- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
தான் மிகவும் விரும்பியிருந்த சில பொருட்கள் எதிர் பாராமல் சுலபமாக கிடைத்தால், எப்படி இருக்கும். அரிய பொருட்கள், விரும்பிய பதவிகள் தெய்வங்களில் அருளால் தகுதியானவர்களூக்கு கிடைத்து விட்டால் அதற்கு ஈடு இல்லை. சுற்றிலும் அறிஞர்களே இருந்து காட்டிய நல் வழிகளில் ஆட்சி செய்த அரசன். அதே போல எதிர்பாராமல் வந்த நெருங்கிய உறவினரின் துக்க கரமான செய்தியையும் அறிந்தான். அந்த அரசன் மகா ரத்தினங்கள் தன் கைக்கு கிடைத்திருந்ததை எப்படி அனுபவிப்பான்.
சகோதரியைத் தேடி விந்த்ய மலை வந்த அரசன் அந்த வன வாசிகளுடனேயே அந்த இரவைக் கழித்தான். மறு நாள் விடிந்தவுடன் கிராமங்களைக் கடந்து வனத்தின் உள் பகுதிக்குச் சென்றான்.
புது நிலப் பகுதி. அடர்ந்த காடுகளை அறியாதவன். ஆனாலும், மனம் சகோதரியை தேடும் ஒரே நினைவுடன் இருந்ததால், பல நாட்கள் அங்கேயே சுற்றி வந்தான். ஒரு நாள் அந்த வனத்தின் தலைவனைக் கண்டான். அவன் பெயர் சரபகேது என்பவரின் மகன் வியாக்ர கேது என்று அறிந்தான். அருகில் ஒர் சிறுவன். ஒரு நிமிடம் அவனையும் தன்னையும் அரசன் ஒப்பிட்டு பார்த்து கொண்டான் போல இருந்தது.
தன்னைப் போலவே உயர் மணிகள் பதித்தை மகுடம் என்ற இடத்தில், கரு மேகம் போன்ற கேசத்தைத் தூக்கிக் கட்டி, பழுப்பு நிறத்தில் கொடிகளால் சுற்றிக் கட்டிய மகுடத்தை அணிந்திருந்தான். தலையில் நெற்றிக்கு மேல் உயரமாக அந்த மகுடம் தெரிந்தது. அடர்ந்த காட்டில் ஏற்கனவே இருந்த அந்தகாரம், அதைக் கூட்டுவது போலவும், முகத்தில் மூன்று கோடுகளாகத் தெரிந்த புருவமும், பிரியங்கு என்ற தாவரத்தால் ஆன தலை மகுடமும் இருந்தன. அருகில் ஒரு வேடர் குல சிறுவன், இருட்டில் நன்றாக கண்களுக்கு புலப்படாதவற்றை காண வளைந்த புருவங்கள் வளைந்தே நின்று விட்டன போலும். காதுகளில் பறவை இறகைச் செருகிக் கொண்டிருந்தான். கிளியின் பச்சை நிற இறகுகளையும் அலங்காரமாக அணிந்திருந்தான். அவன் காதுகளில் ஒளி வீசும் கல் (கண்ணாடிக் கல் அல்லது காக்கா பொன் எனும் பொருள்) காதணியாக ஒளி வீசியதில் இந்த கிளியின் இறக்கைகளின் பசுமை ரசிக்கத் தகுந்ததாக இருந்ததாம். . கண்களின் சிவப்பு இயல்பாகவே காட்டுப் புலியின் உதிரம் போல இருந்ததாம். வளைந்த நாசி நுனியும், முகத்தின் நரம்புகள் புடைத்து நின்று கன்னங்களை மறைத்து விட்டன போலவும், சிறிய முகவாய் கழுத்தில் தொங்குவது போல தெரிந்ததாம். சுருங்கிய தோள் பட்டைகள். விசாலமான மார்பு பிரதேசம் தன் வில்லை வைத்து பயிற்சி செய்தால் உரமேறி இருந்ததாம். அஜகர