- பொது நலம், மேரி டைபாய்ட் கதை மற்றும் சமூக நலன் ஓர் அறிமுகம்
- தடுப்பூசிகளின் வரலாறு
- தடுப்பூசிகளின் அலை
- தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
- தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?
- பொதுநலக் கொள்கைகள்- 101
- உடல்நலக் கல்வி
- கூட்டு முயற்சியும் பொது நலமும்
- உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி
- காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா
தடுப்பூசிகள் ஒரு காலத்தில் விவாதிக்கப்பட்ட, சந்தேகிக்கப்பட்ட மருத்து உலகின் சஞ்சீவினி. ஆனால் இன்றோ பில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் கவசங்கள். இவை மனிதகுலத்தின் வரலாற்றை மாற்றியமைத்திருக்கின்றன. இது வெறும் அறிவியல் கதை அல்ல; இது பயம், தியாகம், முட்டாள்தனம், மற்றும் மாபெரும் கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஒரு ஆழமான வரலாறு
அலி மாவ் மாலின் சோமாலியாவின் மெர்கா நகர மருத்துவமனையில் சமையல்காரராகப் பணியாற்றிய ஒரு எளிய இளைஞன்.
1977 அக்டோபர் 12 அன்று, அலி ஒரு முக்கியத் தவறைச் செய்தார். பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுடன் வழி தேடிக்கொண்டிருந்த ஒரு வண்டி ஓட்டுநருக்கு உதவி செய்தார். பத்து நாட்களுக்குப் பிறகு அவருக்குப் பெரியம்மை உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் இங்கேதான் வரலாற்று முரண்பாடு காத்திருந்தது. அலி தடுப்பூசி பிரச்சாரத்தில் ஊசி போடுபவராகவே வேலை செய்தவர். ஆனால் அவர் ஏன் தானே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
“நான் அப்போது தடுப்பூசி போடுவதற்கு பயந்தேன். ஊசி வலிக்கும் போல் தெரிந்தது,” என்று அவர் ஒப்புக்கொண்டார். தடுப்பூசி போடுபவர்கள் வரும்போது, தான் ஏற்கனவே போட்டுவிட்டதுபோல் நடித்து தப்பித்துவிடுவார்.
அந்த ஒரு பயம், அந்த ஒரு முட்டாள்தனமான தவிர்ப்பு, அவரை வரலாற்றில் பிரபலமாக்கியது. அலி மாவ் மாலின் – உலகில் இயற்கையாக பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதர்!
அலிக்கு நோய் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, உடனடியாக 54,777 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. வைரஸ் பரவவில்லை.
இந்த வெற்றியில், வையத் ஆய்வகத்தின் (Wyeth Laboratories)-ன் பெஞ்சமின் ரூபின் கண்டுபிடித்த இரு முனை ஊசி (bifurcated needle) முக்கியப் பங்கு வகித்தது. இது தடுப்பூசியின் அளவில் $1/4$ மட்டுமே பயன்படுத்தியது , பயன்படுத்த எளிதானது , மற்றும் இலகுவான பயிற்சி போதும் என்பதால் , களப் பணிகளுக்குச் சரியானதாக இருந்தது.
1979 அக்டோபர் 26 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு தைரியமான இலக்கை முடித்து வைத்தது: “பெரியம்மை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது!” என்று கூறியது மனித வரலாற்றில் முதல் முறையாக, ஒரு நோய் முழுமையாக அழிக்கப்பட்டது.
1950களில் அமெரிக்கப் பெற்றோரை போலியோ என்ற பெயர் உலுக்கியது. கோடைகாலம் அச்சத்தை கொண்டு வந்தது. ஒரு சாதாரண கழுத்து வலி, நிரந்தர முடக்கமாக மாறும் சாத்தியம் இருந்தது.
1952-ல், 58,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டனர், அதில் 3,145 இறந்தனர், 21,269 பேர் நிரந்தரமாக முடங்கிப்போனார்கள்.
ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், “ஒவ்வொருவரும் ஒரு டைம் (10 சென்ட்) ஆராச்சிக்காக கொடுங்கள்!” என்றார். கோடிக்கணக்கான டாலர்கள் சேகரிக்கப்பட்டு, இளம் விஞ்ஞானி ஜோனாஸ் சால்க்கை சென்றடைந்தது.
சால்க், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில், இறந்த நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பூசியை உருவாக்கினார். முதலில் அவர் சோதித்தது தன்னையும், தன் மனைவியையும், தன் மூன்று மகன்களையும்!
1954 ஏப்ரல் 26 அன்று, 1.8 மில்லியன் குழந்தைகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவச் சோதனை தொடங்கியது. 1955 ஏப்ரல் 12 அன்று, தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் 80-90% பயனுள்ளது என்று அறிவிக்கப்பட்டத. நாடு முழுவதும் கொண்டாட்டம்!
