குறுங்கதைகள் – ஓர் உரையாடல்

குறுங்கதைகளைக் குறித்த ஓர் உரையாடல் இது. இந்த வடிவத்தில் தொடர்ந்து செயல்படும் சுனில் கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்ரமணியன், சுரேஷ் பிரதீப் ஆகிய மூவரின் இந்த விவாதம் குறுங்கதை வடிவத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் தாக்கத்தை அறிந்துகொள்ளவும் உதவும்.

சுனில் தமிழில் குறுங்கதைகள் சார்ந்து முன்பே சில விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. ‘இன்று ஒரு புதியகலைவடிவமாக உருவாகிவரும் நுண்கதை அல்லது நுண்சித்தரிப்பு என்பது சற்று மாறுபட்ட அழகியல் கொண்டது. அது செவ்வியல் சிறுகதைக்கும், மேலே குறிப்பிட்ட உருவகக்கதைக்கும், விளையாட்டுக்கதைக்கும் பிறகு உருவாகி வந்துள்ள வடிவம். படிமமோ உருவகமோ இன்றி சொல்லப்படுவது. சொல்விளையாட்டோ மொழிச்சுழற்றலோ அற்ற சுருக்கமான நேரடியான கூற்று கொண்டது’ என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். 

சுரேஷ் பிரதீப் வாழ்க்கையின் ஒரு தருணத்தை அல்லது ஒரு நுண்மாறுதலை மட்டுமே குறிவைப்பது. வளர்ந்துசெல்லும் தன்மை அற்றது.’ குறுங்கதைகளின் வடிவத்தைப் பற்றி அவற்றுக்கு இருக்க வேண்டிய தற்சுட்டுதல் தன்மை (Self Referential) மிக முக்கியமான இயல்பு. குறைவான சொற்களில் தற்சுட்டுத் தன்மை கொண்ட ஒரு புனைவு வெளியை கட்டமைப்பதுதான் குறுங்கதை எழுதுவதன் பிரதானமான சவால் என்று தோன்றுகிறது. மேலும் குறுங்கதை ஒரு குறிப்பிட்ட வலுவான கதைச்சூழலில் நிகழ்வது அவசியம். ஆனால் அப்படி ஒரு ‘பழக்கமான’ கதைச்சூழலை தேர்வு செய்யும்போது கதைகள் தனித்தன்மையை இழந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது.’ இந்த இருமையை கடப்பதே நல்ல குறுங்கதையின் இயல்பு’ பெருந்தேவியின் குறுங்கதைத் தொகுப்புக்கான முன்னுரையில் குறுங்கதை எனும் வடிவம் குறித்த எனது புரிதலை இவ்வாறு குறிப்பிடுகிறேன் ‘‘குறுங்கதை என்ற பதத்தை நெகிழ்வாக நுண்கதையைக் குறிக்கும் முகமாகவும் ஒளித்தெறிப்புக் கதை என்ற வகையில் வரக்கூடிய சாத்தியத்திலும் பயன்படுத்துகிறேன். இவற்றை வரையறுப்பது சிக்கலானது என்றாலும், பரந்த உலகத்தின் குறுக்குவெட்டான ஒரு தோற்றத்தைக் குறைந்த வார்த்தைகளில் நிகழ்த்திக்காட்ட முனைவதாகப் பொதுப்படையான ஒரு அம்சம் இவற்றுக்கு இருக்கிறது.” 

கார்த்திக் – ‘குறுங்கதை’ என்ற வார்த்தையே அளவின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அவ்வகையில் சிறுகதைக்கும் ‘குறைந்த அளவில்’ அமைந்த கதை எனக் கூறலாம் என்றால், சிறுகதைக்கே இதுதான் அளவு என்ற எவ்வித திட்டவட்டமான வரையறையும் இங்கே கிடையாது. சிறுகதை என்ற வடிவமே மேற்கிலிருந்து வந்தது என்பதால் குறுங்கதைக்கான வரையறையையும் அங்கிருந்தே எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்பதே என் எண்ணம். 

சுனில் – ஆம், பெயர் உணர்த்துவது போல குறுகியதாக இருக்க வேண்டும் கதையாகவும் இருக்க வேண்டும். சிறுகதை எனும் சொல் கூட கதையினுடைய ‘அளவை’ உணர்த்துகிறது. குறுங்கதை எனும் வடிவத்துக்கென சொற்களின் எண்ணிக்கையை வரையறையாகக் கொள்ள முடியுமா? மேற்கத்திய அளவுகோலின்படி 1500 சொற்கள் இருக்க வேண்டும் பிளாஸ் பிக்ஷனுக்கு. இந்த வரையறையை இங்கே அப்படியே கொண்டு வர முடியாது. இந்த கணக்கின்படி பார்த்தல் தமிழில் எழுதப்படும் கதைகள் பெரும்பாலும் ஃபிளாஸ் பிக்ஷனாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் குறுங்கதைகளை வாசித்த வகையில் அதிகபட்ச சொல் எண்ணிக்கை 600 என கொள்ளலாமா என்றொரு யோசனை வருகிறது. கார்த்திக் – கதைகளை வடிவ ரீதியாக வகைப்படுத்த ஏதேனும் ஒரு அளவுகோல் தேவைப்படுகிறது. பெரும்பாலும் அக்கதையின் நீளம் அகலமே அவற்றைத் தீர்மானிக்க முக்கிய அளவுகோலாக இருக்கிறது. அதே நேரத்தில் வார்த்தைகளின் அளவு என்பது ஒரு கருவிதானே தவிர அதையே தீவிரமாகப் பற்றிக்கொள்ளத் தேவையில்லை என்பதே என் எண்ணம். சிறுகதைகளிலேயே வண்ணநிலவன், அசோகமித்திரன் உள்ளிட்டோர் மிகக் குறைந்த பக்கங்களில் தீவிரமான கதைகளை எழுதிக்காட்டியிருக்கிறார்கள். எனவே வார்த்தைகளின் அளவென்பது நம் வசதிக்கான ஒருவித வகைப்பாட்டைத் தவிர வேறில்லை.

