- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
இறுதிப் பாகம்
சம்ஸ்கிருத மூலம்: பாணபட்டர்
தமிழாக்கம்: ஜானகி க்ருஷ்ணன்

ஓட்டமும் நடையுமாக அருகில் வந்து விட்ட ஹர்ஷன், நினைவிழந்து இருந்த பெண் தன் உடன் பிறந்தவளே என்பது தெரிந்து விட்டதால் அருகில் சென்றான். அவள் நெற்றியில் தன் கையை வைத்து ஆறுதல் சொல்பவன் போல தானும் அவர்களுடன் குளுமையான பச்சிலைகளைக் கொண்டு உடல் வெப்பத்தைக் குறைக்க செய்ய வேண்டிய சிகித்சைகளைச் செய்தான். தன் சந்திர காந்த சூடாமணியை உடலில் வைத்து அதில் வெளிப்பட்ட குளுமையான நீரால் உபசரித்தான். ஆறுதலாக பேசியும் அரவணைத்தும் ராஜ்யஸ்ரீ கண் விழித்து எழச்செய்தான். எதிர் பாராத சந்திப்பு. திடுமென சகோதரனுடைய வரவால் தன் இதயமே உடைந்து விட்டது போன்ற அழுகை பீறிட இறுக அணைத்துக் கொண்டாள். கனவோ என்ற சந்தேகம் வர, அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஹா தாத என்றவள் மேலும் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, விம்மினாள். ஹர்ஷன் அவளை சமாதானப் படுத்த பெரும் முயற்சி செய்தான். வத்ஸ! மகளே, திடமாக இரு. தைரியமாக இரு, நான் வந்து விட்டேனே, இனி என்ன துக்கம் என்றெல்லாம் ஆறுதல் சொன்னான். உடன் வந்த அரச அதிகாரிகளும் அருகில் வந்து ஆறுதல் சொன்னார்கள். ‘தேவி! இதோ பார் , உன் நிலையைக் கண்டு தேவனும் வருந்துகிறான் பார். ஆறுதல் அடைவாய். சமயத்தில் விவரம் தெரிந்து வந்து விட்டோமே, அதுவே ஈசன் அருள். இனி உன் வாழ்வில் எந்த துன்பமும் வராது, பயப்படாதே ‘ என்று சொல்லி அவளை தன் நிலை அடையச் செய்தனர். ஸ்வாமினி! உன் சகோதரனைப் பார். மற்ற பெண்களும் வந்து ஒவ்வொரு விதமாக சொல்லி சமாதானப் படுத்தினர். அருகில் இருந்த ஒரு மர நிழலில் அமர்ந்தனர்.
பிக்ஷுக்களும், மற்ற துறவிகளும் வந்திருப்பது அரசன் ஹர்ஷன் என்பதையறிந்தனர். மரியாதையுடன் கமல மலரின் தண்டுகளை கொண்டுவந்து போட்டு குளிரூட்டிய நீரைக் கோண்டு வந்து முகத்தை கழுவிக் கொள்ளவும், குடிக்க நீரும், கொடுத்து உபசரித்தனர். அனைவரும் வந்ததில் மகிழ்ந்த அரசன் ஹர்ஷனும், அழுது சிவந்த கண்களை, தானும் சுத்தமாக்கிக் கொண்டு சகோதரியையும் அதே போல கண்களையும் முகமும் கழுவிக் கொள்ளச் செய்தான். சுற்றி இருந்தவர்கள் நடந்த விவரங்களை தெரிந்து கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஹர்ஷனும் ராஜ்யஸ்ரீயை பார்த்து ‘வத்ஸ! இவர்களை வணங்கு. இவர்கள் மதிப்புக்குரிய ஆசார்யர்கள். வனத்தில் தவம் செய்கிறார்கள் என்று அறிமுகப் படுத்தினான். இவர் தான் பதந்தன். உன் கணவனின் நண்பன். எங்களுக்கும் குருவாகி விட்டவர். அவள் அவரை உடனே அறிந்து கொண்டாள். தன் கணவனின் உற்ற நண்பன் என்பதால் தோன்றிய நட்புடன் தன் கண்களில் துளிர்த்த நீரை அடக்கிக் கொண்டு அருகில் வந்து வணங்கினாள். பழைய நினைவுகள் வந்து நிறைந்த மனதுடன், அவரும் மதுரமான வார்த்தைகளால், கனிவுடன் சொன்னார். அவர்களை நீராடி வந்து தங்கள் மனம் சாந்தியடையும் வரை காத்திருந்து சொல்லலானார்.
