- அழைப்பு
- பிறப்பினைக் கொண்டாடும் உலகம்
- சொல்லும் பொருளும்
- இலக்கியம் என்னும் காலக்கண்ணாடி
நமது உணர்வுகளை வெளிப்படுத்தவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் உருவாக்கப்பட்டதொரு கருவிதான் மொழி. இந்த உலகில் மற்றவர்களுடனும் நமது குடும்பத்துடனும் வாழத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது மொழி எனலாம். மொழி என்பது பேச்சு, எழுத்து என இருவகைப்பட்டது. முதல் மொழி எங்கே ஆரம்பித்தது, முதல் சொல் யாரால் பேசப்பட்டது என்பது நாம் அறிந்துகொள்ள முடியாத புதிர். ஒரு சமுதாயம் அல்லது கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு மொழி மிகமிக முக்கியமானது. ஆனால் அதன் தொடக்கத்தை அறிந்துகொள்ள இன்றுவரை எந்த மனிதப் பிரயத்தனமும் விடைகாணவில்லை. முதல் மொழி அல்லது பேச்சு, எழுத்து இவற்றின் ஆதாரங்கள் எவ்வகையிலும் பதிவு செய்யப்படவில்லை.
பேரறிஞர் மு. வரதராசனார் அவர்களின் கூற்றுப்படி: ‘உலகத்தில் மொழி இல்லையானால் நாகரிகம் என்பதே வளர்ந்திருக்காது. ஆகையால் நாகரிகக் கருவிகளுள் முதன்மையானது மொழியே. மற்ற நாகரிகக் கருவிகளின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்ததும், இருந்து வருவதும் மொழியே.’
இப்படிப்பட்ட மொழி எப்படி மனித சமுதாயத்தில் தோன்றியது, எப்படி வளர்ந்து உருவாகியது என்பது பெரும் ஆராய்ச்சிக்கு உட்பட்டது! உலகின் முக்கியமான மொழிகள், மிகமிகப் பழைய மொழிகள், கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளின் முன்பு தோன்றின எனப்படுகிறது. ஆனால் மானிட சமுதாயம் அதற்கும் நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாய்மொழியால் பேச ஆரம்பித்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Homo Sapiens எனப்படும் தற்கால மனித இனம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது எனவும் மனிதர்களின் நரம்பு மற்றும் குரல்வளை வளர்ச்சியின் காரணமாக சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுமொழி தொடங்கியதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
எகிப்து, பாபிலோன், கிரேக்க நாகரிகங்களில் கடவுளால் மொழி படைக்கப்பட்டதாக நம்பப்பட்டது.
ஏன், நமது இந்து மதத்திலுமே சிவபிரானின் உடுக்கைச் சப்தத்திலிருந்து மொழி பிறந்ததென நம்பப்படுகிறது.
மொழியின் தோற்றம் குறித்த முக்கியமான சில பழம் கோட்பாடுகள் உண்டு:
1. ஒலிக் கோட்பாடு (Bow-wow / Cuckoo Theory): 18ம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த அறிஞரான யொஹான் காட்ஃப்ரைட் ஃபொன் ஹெர்டெர் (Johann Gottfried von Herder) என்பவர் பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளை மனிதன் பின்பற்றி ஒலியெழுப்பியதிலிருந்து மொழி தோன்றியது என்று கூறினார்..
பறவைகள் ‘குக்கூ’ எனக் கூவுவதையும் பூனை ‘மியாவ்’ என்பதனையும், நாய் ‘பவ் வவ்’ என்பதையும் பின்பற்றி மனிதனும் அவ்வொலிகளை எழுப்பப் பழகிக் கொண்டான் எனப்படுகிறது. ஆனால் இந்தக் கோட்பாடு அடிப்படையிலேயே தவறானது; ஏனெனில், ஒலிகளுக்கான சொற்கள் ஒவ்வொரு மொழியிலும் வேறுபடுகிறது; மேலும் மொழியிலிருந்து எழுகின்ற இந்தச் சொற்கள் சமீப காலத்தவை; அனைத்துமே இயற்கையின் ஒலிகளினின்று பிறந்தவை அல்ல.
