அந்த இடத்தில் தமயந்தியைக் கண்ட சில முதிய பெண்கள் அருகில் வந்து விசாரித்தனர். அவள் அழகிய கண்களையும், அடர்ந்த புருவங்களையும், இனிமையான தோற்றத்தையும் வைத்து ஏதோ ராஜ வம்சத்தினள் என்பதை புரிந்து கொண்டு அவளை ஆசிரமத்துள் அழைத்துச் சென்றனர். அவர்களை வணங்கி விட்டு ஓரமாக நின்றாள். தன் நிலையை எண்ணி தானே பரிதாபப்பட்டாள்.
அங்கிருந்தவர்கள் அன்புடன் அவர்களை வாருங்கள் என்று அழைத்தனர். அவளுக்கு அமர ஆசனம் அளித்தனர். யாவரும் நலமா? நாங்கள் ஏதாவது உதவி செய்ய முடியுமானால் செய்கிறோம் என்றனர். அந்த பெண்களும் அவர்களை குசலம் விசாரித்தனர். நலமா? தபோ வனத்தில் வசதியாக இருக்கிறதா? உங்களுக்கு இடையூறு எதுவும் இல்லாமல் உங்கள் விரதங்களை முழுமையாக செய்ய முடிகிறதா? அவர்களும் பதில் சொன்னார்கள். எல்லாம் நலமே. பெண்களே, இந்த பெண் யார்? அப்பழுக்கில்லாத உடல் வாகு, அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் போல இருக்கிறாள், இங்கு எங்கு வந்தாள்? அவளைப் பார்த்து, ஏதோ மிகபெரிய துன்பத்தை அனுபவிப்பவள் போல வருத்தம் இவள் முகத்தில் தெரிகிறது. குழந்தாய்! சொல்லு? என்ன கஷ்டம் என்றனர். வன தேவதை போல இருக்கிறாய், இந்த முகத்தில் துயரத்தின் சாயை கூட வரக் கூடாதே. .
தமயந்தி சொன்னாள்; ஓ தவச் சீலர்களே, நான் வன தேவதை அல்ல. இந்த காடுகளுக்கும் , அருவிகளுக்கும் அதிபதியான தெய்வங்களில் ஒருவளும் அல்ல. சாதாரண மனிதப் பிறவி. விவரமாகச் சொல்கிறேன். என் கதையைப் பொறுமையாக கேளுங்கள். விதர்ப தேசத்து அரசன் பீமன் என்பவன், அவன் மகள் நான். எனக்கு சகோதரர்கள் மூவர் உண்டு. நளன் என்ற நிஷத நாட்டு அரசனை மணந்தவள். சிறந்த வீரன், அறிவாளி, மெத்த கற்றவன், கருணயுள்ளவன் என்று புகழ் பெற்ற உடல் வலிமையும் அழகும் உடைய அரசன்.
தினசரி நியமங்களை தவறாது செய்பவன். தெய்வங்களை பதிறாறு உபசாரங்களோடு பூஜை செய்து வழி படுபவன். அந்தணர்களை மதித்து நடப்பவன். கொடையாளி. தானங்களும் நிறைய செய்திருக்கிறான். தன் கடமைகளை சரிவர செய்து நாட்டு மக்களை கருத்துடன் பரி பாலிப்பவன் என்று மக்கள் அவனிடம் அன்புடன் இருந்தனர். எதிரிகள் என்றும் எவரும் இல்லை. முழு நிலவைப் போன்ற முகம் உடையவன், மென்மையாக பேசுபவன், அவன் தான் என் கணவன். நேர்மையானவன். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் என்று இருந்தவன் ஏனோ ஸுதாட்டத்துக்கு அழைத்தவர்களிடம் மறுக்காமல் ஒத்துக் கொண்டான். விளையாட்டு மட்டுமே என்று அதில் இறங்கியவன் அது வினையாகப் போவதைக் கண்டும் அறிவில்லாமல் மேலும் மேலும் ஆடித் தோற்றான். அவனை அழைத்தவர்களின் தந்திரமோ, அவர்களின் குறுகிய நோக்கமோ ஏனோ அவனுக்கு புத்தியில் உறைக்கவில்லை. அவர்கள் சதுரங்க விளையாட்டின் குறுக்கு வழிகளை அறிந்திருந்தனர். செல்வம், அரசு அனைத்தையும் இழந்தான். என் பெயர் தமயந்தி, என் கணவனை நடுக் காட்டில் பிரிய நேரிட்டது. அவனைத் தேடி அலைகிறேன்.
