இசை – உணர்வுகளின் சுருக்கெழுத்து

This entry is part 5 of 5 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

உலகத் திருவிழாவில் இசையின் பங்கு மிகப்பெரிது. அதனைக் கொண்டாடும் நாம் அது தொடர்பான சில செய்திகளையும் காணலாமே!

“இசை என்பது உணர்வுகளின் சுருக்கெழுத்து; வார்த்தைகளால் மிகுந்த பிரயாசையுடன் விவரிக்கப்படும் உணர்வுகள், மனிதனுக்கு இசையினால் நேரடியாக உணர்த்தப்படுகின்றன; அதில்தான் அதன் வலிமையும் முக்கியத்துவமும் உள்ளது” என்கிறார் பிரபல நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய்.

இத்தகைய இசையை மனித வாழ்வினுள் கொண்டுவர, இன்றைய நிலைக்கு உயர்த்த இந்த சமுதாயம் என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதே ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்பட்டதாகும்.

இசை ஒரு தனி மனிதனிடமோ அல்லது ஒரு குறிப்பட்ட சமயத்திலோ தொடங்கியதன்று. மனிதர்கள் தம்மால் சில ஓசைகளை எழுப்ப முடியும் எனக் குரல்வளையின் சாதனைகளை உணர்ந்த தருணத்தில் விதவிதமான ஓசைகள் ஒரு வரையறைக்குள் கட்டுக்கோப்புக்குள் உட்படுத்தப்பட்டு இசையாக உருவெடுத்தது எனலாம். தனது உணர்வுகளை வெளிப்படுத்தவோ (அழுகை, மகிழ்ச்சியின் சிரிப்பு, வலியின் கூச்சல்) இயற்கை ஒலிகளைக் கேட்டோ தனது இசையுணர்வை வெளிப்படுத்தி வளர்த்துக் கொண்டது மனித இனம். ஒரு ஒழுங்கிற்குட்பட்ட கைதட்டல், இடைவிடாத குயிலின் கூவல், இன்ன பிற ஆகியனவும் இவற்றிற்கு வழிகாட்டியாக அமைந்திருக்கக் கூடும். கூட்டங்களாக வாழ்ந்த மனித இனம், தம் கூட்டத்தாருடன் தொடர்பு கொள்ளவும், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கட்டளைகளைப் பிறப்பிக்கவும், கைதட்டல், வாயால் செய்யப்படும் ஒழுங்கான ஓசைகள், ஒரு குச்சியால் இன்னொன்றைத் தட்டி ஒலியெழுப்புதல் முதலானவற்றின் மூலமாகவும் சங்கேதங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டது.

மிகப் பழமையான இசைக்கருவிகள் எனப்படும் எலும்புகளாலான ஊதுகுழல்கள், தந்தத்தாலான ஊதுகருவிகள் ஆகிய 40,000 ஆண்டுகள் பழமையான வாத்தியங்கள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

000—–000—–000

பழமையான உலக நாகரிகங்களும் இசையும்:

நாகரிகங்கள் வளரத் தொடங்கியபோது, பழக்க வழக்கங்கள், உணவு, உடை, இருப்பிடம், வேலைகள், தெய்வ வழிபாடு, இலக்கியம், இசை, தொழில்நுட்பம், அறிவியல் சிந்தனைகள், இன்னும் பலவிதமானவை வளர்ந்து புதுமைகளை மேற்கொண்டன. இசையும் அதில் முக்கியமான ஒன்று!

மெசபொடேமியா, எகிப்து கலாசாரங்களில், வீணை, யாழ் போன்ற கம்பி (தந்தி) வாத்தியங்களையும், பலவிதமான மத்தளங்களையும் உபயோகித்தனர். இதற்கான பாடல்கள் களிமண் பலகைகளில் (நிக்கல் ஹுரியன் பாடல்கள்) எழுதப்பட்டன. 