சொற்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, பொதுவாக நானூறு வார்த்தைகளுக்குக் குறைவானவற்றை ‘குறுங்கதைகள்’ என்றும் நூற்றுச் சொச்சம் வார்த்தைகளில் எழுதப்படுபவற்றை ‘நுண்கதைகள்’ என்றும் அழைக்கிறார்கள். இன்னும்கூட உப பகுப்புகள் உண்டென்றாலும் தமிழில் தற்போது எழுதப்படும் குறுங்கதைகளை இவ்விரு வடிவ சாத்தியங்களுக்குள் அடைக்கலாம். நானூறு என்று அவர்கள் எடுத்துக்கொண்டாலும் என்னளவில் அதை நானூறிலிருந்து எண்ணூறு வார்த்தைகள் வரை எடுத்துக்கொண்டால்கூட பிழையில்லை என்றே நினைக்கிறேன். ‘தலைப்பில்லாதவை’ என்ற தலைப்பில் யுவன் எழுதியிருக்கும் குறுங்கதைகள் அனைத்துமே கிட்டத்தட்ட எழு நூற்றுச் சொச்சம் வார்த்தைகள் கொண்டவை. போகனின் பல குறுங்கதைகளும் ஐந்நூறு வார்த்தைகளைத் தாண்டும். 

கார்த்திக் – எனினும் சொற்களின் எண்ணிக்கையை தாண்டி, குறுங்கதை எந்த இடத்தில் சிறுகதையிலிருந்து அல்லது கவிதையிலிருந்து வேறுபடுகிறது என்று யோசிக்கலாம். இருப்பதோ மிகவும் குறைவான ‘கான்வாஸ்’. அதில் ஒரு கதாப்பாத்திரத்தைக் கொண்டு வந்து இடம், காலம், மனநிலை ஆகியவற்றோடு பொருத்தி கதையைத் தொடங்குவதற்கான அவகாசமோ சுதந்திரமோ குறுங்கதைகளில் கிடையாது. கொடுக்கப்பட்டிருப்பது ஒரே ஒரு குண்டு நிரப்பப்பட்ட ஒரு துப்பாக்கி. நேராக நெற்றிப் பொட்டில் சுட வேண்டும். அவ்வளவுதான். இதுவே குறுங்கதைகள் சிறுகதைகளிலிருந்து முக்கியமாக வேறுபட்டு நிற்கும் புள்ளி. சிறுகதையை ஒப்பிட குறுங்கதைகள் அதிக வாசகப் பங்கேற்பைக் கோருகின்றன. கதையில் சொல்லப்பட்டவற்றை விட்டு வெளியேதான் உண்மையான கதை நிகழ்கிறது. இந்நிலையில் இயல்பான வாசிப்புக்கு மேலான கூர்ந்த வாசிப்பின் தேவை இருக்கிறது. இங்கு வாசகன் கிட்டத்தட்ட ஒரு சக படைப்பாளியாகவே பரிணாமம் கொள்கிறான். மேலும், அளவில் சிறியதானதால் இக்குறுங்கதைகளில் நிறைய புதிய புதிய கதைக் களங்கள், சொல்முறைகள் கையாளப்படுவதைக் காணலாம். எழுத்தாளர்களுக்குமே குறுக்கிச் சொல்வதில் சிறுகதையைவிட குறுங்கதை வடிவம் சவால் அளிப்பதாக இருக்கிறது. அதே நேரத்தில் நிதானித்து எழுதப்படும் ஒரு சிறுகதை ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு குறுங்கதையால் ஏற்படுத்த முடியுமா என்ற ஐயம் எழுகிறது.

சுனில் – சொற்களின் எண்ணிக்கை ‘அளவை’ கறாராக கொள்ள கூடாதுதான்.  குறுங்கதை என்பது சிறுகதை, நாவல், வசன கவிதை போன்ற  வடிவங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது முக்கியமான கேள்வி. சிறுகதைகளோ நாவல்களோ கதையின் ‘அளவை’ கொண்டு வரையறை செய்யப்படுவதில்லை. 80 பக்கங்கள் கடந்து அளவில் பெரிதாக இருந்தாலும் ஆலிஸ் மன்ரோவின் கதைகள் சிறுகதைகள் என்றே சொல்லப்படுகின்றன. 50 பக்கங்களே உள்ள அரவிந்த் கருணாகரனின் ‘சீர்மை’ நாவல் என்றே வகைப்படுத்தப்படுகிறது. சிறுகதைகளையும், நாவல்களையும் இயல்புகள் கொண்டு வரையறை செய்ய முடிவது போல குறுங்கதைகளை இயல்புகளை கொண்டு வரையறை செய்ய முடியுமா? கார்த்திக் பயன்படுத்தும் தோட்டா நிரப்பப்பட்ட துப்பாக்கி என்பது நல்ல உருவகம். எனினும் இந்த வரையறையை நாம் சிறுகதைக்கு பயன்படுத்தி வந்தோம். முன்பு சிறுகதைக்கு பொருந்தியவை இன்று குறுங்கதைகளுக்கு உரியவையாக பரிணாமம் கொள்கின்றன. சிறுகதை இயல்பாக நாவல் தன்மையை நோக்கி நகர்வதை காண முடிகிறது. ஜெயமோகனின் கொரோனா கால சிறுகதைகள் (உதாரணம் தங்க புத்தகம்) போன்றவை நாவல் அளவிற்கே விரிந்து செல்பவை. 

