அணிவகுத்த படைகள்

அன்று இரவும் தூங்க முடியாமல் சகோதரனின் நினைவு வந்து வருத்தியது.  உயிருடன்  கண் முன் வந்து நிற்பது போலவே தன் தமையனைக் கண்டான்.   கண்களில் பெருகிய நீரை துடைத்து தன்னையே நொந்து கொண்டான். இது என்ன மன வேதனை. அந்த உடலமைப்பு தந்தையைப் போல நெடிய உருவம். கல்லால் செதுக்கியது போன்ற அங்கங்களின் அமைப்பு. அந்த உருவை அடிக்க கூட எப்படி அந்த துஷ்டனுக்கு மனம் வந்தது?  இது பாசமா, பக்தியா ? எந்த சந்தேகமானாலும் அண்ணனைக் கேட்டு விளக்கம் கேட்டு பழகியதால் வந்த ஒட்டுறவு.  எதற்காக விதி எங்களை பிரித்தது?  அடக்க  முடியாமல் அழுகை முட்டியது. வாய் விட்டு யாரிடமாவது பகிர்ந்து கொண்டாலோ, அழுதாலோ துக்கம் குறையலாம்.  பலவிதமான எண்ணங்கள், பழைய நினைவுகளில் இரவு தூக்கமின்றியே கடந்தது.  விடிந்த உடனேயே தன் அறைக் காவலனிடம்  யானைப் படையை நிர்வகிக்கும்  அதிகாரி ஸ்கந்த குப்தன் என்பவனை அழைத்து வர ஆணையிட்டான். 

சித்திரம் : அருண்

வேகமாக செய்தி சொல்லி அனுப்ப வரிசையாக பலரிடம் சொல்லிச் சொல்லி செய்தி யானைப் படைத் தலைவனை எட்டியது. (அரச பவனத்திலிருந்து தொலைவில் யானைப் படையை பராமரித்து கொண்டிருந்தவனை அழைக்க தொடராக  பலர் அனுப்பட்டனர்) அவனும் பரபரப்புடன், ஏதோ ஒரு குட்டி யானையை பழக்கிக் கொண்டிருந்தவன், வேகமாக வந்தான். வழியில் கையில் தண்டத்துடன் காவல் வீரர்கள்  கூட்டத்தை விலக்கி வழி அமைத்துக் கொடுத்தனர்.  ஒவ்வொரு அடிக்கும் ஊரார் அவனை வணங்குவதும், அவனும்  எதிர் பட்ட அதிகாரிகளை வணங்கியும், தவிர்க்க முடியாத சிலருடன் பேச்சு கொடுத்தும் கேட்டும், மனதின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி,   யானைகளை கூட்டமாக அழைத்து வந்தான்.  யானைகளுக்கு பழகிய மஹாவத் என்றவர்களும் அதற்கான பசுமையான புல் முதலியவற்றை எடுத்துக் கொண்டு வந்தனர்.  அவைகளுக்கு அலங்காரம் செய்ய் சில பொருட்கள் வெண்மையான பொடிகள் முதலியன, இவையும் மூட்டைகளில் கொண்டு வரப்பட்டன.ஒரு சில புதிதாக பழக்கிய யானைகள் முரண்டு பிடிப்பதும் அவர்கள் அதை சமாதானமாக பேசி அழைத்து வருவதுமாக வழி முழுவதும் கோலாகலமாக ஆக்கியது.  ஸ்கந்த குப்தனும் மேற்பார்வையிட்டவாறு ஆங்காங்கு சில உத்தரவுகளை இடுவதும், பெரும் காடு போலவோ, சமுத்திரம் போலவோ, யானைகளின் எண்ணிக்கையால் பசுமையாக அல்லது கரு மேகம் போல ஆன கூட்டத்தை கவனமாக அரச சமூகத்துக்கு கொண்டு வந்தான். 

