விண்வெளி மனிதனும், மண்வெளி மனமும்

ராமன் ராஜா

மூன்று காசுப் பத்திரிகை என்று ஒன்று இருக்கிறது (The Three Penny Review). அதில் சமீபத்தில் விண்வெளி மனிதர்கள் பற்றி பெர்ட் கெய்ஸர் எழுதிய கட்டுரை படிக்கக் கிடைத்தது: Extraterrestrial.

ஈ.டி. என்றால் ஸ்பீல்பெர்க் படத்தில் வருவது போல் முட்டைக் கண்ணும் டேபிள் டாப் மண்டையுமாக ஒரு பிராணியைத்தான் கற்பனை செய்துகொள்ளப் பழகிவிட்டோம். என் சின்ன வயதில் மங்கள்யான் எல்லாம் கண்டுபிடிக்கப் படாததால், செவ்வாய்க் கிரக மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று காமிக் புத்தகக் கதைகளில் மட்டுமே படித்தறிந்தோம். அவர்கள் திருமால் போல் பச்சை மேனியர்கள். தலையில் முடிக்கு பதிலாக இரண்டு டெலிவிஷன் ஏரியல்கள் முளைத்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள்; பூமியை அழிக்கவே பிறந்தவர்கள்.

போஸான்களால் சூழப்பட்ட இந்தப் பிரபஞ்சத்தில், நம்மைத் தவிரவும் யாரோ புத்திசாலி ‘மனிதர்கள்’ இருக்கிறார்கள் என்ற பிடிவாதக் கருத்து நிலவுகிறது. ஏன் ? பரந்த விண்வெளியில் தன்னந்தனியாக இருப்பதில் நமக்கு பயமாக இருக்கிறதா ?

வேற்று கிரகங்களிலிருந்து டூரிஸ்டுகள் நம்முடைய பாவப்பட்ட ஊரைத் தேடி வரப் போகிறார்கள் என்று ஒரு கோஷ்டியே ஆவலுடன் காத்திருக்கிறது. யூரி மில்னர் என்று ஒரு ரஷ்ய மில்லியனர், தன்னிச்சையாக இது வரை பத்து கோடி டாலர் செலவழித்துவிட்டார். விண்வெளி மனிதர்களின் ‘செய்தி’களைக் கேட்க, மாபெரும் ரேடியோ டெலஸ்கோப் எல்லாம் வைத்துக் கொண்டு வானத்தை சலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு மைக்ரோ வேவ் குறுஞ் செய்திகூட வரவில்லை. 2017 இல் ஆஸ்திரேலியாவில் உள்ள பார்க்கிஸ் டெலஸ்கோப்பில் ஏதோ ‘பீப் பீப்’ சத்தம் கேட்டது என்று ஏகப்பட்ட பரபரப்பு கிளம்பியது. கடைசியில், ஒரு இளம் இஞ்சினியர் காப்பி போடுவதற்காக மைக்ரோவேவ் அடுப்பைப் பற்ற வைத்ததுதான் அந்த சிக்னல் என்று கண்டுபிடித்து அவனை செம்மையாக உதைத்தார்கள்.

நாம் செய்தித் தொடர்புக்கு ரேடியோ அலைகளை உபயோகிக்கிறோம். சரி. ஆனால் வேற்று கிரகவாசிகளும் அதையே கண்டுபிடித்திருப்பார்கள் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்க்கிறோம்? அவர்கள் எந்த விதத்திலாவது நம்மைப் போல இருக்க வேண்டும் என்று கூட எதிர்பார்க்க நியாயம் இருக்கிறதா?

எச்.ஜி வெல்ஸோ, யாரோ ஒரு கதை எழுதினார்களே… ‘உங்கள் பூமிக்கு வருகிறோம். விண்கலத்தை இறக்க அனுமதி கிடைக்குமா?’ என்று ஒரு செய்தி வருகிறது. விஞ்ஞானிகள் ராவோடு ராவாக அண்டர் செகரட்ரி, ஜாயிண்ட் செகரட்ரி எல்லோரையும் எழுப்பி அரசாங்கத்தை நகர்த்தி அனுமதி வாங்குகிறார்கள். ‘உங்கள் பில்டிங் வாசலில் இறங்கிவிட்டோம்’ என்று அடுத்த செய்தி வருகிறது. விஞ்ஞானிகள் ஆவலுடன் வெளியே ஓடி வருகிறார்கள். யாரையும் காணோம். கடைசியில் ஒரு விஞ்ஞானி ‘சே ! என்ன இது, நத்தையையோ எதையோ மிதித்து விட்டேன் போலிருக்கிறதே !’ என்று பூட்ஸ் காலை உதறுகிறார். அடியில் பஞ்சாமிர்தம் போல் நசுங்கிக் கிடக்கிறார்கள், மில்லி மீட்டர் சைஸ் விண்கலமும் அதன் மனிதர்களும் ! விண்வெளியிலிருந்து சுமார் ஐந்து, ஐந்தரை அடி உயரத்துக்கு, கோட்டு சூட்டு போட்ட மனிதர்களை எதிர்பார்த்தது நம்முடைய தவறுதானே ?

