- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
பகுதி – 4

மறு நாளிலிருந்து அரசனின் அரசவை மந்திரிகள், உயர் அதிகாரிகள் தங்கள் பரிஜனங்களுடன் வந்த படி இருந்தனர். அந்தப்புரத்தின் பெண் பணியாளர்கள் அவர்களை வரவேற்று உபசரிக்க பலர் (ஆயிரக் கணக்காக என்று கவியின் வர்ணனை) நியமிக்கப் பட்டனர். அப்சர என்ற தேவ லோகப் பெண்களே வந்தது போல.இருந்த தாம். ஒவ்வொருவரும் தாங்களும் நன்றாக மலர்களாலும், வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டும் இருந்தனராம். கையில் சிசுவை நீராட்ட வாசனை பொருட்கள், பாத்திரங்களில் நிறைந்த கர்ப்பூர துண்டங்கள், குங்குமம் போறவை, மற்றும் பல பொருட்கள் வாசனை பொடிகள், எண்ணெய் போன்றவை இருந்தன. வெண் நிறத்தில் பாக்கு,பாளி, தந்துர,தந்த சஃபர என்ற வெற்றிலையுடன் சேர்த்து தரும் தாம்பூலங்கள், (ஐம்பத்தைந்து பொருட்கள் தாம்பூல பத்ரங்களுடன் சேர்த்து செய்யப்படுமாம்)
மெள்ள மெள்ள, இந்த அளவற்ற சுதந்திரமும், கட்டுப்பாடில்லாத கொண்டாட்டமும் தன் நிலை மறந்த மரியாதையில்லாத ஒரு கூட்டத்தை தோற்றுவித்து விட்டது போல ஆயிற்று. நாட்டியம் ஆடும் தேர்ந்த கலைஞர்களின் இடத்தில் தோன்றியபடி ஆடுபவர்கள், விருப்பமில்லாதவர்களை சபை நடுவே இழுத்து வந்து ஆடச் செய்வது, பலவந்தமாக கட்டியனைத்து மற்றவர்களை சிரிக்க வைப்பது என்ற செயல்கள் அதிகரித்து, சபையின் மதிப்பை குறைத்தது. மலையளவு பூக்கள் இறைந்தன. மது சாலைகள் போல மதுவை குடித்தனர், மது பாத்திரங்கள் நிரம்பி வழிந்தன. பாரிஜாத மலர்கள் தங்கள் சோபையை, மணத்தை இழந்தன, நந்தன வனத்து மதிப்பு மிக்க பாரிஜாதம் நந்தனவனம் (தேவ லோக உபவனம்) போல மடிந்தது. கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வது போல விஷமிகள் உள்ளே நுழைந்து பல துறவிகளையும், அரசு உயர் அதிகாரிகளையும் தூஷித்து சிரித்து மகிழ்ந்தனர். படஹ வாத்யம் அலறியது. பட்டை பட்டையாக சந்தனத்தை நெற்றியில் அணிந்து கொண்டனர். சில குழந்தைகளின் அழுகை சத்தமும், மறுக்கும் குல பெண்களை பலவந்தப் படுத்துவதும் அதிகரித்தன. மங்களமான உத்சவமாக ஆரம்பித்தது அடக்க முடியாத அமங்களமாக ஆயிற்று.
இளவயதினர், காம்போஜ நாட்டு குதிரைகள் போல மலர் மாலைகளை அணிந்து தோன்றியபடி உடையணிந்து அடங்காத, அடக்க முடியாத ஆட்டம் போட்டனர். சகர புத்திரர்களைப் போல சமமாக இருந்த தளத்தை வெட்டி உடைத்து விடுவது போல தங்கள் கால்களாலேயே நாசமாக்கினர். பூமி எப்படி தாங்கியதோ – ஆபூஷணங்களின் முத்துக்கள் உடைந்து விழுந்து இறைந்தன. சிந்தூரமும், வண்ணப் பொடிகளும் சபையை நிறைத்தன, ஹிரண்ய கர்பன் ப்ரும்மாண்டத்தின் கபால சிரசிலிருந்து இறங்கி வந்து விட்டானோ என்பது போல இருந்தது. மந்தாகினீ நதியின் மணல் போல மாளிகையின் அலங்கார வளைவுகளில் கட்டப் பட்டிருந்த திரைச் சீலைகளை உருவி புழுதி வார வீசினர். தாம்பூலங்களை கடித்து துப்பி சபையின் சுவர்களை அலங்கோலமாக்கி விட்டனர். பூமாலைகள் மிதி பட்டு, தாங்களே அதில் வழுக்கி விழுந்தனர்.
