- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
பகுதி – 5
மனிதனின் வாழ்வில் நியதி- விதி அல்லது தெய்வம் மின்னல் தாக்கியது போல போல எதிர்பாராமல் பெரும் நன்மையைத் தருகிறது அல்லது பேராபத்தை விளைவித்து விடுகிறது. யாரும் விலக்கல்ல. மகான்கள் என்ற பெருமை வாய்ந்தவர்களோ, யாரும் கவனிக்காத எளியவனோ காலத்தின் பிடியில் அனைவரும் ஒன்றே. மாறுதல் தான் இயற்கை. பூமியைத் தன் தலையின் படங்களில் தாங்கும் அனந்தன் என்ற சேஷ நாகம், புரண்டு படுப்பது போல அசைந்து, பெரிய பெரிய மலைகளையே புரட்டிப் போடுவது போல. இதுவும் காலத்தின் செயலே.
ஒருசமயம் அரசன் பிரபாகர வர்தன், தன் மகன் ராஜ்யவர்தனன் வளர்ந்து வாலிபனாக இருந்ததால், (கவசம் அணியும் பருவம்- போர் முனைக்கு செல்லத் தகுந்த பருவம்) ஹூனர்களுடன் யுத்தம் செய்ய வடக்கு நோக்கி அனுப்பினார். சிங்கம் மான் வேட்டைக்கு தன் புதல்வர்களான இளம் சிங்கங்களை அனுப்புமாம். அது போல அரசனும் தன் மகனை அனுப்பினான். (பயிற்சி போல, மான் போல ஹூனர்கள், ராஜ்யவர்தனன் இளம் சிங்கம்) (हरिणानि-மான் கள் हरि-சிங்கம் हरिणेश किशोर – மிருக ராஜனின் சிறு குட்டிகள் ) .

இளம் சிங்கம் போன்ற தன் மகனுக்கு உதவியாக தேர்ந்த போர் வீரர்கள், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான மந்திரிகள், சாமந்தர்கள் என்ற உயரதிகாரிகள், மற்றும் நால் வித சேனைகளையும் உடன் அனுப்பினான்.
போர் முனைக்குச் செல்ல கிளம்பி விட்ட தன் மூத்தவனை, சற்று இடைவெளி விட்டு ஹர்ஷன் சில குதிரை வீர்களுடன் பின் தொடர்ந்தான்.
வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹர்ஷன் கைலாச மலைச் சரிவுகளின் அழகைப் பார்த்து அந்த வயதுக்குரிய சபலம் அல்லது ஆர்வம், காரணமாக அதன் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் நுழைந்து விட்டான். சிங்கங்கள், சரப எனும் மிருகங்கள், சிறுத்தை புலிகள், வராஹ- பன்றிகள், இவை நிறைய தென்பட்டன. பனி மழை பெய்து கோண்டிருந்த மலைச் சரிவுகளில், உள்ளே வன தேவதையின் அழகு அவனைக் கட்டிப் போட்டது போல மகிழ்ந்து விளையாட்டு போல மிருகங்களைத் துரத்தியும், அருவிகளில் நனைந்தும் மகிழ்ந்து இருந்தவன், சில நாட்கள் பின் தங்கி விட்டான். ஏராளமான காட்டு மிருகங்களை வேட்டையாடி அழித்தான்.
