அதிஜனநாயகம்- 1

This entry is part 1 of 2 in the series அதிஜனநாயகம்

என் நிறுத்தம் வந்து சில நொடிகள் ஆகியிருந்தன. கைபேசியில் வந்திருந்த செய்தி பிற மென்பொருள்களை மீறி என் கண் முன்னே மின்னிக்கொண்டிருந்தது. பைத்தியக்காரி போல அதைத் தவிர்க்க பொத்தான்களை வேகமாக அழுத்தினேன். செய்தி மறையவில்லை. மீண்டும் நான்கைந்து பொத்தான்களை சேர்ந்தாற்போல அழுத்தினேன். மின்னும் செய்தியாக அது மாறியது. சட்டென சூழலை உணர்ந்தவளாய் அவசரமாக என் கைப்பையை மார்போடு அணைந்தபடி கம்பார்ட்மெண்டிலிருந்து இறங்கினேன். சட்டென மூடிய கதவுகள் சிவப்பு வெளிச்சமாகப் பூட்டிக்கொள்ள ஒரு சிறு குலுக்கலோடு வானில் நீண்டிருந்த தண்டவாளத்தில் இணைந்தபடி விருட்டென நிறுத்தத்தை விட்டுப் பறந்தது. தரையிலிருந்து ரெண்டு மீட்டர் உயரத்தில் மிதந்துகொண்டிருந்த என் நிறுத்தமேடையில் நான் திகைத்தபடி நின்றிருந்தேன்.

‘அடுத்த எழுபத்து மணி நேரங்களுக்கு அதிஜனநாயகச் சேவைக்கான குழுவில் தாங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் அரசு பெரு மகிழ்ச்சி கொள்கிறது. தங்கள் சேவை நம் தேசிய நலனுக்கு மிக அவசியமான ஒன்று என்பதை நான் மீண்டும் அரசு சார்பில் வலியுறுத்துகிறேன். அடுத்த ரெண்டு மணி நேரங்களில் தங்களை அழைத்துச் செல்லும் ஊர்தி எண்ணும் அதிஜனநாயக மையத்தின் கடவுச் செல்லும் அடுத்தடுத்த செய்திகளில் தெரிவிப்போம். மீண்டும் நன்றிகள்’

எது நடக்கக்கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது. இப்படி ஒரு அழைப்பை எதிர்பார்த்திருக்கும் மக்கள் இருப்பார்கள் என்றாலும் பெரும்பான்மையானவர்கள் இந்த மூன்று நாட்கள் தேவையற்ற ஒன்று என்றே நினைத்திருந்தனர். அடுத்த சில நாட்களில் வெளி உலக உறவே இருக்காது எனும் நினைப்பே எனக்கு மூச்சு முட்டியது. மூச்சு முட்டும், சிறை எனப் புலம்பியபடி நாட்களைக் கழித்த என் அப்பாவின் கடைசி நாட்கள் மட்டுமே நினைவுக்கு வந்தது. ஹைவே 25 எனும் பதாகையைத் தாண்டி மைல் நீல வரிசையிலிருந்த வானூர்தி கேப்சில்களோடு ஈ ஸ்கூட்டரில் இணைந்தபோது கவசத்தையும் மீறி குளிர் காற்று என் உடலில் ஊடுருவியது.

அதிஜனநாயக ஓட்டு முறையின் பத்தாவது வருட சுழற்சியில் இருந்தது ஆசிய கண்டம். இருபதாம் நூற்றாண்டின் ஜனநாயக ஓட்டு முறையின் சீர்கேடுகளால் நாடுகளுக்கு இடையே நடந்த யுத்தங்களை நிவர்த்தி செய்யும்விதமான கண்டங்களின் பிரதிநிதிகள் சேர்ந்து உருவாக்கிய திட்டம் – கண்ட பாதுகாப்புக் குழு. தேசிய சட்டங்களை ஒருங்கிணைக்கவும், எப்போதெல்லாம் தேசங்களுக்கு மத்தியில் சிக்கல்கள் வரும்போது தீர்த்துவைக்கவும் கண்டங்களின் சட்ட அமைப்பு அமுலில் வரும். ஆசிய, ஓசியானியா, ஐரோப்பா, அமெரிக்கா எனும் நான்கு கண்டங்கள் தங்களுக்குளான இயங்குவிதிகளை நிர்மாணிக்கும் பொருட்டு உருவானது கண் பாதுகாபப்புக்குழு. அவர்களின் முதல் அறிக்கையின் செயல்திட்டம் அதிஜனநாயக ஓட்டு முறை.