எந்த இடம், எவருடைய தேசம் எதுவும் தெரியாமல் மலைகளையும், காடுகளையும், அருவிகளையும் கடந்து நடந்து கொண்டே வந்தவள் இன்று இங்கு வந்திருக்கிறேன். இதுவரை எந்த மனித முகத்தையும் காணவில்லை. ஒரு வேடனைத் தவிர, அவனும் மாண்டான். நளன் என்ற என் அரசன், போர் முறைகளை அறிந்தவன். தோல்வியே காணாதவன். அவனுடைய ஆயுதங்களை முறை தவறாது பயன்படுத்துவான். ஓ நிஷத ராஜனே, நளா, இதோ இங்கு வந்து இந்த பெரியவர்களைக் காண மாட்டாயா.. இவர்கள் கருணை மிக்கவர்கள். தன்னலம் இன்றி தவம் செய்கிறார்கள். வந்து பார்.
சற்று பொறுத்து, தன்னை அடக்கிக் கொண்டு அவர்களிடம் சொன்னாள். இன்னும் சில நாட்களில் என் முயற்சிகளின் பலனாக அவனைப் பற்றி ஏதேனும் அறிய முடியுமானால் நான் உயிருடன் இருப்பதில் பொருள் உண்டு. இல்லையெனின் நான் மரணத்தையே உயர்வாக எண்ணி ஏற்பேன். காளை போன்ற பலம் பொருந்திய கணவனை அடைந்தும் அவனுடன் வாழவில்லையெனில் இந்த உடலுக்குத்தான் என்ன பயன், இந்த உயிருக்குதான் என்ன பயன். என் துயரத்தை இதற்கு மேலும் எப்படிச் சொல்வேன்.
அந்த சாதுக்கள் சமாதானப் படுத்தினர். பீமனுடைய மகளே தமயந்தி! வருந்தாதே. உன் துயரங்கள் தீரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சீக்கிரமே நைஷதன், நளன் உன்னைக் கண்டு கொள்வான். மகளே! பொறு. அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதே. அவன் ஏதோ பெரும் கஷ்டத்தில் இருக்கிறான் போலும். தன்னை விடுவித்துக் கொண்டு உன்னைக் காண வந்து விடுவான். பெண்ணே, நீ பாக்கியசாலியாக பிறந்தவள், வாழ் நாளில் மேலும் பல நன்மைகளை காணத்தான் போகிறாய். வாழ்வும் தாழ்வும் சேர்ந்தது தான் மனித வாழ்வு. அதே நிஷத ராஜ்யத்தின் பட்ட மகிஷியாக, அதே வளமான நாட்டின் பிரஜைகளுடனும், வாழ நாங்களும் வாழ்த்துகிறோம். இழந்த செல்வங்களையும் உன் கணவன் மீட்பான். எதிரிகளை அழிப்பதில் தயங்க மாட்டான். எனவே அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பான். சுய பலம் வந்த பின் அவனை யாராலும் வெல்ல முடியாது. இது ஏதோ ஒரு இடையில் வந்த துயர், வந்தது போலவே மறைந்து விடும். கவலைப் படாதே. முடி ஸூட்டிக் கொண்டு, அனைத்து வாழ்த்துக்களும் பலித்து மகிழ்ந்து இருப்பாய். தமயந்தி ஆறுதல் அடைந்தாள். அவள் கண் முன்னே அந்த சாதுக்கள் மறைந்து விட்டனர். என்ன இது, கனவா என்று தமயந்தி குழம்பினாலும், மனதில் புது தைரியம் வந்தது. அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி நினைக்கலானாள். முதலில் தனக்கு பாதுகாப்பான ஒரு இடம் வேண்டும். யோசித்தபடியே நடந்தாள்.
ஒரு அசோக மரம் தென் பட்டது. அதன் மலர்கள் சிவந்த நிறத்தில் மலர்ந்திருந்தன. பறவைகள் சிறகடித்து பறந்து கொண்டிருந்தன. அதுவே ஆறுதலாக இருந்தது.
