பிள்ளையிழப்பு

This entry is part 17 of 16 in the series ஹைக்கூ

この秋は
膝に子のなき
月見かな

இலையுதிர்காலத்தில்
என்னுடன் நிலவைக் காண
மகனில்லை

கவிஞர் உஜிமா ஒனிட்சுரா (1660 – 1738)

கொனோஅகிவா
ஹிஸானிகோனொனகி
ட்சுகிமிகன

kono aki wa / hiza ni ko no naki / tsukimi kana

மைந்தவோ எனும்; மா மகனே எனும்;
எந்தையோ எனும்; என் உயிரே எனும்;
உந்தினேன் உனை; நான் உளெனே எனும்;
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான்.

கம்பராமாயணத்தில் இந்திரஜித் போரில் வீழ்ந்த பின், பிள்ளையிழந்த துயரத்தால் இராவணன் அடையும் வேதனைகளையும் அவனுடைய புலம்பலையும் விருத்தத்தில் வடிக்கிறார். அதில் ஒரு பகுதியாக, // மைந்தனெ எனக் கதறுவான், பெருமை பெற்ற மகனே எனக் கூவுவான், என் தந்தையே என்பான், என் உயிரே எனச் சொல்வான், உன்னைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் இன்னும் இருக்கிறேனே எனத் தன்னைத் தானே நொந்துகொள்வான், வெந்த புண்ணின் மீது வேல் பாய்ச்சப்பட்டது போன்ற துயரத்தை அனுபவிப்பான் // என்னும் பொருளுடைய வரிகளைப் படிக்கையில் அரக்கர்களின் அரசனாக இருப்பினும் மகனை இழப்பின் அத்துயரத்திலிருந்து ஒரு தந்தை தப்ப முடியாது என்பது தெளிவு.

// இந்த உலகிலேயே மிகவும் கனமானது எது தெரியுமா? தந்தையின் தோளில் மகனின் சடலம் // – இது ‘ஷோலே’ திரைப்படத்தில் ஒரு முதியவரின் மகன் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு சடலம் குதிரையில் அனுப்பப்படும் காட்சியில் ஒலிக்கும் வசனம். // ஏ துனியாமேன் சப்சே படா போஜ் கியா ஹை? பாப்கே கந்தே பர் பேட்டே கா ஜனாஸா // என ஒலிக்கும் சலீம் – ஜாவேதின் அந்த வசனம் பிள்ளையிழப்பின் துயரத்தைக் காட்சியிலும் எழுத்திலும் காவியத்தன்மைக்கு நிகராக வடிக்கப்பட்டது. 

// எல்லா தூக்கமாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால் நான் எப்படித் தூங்குவது? // – இது கவிஞர் கபிலனின் கவிதையின் ஒரு அடி. தன்னுடைய மகளை இழந்த பின் பிள்ளையிழப்பின் துயரத்தில் வீழ்ந்த கபிலன் தான் பகுத்தறிவாளனாக இருப்பினும், தன் மகளைக் கடவுளாக நினைத்ததைக் குறிப்பிடும் வரிகள் ஒரு தந்தையின் மனத்துயரத்தின் உச்சம், // பகுத்தறிவாளன் ஒரு கடவுளைப் புதைத்துவிட்டான் // என்னும் வரி.

மன்னனோ, முதியவரோ, கவிஞனோ தான் வாழும் காலத்தில் பிள்ளையிழப்பு நேர்ந்தால், அத்துயரம் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடியது அல்ல. அது இராமாயணத்திலும், திரைப்படத்திலும், நிஜவாழ்விலும் எழுத்தாகப் பதிவானதைப் போல, ஒரு ஹைக்கூவிலும் பதிவாகியுள்ளது.

ஜப்பானின் கிழக்குப் பகுதிக்கு பாஷோ என்றால், மேற்குப் பகுதிக்கு ஒனிட்சுரா என்பது ஜப்பானிய ஹைக்கூ ஆர்வலர்களின் பார்வை. 

ஒனிட்சுரா ஹைக்கூவை விரும்பி ஏற்றவர். ‘சாகே’ மதுவைத் தயாரித்து விற்கும் பணம்படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர், இளம் வயதிலேயே கவிதையில் தனக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ரெங்கா, ஹொக்கு எனக் கவிதை வடிவங்கள் அவருடைய சுற்றுவட்டாரத்தில் புகழ்பெற்றிருந்த காலகட்டத்தில் கவிதை உலகிற்குள் நுழைந்தார். 

‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது’ என்னும் வசனம் ஒனிட்சுராவுக்கும் பொருந்தும். ஒனிட்சுரா வாள்வீச்சு கற்றவர், சாமுராய் வீரர், சாமுராயாக ஒரு குடும்பத்தின் மெய்க்காவலானகவும் சேவை செய்தவர். ‘ஃபுஜிவாரா முனெச்சிகா’ என்பது அவருடைய அந்த ‘இன்னொரு’ பெயர். 

சாமுராய்களின் உலகில் ஃபுஜிவாரா முனெச்சிகாவாகவும், ஹைக்கூ உலகில் உஜிமா ஒனிட்சுராவாகவும் அறியப்படும் இவர் ஹைக்கூ பள்ளியில் சேர்ந்த கதை சுவாரசியமானது. சாகே மதுவை விரும்பும் கவிஞர் இகெடா ஒனிட்சுராவின் பகுதிக்கு வந்து மதுவருந்த, அது பிடித்துப் போக, அங்கேயே தங்கி ஒரு பள்ளியைத் தொடங்குகிறார். ஒனிட்சுராவும் அவருடைய நண்பர்களும் அந்தப் பள்ளியில் கவிதை கற்கச் சேர்ந்தனர். தன்னுடைய பதினெட்டாவது வயதில் ஒரு ஹைக்கூ தொகுப்பை அவர் வெளியிடுகையில், ‘பணக்கார இளைஞர்கள் கவிதை எழுதி வெளியிடுவது வியப்பாக உள்ளது’ என்றார்களாம். 

ஒனிட்சுராவுக்கு இருந்த தேடல்கள் அவர் வாழ்ந்த சமூகத்துக்கு வித்தியாசமானவை. தன்னுடைய குடும்பத் தொழிலான சாகே தயாரிப்பில் முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல், சாமுராயாகவும் கவிஞனாகவும் தன்னை வெளிப்படுத்தினார்.

// இலையுதிர்காலத்தில்

மெல்ல உயர்கிறது

ஃபூஜி மலை // இந்த ஹைக்கூவும் ஒனிட்சுராவுக்குப் புகழ் சேர்த்தது.

தன்னுடைய முப்பத்து ஐந்தாம் வயதில் மகனை இழக்கிறார். ஆறு வயது மகன் நோய்வாய்ப்பட்டு இறப்பதைத் தந்தையாக ஏற்க இயலவில்லை. தன் மகனின் இழப்பைக் கவிதையில் வடித்து இலக்கியமாக்குகிறார்.

// பூக்களைப் 

புதைத்தாலும்

செடி வளர்ந்து பூக்குமா // என மகனைப் புதைத்த பின் கேட்கிறார்.

சித்திரம் : வர்த்தமான்

ஒன்றைப் பார்ப்பதையும் கொண்டாட்டமாக்குவது ஜப்பானிய கலாசாரம். காண்பதில் மகிழ்வது அனைத்து சமூகத்துக்கும் உள்ள பொதுத்தன்மை, கண்காட்சி முதல் திரையரங்கம் வரையில் அனைத்தும் காண்பவைதான். ஆனால், காண்பதை ஒரு பெயராகவே திருவிழாவுக்கு இட்டு அதைக் கடைப்பிடிப்பது ஜப்பானில்தான். ஜப்பானிய மொழியில் மி என்னும் சொல் காண்பதைக் குறிக்கும், ‘ஹனா மி’ என்பது மலர்களைப் பார்க்கும் திருவிழா. அந்தந்த பகுதியில் செர்ரி மலர்கள் பூப்பதற்கு ஏற்ப ‘ஹனாமி’ திருவிழா கொண்டாடப்படுகிறது. மலரைப் ரசிப்பது பொதுத்தன்மை, அதை ‘ஹனாமி’ எனப் பெயரிட்டுத் திருவிழாவாக்கிக் குறிப்பிட்ட மாதங்களில் ரசிப்பது ஜப்பானியத் தன்மை. 

போலவே, நிலவை ரசிப்பது ‘ட்சுகி மி’ எனப்படுகிறது. ட்சுகி – நிலவு, மி – காண்பது. 

