றெக்கை – அத்தியாயம் 15

This entry is part 14 of 17 in the series றெக்கை

குளி – குளி.   நீ போய்க் குளி. அழுக்கு மூட்டை,

ஃபு-ஃபு. நடுவீட்டிலே துப்பாதே. நாக்கு கழண்டு விழுந்துடும்

பெரி – பெரி. பொரி பொரின்னு அலையாதே பொரியுருண்டை வாங்கித் தரேன்.   ஆப்ரிக்க முளகாப்பொடி.  அத்ரயெ உள்ளு

அச்சா – அச்சா போ போ நீ பச்சா

கூஸ் கக்-கூஸ் சீ  டர்ட்டி  ஃபெல்லோ

நிர்மலா கார் ஓட்டிக்கொண்டிருந்தாள். காரின் பின் சீட்டில் விசியும், கிட்டாவும் சிரிப்பை அடக்கிக்கொண்டு சமர் புரிந்து கொண்டிருந்தார்கள். போரைத் தூண்டிய சமாசாரம் சாப்பாடு.  ஆப்பிரிக்க சைவ உணவு என்று அட்டையில் எழுதிய   இங்க்லீஷ் புத்தகத்தை முன்வைத்து, ஓடும் காரில் யுத்தம்.

அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் ஆப்பிரிக்க சைவம் என்று தலைப்பு கொடுத்த பதார்த்தங்களில் எதிலாவது கொஞ்சம் போல் கோழி முட்டை சேர்ந்திருந்தாலும் அதை யாரும் குற்றப்படுத்துவதில்லை என்று பின் அட்டையில் பொடி எழுத்தில் அச்சடித்திருந்தது.

இன்னிக்கு ராத்திரி விருந்துலே இந்த ஆப்ரிக்க சைவ உணவு எல்லாம் தருவாளா அம்மா?

தெரியாது கிட்டா. எந்த விருந்திலேயும் முன் கூட்டியே மெனு என்னன்னு அறிவிக்க மாட்டா. ஆனாக்க, பரிமாற்றதுக்கு முந்தி இந்த பதார்த்தம் தான் பெரி-பெரி. முழுக்க சைவம் அப்படீன்னு அல்லது இல்லேன்னு சொல்றது நாகரீகம்.

நிர்மலா சொல்லிக்கொண்டு போக, பின் இருக்கைகளிலிருந்து அமைதி தீர்க்கமாகப் பரவியது. நிர்மலா காரை பாதையோரம் நிறுத்தி விசா என்று பின்னால் திரும்பாமல் அழைத்தாள். பதிலேதும் இல்லை.

கிட்டா, விசு உறங்கக்கூடாது பார்ட்டிக்கு போயிண்டிருக்கோம்.

அவள் தலை திருப்பி நோக்க, பின் இருக்கைகள் வெறுமையாக இருந்தன. மெல்லச் சூழும் இருட்டில் எங்கேயோ சில்வண்டுகள் இரண்டு மாறிமாறிக் கிரீச்சிட்டன. கிட்டா வயதுப் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் மொழியறிவும், கணித, வரலாற்று, புவியியல் அறிவும் போக வகுப்புத் தோழர்கள் மூலம் கிடைக்கும் பயங்கள் அறிவு முக்கியமானது. பெரியவர்கள் மூட நம்பிக்கை என்று தள்ளும் இந்த வகை அறிவில் பாம்பு, தேள், சிலந்தி, வண்டு குறித்து பயங்களும் உண்டு. 

கிட்டா நிர்மலாவிடம் தயங்கித் தயங்கிக் கேட்டிருந்தான் ஒரு தடவை – அம்மா சில்வண்டு என்ன ஆகாரம் கழிக்கும்

சோதிச்சோட்டே

வேறே ஏதோ காரியத்தைச் செய்தபடி கவனமில்லாமல் பதில் சொன்னாள் நிர்மலா.

மாம் சில்வண்டு கிட்டே கேட்பியா?