சர்ப்பங்கள் (மலைப் பாம்புகள் – அசையாமல் கிடப்பவை) போன்ற நீண்ட கைகள். இவைகளைக் காண விந்த்ய மலையில் அகன்ற பிரதேசங்களும், இமய மலையின் சால மரங்களின் உயரமும் ஒன்று சேர காண்பது போல இருந்ததாம். பாரம் தூக்கி ஒரு பக்கம் தோளே இறங்கி விட்டது போலும். கையிடுக்கில் பன்றியின் ரோமத்தால் ஆன நாக தமன என்ற பாம்பின் விஷத்தை முறியடிக்கும் வேரை சுருளாக, கொத்தாக வைத்திருந்தான். கோதந்தி என்ற வகை பாம்பின் உருவத்தை கொண்ட வளையம் ஒரு புஜத்தில் அலங்காரமாக அணிந்திருந்தான். சிறுத்த இடையில் அஹீர என்ற பாம்பு உறித்து போட்ட சட்டையை இடுப்பு பட்டையாக அணிந்திருந்தான். அதிலும் சிறுத்தை புலியின் தோலால் – இதுவும் நாக விஷத்தை முறிக்கும் மருந்தாக இருந்ததாம்- செருகி இருந்தான். அந்த சிறுத்தையின் தோல் இயல்பாகவே சிவந்த புள்ளிகளுடன் கூடியது அந்த இருண்ட பிரதேசத்திலும் புலனாகியது. மான் தோல் ஆடை, அதில் தன் ஆயுதமான கடாரி- கடப்பாரையை செருகி இருந்தான். அதன் பிடி ஏதோ ஒரு மிருகத்தின் கொம்பைச் சீவி பள பளக்க செய்யப் பட்டிருந்தது. அவன் இள வயதைக் குறிப்பது போல இடுப்பின் கீழ் பாகம் உருண்டு திரணடு தசைகளால் நிரம்பி இருந்தது. வளர வளர தசைகள் இறுகி கால்களில் இறங்கி அவன் உயரம் அதிகரிக்கும். முதுகில் தொங்கிய ஆயுதங்கள் வைக்கும் பை போல ஒன்று அதில் கத்தி மற்றும் சிறு ஆயுதங்களை வைத்திருந்தான்.. உடலில் ரோமம் அடர்ந்தும் அதை மறைக்க பறவைகளின் இறகுகளால் மேல் துண்டு போல போட்டிருந்தான். மயில் இறகின் நடுத் தண்டில் மலர்களை குத்தி வைத்து இடது தோளில் வில்லை வைத்திருந்தான். வேடன் என்பதன் அடையாளங்கள். அரசனைக் கண்டதும் தன் ஆயுதங்களை கிழே வைத்து விட்டு அருகில் வந்து, ‘தேவ! இந்த விந்த்ய மலை பிரதேசம் அனைத்திற்கும் தலவனாக, சர்வபள்ளீ என்பவர்கள். அவர்களில் பலர் இருந்தும் தலைவனாக இருப்பவர், வேடர் குல தலைவன் பூகம்பன் என்பவர். அவர் இந்த விந்த்ய மலைக் காட்டின் ஒவ்வொரு இலை தழைகளையும் கூட அறிவார். அவரைப் போல இந்த ப்ரதேசங்களைப் பற்றி அறிந்தவர் வேறு எவருமில்லை. அவரை விசாரியுங்கள். எனக்கு கட்டளையிடுங்கள். எதுவானாலும் நான் செய்யக் கூடியவனே. ‘ இவ்வாறு சொன்னவன் பூமியில் தலை வைத்து வணங்கினான். தான் வேட்டையாடிய முயல்களை அன்பளிப்பாக அளித்தான். இதற்குள் அவனை தனக்குள் மதிப்பிட்டுக் கொண்ட அரசன், சிரித்துக் கொண்டே விசாரித்தான்.’ அங்க! இந்த இடங்களை அறிந்தவர்கள் நீங்கள். இந்த இடங்களில் நடமாடி அனேக விஷயங்களை அறிந்திருக்கிறீர்கள். விளையாட்டாகவே சுய முயற்சியில் பல விவரங்களை அறிந்தவர்கள் நீங்கள். ஒரு பெண், அவளுடைய சேனாபதியுடனோ, மற்ற சாதாரண அரண்மனை ஊழியனுடனோ, இந்த பக்கம் வந்தாளா, தெரியுமா? அழகியான ராஜகுமாரி அவள். அவளைக் கண்டீர்களா? ‘

