- பொது நலம், மேரி டைபாய்ட் கதை மற்றும் சமூக நலன் ஓர் அறிமுகம்
- தடுப்பூசிகளின் வரலாறு
- தடுப்பூசிகளின் அலை
- தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
- தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?
- பொதுநலக் கொள்கைகள்- 101
- உடல்நலக் கல்வி
- கூட்டு முயற்சியும் பொது நலமும்
- உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி
- காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா
நமது உடலை ஒரு கோட்டையாகக் கருதினால், அதைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் எதிரிப் படைகள். இந்தப் படைகளை எதிர்கொள்ள நம்மிடம் ‘நோய் எதிர்ப்பு மண்டலம்’ எனும் ஒரு ராணுவம் உள்ளது. இந்த ராணுவத்திற்கு முறையான போர்ப் பயிற்சி அளித்து, உடலைப் பாதுகாப்பதே தடுப்பூசிகளின் வேலை.

உடலின் பாதுகாப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது? (The Adaptive Immune Response)
ஒரு புதிய கிருமி உடலுக்குள் நுழையும் போது, நமது வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) விழிப்புடன் செயல்படுகின்றன. நமது உடல் ஒரு மும்முனைத் தாக்குதலுக்கு ஆயத்தமாகுகிறது.
- மேக்ரோபேஜ்கள் (Macrophages): இவை கிருமிகளை விழுங்கி அழிக்கும் செல்கள். இவை கிருமிகளின் சில பகுதிகளை ‘ஆன்டிஜென்கள்’ (Antigens) என அடையாளம் காண்கின்றன.
- பி-லிம்போசைட்டுகள் (B-lymphocytes): இவை அந்த ஆன்டிஜென்களுக்கு எதிராகப் போராட ‘ஆன்டிபாடிகள்’ (Antibodies) எனும் ஏவுகணைகளைத் தயாரிக்கின்றன.
- டி-லிம்போசைட்டுகள் (T-lymphocytes): இவை கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களைத் தேடி அழிக்கும் தற்காப்புப் படை.இந்த டி லிம்போசைட்களுக்கு நினைவுகளைச் சேகரிக்கும் திறனும் உண்டு.
ஒரு கிருமி முதல்முறை தாக்கும் போது, இந்த ராணுவம் தயாராகப் பல நாட்கள் ஆகலாம். ஆனால், அந்தப் போருக்குப் பிறகு, நமது உடல் அந்தக் கிருமியின் தன்மையை ‘மனப்பாடம்’ (Immune Memory) செய்து கொள்கிறது. இந்த ஆண்டிபாடிகள், கிருமிகளின் வடிவத்தோடு பூட்டும் சாவியையும் போல பொருந்திக்கொண்டு அழிக்கின்றன.

கிருமிகளின் தன்மைக்கு ஏற்ப தடுப்பூசிகள் வெவ்வேறு விதமாகத் தயாரிக்கப்படுகின்றன.
கீழ்க்காணும் அட்டவணை பல்வேறு வகைகளையும் அவற்றின் தன்மைகளையும் சொல்கின்றன.
| தடுப்பூசி வகை | செயல்படும் விதம் | உதாரணம் |
| நேரடி பலவீனமானவை | உயிருள்ள ஆனால் வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள். | MMR, சின்னம்மை |
| செயலிழந்தவை | கொல்லப்பட்ட அல்லது செயலிழக்கச் செய்யப்பட்ட கிருமிகள். | போலியோ (IPV) |
| டாக்ஸாய்டு (Toxoid) | பாக்டீரியாக்கள் உருவாக்கும் நச்சுகளைப் பலவீனப்படுத்தித் தயாரிப்பவை. | டெட்டனஸ், BCG |
| mRNA தொழில்நுட்பம் | கிருமியின் ஒரு பகுதியை உடல் தயாரிக்கத் தேவையான தகவலை அளித்தல். | கோவிட்-19 (Pfizer/Moderna) |
சில தடுப்பூசிகள் வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் போது, ஃப்ளூ போன்றவற்றை ஆண்டுதோறும் போட வேண்டியதன் காரணம் கிருமியின் வீரியம் மற்றும் அதன் உருமாற்றம் கொள்ளும் (Mutation)தன்மையை பொருத்தது ஆகும்.