ஆனால் இந்த வெற்றிக்குச் சிகரம் வைத்தது சால்க்கின் மனிதநேயம். ஒரு நேர்காணலாளர், “இதற்கான காப்புரிமை யாருக்குச் சொந்தம்?” என்று கேட்டபோது, சால்க் அப்போது
“மக்களுக்குத் தான் சொந்தம். நிறுவனத்துக்கோ எனக்கோ காப்புரிமை இல்லை என்றுதான் சொல்வேன். சூரியனுக்கு காப்புரிமை எடுக்க முடியுமா?” என்று கூறினார்
வெற்றியின் மகிழ்ச்சி நீடிப்பதற்குள், கட்டர் ஆய்வகம் தயாரித்த தடுப்பூசியால் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கட்டர் தடுப்பூசியில் உயிருள்ள, வலிமையான போலியோ வைரஸ் இருந்தது.
அந்த ஆய்வகத்தின் தடுப்பூசியால் 120,000 குழந்தைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்; 200 குழந்தைகள் நிரந்தரமாக முடங்கினர்; 15 பேர் இறந்தனர் (குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்).
இந்த விபத்து சட்ட வரலாற்றை மாற்றியது. “Liability without fault” (தவறு இல்லாமலேயே பொறுப்பு) என்ற புதிய சட்டம் பிறந்தது. இது நிறுவனங்களை பயமுறுத்தவே, பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திக்கொண்டன. எனினும், இந்த சோகம்தான் கடுமையான பாதுகாப்பு விதிகள் .மற்றும் National Vaccine Injury Compensation Program 40 உருவாக்கப்படக் காரணமாக அமைந்தது.போலியோ மற்றும் பெரியம்மைக்கு இடையிலும், அதற்குப் பிறகும் பல முக்கியமான தடுப்பூசிகள் மனிதகுலத்தைக் காப்பாற்றியுள்ளன.
| நோய் பாதுகாப்பு | தடுப்பூசி உதாரணம் | முக்கியத்துவம் |
|---|---|---|
| தட்டம்மை, புட்டாளம்மை, ரூபெல்லா | MMR | இந்த நோய்களைக் குழந்தைகளுக்குத் தடுக்கும் பொதுவான தடுப்பூசி. |
| காசநோய் (TB) | BCG | இன்றும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. |
| கல்லீரல் அழற்சி (Hepatitis) | Hep A & Hep B | கல்லீரலைப் பாதுகாக்கும் முக்கியமான கவசங்கள். |
| மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) | பயணிகளுக்கும், அபாயகரமான பகுதிகளுக்கும் அத்தியாவசியமானது. | |
| மனித பாப்பிலோமா வைரஸ் | HPV | கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய்களைத் தடுக்கிறது. |
| மலேரியா | RTS,S (Mosquirix) | 3000 ஆண்டுகால எதிரியான மலேரியாவுக்கு எதிராக 2019-ல் தொடங்கப்பட்ட முதல் தடுப்பூசி. இது குழந்தைகளில் மரணங்களை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. |
2020 ஜனவரியில் SARS-CoV-2 வைரஸின் மரபணு வரிசை பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே, Moderna விஞ்ஞானிகள் தங்கள் தடுப்பூசியை வடிவமைக்கத் தொடங்கினர். ஒரு வருடத்திற்குள், ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் அவசர அனுமதி பெற்றன.
இந்த வேகம், 30 ஆண்டுகால ஆராய்ச்சியின் பலனாகும்.

2005-ல், கேட்டலின் காரிகோ(Katalin Karikó )மற்றும் டிரூ வெய்ஸ்மான் ( Drew Weissman) (Penn Medicine) ஆகியோர், mRNA-ஐ சிறிய மாற்றம் செய்து, உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதைத் தாக்காமல் இருக்கச் செய்தனர்.
இந்த கண்டுபிடிப்புக்காக, 2023 அக்டோபர் 2 அன்று, இருவரும்ஆகியோர் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றனர்.
mRNA தொழில்நுட்பம் தொற்றுநோய்களுடன் நிற்கப்போவதில்லை. எதிர்காலத்தில் சொந்த உடலமைக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் (customizable) வகையிலும் விரைவான சிகிச்சை முறைகளுக்கும் வழி வகுக்கும்:
- புற்றுநோய் தடுப்பூசிகள்: mRNA தொழில்நுட்பம் அவரவர் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை உருவாக்க உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டியின் மரபணுக்களை ஆராய்ந்து , அதற்கேற்ப தடுப்பூசி உருவாக்கி, நோயெதிர்ப்பு அமைப்பை அந்த குறிப்பிட்ட புற்றுநோய் செல்களைத் தாக்கத் தூண்ட முடியும்.
- HIV & TB: 40 ஆண்டுகாலத் தேடலுக்குப் பிறகு, mRNA தொழில்நுட்பம் HIV தடுப்பூசிக்கான மற்றும் சிறந்த காசநோய் தடுப்பூசிக்கான . புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
- மூளை நோய்கள்: Alzheimer’s, Parkinson’s போன்ற நரம்பியல் சிதைவு நோய்களுக்குக் கூட தடுப்பூசி சாத்தியமா என்று ஆராய்ச்சி நடைபெறுகிறது.
இதுவரை தடுப்பூசிகளின் வரலாற்றைப் பார்த்தோம். வரும் வாரம் தடுப்பூசிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பார்க்கலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