சுரேஷ் – கீரனூர் .ஜாகிர்ராஜாவின் ‘கருத்தலெப்பை’ நாவல் வடிவத்தின் எல்லா அம்சங்களும் கொண்ட மிகச்சிறந்த ஆக்கம். அதுபோல ஸொரண்டினோவின் ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை’ தொகுப்பில் குறுங்கதையாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் ‘பெரிய’ கதைகள் உண்டு. யாரும் சொல்லக் கேட்டானா அல்லது நானே யோசித்ததா என்ற குழப்பம் இருக்கும் ஒரு கருத்து. ஆனால் எனக்கு உடன்பாடான கருத்து. ‘நாவலைவிட சிறுகதைக்கே வலுவான கதைக்கரு தேவை.’ இக்கருத்தை நிரூபிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இது உண்மையென்றே நான் நம்புகிறேன். இதை குறுங்கதைக்கும் நீடித்துப் பார்க்கலாம். சிறுகதையைவிட வலுவான கதைக்கரு குறுங்கதைக்குத் தேவை. அதாவது ஒரு ஒரே அளவுள்ள சட்டகத்தில் நாவல் காட்டினை வரைவது போல என்றால் சிறுகதை ஒரு மரத்தினை வரைவது குறுங்கதை ஒரேயொரு பூவினை வரைவது. மூன்றும் ஒரே அளவில் தெரியும். பிரம்மாண்டமான பூவை வரைய மரத்தையும் காட்டையும் வரைவதைவிட அதிக தரவுகள் தேவைப்படுவதுபோல ஒரு குறுங்கதை எழுத வலுவான கதை அல்லது கருத்து தேவைப்படுகிறது. எழுதிச் செல்லும் போது ‘கண்டுபிடிப்பு’ நிகழ்த்த அனுமதிக்காத ஒரு வடிவம் என்றே குறுங்கதையை வரையறுக்கத் தோன்றுகிறது.

சுரேஷ் பிரதீப்

சுனில் – தமிழ் சூழலில் குறுங்கதைகள் எனும் பொதுவான பெயரில் Sudden fiction, short short story, flash fiction, micro fiction என நான்கு தன்மைகள் கொண்ட கதைகளும் உள்ளன. சடன் ஃபிக்ஷன் குறுங்கதையில் ஒருவித ‘திடீர்’ தன்மை எதிர்பார்க்கப்படுகிறது. மின்னல் வெட்டு கதைகள் எனும் பயன்பாடு வழியாக பிரம்மாண்டத்தின் கோட்டு சித்திரம் எனும் இயல்பு பிடிகிடைக்கிறது. ‘நுண் கதைகள்’ நுண்மையை இலக்கணமாக கொண்டவை. சிறிய அசைவுகளை கைப்பற்ற முயல்பவை. காலத்தை மந்தமாக படம்பிடிக்கும் (Time Warp) காமிரா போல நுண்ணிய தருணங்களை கதையாக்க முயல்பவை.

கே. என் செந்திலின் ‘பரிசு’ சிறிய சிறுகதைக்கு நல்ல உதாரணம். குறுங்கதைகளை உதாரணமாக கொண்டு பேசலாம் என்று எண்ணுகிறேன். சித்தார்த்தன் என்றொரு குறுங்கதை. சிவசங்கர் எஸ்.ஜே எழுதியது. 

மனைவியும் மகனும் ஆழ்ந்து உறங்கும் அந்த மூன்றாம் ஜாமவேளையில் உறங்கும் அவர்களைப் பார்த்துக்கொண்டே எப்படி வெளியேறுவதென அவன் குற்றவுணர்வோடு தலை சாய்க்கிறான்.

அடுத்த நாளில் மனைவியும் மகனும் ஆழ்ந்துறங்கும் அந்த மூன்றாம் ஜாம வேளையில் அவன் உறங்கும் அவர்களைப் பார்த்துக்கொண்டே எப்படி வெளியேறுவதெனக் குற்றவுணர்வோடு தலை சாய்க்கிறான்.

அடுத்த நாளில் மனைவியும் மகனும் ஆழ்ந்துறங்கும் அந்த மூன்றாம் ஜாம வேளையில் அவன் உறங்கும் அவர்களைப் பார்த்துக்கொண்டே எப்படி வெளியேறுவதெனக் குற்றவுணர்வோடு தலை சாய்க்கிறான்.

இது எனக்கு பிடித்த குறுங்கதைகளில் ஒன்று. புத்தனாகாத சித்தார்த்தன்களின் கதை. ஒரே ஆள் ஒவ்வோரு நாளும் முயல்வதாக வாசிக்கலாம். அல்லது வேறு வேறு சித்தார்த்தன்கள் புத்தனாக புறப்பட யத்தனிப்பதாக வாசிக்கலாம். இல்வாழ்க்கைக்கும் இலட்சிய வாழ்வுக்கும் இடையேயான ஊசலாட்டமாக வாசிக்கலாம். இந்த கதையை மின்னல்வெட்டு கதைக்கான (பிளாஸ் பிஷனுக்கான) உதாரணமாக சொல்வேன். ஒரு பிரம்மாண்ட கதையின் கோட்டுச்சித்திரம். காலமும் வெளியும் கடந்து எப்போதைக்கு நிகழும் ஒன்றை தொட்டு காட்டிவிடுகிறது.  

கார்த்திக் – இந்த கதையை வாசித்தபிறகு தோன்றியது, குறுங்கதைகள் என்பவை பூடகத்தின் குழந்தைகள். சொல்லாமல் விடுபவற்றின் வழியே கதையைச் சொல்லும் கலையே குறுங்கதை என்று தோன்றுகிறது. 

அமெரிக்க குறுங்கதை எழுத்தாளரான கிரான்ட் பாக்னர், ஒரு பேட்டியில் நுண்கதைகள் பற்றிச் சொல்லும்போது “ஒரு நுண்கதை, ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை மட்டும் பேசாமல் அவற்றுக்கிடையே விடுபட்டவற்றையும், சொல்லப்படாதவற்றையும் சொல்ல வேண்டும். பெரும்பாலான நேரங்களில் அவை நுட்பமானதாகவும் நுணுகி அறிவதற்குரியவையாகவும் இருக்கின்றன. சொல்லாமல் விடும் கலையே ஒரு நுண்கதை எழுத்தாளரின் பெட்டியிலிருக்க வேண்டிய முக்கியமான கருவி.” என்கிறார். நுண்கதைகள் குறித்த இவருடைய வரையறை எனக்கு நெருக்கமாக இருக்கிறது. இதையே குறுங்கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். 

