- ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை
- ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2
- புறாவின் அழைப்பு
- காகமும் அழகு
- வாளைத் துறந்த சாமுராய்
- நடவுப் பாடல்
- அறுந்த பட்டம்
- கிளைக்கு உயரும் மலர்
- படுக்கை வரையில் பனி
- பிள்ளையின்மை
- முதற்பனி
- தலைக்குடைகள்
- உடைபட்ட ஊன்றுகோல்
- மரமேறும் தவளை
- பிள்ளையிழப்பு
- தனிமையும் அழைப்பொலியும்
- தும்பியின் பிம்பம்
行水に
おのが影追う
蜻蛉哉
யுகுமிசுனி
ஓநொககாகெஓவு
தோன்போகன
நீர்த்தொட்டியில்
தன் பிம்பத்தைத் துரத்தும்
தும்பி
கவிஞர்: சியோ நி (1703 – 75)
‘அஞ்சிறைத்தும்பி’ என்னும் வார்த்தையைக் கடக்காத தமிழரைக் காண்பது அரிது. திருவிளையாடல் வசனத்திலோ, பாடத்திட்டத்திலோ, வேறு ஏதாவது இணைய உலாவல்களிலோ இறையனாரின் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் ‘தும்பி’யைத் தமிழர் கடந்திருப்பர். இறையனார் தன் குறுந்தொகையில் சொன்ன தும்பி வண்டினத்தைச் (Beetle) சேர்ந்ததா? தட்டாரப்பூச்சி (Dragonfly) இனத்தைச் சேர்ந்ததா? என்பது இலக்கிய ஆய்வு வகையில் சேராதது, ஆகையால் ‘தும்பி’ என்னும் சொல்லின் பயன்பாடு குறுந்தொகையில் காணப்படுகிறது என்ற அளவில், ஜப்பானியக் கவிஞர் சியோ நியின் ஹைக்கூவில் 蜻蛉 (とんぼ) ‘தோன்போ’ – ‘தும்பி’ என்னும் சொல்லின் பயன்பாட்டைக் காண்கிறோம்.
குறுந்தொகைக் காலத்தோடு தும்பிகளின் இலக்கியப் பயணம் முடிந்துவிடவில்லை. கவிஞர் அறிவுமதியின் ‘மழைத் தும்பிகள்’, கதிர் பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டுத் தாழப்பறக்கும் தட்டான்கள்’ எனக் கவிதைத் தொகுப்புகளில் தும்பியைப் பதிவு செய்து நவீன இலக்கியத்திலும் பறக்கவிடுகின்றன. பாலகுமாரனின் ‘தட்டாரப்பூச்சி’ சிறுகதையில் தன்னுடைய சக்களத்தியைத் தட்டாரப்பூச்சி என அழைக்கும் மனநிலை மயங்கிய பெண்ணைக் கண்டோம்.
// அடிக்கடி
அந்தரத்தில் நின்றே
(என்னஅஅ அழுத்தமாய்ச்)
சிறகடிக்கிறது தும்பி!
ஏன்?
என் வாசகர்களுக்கு
நான் சொல்ல வேண்டியதே இல்லை
என்கிறது அது! //
- கவிஞர் தேவதேவன்
மழைக்காலத் தட்டாரப்பூச்சிகளின் இருப்பு தமிழிலக்கியத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவை, ஜப்பானிய மொழியில் ‘தோன்போ’ (Dragonfly) என வழங்கப்பட்டு, இலையுதிர்காலத்தின் முன்பகுதியைக் குறிப்பால் உணர்த்தும் உயிரினமாக ஹைக்கூக்களில் பயன்பாட்டில் உள்ளன. ஹைக்கூக்கள் பருவகாலத்தைப் பாடுவன ஆதலால், தட்டாரப்பூச்சிகள் பறக்கும் ஹைக்கூக்கள் இலையுதிர்காலத்தைக் குறிப்பவை. கவிஞர் சியோ நியின் இந்த ஹைக்கூவும் இலையுதிர்காலத்தின் அழகைப் பாடுகிறது.
