- ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை
- ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2
- புறாவின் அழைப்பு
- காகமும் அழகு
- வாளைத் துறந்த சாமுராய்
- நடவுப் பாடல்
- அறுந்த பட்டம்
- கிளைக்கு உயரும் மலர்
- படுக்கை வரையில் பனி
- பிள்ளையின்மை
- முதற்பனி
- தலைக்குடைகள்
- உடைபட்ட ஊன்றுகோல்
- மரமேறும் தவளை
- பிள்ளையிழப்பு
- தனிமையும் அழைப்பொலியும்
- தும்பியின் பிம்பம்
- மரமேந்தும் மழைத்துளி
- பாயில் நிழல்
名月や
畳の上に
松の影
めいげつや たたみのうえに まつのかげ
மெயிகெட்சுயா
ததாமினொஉயேனி
மட்சுனொககெ
அறுவடை நிலவு
பாயின் மீது
பைன் மரத்தின் நிழல்
கவிஞர் தகராய் கிககு (1661-1707)
பௌர்ணமியாகவும், பிறையாகவும் ஒளிரும் நிலா, கவிதைகள் தொடங்கிய நாள் முதலாக இன்று வரையில் கவிஞர்களுடன் பயணம் செய்கிறது. நாளையும் அது கவிதைகளில் இருக்கும்.
‘மௌனமாய் நாம்
கண்கலந்திருந்தபோது
நம்
நிழல்கள் பேசிக் கொண்ட
சங்கதி என்னவாக இருக்கும்?’
ப்ரியன்
‘. . .
But my lazy little shadow, like an errant sleepyhead,
had stayed at home behind me and was fast asleep in bed’
Robert Louis Stevenson
‘. . .
ஆனால் என் சோம்பேறி நிழல், தூங்குமூஞ்சியாக
வீட்டில் தங்கிப் படுக்கையில் ஆழ்ந்து உறங்கியது’
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
ஒளியும் உருவும் இருக்கும் வரை நிழலும் இருக்கும் என்பது இயல்பியல். நிழல் இருக்கும் வரையில் நிழலைக் காட்சிப்படுத்தும் கவிதைகளும் இருக்கும்.
வெயிலில் நிழல் ஓய்விடம் என்றால், இரவில் நிழல் ஓவியம். சாலையில் வரிசையாக இருக்கும் மின்விளக்கொளியில் நடக்கையில் நம்முடைய நிழல் முன்னும் பின்னும் குறுகி நீண்டு, குறுகி நீண்டு விளையாட்டுக் காட்டும். முழு நிலவும் பிறையுமாக வளர்வதும் தேய்வதும் அறிவியலும் அழகியலும் கைகுலுக்கும் அற்புதம்.
ஓவியங்கள் சுவர்களை அலங்கரிப்பது போல, விளக்கொளி வரையும் நிழலோவியங்கள் சுவர்களை இப்போது அலங்கரிக்கின்றன. விரல்கள் உருவாக்கும் நிழல் உருவங்கள் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் ஈர்க்கும்.
இலக்கியமும் திரையும் நிழலைத் தலைப்பில் கொண்டவை பலவுண்டு. நிழல் முற்றத்து நினைவுகள், நிழல்வெளிக் கதைகள், நிழலின் தனிமை, நிலா நிழல், நிழல்கள், நிழல் நிஜமாகிறது எனத் தொடர்கின்றன.
நிலவைப் பிடித்துப் பார்ப்பதும் நமக்குப் பொழுதுபோக்கு. குளத்தில் நிலவைச் சிறைப்படுத்துவோம், நீரைக் கையில் எடுத்து நிலவை அதில் பிடிப்போம், எட்ட நின்று காமிராவின் கோணத்தைச் சரிசெய்து நிலவைக் கையில் பிடித்தபடிப் படமெடுப்போம். நிலவைப் பிடிக்கும் விளையாட்டும் தொடரும்.
பாஷோவின் சீடர் தகராய் கிககு நிலவொளியைத் தன் வீட்டுக்குள் அழைத்துப் பாயில் படுக்கவைக்கிறார்.