‘என்ன சிக்கல்?’

அவியின் குரல்.

‘அவி, என்ன திடீர்னு?’

‘உன் ஹெல்த் மானிடரிடம் கேளு. என் இரவு உணவுக்காக பீட்ரூட் நறுக்கும்போது ஐயோ லயா நாடித்துடிப்பும், ஸ்டிரெஸ் லெவலும் எக்கச்சக்கமா எகிறி இருக்கு. அவள காப்பாத்துன்னு கதறுது’, அவளது குரலில் இருந்த கிண்டல் மூலம் முக பாவனை நிழலாடியது.

‘ரொம்ப சாரி அவி. என்னோட buddy ஆனா என்ன ஆகும்னு அப்பவே சொன்னேன். நீ தான் கேட்கல’

‘பரவாயில்லை. எப்போவொ ஒரு முறை. உன்னைப் பொறுத்துக்கலாம். தினம் தினம் வந்தா டீ ஆக்டிவேட் செஞ்சிருவேன்…உன்னை’ , அவி சிரித்தாள்.

‘சரி ஒண்ணுமில்ல. உன் பீட்ரூட் கூப்பிடுது பார்’

‘என்ன விஷயம் சொல்லு. இன்னுன் உன் கெமிக்கல் லெவல் குறையலியே. ‘

‘அதிஜனநாயக குழு அழைப்பு வந்திருக்கு’

‘கம் அகைன்?’

‘அ தி ஜ ந நா ய கக் குழு – கேட்குதா? சாரி, இந்த ஹைவே கூட்டம்’

போதை பொருள், தற்கொலை தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு வகுப்பில் அவியை சந்தித்திருந்தாலும் எனக்கென்னவோ சிறுவயது முதல் அவள் என்னைக் கண்காணித்து வருபவள் போலத் தோன்றும். மானிட்டர் செய்யும் செயலி இல்லாவிட்டாலும் முன்னொரு காலத்தில் சொல்லப்படும் உயிர்த்தோழி எனும் பாத்திரத்துக்கு ஏற்றவள். ஆனால் அவளிடம் என் அப்பா, தாத்தா பற்றியெல்லாம் முழுவதுமாகச் சொன்னதில்லை.

‘…வரட்டுமா?’

‘ஆங். என்ன சொன்னெ?’

‘மறுபடியுமா, வீட்டுக்கு வரட்டுமா?’

‘இல்லை வேணாம். நானே பார்த்துக்கிறேன்’, மேற்கொண்டு எதுவும் கேட்பதற்கு முன் இணைப்பைத் துண்டித்து ஹைவே கூட்டத்தோடு கலந்தேன்.

இது எல்லாருக்கும் கிடைக்கும் வாய்ப்பல்ல என்று தான் ஆரம்பகாலத்தில் சொல்லப்பட்டது. அரசை பாதித்த யுத்தங்கள் மட்டுமல்லாது, உள்நாட்டு கலவரங்கள், சில அரசுகளின் முற்றதிகாரம், அதிகாரத்தால் விளைந்த வன்முறை போன்றவற்றால் மக்கள் எழுச்சி உச்சத்தை அடைந்த காலம். கண்ட அரசுக்குழுவினரின் குளிர் காலக்கூட்டத்தொடரில் அதிஜனநாயகம் எனும் வழிமுறை முன்வைக்கப்பட்டது. அப்போது அது எல்லாராலும் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. எனக்கே சிறுவயதில் அதிநாயக விதிமுறைகள் பதியப்பட்ட தகவல்களை தொலைக்காட்சியில் பார்த்த நினைவு உள்ளது. பள்ளிக்குச் செல்லும் வழியெங்கும் அங்கங்கே நடக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகள் என அதிஜனநாயகம் உருவாக்கிய விதிகள் கொண்டு விளக்கப்பட்டன. இந்த அறிக்கையின் ஒரே வேண்டுகோள் என்பது மக்கள் தவறாது அதிஜனநாயக அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. அக்கூடுகையில் நடப்பன குறித்து வெளியே ஏதும் சொல்லாமல் இருப்பது கூடுதல் விதியாக மாறியது.