தூரத்திலிருந்தே கைகளை தலைக்கு மேல் தூக்கி வணக்கம் சொல்லியடி வந்தான்.  அருகில் வந்தவனை ஆசனத்தில் அமரச் செய்த பின் ஹர்ஷன் ‘ ஐயா, உங்களைப் பற்றி விவரமாக கேட்டிருக்கிறேன். தற்சமயம் நேரில் காணும் பொழுது மேலும் அதிகமாக உணருகிறேன். இதைத்தான் நான்  வேண்டியதும்.  வசதியாக இவைகளை இருக்கச் செய்து விட்டு, நம் பிரயாணம் எந்த நிமிடமும் தொடங்கலாம். எனவே எந்த வித சிறு தேவையானாலும் இங்கிருந்து தயார் செய்து கொள்ளுங்கள்.  ஸ்கந்த குப்தன் சொன்னான்’ ஒரு விண்ணப்பம். தயவு செய்து கேளுங்கள்.  நான் தேவன் புஷ்யபூதி காலத்திலிருந்து உங்களை அறிவேன்.  அவருடைய பல நல்ல குணங்களை உங்களிடமும் கண்டிருக்கிறேன். இயல்பாக வந்த பெருந்தன்மையும் ஆற்றலும். உங்கள் சகோதரரும், இந்த யானைகளின் தும்பிக்கை போன்ற நீண்ட கைகளை உடையவராக இருந்தார்.  உங்கள் சகோதர பாசம் காரணமாக உங்கள் தீர்மானம் நியாயமானதே.  சிறு பாம்பு கூட மிதி பட்டால் சும்மா இருக்குமா?  சீறி எழும். அவ்வாறிருக்க, உங்களைப் போன்ற ஆற்றல் உடைய வீரர்கள்  எதிர் வினை ஆற்றாமல் இருப்பார்களா? நான் உங்கள் தமையன் ராஜ்யவர்தனன் அருகில் இருந்து சேவை செய்தவன். அவரும் துர்ஜனங்களின் அத்து மீறலை பொறுக்க மாட்டார்.  இது போன்ற குணங்கள், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு தீவிலும், ஒவ்வொரு திசையிலும் பலவிதமாக காணலாம்.  வித விதமான வேஷங்கள்- ஆடை அலங்காரங்கள்,  உருவங்கள், உடலமைப்புகள், உணவு , நடவடிக்கைகள், மற்ற செயல் பாடுகள் என்று ஒரு இடத்திற்கு மற்றொன்று வித்தியாசமாகவே உள்ளன. நமது தேசத்துக்கு உகந்த நடவடிக்கை, இளகிய மனதுடன் உலகை காண்பது  என்பது பலனைத் தராது, ஏனெனில் எதிரியை பரி பூர்ணமாக நம்பியதால் தானே நம் அரசன் மறைந்தான்.  யாரானாலும் முழுமையாக நம்ப வேண்டாம்.  ஓரளவு, மறதி, தோஷங்கள், என்று அனுமதித்தாலும் நாம் தினமும் கேள்விப் படும் குண நலன்கள்,  தேவ, தங்களுக்கும் தெரிந்திருக்கும். 

நாக சேனா என்ற பத்மாவதி என்ற தேசத்து அரசன். அவன் மந்திரி பாதி ராஜ்யத்தை அபகரிக்க திட்டமிட்டான்.  இதையறிந்து கொண்ட அரசன் நாக சேனன், சாரிகா என்ற ஆலோசகருடன் ரகசிய ஆலோசனை செய்தான்.. அந்த அரசன் அறியாதது. சாரிகா என்பவனும் மந்திரியின் கூட்டாளியே என்பது.  அந்த மந்திரி சாரிகாவிடம் விசாரித்து தெரிந்து கொண்டு நாக சேன அரசனை வீழ்த்தி விட்டான்.  