கவிஞர் சியோ நி, ஹைக்கூ எழுதவந்த பெண்பாற் கவிஞர்களின் முன்னோடி. எழுத்தோவியர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தது அவருக்குத் தன் ஏழாம் வயதில் ஹைக்கூ எழுதும் திறனைத் தந்தது. பன்னிரண்டாம் வயதில் மட்சுவோ பாஷோவிடம் பயின்ற கவிஞர்களிடம் பயிற்சியைத் தொடங்கினார். தன்னுடைய பதினேழாம் வயதில் ஜப்பானின் அனைத்து பகுதிகளையும் அவர் புகழ் எட்டியது. ஹைக்கூ உலகில் தவிர்க்க இயலாத இடம்பெற்றார். பாஷோவின் ஹைக்கூக்களின் சாயல் மட்டுமல்லாமல், பாஷோவின் எளிமையும் தன்னடக்கமும்கூட சியோ நியிடம் இருந்ததாகச் சொல்வர். இயற்கையையும் மனித வாழ்க்கையும் பாடிய அவருடைய கவிதைகளுள் ஒன்று, ‘தும்பியின் பிம்பம்’.
தும்பியின் பிம்பம் என்னும் இந்த ஹைக்கூவில் உள்ளதைப் போல் பருவகாலத்தைச் சுட்டும் ஹைக்கூக்களின் கூறுகளைத் தொல்காப்பியமும் அறிவிக்கிறது.
அகப்பொருளுக்கு மூன்று கூறுகளைத் தொல்காப்பியம் காட்டுகிறது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.
இவற்றுள் முதற்பொருள் நிலமும் பொழுது (காலம்). இலக்கியம் நிலத்தையொட்டி அமைவதும், காலத்தையொட்டி அமைவதும் முதற்பொருளாகக் கொள்ளப்படும். நிலங்கள் 1. முல்லை, 2. குறிஞ்சி, 3. மருதம், 4. நெய்தல் என்றும் (முல்லையும் குறிஞ்சியும் வெப்ப மிகுதியால் 5. பாலையாகும்), பொழுதுகள் 1. பெரும் பொழுது 2. சிறு பொழுது எனவும் பிரிக்கப்படுகின்றன.
பெரும் பொழுதுகள் என்பன ஆறு காலங்கள்:
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் முதுவேனில்.
சிறு பொழுதுகள் என்பன நாளின் பகுதிகள்:
வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்.
இதில் பெரும் பொழுதுகள் தொடர்பான பகுப்பும், ஜப்பானியப் பருவகாலங்களான வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் ஆகிய நான்கு பகுப்பும், பருவகாலங்களை இலக்கியத்தில் பதிவு செய்வது இரு பண்பாடுகளுக்கும் பொதுவானது என்னும் பார்வையைத் தருகிறது.
மழைக்காலத் தும்பிகள் ஹைக்கூவில் பொதுவாக ஜப்பானியக் கோடைப் பருவத்தைக் குறிக்கும். ஆனால், இந்த ஹைக்கூவில் சொல்லப்படும் ‘தோன்போ’ எனப்படும் செந்நிறத் தும்பி ஜப்பானிய இலையுதிர் காலத்தைக் குறிக்கும்.
ஓர் இலையுதிர் காலத்தில், வெளியில் வைக்கப்பட்டிருக்கும் நீர்த்தொட்டியின் மேல் ஒரு தும்பி பறக்கிறது.

இக்காட்சியைக் காணும் சியோ நி, தும்பி தன் பிம்பத்தைத் துரத்துவதாகக் காண்கிறார். பறக்கும் தும்பி நீரில் தன் பிம்பத்தைக் காண்கிறது, அது பறந்து கொண்டிருப்பதால் பிம்பமும் நகர்கிறது, பிம்பம் நகர்வதால் அதைத் தும்பி துரத்துகின்றது. துரத்துவதால், பிம்பம் நகர்கிறது. துரத்துவதும் நகர்வதுமாக அந்தக் குளிக்கும் நீர்த்தொட்டியின் மேல் தும்பியின் பயணம் தொடர்கிறது. தொட்டியின் எல்லையில் தும்பியின் பயணம் முடியலாம், அல்லது அது திரும்பி மீண்டும் நீரில் தன் பிம்பத்தைக் கண்டுத் தொடரலாம். பயணத்தின் அடுத்த கட்டத்தை விளக்குவது கவிஞரின் நோக்கமல்ல. நீரும், தும்பியின் வினையும், பிம்பமும் இணைந்த இயற்கையைக் காட்சிப்படுத்தும் ஹைக்கூ அது.
