- நேரங்காலம் தெரியாம…
- கோடானு கோடி கோடுகள்
அனுமனோடு சேர்ந்து நாம் அமெரிக்கா ஐரோப்பா எனத் தாவிக் கொண்டிருந்த சமயத்தில் உலகின் மற்றொரு கோடியில் இருக்கும் நியூசிலாந்தில் இந்த நேரப் பிரச்சினை பெரிதாகக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உலக வரைபடத்தின் தென்கிழக்குக் கோடியில் நகத்தால் கீறிய மாதிரி இருக்கும் தம்மாத்தூண்டு நாட்டில் அப்படி என்ன பிரச்சினை? எப்போதும் போல வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது பஞ்சாயத்துதான்.
வடக்குத்தீவு, தெற்குத்தீவு – இவைதான் நியூசிலாந்தின் முக்கியமான நிலப்பிரிவுகள். இவற்றோடு இன்னும் சிலப்பலத் தீவுகளும் சேர்ந்ததுதான் இந்நாடு.
1642ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி சார்பாக இப்பகுதியைச் சுற்றி வந்த ஏபல் டாஸ்மேன் (Abel Tasman) முதலில் கண்டது தெற்குத்தீவினைத்தான். அங்கிருந்த மாவோரி இன மக்களோடு சண்டை மூள அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
1769ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் (James Cook) வடக்குத்தீவில் கால் பதித்தார். அச்சமயத்தில் வடக்குத்தீவில்தான் மாவோரி இனத்தார் அதிகம் இருந்ததால் ஐரோப்பியர்கள் வியாபாரம், மத மாற்றம் என எல்லாவற்றுக்கும் வடக்குத்தீவிற்கு வரத் தொடங்கினர்.
உலகெங்கும் செய்தது போல 1840ஆம் ஆண்டு பிரிட்டன் நியூசிலாந்தை தன் காலனியாக அறிவித்தது. வடக்கு முனையில் இருந்த ஓக்கியாட்டோ (Okiato) தலைநகராகக் கொண்டு ஆட்சி அமைத்தது. வெகு விரைவிலேயே அருகிலிருந்த ஆக்லாந்து (Auckland) தலைநகராக அறிவிக்கப்பட்டது.
1860களில் தெற்குத்தீவில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட அங்கு ஐரோப்பியர்கள் வருகை அதிகமானது. ஒரு கட்டத்தில் மக்கள்தொகையாகட்டும் பொருளாதாரமாகட்டும் தெற்குத்தீவின் கைதான் ஓங்கி இருந்தது. ஆனால் தலைநகரம், ஆட்சி அமைப்பெல்லாம் இருந்ததென்னவோ வடக்குத்தீவில். இது தெற்குத்தீவுவாசிகளை பொரும வைத்திருந்தது.
குறிப்பாக இன்று போல் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் ஏதேனும் தேவை என்றால் தெற்குத்தீவிலிருந்து வடக்கு முனையருகே இருக்கும் ஆக்லாந்திற்குப் போக வேண்டும் என்பது அவர்களுக்கு அயர்ச்சியளிப்பதாக இருந்தது. அது ஆபத்தான பயணமாகவும் இருந்தது.
இதனால் தலைநகரம் நாட்டின் மையப்பகுதியில் இருக்கும் வெலிங்டன் (Wellington) நகருக்கு 1865ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. மையப்பகுதிக்கு மாற்றப்பட்டாலும் வெலிங்டன் வடக்குத்தீவில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து கதையை ஆரம்பித்தால் தனிப்புத்தகமாகி விடும். நம் வேலையை கவனிக்கலாம்.
அந்த சமயத்தில் எல்லா இடங்களிலும் இருந்தது போல நியூசிலாந்திலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் நேரம்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அளவில், குறிப்பாக அகலத்தில் பெரிய நாடு இல்லை என்பதால், நாட்டின் கிழக்குக் கடற்கரை ஊர்களுக்கும் மேற்குக் கடற்கரை ஊர்களுக்கும் அரை மணி நேரம்தான் வித்தியாசம்.
