தனதல்லாத வாழ்க்கை

தெலுங்கு மூலம் : மணி வட்லமானி  

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

வம்சியிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்துப் வருந்தினேன். காலையிலிருந்து அவனே நினைவுக்கு வருகிறான். உண்மையில் அவனை மறந்தால்தானே நினைவுக்கு வருவதற்கு? இப்போது இந்த கடிதத்தைப் படித்தபின் இதயத்தில் பாறாங்கல்லைப் போட்டற்போல் வலித்தது. 

அவனுடைய வாழ்க்கையைப் பற்றி நினைத்தாலே இதயம் கனக்கிறது. முதலிலிருந்தே அவனுக்கு எல்லாம் கஷ்டங்களே. அவனுடைய அப்பா நல்ல வேலையில் இருந்தார்.  ஆனால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிப் பின்னர் திடீரென்று ஒருநாள் வீட்டை விட்டு எங்கோ சென்று விட்டார். அவனுடைய அம்மா வேறு வழியின்றி வம்சியை அழைத்துக் கொண்டு தன் அண்ணன் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள்.  

வம்சி நான் படிக்கும் பள்ளியில்தான் சேர்ந்தான். முதல் நாளே, “என் பேர் வம்சி. உன் பேர் என்ன?” என்று என்னிடம் வந்து பேச்சுக் கொடுத்தான். “என் பேர் ஸ்ரீனிவாஸ்” என்று அறிமுகம் செய்து கொண்டேன். அவ்விதம் எங்கள் நட்பு பள்ளி நாட்களில் இருந்தே தொடங்கி இன்று வரை தொடர்கிறது. ஆனால் வம்சியுடையது ஒரு தனிப்பட்ட குணாதிசயம். 

ஒரு நாள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது என் ஐடி கார்டு வழியில் எங்கோ விழுந்துவிட்டது. எத்தனை தேடினாலும் கிடைக்கவில்லை. அது இல்லாவிட்டால் கேட்டிலிருந்து உள்ளே செல்ல முடியாது. வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பி விட்டேன். வீட்டிலும் எல்லா இடத்திலும் தேடினேன். அதை மீண்டும் வாங்க வேண்டுமென்றால் அது ஒரு பெரிய ப்ரொசீஜர். அப்பா வேறு ஊரில் இல்லை. அவர் வர இரண்டு நாட்களாகும். 

வம்சி என்னை அன்று மாலை வந்து சந்தித்தான். “டேய் ஸ்ரீனு, ஹிஹிஹி. உன்னோட ஐடி கார்டு எனக்குக் கிடைச்சுது. ஆனால் நீ கவனமில்லாமல் போட்டுட்டு போயிட்ட இல்ல? இந்த அளவாவது உனக்கு தண்டனை கிடைக்கணும்னு தான் நான் உடனே உன்கிட்ட கொடுக்கல” என்றான். 

எனக்கு சொல்ல முடியாத அளவு கோபம் வந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டேன். அவனைத் தவிர எனக்கு இன்னும் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பு கொண்டவர்கள். அவ்வப்போது எங்கள் நால்வரின் கண்ணோட்டமும் ஒன்றுபட்டாலும், வம்சியின் இயல்பு மட்டும் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். எத்தனை சிந்தித்தாலும் புரியாது. அதற்காக நான் அவனைக் குறைத்து மதிப்பிடவில்லை.  

அவ்வப்போது அவனுடைய நடத்தையைப் பார்த்து, அவனுடைய சூழ்நிலை அவனை அப்படி மாற்றிவிட்டது என்று நினைத்துக் கொள்வேன். வம்சியின் வாழ்க்கை அவனுடைய மாமாவின் கையில் இருந்தது. அவருக்குப் பிடித்தபடிதான் அவன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவனுடைய விருப்பு வெறுப்புகளோடு தொடர்பின்றி முடிவெடுப்பார். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. இருக்கும் ஒரு மருமானை அன்பாக, பாசத்தோடு பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு  சர்வாதிகாரியைப் போல் நடந்து கொள்வார். 

அவன் இஞ்சினீரிங் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அவனுடைய மாமா காமர்ஸ் படித்தால் வங்கியில் வேலை கிடைக்கும் என்று கூறியதால் அவரை எதிர்த்துப் பேச முடியாமல் காமர்ஸ் குரூப்பில் சேர்ந்தான். அதோடு அவர் இன்னொன்றும் சொன்னார். 