முதிய வேசிகள், தடுப்பவர் இன்றி உள்ளே வந்தனர். அவர்களுடன் சில வாத்யங்கள் வாசிப்பவர்களும் தாளம் தவறியதை பொருட்படுத்தாமல் வாசித்தனர். வேணுவை சுருதி இன்றி கேட்க கடோரமான சத்தமாக இசைத்தனர். தந்தி வாத்யமான படஹிகா, தாசேனுமா என்ற சிறிய தாள வாத்யம், வீணை போல குடம் கொண்ட சில வாத்யங்கள் அலாபுகி என்ற வீணையை வாசித்தனர். டுண் டுண என்ற சம்பந்தமில்லாத ஒலி உடன் ஒலித்து மேலும் சூழ்நிலையை நாசமாக்கியது. காம்ஸ்ய கோசி -பளிங்கு கிண்ணங்களால் ஆன வாத்தியம்- (ஜல தரங்கம்) முறைப்படி. இசைத்தால் சுநாதமாக ஒலிக்கக் கூடியது, தன் பெருமையை இழந்த து போல ஒலி எழுப்பியது. தாளத்திற்கு இணைய கைகளால் சிலர் தாளம் போட்டனர். நகைகளின் உரசல் மேலோங்கி கேட்டது. சில ரசிகர்கள் ஆலாபனைகள் செய்தனர். சில விட புருஷர்கள், மட்டமான சொற்களால் சீண்டுவது போன்ற சில பாடல்களை பாடியபடி வந்தனர். கிடைத்த சந்தனம், அலங்கார பொருட்கள் அனைத்தையும் வாரி தங்கள் மேல் பூசிக் கொண்டு வளைய வந்தனர்.
ராகம் (சிவந்த நிறம் – சிந்தூரம் இறைந்து கிடந்தது போலவே) அங்கு இருந்தவர்களின் ராகம் ( ஆசை என்ற உணர்வு) கட்டுக்கடங்காமல் போனது. பாடியது ஆடியதும் நின்று ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கையில் கிடைத்த வாத்யமோ, குழலோ அதுவே ஆயுதமாக ஆனது. பிரியமாக பேசுவது போல பேசியவர்கள், வெறி கொண்டு வசை பாடியபடி வந்தனர். அழகோ, ரசனையோ எதுவுமின்றி கொலை களம் போல ஆயிற்று. கலைந்த உடைகளும், அடி பட்டு கிழிந்த உத்தரீயங்களுமாக இருந்த கூட்டத்தை காவலாளிகள் வந்து அடக்கினர். சிலர் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு சென்றனர். தனம் நிறைந்த பாண்டங்கள் கவிழ்ந்து கிடந்தன. அரசன் பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷம் அவர்களிடையே வினாடி நேரத்தில் அபகரிக்கப் பட்டன. அரசனே தலையிட்டு இந்த கொண்டாட்டத்தை முடித்து வைத்தான். அனைவரும் வெளியேறினர்.
மெள்ள மெள்ள சகஜ நிலை திரும்பியது. அரசன் தன் கம்பீரமான ஆளுமையால் அரசவையை சீராக்கி, பழையபடி தன் நிலைக்கு திரும்பச் செய்தான். மெள்ள மெள்ள அரசு அதிகாரிகளும், உயர் நிலை காவலர்களும் தங்கள் பதவிக்கேற்ப அரசவையை சீர் செய்து அலங்கரித்து வைத்தனர்.
சிறு துளி அங்காரம்- சுடர் போல பிறந்த ராஜகுமாரனுக்கு காப்புகள் கட்டினர். கடுகை தலையில் வைத்து காப்பு கட்டினராம். கோரோசனையால் உடலில் பூச்சுகள் பூசியிருந்தனராம். சற்றே வளர்ந்த நிலையிலேயே க்ஷத்ர தேஜஸ்- அரசனுக்குரிய கம்பீரம் தெரிகிறது என்று மகிழ்ந்தனர். ஹாடக என்ற மிக உயர்ந்த பொன்னால் கைகளில் கங்கணம் பூட்டினர். புலி நகங்கள் கொண்டு கழுத்தில் மாலையாக அணிவித்தனர். முதன் முதல் பேச்சு வந்த உடனேயே, விதையின் முளை போல அர்த்தமற்ற மழலைகளை சத்ய வசனமாக, ஓங்காரம் போல வர்ணித்து ஆர்பரித்தனர். மென் சிரிப்பை பூ மலருவது போல ரசித்தனர். உறவினர்கள் உள்ளன்புடன் போட்டி போட்டிக் கொண்டு வந்ததையும், அந்த மலர் வண்டுகளை கவர்ந்து இழுப்பது போல இழுத்தது என்று கவி வர்ணிக்கிறார். தாயாரிடம் முலைப் பாலில் வளர்ந்தான். பால் சிதறியது போல விட்டு விட்டு சிரிப்பதை வழக்கமாகக் கொண்டான். சிறு பற்கள் முளைத்து முகமாகிய கமலத்திற்கு அலங்காரமாக ஆயிற்று. தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு என்பது போல அந்த:புர பெண்கள் பெருமையுடன் ராஜ குமாரனை பேணினர். காத்திருந்தது போல சற்று வளர்ந்த உடனேயே, மந்திரி வர்கங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். ராஜ குமாரன் இனி அந்த:புரத்தில் இருக்கலாகாது என்று நினைப்பவர்கள் போல இருந்தனர்.