ததாமி – பாய். ஜப்பானியர்களின் மரபுடன் கலந்தது ததாமி. இப்போதும் அறைகளின் அளவுகள் ததாமியின் எண்ணிக்கையிலும் சொல்லப்படுகின்றன. ‘ஆறு ததாமிகள் அளவுள்ள படுக்கையறை’, ‘நான்கரை ததாமிகள் அளவுள்ள வரவேற்பறை’ என்னும் விளம்பரங்களைக் காணலாம்.
கூடுதல் தகவலாக, முன்னொரு காலத்தில் ஜப்பானில் செல்வந்தர்களின் அடையாளமாக ததாமி இருந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டின் இறுதியில் அனைவரும் பயன்படுத்தும் அறைக்கலனாக அது புழக்கத்துக்கு வந்தது. கவிஞர் தகராய் கிககுவின் காலத்தில் ததாமி பரவலாகிக் கொண்டிருந்தது.

ஒளிவெள்ளம் அறைக்குள் நிறைவது இயல்பு. நிறையும் ஒளிவெள்ளம் உருவங்களால் தடைபட்டு நிழலாகி அறைக்குள் நிறைவது ஓவியம். வடிவச்சிதைவில் வடிவத்தைத் தேடும் மனம், அதனுடைய கற்பனைக்கு ஏற்ப நிழலை ஓவியமாக்கி உள்வாங்கும். சில நேரங்களில் ஒளியைத் தடுத்த உருவம், உருவங்கள், ஒளியின் வீச்சு, தூரம் இவற்றுக்கு ஏற்ப முற்றிலும் மாறுபட்ட உருவாகவும் நிழல் மாறும், சில நேரங்களில் உருவத்தை வடிவம் மாறாமலும் நிழலாகத் தரும். இந்த ஹைக்கூவில் பைன் மரத்தின் நிழல், வடிவச் சிதைவின்றி பாயில் விழுகின்றது.
ததாமிகள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. தகராய் கிககுவின் காலகட்டத்தில் இயற்கைப் பொருள்களால் ஆன ததாமி இளம்பச்சை நிறமாகவும் பின்னர் வெளுத்து வெளிர் பழுப்பு நிறமாகவும் மாறும். கவிஞரின் ததாமி வெண்மையாக இருந்திருக்கக்கூடும்.
வெண்மையான பாயில் பௌர்ணமி நிலவொளி பாய்ந்து அதனை மேலும் வெண்மையாகக் காட்ட, அதன் மீது விழுகின்ற பைன் மர நிழல் அந்த வெண்மைக்கு மாறுபட்டுக் கருமை நிறத்தில் பாயின் மீது ஓவியம் வரைகிறது.
கவிதைகள் எப்போதும் எதையும் முற்றாகச் சொல்லி முடித்து வாசகனின் கற்பனைக்குத் தடை போடுவதில்லை. அந்தக் கவிதை சொல்லாமல் விட்டதை வாசகன் அவனுடைய பார்வையில் நிரப்பிக்கொள்வது நிகழும். இந்த ஹைக்கூவில் கிககு சொல்லாமல் விட்டது: பாயில் அமரும் விருந்தாளி.
பதினேழாம் நூற்றாண்டுக்கு முன் ததாமி பணக்காரர்களின் விரிப்பாக இருந்தது. அது உயர்ந்த தகுதியுள்ளோர் இல்லங்களின் தரைகளை அலங்கரித்தது. வீட்டின் வரவேற்பறையில் பணம் படைத்தோர் ததாமியில் அமர்ந்தனர். இந்த நோக்கில் நிலவொளியும் பைன் மரமும் சேர்ந்து உருவாக்கும் நிழல் கவிஞரின் ததாமியில் விழுந்து ஓவியத்தை உண்டாக்கும் காட்சியின், நிலவு நிழல் வடிவில் வந்ததைச் சொல்லும் காட்சியின், பின் இணைப்பாக உயர்ந்த தகுதியுள்ள நிலவொளி நிழலாகக் கவிஞர் இல்லத் ததாமியில் அமர்ந்தது / உறங்கியது என்றும் பொருள் கொள்ளலாம். இது ஒரு கூடுதல் வாசிப்பு மட்டும்.