கார்த்திக் பாலசுப்ரமணியன்

சுனில் – ‘நாவலை ஒரு பாலூட்டியுடனும் சிறுகதையை பறவை அல்லது மீனுடனும் ஒப்பிட்டால் குறுங்கதை ஒரு பூச்சி. இருளில் ஒளிரும் மின்மினி பூச்சி’ என்றொரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது. இந்த மேற்கோளுக்கு உரியவர் எவர் என குறிக்கத் தவறிவிட்டேன். எனினும் இந்த புரிதல் அபாரமானது. நாவலை மேய்ச்சல் விலங்காக கற்பனை செய்யலாம்.  மாடு, ஆடு, எருமை போல. பரந்த வெளியில் மேய்ந்து, அசைபோட்டு சாரத்தை அளிப்பது. குறுங்கதையை மின்மினி பூச்சி எனச் சொல்கிறார். மின்மினி பூச்சி துலக்கமாக பளிச்சென்று தெரிவது. பூடகத்திற்கு நேரெதிரான நிலை என்று சொல்லலாம். பூடகம் என்பதொரு சாத்தியம் என்றால் துலக்கமாக மின்னி மறைவது குறுங்கதைகளின் இன்னொரு இயல்பு என்று கொள்ளலாம். ‘திட்டவட்டமாக எந்த வடிவத்தையும் கொள்ளாதது. பல்வேறு வடிவங்களின் கலவையில் உருவான ‘மியூட்டேஷன்’ என்பதாலேயே நம்மை பதட்டத்துக்கு உள்ளாக்குகிறது’ என்கிறார் மார்கரெட் அட்வுட். பல்வேறு வகைமாதிரிகளை முயன்று பார்க்கும் களமாக குறுங்கதைகள் திகழ்கின்றன. உதாரணமாக பெருந்தேவியின் ‘ஒருகாலத்தில்’ வாசனையை கொண்டு காலப்பயணம் செய்வது என்றொரு வினோத கற்பனையை அடிப்படையாக கொண்டது. அமெரிக்க விமர்சகரான டேவிட் காப்ளான் அளிக்கும் வரையறை கவித்துவமானது. ‘மாசடைந்த நீரில் தங்க மீனை ஒரு நொடி காண்பது போல, ஒரு ஹைக்கூ அளிக்கும் விரிவை போல, ஒரு மாயாஜால நிகழ்ச்சியை காண்பது போல, எத்தனை நுணுக்கமாக கவனித்தாலும் மாயவித்தைக்காரர்  கண்முன் மாயத்தை நிகழ்த்தினாலும் நம்மால் அதன் வித்தையை கண்டுகொள்ள முடியாது’. குறுங்கதைகளை ஹைக்கூவுடன் இணை வைப்பது முக்கியமான அவதானிப்பு. அமெரிக்க நாவலாசிரியரான சார்லஸ் பாக்ஸ்டர் ‘புகையால் செய்யப்பட உருவத்தை போல மனதின் அந்தரத்தில் தொங்க வேண்டும்’ என்கிறார். கார்த்திக்கின் பூடகத்தின் குழந்தைகள் எனும் பயன்பாடு இங்கு பொருந்தும். ஆக இரண்டு எதிரெதிர் இயல்புகள் வழியாக குறுங்கதைகளின் வடிவத்தை புரிந்து கொள்ளலாம். துலக்கம் – புகை மூட்டம். துலக்கமாக உள்ளவை இறுக்கமாகவும் செறிவாகாவும் காத்திரமாகவும் உள்ளவை நம் மேல் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துபவை. மின்மினியையோ அழுக்கு நீரில் தங்க மீனையோ துலக்கமாக காண்பதற்கு நமக்கு விழிப்புணர்வு வேண்டும். கவிதைக்கு நெருக்கமான வடிவம் என சொல்லலாம். விழிப்புணர்வை அடிப்படையாக கொண்ட ஜென் கவிதைகளின் உரைநடை வடிவமாக இவ்வகையான குறுங்கதைகளை காண முடியுமா என்றொரு யோசனை எழுகிறது. தமிழ் சூழலில் கவிஞர்கள்  நல்ல குறுங்கதை ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள். இயல்பாக சொற்ச் சிக்கனம் பயின்று வருவது .காரணமாக இருக்கலாம்.   கவிதைக்கும் குறுங்கதைக்குமான எழுத்து முறையில் உணரும் வேறுபாடு குறித்து பெருந்தேவி சொல்வது முக்கியமானது. “படைப்பு மனவெளி என்பதைக் கவிதை உருவாக்கத்தில் எதிர்பாராத ஒளித்தெறிப்புகளின் வண்ணஜாலத்தில் மின்னுவதாக உருவகித்துக்கொண்டால் அது குறுங்கதை உருவாக்கத்தில் கடற்கரையின் சாயையைக் கொண்டிருக்கிறது.” அதாவது கவிதை ஒரே சமயத்தில் தென்படும் பல்வேறு ஒளிர் புள்ளிகள். குறுங்கதைகள் அலைபோல் அடுத்தடுத்து சீரிய இடைவெளியில்  வருவதாக குறிப்பிடுகிறார். ‘நுண் கதைகள்’ என்பதையும் கவிதைக்கு நெருக்கமான வடிவமாக காண முடியும். 

புகை மூட்டம் என்பது வாசகருக்கு கற்பனையால் இட்டு நிரப்ப   இடமளிக்கும் கோட்டுச் சித்திரம் போல. இந்த வடிவம் நாவலுக்கு நெருக்கமானதாக இருக்கலாம். இவ்விரு வகைகளிலும் தற்காலிகத்தன்மையை சுட்டுவது. நாவல் என்பது புகைப்படம் என்றால் குறுங்கதை என்பது அதன் நிழற்படம். நாவல் வர்ண சித்திரம் என்றால் குறுங்கதை கோட்டுச் சித்திரம். “குறுங்கதையை பொற்கொல்லரின் ஆக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாவலை கற்தச்சரின் ஆக்கங்களோடு ஒப்பிடலாம்.” என்கிறார் பெருந்தேவி. ஜியார்ஜியோ மெக்னநல்லி ‘நாவல் என்பது நாற்பது வரிகளும் இரண்டு கியூபிக் மீட்டர் காற்றும்’ என குறிப்பிடுகிறார். காற்று நீக்கப்பட்ட நாவல் குறுங்கதையாக ஆகமுடியும். 

