‘ஓம்’ என்ற சப்தம் காற்றில் மிதந்து வந்தது; எங்கோ கேட்ட அந்த ஒலிவடிவம் மிகமிகப் பெருகி அதீதமான அதிர்வில் திரும்பத்திரும்ப இந்தப் பிரபஞ்சம் முழுதும் நிரம்பி வழிந்து பின்பு உணர்விலும் புகுந்து காணவியலாத அருவமாய் வியாபித்தது. நாதம் என்ற நிலையில் அது பிரவகித்தது. தெய்வம் எனப் பலரும் போற்றுவதொன்றின் தயை, இயற்கையின் பெரும் சக்தி என்றும் அறியப்படும் ‘உந்துதல் சக்தி’ எனப்படும் ‘அது’, மாயப்பேரலையாய் எங்கும் நிரம்பிப் பொங்கிற்று. அந்தக் காலவனத்தில் இருந்துகொண்டு வானில் வலம்வரும் மேகங்களைப் பார்த்துக்கொண்டும் அவற்றின் வடிவங்களைப் பற்றிய அனுமானங்களை மனதில் நிரப்பியபடியும், பேரானந்த அலைகளில் நீந்திக்கொண்டும் இருக்கிறது ‘அது’. தான் எங்கு செல்லப்போகிறோம் என யோசித்தது. அச்செயல் தனது விருப்பத்தின்படி தன்னால் நிகழ்த்திக் கொள்ளக் கூடியதென்றும் ‘அது’ அறிந்திருந்தது. உருவமும் வடிவமும் அற்ற அதற்கு சிந்தை, மனம், எண்ணம் எல்லாம் இருந்ததெப்படி என்பது வியப்புத்தான். அது இந்தப் பிரபஞ்சத்தின் பல விந்தைகளுள் ஒன்று. ‘அது’ இந்த உலகத் திருவிழாவின் கொண்டாட்டத்திற்கான அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தது.
இந்த உலகில் பிறப்பதற்கும், திருவிழாக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளவும், பாடவும், ஆடவும், தேடவும், அறியவும், இழக்கவும், அடையவும், வாழவும் இன்னும் என்னவெல்லாமோ….. அதற்காகத்தான் ஆவலாகக் காத்திருந்தது ‘அது’!
ஸ்ரீ அரவிந்தர் சொல்லுவார்: பிறப்பு ஒரு அதிசயம் என்று. கட்டாயமாக அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். காலவெள்ளத்தில் ஒரு பயணியாக இருக்கும் அதிசயம் கட்டாயமாக அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒவ்வொரு தருணத்தையும் உள்முகமாகச் சிந்தனைசெய்து பார்க்க வேண்டும். என்னவாகப் பிறக்கிறோம் என்பதுதான் இன்னும் பெரிய அதிசயம். யார் முடிவு செய்து இவ்வாறு பிறக்க அழைப்பு அனுப்பினார்கள்? பிறக்க வேண்டியது புழுவா, எலியா, நாயா, மரமா, கொடியா, புலியா, யானையா, மனிதனா? எல்லாவற்றிற்கும் வாழுமிடம் பூமிதான் (அவ்வாறு நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்).
இருந்தாற்போலிருந்து ஒரு பாடல், யாரோ ஓதுவார் போலிருக்கிறது, பாடுவது ‘அத’ன் காதில் கேட்டது.
‘எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்…’ என்கிறார் சிவநேசச் செல்வர். இளைப்பா? யாருக்கு? ‘நான் இன்னும் ஓடத் தயார்’ எனும் நிலையில் ‘அது’ தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டதொரு தாயின் கருப்பைக்குள் குடியேறுகிறது. ‘உலகத் திருவிழாவில் வந்து பங்கெடுத்துக்கொள்ள எனக்கு அழைப்பு வந்துவிட்டது’ என்ற மகிழ்ச்சியில் திளைத்தது.