இந்த நேரத்தில் நியூசிலாந்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தந்தியை பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்த நேர மாற்றத்தினால் ஒவ்வொரு ஊரில் தந்தி அலுவலகம் திறந்து மூடும் நேரங்கள் வேறாக இருந்தன. தந்திகளைப் பெற வேண்டிய அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தால் முக்கியமான தந்திகள் நேரத்திற்கு பட்டுவடா செய்யப்படாமல் போயின. இன்று போல் இணையமும் தொலைபேசியும் இல்லாத காலம் என்பதால் இது இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. இது போதாதென்று 1866ஆம் ஆண்டு இரு தீவுகளை இணைத்து கடலுக்கடியில் தந்திக் கம்பி வடமொன்றும் பதிக்கப்பட்டது. நேரக்குழப்பத்திற்கு விடை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
அன்றைய நியூசிலாந்து போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஜான் ஹால் (Postmaster General John Hall) 1868ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதற்கு ஒரு தீர்வை முன்வைத்தார். நியூசிலாந்தில் இருக்கும் தந்தி அஞ்சல் அலுவலகங்கள் அனைத்தும் வெலிங்டன் நகரின் நேரத்தில் இயங்கும் என்பதே இது. ஆனால் இது ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த தெற்குத் தீவு மக்களை இன்னும் உசுப்பேத்தியது. நாளிதழ்கள் இந்த எதிர்ப்பைக் கடிகாரங்களின் கைக்கலப்பு (Battle of the clocks) என்று அழைத்ததில் இருந்து எதிர்ப்பின் வீரியத்தை நாம் அறியலாம்.
பொதுவான ஒரு நேரம் வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த நேரம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில்தான் இழுபறி. ஒரு கட்டத்தில் இது அந்நாட்டின் பாராளுமன்றத்தை அடைந்தது. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நியூசிலாந்துக்கு எனப் பொதுவான ஒரு நேரம் வேண்டும் என்றிருந்தாலும் அந்த நேரம் என்னவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. அந்தப் பொறுப்பு விஞ்ஞானி டாக்டர் ஜேம்ஸ் ஹெக்டர் (Dr. James Hector) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், பெரிய நகரங்கள் எதையும் கணக்கில் கொள்ளாமல், நாட்டின் நடுவே செல்லும் நெடுங்கோட்டை அடிப்படையாகக் கொண்டு பொதுவான நேரத்தை முடிவு செய்யலாம் என்று பரிந்துரைத்தார்.
172 பாகை 30 கோணத்துளி கிழக்கில் இருந்த அந்த நெடுங்கோடு கிறைஸ்ட்சர்ச் (Christchurch) நகரத்திற்கு சற்றே மேற்கே சென்றது. இவர் பரிந்துரைத்த பொது நேரம் குறிப்பிட்ட எந்த ஒரு நகரத்தைச் சார்ந்ததாக மட்டுமில்லாமல் அன்றைக்குப் போக்குவரத்து வழிச்செலுத்துதலுக்குப் பயன்பட்ட க்ரெனிச் சராசரி நேரத்தில் இருந்து பதினோரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் வித்தியாசத்தில் இருந்தது. அது என்ன கணக்கு?

பூமி ஒரு முறை தன்னைத் தானேச் சுற்றிக் கொள்ள சுமார் இருபத்து நான்கு மணி நேரங்கள். அந்தச் சுற்று 360 பாகைகள் என்பதால் ஒரு பாகை சுற்ற பூமிப் பந்து எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் நான்கு நிமிடங்கள். க்ரெனிச் நெடுங்கோட்டை பூஜ்யம் எனக் கொண்டால் டாக்டர் ஹெக்டர் பரிந்துரைத்த நெடுங்கோடு 172 பாகை 30 கோணத்துளிகள்.