மீசில்ஸ் அல்லது காச நோயை உருவாக்கும் மைக்கோபாக்டீரியம் போன்ற நிலையான கிருமிகள் (MMR, BCG காலப்போக்கில் தங்களின் உருவத்தை அடிக்கடி மாற்றுவதில்லை. எனவே, ஒருமுறை நமது உடல் அவற்றைக் கண்டு பிடித்துவிட்டால், நினைவகச் செல்கள் (Memory B and T cells) ஆயுள் முழுவதும் பாதுகாக்கும்.
ஃப்ளூ வைரஸ்கள் தங்களை மிக வேகமாக மாற்றிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவில் இவை வருவதால், பழைய தடுப்பூசியால் உருவான ஆன்டிபாடிகளால் புதிய வைரஸை அடையாளம் காண முடியாது.
சில தடுப்பூசிகள் வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் போது, ஃப்ளூ போன்ற தடுப்பூசிகளை ஆண்டுதோறும் ஏன் போட வேண்டும் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன:
தட்டம்மை (Measles) போன்ற வைரஸ்கள் காலப்போக்கில் உருமாறுவது மிகக் குறைவு. 1960-களில் உருவாக்கப்பட்ட தட்டம்மை தடுப்பூசி இன்றும் அதே அளவு வீரியத்துடன் செயல்பட இதுவே காரணம்.
ஃப்ளூ வைரஸ்கள் தங்களை மிக வேகமாக உருமாற்றிக் கொள்கின்றன. அவற்றின் மேற்பரப்பில் உள்ள புரதங்கள் (Face ID போன்றது) அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதனால் கடந்த ஆண்டு போட்ட தடுப்பூசி மூலம் உருவான ஆன்டிபாடிகள், இந்த ஆண்டு உருமாறிய புதிய ஃப்ளூ வைரஸை அடையாளம் காண முடியாமல் போகிறது.
இன்னொரு முக்கிய காரணம் நோயெதிர்ப்பு நினைவாற்றல் சக்தி. இது கிருமியின் வடிவமைப்பை ஒத்து உருவாகும் ஆண்டிபாடிகளைப் பொருத்தது. மேலும் அந்த ஆண்டிபாடிகளின் வாழ்நாளையும் பொறுத்தது.
தடுப்பூசிகள் நம் உடலில் ‘நினைவகச் செல்களை’ (Memory Cells) உருவாக்குகின்றன. சில நோய்களுக்கு எதிரான இந்த நினைவகம் உடலில் மிக வலிமையாகவும் நீண்ட காலமும் தங்கியிருக்கும்.
ஃப்ளூ போன்ற சில வைரஸ்களுக்கு எதிராக உடல் உருவாக்கும் ஆன்டிபாடிகளின் அளவு காலப்போக்கில் குறையக்கூடும், எனவே கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது.
ஃப்ளூ வைரஸில் ஏழு வெவ்வேறு குரோமோசோம்கள் உள்ளன, அவை தங்களுக்குள் மரபணுக்களை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவை. இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பருவத்தில் பரவும் வைரஸ் வகைக்கு ஏற்ப “புதிய வடிவமைப்பில்” (Redesigned) ஃப்ளூ தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.
வைரஸ்கள் அவற்றின் மரபணு கட்டமைப்பின் அடிப்படையில் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன, இதில் டிஎன்ஏ வைரஸ்கள் பொதுவாக ஆர்என்ஏ வைரஸ்களை விட அதிக நிலைத்தன்மை கொண்டவை. இதற்கு முக்கியக் காரணம் டிஎன்ஏ வைரஸ்களிடம் உள்ள ‘பிழை திருத்தும் முறை’ (Proofreading mechanism) ஆகும்; இவை தங்களைப் பெருக்கிக்கொள்ளும் போது மரபணு இழையில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அவற்றைச் சரிசெய்துவிடும், இதனால் இவை மிக மெதுவாகவே உருமாற்றம் அடைகின்றன.