இப்படியான ஒரு நிலவு காணும் பொழுதில் தன் மடியில் மகன் இல்லாத துயரம் ஒனிட்சுராவின் ஹைக்கூவாக வெளிப்படுகிறது.

ஹைக்கூவின் முதல் அடி:

この秋は, கொனொ அகி வா. ஜப்பானிய மொழியின் அடிப்படைப் பயிற்சி தொடங்கும்போது கொனொ – சொனொ வைக் கற்றுத் தருவர். கொனொ என்பது அருகில் இருப்பதையும், சொனொ என்பது தொலைவில் இருப்பதையும் குறிக்கும். சுருக்கமாக, கொனொ – இங்கு, இந்த, சொனொ – அங்கு, அந்த. こ கொ, の னொ. 秋 – அகி – இலையுதிர் காலம், இந்த காஞ்சியைப் பிரித்து ஹிராகனாவில் எழுதினால் あ அ, きகி. は வா அல்லது வ என்பது வேற்றுமை உருபு ‘இல்’

この秋は –  このあきは – கொனோஅகிவா – இந்த இலையுதிர்காலத்தில்

ஹைக்கூவின் இரண்டாம் அடி:

膝に子のなき, ஹிஸானிகோனொனகி. 膝 இந்த காஞ்சியை விரித்து ஹிராகனாவில் எழுதினால் ひ ஹி, ざ ஸ (za). ஹிஸ என்பது மடியைக் குறிக்கும். に னி, இதுவும் வேற்றுமை உருபு ‘இல்’. ஹிஸனி – மடியில். 子 இந்த காஞ்சியின் ஹிராகனா வடிவமும் こ கொ’தான். மேலே குறிப்பிட்ட சொல் கொனொவில் வரும் கொ’வும், இந்த கொ’வும் ஹிராகனாவில் ஒரே வடிவம் கொண்டவை, கொ (அல்லது கோ) தனியாக ஒலிக்கையிலும், இப்படிக் காஞ்சி 子 வடிவமாகி கொ என ஒலிக்கையிலும் அதன் பொருள் குழந்தை, மழலை, குட்டி. 子の கொனொ என ஒலிக்கும் இது ‘குழந்தையானது’ எனப் பொருள்தரும். な னき கி, னகி – இல்லை.

膝に子のなき – ひざにこのなき – ஹிஸனிகொனொனகி – மடியில் குழந்தை இல்லை.

ஹைக்கூவின் மூன்றாம் அடி:

月見かな – ட்சுகிமிகன. 月 இந்த காஞ்சி நிலவைக் குறிக்கும். つ ட்சு, き கி, ட்சுகி – நிலா. 見  み மி என ஒலிக்கும் இக்காஞ்சி பார்வை, நோக்கம், கருத்து, எதிர்னோக்குதல் எனப் பலவகையில் பார்த்தலைக் குறிக்கும். மிரூ என்பது வினைச்சொல்லாகவும் மி என்பது பெயரும் வினையும் இணைந்த சொல்லாகவும் பொருள்படும். 月見 ட்சுகிமி – நிலவைப் பார்த்தல் அல்லது நிலவைப் பார்க்க. か க, な ன – கன என்பது ஹைக்கூவில் இடம்பெறும் அசைச்சொல். 

月見かな –   つきみかな – ட்சுகிமிகன – நிலவைப் பார்க்க

ஹைக்கூ:
この秋は
膝に子のなき
月見かな

கொனோஅகிவா
ஹிஸானிகோனொனகி
ட்சுகிமிகன

வரிக்கு வரி மொழிமாற்றம்:
இந்த இலையுதிர்காலத்தில்
மடியில் மழலை இல்லை
நிலவைக் காணா

ஹைக்கூவை உள்வாங்கிய மொழிமாற்றம்:
இலையுதிர்காலத்து
நிலவைக் காண என்னுடன்
மகனில்லை

இராமாயணத்தில் இராவணனும், ஷோலேயில் சாச்சாவும், நம் காலத்தில் கவிஞர் கபிலனும் பிள்ளையிழப்புத் துயரத்தைக் கடந்ததுபோல், உஜிமா ஒனிட்சுராவும் கடந்திருக்கிறார், அதை ஹைக்கூவிலும் பதிவுசெய்திருக்கிறார்.

ஹைக்கூ

மரமேறும் தவளை தனிமையும் அழைப்பொலியும்

Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.