வேடச்சிறுவன், அரசனே தன்னிடம் பேசியதால் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டான். தன் மதிப்பு கூடி விட்டதாக நினைத்தான். மிகவும் மரியாதையுடன், தான் அறிந்ததைச் சொன்னான். ‘தேவ! எங்கள் தலைவன் அறியாமல் ஒரு புள்ளி மான் கூட இந்த காட்டில் சஞ்சரிக்காது. பெண் ஒருவள் வந்தாள் என்றால் அவருக்குத் தெரியாமல் இருக்காது. நீங்கள் சொல்வது போல ராஜகுமாரி என்றால் தெரியாத இடம் வந்து விட்டோம் என்று பயப்படும் சாதாரண பெண்மணி அல்ல. இருந்தாலும் தேவன் சொல்வதால் மற்ற வேலைகளை கை விட்டு தேடுவதில் நாங்களும் உடன் வருகிறோம். கவ்யூதி – தூரத்தை அளக்கும் ஒரு அளவு (பதப் பொருள்: பசுக்களின் கூட்டம் செல்லும் அளவு- கிட்டத்தட்ட இரண்டு மைல்) அதில் பாதி – ஒரு மைல் தூரத்தில், திவாகர மித்ரன் என்ற பாராசாரி- முனிவர் இருக்கிறார். அவர் பெரிய மரங்கள் நிறைந்த இடத்தில் இருப்பிடம் அமைத்துக் கொண்டு பல சீடர்களுடன் வசிக்கிறார். பிக்ஷு- அருகில் கிரி என்ற நதி ஓடுகிறது. அவரை விசாரிக்கலாம். ஒரு வேளை அவர் அறிந்திருக்கக் கூடும். அரசன் சற்று யோசித்து விட்டு ‘நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். சுவர்கம் சென்று விட்ட பிரபலமான அரசன் க்ருஹ வர்மாவின் இளம் வயது தோழன், மைத்ராயணீ சாகா- (வேத பாடத்தில் ஒரு பிரிவு. அதில் சிறப்பாக பயின்றவர்) வேத சாஸ்திரங்களின் நியமங்களை அனுசரித்து வாழும் சிறந்த அந்தணர். மன அடக்கம் உடையவர். யோக முறைகளை பயின்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டவர். புத்த மதத்தில் சேர்ந்து காவி வஸ்திரம் அணிந்து விட்டதாக கேள்வி. “ பழைய சகா என்பதால் எனக்கும் மனதில் ஒரு நம்பிக்கை தோன்றுகிறது. சாதாரண மக்களே, தன்னை அறிந்தவர்கள் கஷ்டப் படுகிறார்கள் என்றால் உதவுவர். அதனால் நிச்சயம் இவரைக் கண்டால் ஏதாவது விவரங்கள் தெரியலாம். இந்த சமயத்தில் உதவ தயங்க மாட்டார்கள். இவர் வித்வான், துறவி, இவர் சந்தித்திருந்தால் நிச்சயம் உதவி இருப்பார். எதிர் பாராமல் உதவி எங்கிருந்தும் வரலாம் – போய் பார்ப்போமே. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பது பழமொழி. -இவ்வாறு மனதில் நினைத்தவன், வேடச் சிறுவனைப் பார்த்து, அங்க! எனக்கு அவர் இருக்கும் இடத்தைக் காட்டுகிறாயா? என்றான். அவனும் மகிழ்ச்சியுடன் வழி காட்ட, பின்னாலேயே சென்றான்.
