தலைக்குடைகள்

This entry is part 14 of 12 in the series ஹைக்கூ

திடீர் மழை
தேநீர்க்கடையில் பலவண்ணத்
தலைக்குடைகள்

கவிஞர்: ஓட்சுயு (1675 – 1739)

யூதாச்சியா
சாமிசெசமஸம
கபுரிமோனொ

夕立や
茶店様々
被り物

கவிதைகள் காட்சிப்படுத்துவதை உள்வாங்க வாசகனுக்கு அனுபவம் தேவைப்படுகிறது. அனுபவத்தின் வழியாகக் கவிதையின் தளத்துக்குச் செல்லமுடியாத வாசகனுக்கு அவை வார்த்தைகளாக மட்டும் நிற்கின்றன. கவிதை காட்டும் காட்சியை உள்வாங்கும் வாசகன் கவிஞனுடன் பயணம் செய்கிறான், சொற்களில் இருப்பதை மட்டும் காணாமல் தன் அனுபவங்கள் இணைக்கின்ற படிமங்களையும் சேர்த்துக் கவிதையைத் தனக்கான பிரத்யோக ஓவியமாகத் தீட்டிக்கொள்கிறான்.

கவிஞர் ஓட்சுயுவின் ‘தலைக்குடைகள்’ ஹைக்கூவுக்கு முன், மனுஷ்யபுத்திரனின் கவிதையில் நகர்ப்புற வாழ்க்கையின் சில நிமிடங்களில் மின்தூக்கிக்குள் யாருடைய கூந்தலிலிருந்தோ உதிர்ந்த ஒற்றை மல்லியின் வாசத்தை நுகரலாம்.   

அலைக்கழிவு

லிஃப்டில் உதிர்ந்து கிடக்கிறது
மல்லிகைச் சரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றை மல்லி
யாருடையதோ,
எக்கணம் உதிர்ந்ததோ,
ஒரு பிரியத்தில்
மீள வழியற்று அலைக்கழியும்
மனம் போல
நாளெல்லாம் லிஃப்டில்
ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது

நன்றி: கவிஞர் மனுஷ்யபுத்திரன்

மின்தூக்கியின் உள்ளே தரையில் உதிர்ந்து கிடக்கும் ஒற்றை மல்லியின் இலக்கற்ற செங்குத்து நகர்வு அலைக்கழியும் மனதுக்கு உவமையாகிறது. இதனைப் படிக்கும் வாசகன் நகர்ப்புற வாழ்க்கையை அறிந்தவனெனில் மின்தூக்கியின் இயங்கியலைக் கவிதையில் பொருத்திப் பார்க்க இயலும். மின்தூக்கியின் சூழலை அறிந்திராத வாசகனுக்கு இக்கவிதையில் பேருந்தின் காலியான இருக்கையில் கிடக்கும் ஒற்றை மல்லி தேவைப்படலாம். 

ஹைக்கூக்கள் ஒற்றை வரியில் கடந்துசெல்லும் காட்சி பொதுவான இயற்கைக் காட்சியாக அமைந்திருப்பின் அதன் படிமங்களை ஜப்பானியரல்லாத வாசகரும் உணர்ந்துகொள்ள இயலும். ஆனால், காட்சிப்படுத்தலில் ஜப்பானிய சமூக, கலாசாரப் பின்னணிகளும் கலந்திருக்கையில் அந்தக் கவிதையை அதன் தளத்தில் நின்று புரிந்துகொள்வதற்கு அந்தக் கவிதை எழுதப்பட்ட காலகட்டத்தின் சமூக அமைப்பை மேலோட்டமாகவாவது அறிந்துகொள்ளும் தேவை இருக்கிறது.

சித்திரம் : வர்த்தமான்

முதலாவதாக, தலையலங்காரம். ஜப்பானில் டோக்குகவா காலம் என அழைக்கப்பட்ட காலகட்டத்தில் கவிஞர் ஓட்சுயு வாழ்ந்தார். அப்போது ஜப்பானிய கலாசாரத்தில் ஆண்களும் பெண்களும் தங்களுடையை சிகையை அலங்காரம் செய்வதில் கவனம் செலுத்தினர். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் பிரத்தியோகமான சிகையலங்காரம் இருந்தது. சாமுராய் வீரர்கள் அவர்களுடைய சிகையலங்காரத்தை வைத்தும் அடையாளம் காணப்பட்டனர். பெண்களின் சிகையலங்காரத்தைத் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. இனக்குழு, வீரம், அழகு, செல்வம் அனைத்தையும் ஒவ்வொருவரின் சிகையலங்காரமும் அடையாளம் காட்டியது.

இரண்டாவதாக, தேநீர் அருந்தும் மரபு. ஜப்பானிய மரபில் தேநீர் அருந்துதல் முக்கியமானது. அங்கு தேநீர்க் கடைகள் உரையாடலை முதன்மைப்படுத்தும். டோக்குகவா காலத்திய வழக்கமென அல்லாமல் இன்றைக்கும் சில பாரம்பரியத் தேநீர்க் கடைகளில் தனியாக அமர்ந்து தேநீர் அருந்தும் வாடிக்கையாளர்களிடம் உரையாடுவதற்காகப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் உண்டு. இவையல்லாமல் சாலையோரத் தேநீர்க்கடைகள் வழிப்போக்கர்களின் ஓய்வெடுக்கவும் என்பது உலகெங்கும் உள்ளது. கிராமத்தில் சாலையோரத்தில் ஒரு குடிசைக்கு முன் நான்கைந்து கட்டில்கள் போடப்பட்ட தேநீர்க் கடைகளையும், அவற்றில் நடக்கும் உரையாடல்களும் இக்கவிதையின் சூழலுக்கும் பொருந்தும்.    

