ஹர்ஷ சரித்திரம்

தங்களுக்குள் முடிவு செய்து கொண்ட பின் அரசன் தங்கள் மகன் கள் இருவரையும் அழைத்தான்.  நல்ல நாளில் அவந்தி வர்மா அனுப்பிய தூதனிடம், அரசவையில் அனைவருக்கும் எதிரில் தன் சம்மதத்தை தெரிவித்து, தன் மகளை மணமுடித்து தருவதாக வாக்குறுதி அளித்தான். வந்தவர்களில் பிரதானமாக இருந்தவர் கையில் நீர் வார்த்து, இந்த சம்பந்தம் எங்களுக்கு சம்மதமே என்று உறுதியளித்தான். 

மகிழ்ச்சியுடன், அவர்களும் சென்றனர். விவாகத்திற்கான நாளும் நெருங்கியது.  வாழ்த்த வருவோர்களுக்கு தாம்பூலங்கள், வஸ்திரங்கள், பூ மாலைகள், வாசனை பொருட்கள் என்று அளித்தனர். அனவருக்குமாக இந்த பொருட்களையும் நிறைய சேமித்தனர்.  பல தேசங்களில் இருந்தும் சில்பிகள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் தங்கள் உபகரணங்கள், உதவியாளர்களுடன் வந்து சேர்ந்தனர்.   அரசனின் சேனைத் தலைவர்கள் கிராமங்களுக்கு தாங்களே சென்று அங்கு உள்ளவர்கள், அவர்கள் செய்தொழிலுக்கான உபகரணங்களுடன் அழைத்து வந்து விட்டனர்.  அரசு அதிகாரிகளும், பணி புரியும் மற்றவர்களும்,  திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏற்ற உபகாரங்களுக்கான பரிசுப் பொருட்களை கொண்டு வந்து சேர்த்தனர்.   அழைப்பை ஏற்று வந்த உறவினர்களை மரியாதையாக வரவேற்று அவர்கள் தங்கும் வசதிகளை கவனமாக பார்த்து செய்தனர்.  

டோல் என்ற வாத்தியம் வாசிப்பவர்கள்,  சமார் எனப்படுபவர்,  மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள். அவர்களும் உத்சாகமாக தங்கள் கூட்டத்தினருடன் வந்தது, தங்கள் வாத்தியங்களை தட்டி  தமா தம் என்று ஆரம்பித்தது அதன்  ஒலியாலேயே . மங்கள இசை என அனைவரும் மகிழ்ந்தனர்.  

 விருந்துக்கான உணவை தயாரிப்பவர்கள் தங்கள் உலூகல-உரல், முசலம்- உலக்கை, கல் பலகை- அம்மி போன்ற கனமான சாமான்களையும் அரைக்கவும் கரைக்கவும் வசதியாக கொண்டு வந்து போட்டனர்.  நாடு முழுவதும் அரசனின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் சாரணர்கள் உடனுக்குடன் ஏவல் பணியும், காவல் பணிகளையும் செய்பவர்கள் வந்து தங்களுக்கான கூடாரங்களில் இஷ்ட தெய்வங்களின் படங்கள், மூர்த்திகளுடன்  வந்து குடியேறினர்.  மேஸ்திரிகள், நல்ல வஸ்திரங்கள், சந்தனம், வெண் மலர்கள் என்பவைகளை உபசாரமாகப் பெற்று – இது ஒரு மரியாதை- திருமண மண்டபம் அமைக்கும் வேலையில் இறங்கினர். அளவு கோல்களும், வரைபடங்களும் வைத்துக் கொண்டு அவர்களின் பொறுப்பான மூத்தவர் தலைமையில் பலர் வேலை செய்தனர்.  வெண் கர்பூரத் துண்டுகளைக்  கொண்டு, வெள்ளையடித்தனர்.    பிராகாரங்கள், சிகரம் அனைத்து இடங்களையும் அலங்கரிக்கும் பொறுப்பு அவர்களுடையது.  கைகளில் வெள்ளையடிக்கும் திரவம் உடைய வாளிகளோடு, ஏணிகளில் தொங்கியபடி அவர்கள் வேலைகளைச் செய்தனர்.  இடையிடையே குங்குமம் மற்றும் மஞ்சள் பச்சை வர்ணப் பொடிகள் கலந்து கொண்டு அழகு படுத்தினர். 