ஒரு நாள் காட்டுத் தீ ஜுவாலையாக பரவி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். உண்மையா கனவா? ஒரு பெரிய சிங்கமே அந்த ஜுவாலையில் மாட்டிக் கொண்டு தவிப்பதைக் கண்டான். அதே சமயம் குட்டியை காக்க பெண் சிங்கம் வேகமாக வந்து அதனுள் குதித்து குட்டியை தூக்கி வெளியில் போட்டது. குட்டி பிழைத்து எழுந்து நின்றது. ஆனால் தாயான பெண் சிங்கம் தன்னை காத்துக் கொள்ள இயலாமல் தீயின் ஜுவாலையில் மடிந்தது. ஹர்ஷன் திகைத்தான். உலகம் இப்படியும் அன்புடன் தன் குட்டியை பாதுகாக்கும் பெண் சிங்கங்களால் ஆனது. அனாவசியமாக இந்த மிருக இனத்தை வேட்டை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி நான் செய்தது மிகப் பெரிய தவறு. கல்லை விட, இரும்பை விட கடினமான இதயம் உள்ளவன் நான், பந்த பாசம், அன்பு என்ற நற்குணங்கள் இல்லாதவன். இந்த மிருகங்கள் தங்கள் இனத்தை, தன் மகன் என்ற பாசத்தை காட்டுவது எனக்கு பாடம் கற்பித்து விட்டது.
இந்த அறிவு வந்ததும், அதே நினைவாக இருந்தவனின் இடது கண்கள் துடித்தன. (இடது கண் துடிப்பது பெண்களுக்கு நன்மை, அதுவே ஆண்களுக்கு வரப் போகும் துன்பத்தைச் சொல்லும் அடையாளம்)
உடலில் காரணமின்றி வியர்வை பெருகியது. என்ன ஆயிற்று எனக்கு ? என் தைரியம் என்னை விட்டு விலகிப் போவதாக உணர்கிறேன். தரை அவனுக்கு பின்னால் வேகமாக வழுக்கிக் கொண்டு செல்வது போல இருந்தது. கவிழ்ந்த முகமும், சிந்தனையில் ஆழ்ந்த மனமும், கமல வனங்கள் பல கடந்து சென்றதை அறியவில்லை. குதிரை தானே வழியறிந்து அழைத்துச் சென்றதைப் போல தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தான். நண்பகலில் வந்து சேர்ந்த பின் தான் தன் உணர்வை அடைந்தான்.
சற்று தூரத்திலிருந்து குரங்கன் என்ற செய்தி சொல்பவன், வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவனை அடையாளம் காட்ட பிரத்யேகமான நீல நிற தலைப்பாகை தெரிந்தவுடனேயே, கவலை கொண்டான். தலைப்பாகையின் நிறங்களுக்கே ஒரு அடையாளம் உண்டு. (நற்செய்தியானால் சிவப்பு, வெளிர் சிவப்பு, வெண்மை சமாதானம், நீலம் மங்கலாக இருந்தால் சிறிய தீமை, அடர் நீலம் அதிக தீமை- ) கவனமாக பார்த்தான். வந்தவன் வெகு வேகமாக வெகு தூரம் வந்திருக்க வேண்டும். அவன் முகத்திலும் உடலிலும் ஆயாசம் தென்பட்டது. ஏதோ ராஜ காரியமாக போகிறவன், என்ன செய்தி? என்று பூமியே ஆவலுடன் தூசியை வாரியடித்து பின் செல்வது போல குதிரையின் வேகத்தால் கிளப்பிய புழுதி மறைத்தது. முகத்தில் அடித்த எதிர் காற்று, உத்தரீயத்தை அலைக் கழித்து அவனை சிரமப் படுத்தியது. இவைகளை பொருட் படுத்தாமல் அரசனின் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கமே அவனை வழி நடத்தியது போல வந்தான். புலன்களின் முழு கவனமும் ஒன்றாகியது போல பெருமூச்சு விட்டபடி முன்னேறி வந்தான். என்ன செய்தி? மிகவும் முக்யமான செய்தியாக இருக்க வேண்டும். சற்று நேரத்தில் அந்த கடுமையான செய்தியை வெளியிட தனக்கு சக்தி இருக்குமா என்று நினைப்பவன் போல நேர் வழியிலும் தடுமாறினான். வஜ்ரம்- இடி, இடியை தாங்கி நிற்கும் கரு மேகம் போல, இந்த செய்தியைக் கேட்டு துடிக்கப் போகும் ஜீவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வான்? ஏனெனில் அது போன்ற உடைகள், அடையாளங்கள் போன்ற வேஷங்களை தரித்தவன் இந்த தூதன், வெகு தூரம் செல்லக் கூடியவனாக இருப்பான் என்பதை ராஜ குமாரன் அறிந்திருந்தான்.