சுனில் கிருஷ்ணன்

கார்த்திக் – பூடகம், நுண்மை இயல்புகளை பற்றி பேசும்போது எழுதப்படும் அனைத்துக் குறுங்கதைகளும் நுட்பமான வாசிப்பையும் வாசகப் பங்கேற்பையும் கோருகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. லிடியா டேவிஸ், எட்கர் கீரட், அனா மரியா ஷுவா போன்ற பிற நாட்டு எழுத்தாளர்களின் கதைகளை வாசித்திருக்கிறேன். தமிழிலும் யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார இந்திரஜித், போகன் போன்றோரது குறுங்கதைகளுமேகூட சற்று நேரடியானவையே. ஓரளவுக்கு வாசிப்புப் பரிச்சயமுள்ள யாராலும் உள்வாங்கும் தன்மைகொண்ட கதைகளே இவை. அதே நேரம் கிரான்ட் பாக்னர், அமி ஹம்பல் போன்றோர் எழுதும் நுண்கதைகள் நிறைய இடைவெளிக் கொண்டு சூட்சமமான முடிவுகளைத் தாங்கி வருவதைக் காண முடிகிறது. சமீபத்தில் சுரேஷ் பிரதீப் எழுதிய கதைகளை இவ்வரிசையிலேயே சேர்ப்பேன். முதல் வாசிப்புக்கு எல்லாம் புரிவது போலத் தோன்றினாலும் கூர்ந்த வாசிப்பைக் கோரும் மறைபிரதி அதில் உண்டு. 

சுனில் – ஆம். குறுங்கதைகள் பூடகமாகவும் இருக்கலாம், துலக்கமாகவும் இருக்கலாம். பூடகத்தை முன் நிபந்தனையாக கருத வேண்டியதில்லை.      

எடமண்டோ பாஸ் சோல்டன் எனும் பொலிவிய எழுத்தாளரின் ‘பார்ன்ஸ்’ எனும் கதையை உதாரணமாக இங்கு அளிக்கிறேன்.      

“இவை எல்லாமே ஏதோ ஒரு பிழை, தனது சிறையில் அடைபட்டிருந்த பார்ன்ஸ் புரிந்துகொண்டார், அவர் உண்மையை சொல்வதே சரியானதாக இருக்கும். எனினும், பின்னர் மங்கலான அறையில், வெளிச்சத்தால் கண்களில் பார்வையற்று போன சமயத்தில், அதிபரை கொன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கியபோது,, தனது வாழ்வின் சாதாரணத்தன்மை குறித்தும், தனது வாழ்க்கையின் மாபெரும் முக்கியத்துவமின்மை குறித்தும் அவர் சிந்தித்ததன் விளைவாக, முதன்முறையாக எவ்வித பயனும் அற்ற முக்கியத்துவத்தின் எடையை உணர்ந்தவராக, ஆமாம், அதிபரை அவரே கொன்றதாக சொன்னார். அதன்பின்னர் தரபாகா படையில் இருந்த இருநூற்றி எண்பத்தியேழு படைவீரர்களை கொன்ற வெடிகுண்டை புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். வெறுப்புடன் சிரித்தபடி, பழியை தழுவிக்கொள்வதை மட்டுமே அவரால் செய்ய முடிந்தது. பின்னர் இடைவெளியே இல்லாமல், பொலிவியாவின் பொருளாதாரம் வீழ காரணமாயிருந்த எரிவாயு குழாயை சிதைத்ததையம்,, கோச்சா பாம்பா வனப்பகுதியின் தொண்ணூற்றி இரண்டு சதவிகிதத்தை கபளீகரம் செய்த நெருப்பை பற்றவைத்ததையும், பாதிவழியில் பறந்துகொண்டிருந்த நான்கு LAB ஜெட் விமானங்களை வெடிக்க வைத்ததையும், லா பாஸின் வட அமெரிக்க தூதுவரின் மகளை வன்புணர்வு செய்ததையும் ஒப்புக்கொண்டார். மறுநாள் சூரியோதயத்தின்போது அவரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வார்கள் என அறிவித்தார்கள். ஆம், அவரைப்போன்ற வாழ உரிமையற்ற ஒரு மனிதரை அவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும் என அவரும் ஒப்புக்கொண்டார்.” 

இந்த கதை நேரடியானது, நாவல் தன்மை கொண்ட குறுங்கதைக்கு உதாரணமாக சொல்வேன். நாம் சிறுகதை, நாவல், குறுங்கதை போன்ற வடிவங்களை காலத்தை கொண்டு வரையறை செய்வது வழக்கம். நாவலில் காலம் விரிகிறது. சிறுகதையை விட குறுங்கதையின் காலம் குறுகியது. சுரேஷ்குமார இந்திரஜித்தின் சில சிறுகதைகளில் ஒட்டுமொத்த வாழ்வையும் சுருக்கமாக சொல்லும் தன்மை காணக்கிடைக்கிறது. இதைத்தான் சிறுகதைகளின் நாவல் தன்மை என புரிந்து கொள்கிறேன். ‘பார்ன்ஸ்’ குறுங்கதைகளில் கூட நாவல் தன்மை சாத்தியம் என்பதை சுட்டுகிறார். பெருந்தேவியின் ‘படுக்கையறைகளின் கதை’ இதேபோல் ஒன்றரை பக்கத்தில் மொத்த வாழ்வையும் காட்டி செல்லும் குறுங்கதை.  