(இதன் பின் புத்த பிக்ஷுவான பதந்தன் சொல்வதாக கவி புத்தமத வரலாற்றைச் சொல்கிறார்)
வாசுகி என்பவன் விஷத்தைக் கக்கும் நாகங்களின் தலைவன். ரசாதலம் என்ற பாதாளத்தில் வசித்தனர். அவன் உயர் ரக முத்துகளைக் கோர்த்து பாதாளத்திலேயே தாரா கணங்கள் வந்து விட்டது போன்ற ஒரு மாலையாக (ஏகாவளீ- ஒரே மாலையாக ஒரு பெண்ணாக) உருவாக்கினான்- தொடுத்தான். அவளை மந்தாகினீ என்று அழைத்தான். அவளும் பகவான் சோமன்-சந்திரனின் அருட் பார்வையை பெற்றாள். ஓஷதீனாம் அதிபதி -என்று சந்திரனுக்கு பெயர். பச்சிலைகள், தாவரங்களின் அதிபதி என்று பொருள். சந்திர ஒளியால் தாவரங்கள் வளரும் என்பது நியதி. பின்னால் அவள் நதியாக இமய மலையில் பிரவகித்தாள். இமய மலையின் ஸ்பரிசத்தால் அவள் மேலும் பாவனமாகி அனைத்து ஜீவன்களுக்கும் சந்தாப ஹாரிணீ- துன்பத்தை துடைப்பவளாக அணுக்கமாக ஆகி விட்டாள். வாசுகியே ஏகாவளியை அக்ஷமாலையாக விஷத்தை முறிக்கும் மருந்தாக ஏற்று தானும் அணிந்து கொண்டான்.
பல காலம் சென்ற பின், மந்தாகினி நாகார்ஜுனன் என்பவன் மூலம் பிக்ஷுக்களுக்கு அளிக்கப் பட்டாள். ரசாதளத்திலிருந்து கிளம்பி மூன்று சமுத்திரங்களும் ஸுழ இருந்த ஒரு பூமியின் அதிபதியான சாதவாஹன் என்ற தன் நண்பனிடம் சென்றான், அந்த தேச நரபதி- அரசன் அவன். அவன் அவளை மணந்தான். அந்த சிஷ்ய பரம்பரை வளர்ந்தது. நாளடைவில் எங்கள் கைக்கு வந்து சேர்ந்தாள். (ஏகாவளி என்ற ஜப மாலை) உங்களுகெல்லாம் இது நம்ப முடியாமல் இருக்கலாம். தந்திரம் என்ற உபசாரம். அதை இன்று வரை அறிவு நிறைந்தவர்கள் தங்கள் புத்தியினால், வளர்த்து உலகில் உயினினகள் அனைத்தையும் காக்கும் கலையாக, வளர்ந்து உள்ளது.