“மேல் படிப்புக்கு வேறே ஊருக்கு அனுப்பி உன்னைப் படிக்க வைக்க உங்க அப்பன் கொடுத்துட்டு போன சொத்து எதுவுமில்லை” என்று எங்கள் எதிரில் ஏளனம் செய்தது  அவனால் தாங்க முடியவில்லை. ஆனால் எதுவும் செய்ய இயலாத நிலை. தாயின் முகத்தைப் பார்த்து சும்மா இருந்தான். 

அதை மூடி மறைப்பதற்காக எங்களிடம், “நீங்க ஒண்ணும் என்னைக் கிண்டல் பண்ணத் தேவையில்லை. எல்லாருடைய எதிர்காலமும் எதிர்பார்த்தபடிதான் இருக்கும்னு என்ன நம்பிக்கை?” என்று எரிந்து விழுந்தான்.  

நானும் மீதி இரு நண்பர்களும் எங்களுடைய படிப்பின் காரணமாக சிறிது காலத்தில் வம்சியிடமிருந்து தொலைவாகச் செல்ல நேர்ந்தது. 

சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு. அதே ஊரில் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுகிறான் என்றும், அவனுக்குத் திருமணமாகி விட்டதென்றும் வம்சியைப் பற்றிய செய்தி தெரிந்தது. அது அவன் விரும்பிச் செய்து கொண்ட திருமணம் இல்லை. அவனுடைய மாமா முடிவு செய்த சம்பந்தம். எங்கள் யாரையும் அவன் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அந்தப் பெண் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள்தான் என்றாலும் பெரிய அழகி இல்லை. அதோடு ஒரு காலைக் கொஞ்சம் இழுத்து நடந்தாள். அவன் மாட்டேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. 

ஒரு விஷயம் சொல்ல மறந்து போனேன். அவனிடம் எனக்குப் பிடிக்காத குணம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் எல்லோரிடமிருந்தும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பான். அதற்காகச் சில தியாங்களைச் செய்வதற்கும் தயாராக இருப்பான். 

அப்போது ஒரு பெண் அவனை விரும்பிக் காதலித்தாள். “முதலில் திருமணம் செய்து கொண்டு விடுவோம் அதன் பிறகு யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்” என்று கூட அவனிடம் சொன்னாள். 

ஆனால் அவன் அவளிடம், “என் மேலிருக்கும் காதலால் வீட்டில் பெரியவர்கள் பார்க்கும் பையனை வேண்டாம் என்று ஒதுக்குவது முட்டாள்தனம்” என்று அறிவுரை கூறி அனுப்பிவிட்டான். 

அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு பெண் அவனை விரும்பித் தானாக வந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டால் வேண்டாம் என்பது மறுக்கும் முட்டாள் யாராவது இருப்பார்களா? 

எனக்கு கீதாவோடு திருமணமானது. ஹைதராபாதில் ஒரு கம்பெனியில் இஞ்சினியராக வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். கீதாவும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தாள். எங்களுக்கு ஒரு மகள். மற்ற நண்பர்களும் அவரவர் வாழ்க்கையில் நிலைபெற்று விட்டார்கள். 

நடுவில் ஒரு முறை வம்சியைச் சந்தித்தபோது கேட்டேன், “என்னடா, வம்சி, இப்படி ஆயிட்டே?” என்றேன். 

“எப்படி ஆயிட்டேன்? நல்லாத்தானே இருக்கேன்? என்மேல் இரக்கம் காட்டினால் எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும். நான் யாருடைய வற்புறுத்தலாலும் இந்த கல்யாணத்தைப் பண்ணிக்கல. எல்லாம் என் விருப்பப்படிதான் நடந்தது” என்று தொடர்பில்லாமல் ஏதோ பேசினான்.   

அவனுடைய பேச்சைக்கேட்டு முதலில் எனக்குக் கோபம் வந்தாலும் பின்னர் பாவமாக இருந்தது. யாருக்காகவோ ஏதோ செய்வதாக நினைத்துக் கொண்டு, தான் நெருக்கடியில் மாட்டிக் கொண்டு தன்னைச் சுற்றி ஒரு கோடு வரைந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன்.  