ஸ்ராவதி என்ற தேச அரசன், ஸ்ருத வர்மன் என்பவனும் இவ்வாறே சுக (கிளி) மூலம் அறிந்த செய்தியை நம்பி ராஜ்யத்தை இழந்தான்.  ம்ருத்திகாவதி என்ற தேசம். சுவர்ணசூடன் என்ற அரசன், கவனமாக மந்திராலோசனை செய்த விஷயத்தை தூக்கத்தில் உளறி விட்டான்.  அதைக் கேட்ட அவனுடைய  அறையின் காவல் தலைவனே அவனுக்கு யமனானான். காவல் தலைவன் யாருடைய உளவாளி என்பது தெரியாமல் அரசன் அருகில் வைத்திருந்தான்.  

உளவாளியாக ஒர் எதிரியின் கையாள், யவன  அரசனின் பணிபெண்ணாக  சாமரம் வீசுபவளாக வந்தாள்.   யவன அரசனின் தலையில் அணிந்திருந்த சூடாமணியில் அவன் பிரித்து படித்துக் கொண்டிருந்த ரகசியமான ஓலை பரி மாற்றத்தின் எழுத்துக்கள் தெரிய அதைப் படித்து தன் எஜமானனுக்கு தெரிவித்து விட்டாள். சாமரம் வீச வந்தவள் அவன் உயிருக்கே  உலை வைப்பவளாக ஆனாள்.  பல அரசர்கள் சேர்ந்து ஒரு லோபியான மதுராவின் அரசன் விதூரதன் என்பவன் பூமியில் ரத்னங்களை புதைத்து வைத்திருக்கிறான் என்பதையறிந்து, அவன் தேசத்தில் படையெடுத்துச் சென்று கொன்றனர்.   உஜ்ஜயினியின் அரசன் மஹாசேனன், தன் பட்டத்து யானை என்ற பெயரில் ஒரு யானை உருவத்தை தயாரித்து அதனுள் வீரர்களை வைத்து வத்ஸ தேசத்து அரசனை நாக வனத்தில் ஏமாற்றி வரவழைத்து பிடித்தான்.   

நாட்டிய கலைஞர்களை ஆதரித்த ஒரு அரசனை, எதிரி அரசன்  மிகவும் திறமையான நாட்டியம் ஆடுபவன் என்ற வேடத்தில் ஒருவனை அனுப்பி அக்னி மித்ரன் என்ற அரசனையும் அவன் மகன் சுமித்ர என்பவனையும் தாமரைத் தண்டை வெட்டுவது போல வெட்டி விட்டான். அவர்கள் நாட்டியம் போன்ற கலைகளை ஆதரித்து அதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததால் அதையே பயன் படுத்திக் கொண்ட எதிரி அரசன் மித்ர தேவன் செயல் இது.  

அதே போலத்தான் சங்கீத கலையில் அதிகமாக தன் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்த அஸ்மக தேசத்து அரசன் சரபன் என்பவன்,  அவனிடம் சங்கீதம் கற்றுக் கொள்ளுவதாக வந்த ஒரு சிஷ்யன், கபடமாக   வீணை வைக்கும் பெட்டியில் வாளை வைத்துக் கொண்டு சமயம் வாய்த்த பொழுது தலையை துண்டித்து விட்டான்.  

தந்திரமாக  சேனாபதியாக இருந்த அரசு ஊழியன், புஷ்ப மித்திரன் என்பவன், அரசனை சேனையை பார்வையிட அழைத்தான். அது ஒரு சதி என்று அறியாமல் மௌர்ய ராஜா ப்ருஹத்ரதன் என்பவன் வந்தான். அதிக வீரமோ அறிவோ  இல்லாதவன் – சேனாபதியின் கெட்ட எண்னத்தை ஊகிக்கவும் இல்லை. அந்த வீரர்களே சேனாபதியின் வசத்தில் இருந்தனர்.  அவர்களே ஒன்று கூடி அரசனை அழித்து விட்டனர். 