பழம் சீனா, இந்தியா: சீனதேசத்தவர் 12 தொனிகளுடைய முறைகளைக் கையாண்டனர்; குக்வின் போன்ற வாத்தியங்களைப் பயன்படுத்தினர். இந்தியர்கள் வீணை எனும் தந்தி வாத்தியத்தை உருவாக்கி சிக்கலான, தாளம் சார்ந்த ராகங்களையும்  ஆன்மீக வழிமுறைகளில் உருவாக்கினர்.

பழைய கிரேக்கம்: தத்துவ, கோட்பாட்டு முறைகளில் இசையானது கணிதம், தத்துவ விசாரணைகளுக்குட்பட்டதென இவர்கள் கருதினர். இசை என்பது சங்கீதக் கடவுள்களின் பெயரால் அமைந்தது. (art of the Muses – Music)

இசை எவ்வாறு தொடங்கியது, எழுந்தது என்பது சர்ச்சைக்குரியதாகும். பல ஆய்வாளர்களும் பல கோட்பாடுகளைக் கூறுகின்றனர். இவற்றுக்குள் எல்லாம் புகாமல் உலகில் இசை எவ்வாறு வளர்ந்தது என்பதனைக் காண்பதே நமது குறிக்கோள். 

மேற்கத்திய இசை: 

இதனை ஒட்டு  மொத்தமாக ஒரு தலைப்புக்குள் அடக்கிவிட முடியாது. ஒவ்வொரு நாட்டுக்கும், கண்டத்திற்கும், அவரவர்களுக்கே உரிய இசை வழி உண்டு. நாம் இயன்றவரை சிலவற்றைக் காண்போம்.

இந்த இசையைப் புரிந்துகொள்ள முயன்று அதனைக் கேட்க ஆரம்பித்தபோது பல நுணுக்கங்கள் பிடிபட்டன. மேலும் நான் பணிபுரிந்த ஆராய்ச்சி அலுவலகத்தில் எனது வழிகாட்டியான பெண்மணி இந்த சாஸ்திரீய சங்கீதத்தை மிகவும் ரசிப்பவர். அதனைச் சிறிது கற்றும் தேர்ந்தவர். அவர் வருடம் முழுவதற்குமான நியூயார்க் மெட்ரோபாலிடன் ஆபரா டிக்கட்டுகளை முதலிலேயே வாங்கி விடுபவர். எங்களது முதல் பரிசுப் பரிமாற்றம் இசை மூலமே! அவருக்கு நான் லால்குடி ஜயராமனின் ஒரு இசைத்தட்டைப் பரிசளித்தேன். அவர் எனக்கு பாக்கின் (J S Bach) ஒரு இசைத்தட்டைப் பரிசளித்தது மட்டுமின்றி அதில் எழுதியுமிருந்தார்: “இந்த மேற்கத்திய உலகம் படைத்த அருமையானதொரு சங்கீத அமைப்பு இது,” என்று. எத்தனையோ முறை கேட்டு உடலும் உள்ளமும் சிலிர்த்திருக்கிறேன். பின்பு தீராத ஆவலுடன் ஒவ்வொரு  புதிய இசைத்தட்டாக வாங்கிக் கேட்டு ரசித்தும் இருக்கிறேன்.

இந்த இசையின் வளர்ச்சி பற்றி அறிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். அறிந்துகொண்டு பிரமித்திருக்கிறேன். தெரிந்துகொண்டதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

கி. பி. 800இன் பின் கத்தோலிக்க சர்ச்சின் தெய்வப்பாடல்கள் என்பனவே நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு இசைத்தொகுப்பாகும். இதன் பெரும்பகுதியை கிரெகொரியன் பாடல்கள் (Gregorial Chant) என்பார்கள். கி. பி. 9ம் நூற்றாண்டில் மிக்கியமான சில திருப்பங்கள் நிகழ்ந்தன.

4 முதல் 15ம் நூற்றாண்டுகளில் பைசான்டைன் (Byzantine) இசையமைப்பாளர்கள், தெய்வப்பாடல்கள், மற்றவகைப் பாடல்களை விருந்து நிகழ்ச்சிகள், நடனங்கள், திருவிழாக்கள், விளையாட்டுகள், நாடகங்கள், கொண்டாட்டங்கள் இவைகளுக்காக எழுதி இசையமைத்தனர். 