இல்லே எல்லாம் தெரிஞ்ச உங்க பிள்ளை மிஸ் டீச்சர் கிட்டே கேட்கறேன். நான் ஸ்கூல் போய் டீச்சரே ஒரு சம்சயம் உண்டு. ஈ பறக்குன்ன ஜந்து சிக்கட்ட என்ன சில்வண்டு சோரை மாந்துமோ. அட நீயே கேட்டுடலாமே.

பிள்ளை மிஸ்ஸா? சில்வண்டு இருட்டுலே க்ரீச்சிட்டுக்கிட்டிருந்தா அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இந்தோ வர்றானே எட்டு வயசு காணும்.   இவனை பிடிச்சா ஒரு படி ரத்தம் கிடைக்கும். ஜூட்.

சில்வண்டு என்ன பேய்க்கதையிலே வர்ற வேம்பயரா ரத்தம் குடிக்க? 

நிர்மலா ஸ்கூலில் படிக்கப் போனால் இது தெரிந்திருக்கும். அது மட்டுமில்லை. சிக்கட்டா பற்றிய பயம் இங்க்லாந்திலும் வெகுவாக உண்டு. பத்திலிருந்து பதினாறு வயது வரையான பையன்களை சிக்கட்டா வண்டுக்கு ரொம்ப இஷ்டம். வேகமாகப் பறந்து அண்டர்வேருக்கு உள்ளே நுழைந்து அட்டை மாதிரி ஒட்டிக் கொள்ளும். அந்த வண்டுக்கு உடம்பெல்லாம் வாய். அதை வச்சு வெல்லியில் உறிஞ்சு உறிஞ்சு உறிஞ்சு ரத்தம் எடுத்துட்டு அதை மூத்திரம் ஒழிக்க முடியாமல் அறுந்து தொங்க வைத்துவிடும். பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையன்களுக்கு சுபாவமா லபிச்சிருக்கும்  இந்த பொது அறிவுலே ஒரு கஷணம் துண்டு துணுக்கு கூட பெரியவர்களுக்கு கிடையாது. இங்க்லாண்டிலும் அப்படித்தான் இருக்கும். நிர்மலாவிடம் அதற்கப்புறம் கிட்டா சில்வண்டு பற்றி எந்த தகவலும் விசாரித்ததில்லை.

சில்வண்டு கிரீச்சிடுகிறது. நிர்மலாவிடம் முறையிடுகிறது. டாக்டரம்மா, பசங்க எங்கே? உன் மகனை விசாரிச்சேன்னு சொல்லு. உன் சுந்தரிப் பெண்குட்டி மோள் விசியை ஜாக்கிரதையா பார்த்துக்க. றெக்கை எல்லாம் குருதி பரவ ஆரம்பிக்கற வயசு.

நரகத்துக்கு போ. இருட்டில் கை  நீட்டி சல்யூட் வைக்கிற வீரன்  போல சத்தமாகச் சொன்னாள் நிர்மலா.

உடனே சுதாரித்துக் கொண்டாள். Hallucination.  

பசங்க எங்கே?

 நிர்மலாவின் இரண்டு கணவர்களும் கை முட்டி மடக்கி   சல்யூட் வைத்து சீரியஸாக கேட்கிறார்கள்.

அது வந்து… 

நிர்மலா ஏதோ சொல்ல ஆரம்பிக்கிறாள். 

வந்தாவது போயாவது. உனக்கு பிறந்ததுன்னா இப்படி விட்டேத்தியா இருப்பியா?

பறந்து போயிருப்பாளாயிருக்கும். 

அவள் கவிந்த இருளில் ஆகாயம் நோக்கி விரல் சுட்டுகிறாள். 

லெவி அல்பி முதுகில் தட்டி சிரிக்கிறான். இருட்டில் கலக்கிறார்கள் இருவரும். Hallucination

விசி…. கிட்டா வாங்கோடா நேக்கு பயமாக இருக்கு கேட்டேளா

இன்னொரு தடவை இருளில் குரல் விட்டெறிகிறாள் நிர்மலா. பசங்க எங்கே? ஓடுகிற காரில் சண்டை போட்டு, கார் ஓட்டி வந்த பாதையில் விழுந்திருப்பாளா? அடி பட்டு பிரக்ஞை இல்லாமல் கிடப்பாளா ரெண்டு குட்டிகளும்? 