 மற்றொரு அரசன் சண்டீ பதி என்பவன் யுத்தத்தில் பயன் படுத்த யவன தேசத்தில் தயாரித்த வானத்தில் பறக்கும் ஒரு விமானத்தை வாங்கி வந்தான். புது கண்டு பிடிப்புகளை விரும்பி அறிந்துக் கொண்டு பயன் படுத்த நினைத்தான்.  என்ன ஆனான் என்பதே தெரியவில்லை.  

பெண்களுடன் அதிக நேரம் செலவழித்த அரசன் சுங்கன் என்பவன், அவன் மந்திரியே, வசுதேவன் என்பவன், பழைய தாசி தேவபூதி என்பவளின் மகள் என்று சொல்லி ஒரு கொலைகாரியை அனுப்பி அவன் மரணம் சம்பவிக்கச் செய்தான். 

மாகதன்- மகத தேசத்தவன்,  கோதன என்ற பெயருடையவன், மகா காலன் என்ற அரசனை மாமிசம் விற்பவர்கள் இடையே கலஹம் என்ற காரணத்தால் வேதாளமான தாளஜங்கனை அனுப்பி  கொன்றான். 

ப்ரத்யோதன் என்பவன் புணக கோத்ரனான பௌணகன் – குமார சேனன் என்ற  குமாரனை,  வைத்யனாக வேஷமிட்டு வந்து, மருந்தில் விஷத்தைக் கலந்து பலரும் அறிய சபையில் அமர்ந்திருந்த விதேக ராஜாவின் மகன் கணபதி என்பவனை அவனுக்கு ராஜ யக்ஷமா என்ற வியாதியை குணப்படுத்துவதாக சொல்லி கொன்றான்.  

பெண்களை நம்பிய சகோதரன் பத்ர சேனன் என்பவனை, உடன் பிறந்தவன் கலிங்க தேசத்தை ஆண்ட வீர சேனன், அரசனின் அந்த;புரத்தில் மகா ராணியின்  அறை சுவற்றில் வழி செய்து கொண்டு, தானே அவனுக்கு ம்ருத்யு ஆனான்.

கருணாதிபதி, தன் பிரிய மகனுக்கு ராஜ்யத்தை அளித்ததால்,  அரசனுடைய மற்றொரு மனைவி மூலம் பிறந்தவன் தாயின் அறையில் ஒளிந்திருந்து,  அரசன் வந்த பொழுது கொன்று விட்டான். 

சகோர என்ற தேசம்- ராஜா சந்திர கேது,  அவனிடம் சூத்ரகன் என்ற அரசன் அனுப்பிய தூதனை, வாயில் காப்பவன் அவமரியாதை செய்து விட்டான் என்ற வியாஜத்தால், மந்திரிகளும் சரியான சமயத்திற்கு காத்திருந்தவர்கள் போல அவனுடன் சேர்ந்து சந்திர  கேதுவை உயிரிழக்கச் செய்து விட்டனர்.  

சம்பா நகர அரசன் வேட்டயாட விரும்புபவன். அடர்ந்த காட்டில் மரங்களிடையில் ஒளிந்து இருந்து மிருகங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தவனை அவனை பாதுகாப்பு படையினரே வேட்டையாடி விட்டனர். 

க்ஷத்ரவர்மா என்பவன் தன் துதி பாடும் வந்திகளுடன் வந்த ஒற்றன் ஜய ஜய என்றதை நம்பியவன், அவனுடன்  மல் யுத்தம் செய்ய வந்த மல்லர்கள் என்ற வேடத்தில்  வந்து வதைத்தனர். 

எதிரியின் ஊரில், மாற்றான் மனைவியை  விரும்பும் சகபதி என்பவனை, சந்திரகுப்தன் தானே காமினி- பெண்ணாக வேடமிட்டுக் கொண்டு சென்று வதைத்தான். 