இசை மறுமலர்ச்சிக் காலம் (14 -15 நூற்றாண்டு), பரோக் (Baroque) இசை (பாக் முதலியோர்; 16 – 18ம் நூற்றாண்டு) கிளாசிக்கல் கால இசை (ஹாய்டென் (Joseph Haydn), மொசார்ட் (W A Mozart), பீதோவன், ஷூபெர்ட் (Schubert) ஆகியோர்; 18-19ம் நூற்றாண்டு) காதல் சார்ந்த இசையும் பீதோவன், மொசார்ட் போன்றவர்களால் அடுத்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது; மிகுந்த வரவேற்பையும் பெற்றது. ஷூமன் (Schuman) என்பவர் இதில் முக்கிய பங்கு வகித்தார். பின்பு ப்ராஹ்ம்ஸ், லிழ்ஸ்ட் (Lizst), வெர்டி (Verdi), வாக்னர், யோஹான் ஸ்ட்ரௌஸ் (Strauss) ஆகியோர் நிறைய இசையமைப்புகளை உருவாக்கினர். இக்காலங்களில் ஆபெரா (Opera) என அழைக்கப்படும் இசைநாடகம் போலும் அமைப்புகளும் பெருகி வளர்ந்தன. 20ம் நூற்றாண்டில் நவீனமான இசை, கிளாசிகல் இசை ஆகியனவும் தொடர்ந்து வளர்ந்தன. இவையனைத்தும் ஆர்கெஸ்டிரா (Symphony Orchestra) எனும் ஒரு அமைப்பில் அருமையான இசையை ரசிகர்களுக்கு வழங்கின. இதனை ஒருங்கிணைத்து நடத்துபவர் நடத்துனர் என அறியப்பட்டார். உலகெங்கும் இந்த இசை நிகழ்வுகளை நாம் கேட்கலாம். சென்று, கண்டு கேட்டு களித்து மகிழலாம்.

இசையார்வம் கொண்டவர்கள் இசை அமைப்புகளைப் புனைந்ததுடன் நில்லாமல் புதிது புதிதாக இசைக்கருவிகளையும் வடிவமைக்கத் தலைப்பட்டனர்.

பலவிதமான ஆராய்ச்சிகளும் இவற்றுடன் கலந்தே தொடர்ந்தன.  இவற்றிற்கெல்லாம் இன்னும் அதிகமாகச் செய்திகளும்  விளக்கங்களும் உண்டு. 

Chamber Music  என ஒரு வகை. ஒரு சில இசைக்கருவிகளுடன் வயலின் அல்லது பியானோவை இசைப்பார்கள். இதுவும் அருமையாக இருக்கும்.

நாம் அறிந்து கொள்ள வேண்டியது இவையனைத்தும் உலகினைத் திருவிழாவாகக் கொண்டாடியவர்களின் கலையுணர்வு, உலக மக்களுக்காக, அவர்களுடன் பகிர்ந்துகொண்டு இன்புறுவதற்காக என்னவெல்லாம் செய்தது, எந்தவிதமான இலக்கியம், எப்படிப்பட்ட இசையைப் படைத்தது என அறிந்து கொள்வதற்காகத்தான்.

ஆபரா எனும் அமைப்பு:

இது ஒரு மேற்கத்திய கலை வடிவம், இசை, பாடுதல், நடித்தல், மேடை ஜோடனைகள், ஆடையணிகள் எல்லாம் அமைந்து ஒரு மேடையில் பலர் முன்னால் அமர்ந்து பார்க்கும்படி செயல்படுத்துவதாகும். மக்கள் அதிக ஆர்வம் காண்பித்தமையால் பற்பல ஆபராக்கள், புனைகதைகள், சரித்திரக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதி அவ்வப் பாத்திரங்களாக வேடமிட்டுக்கொண்ட கலைஞர்களால் மேடைகளில் நடிக்கப்பட்டன; இன்றும்கூட நடிக்கப் படுகின்றன. இது ஒருவகையான முக்கியமான இசை அமைப்பு என்றே கருதப்படுகின்றது. சாவித்திரி, பத்மாவதி ஆகிய பழம்பெரும் பாரதத்தின் சில புராணக் கதைகள்கூட மற்ற மொழிகளில் ஆபராக்களாக இயற்றப்பெற்று நடிக்கப்பட்டுள்ளன! பெரும்பாலும் ஆபராக்களை, அதன் இசையை ஒருவர் இயற்றுவார், ஒருவர் அதன் வசனங்களை எழுதுவார், ஒருவர் இசையை நடத்துவார் (இவர் நடத்துனர் எனவே அறியப்படுவார்) மற்றும் பலர் பாத்திரங்களுக்கேற்ற வேடம் புனைந்து நடிப்பார்கள்; பாடுவார்கள்; பேசவும் செய்வார்கள். இவர்கள் இசை வல்லுனர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி! நம்மூர்போல இதற்கு ‘டப்பிங்’ கலைஞர்கள் கிடையாது!!

அமெரிக்காவில் வாழ்ந்த காலகட்டத்தில் சனிக்கிழமை தோறும் ‘Live from the Met’ எனும் நிகழ்ச்சி ரேடியோவில் ஒலிபரப்பாகும். அதில் நான் கேட்டுக் களித்த ஆபராக்கள் பல. பல ஆபராக்களை நேரில் சென்று கண்டு களித்தது பெர்லின் மாநகரில் தான்.

இந்த ஆபராக்களின் காட்சியமைப்புகள் ப்ரம்மாண்டமாக இருக்கும். ஐடா (Aida) எனும் ஆபராவில், ‘வெற்றி நடை’ (Triumphal March) எனும் ஒரு அம்சம். அற்புதமான இசையுடன் பலவிதமான உடையணிந்த நடிகர்கள், குதிரைமீது வரும் வீரர்கள் ஆகியோர் மேடையில் அணிவகுத்துச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

வெர்டி (Verdi) எனும் இசையமைப்பாளர் எழுதிய சில ஆபராக்கள்: Nabucco, Rigoletto, La Traviata, Aida, Othello 

Puccini எழுதிய சில: Madama Butterfly, Tosca, Turandot 

Mozart எழுதிய சில: 22-23 ஆபராக்களை இயற்றினார்; Don Giovanni, Le Nozze de Figaro, The Zauberflote. The Magic Flute  எனும் ஆபரா அவர் வாழ்ந்த காலத்திலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இன்னும் Wagner, மற்றும் பலர் ஆபராக்களைப் படைத்தனர்.

அற்புதமான சில ஆபரா பாடகர்கள்: Pavarotti, Domingo ஆகியோர்.

——————————-

பாலே (Ballet) நடனம்: இதற்கும் நல்ல கட்டுக்கோப்பான உடலமைப்பும், உறுதியான உடற்பயிற்சியும் ஆகாரமும் தேவை. இதற்கும் ஒரு கதையின் சூழலில் படைக்கப்பட்ட நடனங்கள் மிகவும் பிரசித்தம்.  Swan Lake, and The Nutcracker, Romeo and Juliet, Giselle, Copplia, Cinderella ஆகியவை உலகப் பிரசித்தம். இவற்றுள்  Copplia மிக அருமையானது. ஒரு இளைஞன் அழகான ஒரு பதுமையைக் கண்டு காதல் வயப்படுகிறான். மாய, மந்திர ஜாலங்கள் மனிதர்கள் வாழும் சூழலில் நடக்கின்றன. அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பாலே இதுவாகும்.

மற்றும் பலவிதமான கலை நிகழ்ச்சிகளை, வடிவங்களை வெவ்வேறு நாட்டுக் கலாச்சாரங்கள் படைத்துக் கொண்டாடின.