அவ்வாறு செல்லும் பொழுது, பல வகையான மரங்கள், கர்ணிகார பூவும், மொட்டுகளுமாக நிறைந்து இருந்த மரங்கள், சம்பக மரங்கள், நாவல் மரங்கள்-பழங்கள் நிறைந்து காணப்பட்டன. இடையிடையே பழங்கள் இல்லாத பெரிய இலைகளைக் கொண்ட மரங்கள், சல்லகி- சாம்பிராணி மரங்கள், பல தென்னை மரங்கள், காணப்பட்டன. நாக கேசரம்- நாகப்பூ, நாகவல்லி மரங்கள். பொதுவான சாரல், ஹரி கேஸர போன்ற சில மரங்கள், குரவக- கொண்டைப்பூ வகை மரங்கள், கொத்தாக பூப்பவை, (முடி தும்பை ) ரக்தாசோகம் என்ற சிவந்த மலர்களைக் கொண்ட அசோக மரம், திசைகளை தன் பூக்களின் வர்ணத்தால் சிவக்க அடித்திருந்தது போல இருந்தனவாம். திலக என்ற வகை மரங்களின் பூ, ஏராளமான மகரந்தங்களை உதிர்த்துக் கொண்டிருந்தன. இந்த மலர்களின் மகரந்தம் பரவி காற்றில் கலந்து பரவின.
அந்த மன நிலையிலும் அரசன் ஹர்ஷன் இந்த தாவரங்களைப் பார்த்தும் முகம் மலர்ந்தான். அழகான காட்டு மரங்கள் என்று வியந்தான். மேலும் செல்லச் செல்ல இங்குதி மரங்கள், பாக்கு மரங்கள், பிரியங்கு என்ற வகை மரங்கள்,(இதன் மலர்கள் நீல வண்ணமுடியவை) வாசனை மிகுந்த மஞ்சரீ என்ற மலர்கள் சொரிந்து நின்ற மரங்கள், அந்த மலர்களில் தேன் வண்டுகள் மொய்த்தன, முசுகுந்த என்ற மரங்களின் மணம் யானைகளுக்கு பிடிக்குமாம். கவலையின்றி அவை கூட்டமாக வந்து தங்கள் மத ஜலம் பெருக தங்கள் தலையை அதில் உரசி தினவை தீர்த்துக் கொள்ளுமாம். நடு நடுவில் வில்வ மரங்கள், பலா மரங்கள். கிளிகள் அந்த பழங்களைக் கொத்தி தின்றன.