சுரேஷ் – ⁠இந்த உரையாடலில் மேலே குறிப்பிடப்பட்ட குறுங்கதைகள் மற்றும் நான் விரும்பி வாசித்த குறுங்கதைகளில் ஒரு பொதுத்தன்மையை காண்கிறேன். இவை தன் ஆயுதங்களை தெரிவுசெய்துவிட்டு களத்தில் இறங்கிய வீரனைப்போல உள்ளன.‌ லிடியா டேவில், சொரண்டினோ போன்றோரின் கதைகளைப் படிக்கும்போது அவற்றுக்குப் பின்னே வலுவான ‘கருத்துநிலைகள்’ செயல்பட்டிருப்பதைத் காண முடிகிறது. ஆனால் தமிழில் இந்த அம்சம் தென்படுவதில்லை. இதை ஒரு குறையாக அல்லது நிறையாகச் சொல்லவில்லை. தமிழ் குறுங்கதைகள் கருத்துநிலைகள் என்று எதையும் வெளிப்படுத்தாது ஏன் என்று கேட்டுப் பார்க்கலாம். விதிவிலக்கு போலத் தெரிகிறவர் பெருந்தேவி மட்டுமே.

கார்த்திக் – இன்றைக்குப் பொதுவாகக் காணப்படும் கவனக் குவிப்பு சார்ந்த சிக்கல்களின் இலக்கிய வடிவமாகக் குறுங்கதைகளைப் பார்க்க இடமிருக்கிறதா என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. புனைவின் உள்ளடக்கம் மட்டுமல்ல அவற்றின் வெளிப்பாட்டு வடிவங்கள்கூட அன்றைய காலகட்டத்தின் ஒட்டுமொத்த சமூகம், பண்பாடு, அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன. இதைக் கருத்தில்கொண்டால் குறுங்கதை என்னும் வடிவத்துக்கும் பல்வேறு சமூக ஊடகத் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கவனக் குவிப்பு சார்ந்த சிக்கல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு குறுநாவலுக்குக் கிடைக்கும் கவனம் ஐந்நூறு பக்கமிருக்கும் ஒரு பெரிய நாவலுக்குக் கிடைப்பதில்லை. வெகுசிலரைத் தவிர பெரிய படைப்புகளை வாசிப்பதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. நண்பர்களிடம் இதைப் பற்றி விவாதித்தபோது ஒரு பெருநாவலை எடுத்தால் தொடர்ச்சியாக வாசிக்கும் சூழல் அமைவதில்லை. இடையில் விட்டுவிட்டுத் தொடர்வது கடினமாக உள்ளது போன்ற பதில்களைப் பெற முடிந்தது. ஒரு பெரு நாவலைத் தொடர்ந்து வாசிக்க நேரம் இல்லை என்று சொல்லும் அதே நண்பர்களுக்கு நெட்பிளிக்ஸ், பிரைம் போன்றவற்றில் வெளியாகக் கூடிய நெடுந்தொடர்களைப் பார்ப்பதில் பிரச்சினை இருப்பதில்லை என்பதையும் சேர்ந்தே கவனிக்க வேண்டியிருக்கிறது. 

இது காட்சி ஊடகங்களின் காலம். அங்கேயே கூட ரீல்ஸ் போன்ற குறு வடிவங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், பொதுவாக இலக்கியம் போன்ற கலை வடிவங்கள் பொது நீரோட்டத்திலிருந்து விலகி தனித்துவமான பாதை அமைத்துச் செல்ல வேண்டியது அவசியம். அதைப் பின்பற்றிய பிற ஜனரஞ்சக படைப்புகளும் ஆக்கங்களும் வரும். எனவே வாசிப்பவனுக்கு வசதியாக குறும்படைப்புகளைக் கொடுக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக இக்குறு வடிவிலிருக்கும் சவால் பிடித்திருக்கிறது. ஒரு தீவிரமான கருத்தையோ கதையையோ அதன் சாரம் குறையாமல் குறைந்த வார்த்தைகளில் சொல்லும்போது வெளிப்படும் மொழியின் மீதான கட்டுப்பாடு முக்கியமாக இருக்கிறது என்பதையே இவ்வடிவம் சார்ந்து எழுதப்படும் கதைகளில் முக்கியமானதாகப் பார்க்க வேண்டும். 

சுனில் – சிறுகதைகளுக்கு மாற்றாக வெகுஜன இதழ்கள் கைக்கொண்ட புனைவு வடிவமாகத்தான குறுங்கதைகள் உலகெங்கும் முதலில் அறிமுகாமின. குறுங்கதைகள் அறிமுகத்திற்கு தொலைக்காட்சியின் பரவலுக்கு நேரடியாக ஒரு தொடர்பு இருப்பதை அவதானிக்க முடிகிறது.  உலகெங்கிலும்  வெகுஜன தளத்தில் தொண்ணுறுகளின் மத்தியில் தொடங்கி இரண்டாயிரங்களின் மத்திவரை இந்த அலை நீடித்தது. குமுதம் ‘ஒருபக்க கதைகள்’ ஒருகாலத்தில் இங்கு மிகுந்த செல்வாக்குடன் இருந்ததை நினைவுகூர்கிறேன். சமூக ஊடகங்களில் நேரடியாக எழுதும் வாய்ப்பு திறக்கிறது. ‘வலைபாயுதே’ போன்ற பகுதிகள் குறுங்கதையின் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. இலக்கிய பரப்பில் குறுங்கதை மதிக்கத்தக்க இடத்தை அடைந்தது வெகுஜன இதழ்களில் அலை ஓய்ந்த பின்னர் தான். வெகுஜன இதழ்களில் வெளிவந்தவை ‘சாமர்த்தியத்தை’ மூலதனமாகக் கொண்டவை. ‘சாமர்த்தியம்’ மட்டுமே இருந்த குறுங்கதை மரபு சிரிப்பு துணுக்குகளுடன் தொடர்புடையது.