சீர் வரிசைகள் தயாராகின. பொறுக்கி எடுத்த யானைகளும், குதிரைகளும் மணமகளுடன் அனுப்ப ஏற்றவைகளா என்று சோதித்து பார்க்கப் பட்டன.  அவைகள் அரண்மனை முற்றங்களை நிறைத்தன. ஜோதிடர்கள் விவாகம் சம்பந்தமான அனைத்து செயல்களுக்கும் நல்ல நேரம் குறித்து விவாதித்து தீர்மானித்தனர்.  அசுத்த நீர் வெளியேற பெரிய கிணறுகள் தயாராகின.  குழாய் வழியாக அந்த நீர் வெளியேறி ஒரு பெரிய கிணற்றில் சேரும் இடத்தில் அலங்காரமாக முதலையின் வாய் போன்ற நுழை  வாயில்களை அமைத்தனர்.  பொற் கொல்லர்கள் ஓரித்தில் கூடி நகைகளைச் செய்து கொண்டிருந்தனர். புது சுவர்கள், வழித்தடங்கள், இவைகளை சீராக்கி, மணலும் சுண்ணாம்பும் மண்ணும் கலந்து அரைத்து பூசிக் கொண்டிருந்தனர். அந்த பகுதிகளில் மணல் பறந்து அவர்களின் ஆடைகள் மலினமாகின.  சித்திரம் வரைபவர்கள் அழகிய மங்களகரமான சித்திரங்களை வரைந்தனர்.  பொம்மைகள் செய்யும் குயவர்கள், மீன், ஆமை, முதலை, தேங்காய், வாழை, பாக்கு  இவைகளின் மரங்கள்  என்று பலவிதமாக பொம்மைகள் தயார் செய்தனர்.  சில அரசர்கள், தாங்களும் உரிய ஆடைகளை அணிந்து இந்த செயல்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தனர். அலங்காரமாக தங்களுக்கு தோன்றியபடி அழகிய பொருட்களை கொண்டு வந்து சேர்த்தனர்.    கல்யாண மண்டபம் இருந்த இடம் பல வண்ணங்களால் அழகு பெற்றது.  அங்கு அலங்கரித்த தூண்கள் நிறுவப் பட்டன.  தரைகள் சிந்தூர வர்ணப் பொடிகளால் மெழுகப்பெற்று  பள பளவென மின்னின.  பலவிதமான அலங்காரங்கள், மாவிலைத் தோரணங்கள், அசோக மரத்தின் இலைகளால் தோரணங்கள், சிவந்த திரைச் சீலைகள்,தயாராகின.  பலர் இது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.  உயர் அதிகாரிகளின் மனைவிகள் கூட தாங்களும் நல்ல வஸ்திரங்கள், நகைகள் அணிந்து கொண்டு, சுருதி சுத்தமாக மங்களமான பாடல்களைப் பாடிக் கொண்டு  ராஜ மகாலில் கூடினர். 238 பக்கம் சித்திரத்தில் எழுத திறமை உள்ள சிலர், கலசங்களில் வெண்ணிற பிண்ணனியில் சித்திரங்கள் வரைந்தனர்.  மங்களமாக சந்தன குங்கும பொட்டுகள் வைத்தனர்.  திரைச் சீலைகளை அழகுற வேலைப்பாடுகள் செய்து மாட்டினர்.  விவாகத்திற்கு பயன்படும் கங்கணங்கள், மங்கள சூத்ரங்கள் இவைகளை தயார் செய்தனர்.  நெய் விட்டு கெட்டியாக அங்க ராகம் என்பதை அதன் மூலப் பொருட்களான குங்குமம் மற்றும் பலாசனா என்ற மருத்துவ குணம் உள்ள பொருள், அதையும் கலந்து அங்கராகம் என்பதை தயாரித்தனர். ( முகத்தில் பூசிக் கொள்ளும் அழகு சாதனம்) மற்றும் சிலர் கல்லோல, ஜாதிக்காயின் பழம், கிராம்பு இவைகளைக் கோர்த்து மாலைகள் தயரித்தனர்.  