகவும் புகழ்பெற்ற ‘ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்.’

உபநிடதங்களின் பெரும் ஆராதகரான விவேகானந்தரின் சொற்பொழிவுகளில் அதிகம் இடம் பெறும் உபநிடதம் கடம்.ஆசிய ஜோதி (Light of Asia)யின் படைப்பாளர் சர் எட்வின் அர்னால்டு கடோபநிஷத்தை ஆங்கிலத்தில் ‘மரணத்தின் ரகசியம்’ (The Secret of Death) என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார். சபையோர் இந்த மொழிபெயர்ப்பைப் படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் லண்டனில் கடம் குறித்து சொற்பொழிவாற்றினார் விவேகானந்தர்.  “உத்திஷ்ட ஜாக்ரத” (எழுமின்! விழுமின்!) என்பது அவருடைய விருப்பமான உபநிடத வாக்கியம். அவர் தன்னுடைய பேச்சாற்றல் முழுவதையும் உபநிடதங்களின் நற்சிந்தனையைப் பரப்பவே பயன்படுத்தினார் .இந்த உபநிடதத்தை விட பிரபலமானது இதன் சாந்தி மந்திரம் ‘ஓம் சஹானாவவது’. 

உபநிடதங்களில் பல தளங்களிலும் தலைமையிடத்தைப் பெறுவது பிருகதாரண்யம். ‘மிக முக்கியத்துவம் வாய்ந்த உபநிடதம் என்பதாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது’ என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் ‘எளிதில் புரிந்து கொள்ள முடியாததும் மிக ஆழமானதுமான உபநிடதம்’ என்கிறார் அரவிந்தர். ஹ்யூமும், ராதாகிருஷ்ணனும், ரானடேயும் தங்களுடைய உபநிடத ஆராய்ச்சியில் முதலாவது இடத்தை அளித்திருப்பது இதற்குத்தான். ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்ற புகழ் வாய்ந்த மகாவாக்கியமும் ‘அஸதோமா சத்கமய தமஸோமா ஜோதிர்கமய, ம்ருத்யோமா அம்ருதம்கமய  ‘ (அறிவின்மையிலிருந்து அறிவிற்கு, இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, மரணத்திலிருந்து மரணமின்மைக்கு) என்ற உலகப் புகழ் பெற்ற பிரார்த்தனையும் இந்த மரத்தின் கனிகளே. 

உபநிஷத்துகளின் தாக்கம் இஸ்லாம் மதத்தையும் விட்டு வைக்கவில்லை.நேருவால் அசோகச் சக்கரவர்த்தியை நினைவு படுத்துவதாகப் பாராட்டப்பட்ட அக்பர் காலத்திலேயே, உபநிடதங்களின் அடியொட்டி அல்லோபநிஷத்து மற்றும் அக்காபரோபநிஷத்து போன்றவை தோன்றின.  ஆனால் அவை பெரும்பாலும் மத ஒற்றுமைக்கான செயல்பாடுகளும் அவற்றின் பகுதிகளுமே. 

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே உபநிடதத்தின் பெருமை உலகெங்கும் பரவத்தொடங்கி விட்டது. இதற்குக் காரணம் ஒரு மொகலாயர் என்றால் நம்புவீர்களா? ஆம். ஷாஜஹானின் மூத்த மகனும் ஒளரங்கசீப்பின் அண்ணனுமான தாரா ஷூகோவின் தலைமையில்தான்(1615-1659) ஒரு மகா யக்ஞமாகக் கருத்தப்படவேண்டிய இந்த மொழிபெயர்ப்பு முயற்சி நடந்தது.  கிழக்கு, மேற்கு நாடுகளின் பரஸ்பர விவாதத்திற்கும், ஆன்மீக இணைப்புக்கும் வழி ஏற்படுத்த போடப்பட்ட முதல் பாலமாக இன்றும் விளங்குகிறது. தாரா – காசியிலிருந்து டெல்லிக்கு வரவழைத்த சமஸ்க்ருத பண்டிதர்களின் உதவியோடு – மொழிபெயர்த்த ஐம்பது உபநிடதங்களின் பாரசீக மொழிபெயர்ப்பு ‘ஸீர்- உல் – அஸ்ரார் ‘ என்றழைக்கப்பட்டது மகாரகசியம் என்பது பொருள். உபநிடதத்தின் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார் தாரா.”அத்வைத வாதத்தின் சாரம் உபநிடதங்களில் அமைந்திருக்கும் அளவுக்கு வேறு மத கிரந்தங்களில் காணப்படவில்லை’ என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் தாரா.பாபாலான், லால்தாஸ் ஆகிய அறிஞர்களின் மாணவராக இருந்தார் தாராஷுகோவ். கீதாவையும், யோகவாசிஷ்டத்தையும் அவர் மொழி பெயர்த்திருந்தார்.  ஒளரங்கசீப்பின்அதிகார மமதையால் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் கிழக்கிற்கும் மேற்கிற்குமான கலாச்சாரத் தூதுவரராகத் திகழ்ந்திருக்க  தாராஷுகோவ்வுக்கு வாய்ப்பிருந்தது.    