2. உணர்ச்சிக் கோட்பாடு (Pooh-pooh Theory): வலி, (ஆ) மகிழ்ச்சி, ஆச்சரியம் (ஆஹா), பயம் (ஹா) போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வாய்மொழியாக வந்த ஒலிகளே மொழியின் தொடக்கமாகும் என்றும் ஹெர்டர் கூறினார்.
எந்த மொழியிலும் இத்தகைய வியப்பிடைச்சொற்கள் அரிதாகவே உள்ளன. ஆகவே இத்தகைய ஒலிகளிலிருந்து பிறக்கும் சொற்கள் ஒலிக்குறிப்புகளுக்கு ஒத்து இருப்பதில்லை; மேலும் ஒவ்வொரு உணர்வையும் வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்பும் எந்த மொழியிலும் அதிகமாக இல்லை.
3. உழைப்புக் கோட்பாடு (Yo-he-ho Theory): கூட்டாக இணைந்து வேலை செய்யும் போது, ஒத்திசைவான ஒலிகளை எழுப்பியதிலிருந்து மொழி உருவானது.
‘ஏலேலோ ஐலசா’ என்பது போன்ற ஒலிக்குறிப்புகள் இவை. இருப்பினும் மொழியின் சில கட்டமைப்புகளுக்கே இவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ள முடியும், மற்ற சொற்கள் எல்லாம் எவ்வாறு உருவாயின என்பதற்கு இந்தக் கோட்பாட்டில் விடை காண இயலாது.
4. சைகைக் கோட்பாடு (Ta-ta Theory): மனிதன் தனது கை அசைவுகளுக்கு ஏற்ப நாக்கின் அசைவுகளைச் செய்து ஒலிகளை உண்டாக்கியதன் மூலம் மொழி பிறந்தது.
இந்திய-ஐரோப்பிய மொழிகளின் முதன்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டவரான முல்லர் (Mueller) ஒரு பொதுவான மூதாதை மொழியினின்று இன்று பேசப்படும் அத்தனை மொழிகளும், ஏன் இலத்தீன், கிரேக்கம் அனைத்துமே உருவானவை எனக்கூறி, ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்ததென நிறுவினார். “மொழியே மனிதனை மற்ற விலங்குகளிடமிருந்து தனித்துக் காட்டுகிறது,” என்ற முல்லர், ‘மொழியின் அறிவியலானது மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அசைக்கமுடியாத திட்டவட்டமான கோடு,” என்றார். மொழியியல் மரத்தின் வேர்களில் பொதுவான மொழி ஒன்றின் இருப்பைக் கண்டுபிடிப்பதில் அவர் உறுதியாக நின்றார். மற்றவர்கள் இந்தக் கோட்பாட்டை 5. டிங் – டாங் கோட்பாடு (“ding-dong” theory) என ஏளனம் செய்தனர்.
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மொழியியல் ஆராய்ச்சியாளரான ஸ்டீவன் பிங்கர் (Steven Pinker) மொழியினை மனிதர்கள், மனித வழிமுறைகளுக்கேற்றவாறு உள்ளுணர்விலிருந்தே கற்றுக் கொள்கின்றனர், குழந்தைகள் அவர்கள் வளரும் சூழ்நிலைகளில் இருந்து கிரகித்துக் கொள்கின்றனர் என்கிறார். (நாம் இங்கு The Jungle Book மௌக்லியின் உதாரணத்தை நினைவு படுத்திக் கொள்ளலாமே! வனத்தில் விலங்குகளிடையே வாழ்ந்த அவன் அவற்றுடன் ஒன்றாக வாழப் பழகிக் கொண்டானே தவிர மனித உணர்வுகள், மொழிகள் அவனுக்குத் தெரியவில்லையே!) அறிவாற்றல் சார்ந்த உளவியலில் பிங்கர் வல்லுனராக விளங்கினார்.