172.50 x 4 = 690 நிமிடங்கள்
அதாவது பதினோரு மணி நேரம் முப்பது நிமிடங்கள். அவ்வளவுதான் இந்தக் கணக்கு. க்ரெனிச்சில் மதியம் பன்னிரெண்டு மணி ஆகும் பொழுது நியூசிலாந்தில் இரவு பதினோரு மணி முப்பது நிமிடங்கள் ஆகி இருக்கும். 1868ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி நியூசிலாந்து நாடு முழுவதற்குமான நேரத்தைக் குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. அதே ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி, இந்த நேரம் அமலுக்கு வந்தது. அதிகாரபூர்வமாக நாடு முழுவதற்குமான பொது நேரம் என்பதை முதன்முதலாக அறிவித்த நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது.
இந்த அறிவிப்பு வந்த உடனேயே நாட்டில் உள்ள அத்தனை கடிகாரங்களும் ஒரே நேரத்திற்கு மாறிவிடவில்லை. முதலில் மத்திய அரசு அலுவலகங்கள் இந்நேரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கின. மற்றவர்கள் படிப்படியாக இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர். அதே சமயம், இந்த நேரம் அனைவருக்குமானதாக இருக்கவில்லை.
நியூசிலாந்தின் ஆளுமையின் கீழ், இந்த வடக்குத்தீவு, தெற்குத்தீவுகளுக்குக் கிழக்கே இருந்தவை சாத்தம் தீவுகள் (Chatham Islands). இத்தீவுகள் வெகுதூரம் கிழக்கே இருந்தபடியால் அன்றைக்கே இவர்களின் நேரம் தேசிய நேரத்தில் இருந்து மாறி இருந்தது. அவர்கள் நியூசிலாந்தின் பொதுவான நேரத்தைக் காட்டிலும் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் முன்னதாக இருந்தார்கள். முன்பு சொன்னபடி க்ரெனிச்சில் நண்பகல் பன்னிரெண்டு மணி ஆகும் பொழுது நியூசிலாந்தில் இரவு பதினொன்றரை மணி ஆயிருக்கும். ஆனால் சாத்தம் தீவுகளில் அடுத்த நாள் அதிகாலை பன்னிரெண்டே கால் மணி ஆயிருக்கும். இன்றைக்கும் இந்த வித்தியாசம் இருந்து கொண்டுதான் உள்ளது.
அது மட்டுமில்லை. 1941ஆம் ஆண்டு போர்க்காரணங்களுக்காக நியூசிலாந்து நேரம் அரை மணி நேரம் முன்னால் கொண்டு செல்லப்பட்டது. க்ரெனிச் நேரத்தில் இருந்து நியூசிலாந்தின் நேரத்திற்கான வித்தியாசம் பன்னிரெண்டு மணி நேரங்களானது. 1945ஆம் ஆண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் பொது நேரச் சட்டம் என்ற புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி ஜனவரி 1, 1946 முதல் இந்த அரை மணி நேர மாற்றம் நிரந்தரமாக்கப்பட்டது. இதைச் சற்று மாற்றிச் சொன்னோமானால், இந்த நாட்டின் நேரம் 180ஆவது பாகை நெடுங்கோட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. முக்கியத் தீவுகளில் இருந்து வெகு கிழக்கே செல்கிறது இந்த நெடுங்கோடு.
வெலிங்டன் நேரம் கூடாது என்று சண்டை போட்டவர்கள் இன்றைக்கு அதனினும் கிழக்கே இருக்கும் நெடுங்கோட்டை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணிப்பது ஒரு பெரும் நகை முரண். எதற்கு அத்தனை சண்டை என்று இன்று யோசித்தோமானால் சிரிப்புதான் வரும். இதைத்தான் நம் முன்னோர்கள் உழக்கின் உள்ளே ஏது கிழக்கும் மேற்கும் என்று சொல்லி இருப்பார்கள் போலும்!