நடு நடுவில் ஸ்படிக கற்கள், வெண் கர்ப்பூரம் இவைகளை இணைத்து பள பளப்பாக இருக்கச் செய்தனர். ஊர் முழுவதும் அலங்கார தோரணங்கள், முதிய பெண்கள் தாங்களே தயாரித்துக் கொடுத்தனர்.  துணிகளில் பாந்தனீ என்ற முறையில் வர்ணம் தோய்த்து (தமிழில் சுங்கடி)  தயாரித்தனர்.  ( வெண்மையான துணிகளில் நடு நடுவில் முடிச்சுகள் போட்டு வர்ண நீரில் முக்கி எடுப்பர். முடிச்சிட்ட இடங்களில் வர்ணம் இருக்காது. அதுவே ஒரு கலை.)  வர்ணம் தோய்த்த துணிகளை உலர்த்தி மூட்டையாக எடுத்துச் செல்வோரும், பின் அதை தோரணங்களாக தயாரிப்பவர்களும் அரண்மனை வளாகத்திலேயே இருந்து செய்தனர்.  இதைச் செய்வதில் ஈடுபட்டிருந்த முதியவர்கள், தங்களுக்கு கிடைத்த பெருமையாக எண்ணி மகிழ்ந்தனர்.  இரு கரைகளிலும் வர்ணமும், உடல் வெண்மையுமாக உடைகளுக்கான  பட்டுத் துணிகள் நெய்தனர்.  பல வர்ணப் பட்டுத்துணிகள், கையால் தொடவே மிருதுவான துணிகளில் இலைகளும் பூக்களுமாக  தெளிவாக தெரியும்படி  நெய்தனர். சில வஸ்திரங்களில் குங்கும வர்ண குழம்பில்  கைகளை முக்கி அதன் மேல் அச்சிட்டனர்.  சில தேர்ந்த நெசவாளிகள் தறிகளில் நெய்து கொண்டிருக்கும் பொழுதே உதவியாளர்கள் விரல்களால் நடு நடுவில் அழுத்தி வித விதமான கோடுகளோ, புள்ளிகளோ வரச் செய்தனர்.  நெய்த பின் முழுமையாக வந்த துணியைப் பார்த்து தாங்களே வியந்து ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டனர்.  பட்டுத் துணிகள், பருத்தியால் ஆன துணிகள் , துகுல் எனப்படும் மரவுரிகள், லாலா தந்துஜ- ரேஷ்மி எனப்படும் ஒருவகை பட்டு சேலைகள், அம்சுக், நேத்ர என்ற வகைத் துணிகள், -இவை பாம்புகள் உரித்து போடும் சட்டை போல இருக்குமாம்- சில வாழைத் தண்டுகளின் உட்புறம் போல கோமளமானவை, ஊதினாலே பறந்து விடும் அளவு மென்மையானவை, தொட்டால் தான் உணர முடியும் என்பது போல உள்ளவை, ஆயுரக் கணக்காக இந்திராயுதங்கள்- போல அரச மாளிகையின் விதானங்கள் அலங்கரிக்கப் பட்டன.  கை விணை அறிந்த கலைஞர்கள் தங்கள் கற்பனைக்கேற்ப அலங்கரித்தனர்.  இதைத் தவிர, அணியும் ஆடைகள்.  கஞ்சுக எனும் மேலாடைகள் அதில் முத்துக்கள் பதித்து இருந்தனர்.  அவை பள பள வென மின்னின – வண்ண நூலால் அதன் மேல் செய்யும் பூ வேலை (embroidery- வடமொழியில் कडाई – தமிழில் வண்ண நூல் பூவேலை.  பலவிதமான உபயோகங்களுக்கான வித விதமான ஆடைகள் செய்ய, நெய்த துணிகள் நீண்ட கழிகளில் சுற்றப் பட்டு குவிந்து கிடந்தன.  ஒவ்வொரு இடத்துக்கும் அதற்கான சிறப்பான துணிகள். 