தந்தையின் புகழ் போலவே அவனும் வளர்ந்தான். அரச வம்சத்துக்குரிய கம்பீரம் வர வளர்த்தனர். மிருக ராஜனின் மகன் போல- சிங்கத்தின் குட்டி – கூட்டில் அடைத்து இருப்பது போல எங்கும் ஆயுதம் தரித்த காவல் வீரர்கள் சுற்றி நின்றனர். ஹர்ஷன், தாத்ரியின் கை விரலைப் பற்றிக் கொண்டு ஐந்தடி வைத்தான். அந்த சமயம் மூத்தவன் ராஜ வர்தனன் ஆறாவது வயதை அடைந்தான். மகாராணி ராஜ்யத்தின் செல்வத்தை மேலும் கூட்டுவது போல அடுத்து கருத் தரித்தாள். பகவான் ஸ்ரீமன் நாராயணன் பூ தேவியை தாங்கியது போல என்று வர்ணிக்கிறார் கவி. பின்னால் ராஜஸ்ரீ என்றே அழைக்கப்பட இருக்கும் பெண் மகவை கருவுற்றாள்.
காலம் நிறைந்ததும், ப்ரசவ சமயம் நீர் நிறைந்த சரஸ்-குளம், அதில், உத்பலம் மலர்ந்தாற்போலவும்,, அதன் ரக்த நாளம்- தண்டுகள் பளிச்சென்று தெரிவது போலவும் ஆனாள். மதுரமான குரலில் ஹம்சங்களின் கூக்குரல் கேட்க சரத் காலம் வந்தது போலவும், அந்த வனமே மலர்களால் அங்கம் முழுவதும் அலங்கரித்துக் கொண்ட யுவதியாக ஆனது போலவும் முகம் மலர இருந்தாள். வானம் தாரையாக பெய்த மழை பொன்னால் ஆன கிரணங்கள் போல ஒளி வீசியது. நிலத்தில் நீர் ரத்னங்களால் நிரம்பியது. அனைத்து ராஜ்யத்தின் ப்ரஜைகள் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பள பளத்தது போல சந்திரனின் முதல் கலை தெரிந்தது. ஆயிரம் கண் படைத்த இந்திரன் அல்லது சசி शची என்ற இந்திராணி ஜயந்தி என்ற மகளைக் கண்டு மகிழ்ந்தது போல மகிழ்ந்தாள். உலகில் அனைத்து அரசர்களும் வேண்டி பெற்ற கௌரியை மேனா கண்டு மகிழ்ந்தது போல மகிழ்ந்தாள். (भू भृत् –மலைக்கும் பெயர் பூமியைத் தாங்குவதால் வந்த பெயர் ) தன் மகளை தம் இரண்டு மகன் களுக்குப் பின் பிறந்தவள் இரண்டு மார்பகங்களுக்கு மேல் ஒற்றை பொன் மாலை போல என்று நினைத்தாள்.
அதே சமயம், ராணி யசோவதியின் சகோதரனின் மகன் எட்டு வயதை அடைந்திருந்தான். பண்டீ என்று அவன் பெயர். ராஜவர்தன. ஹர்ஷ இவர்களுடன் சேர்ந்து வளரட்டும் என்ற எண்ணத்துடன் அனுப்பி வைத்திருந்தான். அவன் அந்த வயதுக்குரிய வளர்ச்சி, அடர்ந்த கேசம் மயில் தோகை போல பரந்து தோளில் விழுந்து கிடந்தது. சிவ பெருமானின் கோபக் கனலில் பஸ்மமான காமனே எழுந்து வந்து விட்டானோ என்பது போல. இந்திர நீலம் என்ற மனிகளைக் கொண்டு குண்டலங்கள் செய்யப் பட்டிருந்தன. அவன் உடலில் அதன் ஒளி பட்டு ஒரு பகுதி நீலமாகவும், மறு பகுதி வெண் முத்துக்களால் ஆனது போலவும் ஆகி விட்டிருந்தான். அவனைக் காண நீல நிறக் கண்ணனும், வெண் நிற பகவான் ருத்ரனும் சேர்ந்து வந்தாற் போல இருந்தது என்று வர்ணிக்கிறார் கவி. பெருத்த புஜங்களில் புஷ்பராக அங்கதம் என்ற ஆபரணம், க்ஷத்திரியர்களை ஒழிப்பேன் என்று அவதரித்த பரசுராமனின் இளம் வயது பாலக ரூபமோ, கழுத்தில் அணிந்திருந்த பொற் சங்கிலியில் கோக்கப் பட்டிருந்த பெரிய பவளம், சிங்கத்தின் நகம் போல மின்னியது. ஹிரண்ய கசிபுவின் மார்பில் பகவான் ந்ருசிங்கனின் நகம் அழுத்திய பொழுது, அது உடைந்து விட்டது போலவும், அதன் துண்டு போலவும் இருந்ததாம். அவனும் ராஜ குமாரன். கம்பீரமான அரச வம்சத்தில் வந்தவன் என்ற அடையாளங்கள் தெரிய அந்த இளம் வயதிலேயே
தேஜஸ்வீ யாக இருந்தான். சிறந்த வீர பரம்பரையின் வித்தாக வந்தவன் என்பதால் அரசன் தன் குமாரர்களுடன் இணைந்து வளர அனுமதித்தான்.