தாரா பாரசீக மொழியில் 1657ல் மொழிபெயர்த்த ஐம்பது உபநிடதங்களின் கையெழுத்துப் பிரதி, அப்போது இந்தியாவில் பயணம் செய்து கீழை மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஆன்க்வட்டில் து பெறோன் (Anquatil  Du Parron) என்ற பிரெஞ்சு அறிஞரின் கையில் 1775ல் கிடைத்தது. அதன் அடிப்படையில்  அவர் செய்த லத்தீன் மொழிபெயர்ப்பான ‘ஒளப்னகாத்’ ஐரோப்பாவின் கவனம் உபநிடதங்களை நோக்கி – அல்ல இந்தியாவை நோக்கி – திரும்பக் காரணமாக இருந்தது. இதைப் படித்துத்தான் ஷோப்பன் ஹோவர் உபநிடதத்தின் அபூர்வ ஆராதனையாளராக மாறினார். பண்பாட்டு ரீதியாக இவ்வளவு மகிமை வாய்ந்த கதை வேறு எதுவும் தென்படும் என்று தோன்றவில்லை என்கிறார் ஆசிரியர். இவ்வாறாக இந்திய தத்துவ ஞானத்தின் ஆதிசம்பத்து, இஸ்லாத்தின் கைகளிலிருந்து ஐரோப்பாவால் பெருமகிழ்வோடு பெற்றுக்கொள்ளப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த லத்தீன் மொழிபெயர்ப்பு, படைப்பு என்ற நிலையில் மிக மோசமானது என்றே அதைப் படித்த அறிஞர்கள் கருதினார்கள். ‘இந்தப் படைப்பை வாசித்து உபநிடதத்தின் இணையில்லா மகிமையை ஷோப்பன் ஹோவர் புரிந்துகொண்டாரென்றால் அது அவருடைய ஆன்ம வைபவத்தின் மேன்மையாகத்தான் இருக்கவேண்டும்’ என்று டோய்சன் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். எனினும் அதை ஐரோப்பாவில் வாசிக்கவேண்டியவர்களெல்லாம் வாசித்தார்கள். ஒரு உபநிடதயுகமே ஐரோப்பாவில் தொடங்க வழி செய்தது இந்நூல். ஒரு மூலநூலின் மேன்மையை, அதன் பரவலை, அந்த மோசமான மொழிபெயர்ப்பாலும் தடுக்கமுடியவில்லை. ஐரோப்பா முழுவதும் பல அறிவு தீபங்களை ஏற்ற இந்தச் சிறுஅகல் விளக்கே போதுமானதாக இருந்தது. பலவிதமான செப்பனிடப்பட்ட மொழிபெயர்ப்புகள் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் வெளிவர ஆரம்பித்தன. டோய்சன்-இவருடைய ‘The Philosophy of the Upanishads’ உலகம் முழுதும் போற்றப்படும் உன்னதமான படைப்பு  -, ரோவர், மாக்ஸ்முல்லர், ஹ்யும் போன்றோர் முதல்தரமான நூல்களை வெளியிட்டனர். உபநிடத மொழிபெயர்ப்பில் இந்தியாவின் ‘முன்னத்தி ஏர்’ பிரம்ம சமாஜத்தை நிறுவிய ராஜாராம் மோகன் ராயே. அவருக்குப்பின் வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்  டாக்டர் ராதாகிருஷ்ணன், அரவிந்த கோஷ் மற்றும் சுவாமி தயானந்தசரஸ்வதி. ரானடேயின் உபநிடத ஆராய்ச்சி நூலும் முக்கியமான ஒன்று. அரவிந்தருடைய நூல்கள் தனித்துவமான, மிக உயர்ந்த சிந்தனையின் உள்முகவெளிப்பாடுகள் என்கிறார் ஆசிரியர்.          