தேவனே இது போன்ற செய்திகளை கேட்டிருக்கலாம்.  அரிசிப் பொரியில் மதுவை கலந்து உண்ணும் வழக்கம் உள்ள மகாசேனன் என்ற காசி ராஜனை  சுப்ரபா என்பவள் தன் மகனுக்கு அரசு வர வேண்டும் என்று   அந்த பொரியில் விஷம் கலந்து கொடுத்தே  கொன்றாள்.  

அயோத்யா பதி பரந்தபன்- சிறந்த வீரன் என்று பெயர் பெற்ற ஜாரூப்யன் என்பவனை ரத்னவதி என்ற தாசி, முகம்  பார்க்கும் கண்ணடியை உடைத்த துண்டை வாள் போல பயன் படுத்திக் கொன்றாள். 

தன் கணவனின் இளைய சகோதரனுன் இருந்த தேவகீ என்பவள், சுஜ் என்ற தேசத்து அரசன் தேவசேன என்பவனை காதில் அணியும் உத்பல  மலர் போன்ற ஆபரணம்,  அதில் மகரந்தம் போல விஷத்தால் வேலைப் பாடுகள் செய்து அணிவித்து கொன்றாள்.  

வைரந்த்ர தேசத்து அரசன் ரந்திதேவன் விருஷ்ணி வம்சத்தில் வந்தவன், அவன் ராணி, சபத்னியிடம் இருந்த கோபத்தால், தன் கேசத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதத்தால் கொன்று விட்டாள்.

ஹம்சவதி என்பவள் சௌவீர அரசன் வீரசேனன் என்பவனை தன் மேகலா என்ற ஆபரணத்தைக் கொண்டே அடித்து கொன்றாள். 

வெளியில் தெரியாமல், முகம் வீங்கியதாக வேடம், உண்மையில்  விஷமயமான வாருணி யை வாயில் அடக்கிக் கொண்டு பௌரவீ, பௌர்வேஸ்வரன் சோமகன் என்பனை  மடியச் செய்தாள்.  இவ்வளவும் சொல்லி எந்த விதத்திலும் ஆபத்து வரலாம் என்று உபதேசித்து விட்ட திருப்தியுடன்  அரசனின் பரிசை பெற்றுக் கொண்டு வெளியேறினான்.  

ஹர்ஷ தேவனும், ராஜ்யத்தின் பாதுகாப்புக்காக செய்ய வேண்டியவைகளைச் செய்தான்.  பிரயாண ஏற்பாடுகளை துரிதமாகச் செய்ய வைத்தான். அதே சமயம் சத்ருக்களின் நகரங்களில் துர் நிமித்தங்கள் தென்படலாயின.  காலனின் தூதர்கள் போல சில சகுனங்கள்-  கருமையான மான் கூட்டம் அவர்களின்  நகரத்துள் நிறைந்தது.  எங்கும் தேனீக்கள் நிறைந்து யாரோ நூபுரம் அணிந்து நடமாடுவது போல சத்தமிட்டன.வெகு நேரம் மாலை அஸ்தமிக்கும் நேரம் குள்ள நரிகள் அவர்கள் தேசத்தில் ஊளையிட்டன. காட்டுப் புறாக்கள் தங்கள் சிவந்த வாயைத் திறந்து கூச்சலிட்டதே அந்த அரசர்களுக்கு அமங்களமாக தெரிந்தது.  வீடுகளில் சண்டை சச்சரவுகள் அதிகரித்தன.  அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல இயல்பான செய்திகளே அவர்களுக்கு ஏதோ கெடுதல் வரும், அதன் சூசகம் என எண்ண வைத்தன.  