மேலும் இரண்டாண்டுகள் கழிந்தன. அப்போது ஒரு பயங்கரமான உண்மை வெளிவந்தது.  வம்சியைக் காதலித்த பெண் அவன் மீதிருந்த காதலை மறக்கவும் முடியாமல், திருமணம் புரிந்து கொண்ட கணவனோடு வாழவும் முடியாமல் தற்கொலை செய்து கொண்டாள். அப்போது வம்சிக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். 

வம்சியோடு பேச வேண்டும் என்று எத்தனை முயற்சித்தாலும் அவனிடமிருந்து பதிலே இல்லை. இடையில் நான் சில கதைகளும், நாடகங்களும் எழுதினேன். சிலவற்றுக்குப்  பரிசுகளும் பெற்றேன். அதைத் தெரிந்து கொண்ட எங்கள் ஊர் நண்பர்கள் சிலர் எனக்கு ஒரு சன்மான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். என் மனைவி கீதாவால் வர முடியவில்லை. அவளுக்குப் பள்ளியில் லீவு கிடைக்கவில்லை. நான் தனியாகவே கிராமத்திற்குக் கிளம்பினேன்.

இரவு வண்டியில் ஏறி காலையில் எங்கள் ஊரில் இறங்கினேன். ஸ்டேஷனுக்கு கார்  எடுத்து வந்த அமைப்பினர் நிகழ்ச்சி விவரங்களைத் தெரிவித்து ஹோட்டலில் இறக்கி விட்டனர். எங்கள் ஊர் ஹோட்டலிலேயே நான் தங்குவது எனக்கு வியப்பாக இருந்தது. என் பெற்றோர் எங்கள் அண்ணனோடு சென்று விட்டதால் கிராமத்தில் எங்கள் உறவினர்  யாருமில்லை. 

வம்சிக்குப் பல முறை போன் செய்தேன். அவன் எடுக்கவில்லை. என்ன இருந்தாலும்  அவன் என் பள்ளித் தோழன் அல்லவா? நானே நேரில் சென்று அவனைச் சந்திக்க நினைத்து அவனுடைய வீட்டைநோக்கி நடந்தேன். கிராமம் நிறைய மாறிவிட்டது. எங்கும் புதுமை தென்பட்டது. பழைய வீடுகள் இருந்த இடத்தில் பெரிய அபார்ட்மென்ட்கள் வந்திருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சிறிய கடைகளுக்கு பதில் சூப்பர் மார்க்கெட்டுகளும், பிட்சா ஹசஸ்களும், காபி டேக்களும் காட்சியளித்தன. 

ஆட்டோவை வம்சியின் வீட்டருகில் நிறுத்தச் சொன்னேன். வீடு மிகவும் சிதிலமாகி இருந்தது. வீட்டிற்குள்ளிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வெளியில் வந்தாள். “யார் வேணும்?” என்று கேட்டாள். சொன்னேன்.

“ஐயா இல்லைங்க. அவுங்க அம்மா இருக்காங்க. வயசானவங்க. அவுங்களுக்கு உடம்பு சரியில்ல” என்று கூறி, என்னை உள்ளே அழைத்துச் சென்றாள்.

வம்சியின் தாயார் படுக்கையில் படுத்திருந்தார். என்னால் அடையாளமே காண முடியவில்லை. எலும்புக் கூடு படுத்திருப்பது போல் இருந்தது. அவரை நலம் விசாரித்தாலும் அவருக்குக் காதும் கேட்கவில்லை. என்னை அடையாளமும் தெரியவில்லை. வீட்டில் வம்சியின் மனைவியோ, பிள்ளைகளே இருக்கும் சந்தடியே இல்லை. என் பார்வையை கவனித்த பணிப்பெண், வம்சி, மனைவியை பிறந்தவீட்டுக்கு அனுப்பி விட்டான் என்றும், வீட்டுக்கு எப்போதாவதுதான் வருவான் என்றும், கடைக்குக் கூடப் போகாததால் வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் என்றும் தெரிவித்தாள். அவனுடைய மாமாவும் ஊரில் இல்லையாம். அவர்தான் உடன்பிறந்தவளை கவனித்துக் கொள்வதற்காக இந்தப் பெண்மணியை ஏற்பாடு செய்தாராம். 

அவள் கூறியதையெல்லாம் கேட்டபின் என் மனம் மிகவும் வருந்தியது. எதுவும் செய்ய வழியின்றி நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினேன். 