டாக்டர் ராதாகிருஷ்ணனின் ‘உபநிடதங்களின் தத்துவ சாத்திரம்’ (the Philosopy of the Upanishads) என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் இந்திய மகாகவி தாகூர் இவ்வாறு கூறுகிறார். ”எதோ ஒரு குறிப்பிட்ட மகானின் ஆன்மீக அனுபூதி உடையது மட்டுமல்ல, ஒரு மகத்தான யுகக்கலப்பும் தொகுப்பு முறையான வெளிப்பாட்டின் பிரதிநிதியும்தான் உபநிடதம். அது நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயம் போன்றது. பல்வேறு மதங்களிலிருந்து அதற்கு உயிர்ப்பு கிடைத்திருக்கிறது.”  

பதினெட்டாம் நூற்றாண்டு முதலாகத்தான் இந்தியா மேற்கத்திய நாடுகளின் பார்வையில் நேரடியாகப்பட்டது. மேற்கு நாடுகள் பாரதத்தை இரண்டு கண்களால் நோக்கின. ஒன்று இங்கிலாந்து.  மற்றொன்று ஜெர்மனி. ஜெர்மனி இந்தியாவை நட்புணர்வுடனும், இங்கிலாந்து மேலாதிக்க உணர்வுடனும் நோக்கின. கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் முதல் நிலைக் கலாச்சாரத் தூதுவர்களாகத் திகழ்ந்தவர்கள் ஆங்கிலேயர்களின் சார்பாக சர் வில்லியம் ஜோன்ஸ் (1746-1794) – உலக அளவில் முதலாவதாக அச்சில் வெளிவந்த சமஸ்க்ருத நூல் இவர் வெளியிட்ட ‘ரிதுசம்ஹாரம்’ – ஜெர்மனியின் சார்பாக மாக்ஸ்முல்லர். மாக்ஸ்முல்லருக்கு ஆரம்பத்தில் இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்ப ஆசையிருந்ததாக அபிப்ராயப்பட்ட பக்கிம் சந்திர சாட்டர்ஜி  போன்றவர்கள் அவரை எதிர்த்தார்கள். ஆனால் அவர் எழுதிய வேதச் செறிவான நூல்களும், அவற்றில் பாண்டித்யத்தோடு மிளிரும் நட்புணர்வும் அத்தகைய எதிர்ப்புகளை மழுங்கச் செய்தன. ஜேம்ஸ் மில் (1773-1836) லின் History of  British India (1817) , மெக்காலே பிரபுவின் கல்விப் பயிற்சிக் குறிப்புகள் போன்ற நூல்களின் மூலம் இந்தியா அநாகரிகர்களின் நாடு என்றும் இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லையென்றும், இந்தியாவை அவர்கள் காலின் கீழ் மிதித்து அவமதிக்க நினைத்தபொழுது, இந்த அற்பத்தனமான பிரபுத்துவ உணர்வை, மாக்ஸ்முல்லர் இங்கிலாந்தில் இருந்தபடியே தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்தது சாதாரண விஷயமல்ல. அவருடைய நூலின் பெயரே ‘இந்தியா – நம்மால் அதனிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்?’ (இன்றைய நிலையிலோ? என்கிறார் ஆசிரியர்). இந்தியாவை அரசாண்டு ‘நன்மை பயக்க’ இங்கிலாந்தின் பிரதிநிதிகளாகக் கிளம்பியிருந்த இளம் துரைமார்களை நோக்கி இந்த அறைகூவலைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    அந்தக் காலத்திலேயே ரமேஷ் சந்திர தத்தர் தம்முடைய இராமாயண நூலை சமர்ப்பித்தது மாக்ஸ்முல்லருக்கே. ஒரு மேற்கத்தியர் மறுபதிப்புச் செய்த வேத கிரந்தங்களை கங்கைக் கரை பிராமணர்கள் படிப்பதைப்பார்த்து புளகமுற்றார் ராஜேந்திர லாலமித்திரன் (1824-1891). அத்தகைய ஒரு நெறியாளியைப்பற்றி, அவருக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கும் ஒரு நாட்டிற்குச் சொல்லமுடிந்ததெல்லாம் சுவாமி விவேகானந்தரின் சத்யாவேச வாக்கில்  எதிரொலிக்கிறது – “மாக்ஸ்முல்லர் ஒரு சந்நியாசி. பெரிய வேதாந்தி “. அவர் இந்தியாவில் மதமாற்றம் செய்ய எண்ணியிருக்கலாம். கடைசியில் மதம் மாறியதென்னவோ அவர்தான் என்றாகிவிட்டது.  