சரி, நியூசிலாந்து கதை போதும். ஆனால் பிரிட்டனில் ரயில்வே நேரம் என்றால் க்ரெனிச் நேரம். நியூசிலாந்தில் தேசிய திட்ட நேரம் என்றால் அதுக்கும் க்ரெனிச்சில் இருந்து எவ்வளவு நேரம் வித்தியாசம் என்ற கணக்கு. இப்படி அடிக்கடி க்ரெனிச், அங்குள்ள நெடுங்கோடு, க்ரெனிச் நேரம் என்று பேசுகிறோமே. அது என்ன க்ரெனிச்? அந்த ஊரில் கணக்கிடப்பட்ட நேரத்திற்கு அவ்வளவு என்ன முக்கியத்துவம்? வாருங்கள் மீண்டும் பிரிட்டனுக்கே செல்லலாம். போகும் வழியில் பொழுது போக ஒரு புவியியல் பாடத்தையும் படித்து விடலாம்.
போன பகுதியில் அதான் எனக்குத் தெரியுமேன்னு கொஞ்சமேக் கொஞ்சம் இந்த நெடுங்கோடுகள், அட்சக் கோடுகள் பற்றிப் பார்த்தோம். இந்த க்ரெனிச் விஷயத்துக்காக அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் பேசலாம். அட்சக் கோடுகளாகட்டும், நெடுங்கோடுகளாகட்டும் இது எல்லாமே நாம நம்ம வசதிக்காகக் கற்பனையா கிழிக்கும் கோடுகள்தாம். ஆனா அட்சக் கோடுகள் போடும் போது ஒரு வசதி இருக்கு. ஆரஞ்சுப் பழத்தைப் பிழிவதற்காக வெட்டுவது போல பூமிப் பந்தை இரு சரி பாதிகளாக வெட்ட மத்தியில் போடப்படும் கோடு பூமத்திய ரேகை. அதை வேறெங்கு போட்டாலும் பூமிப்பந்தை இரண்டு சமப்பகுதிகளாகப் பிரிக்க முடியாது. பூமத்திய ரேகைக்கு மேலும் கீழும் அதற்கு இணையாகப் போடப்படும் கோடுகள் அதிலிருந்து எவ்வளவு பாகைகள் வடக்கு அல்லது தெற்கு என்று கணக்கிடப்படுவதும் எளிது.
ஆனால் நெடுங்கோடுகளை எடுத்துக் கொண்டோமானால் நமக்கு இந்த வசதி இல்லை. வடதுருவத்தில் இருந்து தென்துருவத்தை இணைக்கும் படியாகப் போடப்படும் கோடுகள் இவை. இவற்றில் எந்தக் கோட்டை எடுத்துக் கொண்டாலும், மறுபக்கத்தில் இருக்கும் நெடுங்கோட்டோடு சேர்த்து, பூமிப்பந்தைப் பிரித்தால், இரண்டு சமப்பகுதிகள்தான் கிடைக்கும். அப்படி இருக்கும் பொழுது எதை முதன்மையாகக் கொண்டு மற்ற கோடுகளை அளவிடுவது? எப்படி ஆளாளுக்கு ஒரு நேரம் என்று கொண்டிருந்தார்களோ அது போல அந்த முதன்மைக் கோடு எது என்பதை முதலில் அவரவர் வசதிக்கேற்ப முடிவு செய்து கொண்டார்கள். பொதுவானது என்று ஒரு கோடு இருக்கவில்லை. அது ரோம் நகரத்தினூடாகச் செல்லும் கோடாக இருக்கலாம், பாரீஸ் வழியாகச் செல்லும் கோடாக இருக்கலாம், வாஷிங்டன் டிசி வழியாகச் செல்லும் கோடாக இருக்கலாம். அவ்வளவு ஏன் இந்தியாவின் மையப்புள்ளிக்கு மிக அருகே இருக்கும் உஜ்ஜெயின் நகரத்தினூடாகச் செல்லும் கோடாக இருக்கலாம்.