திருமண மண்டபத்தின்  தூண்களில் சுற்ற வர்ணம் பூசப் பெற்ற நேத்ர என்ற துணிகள். மேல் விதானம் மெல்லிய துணிகளில் பூக்களும்,இலைகளும் கொண்டு அமைக்கப் பட்டன. அரச குலத்தில் அனைவரும் ஒவ்வொரு செயலில் முழு மனதோடு ஈடுபட்டு எங்கும் கல கலவென பேச்சும், செயல்களுமாக, ஒளிவீசும், அழகிய வித விதமான குதூகலங்களின் வெளிப்பாடு நிறைந்து, கண்களுக்கு விருந்தாகவும், கேட்க இனிமையான  உத்சாகமான குரல்களாலும்  நிறைந்தது.  

ராணி யசோவதி இவ்வகையான பல ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டும், ஆலோசனைகள் சொல்லியும் மிகவும் ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தாள்.  ஒவ்வொருவரிடமும் குசலம் விசாரித்து வரவேற்றுக் கொண்டிருந்தாள்.  பதி குலத்து மருமகன்கள் ( மாப்பிளைகள் வந்தனர். ), அவர்கள் மனவிமார்கள் வீட்டு பெண்கள், இவர்களை உபசரித்து வரவேற்றாள்.  அழைப்பை ஏற்று வந்தவர்கள், அவர்களை உபசரித்தாள். பணியாளர்களுக்கு கட்டளைகள், அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தாலும் கண்களால் நடக்கும் வேலைகளையும் கண் காணித்து தேவையான இடங்களில் தன் எண்ணத்தையும் சொல்லியும்,  வாழ்த்து செய்தி சொன்னவர்களுக்கு பதில் சொல்லியும், மகோத்சவம் என்பதால் ஆனந்தமாக, தன் உடல் அசதியை பொருட்படுத்தாமல் வளைய வந்து கொண்டிருந்தாள்.  அரசனோ, சீர் வரிசைகளை ஓட்டகங்கள் மேல் ஏற்றுவதில் முனைந்து இருந்தார். மருமகனுக்காக பல பொருட்களை ஒட்டகத்திற்கு மேல் ஒட்டகமாக ஏற்றிக் கொண்டிருந்தார்.  அவர் கட்டளையை தலை மேல் தாங்கும்  பணியாட்களும் முகம் சுளிக்காமல் அந்த வேலையை செவ்வனே  செய்து கொண்டிருந்தனர்.  இரு ராஜ குமாரர்களும் அவருக்கு உதவியாக இருந்தனர். இருந்தும் தானே மேற்பார்வையிட வந்து நின்றார். அரண்மனையில் ஒவ்வொரு இடமும் நிரம்பி வழிந்தது. நல்ல உடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் ஆண்களும் பெண்களுமாக சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். சாரணர்கள் அவர்கள் தேவைகளையறிந்து உடனுக்குடன் நிறைவேற்றிக்  கொண்டிருந்தனர்.  ஆகாயத்தில் பட்டாசுகள் வெடிப்பதும், வண்ண ஜாலமாக அதன் ஒளி சிதறுவதும்   ரசிக்கத் தகுந்தவைகளாக இருந்தன.  பணிப் பெண்களும்  தங்கள் ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தனர். அதன் உரசலால் வந்த நாதமும் கேட்டது. வந்தவர்கள் அனைவருமே உறவினர்களாக உபசரிக்கப் பட்டனர்.  சாதாரண உத்சவம் என்றாலே மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கெடுப்பர். இது மகோத்சவம், கேட்பானேன்?  மணமகளின் தோழிமார்கள், மனக் கோட்டைகளில் மூழ்கினர் போல இருந்தனர். விவாக தினமும் வந்தது. காலையில் இருந்தே துப்புறவு செய்யும் பணியாளர்கள் ஒவ்வொரு இடத்தையும் கவனித்து சுத்தமாக்கி வைத்தனர். 

அதன் பின், காவலர் தலைவன் வந்து அரசனிடம் ‘தேவ! மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து தாம்பூலத்தை எடுத்துக் கொண்டு பாரிஜாதகன் என்ற ஒருவன் வந்துள்ளான் என்று அறிவித்தான். “ தன்னைப் போலவே உடல் அமைப்புள்ள ஒருவனை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினான். தன் மருமகனிடம் இருந்து வந்தவன் என்பதால் அன்பும் மகிழ்ச்சியுமாக அரசன் விசாரித்தார். ‘ பாலக! அனைவரும் நலமா? க்ரஹ வர்மா நலமா?’ என்றார்.  அவனும் உடனே பரபரப்புடன் பலவிதமான பொருட்களை கொண்டு வந்து அரண்மனை முற்றத்தில் பரத்தி வைத்தான்.  அவன் கவனமாகவும் அதே சமயம் வேகமாகவும் செய்வதை அரசன் குறித்துக் கொண்டார்.  சதுரன்- சாமர்த்யசாலி என்பதாக.  வைத்து முடித்தவன் தலை தூக்கி, ‘தேவ! அனைவரும் நலமே. அவரும் தன் வணக்கத்தை தெரிவிக்கச் சொன்னார்’ என்றான்.  அவனுக்குரிய சத்காரங்களை- மரியாதைகளைச் செய்து அரசன் ‘ இரவு முதல் யாமத்தில் முஹூர்த்தம், தடையின்றி யாவரும் வந்து சேருங்கள்’ என்று பணித்து வழியனுப்பினார். 