தேவி சூக்தம் பிறப்பு, படைப்பு, இவற்றின் சூட்சுமத்தை அற்புதமாகக் கூறுவது. தேவி சூக்தம் கூறும் ஸ்லோகங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் நடப்புகளுக்கு மிகப் பொருத்தமானவை; அவற்றைப் பற்றிச் சிந்திப்பதற்கும் உகந்தவை:
அம்ப்ருணர் எனும் ரிஷியின் மகளாகிய வாக் எனும் உயர்ந்த ஞானம் பெற்ற பெண்ரிஷி தனது ஆத்ம அனுபவத்தால் (மெய்யுணர்வால்) தானே எல்லாமாக, தன்னையே அந்த பிரம்மமாகக் காண்கிறாள். தானே பூமி, ஆகாயம், மனிதன், தேவன், உணவு, காற்று என்றெல்லாம் கூறிக் கடைசியில் முடிக்கும் எட்டாவது ஸ்லோகம் மிகவும் ஆழமான கருத்துடையது.
‘உலகங்களைப் படைக்கத் தொடங்கும்போது நான் மற்றவர்களின் துணையின்றிக் காற்றாகப் பரிணமிக்கிறேன். நான் வானுக்கும் பூமிக்கும் அப்பால் உள்ளவள். இவ்வாறு அனைத்து உலகங்களுக்கும் ஆத்மாவாக விளங்கும் மகிமை உடையவள் நான்.’ (8)
அழைப்பும் படைப்பும் நிகழ்ந்து விட்டன.
~oOo~
தாயின் கருவில் ‘அது’ உயிராக வளர்கிறது. ஆஹா, இந்தத் தருணத்திற்காகத் தான் அத்துணை தாய்மாரும் தந்தைமாரும் உற்றரும் உறவினரும் காத்திருக்கிறார்கள். மானிடத்தாய் எண்ணிக்கொள்கிறாள்: ‘என்னுடைய இதயத்தில், அதன் ஒட்டுமொத்த விழைவாக நீ குடியிருக்கிறாய், கண்ணே!’ ‘என் உள்ளத்தில் நான் வழிபடும் தெய்வமாக நீ நிறைந்திருக்கிறாய்!’
இந்தக் குழந்தைக்காகவே நிகழ்த்தப்படும் சடங்குகளும், அதன் நன்மைக்காகவே செய்யப்படும், ஓதப்படும் மந்திரங்களும் தாயை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.
மானிடத் தாயின் கரங்களில் கலகலக்கும் கண்ணாடி வளையல்களை அடுக்குகிறார்கள்:
“வளை குலுங்கினாற்போல மழலைமொழி பேசும்
கிளை பெருகி வாழவே வளை சூட்டுகின்றோம்.”
பாடுகிறார்கள்.
‘அது’, அவனாகவோ, அவளாகவோ இவ்வுலகத்தில் வந்து பிறக்கும் முன்பே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விடுகின்றன.

அனைத்து உயிர் வாழினங்களும் தமது கருவில் வளரும் உயிரை, தனது தலையாய கடமைகளில் ஒன்றாகக் கருதியே பெற்று, வளர்த்து, ஆளாக்குகின்றன.
ஔவையார் கூறினார்:
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
மானிடப் பிறந்த காலை கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
(பேடு – ஆணுமன்று; பெண்ணுமன்று)
இவ்வுலகத்தினுள் ‘அது’ உயிரும் உடலுமாக நுழையும் முன்பே எத்தனையோ இடர்ப்பாடுகள். அறிவியல், மருத்துவம் ஆகியன ஆய்ந்து கண்டறிந்த பிறவிக் குறைபாடுகள்; இவையனைத்தும் இல்லாமல் ஒரு உயிர் பிறக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பலப்பல மருத்துவப் பரிசோதனைகள். குழந்தை கருவிலிருக்கும்போதே ‘அது’ குறைபாடுகளின்றி உருவாகி வளர்கின்றதா எனக் கண்டறியப் பல பரிசோதனைகள் தற்கால மருத்துவத்தில், அறிவியலில் உள்ளன.