மொழியின் வளர்ச்சியைக் காணப்புகுந்தால் அது முறையான மொழிகளாக வளர்ச்சியடைந்துள்ளது வியப்பைத்தரும். அறிவியல், சமூக நடைமுறைகள் மூலம் மனிதர்களுக்கிடையேயான தொடர்பு எளிமையான நிலையிலிருந்து, சிக்கலான ஆனால் வகைப்படுத்தப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட மொழிகளாக உருவெடுத்து வளர்ந்துள்ளது.
மனித இனம் பரிணாம வளர்ச்சி அடையும்போது குரல்வளை, தொண்டை, நாக்கினை எவ்வாறு ஒலிகளுக்கிசையப் பயன்படுத்துவது, உதடுகளை எவ்வாறு அசைப்பது எனவெல்லாம் மனிதன் அறிந்து கொண்டான். ப்ரோக்கா (Broca’s)வின் மூளைப்பகுதிகள் பேச்சினைப் புரிந்து கொள்ளவும், பேசவும் வழிவகுத்தன. இந்த ப்ரோக்காவின் மூளைப்பகுதி என்பது பால் ப்ரோக்கா (Paul Broca) எனும் பிரென்ச் மருத்துவ ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மனித மூளையின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு செயல்களுக்குப் பொறுப்பானவை என ஆய்ந்து கண்டறிந்தார். இவர் நூற்றுக்கணக்கான மனித மூளைகளை, அவற்றின் சொந்தக்காரர்கள் இறந்தபின் பதப்படுத்திவைத்து இவ்வகையான ஆய்வுகளுக்கு உபயோகிக்கலாம் என்று கூறினார்.
கார்ல் செகன் (Carl Sagan) எனும் எழுத்தாளர் ப்ரொக்காவின் மூளை (Broca’s Brain) எனும் நூலை எழுதினார். அந்த நூலின் இறுதியில் அவர் குறிப்பிடுகிறார்: “கடவுள் என ஒருவர் இருக்கிறார் என்றால், நமது அறிந்துகொள்ளும் ஆர்வமும் புத்திசாலித்தனமும் அவரால் தரப்பட்டவை எனலாம்…. ஆனால் அப்படி ஒருவர் இல்லையென்றாலும் நமது ஆர்வமும் புத்திசாலித்தனமும் நமது பிழைப்புக்குத் தேவையானவை ஆகும். எப்படியாயினும் அறிவு எனப்படும் சாதனம் மனித இனத்தின் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது.”
‘பாபெல் டவர்’ (The Tower of Babel) என பைபிளில் ஒரு கதை உண்டு. மனிதர்கள் அனைவரும் கூடி ஒன்றாக வாழ்வதற்காக உயரமான கட்டிடத்தை அதன் உச்சி சுவர்க்கம்வரை செல்லுமாறு கட்டலானார்கள். அவர்கள் மமதையாலும் அகங்காரத்தாலும் அவ்வாறு செய்யலானார்கள். அப்போது ஒரேயொரு மொழிதான் வழக்கிலிருந்தது. இந்தக் கட்டிடத்தின் வளர்ச்சியைக்காண வந்த கடவுள், அதனை அவர்கள் கட்டி முடித்துவிட்டால் ஒற்றுமையாக ஒரே இடத்தில் மட்டுமே வாழ்வார்கள் என உணர்ந்து, அவர்களின் அகங்காரத்தை ஒழிக்க வெவ்வேறு மொழிகளைப் பேசும்படி செய்தார். அவர்கள் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு அந்தக் கட்டிடம் முற்றுப்பெறாமல் போயிற்று என்பர். (பாபெல் – குழப்பம் என்பது பொருள்!) இது ‘தாழ்மை’ எனும் அடிப்படை உணர்ச்சியினை வலியுறுத்தும் கதை. (ஹீப்ரூ பைபிள்: பழைய ஏற்பாடு- தொடக்கம் 11:1-9) பல மொழிகளின் தொடக்கத்தின் ஆரம்பம் எனக் கருதப்படும் இக்கதை வெவ்வேறு கருத்துகளைக் கூறுகிறது என்பர். பல மொழிகளில் இப்படிப்பட்ட கதைகள் உண்டு என அறிகிறோம்.