அன்று காலையில் இருந்து கண்ட காட்சிகள், துர்நிமித்தங்கள், இவைகளால் தன் மனம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அவனால் நன்மையை நினைக்கவே முடியவில்லை போலும்..
குரங்கன் வந்து வணங்கினான். அவன் களை இழந்த முகமே நல்ல செய்தியல்ல என்பதை அறிவித்து விட்டது. அதன் பின் செய்தி அடங்கிய ஓலையை நீட்டினான். ஹர்ஷன் தானே முன் சென்று அதை வாங்கிக் கொண்டு படித்தான். ஓலையில் இருந்ததை அறிந்தவன் தான் என்பது போல துக்கம் தொனிக்கும் குரலிலேயே சொன்னான். ஹர்ஷன், மேலும் பொறுக்க மாட்டாமல்,’குரங்கக! என்ன விஷயம்? தந்தை நலமா? ‘என்றான். அவன் கண்ணீர் பெருகியதை துடைத்தபடி, செய்தியைச் சொன்னான். ‘தேவ, அவருக்கு தாஹ ஜ்வரம்- அதிகமாக தகிக்கும் காய்ச்சல் என்றான்.
இதயமே பல நூறு துண்டுகளாக உடைந்தது போன்ற வேதனையை அனுபவித்தான். உடனே கிளம்ப ஆயத்தங்கள் செய்யச் சொன்னான். தானும் ஆசமனீயம் என்பதைச் செய்து, பெற்றவரின் ஆயுள் நலத்துக்காக, அந்தணர்களைக் கொண்டு பரிகார ஹோமங்களைச் செய்து அவர்களுக்கும், மணி கணங்கள், கனக, ரஜத-வெள்ளி, தவிர, தன் உடைகள் உணவுக்காக கொண்டுவந்த பொருட்கள் அனைத்தையும் தானம் செய்து விட்டு குதிரைக்கு உணவளிக்கச் செய்து, தன் உணவை மறுத்து விட்டு, அதன் மேல் ஏறினான். கையில் வாளுடன் நின்றிருந்த வாலிபனுக்கு கட்டளையிட்டான். தான் மட்டும் தனியாக கிளம்பி விட்டான்.
காகங்கள் கரைந்தது கூட சங்கடத்தையே அளித்தது. எதிரில் ஒரு நாடோடியான துறவி, கசங்கிய உடையும், கறுத்த உடலும், கையில் மயில் இறகை வைத்து ஆட்டியடி வந்தான். மற்ற சமயங்களில் இவைகளை ஒரு பொருட்டாக நினத்ததே இல்லை. தந்தையைப் பற்றிய கவலை, இந்த சிறு சகுனங்கள் கூட ஏதோ சொல்வது போல நினைத்தான். மனதில் தந்தையைப் பற்றிய கவலை நிறைந்திருந்ததால், வேறு எதையுமே சிந்திக்க முடியவில்லை. அவன் கட்டளைக்காக காத்திருந்த படை வீரர்களூம், குதிரை வீர்களும், தோளில் ஆயுதங்களுடன் வந்திருந்த காலாட் படையினரும் தாங்களாகவே ஒருவரையொருவர் பார்த்து பின் தொடர்ந்தனர். பேச்சோ, ஆணையிடும் குரல்களோ இன்றி உடன் வந்த அரசர்களும் திரும்பினர். அந்த பெரிய அத்வானமான இடத்தை ஒரே நாளில் கடந்தனர். கனமான மௌனமே அந்த கூட்டத்தை நடத்திச் சென்றது போலும்.