அசோக மரமே, என் சோகத்தை இல்லாமல் ஆக்கு என்று சொல்லியபடியே அதன் அடியில் அமர்ந்தாள். நீ கண்டாயா, என் கணவனை, நளன் என்ற பெயர். நிஷத நாட்டு ராஜா. உன் பெயரே துயரை நீக்குவது தானே. பயம் விட்டுப் போனதால் அடர்ந்த காட்டுக்குள்ளும் தைரியமாக உலவினாள். இப்பொழுது மலைகளும், அருவிகளும் ரம்யமாக கண்ணுக்குத் தெரிந்தன. பறவைகளும், சிறு மிருகங்களும் வளைய வருவதை நட்புடன் பார்த்தாள். குகைகளில் நுழைந்து வெளி வந்தாள். படைப்பில் எதுவுமே அழகற்றதோ, பயங்கரமானதோ அல்ல என்று தெரிந்து கொண்டாள். பயனற்றது என்று எதுவும் இல்லை. நம் எண்ணப் போக்கு தான் நன்மை தீமைகள் என்ற வரை அவள் உள்ளம் உலகத்தை புரிந்து கொண்டு விட்டது. நதிகள் பிரவகித்து ஓடுவதை குதூகலமாக கண்டு ரசித்தாள். இடையிடையில் தன் தேடுதலையும் தொடர்ந்தாள். மேலும் சற்று நடந்த பின் சில வணிகர்கள், குதிரைகளும், யானைகளுமாக, பொருள் களை ஏற்றிக் கொண்டு செல்வதைப் பார்த்தாள். நதிக் கரையில் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நதியின் நீர் தெளிவாக, குளிர்ந்து இருந்ததை குடித்து பசியாறினாள். கரையெங்கும் பிரம்பு, மூங்கில் வளர்ந்து செழித்திருந்தன. கொக்குகளும், நாரைகளும் சக்ரவாக பறவைகளும் அவள் கண்ணுக்கு விருந்தாக இருந்தன. சில இடங்களில் ஆமைகள், முதலைகள் கூட தென்பட்டன. மீன்கள் பல வண்ணங்களில் துள்ளி குதிப்பதைக் கண்டு அவைகளுடன் விளையாடினாள். சிறிய பூச்சிகள் கூட சில சிவந்த வண்ணம் கொண்டதாக திரிந்தன.
அந்த வணிகர் கூட்டத்தின் அருகில் சென்றாள். மகா ராணியாக, பட்டாடைகளும், ஆபரணங்களுமாக இருந்தவள். அந்த பழைய ஆடையில், கேசம் பட படக்க ஏதோ வறியவள் போல இருந்தவளை, கண் கொட்டாமல் பார்த்த அந்த வணிகர்கள், இவள் யார் என்பது தெரியாமல், சிலர் பயந்தனர். சிலர் பித்து பிடித்தவளோ என நினைத்தனர். சிலர் விரட்டினர். வெறுப்புடன் நோக்கிய சிலர் திருடி விடுவாள் என்று பயந்தவர்கள் போல இருந்தனர்.
சில பெரியவர்கள் கூர்ந்து கவனித்து விட்டு, நல்ல குடும்பத்து பெண்ணே, ஏதோ துயர் மண்டி கிடக்கிறாள் என்று புரிந்து கொண்டனர். அவளிடம் இரக்கம் கொண்டு விசாரித்தனர். பெண்ணே நீ யார்? யாருடைய மகள், யாருடைய மனைவி.? ஏன் காட்டில் இருக்கிறாய். வழி தவறி வந்து விட்டாயா? என்று அன்புடன் வினவினர். மனித பெண் தானா? யக்ஷ, ராக்ஷஸ பெண்ணானால் நாங்கள் வணங்குகிறோம். எங்களை துன்புறுத்தாதே. லக்ஷணமான உன் அவயவங்கள், கண்ணின் ஒளி, முகத்தின் பொலிவு ஏதோ புழுதி படிந்து போல காண்பதால் இவர்கள் தயங்குகிறார்கள். சொல் பெண்ணே! நற்குடியில் பிறந்த பெண் தான். எங்கள் இந்த வண்டி வாணிபம் செய்ய ஊர் ஊராக போகும். உன் ஊர் எது சொல், அங்கு கொண்டு சேர்க்கிறோம்.