இருக்கலாம் என்ன இருக்கலாம்? அவை எல்லாமே பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு காரணங்களுக்காக முதன்மைக் கோடாகக் (Prime Meridian) கருதப்பட்டவைதாம். அக்காரணம் வானவியல் கணக்குகளுக்காக இருக்கலாம், நிலவியல் அளவைகளுக்காக இருக்கலாம் அல்லது கடல்வழிப் பயணங்களுக்காக இருக்கலாம். காரணங்கள் வேறாக இருந்தாலும் எது முதன்மைக் கோடு என்பது பலருக்கும் வேறு வேறாக இருந்தது என்பதுதான் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது.
வரலாற்றில் இருந்து சில முதன்மை நெடுங்கோடுகளைப் பார்ப்போம். பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் கிரேக்க அறிஞர் டாலமி (Ptolemy). ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி இருக்கும், இன்றைக்கு கேனரித் தீவுகள் (Canary Islands) என அறியப்படும் தீவுகள் அவர் காலத்தில் பார்சுனேட் தீவுகள் (Fortunate Islands) என அழைக்கப்பட்டவை. அவற்றினூடே செல்லும் நெடுங்கோட்டை அவர் முதன்மைக் கோடாகக் கொண்டார். அதற்குக் காரணம் அன்றைக்கு மக்கள் வசிக்கும் இடங்களாக அறியப்பட்ட நிலங்கள் எல்லாமே அத்தீவுகளுக்குக் கிழக்கே இருந்ததால்தான். இந்த நெடுங்கோட்டை முதன்மைக் கோடாகக் கொண்டால் மற்ற நெடுங்கோடுகளை இதிலிருந்து எவ்வளவு பாகை கிழக்கில் அவை இருக்கின்றன எனச் சொல்லி விடலாம் என்பது அவர் எண்ணம்.
ப்ரெஞ்சு வரைபடவியலாளர்கள் 17ஆம் நூற்றாண்டில் கூட இந்த கேனரித் தீவுகள் வழியாகச் செல்லும் நெடுங்கோட்டை முதன்மைக் கோடாகக் கொண்டனர். ஆனால் பாரீஸில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட பின்னர் அதனருகே செல்லும் நெடுங்கோட்டை வரைபடங்களுக்கும் வானவியல் கணக்குகளுக்கும் பயன்படுத்தத் தொடங்கினர். இது போலவே இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் முறையே ரோம், பெர்லின், வாஷிங்டன் டி.சி. வழியாகச் செல்லும் நெடுங்கோடுகளை தங்களுக்கான முதன்மைக் கோடாகக் கொண்டனர்.
இதனால் பெருங்குழப்பங்கள் உண்டாயின. குறிப்பாக நாடு விட்டு நாடு செல்லும் பயணிகள் எந்தக் கணக்கை பயன்படுத்துவது எனத் தெரியாமல் தடுமாறினர். போக்குவரத்து வசதிகள் கூடக்கூட சர்வதேச வணிகம் எளிதானது. அதற்கு தந்தி, கப்பல்கள் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் வசதி செய்தன. ஆனால் இவை எல்லாம் எளிதாக எளிதாக, எந்த நெடுங்கோட்டை முதன்மையாகக் கொண்டு நேரத்தைக் கணிப்பது, செல்லவிருக்கும் ஊர்கள் இருக்குமிடத்தை நெடுங்கோடு அட்சக் கோடு கணக்கில் சொல்வது போன்றவை எளிதாகச் செய்ய முடியாதவை ஆகின.
இந்தியாவிலும் பண்டை காலம் தொட்டே கணக்கு, வானவியல் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இன்றைய மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் உஜ்ஜெயின் கிட்டத்தட்ட இந்தியாவின் மையப்பகுதியாகக் கருதப்பட்டது. அவ்விடத்தை முதன்மையாகக் கொண்டு நிலவளவுக் கணக்குகள், வானவியல் கணக்குகள் போடப்பட்டன. இது குறித்தத் தகவல்கள் பொ.யு. நான்காம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டுக்கிடையே எழுதப்பட்டதாகக் கருதப்படும் சூரிய சித்தாந்தம் என்ற நூலில் குறிப்புகளாக உள்ளன. இதைத் தொடர்ந்து பாஸ்கரர் போன்ற பல பண்டைய இந்திய வானவியல் ஆய்வாளர்கள் இந்த நெடுங்கோட்டைத் தங்கள் கணக்குகளில் பயன்படுத்தியுள்ளனர். இது இக்கணக்குகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டதே அன்றி அன்றாட வாழ்க்கைக்கு உள்ளூர் நேரத்தையே பயன்படுத்தி வந்தனர்.