புல்வெளிகள் பசுமையாக இருந்தன. மான் குட்டிகள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. பசுமையான இலைகள் நிறைந்த மரங்களின் நிழலில், தேவ தாரு மரங்களின் அடர்ந்த கிளைகளில், செடிகளும் கொடிகளும் புதராக படர்ந்திருக்க, கதம்பங்களும், மர மல்லிகையும் மற்ற மலர்களும் மணம் வீசி அந்த பிரதேசமே மணத்தது. மரங்களில் பொந்துகளில் இருந்து எட்டிப் பார்த்த சிறு பறவைக் குஞ்சுகள் சு சு என்று கூவியதையும் ரசித்து பார்த்தான். பறவைகள் சுறு சுறுப்பாக பறந்து கொண்டிருந்தன. குஞ்சுகளுக்கு ஊட்டும் தாய் பறவைகள், சகோரங்கள் என்று பல விதமான பறவைகள் சட ச ட வென்று இறக்கைகள் ஒலியிட பறந்தன. சற்று தூரத்தில் கொட்டிக் கொண்டிருந்த அருவியின் ஒலியுடன் யானைகளின் பிளிறலும் கேட்டது. ரூரு என்ற வகை மான்கள், எங்கிருந்தோ வந்த இசையைக் கேட்டு மயங்கி நின்றன. காட்டுப் பன்றிகள் குட்டிகளோடு பூமியைக் குடைந்து கொண்டிருந்தன. மலையின் ஈரமான தரையில் சுகமாக முயல் குட்டிகள் தூங்கிக் கொண்டிருந்தன. பவழமல்லி, காசி போன்ற மரங்களின் பொந்துகளில் கௌதாரிகள் கூடு கட்டிக் கொண்டிருந்தன. ரங்கு என்ற ஒரு மிருகம் பயமின்றி சுற்றியது. குள்ள நரிகள் கவலையின்றி தங்களுக்குள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. . குயில்கள் இளம் துளிர்களை விழுங்கிக் கொண்டிருந்தன. மாமரங்களில் சமர என்ற ஜோடி பறவைகள் நீல நிறமான முட்டைகளை இட்டு அடை காத்துக் கொண்டிருந்தன. ஓனாய்களும், காட்டுப் பசுக்களும், காளைகளும், சுற்றிக் கொண்டிருந்தன. அருவிகளின் அருகில் இவைகள் கூட்டமாக சென்று தாகம் தீர்த்துக் கொண்டன போலும். எங்கிருந்தோ ஜாதிக்காய் மணம் வந்தது. குரங்களின் குட்டிகள் ஒன்றையொன்று கடித்து சண்டையிட்டன. கோலாங்கூலங்கள் எனப்படும் மிருக விசேஷங்கள், தாண்டி தாவி குதித்துக் கொண்டிருந்தன. இடையிடையே கரடிகளும் தென் பட்டன. சிறிது தூரம் சென்றதும், லதா மண்டபங்களில் பிக்ஷா பாத்திரங்கள் மாட்டப் பட்டிருந்தன. மண்ணின் தன்மையே சற்று மிருதுவாகி விட்டது போல தெரிந்தது. அருகில் தான் பிக்ஷுவின் குடில் என்று எண்ண வைத்தது. காவி நிற துணிகள் துவைக்கப் பட்டு உலர மாட்டப் பட்டிருந்தன. பெரிய விசாலமான மரங்கள். மயில்கள் அங்கு வசதியாக வாழ்ந்தன போலும். வேதங்களின் சாகைகள் போல அந்த மரங்களிலும் அனேக கிளைகள் இருந்தன. சில மான்கள் மகா மணி போல நீல நிறமாக இருந்தன. அவை விந்தய மலையின் சிறப்பு என்று அரசன் மனதில் எண்ணிக் கொண்டான். க்ருணாஜினம் என்று அதன் தோலை முனிவர்கள் பயன் படுத்துவர். இந்திர நீலம் போன்ற வர்ணம், வன தேவதைகளில் அருள்.
அரசனுக்கு திடுமென பதந்தன் என்ற ஒருவரை நினைவு வந்தது. அவரும் இங்கு அருகில் தான் இருப்பாராக இருக்கும் என்று ஊகித்தான். தன் குதிரையில் இருந்து இறங்கி, மலைச் சாரலின் மண்ணை தொட்டு வணங்கினான். உடன் வந்தவர்களிடம், குதிரைகள் களைத்திருக்கும் இங்கேயே ஓய்வு எடுப்போம் என்று சொல்லி, தனியாக போய் தபஸ்வி ஜனங்களை காண்பது தான் முறை என்று தனியாக முன்னேறிச் சென்றான். அந்த சந்திப்புக்கு ஏற்ற நடை உடை பாவனைகள், மனதில் மரியாதை இவைகளுடன், மாதவ குப்தன் மற்றும் ஒரு சில அரச குலத்தவர் மட்டுமே பின் தொடர, நடந்தே செல்லலானான்.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