ஹைவேயின் ஒவ்வொரு இண்டு இடிக்கிலிருந்தும் கண்கள் என்னையே பார்ப்பது போல பிரமை. கூட்ட நெரிசலில் கன்வேயர் பலகையில் செல்லும் இளைஞர்கள் கூச்சலிட்டபடி பறக்கின்றனர். புதுவித கன்வேயர் பலகை விற்பனைக்கு வந்து சில நாட்களே ஆகியிருந்தன. கால்களை நீளவாக்கில் பதிந்து பனிச்சறுக்கில் செல்வது போல காற்றில் சில அடி உயரத்தில் பறந்தபடி அவர்கள் விரைந்துகொண்டிருந்தனர். பலகையின் கீழ்ப்பகுதியில் சீன மொழியில் குறிப்புகள். வாகன நெரிசல்களைத் தவிர்க்க சீன நிலத்திலிருந்து வரும் புதுவகை எந்திரங்கள் கூடியவிரையில் வானத்தையும் நிரப்பிவிடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. ஒருவித கசப்பு உடனடியாக என்னுள் பரவியது. எவ்விதமான கட்டுப்பாடுமன்றி நகரங்கள் நெரிசலில் நசுங்குவதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாகவும் இருந்தது. இவை எதையும் என்னால் வெறுக்காமல் கடக்க முடியவில்லை. என்னில் ஒரு சிறு பங்கு இங்கு எல்லாவற்றிலும் இருக்கிறது என்றாலும், இது மெல்ல மெல்ல சாவை நோக்கி நகரத்தைத் தள்ளுவது நானே உடைவது போலிருக்கு.

‘லயா, உனக்குத் தேவையான பாதுகாப்பை எங்களால் வழங்க முடியும். அடுத்த ஒரு மணி நேரத்தில். உடனடியாக இந்த எண்ணைத் தொடர்பு கொள்’ – என் கண்ணாடியின் வலது மூலையில் சிறு கட்டத்தில் எழுத்துகள் தோன்றின. யார் இவர்கள்? எனக்கு அரசிடமிருந்து அழைப்பு வந்திருப்பதை எப்படி உடனடியாகத் தெரிந்துகொண்டார்கள். என் அதிர்ச்சியை அதிகரித்துக்கொண்டு அவிக்கு மீண்டுமொரு எஸ் ஓ எஸ் கொடுக்க விரும்பவில்லை. நிதானமாக அச்செய்தியை நிரந்தரமாக அழித்தேன். தேவைக்கு ஏற்ற சம்பாத்தியம் உண்டு, அதிக ஆசையில்லா வாழ்வு, உனவும், உறக்கமும், கனவும் தேவையானளவு உண்டு. இந்தத் தேவையில்லாத அதிஜனநாயக அழைப்பு எந்த நிம்மதியைக் குலைக்க எந்த ஊழியன் அனுப்பியது?

மீண்டும் வேறொரு எண்ணிலிருந்து புதுவித செய்தி. ஆனால் அதே அடைக்கலம். இந்த முறை கடல் பயணம். முழுமையாக இணையத்திலிருந்து துண்டிக்கவும், அதிஜனநாயக கோப்பிலிருந்து என் அழைப்பை நிரந்தரமாக அழிக்கவும் ஒரு குறிப்பிட்ட சைபர் காயின் ரொக்கமாகக் கேட்டிருந்தார்கள். இவர்களையெல்லாம் அரசு கண்காணிக்காது என எனக்குத் தெரியும். புற்றீசல் போல பல வடிவங்களில் இவர்கள் அரசு இயந்திரந்துக்கு இணையாக உருவானவர்கள். கொத்தர்களால் ஒரு நிலத்தடி உலகத்தையே உருவாக்கி வைத்திருப்பவர்கள். செய்தியாக சில பைட்டுகள் அவர்களோடு ஒட்டுறவு வைத்திருப்பதே பாவம்.