தமயந்தி ஒரு நிமிடம் நளனை மனதில் தியானித்து வணங்கி விட்டு அவர்களிடம் சொன்னாள். ஓ பெரியவர்களே! வணிகர்களே! சிறியவர்களே! என்னை மனிதப் பெண்ணாக அறிந்து கொண்டதற்கு நன்றி. நான் ஒரு அரசனின் மகள், மற்றொரு அரசனின் மருமகள். ஒரு ராஜ குமாரனையே மணந்தேன், என் குழந்தைகள் அந்த பெரிய ராஜ வம்சத்தில் பிறந்து வளருகின்றன. நைஷதன், நிஷத ராஜன் நளன் என்பவன் என் கணவன். அவரை காட்டில் தவற விட்டு விட்டேன். அவரை தேடி அலைகிறேன். அதனால் தான் இந்த கோலம். எங்கு இருக்கிறேன், எந்த தேசம் எதுவும் தெரியவில்லை. என்னை ஆசீர்வதியுங்கள். விரைவில் என் கணவன் குழந்தைகளுடன் சேர வாழ்த்துங்கள். பலசாலியான, ஆற்றல் மிகுந்த அரசன் தான். ஏதோ வினைப் பயன் இந்த துயரம் வந்து சேர்ந்தது. இது என்ன இடம், இங்கிருந்து அருகில் உள்ள சிற்றூரோ, நகரமோ – அங்கு போக வழி என்ன? அதை மட்டும் சொல்லுங்கள். இதைக் கேட்டு அந்த வணிகர்கள் திகைத்தனர். அவர்களின் தலைவனாக இருந்த சுசி என்பவன், பெண்ணே! நலமாக இருப்பாய். இழந்த செல்வங்களை, உன் கணவனை விரைவில் காண வாழ்த்துகிறேன். வியாபாரிகள், ஊர் உராக போகும் எங்களுக்கு இந்த பெயர் நளன் என்பது யார் என்பது தெரியவில்லை. இந்த அடர்ந்த காடு வெகு தூரம் செல்லும். யானைகளும் குதிரைகளும் தான் வாகனங்கள். இது வரை மனிதர்கள், ஆணோ பெண்ணோ நாங்கள் காணவேயில்லை. மணி பத்ரன் என்ற எங்கள் யக்ஷர்கள் தலைவன். அவன் காக்கட்டும். தமயந்தி கேட்டாள். நீங்கள் எங்கு செல்ல கிளம்பினீர்கள்?
ராஜகுமாரி! இங்கிருந்து சுவாஹு என்ற நகரம் செல்ல கிளம்பினோம். சேதி என்ற நாடு. வளமான நாடு. அங்கு சென்று பொருள்களை விற்கவும்., அங்கிருந்து சில பொருட்களை கொள் முதல் செய்து கொண்டும் திரும்புவோம்.
இதைக் கேட்டு தமயந்தி அவர்கள் கூடவே நடந்தாள். அவர்களும் அவளிடம் நட்புடன் பேசிக் கொண்டே வந்தனர். பல விஷயங்களை, நாட்டு நடப்புகளை அவர்கள் சொல்லிக் கேட்டாள். மலை வாசிகள். வாணிகம் தவிர மற்ற அரசியல் விஷயங்கள் அவர்கள் கேட்டதும் இல்லை, அவர்களுக்கு தேவையும் இல்லை, அதனால் அதில் கவனமும் இல்லை என்றனர். பல நாட்கள் நடந்து சென்ற பின், ஓரிடத்தில் தண்ணீர் நிரம்பிய தடாகம், மலர்களின் மணம் வீச குளுமையான கரையுடன் இருந்ததைக் கண்டனர். பசும் புல் தழைத்திருந்தது. கட்டைகளை உடைத்துக் கொண்டு வந்து அடுப்பு மூட்டினர். கிடைத்த காய்களோ, பழங்களோ கொண்டு வந்து உணவை தயாரித்துக் கொண்டனர். அங்கு அவர்கள் சில நாட்கள் தங்க முடிவெடுத்தனர்.