அன்று ஸூரியனும் ஓளியையும் வெப்பத்தையும் குறைத்துக் கொண்டு தலை குனிந்து வருவது போல மந்தமாக இருந்தான். பண்டி மற்றும் உடன் வந்த அரச குலத்தினரும் வற்புறுத்தியும் கூட ராஜ்ய வர்தனன் உணவை ஏற்கவில்லை.
வழியில் இருந்த சில கிராமத்தினரிடம் வழி விசாரித்துக் கொண்டு இரவிலும் பயணம் செய்தனர். நண் பகலில் ஊர் வந்து சேர்ந்தனர். வழக்கமான ஜய சப்தமோ, துர்ய நாதமோ அத்துடன் வழக்கமாக பாடப் படும் பாடல்களோ, ஜனங்களின் நடமாட்டமோ, சாரணர்கள் இங்கும் அங்குமாக செல்வதோ தென்படவில்லை. கடைகள் திறக்கப் படவில்லை. ஆங்காங்கு ஹோம தூபங்கள் ஆகாயத்தில் சீராக பரவி நிற்குமே, அவையும் அது போல காணவில்லை. யமனுடைய எருமை வாகனம் அதன் கழுத்தில் கட்டியிருக்கும் மணியை அசைப்பது போல அசந்தர்பமாக ஏதோ ஒலி கேட்டது. கண்ணில் பட்டதெல்லாமே அரச குமாரனுக்கு துக்க செய்தியை தெரிவிப்பதாகப் பட்டது.
காகங்கள் கூட்டமாக பறப்பது தினமும் நடப்பதே. ஒரு சிலர் சிவ பெருமானின் ஆலயங்களில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். தாய் மார்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். பாசுபதன் என்ற பகவானை ஆராதிக்கும் சில வீர சைவர்கள் த்ரவிட தேசத்தினர் வந்திருந்தனர். ஆந்திர தேசத்து பக்தர்கள், இரு கைகளையும் தூக்கி விரித்தபடி சண்டிகா துதியைச் சொல்லியபடி தன் வேண்டுதலை செய்து கொண்டிருந்தனர். மஹா காலன் எனும் க்ஷேத்ர தேவதையை ஒரு இள வயது துறவி, தலையில் அக்னி குண்டத்தை வைத்து அதில் புகை வர குக்குல அல்லது சாம்பிராணி போட்டு புகையை கிளப்பிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தான். இது ஒருவகை உக்ர வழிபாடு. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றியபடி தெய்வங்களை வேண்டிக் கொண்டிருப்பதாக பட்டது. அரசகுமாரனுக்கு எங்கும் அமங்களமே கண்ணில் பட்டது. அனித்யதா- நிரந்தரமில்லாத தன்மை- அதுவே மற்ற அனைத்தையும் பின் தள்ளி தனக்கு உபதேசிப்பதாக நினைத்தான். ஊருக்குள் நுழைந்ததுமே, யாரோ பாடுவது கேட்டது.
‘தாய் தந்தையர் என்றும், மகன் மனைவி என்றும் பலர், நூற்றுக்கணக்காக யுகங்கள் தோறும் வந்து சேருவார்கள். ‘நீ யாருக்கு மகன், அல்லது யாருக்கு தந்தை’
இதைக் கேட்டு மேலும் வருந்தினாலும், ராஜ குமாரன் தன்னை சமாளித்துக் கொண்டு எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ராஜ மகலுக்குள் நுழைந்தான். பொது ஜனங்களுக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப் பட்டிருந்தது. குதிரையிலிருந்து இறங்கியவன், உள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருந்த முகம் வாடியிருந்த ஒரு வைத்ய குமாரனைக் கண்டான். தன்னை சுபேணன் என்று அறிமுகம் செய்து கொண்டவன், வணங்கினான். அவனிடம், ‘சுஷேண! (வைத்யரே) தந்தையின் உடல் நிலை சீராகி விட்டதா? என்று வினவினான். ‘அவன் ‘இது வரை இல்லை. உங்களைக் கண்டால் ஒருவேளை சீராகலாம்’ என்றான்.