அதனால் எங்களுக்கு ஓஷதி- மருத்துவம் கை வந்த கலையாயிற்று. அதனால் சகல உயிரினங்களையும் விஷ தாக்குதல்களிலிருந்து காக்கும் சேவையை நாங்கள் செய்து வருகிறோம். பிக்ஷு தன் சீடனுக்கு கை காட்ட அவன் அந்த ஏகாவளீ என்ற விஷத்தை முறிக்கும் பச்சிலையால் ஆன மாலையை அவர் கையில் கொடுத்தான். மாலையாக தொடுக்கப்பட்ட அக்ஷமாலை- ஜப மாலையாக அது இருந்தது. அதன் ஒளி எங்கும் பரவியது போலவும் மலர்ந்த மலர்கள் போல புத்துணர்வை தருவதாகவும் இருந்தது. தாமரைத் தண்டைத் தொட்டால் தெரியும் அதன் மிருதுவான தன்மை, அது இதில் இருந்தது. தாழம்பூவின் மணமோ, குமுதங்களின் மணமோ போன்ற வாசனை அதில் இருந்ததாக அரசன் எண்ணினான். திடுமென வனமே உல்லாசமாக, வன தேவதைகளின் சிரிப்பு போல ஆனது போல மனதில் அமைதியும், ஆனந்தமும் நிறைந்தன. பூர்ண சந்திரனின் உதயம் போல வானம் தெளிவாக இருந்தது. தாவானலம் (காட்டுத் தீ) என்ற நெருப்பு எரிந்து அடங்கி விட்டது போலவும் அதை தூசி நீக்கி சுத்தம் செய்து விட்டது போலவும் திசைகள் சுத்தமாக தெரிந்தன. திடுமென வனத்தின் நதிகளில் நுரை தள்ளிக் கொண்டு வந்த பிரவாகம் வெண்ணிறம் பூசியது போல தெரிய, பெண்களின் முகங்களிலும் அதன் எதிரொலியாக மகிழ்ச்சி தெரிந்தது.
ராஜா அதிசயித்தான். உண்மைதானா என்பது போல சுற்றுப் புறமும் அருகில் இருந்தவர்களிடமும் தோன்றிய மாறுதல்கள் நம்பிக்கையை வளர்க்க இருப்பதை உறுதிசெய்து கொள்பவன் போல கண்களை மூடி முடித் திறந்தான். சரத் கால சந்திரனின் குளுமையை, சப்த ரிஷி மண்டலமே பதக்கமாக தாரா கணங்கள் கண் சிமிட்டுவதை ரசித்தான். ஈசான திசையில் சந்திரனின் ஒளி சிதறி புவனமே கொண்டாடுவது போல மகிழ்ந்தான். பாற்கடலின் வெண்மையே பரவி விட்டதோ, பல அரச சமூகங்களைக் கண்ட கங்கா நதி எந்த துர்கதி- கெடுதலையும் தீர்த்து விடுபவள் அருகில் வந்தது போலவும், மகேஸ்வரனின் பதாகை தெரிவது போல, வெண்மையான நெருங்கிய பல்வரிசை போன்ற ஈஸ்வரனையே நேரில் கண்ட மகிழ்ச்சியை அடைந்தான். வரன்- மணமகன் ஸ்வயம் வரத்தில் மணமகளின் வரமாலையை வரவேற்பது போல புவனஸ்ரீ- பூமியே செல்வம் என நினைக்கும் அரச பரம்பரையில் வந்தவன், ராஜ தர்மமே அந்த அக்ஷமாலையாக கைகளில் வந்து அமர்ந்து விட்டது போன்ற உணர்வை அடைந்தான். சமுத்திரத்தின் அலங்காரமாக அமைந்த பட்டி போன்ற எல்லைகள் உடைய குபேரனுடைய பொக்கிஷம், என்று பலவாறாக மனதில் நினைத்து பெருமிதமும், வியப்பும் நிறைந்த மனதுடன் குருவாக வந்தவரை ஏறிட்டான். அவரும் அதை அரசனின் கழுத்தில் மாலையாக அணிவித்தார். நரபதி, அன்புடன் தன் நன்றியையும் கலந்து தெரிவிப்பவன் போல பதில் அளித்தான். ‘ஆர்ய! இந்த உயர்ந்த மணிகளுக்கு எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் அணிய அருகதை உடையவர்கள் தானா? தவத்தின் சித்தியாக தாங்கள் பெற்ற உயர் மணிமாலை. தேவதைகளின் பிரசாதம். நாங்கள் யார்? இதைப் பெற என்ன தவம் செய்தோம்? இதை ஏற்றுக் கொள்ள மறுக்கவும் நாங்கள் யார்? குருவான உங்களைக் கண்டதில் இருந்தே நன்மைகளை அடைந்துள்ளோம். எங்கள் இதய பூர்வமாக உங்களிடம் அடைக்கலம் ஆகி விட்டோம். என் உடல் புண்ணியம் செய்தது. தெய்வங்களின் சங்கல்பம்- ஆசீர்வாதத்தால் இந்த ஆபரணத்தை என் உடல் பெற்றுள்ளது. உங்கள் கட்டளைப் படி நடக்கும் எளிய கர்மசாரிகளாக ஆகிவிட்டோம். கட்டளையிடுங்கள்’ என்றான்.