சித்திரம் : அருண்

அதன் பின், உலகில் உள்ள அனைத்து கமல வனங்களின் சௌந்தர்யமும் தன் மகள் முகத்தில் கூடி விட்டதாக மகிழ்ந்தார், , அந்த சுப விவாக நாளில், ஆதவனும், மெள்ள மெள்ள தன் பாதங்களை மரங்களில் புத்தம் புது துளிர்கள் முளைத்தது போல நீட்டியபடி உதயம் ஆனான்.  சக்ரவாக பறவைகள் ஜோடியாக, தங்களைப் போலவே ராஜ குமாரியும் அவள் கணவனுமாக உல்லாசமாக இருப்பார்கள் என்று தங்களுக்குள் வெட்கத்துடன் பேசிக் கொண்டன போலும்.  விடியலின் சென்னிறமான கதிர்கள் சௌபாக்ய த்வஜம், – சுமங்களமான கொடியை அசைப்பது போல ஏறிட்டன.  புறாக்களும் தங்கள் கடோரமான குரலால் ஓசையிட்டது வர யாத்திரை- மணமகன் வரும் ஓசை  அவர்கள் உடன் வந்த கூட்டத்தால் புழுதி படருவதை ஒத்திருந்தது.  வானத்தில் கோள்களின் நிலையையும்  அவைகளின் போக்குகளையும் கவனித்து பலன் சொல்லும் சோதிடர்கள், கவனமாக நேரத்தை கவனித்தபடி இருந்தனர்.  சுப முஹூர்த்தம் கணித்துக் கொடுத்தவர்கள் அவர்கள்.  

விடியலிலேயே விவாக மங்கள காரியங்கள்  ஆரம்பித்து விட்டன. ஹோமங்களும், மற்றும் பல வைதீக-வேத மந்திரங்களுடன் கூடிய செயல்களும் தாரகைகளின் நாயகன் உதயமாகும்  உதயாசலம்- உதயம் ஆகும் இடம்- அதனுடன் போட்டி போடுவது போல விவாக மங்கள் கலசஙகள், இளம் நிலவின் ஒளியில் பள பளத்தது.   மணமகளின் சௌந்தர்யமா, நிலவின் ஒளியா எது அந்தகாரம்- இருட்டை விரட்டியது என்று  கவி வர்ணிக்கிறார்.  குமுத மலர்கள் சிரித்தனவாம்.(மலர்ந்தன)

பராத் – மருமகன் தன் உற்றார் உறவினருடன் வரும் ஊர்வலம் நெருங்கியது.  ஒரு சிலர்  கையில் த்வஜம்- கொடியுடன் நடந்து வந்தனர்.  குதிரைகளில் வந்தவர்களின்  குதிரைகளை அதற்கான கூடாரங்களில் கொண்டு சேர்த்தனர்.  நடந்த களைப்பு தீர அவைகளும் கணைத்தன.  மணிகள் ஆடி ஒலியெழுப்ப ஆடி ஆடி, தங்கள் பொன் நிற முகப் படங்களுடன் யானைகளும் வந்தன.  க்ருஹ வர்மா உயர் ஜாதி குதிரையும் நக்ஷத்திரமாலா என்ற ஆபரணம் அணிவிக்கப் பட்டு இருந்தது. அதன் முன் சாரணர்கள் தாள வாத்தியங்கள் இசைக்க அணிவகுத்து வந்தனர்.  ஒரு சிலர் பாடல்களைப் பாடிக் கொண்டு வந்தனர்.  மாலை வேளை தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக்  கொண்டிருந்த பறவைகள் இந்த ஒலியால் தாக்கப்பட்டு கூட்டமாக சிறகடித்து பறந்தும் அதற்கு அனுகூலமாக  சஹ சஹ என்று கூவி பதிலளித்தன  போலும். 