எதிர் பாராமல் சில காட்டு யானைகள் வந்தன. மத ஜலம் பெருக இவர்கள் இருந்த தடாகத்து நீரை குடிக்க வந்தன. புதிய யானைகளைக் கண்டதும் வெகுண்டு அவைகளைத் தாக்கின. அந்த யானைகள் பழக்கப் பட்டவை போலும். போர் காலங்களில் உதவி இருக்கும். போர் குணம் கொண்டவையாக இருந்தன. அவைகளின் வேகத்திற்கு இந்த வணிகர்களின் கூட்டம் ஈடு கொடுக்க முடியவில்லை. மத ஜலம் பெருகி முத்துக்கள் இரைய அவை பிளிறின. தாமரைத் தண்டுகளைத் தேடி வந்தன போலும். இடையில் இருந்த வணிகர் கூட்டம் இடையூறாக இருப்பதாக நினைத்து தாக்கின. பலருக்கு காயம். கை கால்களில் அடி பட்டு விழுந்தனர். அந்த யானைகளுடன் சில போர் வீரர்கள் பின்னால் வந்து சேர்ந்து கொண்டனர். யார் எந்த ஊர் எதுவும் புரியவில்லை. கொல்வதே குறியாக வந்தனர். எளிய வணிகர்கள், நாடோடிகள் போர் என்பதை என்ன அறிவார்கள். இந்த சாது வியாபாரிகள் நிறைய இழந்தனர். பலமான கூக்குரல்களும் ஓலமுமாக அந்த அமைதியாக இருந்த வனப் பிராந்தியம் போர்க் களமாகியது.
திடுமென, ஒரு பெரும் தீ அவர்களை ஸூழ்ந்தது. காப்பாற்றுங்கள் என்ற ஓலம் ஒரு புறம், ஓடுங்கள் என்ற குரல்கள் ஒருபுறம், அந்த திருடர்கள், இவர்களை விரட்டி, இவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை களவாடவே வந்திருந்தனர் என்பது புரிந்தது. இவை எதுவுமே விலை மதிப்புள்ளவை அல்ல. சாதாரண கற்களே. நம்புங்கள். எங்களைத் தாக்காதீர்கள். நாடோடிகள் நாங்கள். நகைகள், விலை உயர்ந்தவை எங்களிடம் ஏது. எங்களை விட்டு விலகுங்கள் என்று பெரியவர்கள் மன்றாடினர். அதன் பின் அவர்கள் சென்று மறைந்தனர். தமயந்தி இந்த களேபரங்களால் நடுங்கி விட்டாள். மூச்சு விடக் கூட பயந்து நடுங்கிய அந்த எளிய மக்களைப் பார்த்து தமயந்தி பரிதாபப் பட்டாள்.
அடிபடாமல் தப்பியவர்கள் ஒன்று கூடினர். என்ன தவறு செய்தோம். நம் குல தெய்வம் மணிபத்ரனை வணங்குவோம். வைஸ்ரவன என்ற யக்ஷன் அவன் நம்மை காக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு தங்கள் வழி பாடுகளைச் செய்தனர். நாம் கிளம்பும் முன் செய்யாமல் விட்டு விட்டோமோ, அதனால் தான் இந்த கஷ்டம் வந்ததோ என்று நினைத்தவர்கள் மிக சிரத்தையாக வழிபாடுகள் செய்து வணங்கி எழுந்தனர். கிளம்பும் சமயம் நிமித்தங்கள், சகுனங்கள் பார்த்து தானே கிளம்பினோம். எங்கே தவறு என்று அவர்களூக்குள் பேசிக் கொண்டனர்.
பொருளை இழந்த சிலரும், உற்றார் உறவினர்களை இழந்தவர்களும் இந்த பித்து பிடித்த பெண் வந்ததால் தான் இந்த கஷ்டம் வந்தது என தூற்றினர். நம் வண்டிகள் பாதுகாப்பாகச் சென்று கொண்டிருந்தன. இவள் வந்து அதைக் கெடுத்தாள் என்றனர். இவளுடைய துர்பாக்கியம் நம் மேல் விழுந்து விட்டது என்றனர் சிலர். இவள் அவர்களுக்கு நம்மை காட்டிக் கொடுக்கவே வந்தவள் போலும். ராக்ஷசி, பயங்கரமானவள், அல்லது யக்ஷ, பிசாசு ஜாதியோ என்னவோ. கெடுதல் செய்பவள், கெடுப்பது தான் அவள் தொழில் வேறு என்ன என்று சிலர் ஆவேசமாக பேசினர். மறுபடியும் அந்த கூட்டம் வந்து தாக்கினால் நாம் சும்மா இருக்க மாட்டோம். கற்களும், ஆயுதங்களும் கொண்டு சர மாரியாக தாக்குவோம் என்றும் பேசிக் கொண்டனர்.