‘பறக்கும் தட்டு என் வயலில் வந்து இறங்கியது’ என்று சாதிப்பவர்கள் பற்பலர். இவர்கள் உலகம் முழுவதும் லைக், சப்ஸ்க்ரைபுக்கு ஏங்கிக் கிடக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கம் விமானப் படையைக் கூப்பிட்டு எதற்கும் ஒரு முறை இந்த வதந்திகளை ஆராயச் சொன்னது. படை தீர விசாரித்துவிட்டு இரண்டே எழுத்தில் சொன்னது: ‘பொய்’ !

சந்திரனோ, செவ்வாயோ, அல்லது எங்கோ தொலைவில் அண்ட்ரோமீடா காலாக்ஸியில் இருக்கும் தூர சூரியனின் துணைக் கிரகம் ஒன்றிலோ, நம்முடைய ஒரு முகமான தேடல் ஒன்றுதான் : அங்கே தண்ணீர் இருக்கிறதா ?

எவ்வளவு தூரத்தில், எப்படிப்பட்ட உலகமாக இருந்தாலும் சரி; அங்கே தொண்டையை நனைக்கக் கொஞ்சம் தண்ணீர் மட்டும் இருந்தால் போதும், ஏதோ ஒரு வகை உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். அட அசடர்களா, பூலோக மனிதனுக்குத் தானேய்யா தண்ணீர் தேவை? மற்றக் கிரகங்களில், செலினியத்தைத் தின்று மீதேனைக் குடித்து வாழும் உயிர்கள் இருக்க முடியாதா என்ன? அவர்கள் சினிமா பார்க்கும்போது பாப் கார்னுக்கு பதிலாக ப்ளூட்டோனியத்தைக் கடித்துத் தின்றாலும் ஆச்சரியம் உண்டா? (பூமியில் நாம் கார்ப்பரேஷன் குழாய்த் தண்ணீரைக் குடிக்கிறோம் என்பது தெரிந்தால், அவர்கள் எத்தனை ஆச்சரியப்படுவார்களோ?) வெளி உலகம் ஒன்றில் தண்ணீர் கிடைத்தால் அங்கே உயிரினமும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம். அங்கே பாதரசம் கிடைத்தால், உடனே தெர்மா மீட்டரும் இருக்கும் என்று தேடுவார்கள் போல் இருக்கிறது.

நம்முடைய பூமியிலேயே பரிணாமத்தில் பற்பல பிராணிகள் கிளை பிரிந்தன. புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகி மிக வித்தியாசமான பாதைகளில் நாம் பயணித்தாலும், அந்தப் பாதைகளிடையே ஒரு சில ஒற்றுமைகளும் இருந்தன. உதாரணமாக, கண்கள். ஈ முதல் யானை வரை எல்லாவற்றுக்கும் ஒளியை உணர்வதற்காகப் பல டிசைன்களில் கண்கள் தோன்றின. இதை இணை கோடுகளாக வளர்ந்த பரிணாமப் பாதைகள் (parallel evolution) என்று வர்ணிக்கிறார்கள். ஒவ்வொரு உயிரினமும் கண் என்ற உறுப்பைத் திரும்பத் திரும்பக் கண்டுபிடித்து ஏற்றுக் கொண்டது என்று சொல்லலாம். ஆனால் ரேடியோ அலைகளை உபயோகிக்கும் திறமையும் இதே போல் பரிணாமத்தில் மறுமுறை நேருமா என்ன ? அதுவும் எங்கோ தொலைவில் இருக்கும் விநோத நட்சத்திரத்தைச் சுற்றும் விசித்திர கிரகம் ஒன்றில் ?