மூன்றாவதாக, இயற்கை. யாரும் எதிர்பாராதபடித் திடீரெனப் பொழியும் கோடை மழை. 

இவற்றின் பின்னணியில் ஹைக்கூவைக் காண்கிறோம். திடீரென மழை பொழிகிறது. தேநீர்க்கடையில் ஆண்களும் பெண்களும் ஜப்பானிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சிகையலங்காரத்துடன் அமர்ந்து தேநீர் அருந்துகின்றனர். சடசடவெனப் பொழிந்த மழை சிகையைக் கலைத்துவிடும் என அனிச்சையாகக் கைக்குக் கிடைத்தை எடுத்துத் தலைக்கு மேல் தடுப்பாகப் பிடிக்கின்றனர். அவசரத்துக்குச் செயல்பட்டதால் ஒவ்வொருவர் தலையின் மீதும் ஒவ்வொரு விதமான மறைப்பு குடையாக விரிகிறது. சிலருக்குக் கைகள், சிலருக்கு விசிறி, சிலருக்கு அட்டை, சிலருக்கு முறம், சிலருக்குத் தட்டு. திடீரெனப் பெய்த மழை மக்களைத் தங்கள் தலையில் விதவிதமான தலைக்கவசங்களை அணியவைத்தது.

ஹைக்கூவின் மூன்றாம் அடியில் சொல்லப்படுவது ‘தலைக்கவசம்’ என்னும் வார்த்தை. கவிதைக்காகத் தமிழில் அது ‘தலைக்குடை’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஹைக்கூவின் முதல் அடி, ‘யூதாச்சி யா’.   夕立 யூதாச்சி, இது யூவ் 夕 (ゆう) + தாச்சி 立 (だち) என இரண்டு காஞ்சி எழுத்துருக்கள் இணைந்து உருவான வார்த்தை. அவற்றின் ஹிராகனா எழுத்துருக்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. யூவ் – மாலை நேரம், தாச்சி – நிற்பது. இரண்டும் இணைந்து ஒலித்தால் திடீர் மழை, குறிப்பாகக் கோடைமழை. மழையைக் குறிக்கும் தனிச்சொல் ஆமெ 雨 (あめ ). முதலடியில் அசைச்சொல்லாகச் சேருவது யாや. 

夕立や – ゆうだちや – யூதாச்சியா – திடீரெனக் கோடை மழை ஹா.

இரண்டாம் அடி, ‘சாமிசெசமஸம’. இது சா 茶 (ちゃ) தேநீர் + மிசெ 店 (みせ) கடை என இரண்டு காஞ்சி எழுத்துருக்களைக் கொண்டும், சம 様 (さま) + ஸம 々(ざま) சமஸம – பலவகை எனப் பொருள்படும் காஞ்சி எழுத்துருக்களைக் கொண்டும் உள்ளது. பாடபேதமாக இந்த ஹைக்கூவின் இராண்டாம் அடி சில பதிவுகளில் ‘சாயெசமஸமனொ’ எனவும் ஒலித்து ஹைக்கூவின் இரண்டாம் அடி எழுத்தெண்ணிக்கை ஏழினைத் தந்தும் காணப்படுகின்றது.

茶店様々 – ちゃみせ さまざま – சாமிசெசமஸம – தேநீர்க்கடையில் விதவிதமான  

மூன்றாம் அடி, ‘கபுரிமோனொ’. இது கபுரி 被 (かぶ)り என மறைப்பதை, உச்சியை, மூடுவதைக் குறிக்கும் காஞ்சி எழுத்துருவையும், மோனொ 物 (もの) என பொருளைக் குறிக்கும் காஞ்சி எழுத்துருவையும் கூட்டாகக்கொண்டது. வரிக்கு வரி மொழிமாற்றமெனில் தலைமறைப்பு. மோனொ (物) என்னும் சொல்லின் பயன்பாடு ஜப்பானிய மொழியில் அதிகம். எடுத்துக்காட்டாக பாரம்பரிய உடை – கிமோனோ (着物), அனைத்தும் – மோனொகோதொ (物事), மோனொஒத்தோ (物音) ஓசை. இக்கவிதையில் கபுரிமோனொ – தலையை மறைக்கும் பொருள்.  

தங்கள் சிகையலங்காரத்தை மழை நனைத்துவிடாமலிருக்க மக்கள் கையில் கிடைத்ததை எடுத்துத் தலையை மறைப்பதில் உண்டாகும் நொடி நேரப் பரபரப்பில் உண்டாகும் நகைச்சுவையையும், அதன் பின்னர் அனைத்தும் ஒன்று போலல்லாமல் பல வண்ணங்களில், பல வடிவங்களில் ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் குடையாகி நிற்கும் மறைப்புகளையும் காட்சிப்படுத்தியது சிறப்பு.

யூதாச்சியா – திடீரெனப் பெய்த கோடை மழையில்

சாமிசெசமஸம – தேநீர்க்கடையில் விதவிதமான

கபுரிமோனொ – தலைக்கவசங்கள்

ஹைக்கூவை உள்வாங்கிய மொழிமாற்றமெனில்,

திடீர் மழை
தேநீர்க்கடையில் பலவண்ணத்
தலைக்குடைகள்

ஹைக்கூ

முதற்பனி

Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.