குஞ்ஞே கரயண்ட குட்டிகளிந்த க்ஷணம் திரிச்சு வரும்.

ஆலப்பாட்டு முத்தச்சன் கார் பின் சீட் மேல் பறந்தபடி தைரியம்  சொல்கிறார். 

தாத்தா, அங்கே எல்லாம் பறக்காதே. மூத்ரம் ஒழிச்சிடப் போறே. 

பின் இருக்கைக்கு மேறே பறக்காமல் வயசரை கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுக்கிறாள். வெற்றிடத்தில் கைவீசிக் கொண்டு நிற்கும் அம்மாவை வியப்போடு பார்த்தபடி விசியும் கிட்டாவும் இருளிலிருந்து கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஓடி வருகிறார்கள்.

நிர்மலா ஓர் அடி முன்னே வைத்து நடந்து அவர்கள் இரண்டு பேரையும் நெஞ்சாரத் தழுவி வாயில் வார்த்தை வராமல் ஆரஞ்சு மிட்டாய் என்கிறாள் சிரிப்போடு.

எங்கேடா போயிருந்தேள் ரெண்டு கூட்டுக் களவாணிகளும்? விசியைக் கேட்க அவள் அம்மாவை இறுகக் கட்டிக்கொள்வது தவிர வேறேதும் செய்யத் தோன்றாமல் றெக்கைகள் நிறைய உதிர்ந்து கூம்பி இருக்க, களைப்போடு நிற்கிறாள். 

சித்திரம் : சங்கரா

அக்கச்சி ஒண்ணும் இல்லே பயப்படாதே நான் இருக்கேன் 

ரெண்டு பேரும் ஒரு நிமிஷத்திலே என்னை ப்ராணன் நீக்கி பாதையோரம் எறிஞ்சுட்டேள்’டா. ப்ளீஸ்டா இக்களி தீக்களி இக்களி வேண்டாம்

இரு கையும் வானம் நோக்கிக் கும்பிட்டு காரை ஸ்டார்ட் செய்தாள் அவள்.

ரெண்டு நிமிஷம் யாரும் எதுவும் பேசவில்லை. கிட்டா  பின்னால் இருந்து மெல்ல அம்மாவின் தோளைத் தொட்டான், அவளொன்றும் சொல்லவில்லை. திரும்ப தொட்டான். அம்மா யந்திரம் மாதிரி எந்த உணர்ச்சியும் காட்டாமல் கார் ஓட்டிக் கொண்டு போனாள். அங்கும் இங்குமாக மின்சாரக் கம்பம் நாட்டி ஒயர் இழுத்து அவற்றின் உச்சியிலிருந்து பிரகாசமான விளக்குகள் ஒளிர்ந்தன. இருட்டு ஒரு விதமான மகிழ்ச்சி தரும் என்றால் பிரகாசம் இன்னொரு தரத்தாலான சந்தோஷத்தை.

கிட்டா திரும்ப அம்மா தோளைத் தொட்டு சொன்னான் – நிர்மலாம்மாடீ பட்டு இல்லே தங்கமில்லே

இது நிர்மலா குழந்தைகளை தினசரி அன்பாலும் பிரியத்தாலும் கொஞ்சி உறங்க வைக்கும் செல்லச் சொல்லாகும். இதுக்கு மேலும் உம்மணாமூஞ்சியாக நடிக்க அவளால் முடியாது. அவள் சிரித்தபடி கார் செலுத்த ஏதோ மறந்து போனதாக உணர்ச்சி. 

விசி இப்போ நீ  CALM and composed தானே? எதுக்கு  அழணும்?உன் தம்பி இருக்கான். நான் இருக்கேன். எந்த கவலையும் துக்கமும் உன்னை ஒண்ணும் செய்ய முடியாது, 

கார்  நோயாளி மாதிரி சத்தமாக தீனமாக முறையிட்டு,நிர்மலாவை பரிதாபமாகப் பார்த்தது.