வாசனப் பொடி  கலந்த எண்ணெய் விட்டு விளக்குகளை ஏற்றினர்.  எங்கும்  திரைச் சீலைகள் அசைந்து குங்குமம் கலந்த வண்ணப் பொடி பரவியது.  க்ரஹவர்மா, மலர்ந்த மாலதி மலர்களால் ஆன தலையலங்காரம்- தலைப்பாகை- அணிந்திருந்தான்.  அவனைக் கண்டு காமதேவனே மணமகனுக்கு முன் வெட்கி தலை குனிந்திருப்பான் போலும். பலவிதமான அணிகள், அலங்காரங்களுடன், மனதில் மணமகள் ராஜ்யஸ்ரீ நினைவே வியாபித்திருக்க, வேகமாக வருபவன் போல இருந்தான். 

மணமகள்  வீட்டார், வரவேற்க, தன் குமாரர்கள் இருவருடன், வந்திருந்த மற்றா தேசத்து அரசர்களும் தொடர, மண மண்டபத்தின் வாசலுக்கு வந்து காத்திருந்தனர்.  கீழே இறங்கி வணங்கியவனை, மன்மதனை மாதவன் போல இரு கைகளையும் நீட்டி, இறுக அணைத்து வரவேற்றார்.   ராஜ்ய வர்தனும், ஹர்ஷனும் முன்னால் வந்து அதே போல அணைத்து வரவேற்றனர்.  இருவரும் மணமகன் கைகளைப் பற்றி மண்டபத்துள் அழைத்துச் சென்றனர்.  ஆசனத்தில் அமரச் செய்து, உடன் இருந்து பேசிக் கொண்டே தேவையானவைகளைச் செய்தனர். 

அதன் பின்  காலம் தாழ்த்தாமல், கம்பீரன் என்ற பெயருடைய பிரதானமான  புரோஹிதர், வந்தார்.  சிறந்த வித்வான், அரசனுக்கு அணுக்கமானவர் என்பதால் அருகில் வந்து க்ரஹ வர்மாவை நோக்கிச் சொன்னார்.  ‘மகனே! நெடுங்காலாமக இந்த ராஜகுலம் தங்கள் அரசை பரிபாலித்து வந்துள்ளது.  மிகுந்த பெருமை வாய்ந்த புஷ்பபூதி என்ற சக்ரவர்த்தியின் வம்சத்தினர்.  ஆற்றல் மிக்க பல அரசர்கள் இந்த குலத்தில் தோன்றி சிறந்த ஆட்சியை தந்துள்ளனர்.  உலகமே புகழும் புகழ் வாய்ந்த சோம, ஸூர்ய வம்சங்களுக்கு இணையாக பாடல் பெற்ற குலம் இது.  மகனே! ஏற்கனவே உன் நற்குணங்களால் அரசனின் உள்ளத்தில்,  கௌஸ்துப மணி போல பிரகாசிக்கிறாய்.  தற்சமயம் பரமேஸ்வரனின் தலையில் அணிந்த நிலவின் கலை போல எங்கள் மகளின் மணாளனாக வந்து விட்டாய், நல்வரவாகுக’ என்றார். 

ஜோதிடர்கள்  அரசன் முன் வந்து ‘அரசே!  முஹூர்த்த நேரம்  கடக்கும் முன் கௌதுக காரியங்களைச் செய்து விடுவோம்’ என்று சொல்ல அரசன் ‘வாருங்கள் என்று அழைக்க,  க்ருஹ வர்மா எழுந்து, மண மண்டபத்தில் நுழைந்தான். தங்கள் நாட்டு மருமகனைப் பார்க்க வந்த கூட்டம் அலை மோதியது.  பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு எட்டிப் பார்த்தும், தள்ளி நின்று ஏறிட்டு பார்த்தும் மகிழ்ந்தனர்.   இவர்களின் குதூகலத்தால் சற்று வெட்கத்துடனேயே மணமகன் மண்டபத்துள் பிரவேசித்தான். 