இதற்குள், ராஜ குமாரனின் வரவையறிந்த காவலர்கள் வந்து வணங்கினர். அரண்மனைக்குள் நுழைந்தான்.
ஓரிடத்தில் தானங்கள் (கொடைகள்) செய்து கொண்டிருந்தனர். குல தேவதைக்கான பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. அம்ருத சரூ- இனிப்பு சேர்த்து தயாரித்த பாயசம் போன்ற சரூ எனும் பாயசம் (இது கஞ்சி போல அதிக திரவமாகவும் இல்லாமல் திடமாகவும் இல்லாமல் உள்ள உணவு – தேவதைகளுக்கு பிரசாதமாக தயாரிக்கப் படும்) இதை தயாரித்துக் கொண்டிருந்தனர். ஆறு வித ஆஹுதிகளுடன் ஹோமங்கள் நடந்து கொண்டிருந்தன. நெய்யில், தூர்வா புல்லை நனைத்து ஹோமத்தில் மந்திர உச்சரிப்புகளுடன் போட்டுக் கொண்டிருந்தனர். பௌத்தர்கள் அனுசரிக்கும் மஹாமாயூரி என்ற க்ருஹ சாந்தி பாடங்களை படித்துக் கொண்டிருந்தனர். பூத, ராக்ஷஸர்களை விரட்டும் பலிகள் ஒருபுறம். சம்ஹிதா ஜபம் என்பதை அந்தணர்கள் செய்து கொண்டிருந்தனர். ஸ்ரீ ருத்ர ஏகாதசி என்ற கிரமத்தில் ஸ்ரீருத்ர அபிஷேகங்கள், பாராயணங்கள் சிவாலயங்களில் நடந்து கொண்டிருந்தன. அதற்காக அத்யந்த தூய்மையான சிவ பக்தர்கள் கொண்டு வந்த ஆயிரம் கலசங்களால் விரூபாக்ஷன் சன்னிதியில் பாலபிஷேகம் செய்து கொண்டிருந்தனர்.
அரசர்கள் வந்து கூடினர். வெளி மண்டபத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர். பணியாளர்களிடம் எப்படி இருக்கிறார் என்று விசாரித்து தெரிந்து கொண்டனர். தங்கள் தினசரிகளை, நீராடுவதோ, காலையுணவோ, அனைத்தையும் மறந்தவர்களாக இருந்தனர். காலைக் கடன்களைக் கூட அவசரமாக முடித்துக் கொண்டு திரும்பி விட்டனர் போலும். ஆங்காங்கு கூடிக் கூடி சேவகர்கள் நிலைமையை விவரித்துக் கொண்டிருந்தனர்.
பலவிதமான விமரிசனகள். ஒருவன் வைத்யர்கள் சரியானமுறையில் வைத்யம் செய்யவில்லை, மற்றொருவன் தீராத வியாதியாக இருக்கலாம், குணப்படுத்த முடியவில்லை போலும் என்று தான் அறிந்ததைச் சொன்னான். ஒரு சிலர் தாங்கள் கண்ட கெட்ட கனவுகளை விவரித்தனர். உலகே மாயம் என்று ஒரு சிலர். பூத பிசாசங்கள் கலி காலமாகையால் வந்து தாக்குகின்றன, தெய்வத்திற்கு கண்ணில்லையா என்றும் சிலர், தர்ம ராஜனின் வேலை இது, ராஜ குலத்துக்கு தெய்வங்களின் அபவாதம் விழுந்து விட்டது என்று சிலர் அடித்துச் சொன்னார்கள். எதுவும் விவரம் தெரியாமல் சிலர் கோட்டைக்கு வெளியே காத்திருந்தனர்.