பிராணனை வாங்காதீர் நீங்க எல்லோரும். ஒரே தாகமாக இருக்கு, இத்திரி பச்சை வெள்ளம் கொடுன்னு நானும் கேட்டுண்டே வரேன், நீயும் கேட்கலே. உங்க அக்கச்சி, அம்மா யாரும் ரேடியேட்டர்லே தண்ணி இடணும்னு சொல்லித் தரவே இல்லையா?

கிட்டா காருக்கு ஓடி ஒரு போத்தல் நிறைய வைத்திருந்த நல்ல தண்ணியை எடுத்துண்டு வந்தான். ரேடியேட்டர் வெக்கை தணிந்து குளிர்ந்து அவனையும் சக குடும்பத்தையும் ஆசிர்வதித்தது.

என்ன ஆச்சுன்னு சொல்றேன். ஹாண்டிலை கொடு அம்மா

 ஹாண்டிலை கார் முன்னால் செருகிச் சுழற்றி காரை ஸ்டார்ட் செய்ய கிட்டா முற்பட்.டான். விசி இன்னும் சகஜமான நிலைக்கு வரவில்லை. அவள் சதா அணிந்திருக்கும் புன்னகை எங்கோ ஒளிந்தது.

அம்மா, நானும் விசியும் விளையாட்டு சண்டை போட்டுண்டு இங்கே இருந்தபோது சின்னதாக ஒரு பறத்தல். ரெண்டு பேரும் காருக்கு பின்னாடி பறந்து வந்து சுத்தி வரலாம்னு உத்தேசம். நீ கவனமாக கார் ஓட்டிச்சிருந்தபோது நாங்க பாதி இருட்டில் பறக்க ஆரம்பிச்சோம்.

நான் மீதியை சொல்றேன் – விசி   தொடர்ந்தாள்.      

மேற்கில் நாங்கள் தாழப் பறந்தபோது, பக்கத்தில் ஏழெட்டு பஞ்சவர்ணக் கிளிகள் கூட்டமாக கூட்டில் அடைய திரும்பிக் கொண்டிருந்தன. பெரிய கிளிகள் அது எல்லாம். பரக்கெட்னு சொல்லுவா அந்த வகை.மேலே அற்புதமாக பஞ்சவர்ணம் மட்டுமில்லை. விப்ஜிஆர் ஏழு வண்ணம் றெக்கையிலே படிஞ்ஞு மின்னினது. அதுகளை பார்த்துண்டே மேற்கிலே நிறைய உயரம் போயிட்டோம். அந்தக் கிளிகளும் ச ட்டென்று காணாமல் போனது. அப்போ தான் மனசிலானது – இந்த கிளிகளை யாரோ வேணும்னு இங்கே பறக்க வச்சு இருக்காங்க. அதை பார்த்தால்  குழந்தையும் பொம்மையும் நினைவு வராமல் போகாது. நானும் தம்பியும் கிளிகள் பின்னாலேயே போயிட்டோம். அத்துவானக் காட்டிலே நாங்க ரெண்டு பேரும் தான் தனியா இருக்கோம். எப்படி வீட்டுக்கு   போகறது?

அப்போ நான் கிட்டா கிட்டே சொல்லுவேன் -வாடா கிட்டா  தரைக்கு திரும்பிடலாம். நாம ரெண்டு பேர் இருட்டிலே என்ன பண்றது>?

நாங்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். இன்னும் நிறைய தூரம் இறங்கியாகணும்.

அக்கச்சி நீ ஓய்வு எடுத்துக்கோ. களைப்பா இருக்கே. நான் மீதியை சொல்றேன் –  கிட்டா விசா விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.  

