நீலமலையில் வாழ்பவனே……..!-  சாலபேகா – ஒடியா கவிஞர்

டியா மாநிலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், அறிவியல் சம்பந்தமான துறையில் பணியாற்றுபவர், நீண்ட நாட்களின்பின் எங்களைக் காண வந்தார். வழக்கமாக அறிவியல் துறையைச் சார்ந்து செல்லும் உரையாடல் இன்று நமது இந்தியப் பண்பாடு, கலை, இசை எனப் பல திசைகளிலும் சென்றது. ஜயதேவரைப் பற்றியும் அஷ்டபதிகளைப் பற்றியும் அதன் தொடர்பாக  ஒடிஸி நாட்டியத்தைப் பற்றியதுமாகச் சென்றது எங்களது உரையாடல்.

“உங்களுக்கு ஒரு புதிய கவிதாசிரியரை அறிமுகப் படுத்தப் போகிறேன்,” என்றார் நண்பர். ஆர்வத்துடன் அவரை ஏறிட்டேன். 

“சாலபேகா என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“இல்லவே இல்லை. யாரவர்?” ஆவல் எல்லை மீறியது. “சொல்லுங்கள்.”

“ஒடிஸாவைச் சேர்ந்த பக்தர். கவிஞர்…..”

நண்பர் கொடுத்த விவரங்கள், நானாகத் தேடிப் படித்து அறிந்து கொண்டவற்றைத்தான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

—————————————- 

16ம் பொது நூற்றாண்டு. ஒடிஸாவைச் சேர்ந்த கட்டக் எனும் நகரில் லால்பெக் எனும் கோட்டை. கோட்டையினருகே அழகான சிறு குளம் அமைந்த தண்ட முகுந்த்பூர் எனும் ஊர்.

புலர்காலை நேரம். கூட்டம் வருவதற்குள் ஸ்நானத்தை முடித்து வீடுசெல்ல வேண்டும் எனும் அவசரத்தில் இருந்தாள் லலிதா. அவள் இருபது வயதேயான பேரழகி; ஆனால் பாவம், அவள் அழகான இளம் அந்தணர் குல விதவை; ஒருவர் கண்ணிலும் படாமல் இருக்க வேண்டிய நிலைமை. அவள் நிலைமைக்குரிய கட்டுப்பாடுகளை விதித்த சமூகம் அவளுக்குரிய காவலை ஏனோ அளிக்க மறந்து போனது.

குதிரையின் குளம்பொலிகள் கேட்டன. அவை விரையாமல் நிதானமான நடைபோட்டு வருவதனை உணர்ந்தாள் லலிதா. போர்முடிந்து வரும் வீரன் என அறிந்துகொண்டாள். பேரரசர் அக்பரின் படைத்தலைவரான ராஜா மான்சிங்கின் படையில் முக்கியமான உபதளபதியான லால்பெக் என்பவன் தான் குதிரைமீது வந்து கொண்டிருந்தான்.

அவசர அவசரமாக ஈரச்சேலையைச் சுற்றிக்கொண்டு அங்கிருந்து அவன் கண்களில் படாமல் ஓட முற்பட்டாள் லலிதா. ஈரச்சேலை தடுக்கியது. பல நாட்கள் போரில் ஈடுபட்டு உல்லாசங்களைத் துறந்திருந்தவன் கண்களில் அழகான பெண் தென்பட்டாள். வலிந்து தாவி இழுத்து குதிரை மீதேற்றிக் கொண்டு சென்றுவிட்டான் தனது கோட்டைக்கு!

இஸ்லாமிற்கு அவளை மதம் மாற்றித் திருமணம் செய்தும் கொண்டான். அவளால் என்ன செய்ய முடியும்? என்ன சொல்ல இயலும்? இதுவும் இறைவன் சித்தம் என மனம்நொந்து ஏற்றுக் கொண்டாள். காலப்போக்கில்  ஆண்குழந்தையையும் பெற்றெடுத்தாள் அவள். அதுதான் சாலபேகா.

லலிதா இத்தனை நடந்தபின்பும் ஜகந்நாதரை வழிபடுவதனை நிறுத்தினாளில்லை. கணவருக்கும் தெரியாமல் மகன் சாலபேகாவின் உள்ளத்தில் ஜகந்நாதர் மீதான பக்தியை விதைத்து வளர்த்தாள்.

சில ஆண்டுகள் கழித்து லால்பெக் வங்காளத்தின் சுபேதாராக நியமனம் செய்யப்பட்டான். ஆப்கானிஸ்தானியர்களை எதிர்த்துப் போரிடச் சென்றபோது  பதினைந்தே வயதான சாலபேகாவையும் தன் பக்கத்தில் இருந்து போரிட அழைத்துச் சென்றான். இந்தப் போர்களின் போது ஒரு போரில் லால்பெக் கொல்லப்பட்டான். சாலபேகா படுகாயம் அடைந்து தொற்று ஏற்பட்டு உயிருக்குப் போராடலானான். 