தந்தையின் பரி ஜனங்கள், கண்களில் நீர் பெருக ராஜகுமாரனை ஏறிட்டு நோக்கி விட்டு எதுவும் சொல்லாமல் கடந்து சென்றனர். பலவிதமான மருந்துகள், எண்ணெய்களின் மணம் நாசியைத் துளைத்தது. மூன்றாவது அங்கணத்தை சென்றடைந்தான்.
அங்கும் நிசப்தமாக இருந்தது. ஹர்ஷன் அங்கு தந்தையை தவள க்ருஹம்-உள் மண்டபம் என்பதில் கண்டான். உள் மண்டபம் அதில் அரசனின் குடும்பத்தினர் மட்டுமே இருப்பர். முதன்மை நிலை காவலர்கள் கையில் தண்டத்துடன் நின்றிருந்தனர். பொது வாசல் கதவுகளை மூடியிருந்தனர். தாழ்ப்பாள்கள் போடாமல் உள் நுழையும் வாசல்கள் திறந்திருந்தன. காற்று புகாமல் ஜன்னல் கதவுகளை மூடியிருந்தனர். காலடி பலமாக கேட்டாலே சேவகர்கள் எச்சரித்தனர். அனைவரும் ஜாடையாலேயே பேசிக் கொண்டிருப்பதாகப் பட்டது. அரசனின் அணுக்க காவலன் அசையாமல் அமர்ந்து இருந்தான். காலை நேர தெய்வ , முன்னோர் வந்தனகளுக்கான ஆசமனீயம் என்ற நீ நிறைந்த கலசத்துடன் வந்தவன் தள்ளியே நின்றான்.
புரோஹிதர்களூம், மந்திரிகளும் கூடியிருந்தனர். வருத்தம் தோய்ந்த முகங்களுடன் நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பணி, அதை வழக்கம் போல செய்ய முடியாமல் திகைத்த படி அடுத்து என்ன செயது என்ற கேள்விக் குறி முகத்தில் தெரிய அன்றாட பணிகளைச் செய்பவர் நின்றிருந்தனர்.
இரவு தூங்காமல் இருந்த சில ராஜ குமாரர்கள் தரை விரிப்பில் கிடைத்த இடத்தில் தூங்கலாயினர். விடியலில் வந்து துதி படும் வந்திகள் அங்கு நிலவிய அசாதாரண நிலைமையைக் கண்டுபாடுவது சரியல்ல என்பது போல அருகிலிருந்த சேவகர்களிடம் சொல்லி விட்டு விடை பெற்றனர். தாம்பூலம் கொண்டு வந்த பெண்கள் தாங்களாகவே திரும்பிச் சென்றனர். முக்யமான சமையல்காரர், குழம்பி நின்றார். வைத்யர்களிடம், அரசனுக்கு தேவையான பத்யமான ஆகாரங்களை கேட்டுக் கொண்டனர். அன்றாடம் அரசன் உண்ணும் உணவைத் தயாரித்து விட்டிருந்ததை, அவரே சொன்னதால் வந்திருந்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டனர். அவர் எதிரிலேயே பலர் உணவருந்தி திருப்தியாக சென்றனர்.