பூமியில் ஒரு செல் உயிரினம் தோன்றி, லட்சோப லட்சம் வருடம் கடற்கரையில் சேற்றில் நெளிந்து, கோடிக் கோடி வருஷத்தில் கால் கை முளைக்கப் பெற்று, கல்லால் ஆயுதம் செதுக்கி, முயல் மீது எறிந்தால் அன்றைய பொழுதுக்கு சாப்பிட டிபன் கிடைக்கும் என்ற டெக்னாலஜியைத் தெரிந்து கொள்வதற்கு, இடையில் எத்தனை எத்தனை பரிணாம விபத்துக்கள் நடந்திருக்க வேண்டும்? அத்தனை விபத்துக்களும் ஏறக்குறைய அதே போல் வேறொரு உலகத்தில் நடந்து, அங்கே ஒரு மார்க்கோனி பிறந்து, ரேடியோ அலைகளை அனுப்பினால் செய்தி சொல்ல முடியும் என்று கண்டுபிடித்திருப்பானா என்ன? பின்னே எந்த நம்பிக்கையில் ஆண்டென்னாவை விரித்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறோம்? அப்படிப் பார்க்கப் போனால், சிம்பன்ஸி குரங்குகள்தானே நமக்குப் பரிணாமத்தில் பெரியப்பா, சித்தப்பா உறவு? குரங்குகள் ரேடியோவைக் கண்டுபிடித்து மார்ஸ் கோடில் செய்தி அனுப்ப முடிந்ததா?

பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் கார்லைல் ஒரு முறை இரவு வானத்தைப் பார்த்துப் பெருமூச்செறிந்தார்: “எவ்வளவு பரந்த விண்வெளி… அங்கேயெல்லாமும் மனிதர்கள் இருக்கிறார்களா? இருந்தால், இன்னும் எத்தனை மடங்கு துயரம், எத்தனை மடங்கு முட்டாள்தனம்? இல்லையென்றால், அத்தனை ரியல் எஸ்டேட்டும் வெறும் வேஸ்ட் !”

இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஏதோ ஒரு வகையில் பூமி மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டு இருக்கிறது என்றுதான் நம்மையறியாமல் நினைக்கிறோம். அதனால்தான் நம்மைப் போலவே உள்ள ‘மனிதர்’களாகப் பார்த்துத் தேடுகிறோம்.

2500 வருடம் முன்பே கிரேக்கத் தத்துவ மேதை ஜெனோஃபெனஸ் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது: கழுதைகள் அனைத்தும் ஒன்று கூடித் தங்களுக்கென்று ஒரு கடவுளை உருவாக்க முடிவு செய்தால், அவர் நீண்ட காதுடன் ‘காள் காள்’ என்றுதான் கத்துவார். மாபெரும் அழுக்கு மூட்டைகளையும் அநாயாசமாகச் சுமப்பார். அவருடைய பின்னங்கால் உதை தாங்காமல் எதிரிகள் பல் உடைந்த கதைகள் நிறைய உலவும். (கடவுள் பட்டுக் கரை வேட்டி கட்டிக் கொண்டு, தன் விரோதிகளை நோக்கி சரமாரியாக அம்பு எய்யும் கதைகளை நாம் படைக்கவில்லையா?)

இந்த பூமிப் பந்து நம்முடையது என்று நினைக்கிறோம்; அதன் சிறு சிறு துண்டுகளை சொந்தம் கொண்டாடி ரத்தம் சிந்துகிறோம். ஆனால், இதன் வாசலை விட்டு வெளியே புறப்பட்டால், போவதற்கு நமக்கு இடமே இல்லை ! இதுவரை மனிதன் உருவாக்கிய ராக்கெட்டுகளிலேயே அதி வேகமானது, ஹீலியாஸ் என்பது. மணிக்கு இரண்டரை லட்சம் கிலோமீட்டரில் தலை தெறிக்க விரைகிறது. அதில் சென்றாலே நம்முடைய மிகப் பக்கத்தில் உள்ள நட்சத்திரத்துக்குப் போய்ச் சேருவதற்கு, 16,000 வருஷம் ஆகும். ஹோப்லெஸ்! இந்த லட்சணத்தில் அந்த நட்சத்திரத்துக்கு, பக்கத்து வீட்டு செண்ட்டாரி (Proxima Centauri) என்று பெயர்.

வாயேஜர் விண்கலம் 2010 வாக்கில் நம்முடைய சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிச் சென்றது. ஆனால் 2013 வரை நாசா இதை அறிவிக்கவே இல்லை. காரணம், சூரிய மண்டலத்தின் எல்லை எது என்பதே தெளிவில்லாமல் குன்ஸாகத்தான் இருக்கிறது. போகிற வழியில் வியாழனில் எட்டிப் பார்த்தது வாயேஜர். மாபெரும் எரி மலைகள் பிரமாதமாக கந்தகத்தைக் கக்கிக் கொண்டு கிடந்தன. ‘இது நாம் வாழ சரிப்படாது’ என்று அடுத்து நெப்ட்யூனுக்குப் போய், அதன் கிரகமான ட்ரைட்டனைப் பார்த்தது. சைபருக்குக் கீழே மைனஸ் 260 டிகிரியில் கறுப்பாக என்ன இழவோ ஒன்று, வானத்தில் பல மைல் உயரத்துக்குப் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தது ! எனவே, பிரபஞ்சம் என்பது நாம் இதுவரை அறிந்த எது மாதிரியும் இல்லை, கற்பனை செய்யக் கூடிய எது மாதிரியும் இல்லை என்பதே உண்மை.