உபநிடத மற்றும் புத்தர் காலத்து தத்துவச் சிறப்புகளைக் கூர்ந்து ஆராய்ந்த மாக்ஸ்முல்லர் ”இந்தியா தத்துவ வாதிகளின் நாடு” என்பதை உலகிற்கு வெளிப்படுத்தினார்.உபநிடதங்களைப் பற்றி அன்று ஐரோப்பாவில் அதிகம் முழங்கிக்கொண்டிருந்த அபிப்ராயம் ஷோப்பன் ஹோவரு(1788-1860) டையதுதான். அவர் கூறுகிறார் “உபநிடதங்களைப் பயில்வதைப் போன்ற பயனுள்ள படிப்பு உலகில் வேறு எதுவும் கிடையாது. என்னுடைய வாழ்க்கையில் நிம்மதி அதுவாக இருந்தது. என்னுடைய மரணத்திலும் நிம்மதி தருவது அதுவாகத்தான் இருக்கும்”  என்று. இந்த வாக்கியங்களை எடுத்துக்காட்டிய மாக்ஸ்முல்லர் எழுதுகிறார் “ஷோப்பன் ஹோவருடைய வார்த்தைகளுக்குப் பெரும் பலம் தேவைப்படுமானால், பல தத்துவ ஞானங்களையும் மதங்களையும் ஆராயப் பழகிவிட்ட ஒரு நீண்ட வாழ்க்கையின் சொந்த அனுபவத்தை முன்னிறுத்தி நான் மனமார அந்த வலுவைக் கொடுப்பதாக இருக்கும்” 

 பலருக்கும் விருப்பமான மொழிபெயர்ப்பு ராபர்ட் எர்னனஸ்ட் ஹ்யூம் ஆக்கிய ”முக்கியமான பதிமூன்று உபநிடதங்கள்” (The Thirteen Principal Upanishads)என்பதாகும்.”மேற்கத்திய அறிஞர்களின் இனச்சார்பான மேலாதிக்க உணர்வோ இந்தியர்களின் தேசாபிமானச் சொற்காமமோ களங்கப்படுத்தாத, மோசடித்தனமில்லாத அறிவொளி இந்நூல் முழுதும் விரவிக் கிடக்கிறது” என்கிறார் ஆசிரியர். நியூயார்க்கில் ஒரு மத பாடசாலையில் வரலாற்று ஆசிரியராக இருந்த இவர் இந்தியாவில் பிறந்து பம்பாயில் படித்து வளர்ந்து இந்தியாவைத் தன் தாய்நாடாகவே கருதியவர். ஜெர்மனியிலிருந்து ஒட்டோ வோன் பாட்லிங் (1815-1904) , அயர்லாந்திலிருந்து சார்லஸ் ஜோன்ஸ்டன் போன்றோர் குறிப்பிடத்த்தக்க மொழிபெயர்ப்புகளை வெளியிட்டனர். ஜெர்மானிய அறிஞர்களான ரோவரின் பிப்லியோதிகா இண்டிகாவும் (Bibliotheca Indica), வேத விஞ்ஞானி மாக்ஸ்முல்லரின் கிழக்கத்திய கிரந்தாவளியும் (Sacred Books of the East), ராபர்ட் எர்னனஸ்ட் ஹ்யூம் ஆக்கிய ”முக்கியமான பதிமூன்று உபநிடதங்கள்” முக்கியமான மொழிபெயர்ப்புகளாகக் கருதப்படுகின்றன.

பால் டோய்சனின் ‘உபநிடதங்களின் தத்துவச் சாத்திரம்’ (The Philosophy of the Upanishads )என்ற நூலோ மேகக் கூட்டங்களுக்கிடையே தனித்துத் தெரியும் நீல ஆகாயமாக மிளிர்கிறது. மேற்குத் தத்துவச் சாத்திரங்களிலுள்ள திறமார்ந்த விஞ்ஞானத்தை இந்திய தத்துவச் சிந்தனையில் கரைத்துச் சேர்த்தால் உண்டாகும் விளைவு எவ்வளவு அசாதாரண நளினம் கொண்டதாக இருக்குமோ அதுதான் இந்த நூல். வேதாந்தத்தையும் இந்தியச் சிந்தனையையும் குறித்த அவருடைய எந்த நூலுக்கும் இந்த விளக்கம் பொருந்தும் என்கிறார் ஆசிரியர்.”ஒருக்காலும் அழியாத மேகத்தினின்றும் பிறப்பெடுத்த நீர் நிறைந்த, பகலில் துலாம்பரமான வெயிலும், இரவில் மேன்மையான நட்சத்திரங்களும் பாய்ந்தொளிரும் மாமலையில் அமைந்த பொய்கைகளே உபநிடதங்கள்” என்கிறார். டோய்சனைப் பற்றி ஹ்யூம் கூறுகிறார்”உபநிடதங்களைத் தனித்தோ, சமஸ்க்ருதச் சிந்தனையின் பெரும் சார்புடனான பந்தத்தை முன்னிறுத்தியோ வரையறையில்லாமல் அதிகமாகப் படித்த மற்றொரு மேற்கத்திய அறிஞர் கிடையாது. உபநிடதங்களின் நேர்மையான விமர்சகரும், மொழிபெயர்ப்பாளரும் என்ற அளவில் டோய்சனுக்கு நிகரானவர் இல்லை” 