நமக்கு காணக்கிடைப்பது ஒரு மனிதரின் ஏதோ ஒரு தருணம்/ ஒரு முகம் அதை கதையாக்கினால்போதும். கடற்கறையில் தலையற்ற கட்டவுட்டுகளில் நாம் நம் தலையை பொருத்தி புகைப்படம் எடுக்கலாம். அது போல வாசகர் தம்மை பொருத்திக்கொள்ளும் கட் அவுட்களை குறுங்கதைகள் உருவாக்க முனைகிறது. இந்திய மரபில் சூத்திரங்கள் எழுதும் வழக்கம் எப்போதும் உண்டு. தம்மபதம் வாசிக்கும்போது எளிய நேரடியான வரிகளாக பொருள்படும் ஆனால் ஒவ்வொன்றுக்கும் பெரிய விளக்கங்கள் உண்டு. திருக்குறளை ஏழ்கடலை அணுவில் துளைத்து கொடுப்ப்பதாக சொல்வது நம் வழக்கம். ஆகவே குறுகிய வடிவம் என்பது கவனமின்மையின் விளைவு என்பதை முழுமையாக ஏற்க முடியாது. திருக்குறளையோ ஹைக்கூவையோ நாம் போகிற போக்கில் வாசித்துவிட்டு கடந்து சென்றுவிட முடியாது. என் புரிதலின்படி கவனக்குறைவின் விளைவாக தோன்றிய வடிவம் என்பதைவிட குறுகிய வாய்ப்புகளில் விகசிக்கும் வடிவம் குறுங்கதை எனத் தோன்றுகிறது. குறுகிய காலத்திற்குள் நெருக்கடியான காலவெளிக்குள் எழுதவும் வாசிக்கவும் முடிகின்ற வடிவம் என்பதாலேயே சமூக ஊடகத்திற்கு பொருந்திப்போகும் வடிவமாகவும் உள்ளது. 

சுரேஷ் – பொதுவாக எழுத்து ஊடகம் காட்சி ஊடகத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது என்பது என் எண்ணம். காட்சித் துணுக்குகள் கவனக்குறைவை உருவாக்குகின்றன என்பது உண்மை. ஆனால் அக்கவனக்குறைவு ஒட்டுமொத்த வாசிப்பை குறைக்கிறதேயன்றி குறுங்கதை எழுதப்படுவதை ஊக்குவிக்கிறது என்று நான் எண்ணவில்லை. அப்படியெனில் குறுங்கதையைவிட குறைவான சொற்களில் எழுதப்படும் கவிதை அதற்கு அனுசரணையான வடிவமல்லவா! குறுங்கதைக்கும் பேஸ்புக்கில் எழுதப்படும் நடைச்சித்திரங்களுக்கும் பெரிய தொடர்பில்லை என்றே நினைக்கிறேன். நடைச்சித்திரங்களை சிறுகதைகளுடன் குழப்பிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுங்கதைக்கு சிறுகதையைவிட ‘கெட்டியான’ கதை வேண்டும். அதன் கதைத்தன்மையே குறுங்கதையை தனித்துக் காண்பித்துவிடும். சிறுகதை வாழ்வின் லேசான கோணலைக் காண்பிக்கிறது என்றால் குறுங்கதை இன்னும் அழுத்தமாக கோணிக்கொண்டு நிற்கிறது! ஆகவே காட்சி ஊடகச்சூழலில் ஊன்றியவர்களுக்கு குறுங்கதையின் கோணல் எரிச்சலூட்டி கவனமில்லாதவர்களை இவ்வடிவம் விரட்டி விடும் என்றே தோன்றுகிறது.

கார்த்திக் – தமிழில் இன்று எழுதப்படும் குறுங்கதைகளைப் பற்றி பேச முனையலாம். எழுத்தாளர் எம்.டி.எம். யுவனுடைய மணற்கேணிக்கு எழுதிய வாசிப்புக் குறிப்பில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

யுவன் எதையும் நேரடியாகச் சொல்வதில்லை; சொல்லாமல் சொல்வது, வாசக முடிவுகளுக்கு வருவதற்கான குறிப்புகளை மட்டும் தருவது, ஒரு த்வனிப் பொருளை வாசக மனதில் உருவாக்குவது, ஒவ்வொரு அத்தியாயத்தையும் சொடுக்கி முடிப்பது, நகைச்சுவையும் சுயபரிகாசமும் கலந்த நடை – ஆகியவற்றால் நாம் கவிதைகளாக வாசிக்க வேண்டியவற்றை உரைநடையாக வாசிக்கிறோமோ என்ற எண்ணம் நம் கூடவே வந்து வாசிப்பனுபவமாகிறது. இந்த வாசிப்பின்பம் அபூர்வமானது;

அவர் மணற்கேணியை ஒரு நாவலாகப் பார்க்கிறார். அதை குறுங்கதைகளின் தொகுப்பாகவும் பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் அவர் மேலே மணற்கேணிக்கு எழுதியுள்ள குறிப்பு குறுங்கதைகளுக்குப் பொருத்தமாக இருப்பதை அறியலாம்.

சுனில் – யுவனின் ‘வேதாளம் சொன்ன கதைகள்’ நாவலிலும் இந்த தன்மையை காண முடியும். தமிழுக்கு குறுங்கதை எனும் வடிவம்  முற்றிலும் புதிது என சொல்ல முடியாது. நவீனத் தமிழிலக்கியத்தின் ஊற்றுக்கண்ணை பாரதியில் காண்பதே மரபு. குறுங்கதை வடிவத்திற்கும் அவரே முன்னோடி. பாரதியின் ‘காக்காய் பார்லிமென்ட்’ ‘ஆனைக்கால் உதை’ ஆகிய கதைகள் இன்றைய குறுங்கதை வடிவத்திற்கு மிக நெருக்கமானவை.  குறிப்பாக ‘ஆனைக்கால் உதை’ நவீன குறுங்கதையின் முன்னோடி வடிவம் என்றே எண்ணுகிறேன். ஒரு படிமம், திறப்பு, குறைந்த சொற்களில் சித்தரிப்பு என்ன எல்லா இலக்கணங்களும் பொருந்தி வரும் கதை. வண்ணநிலவனின் மிக முக்கியமான சிறுகதையான ‘மிருகம்’ இன்றைய எனது புரிதலின்படி  கச்சிதமான உருவகத்தன்மை கொண்ட குறுங்கதை என வரையறை செய்ய முடியும்.