அவனுடைய தாய் லலிதா, “இந்த ஹிந்து சாது (அவர் பெயர் பால முகுந்தா) உனக்கு உயிர் கொடுப்பார் அப்பா,” என்றாள். சாது அவனருகே வந்தமர்ந்தார். மஹா மந்திரத்தை உச்சரித்தவர் அவன் நெற்றியில் விபூதியைத் தடவி விட்டார். சாலபேகா உயிர் பிழைத்து எழுந்தது பெரிய அதிசயம் எனலாம். 

இவை அனைத்தும் ஜகந்நாதர் மீதான அவனுடைய பக்தி இன்னும் பெரிதாக வளரத் துணை புரிந்தன. இவனுடைய ஜகந்நாதர் மீதான பக்தி அவனுடைய இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களிடையே இவன்மீதான வெறுப்பை வளர்த்தது. அவனை வீட்டை விட்டு விரட்டிவிட்டு அவனுக்குண்டான உரிமைகளையும் பறித்துக் கொண்டார்கள்.

பூரிக்கு நடந்தேசெல்லத் தீர்மானித்தான் சாலபேகா. ஆனால், அங்கு போய்ச் சேர்ந்ததும், எந்த மடத்திலும் இந்துக்களின் வீடுகளிலும் அவனுக்குத் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. தாளபத்ரம் எனப்படும் பனை ஓலைகளைக்கொண்டு ஒரு சிறிய குடிசையை மூல வீதியில் தனக்காக அமைத்துக்கொண்டு, அங்கிருந்துகொண்டு ரத யாத்ரா எனப்படும் திருவிழாவிற்காகக் காத்திருக்கலானான் சாலபேகா.

அவ்வாறே ரத யாத்திரையின்போது, ஜகந்நாதர், பலபத்ரா, சுபத்ரா ஆகியோரின் தேர்கள் சாலபேகாவின் குடிசையின் முன்பு நின்றுவிட்டன. அங்கிருந்து நகரவேயில்லை. சாலபேகா வந்து தேர்க்கயிறுகளைத் தானே இழுத்தபின்னரே அவை அங்கிருந்து நகர்ந்தன. அவனுடைய தாய் லலிதா இறந்தபின்னர் கோவில் பூசாரிகள் அவளை இந்துமுறையில் தகனம் செய்யவும் அனுமதி மறுத்தனர்.

ஒருமுறை சாலபேகா பிருந்தாவனம் சென்றுவிட்டு ரத யாத்ராவிற்கு பூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் உடல் நலமில்லாமல் போய்விட்டது. உடனே ஜகன்னாதரிடம் தனக்காகக் காத்திருக்குமாறு வேண்டிக் கொண்டான். அந்த ஆண்டு (1646) ஜகந்நாதரின் தேர் சாலபேகாவின் குடியிருப்பின்முன் நின்றுவிட்டது. சாலபேகா வந்து தனது நமஸ்காரத்தைச் செய்யும்வரை அங்கிருந்து நகரவில்லை. 

இறுதிவரை பூரியில் தங்கியிருந்த சாலபேகா 1646ல் இறைவனடி சேர்ந்தார். அவருடைய பூத உடல் வாசமிகு மலர்க்குவியலாக மாறியதென்று சொல்கின்றனர். அவருடைய சமாதி பாலகண்டி எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்ராவின்போது ஜகந்நாதரின் தேர் அந்தச் சமாதிமுன் நிற்கும்.

சாலபேகா கிட்டத்தட்ட 150 பாடல்களை, ஜகந்நாதர், ராதா கிருஷ்ணா, சிவன், அன்னை மங்களாதேவி ஆகியோர் மீது இயற்றியுள்ளார். இவற்றுள் ‘ஆஹே நீல சைல’ எனும் பாடல் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

சிலவற்றைப் பார்க்கலாமா? 

சாலபேகாவின் கவிதை  ‘ஆஹே நீல சைல’ இன்றுவரை மிகவும் கொண்டாடப் படுவது.

சாலபேகா ஜகந்நாதரைக் கிருஷ்ணனாகவே கண்டார். இந்தப் பாடலும் “ஓ நீலமலை வாசனே’ எனக் கிருஷ்ணனை விளிக்கும் பாடல். சம்பிரதாயப் பாடலான இது சிந்த காமோதி ராகத்தில் அமைந்தது. பண்டிட் பிகாரி சரண் பால் என்பவர் இதனை அருமையாகப் பாடியுள்ளார். (யூ ட்யுப் இணைப்பைக் கேட்கலாம்)

அனைத்து பக்தர்களுக்கும் கிருஷ்ண பகவான் அருளியதை விவரித்து, தனது உள்ளத்திலிருந்தும் வேண்டாத இச்சைகளை நீக்க வேண்டுகிறார்.

