பொம்மைக்கு நரைப்பதில்லை

This entry is part 20 of 20 in the series ஹைக்கூ

பொம்மையைக் கண்டு
குதூகலிக்கவில்லை
எனக்கு நரைத்துவிட்டது


கவிஞர் எனோமோட்டோ செய்ஃபு (1732-1814)


雛の顔
我ぜひなくも
老にけり
榎本星布


ஹினானொகஒ
வரெஸெஹினகுமொ
ஒயினிகெரி


*


வியாபாரியின்
வாழ்க்கையோடு விளையாடுகிறது
விற்காத பொம்மை

கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்


*


எடுப்பவர் கையில்
வண்ணம் தொலைக்காமலும்
சிறகின் இயல்பை
மறந்த நிலையிலும்
இருந்தன பட்டாம்பூச்சிகள்
அடிவயிற்றில் மெழுகு பூசி. . .

கவிஞர் நா. முத்துக்குமார்
(பட்டாம்பூச்சி விற்பவன் கவிதையின் ஒரு பகுதி)

பொம்மைகள் குழந்தைகளுடன் பேசும், பொம்மைகளின் மொழி குழந்தைகளுக்கு மட்டும் தெரியும். மரப்பாச்சி சொன்ன கதைகளில் (எஸ். பாலபாரதி) மரப்பாச்சி பொம்மை ஷாலினியுடன் பேசுகிறது, கதையோடு உலகத்தைக் கற்றுத் தருகிறது. ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய பொம்மைகளிடம் சொல்வதற்கும் பொம்மையிடமிருந்து பெறுவதற்கும் கதைகளை வைத்திருக்கும். தமிழின் மரப்பாச்சி சொன்ன கதைகளாகட்டும் டிஸ்னியின் ‘டாய் ஸ்டோரி’யாகட்டும் குழந்தைகளின் உலகத்தைப் பொம்மைகள் நிறைக்கின்றன, குழந்தைகளுடன் உரையாடுகின்றன.

குழந்தைப் பருவத்தைக் கடந்த பின் உண்டாகும் முதிர்ச்சி பொம்மைகளின் மொழியை மறக்கச் செய்கிறது. பொம்மைகள் பேசாது என்று புரிந்துகொள்ளும் பருவத்தில், அவற்றின் மொழியாகிய கவித்துவத்தை இழந்து பொம்மைகளிடமிருந்து விலகிவிடுகிறோம். பொம்மைகளிடமிருந்து விலகினாலும் மனிதனுக்குப் பொம்மைகள் நெருக்கமாக இருக்கின்றன. பொம்மைகளைக் காணும்போது கவிஞர்கள் கவிதைகள் எழுதுகின்றனர்.

‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ (திரைப்படம்: பொம்மை) என முதிர்ந்த மனங்கள் திரைப்பாடலில் தத்துவம் பேசுகின்றன. தன்னுடைய வாழ்க்கைப் போராட்டத்தை ஒரு பெண் ‘புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக’ (திரைப்படம்: இரு கோடுகள்) எனக் கொலுவில் இருக்கும் ராதா – கிருஷ்ணன் பொம்மைகளை முன்னிறுத்திப் பாடுகிறாள். மனிதன் மனமுதிர்ச்சி பெற்றாலும், கவிதைகளைத் தருவதற்காகப் பொம்மைகள் அவனுடன் பயணம் செய்கின்றன.

இங்கே தமிழ்த் திரையில், கொலுவில் வைக்கப்பட்ட ராதா – கிருஷ்ணன் பொம்மைகளைப் பார்க்கும் ஒரு கதாபாத்திரம், அவற்றைத் தன் வாழ்க்கையுடன் இணைத்துப் பேசுகிறது. அங்கே, ஜப்பானில் ‘ஹினா மட்சுரி’ என்னும் பொம்மைத் திருவிழாவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளைப் பார்த்த ஒரு பௌத்தப் பெண் துறவி ஹைக்கூ எழுதுகிறார்.

ஹினா மட்சுரி – பொம்மைத் திருவிழா. இது மார்ச் 3ஆம் தேதி ஜப்பான் முழுதும் கொண்டாடப்படும். கொலுப் படிக்கட்டுகளைப் போலவே பொம்மைப் படிக்கட்டுகளில் அடுக்குவதற்கென்றே விழாக்கால உடையணிந்த ஜப்பானியப் பொம்மைகள் கிடைக்கும். பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரச குடும்பத்தின் பெண் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், அவருக்குத் திருமணம் செய்துகொள்ளாத வழக்கம் இருந்திருக்கிறது. அதன்படி, அந்தக் காலகட்டத்தில் பேரரசி மெய்ஷோ ஆட்சிக்கு வந்தபோது, அவருடைய தாய் அவருக்குப் பொம்மைத் திருமணம் நடத்தி மகிழ்ந்தார் எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர், ஹினா மட்சுரி அதிகாரபூர்வமாக ஜப்பானின் திருவிழாக்களுள் ஒன்றாக மாறியது.