வாயேஜரின் எதிர்காலம் என்ன ? சூரிய மண்டலத்துக்கு வெளியே வெற்றிடமாக இருப்பதால், கல் மண் எதனுடனும் மோதிக் கொள்கிற அபாயம் இல்லை. எனவே, அது தன் முடிவில்லாப் பயணத்தில் பல லட்சம் ஆண்டுகள் பிடிவாதமாக நின்று, கடைசியில் என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு விண்வெளிவாசியால் கண்டுபிடிக்கப்படும் சாத்தியம் உள்ளது. அந்த நாளில் நிச்சயம் இந்த பூமியில் நம் இனம் இருக்காது. அப்போது வாயேஜர் என்பது, புட்டியில் செய்தி எழுதிக் கடலில் மிதக்க விட்டதுபோல் தூரத்துக் கல்லறையிலிருந்து வந்த ஒரு புரியாத செய்தி. அவ்வளவுதான். அந்தச் செய்தியைப் பார்ப்பதற்கோ, புரிந்து கொள்வதற்கோ அந்த விண்வெளி மாந்தர்களுக்குக் கண்களோ, அல்லது வேறு உணர் கருவிகளோ இருக்கும் என்பதே நிச்சயமில்லை.

ஆனால் ஒன்று: வாயேஜர் போன்ற சிக்கலான ஒரு பொருள், இயற்கையில் தோன்றி ஏதோ ஒரு பாறையிலிருந்து விண்டு பிரிந்து வந்திருக்க முடியாது; கொஞ்சம் அறிவு உள்ள ஏதோ ஒரு பிராணிதான் இதைப் படைத்திருக்க வேண்டும் என்று ஊகிக்கும் அளவுக்கு, அவர்களுக்கு மூளை இருக்குமா? பண்டைய பூமியில் டைனசார்கள் நடுவே ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்கியிருந்தால், அந்தப் புதிய தின்பண்டத்தைக் கடித்துப் பார்க்கலாமா என்பதற்கு மேல் அவற்றின் உள் உணர்வு எதுவும் சொல்லியிருக்க முடியாது.

இன்னும் சமாதானமாகவில்லையா ? உங்கள் நாயைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு அதற்கு 5-ஜி செல்லுலார் தொழில் நுட்பம் பற்றியோ, நரேந்திர மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றியோ விளக்கிச் சொல்லப் பாருங்கள். ஆயிரக் கணக்கான வருஷமாக மனிதனுடன் கூட இருக்கும் நாயிடமே பேசிப் புரியவைக்க முடியாது என்றால், எங்கோ தொலைவில் உள்ள வேறு கிரகப் பிராணியுடன் என்ன உரையாடுவது? அவர்களுக்கு ஒரு பிஸ்கட்டை எறிந்தால் கூட சாப்பிடத் தெரியாதே !

MH87 என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு கருந்துளை இருப்பதை சமீபத்தில் கண்டறிந்து படமும் பிடித்தார்கள். எவ்வளவு தூரம் என்று கேட்காதீர்கள், பயனில்லை. ஒளி வேகத்தில் அங்கே போய்ச் சேருவதற்கே 5 கோடி வருஷம் ஆகும். ப்ச் ! அந்தத் துளையே நம் சூரியன் போல 650 கோடி மடங்கு நிறை. கற்பனையாவது செய்ய முடிகிறதா? விண்வெளி என்பது வெகு தூரத்தில், மகா பயங்கரமான ஓர் இடம்! அங்கெல்லாம் நாம் போவதாவது, அங்கிருந்து யாராவது நம்மைத் தேடி வருவதாவது? வீண் தேடல். வேறு வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள். குடியரசு தின வாழ்த்துக்கள்.

One Reply to “விண்வெளி மனிதனும், மண்வெளி மனமும்”

  1. அறிவியலை வானவியலை இப்படி நகைச்சுவையுடன் சொல்லும் உங்களை எப்படி பாராட்டுவது! இன்னொரு சுஜாதா என்று சொன்னால் கோபித்துக் கொள்வீர்களா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.