ஈஸ்வரனின் மூன்றாவது கண் போல என்று அரசன் நினைத்தான். மூவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக் கொண்டு இயல்பான நல்ல குணம், தாய் வழி உறவினன் என்பதாலும் மது மாதம் – சித்திரை வைகாசி மாதங்கள்- அந்த மாதங்களில் வீசும் காற்று மலய மாருதம் – இவை இரண்டும் இணைந்தே வரும் என்பதால் அவைகளைப் போல என்று உதாகரணம் சொல்கிறார். மது- மாதவ என்பது ஒரு சொற்றொடர்.
மூவருமாக இளமையை அடைந்தனர். வலிமையான உடல், திடமாக ஊன்றி நின்ற கால்கள், அர்களா தண்டம் – பெரிய கதவின் தாழ்ப்பாள்- போன்ற புஜங்கள், விரிந்த மார்பும், நல்ல உயரமும் உடைய யுவ புருஷர்களாக பரிணமித்தனர். ஏதோ மகா நகரம் திடீரென முளைத்தாற் போல.
ராஜ்ய வர்தனும், ஹர்ஷனும் சீக்கிரமே ராஜ்யத்தில் பிரசித்தி பெற்றனர். பாரத கண்டம் மட்டுமல்லாமல் மற்ற தீவுகளிலும் அவர்கள் புகழ் பரவியது. புகழ் என்பது ஒளி வட்டமாக விளங்க அதே போல அவர்கள் வீர தீரமும் தேசங்களை வெற்றி கொள்ளும் திறமையை பறை சாற்றின.
சந்திர ஸூரியன் போல இந்த புகழும், வீர தீரமும் என்று சொல்வோமா, அக்னியும் காற்றும் போல ஒன்றாக இருந்ததால், பிரகாசமான ஜுவாலை போல என்று சொல்வோமா, பாறை போன்ற கடினமான உடல் வாகு அதனால் ஹிமவானும் விந்த்ய மலையும் இணைந்தது என்று சொல்வோமா, நன்கு வளர்ந்த காளைகள் போல க்ருத யுகத்து வீரர்கள் போல என்று சொல்வோமா, அருணனும் கருடனும் போல (ஸுரியனாக பகவானின் வாகனம் அருணன், விஷ்ணுவாக கருடன் வாகனம்) ஒன்றே இரண்டாக தெரிவதாக கொள்வோமா, இந்திரகோப என்ற பூச்சி, செக்கச் சிவந்த நிறம் உடையது, அதுவும், இந்திர நீலம் – இரண்டும் நாகேந்திரன் – பாம்புகளின் தலைவனான ஆதி சேஷனுக்கு உரியவையே, அது போல இருவரும் இருந்தனர். கர்ணனும், அர்ஜுனனும் போல இருவரும் குண்டலங்களும், கிரீடங்களும் தரித்து இருந்தனர். கிழக்கு மேற்கு திசைகள் போல, இருவரும் ஆற்றல் மிக்கவர்கள், உதயமும் அஸ்தமனமும் போல எதுவானாலும் சாதிக்க வல்லவர்கள், நீர் நிறைந்து அலைகள் சுழன்று செல்லும் சமுத்திரம் போல அளவில்லா பராக்ரமம் – அதே பதம் சமுத்திரத்தின் குணம் எல்லை மீறாத தன்மை – இரண்டையும் குறிக்கும். பாரத தேசத்தின் தென் கோடி வரை தங்கள் வெற்றியை நிலை நாட்டினவர்களுக்கு சமுத்திரம் தடை (அர்களா- கனமான கதவுக்கு நடுவில் மாட்டும் கட்டை-தாழ்ப்பாள்) விதித்தது போல ஆனதாம் – அதற்கு மேல் செல்ல முடியாமல் தடையாக பெரிய சமுத்திரங்கள் இருக்கவும் திரும்பினர்.
இருவரும் தங்கள் நிழல் தங்களைப் பிரிப்பதைக் கூட பொறுக்க முடியாதவர்களாக வெகுண்டனர். நிழல் தனித் தனியாக தெரிவது இயல்பு. அந்த அளவு கூட தங்களுக்குள் வேறு பாடு இல்லாமல் இருந்தனர். அதுவே பாதங்களின் நகங்கள் உராய்ந்தால் வெட்கப்பட்டனர். தன் நகம் மற்றவன் நகம் என்ற உணர்வை தருவதாக நினைத்தனர். கேசத்தை ஒழுங்கு செய்ய வெட்டினாலும் அதே போல உணர்ந்தனர். ஒருவரின் சூடா மணியில் (தலையில் அணியும் ஆபரணம்) அதில் மற்றவன் பிம்பம் தெரிந்தால் காணப் பிடிக்காமல் குடையால் முகத்தை மறைத்துக் கொள்வார்களாம்.