பாபெல் நூலகம் (The Library of Babel) என்பது 1941ல் ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த எழுத்தாளரான ஜார்ஜ் லூயி போர்ஜெஸ் என்பவரால் எழுதப்பட்ட சிறுகதை. இந்தப் பிரபஞ்சத்தைப் பலமொழி நூல்களைக் கொண்ட நூலகமாக உருவகித்து ஒவ்வொரு மொழியிலுள்ள புத்தகங்களும் எவ்விதம் இருக்க வேண்டும், இருக்கும் எனத் தான் எண்ணுவதை விவரிக்கிறார். வெகு சுவாரசியமான கதை. நீளும் இக்கட்டுரையில் இதனைக் கோடி காட்டவே முடியும்.
~o0o~
இந்துமத ஆன்மீகப் புராண நம்பிக்கைப்படி மொழிக்கான இலக்கண ஒலிகள் ஈசனின் (சிவனின்) உடுக்கை ஓசையிலிருந்து தோன்றினவாம்.
இந்துப் புராணங்களின்படி, சிவபெருமான் தனது நடனத்தை (தாண்டவத்தை) முடித்துவிட்டு, தனது கையில் இருந்த உடுக்கையை (டமரு) 14 முறை ஒலித்தார். அந்த உடுக்கை ஓசையிலிருந்து 14 சூத்திரங்கள் (ஒலிவடிவங்கள்) தோன்றின. இவை “மகேஸ்வர சூத்திரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஒலிகளை அடிப்படையாகக் கொண்டே சமஸ்கிருத மொழியின் இலக்கணத்தை பாணினி என்ற முனிவர் உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. அதேபோல, சிவபெருமானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து சமஸ்கிருதமும், மற்றொரு பக்கத்திலிருந்து தமிழும் உதித்தன என்றும், சிவபெருமான் இந்த இரு மொழிகளையும் பாணினி மற்றும் அகத்திய முனிவர்களுக்குக் கற்பித்தார் என்றும் தமிழ் மரபில் ஒரு ஆன்மீக நம்பிக்கை நிலவுகிறது.
~o0o~
நாம் தொடர்ந்து முன்னேறுவோம்! பேசப்பட்ட சொற்களுக்கு மொழிகளில் வடிவங்கள் அமைக்கப்பட்டன. பொருள்கள் (அர்த்தம்) பெறப்பட்டன. ஒவ்வொரு மொழிக்கும் இவை வித்தியாசமாக இருந்தன. ஏனெனில் அந்தந்த இடங்களில் வாழும் மனிதர்கள் தங்கள் கற்பனைக்கேற்ப இவற்றை, வடிவங்களை அமைத்துக் கொண்டனர்.
எழுத்து என்பது பேச்சின் ஒலிவடிவமே. கையால் எழுதப்படுவதாலும் வாயால் ஒலி எழுப்பப்படுவதாலும் எழுத்து என்னும் பெயர் வந்தது என்கின்றனர். கையால் எழுதப்படும் வரிவடிவ எழுத்து காலங்கள் தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது. இவற்றிற்கு முற்கால எழுத்துக்களே ஆதாரமாகும். இவற்றைப்பற்றிய ஆராய்ச்சிக்கு தொல்லெழுத்தியல் (Palaeography) என்று பெயர்.
எழுத்துக்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.