தமயந்தி தன் வாழ் நாளில் இது வரை கேட்டறியாத பழிச் சொல். நடுங்கி விட்டாள். அவர்களை விட்டு வெகு தூரம் விலகிச் செல்வதே நல்லது என்று வேறு பக்கமாக ஓடினாள். சற்று தூரம் சென்ற பின் நின்று யோசித்தாள். என்ன இது? ஏன் என்னிடம் தெய்வங்கள் இந்த கடுமையை காட்டுகின்றன. என்ன செய்தேன், யாருக்கு தீங்கு இழைத்தேன், எண்ணமோ, செயலோ, சொல்லோ நான் அறிந்து எவரையும் புண் பட செய்ததில்லையே. என் முன் பிறவியில் செய்த வினைப் பயனா? அது ஏன் என்னைத் துரத்துகிறது. தன் மக்களாலேயே. உடன் பிறந்தவனே எதிரியாக ராஜ்யத்தை அபகரித்தான். அது வரை தோல்வி என்றே அறியாதவன்.வீழ்ந்ததும் என் வினைப் பயன் தானோ. அது தான் எங்களைப் பிரித்து வேடிக்கை பார்க்கிறதா. என் மகன், என் மகள், இவர்களைக் காண்பேனா? இதுவரை காடுகளில் அமைதி கண்டது கூட இனி இருக்காது போல தெரிகிறது. இவர்கள் சொல்வது போல நான் தான் அதிர்ஷ்டம் கெட்டவள், என்னால் தான் என்னைச் சார்ந்தவர்கள் துயரடைய நேர்ந்ததோ. கடவுளே. நானே ஏதோ ஒரு காட்டு மிருகத்துக்கு பலியாக என் உடலைக் கொடுத்து மடிகிறேன்.
மறு நாள், அந்த வணிகர்கள் வண்டிகளை கட்டிக் கொண்டு கிளம்பிச் சென்று விட்டனர்.
விதர்ப ராஜ குமாரி திரும்பவும் தனித்து விடப் பட்டாள். தனக்குள் புலம்பினாள்.
பாவம் அந்த ஜனங்கள். என் அருகாமையே அவர்களுக்கு துன்பத்தை விளைவித்து விட்டதாக சொல்கிறார்களே. யாருக்கு யார் நன்மையோ தீமையோ செய்ய முடியும்? அவரவர் வினைப் பயன் தான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். மனித இனத்தை பல நாட்களுக்குப் பின் கண்டதே ஆறுதலாக இருந்ததே. . அதுவும் போய் விட்டது. இன்னும் என்ன அனுபவம் பாக்கி இருக்கிறதோ. அந்த சாதுக்கள் நல்ல காலம் வரும் என்றார்களே. அந்த முரட்டு யானைகள் என்னை மிதித்து அழித்திருந்தால் இந்த பழியாவது காதில் விழாமல் மரித்திருப்பேன். மரணமும் வேண்டினால் வராது போலும்.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யோசித்து பார்க்கிறேன் – என்ன தவறு, எங்கே யாருக்கு செய்தேன். அருமையாக செல்வச் செழிப்பில் வளர்ந்தேன். இந்த அளவு என் வாழ்க்கை பந்தாடப் படும் வகையில் யாருக்கும், மனம், சொல், உடலால் எந்த துன்பமும் இழைத்ததில்லையே. அந்த லோக பாலர்கள் வந்து என் சுயம் வரத்தில் கலந்து கொண்ட சமயம் அவர்களை நிராகரித்தேனே, அது அவ்வளவு பெரிய குற்றமா.?
ஓ, அரசர்களுல் சிறந்தவனாக, காட்டரசன் சிங்கம் போல உலாவி வந்தவனே, உன் மனைவி அந்த வண்டியில் வந்த வணிகர்களுக்கு துன்பம் வரக் காரணமாக இருந்தேனா, அதில் பலர் இருந்தனர். சிலர் அந்தணர்கள், வேத சாஸ்திரங்களை அறிந்தவர்கள், அவர்கள் எவருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் ஒதுங்கி வாழ்ந்தவர்கள், அவர்களை நான் வியந்து நோக்கினேனே. இப்படி கூட வாழ முடியுமா என்று நினைத்தேன். அவர்களே என் மேல் பழிச்சொல்லை சொல்ல என்ன காரணம்? இப்படி வருந்தி தன்னையே நொந்து கொண்டாள்.