சி.இ.எம்.ஜோடு எழுதியிருக்கிறார் ”மனித நாகரிகத்தின் வயது ஐயாயிரம் என்று கணக்கிட்டால், ஏறத்தாழ இந்தக் காலக்கட்டம் முழுவதும் இந்தியா நாகரிகத்துடன்தான் இருந்திருக்கிறது. ஐரோப்பிய நாகரிகம் உருவாகி இதில் ஆறில் ஒருபங்கு மட்டுமே ஆகியிருக்கிறது.” உபநிடதம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த அழியாப்பெரும்புகழ் இந்திய நாகரிகத்திற்குக் கிடைத்திருக்காது. வேதத்தின் ஆன்மிகச் செல்வாக்கு உபநிடதத்தைச் சார்ந்திருக்கிறது. உபநிடதத்திலிருந்து கசிந்து ஊற்றெடுத்துப் பாய்ந்தவையே கீதையும் பிரம்மசூத்திரமும். இந்திய ஆன்மிகப் பாரம்பரியத்தின் அச்சாணியே இந்த உபநிடதம்தான். ஜி.ஆர்.எஸ்.மீடும், ஜெகதீச சந்திர சட்டோபாத்யாயாவும் சேர்ந்து தியோசாபிகல் சொசைட்டியின் (பிரம்மவித்யா சங்கம்) கூட்டத்தில் 1896-ல் லண்டனில் இரண்டு பாகங்களாக ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டார்கள். ஒன்பது உபநிடதங்கள் அடங்கிய அந்த நூலை ‘உலக மதநூல்’ (World-Scripture) என்பதாக அவர்கள் முகவுரையில் குறிப்பிட்டிருந்தார்கள். உபநிடதங்களில் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் தத்துவார்த்தக் கருத்துக்கள் ‘உலக மதநூல்’ என்ற அந்தப் பெயருக்குப் பரிபூரணமாக வலுச்சேர்கின்றன. 

காந்திஜியின் மதம் எதுவென்று டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரைக் கேட்டபொழுது ‘ஹிந்து மதம்’ என்று முதலில் கூறினார். “கடவுள் என்பது உண்மைதான்” என்ற தனது பழைய கூற்றை நினைவு கூர்ந்தார். எனவே தன்னுடைய பதிலை உடனே சரிப்படுத்திக்கொண்டு “உண்மைதான் கடவுள்” என்று கூறினார். தன்னுடைய சத்திய தரிசனம் எதுவென்று ராதாகிருஷ்ணனிடம் “நாமெல்லாம் சத்தியத்தின் தீப்பொறிகள். இந்தத் தீப்பொறிகளின் மொத்தத் தொகுப்பு விண்டுரைக்கமுடியாததும், இன்றுவரை அறியப்படாததுமான சத்தியம்தான். அதுதான் கடவுள். வாழ்க்கையின் எல்லையற்ற கடலில் தன்னைத்தானே பரிபூரணமாக மூழ்கடித்துக் கொள்ளவும், அதனோடு இரண்டறக் கலக்கவும் செய்யாமல் சத்தியத்தை எதிர்கொள்வது சாத்தியமல்ல…ஏனெனில் எல்லாம் ஒன்றேயாம் பலவாகத் தோன்றியபோதிலும் “என்று விவரித்த பொழுது அவர் அரசியல் தலைவராகவோ, மத நம்பிக்கைவாதியோ, பக்தராகவோ எவராகவுமில்லை. கீதையின் குரல் போலவும் அந்த பதில் இல்லை. முண்டகோபநிடதத்திலிருந்து பொங்கி வரும் தூய முனிவரின் குரலே அது.   

Series Navigation<< களியோடைபாமாவின் கருக்கு >>

One Reply to “தத்வமஸி: புத்தக அறிமுகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.