கடைக்காரர்கள் பலவிதமான வேர்கள், பச்சிலைகளைக் கொண்டு வந்தனர். மண் பானைகளில் தயிர் வைத்து, பனிக்கட்டிகளில் வைத்து குளுமையாக்கி வைத்தனர். நீரில் நனைத்து பிழிந்த வெண் பருத்தியால் ஆன துணியில் கர்ப்பூரங்கள், பராக எனும் வாசனையும் சீதளமும் தரும் பொருட்களைக் கட்டி, ஜன்னல்களில் தொங்க விட்டிருந்தனர். கண்டூஷம்- தாம்பூலங்களை உண்டு துப்பும் பாத்திரங்கள் பயன் படுத்தப் படாமல் தள்ளி வைக்கப் பட்டன. தண்டுடன் கூடிய நீலோத்பலங்கள். நீர் நிறைந்த பாண்டங்களில் வைக்கப் பட்டன. அவைகளில் தாரையாக நீர் விழச் செய்யும் சாதனங்கள் இருந்தன. குளுமை தரும் சில மருத்துவ பச்சிலைகளின் சாறு, அல்லது பொடி, ஸ்படிகத்தால் ஆன சிறு குடுவைகளில் அல்லது சங்கில் நிரப்பி வைக்கப் பட்டன.
பழைய நெல்லிக்காய், எலுமிச்சம் பழம், திராக்ஷை இவைகளும் உடல் சூட்டைத் தணிக்கும் என சேர்த்து வைத்தனர். மந்திரங்கள் சொல்லி ஜபம் செய்த நீரைக் கொண்டு அந்தணர்கள் அவர் மேல் தெளித்து அதற்கான தக்ஷிணைகள் பெற்றுச் சென்றனர். நெற்றியில் பட்டி போட சில்பெட்டா என்ற சிறு அம்மியில் பணிப்பெண்கள், சில பொருட்களை மசித்து அரைத்து பதமாக எடுத்து வைத்தனர். இந்த உபசாரங்களையும் மீறி ஜூரம் அவரை வாட்டியது. அதன் தீவிரம் தாங்காமல் அரசன் புரண்டு படுத்தபடி இருந்தான். படுக்கையின் விரிப்புகள் கசங்கி பால் கடலில் சேஷ நாகம் விஷத்தின் உஷ்ணம் தாங்காமல் நெளிந்தது போல ஆயின. சமுத்திரத்தின் நீர், க்ஷயம்- ப்ரளய காலத்தில் வற்றி, மணல் பரப்பு வெண் முத்தின் நிறத்தில் தெரிவது போலவும், தசானனன் -ராவணன் கைலாச மலையை தூக்க முயன்றதைப் போல காலன் அவரை தூக்க முயன்று கொண்டிருந்தான் போலும். இடை விடாது சந்தனத்தை அரைத்து உடலில் பூசிக் கொண்டிருந்த பணியாட்கள் அவருடைய உடல் உஷ்ணத்தின் அருகிலேயே இருந்து உதவிகள் செய்து கொண்டிருந்தவர்கள், அவர்களே ஓய்ந்து விட்டவர்கள் போல ஆனார்கள். அவர்களும் உடல் வெளுத்து நோயாளி போல இருந்தனர். அரசன் தானே ஊகித்து விட்டவன் போல பரலோகம் செல்ல மனதளவில் தயாராகி விட்டவன் போல இருந்தான். சந்தனம் பூசுவதும் உலர்ந்த பின் எடுப்பதுமாக இருந்ததே, இது வரை நீடித்த தன் புகழ் தன்னை விட்டு விலகுவதாக நினைக்கச் செய்தது. (சந்தனம்- புகழ், உலருவதும் விலக்குவதும் அவன் புகழை அழிப்பது) உடல் வண்ணம் குறைந்ததை காலனின் கண் பார்வைக்குள் தான் வந்து விட்டதை அறிவிக்கிறது என்று தானே நினைத்தான்.