எகிப்து நாட்டைச் சேர்ந்த உம் குல்தும் (Um Kultum) எனும் ஒரு இசைப்பாடகி. நமது எம்.எஸ் அம்மாவுக்கு நிகரான புகழ் படைத்தவர். குரானிலிருந்தும், மற்ற பாடல்களையும் அராபிக் மொழியில் இசைப்பதில் வல்லவர். எகிப்து நாட்டு அதிபர் நாஸர் இவருடைய பாட்டை வானொலியில் ஒலிபரப்பும் நேரத்தில் தன்னுடைய நாட்டு மக்களுக்கான ஒலிபரப்பினை ரத்துகூட செய்துவிடுவாராம். அற்புதமான குரல்வளம் படைத்த இவருடைய நிகழ்ச்சிகளைக்கேட்க மற்ற தேசத்தவர், அரச குடும்பத்தினர் எல்லாரும் வந்து விடுவார்கள்; அரங்கமே நிரம்பி வழியும். சில ஒலிப்பதிவுகள் யூடியூபில் கிடைக்கின்றன. கேட்டு ரசிக்கலாம். அவற்றுள் ஒன்றான ‘எந்தா ஒம்ரி” ‘Ente Omri’ எனும் காதல் பாடல் மிகவும் இனிமையும் பொருளும் செறிந்தது. இது பாடப்படும்போது  ரசிகர்களின் உற்சாகம் கரைகடந்து போவதைக் கண்டு ரசிக்கலாம். 

(Kabuki) கபுகி எனும் கலைவடிவம்: இது ஜப்பானிய முறை நாடகம். மிகப்பழமையான 400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பாரம்பரியம் மிக்க இசை-நாட்டிய -நாடக வகை. (க- இசை; பு- நாட்டியம்; கி- நாடகம்.) இந்த 400 ஆண்டுகளில் கபுகி, மற்ற கலைகளிலிருந்தும், நவீன நாகரிகங்களிலிருந்தும் அவசியமானவற்றைத் தன்னுள் இணைத்துக் கொண்டு,  அசுரத்தனமான வளர்ச்சியை அடைந்து விட்டது என்கின்றனர்.

1600களில், ஆற்றங்கரைகளில், இசை நாடகமாக வளர ஆரம்பித்தது கபுகி. முற்றிலும் பெண்களே ஆண், பெண் இருவரின் பாத்திரங்களையும் ஏற்று நடித்தனர். அரசவையில் நடிக்கப் பெற்று, வெற்றிகரமான கலைநிகழ்ச்சியாக உருவான கபுகி நாட்டிய நாடகங்கள், பல்வேறு குழுக்களால் நடிக்கப் பெற்று பிரபலமாயின. ஆனால், அது பிரபலமானதென்னவோ, அதில் கண்ணியமற்ற ஆபாசமான முறையில் சித்தரிக்கப்பட்ட கருத்துக்களினாலும், அதனை நடித்த கலைஞர்கள் விபசாரத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருந்ததினால் தான். இதனாலேயே கபுகி அக்காலத்தில் ‘விபசாரிகளின் ஆடல் பாடல்’ என அறியப்பட்டதாம்!

இருந்தாலும் கணிசமாக வளர்ச்சியடைந்து, இவ்வாறு சிவப்பு விளக்குப் பகுதியாகப் பதிவு செய்யப்பட்ட ‘ஈடோ’ எனும் நகரில் பிரபலமான இக்கலை, பலவிதமான மக்களையும் கவர்ந்து ஓரிடத்தில் கூடச் செய்தது. நவீன நாகரிகங்களையும் நாட்டு நடப்புகளையும் விசேஷ அம்சங்களாகக் கொண்டிருந்த கபுகி என்ற இக்கலை வடிவம், புதுப்புது விதமான இசை, ஆடையணிகள், புகழ் பெற்ற கலைஞர்கள் எனக் கொண்டு மக்களை மகிழ்வித்தது. கபுகி கலையரங்குகளைச் சுற்றிலும் தேநீர் அருந்தகங்கள் அமைந்து, உணவு, சிற்றுண்டி, நண்பர்கள் சந்திப்பு என நிகழ ஏதுவாயின என்கின்றனர்.