அதிவேக பாதைக்கு என் வண்டியைத் திருப்பினேன். நான்கு கேமிராக்களில் பதிவாகிருப்பேன் என்றாலும் மாதக்கடைசியில் வரும் பயணவரி ரெட்டிப்பாகியிருக்கும். இப்போதைக்கு அதை யோசிக்க முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடடைய வேண்டும். அடுத்த சில நாட்கள் இணையத்தொடர்பில் இல்லாதவண்ணம் மையத்தொடர்பு திட்டங்களில் என்னால் பாதிப்பு இல்லாத வண்ணம் வேலையை முடிக்க வேண்டும். அதிஜனநாயக ஊர்திக்காகக் காத்திருக்க வேண்டும். இடையே முடிந்தால் காஸ்மோவுடன் விளையாட வேண்டும்.

கதவைத் திறக்கவோ உடைக்கவோ முடியாது எனும் கையாலாகாத நிலையில் கிட்டத்தட்ட மூக்கை கதவுக்கு மறுபக்கம் வைத்தபடி காஸ்மோ காத்திருந்தது. என் வாகனம் ஹைவேயைத் தாண்டியதுமே அது கதவுக்கு அருகே வந்திருக்கும். நான் அடுத்த மூன்று நாட்கள் இருக்க மாட்டேன் என்பதைக் கூட மோப்பம் பிடித்திருக்கும். உடனடியாக செய்ய வேண்டியவை என ஒரு வரிசை இருந்தது – நீர் சுழற்சிக்காகப்பதியப்பட்ட இரு குழாய்களை மூடும் தகவல்களை சுவரில் மாட்டியிருந்த பொத்தான்வழியாக அனுப்பினேன், கூரைக்கு மேலிருந்த தொடர்புச் சாதனங்களை உள்ளுடுக்கும்படியாகச் செய்தேன் – ரெண்டும் என் இருப்பிடத்தை ஒரு ஓடு போல மாற்றிவிடும். காற்று கூட நுழைமுடியாதபடிக்கு பூட்டிக்கொள்ளும்படியாக ப்ரொக்ராம் செய்திருந்தேன்.

சில நிமிடங்கள் என் அறையில் உட்கார்ந்திருந்தேன். சூடாக ஒரு கோகா நீரைக் குடித்தேன். பயம் மொத்தத்தையும் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டதா? இல்லை இப்படி ஆமை ஓட்டுக்குள் முடங்குவது போல கிடப்பது என் பயத்தை நேரடியாக சந்திக்கத் துணியாத கையாலாகாத்தனமா? இந்த பயமெல்லாம் என் கற்பனை மட்டுமே. அதி ஜனநாயகம் என்பது ஆசியாவில் மட்டுமல்ல பல கண்டங்குழுவிலும் செயப்படுத்தப்படும் முயற்சி தான். அரசின் சட்டதிட்டங்கள் விண்ணிலிருந்து முளைத்தவை அல்ல. பத்து நீதிமான்கள் மட்டுமே உருவாக்கிய சட்டங்களுக்குக் கட்டுப்படும் மனிதச்சமூகமல்ல நாம் எனும் கோஷத்தையெல்லாம் பிளந்துகொண்டு உருவான அதி ஜனநாயாகம். ஒவ்வொரு தனி மனிதன் கையிலும் சட்டத்தின் பிடி சற்று உள்ளது. ஒவ்வொரு மனித உயிரும் சட்டத்தை உருவாக்குவதிலும் தடை போடுவதிலும் பங்கு பெறமுடியும் எனும் பேராற்றம். இது எத்தனை பெரிய முன்னகர்வு? இதன் உண்மைத்தன்மையை நுகர்ந்து பார்க்கும் சாத்தியத்தை சந்திக்க அல்லவா பயந்து ஓடுகிறாய்? செய்துபார் என்ன நடந்துவிடும்? ஒரு புது சட்டத்தை நிலைநாட்டிட உனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பல்லவா?