சில காலம் அங்கு வசித்தனர். ஏகாவளீ என்ற அந்த ஜப மாலையை அங்குள்ளோர் மிக்க மரியாதையுடன் சொல்வதைக் கேட்டு ராஜ்யஸ்ரீ யும் அமைதி அடைந்தாள். தம்பூல வாகிணி என்று உடன் வந்த ஒரு சேடியிடம் மெல்லிய குரலில் அவள் காதில் ஒரு விருப்பத்தை தெரிவித்தாள். அவள் அரசனிடம் வந்து தேவியின் விருப்பம் இது என்று தெரிவித்தாள். ‘தேவ! தேவியின் கோரிக்கை இது. உங்கள் முன்னால் பலமாக கூட பேசியதில்லையாம். விருப்பத்தை தெரிவிப்பது என்பது எங்கே. அரசர்கள் ஆணையிடுவது தான், நாங்கள் எதையும் விரும்பி கேட்டதில்லை என்றார்கள். தெய்வத்தின் செயல், இந்த தசையை அடைந்துள்ளேன். வினயம் இல்லை என நினைக்க வேண்டாம். பதியோ, சந்தானமோ இல்லாத நிலையில் ஆர்ய! தாங்கள் தான் அவளுக்கு தாங்கும் கையாக வந்து மரணத்திலிருந்து காத்தீர்கள். தற்சமயம், துறவியாக, காவி உடை தரித்து, பிக்ஷுணியாக உங்கள் அனுமதியை வேண்டுகிறேன் என்று சொன்னாள். ‘ அரசன் குழம்பினான். என்ன பதில், சொல்வது?
எதேச்சையாக பதந்தர் அங்கு வந்தார். இந்த விஷயத்தைக் கேட்டு அவர் சொன்னார்.’ஆயுஷ்மதி! சோகம் என்பது பிசாசம் என்பதன் மறு பெயர். எதற்கும் தடை சொல்லும் மனதின் குரலுக்கு மறு உருவமாக வருவது. தாமசமான குணம். உடலுக்கு விஷம் செய்யும் கெடுதலைச் செய்து விடும். யமனின் வேலையை சுலபமாக்கும். நரகத்தின் வாசல் காப்போன் போல. இதை வளர விடக் கூடாது. உள்ளிருந்து தகிக்கும் நெருப்பு போன்றது. ராஜ யக்ஷ்மா போன்ற தீர்க்க முடியாத வியாதி. ஜனங்களை வாட்டும் அலக்ஷ்மி. திருமகளின் மூத்தவள். தவறு செய்யும் க்ஷபணகன் போன்றது. தூங்க விடாது. தீயின் வெப்பம் போல மேலே வந்து விழும். அரசனுக்கு அருகில் இருந்து கெடுதலைச் செய்யும் அடியாள், அசுப கிரகங்களின் பாதிப்பு போன்றது. சோதிடத்தில் சில கிரகங்களின் சேர்க்கை நல்லதல்ல என்பார்கள். அதில் இந்த சோகமும் ஒன்று என கொள்ளலாம். மனதை அரிக்கும் இந்த சோகத்தை தவிர்க்க, அந்தகாரமாக மனதை அக்ரமித்து செயலில் நாட்டமில்லமல் செய்யும் இந்த மன நிலையை தீர்க ரோகமாக- தீராத வியாதியாக எண்ணி உதறி தள்ள வேண்டும். பெரிய அரசர்களே, அறிவாளிகளே இதன் பாதிப்பால் நடுங்கும் பொழுது சிறிய பெண் என்ன செய்வாள் ? .