ராஜ ப்ரதிக்ஞா வர்ணனம்

தன் முயற்சியுடைய வீரனுக்கு செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை/ அதற்கான சாதனங்களும் தானாக அவனுக்கு வந்து சேரும். .மூவுலகின் தலைமையை அடைவார்கள்.   பூமி அவர்களுக்கு ஆங்கனம்- வீட்டின் முற்றம் என்ற பகுதி அளவே.  அல்லது யாகம் செய்ய பயன்படும் வேதி – அந்த அளவே பூமி.  சமுத்திரம் , அவர்களுக்கு நீர் நிரம்பிய குட்டை அளவே.  பாதாளம் என்பது சாதாரண பள்ளமான பகுதி போல அடைய சுலபானது என்பது பொருள்.  சுமேரு பர்வதமே, ஒரு புற்று போல கடக்க எளிதாகும்.  வீரனாக இருந்து தானே ஒரு சபதத்தை மேற் கொண்டவனுக்கு கடக்க முடியாது என்று எதுவும் இல்லை. 

கையில் வில் இருக்கிறது, புஜங்களில் செய் திறமை இருக்கிறது, அவனிடம் மலைகள் வளைந்து கொடுக்காதது தான் ஆச்சர்யம்.   எதிரிகளின் எண்ணிக்கை என்பது ஒரு பொருட்டல்ல. வராக காக்கைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால் தான் என்ன? 

அடுத்த சில நாட்களில், அரண்மனையில் அனைவரும் பர பரப்பாக இருந்தனர்.  நூற்றுக் கணக்கான பிரசித்தி பெற்ற சோதிடர்கள், கூடி அமர்ந்து  புறப்பட நல்ல நாளை கணித்து கொடுத்தார்கள். மற்றும் பலர்  விஜயம்-வெற்றி பெற  தண்ட யாத்திரைக்கு  அந்த நன்னாளின் நல்ல லக்னம் எது என்பதையும் பார்த்து சொல்ல,  மந்தரித்த பொன். வெள்ளி கலசங்களின் நீரால் அரசனை முழுக்காட்டினர்.   ஹர்ஷனும் பரம பக்தியுடன் பகவான் நீல லோஹிதன் என்ற சிவ பெருமானுக்கு  அர்ச்சனை ஆராதனைகள் செய்தான்.   ப்ரதக்ஷிணமாக ஜ்வாலை வர காத்திருந்து அக்னி குண்டங்களில் ஹோமங்களும் விதிப்படி செய்தான்.  அதில் ஈடு பட்ட அனைவருக்கும் உரிய தக்ஷிணைகள், பரிசுகள் நிறைய கொடுத்தான். அவர்களும் வெற்றி பெற வாழ்த்தினர். வெள்ளி, பொன் நாணயங்கள் நிரம்பிய ஆயிரக் கணக்காக  பாத்திரங்களும், அலங்காரம் செய்யப் பட்ட பசுக்களையும், தானம் செய்தான்.   பத்ராசனம் என்ற சிங்காசனத்தில் புலித் தோலை விரித்து அமர்ந்தான். தன் ஆயுதங்களுக்கு நல்ல சந்தனம் பூசி, அந்த சந்தனத்தை தன் தலையிலிருந்து கால் வரை பூசிக் கொண்டான்.   ஓரங்களில் ஜோடி ஹம்சங்கள் அலங்காரமாக நெய்யப் பட்டிருந்த ஜோடி  பட்டு வஸ்திரங்களை  அணிந்தான்.  பரமேஸ்வரனின் சின்னமான சந்திர கலை போல பூக்களால் செய்த மாலையை தலையில் அணிவித்தனர்.  காதுகளில் கோரோசனை என்ற வாசனைப் பொருள் தடவிய தூர்வா புல்லை மரகத காதணி  போல அணிவித்தனர்.  கைகளில் மங்களமான கனமான கங்கணங்கள், ராஜ முத்திரையுடன் கூடிய சிறப்பான ஒரு ஆபரணம் அதையும் அணிவித்தனர்.  பூஜை செய்த புரோகிதர் சாந்தி பாடத்துடன், (பூஜை முடிவில் கலச நீரை மந்திரங்களை உச்சரித்தபடி வந்தவர்கள் மேல் தெளிப்பது ஒரு மரபு) சாந்தி ஜலம் என்றழைப்பர் – அதை பெறுவது நன்மை என்ற நம்பிக்கை)    