பகவான் ஷன்முகனான சிவகுமாரனை ஸ்வாமி என்றால் அவர்களுக்கு ரசிக்காது. பல பெயர்கள் இருந்தாலும் ஸ்வாமி என்ற பெயர் ஷண்முகனான முருகனுக்கே உரியது.
கண்ணாடிகளில் தன் பிரதி பிம்பத்தையே பார்க்க விருப்பம் இல்லாமல் வேறு யாரோ போட்டிக்கு வந்து விட்டான் என்பது போல கண்களில் வெறுப்பு தோன்றுமாம்.
சந்த்யா வந்தனங்கள் தனித் தனியே செய்யும் பொழுதும், கை கூப்பி வங்கும் பொழுதும் பிரிவை பொறுக்க மாட்டார்களாம்.
மேகங்களின் இடையில் மின்னல் வந்தாலோ, வான வில் வந்தாலோ அதை தங்கள் வில்லுடன் ஒப்பிட்டு பேசி மகிழ்வர். சித்திரங்களில் தங்கள் குல மூத்தோர்கள், அவர்களும் சிறந்த வீரர்களே பிரசித்தி பெற்ற அரசர்களே என்றாலும் தலை வணங்க ,மாட்டார்கள்.
ஸூரியனின் ஒளி மண்டலம், அதன் சக்தியை மட்டுப் படுத்தி விட்டதாக சொல்வர். சமுத்திரத்தின் நடுவில் மந்தர மலையை போட்டு கடைய அனுமதித்தாள் என்பதாக அதன் பெருமை (லக்ஷ்மீ) குறைந்து விட்டதாக பரிகசிப்பர். பலவான், ஆனாலும் சரீரமும் இல்லை, பலத்தைக் காட்டி போர் புரியவும் இல்லை, என்று வாயுவை நிந்தித்தனர். . இமய மலையில் சமரீ என்ற மான்கள் தங்கள் பெரிய தோகையுடன் வளைய வர அனுமதித்த காரணத்தால், – சமரீ என்ற வகை மான் தோகைகள் பொன் நிறமாக இருக்கும், ஸுரிய ஒளியில் ஜ்வாலை போல பள பளக்கும். அதைக் காண ஸுரிய தேவன் வெற்றி பெற அனுமதித்து விட்டதாக கவியின் வர்ணனை.
சங்கு போன்ற உயர்ந்த பொருள் ஏன் சமுத்திரத்தின் அடியில் கிடக்க வேண்டும் என்று அங்கலாய்ப்பர். வருணனுடன் போட்டியிடுவர். வருணன் நான்கு சமுத்திரங்களுக்கும் அதிபதி என்று ஏன் ஏற்றுக் கொள்கிறோம், நாங்களும் தான் நால் கடல் ஸூழ்ந்த நிலத்தின் அதிபதிகள் என்பர். அரசர்களின் சத்ரம் என்ற குடை அவர்கள் அரச அடையாளம். அதை நீக்கி விட்டால் அவர்களுக்கு நிழலே இருக்காதா என்று வாதாடுவார்கள். அதே சமயம் சாதுக்கள், சான்றோர்களிடம் மரியாதையாக இருப்பர். மதுரமான வார்த்தைகள், துஷ்டர்கள் என்று தெரிந்தால் நெருங்காமல் இருப்பது போன்ற நற்குணங்கள் இயல்பாகவே அவர்களிடம் இருந்தன. தினந்தோறும் ஆயுத பயிற்சிகளும் செய்து ஆரோக்யமாக இருந்தனர். மக்களிடையே ராஜ வர்தனன், ஹர்ஷன் என்ற பெயர்கள் பரவி கௌரவமாக நினைக்கப் பட்டனர்.