“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்” (திருவாசகம்)
பெரிய யானை முதல் சிறிய எறும்பு வரை, உயிர்கள் எத்தனையோ வடிவாகப் பிறக்கின்றன. இவ்வுயிர்கள் தாம் பொருந்திய கருப்பைகளில் ஒன்றையொன்று ஒப்புடைய உயிர்த் தத்துவங்களுக்கிடையில் ஏற்படும் போராட்டங்களில் தப்பி அவற்றுள் ஒன்று பிழைத்து உருப்பெற்று வளருகின்றது. மனிதர்களாகப் பிறவி எடுத்தால் தாயின் கருப்பையில் நிகழும் கெடுதிகளுக்கு இறைவனருளால் தப்புகின்றன அல்லது பகுத்தறிவு வாதமாகக் கொண்டால் ‘வாய்ப்பு – தேவை’ (Chance & Necessity; Survival of the fittest – Darwin’s theory) முறையில் வெற்றிகரமாக உயிர் பிழைத்து வளருகின்றன.
தாயின் கருப்பையில் ஒரு மாதம் ஆனவுடன் கரு தனக்காக ஒரு வடிவினை எடுத்துக்கொள்கிறது. கருப்பையில் பொருந்தி ஒன்றுபடாது பிளவுபடுதலாகிய இருமையிலிருந்து தப்புகிறது. இரண்டாவது மாதத்தில் பேரிருளின் இடர்ப்பாட்டு மிகுதியால் உருவெடாமையில் இருந்து பிழைக்கிறது. தனக்கென ஒரு நிலையான உருவ வடிவை அடைகின்றது.
மூன்றாம் மாதத்தில் கரு வளர்வதற்கென்று பெருகும் கொழுப்பான நீர் மிகுதியிலிருந்து தப்புகிறது. இப்போதே அதற்கு உடலமைப்பு, கை, கால்கள், உடலின் உறுப்புக்கள் உருவாக ஆரம்பிக்கின்றன. கரு நீரினால் நான்காம் மாதம் கருப்பையில் இருள் மிகுந்தபோது அந்த இருளிலிருந்து தப்புகிறது. ஐந்தாம் மாதம் கருப்பையில் இருள் மிகுதியால் சாவதிலிருந்து தப்புகிறது.
ஆறாம் மாதத்தில் கொலைக்குக் காரணமாகிய பழிச்சொல்லுக்குத் தப்புகிறது. ஏழாம் மாதம் கருப்பை தாங்காமல் காயாய்ப் பூமியில் விழுவதிலிருந்து தப்புகிறது. எட்டாவது மாதம் கருப்பையில் உண்டாகும் வளர்ச்சி நெருக்கத்தினின்றும் தப்புகிறது. ஒன்பதாம் மாதம் வெளிப்பட இயலாது வரும் துன்பத்தில் இருந்தும் தப்புகிறது. பத்தாவது மாதம் தாயும் தானும் வெளிப்படுவதற்குப் படும் துயரக் கடலிலிருந்து தப்பி, நிலவுலகில் பிறந்து வளருகிறது. நெருக்கியும் அழுத்தியும் துன்புறுத்தலாகிய எத்தனையோ பல இடையூறுகளில் இருந்தும் பிழைக்கிறது.
பிறவிக் குறைபாடுகள் பல ரகங்கள். பிறக்கும்போதே உடல், மன, இதய, மூளைக்கோளாறுகளுடன் குழந்தை பிறக்கலாம். இவற்றில் சிலவற்றை மட்டுமே சரிப்படுத்த இயலும். சில குறைபாடுகள் அல்லது நோய்கள் குடும்பங்களில் இருப்பவை, தாய்வழி, தந்தைவழியில் மரபணுக்கள் மூலம் இவை குழந்தைகளுக்கும் வரும். அல்லது கருவுற்றிருக்கும் காலத்தில் சில மருந்துகளை முறையற்றுத் தவறாக உபயோகிப்பதனால் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும். இதற்கான உதாரணம் தாலிடோமைட் எனும் மருந்து.
தாலிடோமைட் (Thalodomide) எனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், கருவடைந்த பெண்களுக்கும் அவர்களது ‘காலைநேர உடல்சரியின்மை’ (நமது மொழியில் மசக்கை, morning sickness) எனும் நிலைக்காகவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. அது ஒரு அதிசய மருந்தாகவே அறியப்பட்டது.