அதன் பின் தன்னுடன் உதவியாக வர இருந்த அரசர்களுக்கு உயர்ந்த வாகனங்கள் அனுப்பினான்.  பிரகாசமான ஆபரணங்களையும் அனுப்பினான்.  அரச அலுவலர்கள், குல புத்திரர்கள் (ராஜ குலத்தை சேர்ந்த மற்றவர்கள்- ஏதோ வகையில் உறவினர்) சம்பந்திகள், பொது ஜனங்கள்,  இவர்களுக்கும் தகுந்த பரிசுகள் கொடுத்தான்.  சிறையில் இருந்த குற்றவாளிகள்,  ஏதோ ஒரு விதத்தில் தண்டனை அடைந்தவர்கள், அனைவரையும் விடுவிக்கச் செய்தான்.  பதினெட்டு தீவுகளையும் வெற்றி கொண்டு வர தகுதி பெற நியமிக்கப் பட்டவனாக ஆனான்.  சுபமான சகுனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து ஆசிர்வதிப்பது போலவும், அரண்மனை சேவகர்கள் வழியனுப்ப வரிசையாக நிற்பது போலவும்  எதிர்ப் பட்டன.  ஜய கோஷம் எங்கும் நிறைந்தது. கூட்டமாக வழியனுப்ப வந்த பிரஜைகளின் கோலாஹலமான ஜய ஜய கோஷத்துடன் ஹிரண்ய கர்பன் – உலகின் படைப்புத் தொழிலுக்காக ப்ரும்மா என்ற பெயரில் வந்த பகவான் ஸ்ரீ ஹரி,    ப்ரும்மாண்டத்தில் யுக நிர்மாணத்திற்காக புறப்பட்டது போல அரச மாளிகையிலிருந்து புறப்பட்டான்.  

சற்று தூரத்தில் சரஸ்வதி நதிக் கரையில் பெரிய கோவில் தென் பட்டது.  பசுமையான புல், இலைகளால் ஆன தோரணங்களுடன் உயர்ந்த த்வஜ ஸ்தம்பம், யாக வேதிகளும், அதில்  பொன்னால் ஆன கலசங்களும் பிரகாசமாக இருந்தன. .  வன மாலைகள், பல பசுமையான கொடிகள் இவைகளை சுற்றிக் கட்டிய அந்த கம்பத்தில்  வெண்ணிற கொடி பறந்தது.  அந்தணர்கள் வாழ்த்து பாடல்களைப் பாட, தன் பிரயாணத்தை துவக்கினான்.  அந்த ப்ரதேசத்து கிராம முக்யஸ்தர்கள், அவர்களைச் சார்ந்த  அலுவலர்கள் கரணீ எனப் படும் அதிகாரிகள்,  வந்தனர்.’ இன்றே நல்ல நாள். தேவ! உங்கள் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். அதிகார பூர்வமாக இந்த கிராமத்திலிருந்து உங்கள் ஆட்சியை துவங்குங்கள் என்றனர்.   காளை அடையாளமிட்ட பொன்னாலான அரச முத்திரையை ஹர்ஷனின் கையில் கொடுத்தனர். ஒரு மண்ணால் ஆன பிண்டம் – ஒரு பிடி ஈர மண் உருண்டை  – அதில் முத்திரையை பதிக்க கொடுத்தனர். கை நீட்டி அதை வாங்கும் பொழுது கை தவறி  சரஸ்வதி நதிக் கரையின் ஈர மண்ணில் முத்திரை பதிந்தது. மிருதுவான மண்ணில் பதிந்த முத்திரை,  தெளிவாகத் தெரிந்த எழுத்துகளும், அதில் இருந்த சித்திரங்களும்  தெரிந்தன. கூடியிருந்த கிராமத்து ஜனங்கள் திகைத்து நின்றனர். அரசன், எளிய மக்கள். எதுவும் சொல்லும் முன், தானே இதை அறிந்தவன் போல அரசன், பூமி முழுவதும் ஒரே சாஸனமாக இந்த முத்திரையுடன் நமது அரசு அமையும் என்பதை இந்த மங்களகரமான நிகழ்ச்சி தெரிவிக்கிறது. இன்றே நமது ஆட்சி இந்த கிராமத்திலிருந்து துவங்குகிறது என்று சொல்லி, அந்த நதிக் கரையில் கூடாரம் அமைத்து  தங்கினான்.  மங்கள வாத்யங்கள் முழங்க  கிராமத்து அதிகாரிகளுடன் அன்றைய தினசரி அலுவல்களை கவனித்தவனாக பல கிராமங்களை இணைத்து அவர்களுக்கு அளித்தான். அன்று முழுவதும் அந்த இடத்தில் தங்கி இருந்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அரசு தரப்பில் செய்ய  வேண்டிய செயல்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டான்.  இரவும் அவர்கள் உபசாரங்களை ஏற்று அங்கேயே தூங்கினான். 