ஒரு நாள் மதிய உணவு முடிந்த பின்னர், தந்தை இருவரையும் அறையின் உள்ளே அழைத்தார். ‘குழந்தைகளே, அரசு நிர்வாகத்தில் நம்பிக்கையான உதவியாளர்கள், பணி செய்பவர் மிக முக்கியமான அங்கம். இவர்கள் பரமாணு போன்றவர்கள். வெளியில் தெரியாமல் இவர்களின் செயல்கள், சிறு சிறு செயல்களே, ஆனாலும், பரமாணுக்கள் சேர்ந்து ஒரு பொருள் உருவாவது போல மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியவை. யாரையுமே சிறியவர்கள் என்றோ, அறியாத எளியவர்கள் என்றோ அலட்சியம் செய்யக் கூடாது, வெறும் விளையாட்டாக எதையுமே எடுத்துக் கொள்ள வேண்டாம். கொள்கைகள் இன்றி ஒரு சிலர், சமயமறிந்து தன்னலத்தை பேணுவதே குறியாக முகத்திற்கு எதிரே புகழ்ந்தும், வெளியில் இகழ்ந்தும் பேசுவர். இவர்களை தூர்த்தர்கள் என் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இவர்களிடம் விலகியே இருங்கள். மயில்கள் தோகை விரித்து ஆடுவதை ரசிக்கலாம். ஆனால் அதுவே நிரந்தமல்ல. (மயூரதாம் என்ற பதம் பயனின்றி பேசுவதையும் குறிக்கும்) கண்ணாடியில் பிரதி பிம்பம் தெரிவது போல உள் நுழைந்து தங்களை அணுக்கமானவராக காட்டிக் கொள்ள விழைபவர்கள் இவர்கள். இவர்களை கண் காணித்து விலகி இருங்கள். இவர்களை பல்லவிகா:- விடர்கள் என்பார்கள். கனவில் காண்பது எந்த அளவு உண்மையோ அவ்வளவே இவர்களின் பேச்சும், நடத்தையும், அருகில் வந்து மிக்க அன்புடையவர்கள் போல நடிப்பார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் முடிந்தவரை செல்வத்தை அபகரிப்பதே. மிக்க கவனமாக இருந்து இது போன்ற சகவாசத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள். அனாவசிய பேச்சுக்கள், பொதுவான நாகரீகமான பண்புகள் இல்லாதவர்களின் நட்பை முளையிலேயே வெட்டி விடுங்கள். தேவையில்லாத களைகள் பயிரை நாசம் செய்யும். அதனால் உங்களுக்கு மிகச் சிறந்த உண்மையான நம்பிக்கைக்கு பாத்திரமாக உளவாளிகளை நியமித்திருக்கிறேன். மாளவ அரசனின் குமாரர்கள், ஸூரர்கள், குமார குப்தன், மாதவ குப்தன் என்ற இருவரையும் நியமித்து இருக்கிறேன். இவர்கள் இருவரும் என் இரு தோள்கள் போல என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்’ இவ்வாறு சொன்னவர் வாயிற் காப்போனை அழைத்தார். ஏதோ சொல்லி அனுப்பினார். இருவரும் வாசலை நோக்கியபடி இருந்தனர். மூத்தவன் குமாரகுப்தன் முன்னால் வர, இளையவன் மாதவ குப்தன் உடன் வந்தான். வியப்புடன் நோக்கினர். பதினெட்டு வயது இருக்கும். அதிக உயரமும் இல்லை. நிதானமான உயரம், மூத்தவன் குமார குப்தன். அதை விட அவர்களைக் கவர்ந்தது தன் நம்பிக்கையுடன் தயக்கமின்றி வந்த விதமும், தன்னை அறிந்தவர், தன் செயலில் திடமான அறிவுடையவர் என்பதைத் தெரிவித்தன. அந்த கம்பீரமான நடையே பல அரசர்களுக்கு கூட இல்லையே என நினைக்க வைத்தது. பூமி அதிராமல் வைத்த அடிகள். ஆனாலும் உறுதியாக நிலைத்து நிற்பது. உயரம் தாண்டுதல் போன்ற உடற் பயிற்சிகளை இடை விடாமல் செய்து திண்ணென்றிருந்த கால்கள். ஆரோக்யமான உடலை உடையவர்கள் என்பதே அரச குமார்களுக்கு அவர்களிடம் ஈடுபாட்டை தந்து விட்டது. இடை சிறுத்து, பாற்கடலை கடைந்த சமயம், இடை விடாது தேவ தானவர்கள் வாசுகியைக் கொண்டு அதன் உடலை உரசி அலைக்கழித்ததால் சிறுத்த மந்தர மலை போல இளைத்து கிடந்தது. பரந்த மார்பு அவர்களுடைய நட்புணர்வை காட்டுவது போல இருந்ததாம். நீண்ட கைகள் இளமையின் பெருமையை காட்டியதாம். இடது கை வில்லைத் தாங்கி அடையாளம் பெற்றிருக்க, அதில் உயர்ந்த ரத்னத்தால் ஆன கங்கணம் அலங்கரித்தது. காதுகளில் சிவந்த உயர் மணிகளால் ஆன குண்டலங்கள் ஒளி வீசின. கேயூரம் என்ற ஆபரணத்தில் பல இலைகள் வடிவத்தில் அலங்கரித்தும் அதன் நடுவில் சந்திரன் போன்ற ஒரு வடிவம், கண்களின் இமைகள் பெரிதாக கண்கள் கீழ் நோக்கியே இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. செல்வ மதம் கொள்பவர்களுக்கு பாடம் கற்பிப்பது போல. குமார குப்தன், ஒரு சிவந்த புஷ்பத்தை தலையில் வைத்திருந்தான். நெல்லிக்காயின் பூவின் அம்லாதகி- பெயர் அதையும் அணிந்திருந்தான்.. சிறு வயது முதலே தன்னடக்கம் பயின்று புலன்களை ஜயித்தவர்கள். அதனாலேயே நம்பிக்கை வளரச் செய்தனர். நல்ல குடி பிறப்பு அவர்களின் வினயத்தில் தெரிந்தது. சந்திரன் ஸூரிய ஒளியை தன்னுள் கொள்வது போல அவர்களின் ஆற்றல், கவர்ச்சிகரமான அவர்களது சீலம்- நன் நடத்தையில் மறைத்துக் கொண்டிருந்தனர் போலும். அவன் பின்னால் வந்த இளையவன், மாதவ குப்தன் மூத்தவனை விட அதிக உயரமும், வெண்மையான பால் போன்ற நிறமும், மன:சிலா என்ற மலை போல இருந்தான். இவன் அழகிய மாலதி புஷ்பங்களின் குவியல் தரும் இதமான மணம் போல இருந்தான். புருவங்களில் யௌவனமும், வினயமும் ஒன்றுக்கொன்று விரோதமானது என்பது போன்ற ஒரு உணர்வை காட்டியது. அரசனிடம் அவனுக்கு இருந்த மரியாதையால், தானும் தீரன், மன அடக்கம் உள்ளவன் என்பதால், தன் எதிர்ப்பைச் சற்றும் காட்டாமல் அமைதி காத்தான். மார்பில் சந்தனம் பூசியிருந்தது குளுமையாக இருந்ததோ, அல்லது கனமான பூ மாலையினால் சங்கடம் அடைந்தானோ, பொறுமையின்றி காணப்பட்டான். நல்ல வீரன்.