யுவன் சந்திரசேகரின் மணற்கேணி 2008 ஆம் வருடம் வெளிவந்தது. ஒரே சமயம் நாவலாகவும் குறுங்கதைகளின் தொகுப்பாகவும் வாசிக்க இடமுள்ள கதைகள். எஸ். ராமகிருஷ்ணனும் ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’ எனும் தொகுப்பு வழியாக குறுங்கதை உலகிற்குள் அறிமுகமாகிறார். சமூக ஊடகங்கள் இலக்கிய வெளியாக பரிணாமம் கொள்ளத் தொடங்கிய 2010 ஆம் ஆண்டு முதல் பேயோன், போகன் சங்கர், அராத்து, பா. ராகவன் ஆகியோர் குறுங்கதைகளை எழுதிவருகிறார்கள். எனினும் குறுங்கதைகள் ஒரு அலைபோல தமிழில் எழுந்தது கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தான். முன்னரே எழுதிக்கொண்டிருந்த யுவன் சந்திரசேகர் ‘தலைப்பில்லாதவை’  எனும் தொகுப்பை வெளியிட்டார். எஸ். ராமகிருஷ்ணன் நூறுக்கும் மேலான குறுங்கதைகளை எழுதினார். ‘கர்னலின் நாற்காலி’ எனும் பெயரில் அவை தொகுப்பாகவும் வெளிவந்தது. கே.என். செந்தில் எழுதிய நாற்பது குறுங்கதைகள் ‘விருந்து’ என்ற தொகுப்பாக வெளிவந்து கவனம் பெற்றது. சுரேஷ்குமார இந்திரஜித் ‘பின்னணிப் பாடகர்’ ‘தாரிணியின் சொற்கள்’ ‘அபூர்வ கணம்’ என மூன்று குறுங்கதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.  போகனின்  ‘போகப் புத்தகம்’ ‘மெல்லுடலிகள்’ இரண்டிலும் கணிசமான எண்ணிக்கையில் குறுங்கதைகள் உள்ளன. கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் ‘ஒற்றைக் குரல்’ கவனம் பெற்றுவருகிறது. முபீன் சாதிகா, மலேசியாவைச் சேர்ந்த கே. பாலமுருகன், தயாஜி என பலரும் தொகுப்புக்கள் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் பாலசுப்பிரமணியன், சுரேஷ் பிரதீப் உட்பட பலர் எழுதும் குறுங்கதைகள் இன்னும் தொகுப்பாக தொகுக்கப்படவில்லை. 

நவீன தமிழ் இலக்கியத்தில் குறுங்கதை எனும் வடிவம் வலுவாக காலூன்றிவிட்டது என சொல்லிவிட முடியும்.  

கார்த்திக் – குறுங்கதைகள் அதிகமாக எழுதப்படும்போது அதற்கேற்ப வாசகப்பரப்பு உருவாகும். தொடர்ச்சியான விவாதங்களின் வழியே வெவ்வேறான வாசிப்புச் சாத்தியங்கள் திறக்கும். அது குறுங்கதைகள் என்று மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த படைப்புலகுக்கே நன்மை பயப்பதாகவே முடியும். 

சுரேஷ் – சமகால குறுங்கதைகள் பற்றிப் பேசும்போது சமீபத்தில் வாசித்த அசோகமித்திரனின் ஒரு கதையில் வாசித்த குறித்து வைத்திருந்த வரியை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அந்த ஜோசியரும் அவருடைய மனைவியும் குழந்தைக்காகத் தவம் கிடந்தார்கள் என்று சொன்னால் அது தவறாகாது. திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்து ஒரு குழந்தை பிறந்தது. ஜோசியர் குழந்தையின் பிறந்த நேரத்தை ஆராய்ந்தார். முந்தைய ஒரு ஜன்மத்தில் அந்தக் குழந்தை அவருடைய பக்கத்து வீட்டுக்காரர். அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை வசூலிக்க இப்போது அவருக்குக் குழந்தையாகப் பிறந்திருக்கிறார்! இது தெரிந்தவுடன் ஜோசியர் குழந்தை பிறந்ததைக் கொண்டாடுவது போல நூறு ரூபாய் விநியோகித்தார். குழந்தை உடனே இறந்து விட்டது.

கதை இங்கு முடியவில்லை. ஆனால் ஒரு தனிக்கதையாக இவ்வரிகளால் நிற்க முடிகிறது. இது அசோகமித்திரன் பிற்காலத்தில் எழுதிய கதையொன்றில் வரும்வரி. Homogeneity என்ற வார்த்தையால் இதைக் குறிப்பிடலாம். அதாவது மொழியை லாவகமாகக் கையாளும் படைப்பாளிகளில் படைப்புகளை ‘வெட்டி வெட்டி’ எடுத்தாலும் அந்த ‘துண்டு’ தனியே விகசிக்கும் அருகதையைக் கொண்டிருக்கிறது. சமகாலத்தில் ‘எழுதித் தேர்ந்த’ கைகள் குறுங்கதை வடிவில் நமக்கு முன்னோடிகளாக இருப்பது நல்ல விஷயம். யுவன் சந்திரசேகர் , எஸ்.ராமகிருஷ்ணன், பெருந்தேவி, என நீண்ட நாட்கள் மொழியில் புழங்கியவர்கள் நவீன தமிழ் குறுங்கதை வடிவத்துக்கு தொடக்கமாக அமைந்துள்ளனர். நீண்ட நாட்களாக குறுங்கதை வடிவம் புழக்கத்தில் இருந்தாலும் இன்றைய ‘அலை’ உருவானதில் இவர்களின் பங்கு அதிகம். இக்கதைகள் உருவாக்கும் உருவாக்கும் ‘அர்த்ததளத்துடன்’ முரண்பட்டே இன்றைய கதைகள் எழுதப்படுகின்றன. நான் கார்த்திக் எல்லாம் மேற்சொன்னவர்களை ‘தவிர்க்கவே’  முனைகிறோம் என நினைக்கிறேன். இந்த முரண் தமிழ்க் குறுங்கதைப் பரப்பை மேலும் செழுமைப்படுத்தும். இவ்வடிவம் இன்று பரவலாக எழுதப்பட்டாலும் ஒரு வலுவான வாசக-விமர்சன வட்டத்திற்குள் வருமளவு குறுங்கதை வளரவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இந்த விவாதம் குறுங்கதை Potential கொண்ட வடிவம் என்பதை எனக்கும் காட்டித் தந்திருக்கிறது!


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.