மாறாக, ஆர்என்ஏ வைரஸ்களிடம் இத்தகைய திருத்தும் வசதி இல்லாததால் அவை அசுர வேகத்தில் உருமாறிக்கொண்டே இருக்கின்றன, இதனால்தான் இன்ஃப்ளூயன்ஸா போன்ற ஆர்என்ஏ வைரஸ்களுக்கு நாம் ஆண்டுதோறும் புதிய தடுப்பூசிகளைப் போட வேண்டியுள்ளது.
டிஎன்ஏ வைரஸ்கள் (எ.கா: ஹெபடைடிஸ் பி, பெரியம்மை) பெரிய அளவில் தங்களை மாற்றிக்கொள்ளாததால், அவற்றுக்கு எதிராக ஒருமுறை அல்லது சில தவணைகளில் போடப்படும் தடுப்பூசிகள் நம் உடலில் நீண்ட கால நினைவாற்றல் செல்களை உருவாக்கி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குகின்றன.
ஒரு தடுப்பூசி என்பது அடிப்படையில் நம் உடலுக்கு ஒரு வைரஸை அடையாளம் காட்ட உதவும் பயிற்சியாகும்; டிஎன்ஏ வைரஸ் அதன் உருவத்தை அடிக்கடி மாற்றாத வரை, நம் உடல் ஒருமுறை கற்றுக் கொண்ட அடையாளத்தை வைத்து அந்த வைரஸை எப்போதும் தடுத்துவிடும். எனவேதான், டிஎன்ஏ வைரஸ் நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் பெரும்பாலும் ஒருமுறை போட்டாலே போதுமானதாக அமைகின்றன, இதுவே உலகிலிருந்து பெரியம்மை போன்ற நோய்களை முற்றிலும் ஒழிக்க மனிதகுலத்திற்குப் பெரும் உதவியாக இருந்தது
கிருமி மாறாமல் இருந்தால் தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பலன் தரும். கிருமி அடிக்கடி உருமாறினால் (ஃப்ளூ போல), நாமும் அடிக்கடி தடுப்பூசியைப் புதுப்பிக்க வேண்டும்.
கோவிட்-19 வைரஸின் ‘ஸ்பைக் புரோட்டீன்’ (Spike Protein) பகுதியை மட்டும் இலக்காக வைத்து mRNA மற்றும் வைரல் வெக்டார் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. இவை வைரஸ் உடலைத் தாக்கும் முன்பே, அதற்கு எதிராகச் செயல்பட நமது உடலுக்கு முன்கூட்டியே செய்தி வழங்குகின்றன
இந்த வீடியோவில், தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து எளிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தடுப்பூசிகள் ஏன் பலமுறை (Doses) தேவைப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படலாம். இது உங்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்கிவிட்டது என்பதற்கான இயல்பான அறிகுறியாகும். இது கிருமிகளை அடையாளம் கண்டு எதிர்காலத்தில் தாக்கினால் விரைவாக அழிக்க உதவுகிறது.
குழந்தைகளுக்காக போடப்படும் சில தடுப்பூசிகளின் விவரங்கள் கீழே:
| குழந்தையின் வயது | தடுப்பூசியின் பெயர் | நோக்கம் |
| பிறந்தவுடன் | BCG, OPV-0, ஹெபடைடிஸ்-B | காசநோய், போலியோ, கல்லீரல் பாதிப்பு |
| 6-வது வாரம் | பென்டாவலண்ட்-1, OPV-1, PCV-1 | தொண்டை அடைப்பான், கக்குவான், டெட்டனஸ், நிமோனியா |
| 10-வது வாரம் | பென்டாவலண்ட்-2, OPV-2 | நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துதல் |
| 14-வது வாரம் | பென்டாவலண்ட்-3, OPV-3, IPV-2 | முழுமையான ஆரம்பக்கால பாதுகாப்பு |
| 9-12 மாதங்கள் | MR/MMR-1, வைட்டமின் A | தட்டம்மை, ரூபெல்லா, கண் பாதுகாப்பு |
| 16-24 மாதங்கள் | MR-2, DPT பூஸ்டர், OPV பூஸ்டர் | நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்தல் |
| 5-6 ஆண்டுகள் | DPT பூஸ்டர் – 2 | பள்ளி செல்லும் பருவ பாதுகாப்பு |
இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தி சிறந்தது என்றாலும், சில கிருமிகள் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தடுப்பூசி எனும் கவசம் மிக அவசியம்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