இருவரும் உள்ளே நுழைந்தாலும் அருகில் வராமல் தள்ளியே நின்றனர். அங்கு இருந்தபடியே ஐந்து அங்கங்கள் நிலத்தில் பட வணங்கினர். அரசன் அவர்களை அன்புடன் பார்த்து, ஆசனத்தில் அமரச் செய்தார். ஒரு வினாடி அமைதியாக கடந்த பின், அவர்களைப் பார்த்து ஆணையிட்டார், ‘ இன்றிலிருந்து நீங்கள் இருவரும் ராஜ குமாரர்களை தொடர்ந்து செல்லும் பாதுகாவலர்கள் ஆவீர்கள்‘ அவர்களும் உங்கள் ஆணை அரசே, என்றபடி தலை குனிந்து, எழுந்தவர்கள், ராஜ்ய வர்தனன் மற்றும் ஹர்ஷனைப் பார்த்தும் வணக்கம் செய்தனர். இந்த இருவரும் தந்தையிடம் அனுமதி பெற்று வெளியே வந்தனர். அது முதல் நால்வரும் இணைந்தே இருந்தனர். கண் மூடி திறக்கும் நேரம் கூட அவர்களிடையே பிரிவு என்பதே இருக்கவில்லை. உள் மூச்சு, வெளிமூச்சு போலவும், இரவும் பகலும் கண் எதிரில் இருந்தனர், அக்கம் பக்கம் நின்றுபடி இரு புஜங்கள் காப்பது போல அவர்களை காவல் காத்தனர்.
ராஜ்ய ஸ்ரீ என்ற மகள் நடனம் ஆடுவதிலும், பாடுவதிலும் மேலும் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தாள். ஒத்த குணமுள்ள ரசிகர்களாக, கலைகளில் ஈடுபாடுடைய சகிகள் அமைந்தனர். இளமை ஆட்கொள்ளும் வரையில் அவள் உலகம் கலைகள், மேலும் புதியனவற்றை கற்பது என்று காலம் சென்றது. புதிய கலைகள் எதுவானாலும் முனைந்து கற்றுக் கொள்வதும் அதில் திறமை வாய்ந்தவர்களை முன்னோடிகளாக மதிப்பதும் அவள் குணமாயிற்று. பாணம்-அம்பு ஒரே லக்ஷ்யத்தைத் தான் அடையும் என்பது பொது வழக்கு. அது போல அரசர்களின் கவனம் அவள் பால் சென்றது. தங்கள் நாட்டு தூதுவர்களை அனுப்பி தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அரசனோ, அதை கண்டு கொள்ளாமல் இருந்தான்.
ஒரு நாள், அரசன் ப்ரபாகரன் தன் அறையில் இருந்த சமயம் வெளியிலிருந்து ஒருவன் பாடுவது காதில் விழுந்தது. ‘ மேகம் இருண்டு நீர் நிரம்பியதாக ஆனதும், நதிகள் தங்கள் பால் இழுத்துக் கொள்ளவே விழைகின்றன. இளமையின் அடையாளமாக ஸ்தனங்கள் வளர்ந்து பூரிப்புடன் இருக்கும் பெண்களைப் பெற்ற தந்தைமார் சற்று கவனமின்றி இருந்தாலும், யௌவனம் அடைந்த மகள், தன் தந்தைக்கு பொறுப்பை எப்படியோ நினைவு படுத்தி விடுகிறாள்.’