க்ரெனிச் கதையைச் சொல்லறேன்னு கூப்பிட்டுக்கிட்டு வந்து எதேதோ கதை சொல்லறேன்னு கடுப்பாகாதீங்க. வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் தங்களுக்கான முதன்மை நெடுங்கோடாக வெவ்வேறு நெடுங்கோடுகளை தேர்ந்தெடுத்தன. இதனால் பெருங்குழப்பங்கள் ஏற்பட்டன. இதைத் தெரிஞ்சுக்கிட்டா, இவற்றில் இருந்து ஒரே ஒரு நெடுங்கோடு உலகப் பொதுவிதிக்காக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதைப் பார்க்கப் போகலாம்.
க்ரெனிச் இன்றைக்கு லண்டன் நகரின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் அது கெண்ட் கவுண்டியின் பகுதியாக லண்டன் நகருக்கு வெளியே இருந்தது. அங்கிருந்த அரண்மனை, தோட்டங்கள் அரசக்குடும்பத்துடனான உறவைப் பறைசாற்றின. இப்பகுதியில் இருந்த குன்று ஒன்றில் இரண்டாம் சார்ல்ஸ் மன்னர் ஆணையின்படி 1675ஆம் ஆண்டு அரச வானியல் ஆய்வகம் ஒன்று நிறுவப்பட்டது. வழிசெலுத்துதலுக்கான வானியல் ஆராய்ச்சிகள், கடல் பயணங்களின் போது கப்பல்களைச் சரியாகச் செலுத்தத் தேவையான கருவிகள் குறித்த ஆய்வுகள் போன்றவை இங்கு மேற்கொள்ளப்பட்டன.
கப்பல் இருக்கும் இடத்தின் உள்ளூர் நேரமும் க்ரெனிச்சில் அதே சமயம் என்ன நேரம் என்பதையும் அறிந்தால் கப்பல் இருக்கும் நெடுங்கோட்டினைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் வெகுதூரத்தில் இருக்கும் க்ரெனிச்சில் நேரம் என்ன என்பதை எப்படி அறிவது? அந்தக் கேள்விக்குப் பதிலாகத்தான் பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை நேரத்தை அளவிடும் கருவிகள் பற்றிப் பேசும் பொழுது பார்க்கலாம்.
1767ஆம் ஆண்டு இந்த ஆய்வகம் வெளியிட்ட, பஞ்சாங்கம் போன்ற, நாள்கோள் காட்டி (The British Nautical Almanac) கப்பல்களைச் செலுத்துவதற்கு இன்றியமையாத துணையானது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழியை உண்மையாக்குவது போல, பிரிட்டிஷ் கப்பல்கள் உலகமெங்கும் செல்லத் தொடங்க, க்ரெனிச் ஆய்வகத்தின் வெளியீடுகளும் பரவலாகப் புழக்கத்திற்கு வந்தன. கப்பலில் உலகம் சுற்றும் வாலிபர்கள் க்ரெனிச் நேரத்தை அடிப்படையாகக் கொள்வதும் மரபானது.
க்ரெனிச் நேரம் முக்கியத்துவம் பெற்றதற்கு தனித்துவமான வானியல் காரணங்கள் ஏதும் இல்லை, இப்படி பலரும் பயன்படுத்தத் தொடங்கிய மரபுதான் காரணம். ஆனால் இந்த மரபை உலகத்தரமாக மாற்றுவது எப்படி? அதுவும் ஒரு பெரிய கதைதான்.
Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