அதி ஜனநாயகத்தின் உண்மைத்தன்மை அறிய எனக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்த இயக்கத்துள் பூரணமாக இயங்க வேண்டும். என் முழு கவனமும் இதற்குள் இணைய வேண்டும். இந்த அழைப்பை ஏற்கத்தீர்மானித்தேன். என் நடுங்கும் விரல்கள் தன்னிச்சையாக இயங்குவது போல இருந்தது. மெல்ல எனக்கு அளிக்கப்பட்ட எண்ணுக்கு என் ஒப்புதலை அளித்தேன். முழு இருளின் உட்கார்ந்து காத்திருக்கத் தொடங்கினேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அரசு ஸ்கைவே ஊர்த்தி வந்துவிடும். இதுவரை பார்த்திராத நிலத்திலிருந்து ஒரு அழைப்பு. முழுவதும் பிற மனிதர்களோடு தொடர்பற்ற மூன்று நாட்கள்.

சட்டென என் கையிலிருந்த தொலைப்பேசி சில பக்கங்கள் தகவல்களாக வந்ததற்கான அதிர்வை ஏற்படுத்தியது. என்னுடன் வரப்போகும் மூவர் குழுவைப்பற்றிய தகவல். முதலானவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். அவரது பெயர் மாற்றப்பட்டு சிறு குறிப்புடன் வந்திருந்தது. வரலாற்றாசிரியர். சரியானத்தேர்வு தான் என எனக்குள் சிரித்துக்கொன்டேன். வரலாறு என்பது சட்டங்கள் எனும் காற்றால் குடையப்படும் மலைப்பாறைகள் எனும் எண்ணம் இருக்கும் அரசின் அமைப்புக்குள் ஏதேனும் ஒரு கரி நகைச்சுவைக்காரர் இவரை அனுப்பி இருக்க வேண்டும்.

அடுத்தவர் ஒரு செவிலி. குழந்தை பாதுகாப்புத்துறை மருத்துவமனையில் வேலை செய்பவர். அடுத்தவர் என்னைப் போல கம்பியூட்டர் விஞ்ஞானி. ஓரளவு நாங்கள் செல்லபோகும் சர்க்கிள் எனப்படும் மையத்தின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளக்கூடிவராக இவர் இருக்கலாம். இவரோடு இணைந்து அந்த மைய கட்டுப்பாட்டு அறையை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்றெல்லாம் ஒரு நொடியில் கற்பனை செய்தேன்.

என்னுடய பயணம் பற்றிய கற்பனை இருந்தாலும், முன்பொரு நாளில் நான் எழுதிய ஒரு கதை நினைவில் எழுந்தது. லாரன்ஸ் ஆஃப் அரேபிய நிலப்பகுதி போல மலை மலையாக மண். நானும் என் குடும்பமும் செய்த நீண்ட பயணம் பற்றிய கற்பனைக்கதை. என்னுடைய இன்றைய பயணத்தை முன்கூட்டியே தீர்மானித்தது போலொரு உணர்வு எழுந்தது.

என் ஒன்பது வயதில் ஒரு நீலம் பிரியாத காலைப்பொழுதில் வான்குடி பகுதிக்கு அப்பாவுடன் சென்றேன். அதற்கு முன்தினம் முழுவதும் வழுக்குப்பாறைகள் தாண்டி பயணம் செய்து வந்திருந்தோம். கடுமையான உடல்வலி. விழிகளை முழுவதுமாகத் திறக்க முடியவில்லை. முதல்முறை வான்குடி கிழக்கு வாசலுக்குள் நுழையப்போகிறோம்; கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்வரை இது சாத்தியமில்லாத பயணம். பாசியும் நுரையும் மிதமிஞ்சிய வழுக்குப்பாறை பகுதிகள் முழுவதும் தீக்கிரை ஆனது போல மர வண்டல்கள் நிரம்பியிருந்தன.

வழி நெடுக நான் அப்பாவை எதுவும் கேட்கவில்லை. அவரது முகத்தில் தெரிந்த கடுமை நான் முன்னெப்போதும் பார்த்திராதது.