இதைக் கேட்ட அரசன் பணியாளர்களை அனுப்பி விட்டு, அரசி இருக்கும் இடம் வந்தார். யசோவதியிடம் வந்து ’தேவீ! நம் மகள் ராஜ்யஸ்ரீ தற்சமயம் இளமையின் நுழை வாயிலில் இருக்கிறாள். அவள் அறிவையும் கலையையும் ரசிக்கும் நான் இந்த விஷயத்தை மறந்தே போனேன் போலும். இது நமது பொறுப்பை நினைவு படுத்துவது போல, இந்த பாடலைக் கேட்டு விழித்துக் கொண்டேன். மேகம் எப்படி அதன் காலம் வந்ததும், ஆகாயத்தில் கூடி கனத்து உலகை இருட்டில் மூழ்கச் செய்கிறதோ, அது போல வளர்ந்து விட்ட என் மகள் என் மனதில் கவலையை கிளப்பி விட்டு விட்டாள். யாரோ முன் பின் தெரியாதவனிடம் என் மகளை ஒப்படைக்க மாட்டேன். மடியிலும் தோளிலும் போட்டுக் கொண்டு வளர்த்த என் மகள், அவளைப் பிரிவதா – என் மனம் ஒப்பவில்லை. இதென்ன தவறான வழக்கம். தன் உயிருக்கு உயிரான மகளை கன்யா தானம் என்ற பெயரில் யாருக்கோ தருவதாவது- என் மகளை அபகரித்துக் கொண்டு போக விடுவதா? இந்த வழக்கம் இந்த யுகத்தின் களங்கம். பின்னால் பிரிய வேண்டியிருக்கும், அது மனதை வாட்டும் என்பதை அறிந்ததாலேயே தான் போலும் பெற்றோர் பிறந்திருப்பது பெண் என்றால் கொண்டாடுவதில்லை. தன் வாரிசு என்பதால் மகனோ, மகளோ சம மான மகிழ்ச்சியைத் தானே தருகிறார்கள். கண்ணீர் பெருகி வழிய மாற்றானுடன் அனுப்ப வேண்டுமே என்ற கவலை. மணமாகும் முன் வீட்டு வாசலைத் தாண்டாமல் வளர்க்கிறார்கள். பெண் பிறந்து இருக்கிறாள் என்று கேட்டவுடன் கண்ணீர் பெருக்கும் தந்தைமார் உண்டு. அவர்களை நான் வியப்புடன் நோக்குவேன். என்றோ பிரிய வேண்டும் என்பது அவ்வளவு துக்கமா என்ன? திருமணமே வேண்டாம் என்று சிலர் பெண்கள் அருகாமையே வேண்டாம் என்று காடுகளில் வசிக்கிறார்கள் போலும். என்ன செய்ய? உலகில் இருக்கும் வரை நாம் மற்றவர்களை அனுசரித்து தானே வாழ வேண்டும். இதைக் கேள்.
தற்சமயம் உள்ள அரசர்களில் பலர் பெண் கேட்டு வந்துள்ளனர். அனைவருமே நல்ல குலத்தினர். குணவான்கள் எனக்கு பரிச்சயமானவர்களே. அவர்களில், நெற்றித் திலகம் போல தனித்து தெரிபவர், மாஹேஸ்வரனின் பாதங்களில் தங்களை அர்ப்பித்தவர்கள் மௌகர வம்சத்தினர். அவந்தி வர்மா அதன் அரசர். அனைவராலும் மதித்து போற்றப் படுபவர். அவர் மூத்த மகன் க்ரஹவர்மா என்பவன், தந்தையைப் போலவே நல்ல குணவான். அவனுக்காக பெண் கேட்டு தூது அனுப்பி இருக்கிறார் அவந்தி வர்மா. பெற்றோர் சாதாரணமாக பெண் கொடுக்கும் சமயம் நல்ல குலமா என்பதை கவனிப்பர். இவர் சிவபெருமானை பூஜிப்பது போலவே, பல சிற்றரசர்கள் வந்து வணங்கும் பெருமை பெற்றது இந்த மௌகரீ வம்சம். எனவே, நீயும் பார். உனக்கு சம்மதமானால் நான் இவர்களுக்கு பதில் அனுப்புகிறேன்.
இவ்வாறு அரசன் சொல்லி முடிக்கும் முன், கணவன் சொல்வது சரியே என்று மனம் சொன்னாலும், அதற்குள் மகளை புகுந்த வீடு அனுப்புவதா என்ற எண்ணம் மேலோங்க, தாயார் யசோவதியின் கண்கள் குளமாயின. ‘ஆர்ய புத்ர! நான் என்ன சொல்ல இருக்கிறது. மகளை வளர்க்கும் பொறுப்பு வரைதான் தாயார்கள் தங்கள் மகளிடம் உரிமை எடுத்துக் கொள்வது. கன்யா தானம் என்ற செயலில் தந்தைமார் தான் தீர்மானிக்கிறார்கள். வளர்ந்த மகளை திருமணம் செய்து கொடுத்து அவர்களுடன் வாழ அனுப்பத்தான் வேண்டும் என்ற காரணத்தாலேயே பெண்களை அதிகமாக பெற்றோர் போஷித்து அன்பு செலுத்தியும் வளர்க்கிறார்கள். வாழ் நாள் முழுவதும் சிரமப்படாமல், நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் நம் மகள். அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’ என்றாள்.
(அடுத்த இதழில் ஹர்ஷ சரிதம் என்ற இந்த நூலின் நான்காவது பகுதி நிறைவேறும்)
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