அவர் அவளை சமாதானப் படுத்தினார். மன வருத்தம் உடலை அழிக்கும். வேறு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்வும் தாழ்வும் மனதை பாதிப்பது இயல்பே. உலக வாழ்க்கையே அநித்யம் என்பதைப் பற்றி விவரித்தார். மேலும் பல தத்துவங்களைச் சொல்லி அந்த நிலையில் ராஜ்யஸ்ரீ விரும்புவது போல புத்த மதத்தில் சேருவதை ஆதரிப்பதாகச் சொன்னார். அரசன் பதில் சொன்னான்.
ஆர்ய! உங்களை அல்லாமல் வேறு யாரால் இந்த அளவு பரிவுடன் சொல்ல முடியும். ஆபத்துகள் ஸூழ்ந்த இந்த உலகில் பலவிதமான உடல், மனக் கஷ்டங்களுக்கு ஆறுதல் தரும் பற்று கோலாக உள்ளவர்கள் நீங்கள். அன்பே உருவாக இருந்து மோகம் என்ற அந்த காரத்தை விலக்கும் தர்ம தீபமாக உள்ளவர்கள். ஆனால், என் மனதில் உள்ள பாசம், உங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்ளச் செய்கிறது. மனதில் இன்னமும் அரசன் என்றும் அதிகாரம் செலுத்தும் மனப்பான்மை – தீரனாக இருந்தாலும் என்னை இந்த ஆலோசனையை ஏற்கத் தயங்குகிறது. எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தாலும், இது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கையும், குண நலன்களும் தன்னலமே பிரதானமாக வேறு விதமாக நினைக்கத் தூண்டுகிறது. சமுத்திரம் போல தங்களிடம் உள்ள மரியாதை குறையாமல் காத்துக் கொள்கிறேன். உங்கள் ஆலோசனை மதித்து ஏற்றுக் கொள்ளத் தக்கதே. முன்னாலும் உங்கள் அதிதி சத்காரத்தைப் பெற்றவன். அனுக்ரகிக்கப் பட்டவன். அதற்காக நான் பட்ட நன்றிக் கடனைத் தீர்க்க என் உடலையே தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன். என்றாலும் என் சகோதரி பாலா- இன்னமும் உலகம் தெரியாத சிறு பெண். மிகவும் கொண்டாடி வளர்க்கப் பட்டவள். பெரும் துக்கம் அனுபவித்து மனம் வாடி இருப்பவள். அவள் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் பக்குவம் பெறும் வரை என் பராமரிப்பில் இருப்பதையே உசிதமாக நினைக்கிறேன். எங்களுக்கும் ஒரு சகோதரன் வதம் செய்யப் பட்ட துக்கம் அடங்கவில்லை. அந்த துரோகிகளான எதிரிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய கடமை உள்ளது. அனைவரும் காண நான் சபதம் செய்தேன். என் புஜ பலத்தால் அவர்களை வெல்வேன் என்று. என் பிரஜைகளுக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். அவமானங்களை சகித்துக் கொண்டு வாழ அரச குலத்தினரின் இயல்பான கோபம் இடம் கொடுப்பதில்லை. ஏற்கனவே, என் காரணமாக உங்களின் நேரத்தில் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டு விட்டேன். எனக்கு விடை கொடுங்கள்.