ஹினா மட்சுரி நாளில் அடுக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை பெண் துறவியும் ஹைக்கூ கவிஞருமான செய்ஃபு பார்த்தார். பொம்மைகள் அவரைக் குதூகலப்படுத்தவில்லை. ஆனால், கவிதை எழுதத் தூண்டுகின்றன. தான் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டதைப் பொம்மைகளை முன்னிறுத்தி எழுதுகின்றார். ஆனால், இன்னொரு பார்வையில் குழந்தைமையிலிருந்து அவர் விலகியதன் காரணம் துறவு வாழ்க்கையாகவும் இருக்கலாம். துறவு வாழ்க்கை மேற்கொள்ளாதவராக செய்ஃபு இருந்திருப்பின், ஹினா மட்சுரிப் பொம்மைகள் அவருக்குத் தன் குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தியிருக்கலாம். மாறாக, அவை மனமுதிர்ச்சியைப் பேச வைத்தன. துறவு வாழ்க்கை தருகின்ற பார்வைக் கோணங்களும், துறவல்லாத வாழ்க்கை தருகின்ற கோணங்களும் வெவ்வேறு. இங்கு கவிஞருக்குத் துறவும், வயதும் சேர்ந்து அளித்த பார்வை தனக்கு வயதாகிவிட்டதைச் சொன்னது அல்லது தன்னுடைய மனமுதிர்ச்சியைச் சொன்னது.

ஹைக்கூவின் முதல் அடி, 雛の顔 – ஹினானொகஒ. ஜப்பானிய ஒலிப்பில் ஒவ்வோர் எழுத்தும் ஒரு குறுகிய ஒலியே. நீண்டு ஒலிக்கவேண்டுமெனில் அதனுடன் இன்னொரு உயிரெழுத்து சேரும். ひな என்பதன் எழுத்துருக்களின்படி ஒலிப்பு ‘ஹின’ என்றாலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் ‘ஹினா’ என எழுதுவதே வழக்கமாகிவிட்டது. அதன்படி முதல் அடியின் முதல் காஞ்சி 雛, இதன் ஹிராகனா வடிவம் ひ ஹி, な ன, ஹினா, பொம்மை. அடுத்த எழுத்து ஹிராகனா の னொ, ‘இன்’. ஹினானொ – பொம்மையின். அடுத்த சொல்லின் காஞ்சி 顔, இதன் ஹிராகனா வடிவம் か க, お ஒ, கஒ, முகம்.

雛の顔 – ひなのかお – பொம்மையின் முகம்.

ஹைக்கூவின் இரண்டாம் அடி 我ぜひなくも – வரெஸெஹினகுமொ. முதலாவதாக உள்ள எழுத்துரு காஞ்சி, 我, இது わ வ, れ ரெ, வரெ, எனக்கு. வரெவை எனக்கு என்னும் அளவில் சுருக்கவும் முடியாது. தன்னாளுமை, தன்னலம், தான் போன்ற பொருள்களும் வரெவுக்கு உண்டு. அடுத்தடுத்த சொற்கள் ஹிராகனாவில் எழுதப்பட்டுள்ளன. இதற்கான காஞ்சியும் உண்டெனினும் இவை இங்கு ஹிராகனாவில் உள்ளன. ぜ ஸெ (ze), ひ ஹி, ஸெஹி – 是非, தவிர்க்க இயலாத நிலை, வேறு வழி. な ன, く கு, னகு – இன்றி. も மொ – உம். ஸெஹினகுமொ – வேறு வழியின்றி, தவிர்க்க இயலாமல்.

我ぜひなくも வரெஸெஹினகுமொ – நான் வேறு வழியின்றி.

ஹைக்கூவின் மூன்றாம் அடி 老にけり – ஒயினிகெரி. முதலாம் எழுத்து காஞ்சி 老, இது お ஒ. இதனுடன் い இ சேர்ந்த 老い (ஒயி) என்பது முதுமையடைதல் என்னும் வினை (அடிவடிவம்: 老いる – ஒயிரு). இது に னி, け கெ, り ரி எனச் சேர்ந்து おいにけり – ஒயினிகெரி – வயதாகிவிட்டது எனப் பொருள் தருகின்றது.

老にけり – ஒயினிகெரி – வயதாகிவிட்டது.

ஹைக்கூவைச் சொல்லுக்குச் சொல் மொழி மாற்றினால்,

பொம்மையின் முகம்
நான் வேறு வழியின்றி
வயதாகிவிட்டது

ஹினா மட்சுரியின் கலாசாரப் பின்னணியையும், கவிஞரின் துறவு வாழ்க்கையையும் கவிதையையும் உள்வாங்கிய மொழிமாற்றமெனில்,

பொம்மையைக் கண்டு
குதூகலிக்கவில்லை
எனக்கு நரைத்துவிட்டது

இன்னொரு கோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஹினா மட்சுரிக்காகப் பெட்டியில் இருந்து எடுத்துத் துடைக்கப்பட்டுப் படிகளில் அடுக்கப்படும் பொம்மை முகங்களுக்கு வயதாவதில்லை, ஆனால் கவிஞருக்கு வயதாகிவிட்டது என்றும் மொழியாக்கம் செய்யலாம்.

பொம்மையின் முகம் மாறவில்லை
வேறு வழியின்றி
நான் முதுமையடைந்தேன்

ஹைக்கூ

பாயில் நிழல்

Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.