ஜெர்மனியில் 1956-ல் ஒரு பெண்குழந்தை காது மடல்களில்லாமல் பிறந்தது. தாலிடோமைட் எனும் மருந்தின் பயங்கரமான பக்கவிளைவுகளால் தாக்கப்பட்ட முதல் பலி இக்குழந்தை (இது பின்னாளில் கண்டறியப்பட்டது). குழந்தை தன் கருவில் இருக்கும்போது தாய் இந்த மருந்தை உட்கொண்டதன் விளைவு / பாதிப்பு இது. 1962ல் எடுத்த கணக்கின்படி 46 நாடுகளில் அடுத்தடுத்த ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட சிசுக்கள் பயங்கரமாக பாதிக்கப்பட்டனர். கை கால்களில்லாமல் பிறந்த குழந்தைகள், தோளிலிருந்து மூன்று விரல்கள் குச்சிமாதிரி நீட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள் எனப் பலப்பல குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்தன. இவற்றுள் பல குழந்தைகள் பிறந்து சில நாட்களிலோ சில மாதங்களிலோ இறந்தும் போயின. (வேண்டுவோர் இணைய தளங்களுக்குச் சென்று இந்தப் படங்களைக் காணலாம்). எப்படி இது நடந்தது? மருந்து உபயோகிப்பதற்கு சரியான ஆராய்ச்சி முறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லையா எனப் பல கேள்விகள் எழலாம். Wonder drug – by Jennifer Vanderbes எனும் புத்தகத்தைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
Muscular dystrophy, Cerebral palsy, AUTISM ஆகியன இன்னுமே தீவிரமான உடற் குறைபாடுகள்.
Muscular dystrophy என்னும் முதலாவது, மரபணுக்களின் குறைபாட்டினால் ஆண்குழந்தைகளை மட்டுமே தாக்கி அவர்களுடைய தசைகளையும் உடலையும் சீரழித்து 20 வயதின் முன்பே அவர்கள் இறந்து விடுவார்கள். Cerebral palsy என்பது ஒருவிதமான நரம்புத் தளர்ச்சி நோய். உடலின் பல பகுதிகளிலும் தசைகள் பயனற்றுப் போய்விடும். மூளை சரியாக வளர்ச்சியடையாததனால் வரும் வியாதி இது. AUTISM எனும் நோய்க்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. மரபணுக்கள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், முதலியன. இன்னும் பல இங்கு கூறப்படவில்லை.
இந்த நோய்களால் தாக்கப்படாமல் குழந்தை உருவாகி வளர்வதற்காகவே பல சடங்குகள் செய்யப்படுகின்றன. பிறக்கப்போகும் குழந்தையின் நன்மைக்காக பும்சவனம் எனும் சடங்கு சில குடும்பங்களில் செய்யப்படும். சீமந்தம், வளைகாப்பு எனும் சடங்குகள் அன்னையின் மனது மகிழ்ச்சியாக இருக்கவும், குழந்தையின் நன்மைக்காகவும் நடத்தப்படும்.
இந்த நோய்கள் எல்லாம் இல்லாமல் குழந்தை உலகில் பிறந்து விட்டது என்பதே கொண்டாட்டம்தானே! அதைத்தான் ஔவையார் ‘கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தலரிது’ என்றார்.
பெற்றோரும் உற்றாரும் ‘அதன்’ பிறப்பை ஒட்டி மகிழ்ச்சியடைகிறார்கள்.
(தொடர்ந்து காண்போம்)
~oOo~
உசாத்துணை:
1. <https://land.auroville.org/sonnets-by-sri-aurobindo/>
2. தேவி சூக்தம். (ராமகிருஷ்ண மடம்)
3. சிவபுராணம்- திருவாசகம்- மாணிக்கவாசகர்
4. Chance and Necessity- Essay on the Natural Philosophy of Modern Biology by Jaques Monod.
5. ஔவையார்- தனிப்பாடல்கள்
6. Wonder drug by Jennifer Vanderbes.
7. பிரமிக்க வைத்த புத்தகங்கள் – 4 – மீனாக்ஷி பாலகணேஷ்- April 16, 2024
In Kuvikam magazine. அதிசய மருந்து – ஜென்னிஃபெர் வாண்டெர்பெஸ்
Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