இந்த பொறுப்புகளை நிறைவேற்ற என்னை அனுமதியுங்கள். என் உடன் பிறந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனை பழி வாங்கும் வரை, என் தந்தை மறைந்தபின் வரிசையாக வந்த பல துன்பங்களால் வருந்தும் என் பிரஜைகளுக்கு என் கடமையை செய்யும் வரை, என் மனம் ஆறுதல் அடையாது. அதன் பின் நானும் வருகிறேன். உங்களிடம் தர்ம உபதேசங்களை கேட்கவும், உங்கள் அடி பணிந்து தவ வாழ்க்கையை மேற் கொள்ளவும் வருகிறேன். இந்த உபதேசங்களால் என் ரஜோ குணங்கள் அடங்கட்டும். (அரச குலத்துக்கு ரஜோ குணம் அவசியம் – ரஜோ குணம் தான் செயலில் ஈடுபடுத்தும்) சீலம், மன அடக்கம் இவைகளை கை கொள்கிறேன். தத்துவ விசாரங்களில் ஈடு படுகிறேன். உங்கள் அருகிலேயே இருந்து உங்கள் அறிவுரைகளை கேட்கிறேன். என் கடமைகளை முடிக்காமல் காவி உடை அணிய என் மனம் கேட்கவில்லை. மகான் நீங்கள். வேண்டுபவர்கள் வேண்டுவதை அளிக்கத் தயங்க மாட்டீர்கள். இந்திரனுக்கு தன் அஸ்தியையே கொடுக்க ததீசி முனிவருக்கு என்ன மனோ பலம் இருந்திருக்கும். முனி நாதரான பகவான் புத்தரும் கூட பல முறை வனப் பிரதேசத்து கொடிய மிருகங்களுக்கும் தன் பரிவான செயல்களால் உதவி இருக்கிறார். இதற்கும் மேல் தாங்களே அறிவீர்கள், எது எனக்கு நன்மை என்பதை என்று சொல்லி நிறுத்தினான் அரசன் ஹர்ஷன்..
திரும்பவும் பதந்தன் சொன்னர்: அரசனாக நீங்கள் சொன்ன சொல்லை மீற மாட்டீர்கள். உங்கள் கடமைகளை நானும் அறிவேன். பிரஜைகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத வம்சத்தினர் நீங்கள். அதனால் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. வாழ்த்துக்கள். அரசனாக உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்’ என்றார். அரசனும் அன்று இரவு தங்கி விடிந்தவுடன் காலையில் புறப்பட்டான். ஆசிரமத்து வாசிகளுக்கும், குருவான பலருக்கும், இருக்க இடம் கொடுத்து கவனித்துக் கொண்டதற்கு நன்றி சொல்லி விட்டு, தன் சகோதரியையும் அழைத்துக் கொண்டு, சில நாட்கள் அந்த கடுமையான பிரயாணத்தை சகித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தான்.
அரண்மனை வாசிகள் ராஜ்யஸ்ரீ யைக் கண்டு மகிழ்ந்தனர். யாக்ஞ வல்க்யர் என்ற முனிவரும், பீமனும் அர்ஜுனனும் அஸ்வத்தாமாவும் வாழ்ந்த தேசம். அவர்களைப் போலவே வீரமும் சீலமும், அரசனாக கடமைகளை செய்வதாகவும். தன் குலத்தின் பெருமையைக் காப்பவனாக, நாளடைவில் தன் ஆதி ராஜனின் ராஜ சாஸனத்துக்கு இணையாக ராஜ பதவியை நிர்வகித்து, சகல தீவுகளையும் வென்று வெற்றிக் கொடி நாட்டவேண்டும் என்ற தன் சங்கல்பத்தையும் நிறைவேற்றி திக் விஜயம் செய்தவனை, ஸ்வேத தீவின் அதிபதி, லக்ஷ்மி தேவி தன் தீவுக்கும் அழைத்து வர நிலவை அனுப்பியது போல, அவளுடைய அன்பான கட்டளைகளை நிறைவேற்றுபவன் போல நிலவும் எழுந்தது. ஸூரியனை உபாசித்த தந்தையின் வழியில் வந்த அரசன் ஸ்ரீ ஹர்ஷனுக்கு பத்ரம்- நன்மை உண்டாகட்டும். ஓம்.
இத்துடன் பாண பட்டர் என்ற கவி எழுதிய ஹர்ஷ சரிதம் நிறைவேறுகிறது.
அத்துடன் உரையாசியரின் சங்கேதம் என்ற உரையும் நிறைவடைந்தது.
முற்றும்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