எனினும் அவர்கள் சொன்ன சுவாகு என்ற சேதி நகர தலை நகருக்கே வந்து சேர்ந்தாள். அதே பழைய சேலை, பராமரிக்காத கேசமும், உடலும். இங்கும் பொது ஜனங்கள் அவளை நெருங்க பயந்தனர். பித்து பிடித்தவள் என்றே நினைத்தனர் போலும். சில வாலிபர்கள் அவளைத் தொடர்ந்தனர். அவர்களுடனேயே அரண்மனை வாசலுக்கு வந்து சேர்ந்தாள். அந்த அரசனின் தாயார், மகாராணி அரண்மனை உப்பரிகையிலிருந்து பார்த்தவள், ஒரு பெண், இந்த வாலிபர்கள் சூழ்ந்து என்ன செய்கிறார்கள் என்று அறிந்து வர அவளுடைய பணிப்பெண் ஒருவளை அனுப்பினாள். அவளை என்னிடம் அழைத்து வா என்றாள். பாவம், என்ன கஷ்டமோ, துயர் மண்டி ,உதவி கோரி வந்திருக்கிறாளோ என்று சொன்னாள். இந்த புழுதி படர்ந்த ஆடை, பறக்கும் கேசம் இவைகளுடன் இருந்தாலும், அவள் முகத்தின் பொலிவை காண்கிறேன். நல்ல குலத்து பெண் என்று தோன்றுகிறது. லக்ஷ்மீகரமான கண்கள். பித்து பிடித்தவள் அல்ல, ஏதோ விதியின் பிடியில் வருந்துகிறாள் போலும்.
அந்த பணிப்பெண் இறங்கி வந்தாள். கூட்டத்தை விலக்கி அவளை மகா ராணியிடம் அழைத்துச் சென்றாள்.

மகாராணி அவளைக் கண்டு திகைத்து விட்டாள். ‘மகளே! ஏதோ பெரும் துயர் உன்னை தாக்கியிருக்கிறது. ஆனாலும், உன்னைக் கண்டதும் என் மனதில் உன்னிடம் இரக்கம் மட்டுமல்ல, ஏதோ ஒரு பரிவு, இவள் ஒரு நல்ல குலத்தில் வந்தவள் என்ற நம்பிக்கையும் வருகிறது. பெண்ணே! பயப்படாதே, நான் உனக்கு ஆதரவாக இருக்கிறேன். நீ யார் என்று சொல். ஆடை ஆபரணங்கள் தொலைந்து விட்டனவா. அதனால் பரவாயில்லை. உன் மேனி அழகே உன்னைக் காட்டி கொடுக்கிறது. இந்த விடலை சிறுவர்கள் பின் தொடர்ந்து வரவும் அதுவே காரணம். பயப்படவில்லையே. தெய்வ மகள் போல இருக்கிறாயே. நல்ல காலமாக இங்கு வந்து சேர்ந்தாய். இனி என் பொறுப்பு. நீயாக எங்கு போக விரும்பினாலும் நான் அனுப்பி வைக்கிறேன். சொல்’ என்றாள்.
அன்புடன் அவள் பேசியதால் மனம் நெகிழ்ந்தாலும், தமயந்தி கவனமாக பதில் சொன்னாள். மானுட பெண்தான் நான். என் கணவனிடம் மனம் ஒத்து வாழ்ந்தேன். நல்ல குலத்தில் வந்தவள் தான். எனக்கு சில காலமாக இருப்பிடம் என்று இல்லாமல் கிடைத்த இடத்தில் கிடைத்த பழமோ, காயோ உண்டு காடுகளில் அலைய நேரிட்டது. மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் கூட களைத்து தூங்கியோ, விழித்திருந்தோ, இரவுகளைக் கழித்தேன். என் கணவன் நல்ல குணங்கள் உள்ளவன். அனைவராலும் மதிக்கப்பட்ட வீரன். என்னிடமும் பிரியமாக இருந்தான். தன் உயிருக்கு உயிராக மதித்தான். நானும் அவ்வாறே. அவனை நிழல் போல தொடர்ந்து வந்தேன். இந்த வீழ்ச்சி அவன் ஸூதாட்டத்தில் அழைக்கப் பட்ட பொழுது மறுக்காமல் அதில் ஈடுபட்டதால் வந்தது. உடன் இருந்தவர்களாலேயே ஏமாற்றப் பட்டான். அதோடு நிற்காமல் வென்றவர்கள் துரத்தினர். காட்டில் வாழ வந்தோம். உடுத்த துணியுடன் வெளியேறியவர்கள் நாங்கள் இருவரும். இந்த துயர் அவரை மிகவும் பாதித்து விட்டது. அதிலும் என் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். நான் விலகுவதாக இல்லை. உடன் வந்தேன். பசியும், வருத்தமும் ஒரு நாள் என்ன தோன்றியதோ, என்னை விட்டு பிரிந்து சென்றார். மனதளவில் பாதிக்கப் பட்டவர். எங்கு அலைகிறாரோ, எப்படி இருக்கிறாரோ, தேடிக் கொண்டே வந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.