அம்மா எப்போதும்போல சகஜமாக எங்களுடன் வந்தாள்.

`இனி நாம பயமில்லாம வான்குடிகள் எல்லைக்கு வரலாம் இல்லியா?`, என்னைப் பார்த்துக் கேட்டாள்.

பச்சை நிற மலைச்சரிவில் ஆங்காங்கு தெரிந்த கரிய தரைப்பகுதியைப் பார்த்தபடி மையமாகத் தலையாட்டினேன்.

`ஏன் பயமில்லை சொல்லு?`

`அவங்களை நாம அழிச்சிட்டோம்`, கிளம்பும்போது பலமுறை என்னிடம் சொல்லப்பட்ட பதிலை நான் முடிப்பதற்குள் அவசர அவசரமாக மறுத்தாள்.

`இல்லை. நம்முடைய நிலங்களை மீட்டுவிட்டோம்.`, சிறிது இடைவெளிக்குப் பின்னர், `அது தான் உண்மை`, என்றாள்.

நான் அப்பாவின் முகத்தை ஒரு முறை பார்த்தேன். இறுகிய மண் போல அவரது முகத்திலிருந்து எந்தவித உணர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

`சரி, உன்னுடைய அப்பா என்ன தொழில் செய்பவர் சொல்லு?`

அம்மோம்மா பலமுறை நினைவூட்டியதுதான், `மண்குடி பொதுநலத் தாதன். மூத்தகுடி ஆயியான நமது தாய் அரியின் மருத்துவன்`

அம்மா முகத்தில் பெருமிதம் வழிந்தது. இதைச் சொல்லிக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மயிற்கூசும்படியான கர்வம் அவளிடம் குவியும்.

நேற்று நடந்து வந்த பாதையிலிருந்து இந்த நிலம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சதுப்பு நிலப்பகுதி. கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நடந்த சண்டையின் அழிவுகள் ஆங்காங்கு தெரிந்தன.

‘ஆறாவது சுழற்சி முடிவடையும் நிமித்தங்கள் எழும்பிவிட்டன. இனி வான்குடி அழியும்; விண்ணேறி சரியும்; காலம் திசையறியும்’, அவள் மனதில் எழுந்த பூரிப்பின் வீச்சு கண்களில் பளபளத்தது.

சற்று தொலைவில் கழிவுகளையும் குரேம்பாக்களையும் அடித்துசென்றபடி நதி ஓட்டம் தெரிந்தது. ஊதா நிற இறகுகள் கொண்ட கழுகுகள் நிழலற்ற நதி வண்டலில் இறங்கின.

`விலங்குகளைப் பார்த்து சத்தம்போடக்கூடாது, சொன்னது நினைப்பிருக்கு இல்லியா?`

மையமாகத் தலையாட்டினேன்.

என் காலில் முதலில் சதுப்பில் நடப்பது போன்றதொரு உணர்வை அடைந்தேன். அழுத்தமாகக் காலைப் பதியவைத்ததும் ஒரு கட்டத்தில் தரையில் திடமாகப் பதிந்தன. அதிகப்படியான வெளிச்சமும் காற்றும் என் முன்னே இருந்த கட்டிடத்தின் பெரிய அளவை மறைத்தது. சற்று நிதானத்துக்கு வந்ததும் என் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த இருவரை கவனித்தேன்.

‘உள்ளே போனதும் ஒரு எஸ்கலேட்டர் உங்களை ஹாலுக்கு அழைத்துச் செல்லும். தயவு செய்து அருகிலிருக்கும் கம்பிகளைப் பிடித்துக்கொள்ளவும்’ என ஒருவரது குரல் கேட்டது.

‘ஆபிசர், நான் இங்கு சில நொடிகள் இருந்தபடி வீடியோக்களில் மட்டுமே பார்த்திருந்த இந்த கட்டிடத்தைப் பார்க்கலாமா?’ என நான் சற்று அதிக உரிமை எடுத்துக் கேட்டேன்.