ஹைக்கூவின் முதல் அடியில் சொல்லப்படும் 行水 யுகுமிசு என்னும் சொல் இரண்டு சொற்களின் கூட்டு. 行 – யுகு, 水- மிசு. காஞ்சி வரிவடிவின் விரிந்த ஹிராகனா வடிவம் யு (ゆ) கு (く) யுகு, 水 (み) சு (ず) மிசு. இதன் பொருள் குளிக்கும் நீர்த்தொட்டியில் நிரம்பியுள்ள நீர். に ‘னி’, இல்.
ஜப்பானியக் கலாசாரத்தின் ஓர் அங்கமாகக் குளிக்கும் நீர்த்தொட்டி இருந்தது. அவை அழுக்குத் தீரக் குளிப்பதற்கான தொட்டிகளாக அல்லாமல் தங்களை முழதுமாக நனைத்து வெதுவெதுப்பாக்குவதற்கு அல்லது குளுமையடையச் செய்வதற்கு உள்ளவை. இலையுதிர் காலத்தில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் குளிக்கும் நீர்த்தொட்டியில் நீர் நிறைத்து வைப்பதும் அவர்கள் வழக்கம்.
இந்த ஹைக்கூ யுகுமிசு என்பது இலையுதிர் காலத்தில் நிறைக்கப்படும் நீர்த்தொட்டியைச் சுட்டுகிறது.
行水に (ゆくみずに) யுகுமிசுனி – குளிக்கும் நீர்த்தொட்டியில்.
இரண்டாம் அடியில் おのが影追う ஓநொக-காகெ-ஓவு மூன்று சொற்களைக் கொண்டது. ஹிராகனாவில் குறிப்பிட்டுள்ள முதற்சொல் ஓ (お) நொ (の) க (が – ga) – ஓநொகவின் பொருள் தனது, தன்னுடைய. இரண்டாம் சொல் 影 – க (か) கெ (げ – ge) – ககெயின் பொருள் நிழல் அல்லது பிம்பம். இந்த ஹைக்கூவில் நீர்ப்பரப்பின் மேல் அது விழுவதால் பிம்பம் எனக் கொள்கிறோம். மூன்றாம் சொல் 追う – ஓ ( お ) உ (う) – ஓவுவின் பொருள் துரத்துவது.
おのが影追う (おのがかげおう) – ஓநொககாகெஓவு – தன்னுடைய பிம்பத்தைத் துரத்தும்.
மூன்றாம் அடியில் 蜻蛉哉 தோன்போகன இரண்டு சொற்களைக் கொண்டது. முதற்சொல் 蜻蛉 தோன்போவின் இரண்டு காஞ்சிகளை ஹிராகனாவில் விரித்தெழுதினால் தோ (と) ன் (ん) போ (ぼ) – தோன்போவின் பொருள் தும்பி, குறிப்பாக ஜப்பானிய இலையுதிர்காலத்தில் காணப்படும் செந்நிறத் தும்பி. இரண்டாவது சொல் 哉 க (か) நன (な) – கன, இது ‘அட’ ‘ஆஹா’ என்னும் பொருளைத் தாங்கி நிற்கும்.
蜻蛉哉 (とんぼかな) – தோன்போகன – செந்நிறத்தும்பி, ஆஹா!
வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றினால்,
குளிக்கும் நீர்த்தொட்டியில்
தனது பிம்பத்தைத் துரத்தும்
செந்நிறத்தும்பி, ஆஹா!
சுருக்கிய மொழிமாற்றமெனில்,
நீர்த்தொட்டியில்
தன் பிம்பத்தைத் துரத்தும்
தும்பி
சுருக்கப்பட்ட மொழிமாற்றத்தில் ஜப்பானிய இலையுதிர்கால வழக்கமான குளிக்கும் தொட்டியில் நீர் நிறைத்து வைப்பதும், அதே காலத்து செந்நிறத் தும்பியும் சொல்லப்படவில்லை. சொற்சுருக்கம் வேண்டிக் காட்சிப் பிடிப்பை மட்டும் ஹைக்கூவில் மொழிமாற்றுவதில் இப்படியான விட்டுக்கொடுத்தல் தவிர்க்க இயலாதது. ஆனால், அந்தச் சொற்சுருக்கத்திலும் ஒரு காட்சி தப்பவில்லை. நீர்ப்பரப்பின் மேல் தன் பிம்பத்தைத் துரத்திக்கொண்டிருக்கும் தும்பி, தன் பிம்பத்தை எட்ட முடியாமல் தொடர்ந்து பறக்கிறது. ஒருவேளை, அந்த எட்ட முடியாத பிம்பமே ஹைக்கூவின் அழகாகவும் இருக்கலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.