மூன்றாவது யாமம் தொடங்கியதுமே,   பிரயாண படஹ என்ற வாத்யங்கள் ஒலிக்கலாயின.  நிச்சப்தமாக இருந்த இரவில் அவை கம்பீரமான ஒலி அலைகளை பரப்பி, அனைவரையும் எழுப்பி விட்டது. திக்குகளில் கும் கும் என்ற நாதமே நிறைந்திருக்க பொழுது புலரும் முன் வழியனுப்ப அனைவரும் வந்து கூடினர். முன்னால் நின்று பிரயாண க்ரோசம் என்ற பெயரில், எட்டு பேர் தனித்தனியாக படஹத்தை வாசித்து அதன் நியமத்தை அனுசரித்தனர்.   படஹ வாத்யத்துடன் இணைந்து,  நாந்தி எனும் செயல்கள், சங்க வாத்யங்கள், த்ருகணா என்ற வாத்யம்  (இரும்பு பலகையில் தண்டத்தால் அடித்து நாதம் வரச் செய்வது),  கடக என்ற வாத்யம்,  என்பனவும் ஒலியால் ஆகாயத்தை நிரப்பின. க்ரோச (இரண்டு மைல்)  தூரம் சைனிகர்கள் முன் சென்று பிரதி வாத்யம் வாசிக்கவும் ஊர் மக்கள் விழித்துக் கொண்டு வழியனுப்ப வந்தனர். வழக்கமான வேலைகள் துவங்கி விட்டன என்பது போல நேரத்தை தெரிவிக்கும் கண்டா மணியின் நாதமும் அதைத் தொடர்ந்து அறிவிப்பும் கேட்டன.  அவரவர் வீடுகளிலும் விழித்துக் கொண்டு விட்ட ஜனங்களும், யானைகளின் பிளிறலும்,, குதிரைகளின் கணைப்பும், அவைகளை கூடாரங்களில் கட்ட பயன்பட்ட இரும்பு சங்கிலிகளை நீக்கி விடுவித்ததால் மகிழ்ந்தது போல இருந்தன.  பெரும் கதவுகள் தாழ்ப்பாளை நீக்கி திறக்கும் சத்தமுமாக கிராமமே சுறுசுறுப்பாக விளங்கியது.

(இந்த இடங்களில் கவியின்  வர்ணனை, தன் நீண்ட வாக்கியங்களாக அமைந்த சொற்கள், மொழியின் வளமையுடன்  அந்த சப்தங்களை பிரதிபலிப்பது போலவும் அமைந்திருப்பது சிறப்பு. )

(தொடரும்)

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

ஹர்ஷனின் சபதம் துவங்கிய பயணமும் வந்த பரிசும்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.