அரண்மனையில் பல காலமாக பணி செய்த சில ஊழியர்கள் அனவரதமும் அரசனுக்கு தேவையானதைப் பார்த்து பார்த்து செய்தவர்கள். செய்வதறியாது திகைத்தாலும், குளுமையான பொருட்களே, அரசனுக்கு அருகில் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். தலை வலி என்றால் நெற்றியில் ஈரத் துணியைக் கட்டுவது போல ஒரு வெண்ணிறத் துணியை அரசனின் தலையைச் சுற்றி கட்டி விட்டனர். எப்பொழுதும் உடலில் சந்தனத்தை அரைத்து பூசி தாபத்தை விரட்டிக் கொண்டிருந்தனர். எதிலும் பலனில்லை என்றவுடன், ஓரளவு முடிவை எதிர்பார்க்கத் துவங்கி விட்டனர்,
விரல்களில் கறுப்பு ரேகைகள் தோன்றின. கண்கள் ஒளி இழந்தன. உட் குழிந்த கண்களும், பற்களின் எண்ணிக்கை நாள்தோறும் குறைவதும், நாக்கு கரு நிறமாக மாறியதும் நம்பிக்கையே கானல் நீராகி விட்டது போலவும், மார்பில் தொங்கிய உயர் மணி மாலையில் தானே க்ருதாந்தன் என்ற யமனை தரிசித்து விட்டது போலவும், அங்கதங்கள் கங்கணங்கள் உடல் இளைத்ததால் தானே கழண்டு விழுந்து விட்டது போலவும், வைத்யங்களே அதிக தாபத்தை உண்டு பண்ணுவதாக நினைக்கச் செய்தது. இந்த அவஸ்தையை விட மூர்ச்சையடைந்தால் கூட நலமே என்று ஏங்கலானான், கூடியிருந்தவர்களின் முகத்தில் பயமே நிறைந்திருந்ததால், மஹா ப்ரஸ்தானம் என்ற நிலைக்கு தயாராக மனதளவில் உறுதியாக உணர்ந்து விட்டவனை, உடல் உபாதை வாட்டியது. பலவீனம் எண்ணியே பார்க்க முடியாத அளவு அதிகரித்து விட்டது. கவலை ஆட்கொண்டது. எதிர்பாராத இடர்கள், க்ஷயம் என்ற வியாதி, தனக்கு இடம் கிடைத்து விட்டது என மகிழ்ந்தது போல வியாபித்து பெருகியது. இதுவரை இல்லாத செயலற்றத் தன்மை தானே இணைந்து கொண்டது. துக்கத்தை அனுபவித்து அடி பட்டவர் போல ஆனான், உடல் நலம் இழந்த குறை பெரும் பயங்கரமாக கண் முன்னே விரிந்தது.
என்ன இது? வியாதி என்னை வலுவிழந்தவனாக மற்றவர் உதவி இன்று எதுவும் செய்ய முடியாமல் செய்து விட்டதே. காலம் என்னை தன் மடியில் இருத்திக் கொண்டு விளையாடுகிறதா? தென் திசை எனக்கு தீர்மானிக்கப் பட்டு விட்டதா? விழிப்பு விலகி நிறமற்ற தன்மையும், அங்கங்கள் விழுந்து விட்டதும், ஆபத்து காத்திருப்பது போலவும், வேதனையும், உடல் வலியால் துக்கமும் தெய்வம் ஏன் எனக்கு அளித்திருக்கிறது. இது தான் வாழ்க்கை, இது தான் மனித முயற்சிகளின் எல்லை, ஒரு நாள் அபாவம் – இல்லாமல் போவது தான் உடல், இதையும் பார் என்று உடல் க்லேசம்- உடல் வருத்தத்தை கொடுத்து விட்டாரா பகவான்? மனதில் வெறுப்பு மண்டுகிறது. காலன் அருகில் வந்து விட்டான் , இதோ என் கடைசி மூச்சு வந்து விடும், இனி நிரந்தரமான தூக்கமே. மஹா ப்ரவாசம் என்ற நீண்ட யாத்திரை ஆரம்பமாகி விடும்.
காலனின் வாக்கு அவன் நாக்கு நுனி வரை வந்து விட்டது எந்த வினாடியும் விடுதலை என்று தன் சுவாசம் விடுபடுவதை தானே காண்பவன் போல பிதற்றலானான்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
