கூட்டாட்சி தகுதிபெற்ற சுகாதார மையங்கள் (FQHC)

This entry is part 28 of 17 in the series பொது நலம்

FQHC (Federally Qualified Health Centers) என்பது அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட, சமூக அடிப்படையிலான சுகாதார மையங்கள் ஆகும். இவை வருமானம், சுகாதாரக் காப்பீடு அல்லது குடியுரிமைத் தகுதி/அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து மக்களுக்கும் உயர்தர முதன்மை சுகாதாரச் சேவைகளை வழங்குகின்றன. அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் (HHS) கீழ் இயங்கும் HRSA (Health Resources and Services Administration) அமைப்பின் சுகாதார மையத் திட்டத்தின் (Health Center Program) மூலம் இவை நிதியுதவியும் விதிகள் சார்ந்த மேற்பார்வையையும் பெறுகின்றன.

1960-களில் அமெரிக்க அதிபர் லிண்டன் பி. ஜான்சனின் “வறுமைக்கு எதிரான போர்” (War on Poverty) திட்டத்தின் கீழ் முதன்முதலில் ‘சமூக சுகாதார மையங்கள்’ (Community Health Centers) உருவாக்கப்பட்டன. மருத்துவ வசதி குறைந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

1989-ஆம் ஆண்டின் Omnibus Budget Reconciliation Act மூலம் ‘FQHC’ என்ற அதிகாரப்பூர்வ அந்தஸ்து உருவாக்கப்பட்டது. இது மெடிகேட் (Medicaid) மற்றும் மெடிகேர் (Medicare) மூலமாக இந்த மையங்களுக்கு உரிய கட்டண மறுபூர்த்தி (Cost-based reimbursement) கிடைக்க வழிவகை செய்தது.

ஆஃபோர்டபிள் கேர் ஆக்ட் (Affordable Care Act) மூலம் FQHC மைய விரிவாக்கத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் மில்லியன் கணக்கான புதிய நோயாளிகளுக்குச் சேவை செய்ய உதவியது.

நாடு முழுதும், சுமார் 1,400-க்கும் மேற்பட்ட FQHC நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த 1,400+ நிறுவனங்கள் மூலமாக அமெரிக்காவின் 50 மாநிலங்கள், கொலம்பியா மாவட்டம் (D.C.), மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் 15,000-க்கும் மேற்பட்ட கிளினிக் சேவை மையங்கள் (Service Delivery Sites) இயங்குகின்றன.

ஆண்டுதோறும் சுமார் 30.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (அமெரிக்க மக்களில் 11 பேரில் ஒருவர்) இந்த மையங்கள் மூலம் பலனடைகின்றனர். இதில் 90% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் அல்லது அதற்கு நெருக்கமான வருமானம் கொண்டவர்கள்; சுமார் 20% பேர் காப்பீடு இல்லாதவர்கள் (Uninsured).

கீழே உள்ள அட்டவணை எந்த வகையான சிகிச்சைகள் வழங்கப்படும் என்பதைக் குறிக்கும்.

சேவை வகைவழங்கப்படும் குறிப்பிட்ட சிகிச்சைகள் / சேவைகள் 
முதன்மை மருத்துவம் (Primary Medical Care)பொது மருத்துவப் பரிசோதனைகள், நாட்பட்ட நோய்கள் பராமரிப்பு (நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா), தடுப்பூசிகள், தொற்றுநோய் சிகிச்சைகள்.
பல் மருத்துவம் (Dental Care)பல் பரிசோதனை, சுத்தப்படுத்துதல், எக்ஸ்-ரே, பல் அடைத்தல், பிரித்தெடுத்தல் மற்றும் சிறு வாய்வழி அறுவைசிகிச்சைகள்.
மனநலம் & நடத்தை ஆரோக்கியம் (Mental & Behavioral Health)மன அழுத்த ஆலோசனைகள் (Counseling), உளவியல் சிகிச்சைகள், போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சேவைகள் (Substance Use Disorder services).
மகப்பேறு & குழந்தைகள் நலன் (Women & Child Care)கர்ப்பகால பராமரிப்பு (Prenatal care), பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு, குடும்பக் கட்டுப்பாடு, குழந்தைகள் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் குழந்தை மருத்துவம்.
மருந்தகம் & பரிசோதனைக்கூடங்கள் (Pharmacy & Lab)340B திட்டத்தின் கீழ் மலிவு விலையில் மருந்துகள் வழங்குதல், ரத்தப் பரிசோதனை மற்றும் பிற ஆய்வகச் சேவைகள்.
ஆதரவு சேவைகள் (Enabling Services)மொழி பெயர்ப்பு சேவைகள் (Translators), போக்குவரத்து வசதி, சுகாதாரக் காப்பீடு பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்.