1800களில் பலவிதமான கலாச்சார மாறுதல்கள் ஜப்பானில் நிகழ்ந்தன. சாமுராய்கள் ஒழிக்கப்பட்டனர்; ஜப்பான் மேற்கத்திய கலாச்சாரத்தினை வரவேற்றது; இக்காலத்தில், கபுகி திரும்பப் புது வடிவம் எடுத்தது. பழைய வடிவங்களை விடுத்துப் புதுமையான வடிவம் எடுத்தாலும் ஜப்பானின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் இசை நாடக வடிவமாகவே கபுகி அறியப்படுகின்றது. பெண்களும் இவற்றில் நடிகர்களாக அவ்வப்போது பங்கேற்க ஆரம்பித்தனர். இதன் ஆபாசமான பெயர் மாறியது.

கபுகி நாட்டிய நாடகங்களுக்காக விசேஷமான கலையரங்குகள் நிறுவப்பட்டன. இவற்றுள் ஒன்று தான் டோக்கியோவில் அமைந்துள்ள ‘கபுகிஸா’ (Kabukiza) கலையரங்கு. இதுதான் ஜப்பானிலேயே கபுகிக்காக உள்ள மிகப்பெரிய கலையரங்கு என்கின்றனர். மாதம் ஒரு கலை நிகழ்ச்சி கட்டாயம் இங்கு நடைபெற்றே தீரும். கலைஞர்களும் இங்கு பங்கேற்பதனை மிகவும் உயர்வாக மதிக்கின்றனர்.

மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ‘கபுகிஸா’ கலையரங்கு, மூன்று முறை தீக்கிரையாகி, உலகப்போரில் குண்டு வீச்சினால் பலமான சேதமுற்று பின் திரும்பத் திரும்பக் கட்டப்பட்ட கலையரங்கு! தற்போது உள்ள கலையரங்கு, கி. பி. 600-800 ஆண்டுகளிலும், 16-ம் நூற்றாண்டிலும் இருந்த கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளதாம். உட்புறம்  பாரம்பரிய முறையில் மரத்தினால் கட்டப்பட்டுப் பார்க்க மிக அழகாக இருக்கும் இக்கலையரங்கு வெளிப்புறம் ஒரு அரண்மனை போன்ற அமைப்பைக் கொண்டிருக்கிறது.

‘கபுகி’ என்பது கிட்டத்தட்ட இந்திய கதகளியைப் போன்றே நீண்ட நேரம் செலவழித்து முகப்பூச்சும் அலங்காரங்களும் செய்து கொண்ட கலைஞர்கள் நிகழ்த்தும் நிகழ்ச்சியாகும். எல்லாப் பாரம்பரிய நாட்டிய நாடகங்களும் விருப்பமுடன் நடத்தும் ஒரு ராஜா – ராணி கதை தான் சில திருப்பங்களுடன் நடிக்கப்படுகிறது. இதில் ஜப்பானியர்களின் கலாச்சாரமும், இசையும் பின்னிப் பிணைந்து வெளிப்படுகின்றன. கபுகியை ரசிப்பதும் ஒரு தனிக்கலை. அதற்கும் பயிற்சி தேவை! 

இவ்வளவு முனைப்பாக ஒரு கலையைப் போற்றி, வளர்த்து இருக்கச் செய்வதில் ஜப்பானியர்களுக்கு இணை அவர்களே!

(வாசகப் பெருமக்களுக்கு: இது ஒரு ஆய்வுக்கட்டுரையல்ல; இவ்வுலகில் பிறந்து உலகின் வாழ்க்கை எனும் திருவிழாக் கொண்டாட்டங்களில் பங்குபெறும்போது காண்பதும், கேட்பதும், அறிவதும், பகிர்வதுமான பல செய்திகளே! எத்தனை விளக்கங்கள், செய்திகள், அறிந்து களிக்க வேண்டியவை! )

கொண்டாட்டங்கள் தொடரும்!


Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.