போலியுடல்கள்

1) திராட்சை கண்கள் 

ஜிம்மி என்னைப்போல்
நடந்து காட்டுகிறான்
கொஞ்ச கொஞ்சமாக
என்னை நடித்து காட்டவும்
துவங்கி விட்டான்
நன்றாக இருக்கிறது தம்பி
உன் செய்கை
பால் குடிக்க தெரியாத
பாலகனாக இருந்த போதே
உன்னிரு திராட்சை கண்கள் மீது
மையலுற்று
உன்னை தூக்கி வந்து
நடை பழக்கியவன் நான்
என்னிடமே நடித்துக் காட்டுகிறாயா
எல்லாம் சரிதான்
கோபத்தில் நானப்படியா குறைக்கிறேன் சொல்


2) போலியுடல்கள்

இருளுக்கு புரியும்படி பேச நினைத்தால் சூரியனின் மொழியில் பேசு என்ற வேத வாக்கியத்தை மனதுக்குள் அர்த்தப்படுத்திக் கொண்டேன்
துண்டு துண்டு வானமாக இருந்த மனிதர்களை இணைந்து பெரிய ஆகாயத்தை உருவாக்கியவனுக்கே அதில் சூரியனாக ஒளிர உரிமையுள்ளது என்ற கருத்தும்
இதற்கு ஒத்துப் போவதை
கவனித்தேன்
இரவின் விளிம்பின் மேல் ஏறி அமர்வதும் பின்பு வழுக்கி விழுவதுமாக இருந்த விடியலை
உறங்கும் விழிகளின் மேல்
ஆவியென இறங்க பன்னியதும்
தேவகிருபை என்றோதியிருக்கிறேன்
பசி என்னும் மாபெரும் இலக்கியத்தை சோற்றுப் பருக்கைகளை கொண்டு அழிக்கும் கூட்டமே எழுந்திருங்கள்
என்று கூறிக்கொண்டு ஈரக்காற்று
உள்ளே நுழையவும்
மளமளவென நெட்டி முறித்த படி எழுந்தமரும் போலியுடல்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது


3) உதிரிப்பூக்கள் 

அ) ஓம் வடிவ பட்டமரத்தில்
கந்தப்பிரகாசமுடைய
வேல் முகமாக
தளிர் விட்டிருந்தது ஒற்றை இலை
உடலெல்லாம் பச்சை வேலால்
அலகு குத்திய ஆயிரம் மரங்களுக்கு இல்லாத அழகு அதற்கு

ஆ) அடிவானத்தை பிளேடால் கிழித்ததுபோலொரு சிகப்பு கோடு
கொஞ்ச நேரத்தில் கடல் பரப்பெங்கும் ஒளியின் சொதசொதப்பு

இ) என்னிடமிருந்து குளிரை
திருடிக்கொண்ட சூரியனின்
ஒளிக் கரங்களில் கோபமாக
முத்தமிட்டேன்
முத்தங்களால் சாபமிடத் தெரிந்த முதல் மனிதன் நான்தான்


4) ஒளிச்சத்து

யோனியில் நாவு படைத்தவள் நீ
உன் சொற்களின் அமுதத்தை
பருகி வளர்ந்தவன் நான்
ஒரு உடலுக்குள் ஆயிரம் உயிர்கள் முளைத்தவள் நீ
உன் உயிர் சங்கிலியில் கடைசி கண்ணியாக
வந்து நிறைந்தவன் நான்
எனதுயிருக்கு தேவையான
ஒளி சத்தினை உன் கண்களால்
வழங்க வேண்டி
சொல்லரித்த நினைவுகளின்
கடைசி சுளையை
உனக்கு படையல் இடுகிறேன்
உன் தடாகத்தில் என் மொழியை கரைக்க அனுமதி கொடு
தளும்பும் நீர்ச்சதையை
பிளந்து கொண்டு
தமிழ்த்தாய்க்கு புதிய மகவொன்று
பிறக்கட்டும்


5) சக்கரமுத்திரை

மடப்பள்ளியில் மணக்க மணக்க உணவு தயாராகிக் கொண்டிருந்தது
பந்திக்கு அமர்ந்திருப்தைப் போல வீதியின் இருமருங்கும் வரிசையாக அமர்ந்திருந்தன வீடுகள்
பழைய வீடுகளை பார்த்து புன்னகைத்தேன்
புதிய வீடுகளிடம் மிச்சாமி துக்கடாம் என்று சொன்னேன்
உறைந்த நதிகளென ஊருக்குள் பாயும் சாலைகள்
அதில் பயணிக்கும் மனிதர்களின்
தளும்பும் எண்ண அலைகள் என்று
ஊர் சுறுசுறுப்பாக இருந்தது
பறவைகளின் கீச்சு கீச்சுகள்
காம்பஸ் போல காலூன்றி நின்று என்னை சுற்றி நட்பின் வட்டங்களை வரைந்தன
தெரு முக்கிலிருந்த
திகம்பர மண்டபத்தின் நுழைவாயிலை அடைந்தேன்
வாயிற் காவலர்கள் தங்கள் நீண்ட கைக்கோலாலால் எக்ஸ் குறியிட்டு
என்னை தடுத்தனர்
புன்னகைத்தபடி அவர்களிடம் கேட்டேன்
சூன்னியத்தை
உள்ளங்கையில் ஏந்தி
நெற்றியில் சக்கரமுத்திரையுடன் இங்கின்று வந்திருக்கு மென்னை நிஜமாகவே யாரென்று தெரியவில்லையா உங்களுக்கு


6) மனநிலை

வரிசையாக எனது சொற்களை
தள்ளி விட்டேன்
பள்ளத்தாக்கோ
பனியால் வலை கட்டி குளிர்ச்சியாக அவற்றை பிடித்துக் கொண்டது
ஆண் சொற்களும்
பெண் சொற்களும்
ஒன்றின் மீதொன்று ஊஞ்சலாடின
அதை
கல்வி என்று எடுத்துக் கொள்வதும்
கவிதை என்று எடுத்துக் கொள்வதும்
உங்கள் மனநிலையை பொறுத்தது


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.