அவரை பின் தொடர்ந்து வந்தவள் பல நாட்களாக தூங்கவும் இல்லை. ஒரு நாள் தவிர்க்க முடியாமல் தூங்கிய பொழுது, என் சேலையில் பாதியை வெட்டி எடுத்துக் கொண்டு என்னை நிராதரவாக விட்டு விட்டு போய் விட்டார். அந்த மீதி சேலையைத் தான் இப்பொழுது அணிந்து கொண்டிருக்கிறேன். என்னைத் துறந்து செல்ல என்ன காரணம்? ஏன் ஏன் என்ற கேள்வியே என்னைத் துரத்துகிறது. தேவர்களுக்கு சமமானவன். யாரிடமும் கோபித்தோ, அனாவசியமாக தண்டித்தோ நான் கண்டதில்லை. நாட்டு மக்கள் தெய்வமாக மதித்தனர். அல்லும் பகலும் அதே நினைவாக நான் அலைகிறேன், தேடிக் கொண்டே ஊர் பெயர் கூட தெரியாத இடங்களில் அலைந்த சமயம் சில வணிகர்கள் இந்த நகரம் பற்றிச் சொன்னார்கள். இங்கு வந்தேன்.
மகாராணி, அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தார். பேசிய சொற்களும், பேசிய விதமும் அவளிடம் மதிப்பை கூட்டியது. மகளே! இங்கே என்னுடன் இரு. நாங்களும் உன்னுடன் உன் கணவனைத் தேடுகிறோம். சீக்கிரமே நீங்கள் ஒருவரையொருவர் கண்டு கொள்வீர்கள். பயப்படாதே.
தமயந்தி இந்த ஆறுதலான சொற்களைக் கேட்டு பதில் சொன்னாள். ‘வீர மகனைப் பெற்ற தாயே! சில நிபந்தனைகளுடன் இங்கு இருக்க சம்மதிக்கிறேன். யாரிடமும், வெளி ஆண்களிடம் பேச மாட்டேன். என்னைத் தவறாக எண்ணி அணுகாமல், நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி யாராவது வந்தால் தண்டிக்க வேண்டும். சில தூதுவர்களை அனுப்ப விரும்புகிறேன். என் செய்தியை மறை பொருளாகச் சொல்லி பல இடங்களிலும் அறிவிக்க உதவி செய்ய வேண்டும். இயல்பாக பல இடங்களுக்கும் செல்லும் அந்தணர்களோ, வணிகர்களோ பலர் கூடும் இடங்களில் இந்த பாடல்களை பாடினால் கூடப் போதும். அது ஒன்று தான் என் கோரிக்கை.
மகாராணி சம்மதித்தாள். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன். நீ இந்த அளவு உன் கொள்கைகளில் திடமாக இருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது, பெண்ணே! என்னை நம்பு. உன் வாழ்வில் நல்ல காலம் வர நானும் பிரார்த்திகிறேன், என்றாள்.
மகாராணி, சுனந்தா என்ற தன் மகளை அழைத்தாள். இந்த பெண் உனக்கு சைரந்திரி – உடன் இருப்பவள்- தோழியாக, மற்றவர்களை விட மரியாதைக்குரிய தலைமை பணிப் பெண்ணாக – இருப்பாள். அவளுடன் இனிமையாக பேசு. மகிழ்ச்சியாக வைத்துக் கொள். என்றாள். –
சுனந்தாவும் மகிழ்ந்தாள். அவளுக்கும் தமயந்தியிடம் ஒட்டுதல் உண்டாகி விட்டது. தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். அவளுடன் இருந்த மற்ற பெண்கள், தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். தன் வரையில் தானே அலைந்து தேடிக் கொண்டிருந்தவள் சற்று உதவும் நல்லவர்களுடன் இருப்பதில் நிம்மதி அடைந்தாள்.
(வளரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