1. ஓவிய எழுத்து: (pictography)
எழுத்துக்களின் தோற்றத்திற்கு அடிப்படை ஓவியங்கள். தொடரான சிறு ஓவியங்கள் பல வாக்கியங்களின் தொகுப்பு. எடுத்துக்காட்டாக மாடு என்பதனைக் குறிப்பிட மாட்டின் தலையை ஓவியமாக எழுதினர். சீன ஜப்பானிய மொழிகளில் ஒரு சொல்லுக்கு ஒரு வடிவம் எனும் ஓவிய எழுத்து முறை இன்றும் இருக்கிறது.
2. கருத்து எழுத்து: (Ideography)
ஓவிய எழுத்துக்களே நாளடைவில் கருத்து எழுத்துக்களாக வளர்ந்தன. ஒரு படத்தை வரைந்து சூரியன் எனில் அது ஓவிய எழுத்து. இதனையே பகல் நேரத்து வெப்பம் எனில் அது கருத்தெழுத்தாகக் கொள்ளப்படும்.
3. ஒலி எழுத்து: (Phonography)
ஒரு சொல்லின் அடையாளமான ஓவியம், அச்சொல்லின் முதல் ஒலிக்கு அடையாளமாக ஆனது. ஓவிய எழுத்திலிருந்து ஒலி எழுத்துத் தோன்றிய மாற்றம் புரட்சிகரமானதாகும். கிரேக்க மொழியில் காளை மாட்டை ஆல்பா என்பர். எனவே காளை மாட்டின் தலையை எழுதி முதலில் ஆல்பா என்று கூறிவந்தனர். பிறகு அதே ஓவியம் ஆல்பா என்ற சொல்லின் முதல் ஒலியாகிய அ அல்லது a என்பதன் அறிகுறியாக கொள்ளப்பட்டது.

எழுத்தின் வகைகள்
ஒலி எழுத்துக்கள் அகரவகை (Alphabets) என்றும் உயிர் மெய் (Vowel Consonants) வகை என்றும் இருவகைப்படும். சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் வாழ்ந்த வட செமிட்டிக் மக்கள் கி.மு. 1500ல் அகர வகை எழுத்தைக் கண்டுப்பிடித்தனர். தமிழ் மொழிக்குப் பயன்படுத்துவது உயிர் மெய் வகை எழுத்தாகும். பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறை. இது மிகப்பழமையானது. இந்த எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றிற்று. தற்காலத்து இந்தோ – அராபிய எண்முறையும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது. மிகப் பழமையான எகிப்திய எழுத்துமுறை ‘ஹியரோக்லளிஃபிக்ஸ்’ என அறியப்படும்.
எழுத்துக்களின் தோற்றம் பற்றிய பலவிதமான கருத்துகள் உலவுகின்றன. ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. அவற்றை இங்கு விவரிக்கப் புகுந்தால் இதுவே ஓர் ஆராய்ச்சியாகி விடும்.
உலகில் உள்ள பல மொழிகளில் இலக்கியங்கள் எவ்வாறு தோன்றின என்று தேடினால், வாய்மொழி வடிவத்திலிருந்தே தோன்றியது. மனிதன் தனது எண்ணங்களை, அனுபவங்களைப் பேச்சின் மூலம் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சென்றிருக்கிறான். பரதக் கண்டத்தில் வேதங்கள், நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், பாசுரங்கள் அனைத்துமே வாய்மொழியாகவே பாதுகாக்கப்பட்டன. எழுத்துக்களைக் கண்டுபிடித்த பின்பே அவை பதிவாகத் தொடங்கின.
சுமேரியாவின் மிகப்பழமையான கில்கமெஷ் காப்பியம் களிமண் பலகைகளில் எழுதப்பட்டது. இந்தியாவின் வேதங்கள், இதிகாசங்கள், கிரேக்கரின் இலியட், ஒடிஸி ஆகியனவும் மிகப் பழைய இலக்கியங்களாகும்.
இவையனைத்துமே, இந்த நாகரிக வளர்ச்சிகள் எல்லாமே மனிதர்கள் உலகில் வாழ்க்கையைத் தேடித்தேடி உற்சாகமாகக் கொண்டாடியதன் விளைவு எனலாமா?
(தொடர்ந்து காண்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