ராஜ்யஸ்ரீ  தன் தோழிகளுடன் மணமகளுக்கான அலங்காரங்களுடன் தயாராக நின்றாள்.  சந்த்யா கால சிவப்பை ஒத்த தலையை மூடியிருந்த குங்கட்- முகத்திரை.  எதையும் குறிப்பாக பார்க்காமல், சற்றே தலை குனிந்து இருந்தவளை மணமகன் நெருங்கினான். வெட்கம் அவள் முகத்தின் அழகை தூக்கி காட்டியது. சந்தனத்தால் செய்த கொடி போன்ற உடல், சௌந்தர்யமே உருவாகி வந்தவள் போல, உவமைகளுக்கு அப்பால் நின்றவளாக, வசந்த ஹ்ருதயம் – மன்மதனின் சகா வசந்தன் – அவன் முன்னால் வந்து மன்மதனுக்கு உதவி செய்வதாக செய்தி- அவன் தானே வந்து மேற்பார்வையிடுவது போல இருந்ததாம்.  மலய மாருதம் வீசியது போல அவள் வருகை குளுமையாக ஆயிற்றாம்.  கந்தர்ப்பன் என்ற மன்மதனுடன் வரும் ரதி, திரும்ப பிறந்து  வந்து விட்டது போல இருந்தாளாம்.  மாதுர்யமும் அழகுமே பாற்கடலாக, கௌஸ்துப, சந்திரன், பாரிஜாதம் இவை அனைத்தின் ப்ரபையுடன், சுரா சுரர்கள் பார்த்து வியந்து நிற்க எழுந்து வந்த ஸ்ரீ லக்ஷ்மி தேவி போலவே இருந்தாளாம். அருகில் சிறு பெண்கள் கண்கள் மலர அவளை பார்த்து மகிழ்ந்தனர்.  ரத்னாகரம் – சமுத்திரம் ரத்னங்களுடன் இருப்பதால் வந்த பெயர், அந்த இடத்தில் அழகிய சிறுமிகள் (ரத்தினங்கள்) ஸூழ நின்றவளும் அந்த சமயம் ரத்னாகரமே என்று கவி வர்ணிக்கிறார்.  மணமகனைக் காண  மனதில் குதூகலம் இருந்தாலும் வெட்கி தலை குனிந்தவளை சகி வந்து முகத்தை நிமிர்த்தி பார்க்கச் செய்தாள். 

மணமகள் ராஜ்யஸ்ரீ எதிரில் வந்து நின்று க்ருஹ வர்மனை நேருக்கு நேர் நோக்கிய நிமிடமே மன்மதன் பொறுப்பை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு விட்டான்.  மென் முறுவலோடும் அட்டகாசமாகவும் தோழிகள் அவர்களை கௌதுக க்ருஹம் எனப்படும் மண மேடைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு மணமகன் புரோஹிதர்கள் சொல்லைக் கேட்டு அதன் படி செய்தான்.   திருமண உடையில் அலங்காரமாக இருந்த மணமகளை கை பற்றி அழைத்துச் சென்றான்.  மண்டபம் தூய வெண்ணிற சீலைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்ததால், பனி மூடிய இமாலயம் போலவே விளங்கியது,  அம்பிகா-திரயம்பக – மலைமகள் கௌரி தேவி – பகவான் சிவபெருமானை மணந்த தருணம் போலவே  பல தேச அரசர்கள் சுற்றிலும் நின்றிருந்தனர்.  (பூப்ருத்- மலைகள் இமயத்தைச் சுற்றிலும், பூப்ருத்- பூமியை ஆளும் அரசர்கள் இந்த மண மண்டபத்தில்)  

நாற் திசைகளிலும் அகலமான வாய் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன.  அவைகளில் தானியங்கள் விதைக்கப் பட்டிருந்தவை முளைத்திருந்தன.  உபாத்யாயர்கள் அவர்களை ஹோம குண்டத்தின் அருகில் அமரச் செய்தார்.  மெள்ள ஜ்வாலை எழுந்த நேரம் புகை கண்களை சிவக்கச் செய்தன.  பல பொருட்கள் ஹோமத்தீயில் இட்டனர். (பசும் புல் அதிக புகை எழுப்பும். குசம் என்ற புல்லே பிரதானமாக இருந்ததால் புகை)  காலில் மெட்டி அணிவிக்கும் செயலுக்காக கல், மற்றும் யாகத்திற்கான பொருட்கள், எள், கிருஷ்ணாஜினம், நெய், கரண்டிகள், சமித்துக்கள்- இவை வைதீக செயலுக்காக பரப்ப பட்டிருந்தன. 