மையமாகத்தலையாட்டியவர், ‘ வேறொரு சமயம் உங்களுக்கு அளிக்கப்படும். இப்போதைக்கு நீதிபதிகள் தங்களுக்காகக் காத்திருக்கின்றனர்’ என நெட்டித்தள்ளாத குறையாக எங்கள் மூவரையும் எஸ்கலேட்டரில் ஏற்றிவிட்டார்.

சிறு உதறலுடன் எங்கள் ஊர்த்தி கிளம்பியது. எஸ்கலேட்டர் எனப் பெயரிட்டாலும் இது ஒரு சிறிய மின் தூக்கி போன்ற உலோகமாகக் காட்சியளித்தது.

தாளக்கருவியைப் போல இயந்திரச்சத்தத்துடன் கிளம்பியது. வெளியே தெரிந்த வானம் எனக்கு அன்றாடம் பழக்கமான ஒன்றானதல்ல. ஜன்னல் வழியே தெரிந்த எதுவுமே உண்மையல்ல எனும் எண்ணம் மட்டுமே இருந்தது. ஒரு கணிணி விளையாட்டுக்குள் இருப்பது போலத் தோன்றியது. என் வீடும், அலுவலகமும், பயணம் செய்யும் ரோடும் உண்மையானதா என்ன? எப்படித் தெரியும்?

‘ஹலோ’ என்ற குரல் கேட்டதும் கேப்ஸிலுக்குள் இருந்தவர்களை கவனித்தேன். எஞ்சினின் சத்தம் மிதமானதாக மாறியிருந்தது. கேப்சூலில் இருந்த ஸ்பீக்கரிலிருந்து மெல்லிய வாத்திய சத்தம் கேட்டது.

‘ஹலோ, என் பெயர் கமால். ஹெதர்டர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். வரலாறு என் ஸ்பெஷாலிட்டி’ என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

‘என் பெயர் ரேவா. சாரி ஜாவி. ப்ரொக்ராமர்’, ஒரு நொடியில் தவறிழைத்ததை உணர்ந்து கடிந்துகொண்டேன்

‘நான் மரி. ஹெமலில் நர்ஸாக இருக்கேன். ரொம்பவுமே உதறலாக இருக்கு. இதுதான் எனக்கு முதல் முறை’, என்றால் அந்த அழகானவள்.

அவள் உயரமும். அகலமான நெற்றியும் அழகு என்பதற்கான அடையாளங்களாக நான் வரித்துக்கொண்டவை. அவள் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

காற்றின் கனம் கூடியது போலிருந்தது. சற்று ஆழ மூச்சை இழுத்துக்கொன்டேன். இவர்களுடன் அடுத்த மூன்று நாட்கள். தனிமை நிச்சயம் இருக்காது, ஆசுவாசமும் நிம்மதியும் இருக்குமா எனத் தெரியவில்லை. கமாலின் பூட்ஸ் கால்கள் தரையைத் தேய்த்தபடி இருக்க, மரி தன் நீண்ட நகங்களாக் கேப்சூலின் கைப்பிடிகளில் தட்டிக்கொண்டிருந்தாள்.

திடுமென ஒரு பள்ளத்துக்குள் பாய்வது போல வயிற்றில் ஒரு மிதவை எழுந்து அமர்ந்தது.

‘இன்னும் எவ்வளவு நேரம்?’ என்னையறியாமல் கேட்டேன்.

‘இது ஆசியஸ்டார் அல்ல. ரெண்டு நிமிடங்களில் நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும்.’ , ஒன்றும் அறியாத குழந்தையிடம் சொல்வது போன்ற தோரணையில் சிரித்தபடி கூறினான். அதே நேரத்தில் கேப்சூலின் அறிவிப்பு அடுத்த ரெண்டு நிமிடத்தில் இறங்க வேண்டும் எனச் சொன்னது. ஆபிசரின் உணர்ச்சியற்ற முகத்தையும் மீறி ஒரு வித கிண்டல் சிரிப்பு தெரிந்ததைப் பார்த்ததும் ஏன் இப்படி ஒன்னும் தெரியாதவள் போல எதையாவது கேட்டபடி வருகிறேன் என வெட்கமாக இருந்தது.

தொடரும்

அதிஜனநாயகம்

அதிஜனநாயகம் -2

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.