ஓ, நீலமலை வாசனே
தாமரைக்காடு போன்ற எனது துன்பங்களை நீக்குவாயாக.
ஆழமான நீரில் நின்று கஜராஜன் உன்னை வழிபட்டபோது
நீ சக்கரத்தை அனுப்பி முதலையிடமிருந்து அவனைக் காத்தாய்.
அடர் கானகத்தில் பெண்மான் தவித்தபோது
நீ அதனைத் துயரத்திலிருந்து காத்தாய்.
குரு வம்சத்தாரின் சபையில் திரௌபதி உன்னைக்கூவி அழைத்தபோது
துணியை எல்லையற்று வளரச் செய்து அவள் மானத்தைக் காத்தாய்.
ராவணனின் தம்பி விபீஷணன் உன்னிடம் அடைக்கலம் புகுந்தபோது
அவனுக்கு அடைக்கலம் மட்டுமின்றி இலங்கை அரசையும் அளித்தாய்.
பிரஹ்லாதனின் தந்தை கொடூரமான தீய புத்தியுள்ள மனிதன்
தூணிலிருந்து வெளிப்போந்து அவனைத் துண்டுதுண்டாய்க் கிழித்தாய்
இவ்வாறு யவனன் (ஹிந்து அல்லாத) சாலபேகா கூறுகிறான்
உனது தாமரைத் திருவடிக்கீழ் எனது செய்தியைக் கேட்பாய்!

இந்தக் கருத்துக்களைக் கூறிப் பாடலை இயற்றுவது கிருஷ்ண பக்தர்கள் அனைவருக்குமே கைவந்த கலையாகும். பட்டத்ரியின் நாராயணீயம், ஆழ்வார்களின் பாசுரங்கள், மீராவின் பாடல்கள், கபீர், நாமதேவ் ஆகியோரின் பாடல்கள் அனைத்திலும் இக்கருத்துகளைக் காணலாம். இருப்பினும் இன்னுமொருமுறை கேட்டாலும் திகட்டாத கருத்துக்கள் கொண்டமைந்த பாடல்கள் இவை. பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் ‘ஸரகுண பாலிம்ப’ நினைவுக்கு வருகின்றதல்லவா?

இதே போல ‘பஹான ஜீபீ’ என்றொரு பாடல்.

இருபத்திரண்டு படிகளின் தூளினை
எனது கைகால்களில் பூசிக் கொள்வேன்

இதுவும் அருமையான பாடலாகும். (யூடியூப் இணைப்பு)

வில்லியம் ப்ளேக் எனும் ஆங்கிலக் கவிஞர் கூறுகிறார்: சாலபேகாவின் பாடல்களின் புதுமை என்பது அவர் அவற்றை கிருஷ்ணன் அல்லது ராதையின் கூற்றாக அமைத்திருப்பதுதான். இது ஒடியா கவிஞர்களின் வழக்கம் போலும். ஜயதேவரின் அஷ்டபதிகளும் இவ்வண்ணமே அமைந்தவைதானே? ராதிகா, கிருஷ்ணா என இருவரும் ஒருவரை ஒருவர் அழைக்கும் பாடலாகட்டும், ப்ரியே சாருசீலே என கிருஷ்ணன் ராதையை சமாதானப்படுத்தும் மற்ற கவிதைகளும் இவ்வண்ணமே அமைந்தவைதான். அகத்துறையில் அமைந்த பாடல்களைப் பாடி ராதை கிருஷ்ணன் உறவைக் கொண்டாடுவோர் ஒடியாக் கவிஞர்கள் மட்டும்தானா? சிந்தித்ததில் இல்லை எனத் தோன்றியது. நமது பாரதியார் கண்ணனைக் காதலனாக, காதலியாக எல்லாம் பாடியிருக்கிறாரே, எல்லாமாக உள்ள இறைவனை, எல்லாமாகவுமே வழிபட்டால் என்ன தவறு?

ராதை, கண்ணனை ஒரு வேட்டையாடும் புலியாக உருவகப்படுத்திக் கவிதை பாடியுள்ளதனையும் சாலபேகாவின் கவிதைகளில் காணலாம்.

அம்பிகை மீதான பாடல்களைத் தேடினேன். கிடைக்கவில்லை. நண்பரைத்தான் கேட்க வேண்டும்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.