அருகில் நிலவின் ஒளி போல அமர்ந்திருந்த மணமகளை காணவே விரும்பிய கண்களை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டு க்ருஹ வர்மா – விவாக வேதி, விவாகத்தின் அங்கமான வேத சம்பந்தமான செயல்களை செய்து கொண்டிருந்தான்.   காமதேவன் ரதியுடன் சிவந்த அசோக மரம் அருகில் செல்வது போல தீயின் சிவந்த ஜ்வாலைகள் சிவந்து இருந்தனவாம்.   இருவருமாக அக்னியை வலம் வந்து சப்தபதி என்ற ஏழு அடிகள் நடந்தனர். லாஜ ஹோம் என்ற பொரியைக் கொண்டு அக்னியில் இருவருமாக ஹோமம் செய்தனர்.  அவள் பாதங்களை தூக்கி கல்லில் வைத்து மெட்டியை அணிவித்தான். (கால் விரலில் அணியும் வளையம் இதை  மணமகனே மணமகள் விரலில் அணிவிப்பான்) மெதுவாக எட்டிப் பார்ப்பது போல பொழுது புலர ஆரம்பித்தது.

விவாகம் சம்பந்தமான தேவ காரியங்கள் முடிந்து மணமகளை  அழைத்துக் கொண்டு மணமகன் வீட்டார் கிளம்பத் தயாராகினர். திடுமென இந்த நினைவு ராஜ்யஸ்ரீயின் கண்களில் நீரை நிரப்பியது, கன்னங்கள் சிவந்தன.  பந்து ஜனங்களும் பிரிவை அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது போல திடுக்கிட்டனர்.  அனவரும் கண்களில் நீருடனேயே வழி அனுப்பத் தயாராகினர்.  விவாக விதி விதானங்கள் முடிந்து க்ருஹ வர்மன் வந்து  தம்பதிகளாக இருவரும் அரசன்-யசோவதி- இருவரும் சேர்ந்து நின்று ஆசீர்வதிக்க வணங்கினர். அனைவரும்  வாஸ க்ருஹம் என்ற இடம் சென்றனர்.  

உறவினர்கள், சகிகளின் உல்லாசம், சிரிப்பும் சீண்டலுமாக அந்த இடம் கோலாஹலமாக ஆகியது.  குளிர்ந்த காற்று வீசி மங்கள தீபங்களின் ஒளியை பிரகாசமாக்கியதாம்.   அந்த:புர அறையில் இருவரும் தனியாக இருக்க வசதிகள் செய்யப் பட்டிருந்தன. வெண்ணிற விதானங்களும் அழகிய போர்வைகளுடன் கட்டிலின் இரு பக்கமும் பல சில்பங்கள், மனம் கவரும் சித்திரங்கள், தந்தம் கொண்டு செய்த கை வினைப் பொருட்கள் என்று அலங்கரித்திருந்தனர்.   

புது மண தம்பதி ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் ஆவலும், அதே சமயம் இளம் வயதினருக்கான வெட்கமும் சேர, இரவைக் கழித்தனர்.  முதல் முதலாக பேசி, குரல் கேட்டு பரவசமானார்கள்.  இரவு போனதே தெரியவில்லை.  மாமனார் வீட்டில் சில காலம் வசித்த க்ருஹ வர்மன், அவர்களுடன் இனிமையாக பேசினான். இயல்பாகவே சீலம்- நன்னடத்தை உள்ளவன் ஆதலால் அவர்கள் மனதில் மகிழ்ச்சி நிறையச் செய்தான்.  புது இடம், புது உபசாரங்கள், புதிய சூழ்நிலையும் உற்றார் உறவினர் அறிமுகங்கள், பத்து நாட்கள் குதூகலமாக நிறைந்தது.   ராஜகுலம் வழியனுப்பும் சமயம் தங்கள் மகளை தகுந்த வரனிடம் ஒப்படைத்து விட்ட மன நிறைவு ஒரு புறம், மகளை அனுப்பும் வருத்தம் ஒருபுறம் என்று இருந்தது. சீர் வரிசைகளாக இருந்த பல பொருட்களையும் மகளையும் ஏற்றுக் கொண்டு மருமகன் கிளம்பியதும் அனைவரும் கையசைத்து விடை கொடுத்தனர்.  க்ருஹவர்மா புது மனைவியுடன் தன் தேசம் சென்றான். 

(இத்துடன் ஹர்ஷ சரிதம் என்ற இந்த நூலில் நான்காவது பகுதி நிறைவேறியது) 

ஹர்ஷ சரித சங்கேதம் என்ற பெயரில் ஸ்ரீ சங்கர என்பகர் எழுதிய உரையும் நிறைந்தது) 

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும் தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.