அன்று மாலை என்னுடைய பாராட்டு விழாவின் இறுதியில், நன்றி கூறும் போது, என் வெற்றிக்குக் காரணமாக இரண்டு கருத்துகளைத் தெரிவித்தேன். “ஒன்று, நான் என்னுடையதல்லாத வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. இரண்டாவது, என் வாழ்க்கையை எனக்குப் பிடித்தாற்போல் வாழ்வதற்கு முயற்சித்தேன். யாருடைய புகழ்ச்சிக்காகவோ பாராட்டுக்காகவோ என்னால் வாழ இயலாது” என்றேன். 

கடைசி வரிசையில் கசங்கிய உடையோடு அமர்ந்திருந்த மனிதன் எழுந்து கிளம்பிச் செல்வதைப் பார்த்தேன். தொலைவிலிருந்தே அது வம்சிதான் என்பதை கவனித்தேன். 

உடனே மேடையில் இருந்தவரிடம், “அதோ போறாரே, அவரை நிறுத்துங்கள்” என்றேன். அவர் திரும்பிவந்து அவன் தொலைவாகச் சென்றுவிட்டதாகச் சொன்னார்.  

அன்று இரவு உறக்கம் வரவில்லை அவனைப் பற்றியே யோசனை. அவன் எங்கே தவறு செய்தான்? விதி அவன் வாழ்வோடு விளையாடி விட்டது போலிருந்தது. நடக்கத் தெரியாதவனை ஓட வைத்ததோ? நடக்க முடியாமல் குப்புற விழுந்தவனை இப்போது விமர்சிப்பது தேவையா என்று தோன்றியது. அவன் மேல் இரக்கப்படுவது அவனுக்குப் பிடிக்காது என்று தெரிந்தாலும், அவனை நினைத்துப் பரிதாப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை.  

சிறிது காலம் கழித்து அனுப்புனர் முகவரி இல்லாமல் கடிதம் ஒன்று வந்தது. “டேய் ஸ்ரீனு, அன்னிக்கு உன்னைப் பார்த்தேண்டா. மேடைல நீ பேசியதையும் கேட்டேன். எல்லாத்தையும் இழந்துட்டேன்டா. நானே என் கையால என் வாழ்க்கையை பாழாக்கிக்கிட்டேன். ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காட்டாலும் இருக்குறதை வெச்சு வாழாமல் போனேன். விவேகமில்லாமல் நடந்துகிட்டேன். அவள் நெருங்கி வந்தப்போ  காலால் எட்டி உதைச்சேன். இப்போ வேணும்னு நினைச்சாலும் கிடைக்காமல் போயிட்டா. இப்போ அவள் ஞாபகம் வரும்போதெல்லாம் ஐயோ ஐயோன்னு மனசு துடிக்குது. போகட்டும். என் வாழ்க்கையில் கட்டாயப்படுத்தி நுழைந்த என் மனைவியையாவது சுகமா வாழவிட்டேனா என்றால் அதுவுமில்லை. இப்படி என் வாழ்க்கை எதுக்கும் பயனில்லாமல் போனதுதான் மிச்சம். ஏன் இப்படி நடந்துச்சுன்னு  எத்தனை தடவை சத்திய சோதனை செய்தாலும் எனக்குப் புரியலடா. ஆனால் கடந்த கால காயங்களை நினைச்சுகிட்டு எதிர்காலத்தை வீணடிப்பது தவறுன்னு தெரியும் ஆனால் மனசு ஒரு நிலையில இல்லை. யாருடைய தப்போ தெரியல. எனக்கு ஆத்மார்த்தமான பாசம் கிடைக்கலடா. வீடு ஒரு நரகமாயிடிச்சு. அதுனால தான் இந்த சம்சார வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களைத் துறந்து கொஞ்சநாள் எல்லோரிடமிருந்தும் தொலைவாகத் தனியா இருக்க முடிவு செஞ்சேன். ஆனால் நீ உன் மேடைப் பேச்சில் கூறிய இரண்டு கருத்துக்களுக்கும் எதிராக என் வாழ்க்கையை அமைச்சுகிட்டேன். அதுதான் என் தவறுன்னு இப்போ புரியுது.

இப்படிக்கு,

நண்பன் என்று கூற இயலாத மனிதன். 

மனிதனில் இருக்கும் மகிழ்ச்சி நழுவித் தரையில் கொட்டி வீணாவதில்லை. அது இன்னொரு மனிதனுக்கு அறிவுரையாகக் கிடைக்கிறது. 



Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.