ஹைக்கூவின் முதல் அடி, அறுவடை நிலவு. இது இரண்டு காஞ்சி எழுத்துகளையும் ஒரு ஹிராகனா அசைச்சொல்லையும் கொண்ட அடி. 名月や முதல் இரண்டு காஞ்சிகளும் சேர்ந்து சொல்லும் வார்த்தை ‘அறுவடை நிலவு’; குறிப்பாக ஜப்பானிய ‘பழைய’ நாட்காட்டியின் எட்டாவது மாதத்தின் பதினைந்தாம் நாள் இரவின் முழுநிலவு. மெயிகெட்சு என்பது அதன் ஒலிப்பு. இதில் கெட்சு தனியாக நிலவைக் குறிக்கும், மெயிகெட்சு எனச் சேர்ந்து ஒலித்தால், மேற்சொன்ன எட்டாவது மாதத்தின் பதினைந்தாம் நாளைக் குறிக்கும். இது இலையுதிர்காலத்து முழுநிலவு; ஆங்கிலத்தில் ஏறத்தாழ ‘harvest moon’. இது அறுவடைக் காலத்தை ஒட்டி வருகிறது.
மெயிகெட்சுவைத் தமிழில் சொல்வதென்றால், ‘அறுவடை நிலவு’.
名 இது தனியாக மெ め, யி い.
月 இது தனியாக கெ げ, ட்சு つ.
や இது ஹைக்கூ யாப்பில் ‘கிரேஜி’ என்னும் வெட்டுச்சொல்
名月や めいげつや மெயிகெட்சுயா (எழுத்தெண்ணிக்கையில் ‘ட்சு’ ஓரெழுத்தாகக் கொள்ளப்படும்). முக்கியமாக 名月 இது ஹைக்கூவில் பருவகாலத்தைக் குறிக்கும் முக்கியமான வார்த்தை, ‘கிகோ’ வார்த்தை என ஜப்பானிய மொழியில் சொல்லப்படும்.
இரண்டாவது அடி ‘பாயின் மீது’. இங்கு ‘மீது’ என்பது ஜப்பானிய மொழியில் ‘மீதில்’ என்ற வடிவில் வருகிறது. 畳の上に, இதில் முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் காஞ்சி, மற்ற இரண்டும் ஹிராகனா. 畳 இந்த காஞ்சியின் ஒலிப்பு ததமி た த, た த, み மி. ஜப்பானிய ஒலிப்பில் இது ‘ததமி’; தமிழில் ‘ததாமி’ என்றே வழங்குவதால் அதையே இங்கு பயன்படுத்துகிறோம். நொ の, இது வேற்றுமை உருபு, ‘இன்’. 畳の – たたみの ததாமினொ – பாயின். 上 இந்த காஞ்சியின் ஒலிப்பு உயே う உ, え யே. அடுத்தது に னி. 上に உயேனி, மீது அல்லது மீதில். உயே – うえ, நி – に.
畳 இது தனியாக த た, த た, மி み.
の நொ
上 இது தனியாக உ う, யேえ
に நி
畳の上に – たたみのうえに – ததாமினொஉயேனி – பாயின் மீது.
மூன்றாம் அடி, பைன் மரத்தின் நிழல் 松の影 இரண்டு காஞ்சிகளையும் ஒரு ஹிராகனாவையும் கொண்ட அடி. 松 இந்த காஞ்சி இங்கு மட்சு まつ என ஒலிக்கும். ま ம, つ ட்சு. மட்சு – பைன் மரம். の நொ என்பது இன் எனும் வேற்றுமை உருபு எனப் பார்த்தோம். மட்சுனொ – பைன் மரத்தின். 影 இந்த காஞ்சி ககெ என ஒலிக்கும். か க, げ கெ (ge), ககெ – நிழல்.
名月や
畳の上に
松の影
めいげつや
たたみのうえに
まつのかげ
மெயிகெட்சுயா
ததாமினொஉயேனி
மட்சுனொககெ
அறுவடை நிலவு
பாயின் மீது
பைன் மரத்தின் நிழல்
பௌர்ணமி
பாயின் மீது
மர நிழல்
இப்படியும் மொழிமாற்றம் செய்யலாம், ஆனால் ஜப்பானிய ஹைக்கூவிலிருந்து மொழிமாற்றம் செய்த தோற்றத்தைத் தராது. இதில் பைன் மரம், பருவச்சொல் ஆகியவை விடுபடுகின்றன.
Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