பெரிய பருந்து ஒண்ணு. ராஜாளின்னு சொல்வா. வலிமை. நாளில் ஒரு நாள் -இருபத்துநாலு மணி நேரம் பறக்கக் கூடியது நானும் விசியும் கீழே போயிண்டிருந்தோம், எங்க வழி மறிச்சு மிரட்டுகிற மாதிரி  ராஜாளி கூக்குரல் ஒண்ணு கத்தினது.விசா மிரண்டு போயிட்டா. என்னமோ என் கையைப் பிடிச்சுண்டு சொல்றா. –

பருந்து விசியோட றெக்கை பக்கம் நெருக்கமா பறந்தான். தன் அழுக்கு சிறகுகள் விசியோட தூய வெண் சிறகுகள் மேல் தேச்சு

அம்மா கிட்டா வேண்டாம். அந்தக் கருமத்தை சொல்லாதே.

நிர்மலா திடுக்கென்று அதிர்ச்சியடைந்தவளாக காரை பாதை ஓரம் நிறுத்தி ஸ்டியரிங்கில் தலை சாய்ந்து அழ ஆரம்பித்தாள். இருளில் சில்வண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது.   

விசி சொல்லும்மா. என்னவா இருந்தாலும் ஒண்ணும் விட்டுப் போகாமல் சொல்லுடி குழந்தை. நிர்மலா  குரல் பதற கைவிரல்கள் அதிர்ந்து நடுங்க தகவலை யாசித்தாள்.

கூல் மம்மி. ஒண்ணும் நடக்கலே. கிட்டா சகஜமான முகபாவத்தின் மேல் பெரிய புன்னகையை அணிந்து கொண்டு சொன்னான். 

ஒண்ணும் நடக்கலே அம்மா, சொல்லும்போது விசி முகம் தெளிந்து இருந்தாள்.

அந்த பருந்து எங்க ரெண்டு பேரையும் துரத்தி வர மாதிரி விளையாட்டு காட்டினது. அவ்வளவு தான். – கிட்டா அம்மாவின் நடுங்கிக் கொண்டிருக்கும் கையைத் தன் கரங்களுக்குள் வைத்தபடி கூறினான்.

ஆமா அம்மா. அவன் அது விசியை மட்டும் குறி வைத்து துரத்தின மாதிரி இருந்தது. விசிக்கு பின்னாலே இருந்து அவளோட றெக்கையை தன்னோட அழுக்கு றெக்கையாலே தடவின மாதிரி இருந்தது. ஒரு நொடி மட்டும் தான். அடுத்த நொடி பருத்தோட வாய்லே கைவிட்டு கதறக் கதறக் கிழிச்சு, அதை ரெண்டு கூறாக பிளந்துட்டேன். 

கிட்டா பெரிய மனிதக் குரங்காக உரு மாறி இருந்தான். எட்டடி உயரமும் அதற்கேற்ற கனமும் நிறைந்த பனிமனிதன் போல அவன் பாதையின் வெறுமை தீர வியாபித்துக் கொண்டிருந்தான். இரண்டு நொடி மட்டும் அவனது விஸ்வரூபம் வியாபித்தது,

 மை காட் அதிர்ச்சியைக் கொட்ட வார்த்தை வராமல் தள்ளாடினாள் நிர்மலா. மனசில் அலாதியான  நிம்மதி நிறைந்திருந்தது. கிட்டா அந்த இரண்டு நொடி மாயத்தை நிர்மலா மனதிலிருந்து அகற்றினான்.

 விசி இருளில் கூர்மையாக பார்வையை நட்டு இருந்தாள். நிர்மலா அவளை நோக்கி புன்னகைத்தாள்

அம்மா ஒண்ணு கேக்கலாமா? ரெண்டு பசங்களும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.

என்ன வேணும் சொல்லுங்கோ

இக்களி தீக்களி-ன்னா என்ன அம்மா?

போங்கோடா.. இக்களின்னா இந்த விளையாட்டு. தீக்களி-ன்னா நெருப்போடு விளையாட்டு. மனஸிலாயோ 

ஆயி ஆயி ஆயி அப்போ ல் – போயி போயி  போயி போய்ட்டு வா

-தொடரும்

றெக்கை

றெக்கை – அத்தியாயம் 13 றெக்கை அத்தியாயம்   16

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.