HRSA-வின் Bureau of Primary Health Care (BPHC) வெளியிட்டுள்ள இணக்கக் கையேடு (Compliance Manual), ஒரு FQHC எவ்வாறு இயங்க வேண்டும், அதன் சட்டப்பூர்வக் கடமைகள் என்ன என்பதை 21 அத்தியாயங்களாகப் பிரித்து விவரிக்கிறது:

FQHC அல்லது Look-Alike அந்தஸ்து பெற தனியார் இலாப நோக்கற்ற அமைப்பாகவோ (Non-Profit) அல்லது அரசு நிறுவனமாகவோ (Public Agency) இருக்க வேண்டும். பழங்குடியின அமைப்புகளுக்கும் (Tribal Organizations) தகுதியுண்டு.

BPHC வழங்கும் நிதியுதவி மற்றும் திட்டங்களைப் பெற்று செயலாற்றும் இந்த அமைப்புகளுக்கு பல கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் உள்ளன.

தங்களது சேவைப் பகுதியில் (Service Area) உள்ள மக்களின் சுகாதாரத் தேவைகள், வறுமை நிலை மற்றும் மருத்துவப் பற்றாக்குறையைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்து தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டாயமாக முதன்மை சிகிச்சைகள், பல் மருத்துவம், மனநலம், அவசர சிகிச்சை மற்றும் ஆதரவுச் சேவைகளை நேரடியாகவோ அல்லது ஒப்பந்தங்கள் மூலமாகவோ வழங்க வேண்டும்.

தகுதியான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் உரிமங்கள் (Licensing) மற்றும் சான்றிதழ்களை (Credentialing and Privileging) சரிபார்த்து தேவையான தொடர்கல்வி வழங்கப்பட வேண்டும்.

மக்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் மைய அமைவிடமும், வார இறுதி நாட்கள் உட்பட போதுமான வேலை நேரங்களும் இருக்க வேண்டும்.

வேலை நேரத்திற்குப் பிறகும் (24/7) அவசர மருத்துவ ஆலோசனைகள் பெற வழிவகை செய்யப்பட வேண்டும்.

நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போதும், அங்கிருந்து திரும்பும்போதும் தொடர் சிகிச்சையை உறுதிசெய்ய மருத்துவமனைகளுடன் உடன்படிக்கை (Admitting Privileges / Agreements) ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளின் குடும்ப வருமானத்திற்கு ஏற்ப தள்ளுபடி வழங்கும் முறை அவசியம். கூட்டாட்சி வறுமை நிலைக்கு (FPL) 100%-க்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுக் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும்.

கூட்டாட்சி நிதியை நிர்வகிக்க முறையான கணக்கியல் மற்றும் தணிக்கை அமைப்புகள் (Auditing) இருத்தல் வேண்டும்.

மெடிகேட், மெடிகேர் மற்றும் பிற காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து சரியாகக் கட்டணங்களைப் பெறுவதும், நோயாளிகளிடம் நியாயமான வசூல் முறையைப் பின்பற்றுவதும் மிக அவசியம்.

வருடாந்திர வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து BPHC ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.

தலைமை நிர்வாக அதிகாரி (CEO), நிதி அதிகாரி (CFO) மற்றும் மருத்துவ அதிகாரி (CMO) போன்ற முக்கிய அதிகாரிகளின் நியமனம் அவசியம்.

FQHC-ன் முதன்மை அதிகார அமைப்பாக அதன் நிர்வாகக் குழு (Governing Board) செயல்பட வேண்டும். வரவு செலவு, கொள்கைகள் மற்றும் த்லைமை அதிகாரியின் நியமனம் ஆகியவை போர்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

நிர்வாகக் குழுவில் (Board of Directors) குறைந்தது 51% உறுப்பினர்கள் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது சமூகப் பங்கேற்பை உறுதி செய்கிறது.

வெளி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் துணை நிதியுதவிகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் சுயநல மோதல்கள் (Conflict of Interest) இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்தல்.

பகுதியில் உள்ள பிற மருத்துவமனைகள், அரசு அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்.

சிகிச்சைத் தரத்தை உயர்த்த தொடர்ச்சியான “தர மேம்பாட்டுத் திட்டம்” (QI/QA Program) செயல்படுத்தப்பட வேண்டும்.

UDS (Uniform Data System) தரவுகளை ஆண்டுதோறும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்

FQHC மருத்துவர்கள் மீது சாட்டப்படும் மருத்துவக் கவனக்குறைவு வழக்குகளுக்கு (Medical Malpractice) கூட்டாட்சி அரசே சட்டப்பூர்வப் பாதுகாப்பு (Federal Malpractice Coverage) வழங்குகிறது.

FQHC-கள் வெறும் மருத்துவமனைகள் மட்டுமல்ல; அவை அமெரிக்க சமூகத்தின் சுகாதாரச் சமத்துவத்தை (Health Equity) தாங்கிப் பிடிக்கும் முதன்மைத் தூண்கள். HRSA BPHC-ன் 21 அத்தியாயங்கள் கொண்ட இணக்கக் கையேடு (Compliance Manual), இமையங்கள் மிக உயர்ந்த நிதி வெளிப்படைத்தன்மை, மருத்துவத் தரம் மற்றும் சமூகப் பங்கேற்புடன் இயங்குவதை உறுதி செய்கிறது.

பொது நலம்

மெடிக்கேர் (Medicare) 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூட்டாட்சி சுகாதாரக் காப்பீடு

Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.